Saturday, 4 March 2017

கதை கேளு... கதை கேளு கழகத்தின் கதை கேளு!பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு!  -மருத்துவர் இராமதாஸ்

கதை கேளு... கதை கேளு கழகத்தின் கதை கேளு!

 பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு!
    -மருத்துவர் இராமதாஸ்
‘‘உன் நண்பன் யார் என்று சொல், நான் உன்னைப் பற்றிச் சொல்கிறேன்’’ என்று சொல்வது உண்டு.  1977-ஆம் ஆண்டில் முதலமைச்சராக பதவியேற்ற எம்.ஜி.ஆரின் நண்பர்கள் யார் என்பதை 1979-ஆம் ஆண்டில் அவர் கொண்டு வந்த பொருளாதார இட ஒதுக்கீடு என்ற அறிவிப்பே காட்டி விடும்.

பொருளாதார இட ஒதுக்கீடு

1977-ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த எம்.ஜி.ஆர் அடுத்த இரு ஆண்டுகளுக்கு சொல்லிக் கொள்ளும் படியாக எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. இந்த நேரத்தில் தான் பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு என்ற புதிய அறிவிப்பை வெளியிட்டார் எம்.ஜி.ஆர். அதாவது யாருக்கெல்லாம் குடும்ப வருமானம்  ரூ.9 ஆயிரத்துக்கும் குறைவாக இருக்கிறதோ, அவர்கள் அனைவருக்கும் இட ஒதுக்கீடு உண்டு; இதற்கு சாதி தடையாக இருக்காது என்று அறிவித்தார். இந்த அறிவிப்பைக் கேட்டதும் பலருக்கும் அதிர்ச்சி.
திராவிடக் கட்சிகளின் அடிப்படையே சமூக நீதி தான். சமுக நீதியும், இட ஒதுக்கீடும் சாதியைத்  அடிப்படையாக கொண்டிருந்தன. ஆனால், எம்.ஜி.ஆர் புரட்சியின் தலைவர் அல்லவா? அதனால் யாரிடமும் கலந்து பேசாமல் இப்படி ஒரு திட்டத்தை அறிவித்தார். பிராமனர்கள் உள்ளிட்ட உயர்சாதிகளைச் சேர்ந்த  ஏழைக் குடும்பத்தினரும் இடஒதுக்கீட்டின் பயன்களை அனுபவிக்க வேண்டும் என்றால் பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவது தான் சரியானது என்று தம்மை எதிர்ப்பவர்களிடம் எல்லாம் எம்.ஜி.ஆர் விளக்கம் அளித்தார். ஆனால், சமூக நீதியில் அக்கறை கொண்டவர்களால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

நீதிமன்றத் தீர்ப்ப்பு

ஆரிய மாயை என்ற தலைப்பில் புத்தகம் எழுதிய அண்ணாவின் பெயரில் கட்சியைத் தொடங்கி அவரது கொள்கைகளுக்கு எதிராக செயல்படுவதை ஏற்க முடியாது என்று அதிமுகவின் முன்னணித் தலைவர்கள் போர்க்கொடி உயர்த்தினர். அதனால் அதைப்பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை என்று எம்.ஜி.ஆர் சமாதானப்படுத்தினார்.

பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி எதிர்க்கட்சிகள் வழக்குத் தொடர்ந்தன.  ஆனால், நீதிமன்றமோ அந்த வழக்கை தள்ளுபடி செய்து எம்.ஜி.ஆர் வழங்கிய இட ஒதுக்கீடு சரி தான் என்று தீர்ப்பளித்தது. தமிழ்நாடு முழுவதும் எம்.ஜி.ஆர் நல்லவரா?: கெட்டவரா? என்ற விவாதம் நடைபெற்றது.

அதிமுக-திமுக இணைப்பு முயற்சி

இந்த நேரத்தில் இன்னொரு அரசியல் சூறாவளி மையம் கொள்ளத் தொடங்கியது. அதிமுகவையும், திமுகவையும் இணைக்க வேண்டும் என்ற யோசனை தான் அது. இதற்கான முயற்சிகளை மேற்கொண்டவர் அப்போதைய மத்திய எஃகுத்துறை அமைச்சரும், ஒரிசா மாநில முதலமைச்சராக பின்னாளில் பதவி வகித்தவருமான பிஜு பட்நாயக் ஆவார். திமுக தலைவர் கலைஞர், அதிமுக தலைவர் எம்.ஜி.ஆர் ஆகிய இருவரிடமும் அவர் நெருக்கமான உறவு கொண்டிருந்தார்.  ஆயினும் அதிமுக, திமுக இணைப்பு என்ற யோசனையை அவர் உருவாக்க வில்லை. மாறாக எம்.ஜி.ஆர் தான் இப்படி ஒரு திட்டத்தை பட்நாயக்கிடம் முன்மொழிந்ததாக கூறப்படுகிறது.

அதற்கு முன்பாக நடந்த நிகழ்வுகளும் இதை உறுதி செய்கின்றன. 1979&ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 6&ஆம் தேதி தில்லி சென்ற எம்.ஜி.ஆர். இந்திரா காந்தியை சந்தித்து அதிமுக & காங்கிரஸ் கூட்டணி குறித்து விவாதிக்க திட்டமிட்டிருந்ததாக செய்திகள் வெளியாகின. ஆனால், அன்று அந்த சந்திப்பு நடக்கவில்லை. மாறாக மத்திய அமைச்சர் பிஜு பட்நாயக்கை எம்.ஜி.ஆர் சந்தித்து பேசினார். அன்று இரவே கலைஞரை தொடர்பு கொண்டு பேசிய பட்நாயக், விஷயத்தைக் கூறாமல் முக்கியப் பிரச்சினை குறித்து விவாதிக்க உங்களை சந்திக்க வேண்டும் என்று கூறினார். அதற்குள்ளாகவே, அவர் சந்திக்க விரும்புவதன் காரணம் குறித்து கலைஞருக்கு தெரிந்து விட்டது. அவருக்கும் அதிமுக & திமுக இணைப்பில் சம்மதம் தான் என்பதால் சந்திப்புக்கு ஒப்புதல் அளித்தார்.

திமுகவின் நிபந்தனைகள்

அதன்படி, செப்டம்பர் 12-ஆம் தேதி திமுக தலைவர் கலைஞரை அவரது கோபாலபுரம் இல்லத்தில் பிஜு பட்நாயக் சந்தித்து பேசினார். அந்த சந்திப்பில் திமுகவின் மூத்த தலைவர்களான அன்பில் தர்மலிங்கம், முரசொலி மாறன் உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர். இந்த இணைப்பு முயற்சியை  முன்மொழிந்தவர் யார்? என்று படநாயக்கிடம் திமுக தலைவர்கள் கேட்க, அவரும் எம்.ஜி.ஆர் தான் இந்த யோசனையை தெரிவித்ததாக கூற இரு தரப்பிலும் மட்டற்ற மகிழ்ச்சி.
இந்த யோசனையை ஏற்றுக் கொண்ட கலைஞர், இரு கட்சிகளின் இணைப்புக்காக சில நிபந்தனைகளை  விதித்தார். அவற்றின் விவரம் வருமாறு:

1. இரு கட்சிகளும் இணைந்து தி.மு.க. என்ற பெயரில்தான் இயங்கவேண்டும்.

2. அக்கட்சிக்கு அண்ணா படம் பொறித்த கொடியே இருப்பதில் எங்களுக்கு எந்த மறுப்பும் இல்லை.

3. முதலமைச்சராக இப்போதுள்ள எம்.ஜி.ஆர். அவர்களே அப்பதவியில் நீடிக்கட்டும்.

4. இரு கட்சிகளும் இணைவது என்பதற்காகத் தி.மு.கவில் இப்போதுள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் யாருக்கும் அமைச்சர் பதவி எதுவும் தேவையில்லை.

5. இரு கட்சிகளும் இணைந்த பிறகு, உரிய நேரத்தில் தலைமைக் கழகத்தின் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் மற்றும் நிர்வாகப் பொறுப்புகள் குறித்து முடிவு செய்து கொள்ளலாம்.

6. முக்கியமான விஷயம்: எம்.ஜி.ஆர். அவர்கள் ஆட்சியில் இடஒதுக்கீட்டில் கொண்டு வந்துள்ள சமூக நீதிக்குப் புறம்பான ஒன்பதாயிர ரூபாய் உச்சவரம்பு ஆணை; பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு என்பது உடனடியாகத் திரும்பப் பெறப்பட வேண்டும்.

கலைஞர் - எம்.ஜி.ஆர் சந்திப்பு

அதைக் கேட்ட பிஜு பட்நாயக் “இந்த நிபந்தனைகளை எம்.ஜி.ஆர். ஏற்றுக் கொள்ள எந்தக் கஷ்டமும் இருக்காது. நான் இப்போதே எம்.ஜி.ஆர். இல்லம் செல்கிறேன். இன்றைக்கே உங்கள் இருவரையும் சந்திக்க வைக்கிறேன்’’ என்று கூறினார். ஆனால், கலைஞரோ,“அவரைச் சந்திப்பதில் எனக்கொன்றும் மறுப்பு இல்லை. சந்திப்பதற்கு முன்பு கழக முன்னோடிகள் அனைவரிடமும் நான் கலந்து பேச வேண்டும். பொதுச் செயலாளர் வெளியூர் சென்றுள்ளார். இன்று மாலையில்தான் வருகிறார். அவரையும் மற்றவர்களையும் கலந்து பேசிக் கொள்கிறேன். எனவே சந்திப்புக்கு நாளைய தினம் ஏற்பாடு செய்யுங்கள்” என்று கேட்டுக் கொண்டார்.

அதன்படியே 1979-ஆம் ஆண்டு செப்டம்பர் 13&ஆம் தேதி பிஜு பட்நாயக் முன்னிலையில், எம்.ஜி.ஆரும், கலைஞரும் சந்தித்து பேசினார்கள். இந்த சந்திப்பின் விவரங்களை திமுக தலைவர் கலைஞரின் வார்த்தைகளில் கேட்போம்....

‘‘செப்டம்பர் 13&ஆம் தேதி காலை 11 மணியளவில் பிஜுபட்நாயக் முன்னிலையில் நானும் எம்.ஜி.ஆரும் சென்னை சேப்பாக்கம் அரசினர் விடுதியில் சந்தித்துப் பேசினோம். அப்போது கழகப் பொதுச் செயலாளர் பேராசிரியர், அ.தி.மு.க. சார்பில் நாவலர் நெடுஞ்செழியன், பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.

பிறகு நானும் எம்.ஜி.ஆர். அவர்களும் அந்த விடுதியின் வேறொரு அறையில் தனிமையில் பேசினோம். பிஜுபட்நாயக்கிடம் நான் தெரிவித்த கருத்துக்களும் நிபந்தனைகளும் உண்மைதானா? என்று எம்.ஜி.ஆர். வியப்புடன் கேட்டார். இரு கட்சிகளும் இணைந்து தி.மு.க. என்ற பெயரில் இயங்க வேண்டுமென்பதற்கு தி.மு.க. என்ற பெயரில்தான் ஏற்கனவே பல இடங்களில் கட்டிடங்கள், சொத்துக்கள் இருக்கின்றன என்பது மட்டுமல்லாமல், தி.மு.க. என்பதுதான் அண்ணா உருவாக்கிய கழகம்; எனவே அந்தப் பெயரே நிலைக்கலாம் என்பதையும் அவரிடம் விளக்கினேன்.

அண்ணா கொடியே நீடிக்கட்டும்

அண்ணாவின் படத்தைப் பதித்துள்ள கொடியே இணைந்து விடப் போகும் கட்சியின் கொடியாக இருக்கட்டுமென்றும் கூறினேன். மற்றும் பிஜு பட்நாயக்கிடம் கூறிய மற்றவைகளையும் எம்.ஜி.ஆரிடம் விளக்கினேன். அவர் எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டது மட்டுமல்லாமல், ஒரு குறிப்பிட்ட நாளில் இரண்டு கட்சிகளின் செயற்குழு, பொதுக் குழுக்களையும் வெவ்வேறு இடங்களில் கூட்டி இரு கட்சிகளின் இணைப்புத் தீர்மானத்தை நிறைவேற்றி விடலாம் என்றும் அறுதியிட்டுக் கூறினார்.

பின்னர் இருவரும் நாங்கள் தனித்துப் பேசிக் கொண்டிருந்த அறையிலிருந்து வெளியே வந்து பிஜு பட்நாயக்கிடமும் அங்கிருந்த இரு கட்சிகளின் தலைவர்களிடமும் பேச்சின் முடிவு குறித்துத் தெரிவித்தோம். செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள் எங்களைச் சூழ்ந்து கொண்டு கை குலுக்கினர். புகைப்படமெடுத்தனர். நிருபர்களின் கேள்விக்குப் பதில் அளித்த போதும் நான், எம்.ஜி.ஆர். இருவருமே இரு கட்சிகளின் செயற் குழு, பொதுக்குழுக்களில் விவாதித்து முடிவு அறிவிக்கப்படுமென்று கூறினோம்’’

24 மணி நேரத்தில் முயற்சி தோல்வி

இந்த நிகழ்வுகளை தமிழகம் மட்டுமின்றி ஒட்டு மொத்த இந்தியாவும் ஆவலுடனும், ஆச்சரியத்துடன் பார்த்தது. ஆனால், அந்த ஆவலும், ஆச்சரியமும் 24 மணி நேரம் கூட நீடிக்கவில்லை.  அதற்கு அடுத்த நாள் வேலூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் நிலைமை தலைகீழானது. எம்.ஜி.ஆர் இணைப்பு குறித்து ஒரு வார்த்தையும் பேசவில்லை. எம்.ஜி.ஆரின் அமைச்சரவையில் இருந்த அமைச்சர்கள் திமுகவை கடுமையாக தாக்கி பேசினர். இரு கட்சிகளையும் இணைக்க வேண்டும் என்ற யோசனைக்கு அக்கூட்டத்தில் முடிவுரை எழுதப்பட்டது.
எம்.ஜி.ஆரால் ஆர்வத்துடன் தொடங்கப்பட்ட இணைப்பு முயற்சி முறிந்ததற்கான காரணம் யாருக்கும் உறுதியாக தெரியவில்லை. ஆனால், இப்போது ஜெயலலிதா சமாதி முன் தியானம் செய்து அம்மாவின் ஆன்மா தம்மிடம் கூறியதாக ஓ.பன்னீர் செல்வம் பல விஷயங்களைச் சொல்வதைப்போல, அப்போது தமது கனவில் தாயார் வந்ததாகவும், இந்த இணைப்பு வேண்டாம் என்று கூறிவிட்டதாகவும் அன்றைய காவல்துறை தலைவர் மோகன்தாசிடம் எம்.ஜி.ஆர் கூறியதாக ஒரு செய்தி நிலவி வருகிறது.

காரணம் யார்?

ஆனால், அதிமுக -திமுக இணைப்பு முயற்சியை கெடுத்தவர் பண்ருட்டி இராமச்சந்திரன் தான் என்று பின்னாளில் கலைஞர் குற்றஞ்சாற்றினார். இந்த முயற்சிகளுக்கு பிறகு 2008&ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னையில் நடைபெற்ற திமுக விருது வழங்கும் விழாவில் பேசிய கலைஞர் கீழ்க்கண்டவாறு கூறினார்.

‘‘ இரு கட்சிகளின் இணைப்பு குறித்து பேசிய எம்.ஜி.ஆர், அதற்கு அடுத்த நாள் பொதுக்கூட்டத்தில் பேசுவதற்காக வேலூர் சென்றார். காரில் சென்றபோது என்ன நடந்ததோ எனக்கு தெரியாது. காரிலே அவரோடு சென்றவர், காதுக்குள்ளே புகுந்தார். கருத்தை மாற்றினார். வேலூர் பொதுக்கூட்டத்திலே எம்ஜிஆர் பேசும்போது, மாலை பத்திரிகையில் நானும், கருணாநிதியும் இணைய போகிறோம். திமுகவும், அதிமுகவும் இணையப்போகின்றன என்று வந்துள்ள செய்தியை யாரும் நம்பாதீர்கள் என்று ஒரு செய்தியை அங்கே வெளியிட்டார். நான் உங்களுக்கு சொல்கிறேன். இது எப்படி விளைந்தது என்று கேட்டால் அப்போதே சொன்னேன்... பெயர் சொல்ல விரும்பாத ஒருவர் என்று- அவரும் அந்த காரில் சென்றார். அதனுடைய விளைவு இந்த முடிவுக்கு காரணமாக ஆனது’’. எம்.ஜி.ஆருடன் காரில் சென்று காதுக்குள் புகுந்து முடிவை மாற்றியதாக

கலைஞர் குறிப்பிட்ட அந்த நபர் பண்ருட்டி இராமச்சந்திரன்.

Friday, 3 March 2017

கதை கேளு... கதை கேளு கழகத்தின் கதை கேளு!      அச்சம் என்பது வீரமடா!                  -மருத்துவர் இராமதாஸ்

கதை கேளு... கதை கேளு கழகத்தின் கதை கேளு!

     அச்சம் என்பது வீரமடா!
                 -மருத்துவர் இராமதாஸ்

புதிதாக எதுவும் சொல்வதற்கு இல்லை... ஏற்கனவே பலமுறை குறிப்பிட்டது தான். அரசியலில் எம்.ஜி.ஆர் துணிச்சல் இல்லாத கோழை. இதற்கு ஏற்கனவே பல உதாரணங்களைக் கூறியிருக்கிறேன். அதற்கு இன்னொரு உதாரணம் தான் தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் இந்திரா காந்தியை ஆதரிப்பதாக அறிவித்து விட்டு எம்.ஜி.ஆர் பின்வாங்கிய கதை.

விசாரணை ஆணையம் அமைப்பு

1977&ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட்ட இந்திரா காந்தி படுதோல்வி அடைந்தார். காங்கிரஸ் கட்சியும் படுதோல்வி அடைந்ததால் கிட்டத்தட்ட அரசியல் துறவறம் பூண்டவராக இந்திரா காந்தி ஒதுங்கி இருந்தார்.

மரங்கள் ஓய்வெடுக்க விரும்பினாலும், காற்று அதை அனுமதிப்பதில்லை என்பதைப் போல இந்திரா ஒதுங்கி இருந்தாலும் அவரை சீண்டிக் கொண்டே இருந்தது மொரார்ஜி தேசாய் தலைமையிலான ஜனதா அரசு. இந்திரா காந்தியை அரசியலில் இருந்து நிரந்தரமாக விரட்ட வேண்டும் என்று நினைத்த தேசாய், இந்திரா காந்தி ஆட்சியில் நெருக்கடி நிலையின் போது நடந்த அத்துமீறல்கள் குறித்து விசாரிக்க நீதிபதி ஷா தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது. எந்த பதவியிலும் இல்லாமல் இருந்தால் ஷா ஆணையத்தால் விசாரணை என்ற பெயரில் நெருக்கடிக்கு ஆளாக்கப்படுவோம் என்று இந்திரா காந்தி நினைத்தார்.

கைது - விமானம் கடத்தல்

தமக்கு ஏதேனும் பதவி தேவை என்று நினைத்த இந்திரா, கர்நாடக மாநிலம் சிக்மகளூர் இடைத்தேர்தலில் 1978&ஆம் ஆண்டு போட்டியிட்டார். ஆனால், அவரை அந்த பதவியிலிருந்தும் விரட்ட வேண்டும் என்பதில் பிரதமர் மொரார்ஜி தேசாய் உறுதியாக இருந்தார். அந்த நேரத்தில் மாருதி கார் நிறுவனத்தில் நடந்த விதி மீறல்கள் மற்றும் முறைகேடுகள் குறித்த வழக்கில் இந்திராவும் சிக்கினார். எனினும் இந்த வழக்கில் அவர் கைது செய்யப்படவில்லை. இதுகுறித்து இந்திரா காந்தியிடம் விசாரிப்பதற்காகச் சென்ற நாடாளுமன்ற அதிகாரிகள் 4 பேரை இந்திரா காந்தி அவமதித்ததாக குற்றச்சாற்று எழுந்தது. இதற்காக இந்திரா காந்தி மீது உரிமை மீறல் பிரச்சினை எழுப்பப்பட்டு, அவரை தண்டிப்பதற்கான தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதன் காரணமாக அவரது மக்களவை உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி, 1978&ஆம் ஆண்டு திசம்பர் 19&ஆம் தேதி இந்திரா காந்தி கைது செய்யப்பட்டு, தில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். அதைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் கடுமையான போராட்டங்களை நடத்தினார்கள். சில காங்கிரஸ் தொண்டர்கள் இந்திரா காந்தியை விடுதலை செய்யக் கோரி ஏர் இந்தியா விமானத்தையே கடத்தினார்கள். இதைத் தொடர்ந்து ஒரு வாரத்தில் அதாவது திசம்பர் 26&ஆம் தேதி அவர் விடுதலை செய்யப்பட்டார்.

தஞ்சாவூரில் போட்டி

விடுதலைக்கு பிறகு இந்திராவின் அரசியலே தலைகீழாக மாறியது. அதுவரை தம்மை காப்பாற்றிக் கொள்வதற்காக தற்காப்பு அரசியல் நடத்தி வந்த இந்திரா காந்தி, அதன் பிறகு தான் மொரார்ஜி தேசாய் அரசுக்கு எதிராக அதிரடி அரசியலைத் தொடங்கினார். சிறையில் அடைக்கப்பட்டதால், இந்திரா காந்தி பழிவாங்கப்படுவதாக நினைத்து மக்களின் அனுதாபமும் அவர் பக்கம் திரும்பியது. இந்திராவுக்கு செல்வாக்கு பெருகுவதை உணர்ந்த எம்..ஜி.ஆர் மொரார்ஜி தேசாயிடமிருந்து தனது ஆதரவை இந்திராவின் பக்கம் திருப்பி விட்டார். இந்த நேரத்தில் தான் 1979-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மீண்டும் மக்களவை உறுப்பினராக இந்திரா விரும்பினார். அந்த நேரத்தில் தமிழகத்தில் நாகப்பட்டினம், தஞ்சாவூர் ஆகிய இரு மக்களவைத் தொகுதிகள் காலியாக இருந்தன. அவற்றில் தஞ்சாவூர் தொகுதியில் இந்திரா காந்தி போட்டியிடுவது சரியாக இருக்கும் என்று அவரது கட்சியின் மூத்த தலைவர்கள் கூறியதால் அங்கேயே போட்டியிட இந்திரா ஆயத்தமானர். அவருக்கு ஆதரவு அளிப்பதாக எம்.ஜி.ஆரும் வெளிப்படையாக அறிவித்தார்.

தஞ்சாவூரில் இந்திரா போட்டியிட இருப்பதும், அதற்கு எம்.ஜி.ஆர் ஆதரவளிக்கப் போவதும் பிரதமர் மொரார்ஜி தேசாயை ஆத்திரப்படுத்தியது. அரசியலில் இருந்து அகற்றப்பட்டுவிட்ட இந்திராவுக்கு எம்.ஜி.ஆர் வாழ்வளிக்க முயல்கிறாரா? என்று அவர் ஆத்திரப்பட்டார். உடனடியாக எம்.ஜி.ஆரைத் தொடர்பு கொண்ட தேசாய்,‘‘நீங்கள் எங்கள் நண்பனா? எதிரியா?’’ என்று மட்டும் கேட்டுவிட்டு தொலைபேசியை வைத்து விட்டார்.

‘‘அச்சம் என்பது .. மடமையடா..
அஞ்சாமை திராவிடர்  உடமையடா
அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உடமையடா
ஆறிலும் சாவு நூறிலும் சாவு
தாயகம் காப்பது கடமையடா!’’
என்றெல்லாம் திரைப்படத்தில் முழங்கிய எம்.ஜி.ஆருக்கு மொரார்ஜி தேசாயின் கேள்வியில் குலை நடுங்கி விட்டது. கலைஞர் அரசை இந்திரா கலைத்ததைப் போல தமது அரசை மொரார்ஜி தேசாய் கலைத்து விடுவாரோ என்பதில் தொடங்கி என்னென்னவோ ஐயங்கள் அவர் மனதில் ஓடின.

எம்.ஜி.ஆர் பல்டி

உடனடியாக, ஓர் அறிவிப்பை வெளியிட்டார் எம்.ஜி.ஆர்.
தஞ்சாவூர் தொகுதியில் இந்திரா காந்திக்கு பாதுகாப்பு இருக்காது என்பதால் அவர் அங்கு போட்டியிட வேண்டாம் என்பது தான் அந்த அறிவிப்பு. மத்திய அரசுக்கு பயந்து தான் இந்திரா காந்திக்கு ஆதரவு  தர மறுக்கிறீர்களா? என்று கேட்ட போது, ‘‘ தமிழக மக்களின் நலனுக்காக மத்திய அரசை ஆதரிப்பதில் எந்த தவறும் இல்லை’’ என்று சமாதானம் கூறினார்.

ஆனால், இந்திரா காந்திக்கு எம்.ஜி.ஆர் மீது கடுங்கோபம். ‘‘இந்திரா தான் இந்தியா... இந்தியா தான் இந்திரா என்று இருந்த காலம் போய் மக்களவை உறுப்பினர் ஆவதற்கு ஒரு தொகுதி கிடைக்காத நிலை வந்து விட்டதே... நம்மை எம்.ஜி.ஆர் நம்பவைத்து கழுத்தறுத்து விட்டாரே?’’ என்று மனதுக்குள் புழுங்கினார். ஆனால், அப்போது இருந்த சூழலில் அதை அவரால் வெளிக்காட்டிக்கொள்ள முடியவில்லை.

இந்திராவின் கோபத்தை எம்.ஜி.ஆரும் உணர்ந்திருந்தார். இந்திராவை சமாதானப்படுத்த நினைத்த எம்.ஜி.ஆர், தஞ்சாவூர் இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடாது என்று அறிவித்தார். அத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக சிங்கார வடிவேலு அறிவிக்கப்பட, அவரை வெற்றி பெற வைத்தார் எம்.ஜி.ஆர்.

கலைஞரின் துணிச்சல்

ஆனாலும் இந்திரா காந்தியின் கோபம் தணியவில்லை. இந்த இடத்தில் இன்னொரு ஒப்பீடு அவசியமானது ஆகும். நெருக்கடி நிலை காலத்தின் போது தனது அரசியல் எதிரியாக நினைத்த காமராஜரை கைது செய்ய வேண்டும் என்று கலைஞருக்கு இந்திரா காந்தி நெருக்கடி கொடுத்தார். அவரது கோரிக்கையை ஏற்காவிட்டால் ஆட்சி கலைக்கப்படும் என்பது கலைஞருக்கு தெரியும். ஆனாலும், அதைப்பற்றிக் கவலைப்படாமல்,‘‘காமராஜர் தமிழகத்தின் தலைவர். எனது ஆட்சியே போனாலும் பரவாயில்லை. காமராஜரை ஒரு போதும் கைது செய்ய மாட்டேன்’’ என்று துணிச்சலாக எதிர்த்து நின்றார். அதுமட்டுமின்றி, ஜனதாக் கட்சித் தலைவர்கள் பலரும் நெருக்கடி நிலை காலத்தின் போது தமிழகத்தில் தான் தஞ்சம் புகுந்திருந்தனர். அந்த வகையில் அப்போதைய கலைஞரின் துணிச்சல் பாராட்டத்தக்கது.

இந்திராவுக்கு அரசியல் ரீதியில் கை கொடுக்க எம்.ஜி.ஆர் மறுத்து விட்டாலும், தில்லி அரசியல் நிலவரம் அவருக்கு சாதகமாக இருந்தது. ஜனதாக் கட்சிக்குள் ஏற்பட்ட மோதலால்  மொரார்ஜி தேசாய் பதவி விலகினார். அவருக்கு பதில் இந்திரா ஆதரவுடன் சரண்சிங் பிரதமர் ஆனார். அவரது அமைச்சரவையில் அதிமுகவும் இடம் பெற்றது. பாலா பழனூர், சத்தியவாணி என அதிமுகவைச் சேர்ந்த இருவர் மத்திய அமைச்சர்களாக பதவியேற்றனர். இதன்மூலம் மத்திய அமைச்சரவையில் அங்கம் வகித்த முதல் மாநிலக் கட்சி என்ற பெருமையை அதிமுக பெற்றது.
சரண்சிங் தலைமையிலான அரசுக்கு ஆதரவளித்ததை காரணம் காட்டி தம்மீதான வழக்குகளையெல்லாம் வாபஸ் பெற வைத்தார். ஒரு கட்டத்தில் இந்திராவின் நிபந்தனைகளை தாங்க முடியாத சரண்சிங் 24 நாட்களில் பதவி விலகினார். 1980-ஆம் ஆண்டில் மக்களவைக்கு தேர்தல் வந்தது.
                                

Thursday, 2 March 2017

நெடுவாசலுக்காக போராடக் கூடாது என ஐ.டி துறையினரை மிரட்டுவதா? மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கேள்வி

நெடுவாசலுக்காக போராடக் கூடாது
என ஐ.டி துறையினரை மிரட்டுவதா?

தமிழ்நாடு அரசின் செயல்பாடுகள் முரண்பாடுகளின் மொத்த உருவம் என்பது நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்ட விவகாரத்தில் மீண்டும் ஒருமுறை அம்பலமாகியிருக்கிறது.
ஒருபுறம் போராட்டத்தைத் திரும்பப் பெறும்படி மக்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில், மறுபுறம் போராட்டத்தை ஒடுக்குவதற்கான மிரட்டல்களை காவல்துறை தீவிரப்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை தனியார் நிறுவனம் மூலம் செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்திருப்பதைக் கண்டித்து அங்குள்ள மக்கள் கடந்த 15 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் இத்திட்டத்தை எதிர்த்து எனது தலைமையில் நாளை நெடுவாசலில் போராட்டம் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், நெடுவாசல் போராட்டக் குழுவினரை அழைத்து முதலமைச்சர் பழனிச்சாமி நேற்று பேச்சு நடத்தியுள்ளார்.

நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு சுரங்க குத்தகை உரிமத்தை தமிழக அரசு வழங்க வில்லை எனவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் இந்தத் திட்டத்துக்கு தமிழக அரசு அனுமதி வழங்காது என்றும் பழனிச்சாமி உறுதியளித்துள்ளார்.

நெடுவாசல் மக்களும், விவசாயிகளும் எந்த அச்சமும் கொள்ளத் தேவையில்லை என்று கூறியுள்ள அவர், இந்த உறுதியை ஏற்று நெடுவாசலில் நடத்தப்பட்டு வரும் போராட்டத்தை கைவிட வேண்டுமென்றும் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். முதலமைச்சர் பழனிச்சாமி இதே நிலைப்பாட்டில் தொடர்ந்து இருந்தால் அது வரவேற்கத்தக்க ஒன்று தான். இந்த நிலைப்பாட்டின் மூலம் தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டம் வராமல் தடுக்க முடியும்.

ஆனால், ஒருபுறம் இவ்வாறு பேசிக்கொண்டு மறுபுறம் நெடுவாசல் மக்கள் போராட்டத்தை சீர்குலைக்கும் செயல்களில் தமிழக அரசு ஈடுபட்டிருக்கிறது. தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு ஆதரவாக நடத்தப்பட்ட போராட்டம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதற்கு காரணம், அதில் மாணவர்களும், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றும் இளைஞர்களும் அதிக அளவில் கலந்து கொண்டது தான்.

இப்போது நெடுவாசல் போராட்டத்திலும் மாணவர்கள் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை பணியாளர்கள் அதிக எண்ணிக்கையில் பங்கேற்றுள்ளனர். அடுத்தக்கட்டமாக சென்னையில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்த அவர்கள் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்தப் போராட்டத்தை முறியடிக்கும் வகையில், சென்னை பழைய மாமல்லபுரம் சாலையில் செயல்படும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் மேலாளர்கள் மற்றும் நிர்வாகிகளை சென்னை மாநகரக் காவல்துறை அதிகாரிகள் நேற்று அழைத்து பேசியுள்ளனர்.
‘‘ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடத்தப்பட்ட போராட்டங்களைப் போன்று, நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராகவும் மிகப்பெரிய அளவில் போராட்டங்களை நடத்த சிலர் முடிவு செய்துள்ளனர். அந்த போராட்டங்களில் உங்கள் நிறுவன பணியாளர்கள் எவரும் பங்கேற்க அனுமதிக்கக் கூடாது. அவ்வாறு பங்கேற்க அனுமதித்தால் அவர்களை கைது செய்வது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். நெடுவாசல் போராட்டத்திற்கு உங்கள் நிறுவனப் பணியாளர்கள் எந்த வகையில் ஆதரவு அளித்தாலும், மோசமான விளைவுகள் ஏற்படும்’’ என்று எச்சரிக்கை விடுத்திருக்கின்றனர். இது கடுமையாக கண்டிக்கத்தக்கது.

மற்றொருபுறம், நெடுவாசல் கிராமத்தில் நடைபெறும் போராட்டங்களில் மாணவர்கள் பங்கேற்பதை தடுக்கும் நடவடிக்கைகளிலும் காவல்துறையினர் ஈடுபட்டிருக்கின்றன. நெடுவாசல் கிராமத்தைச் சுற்றிலும் மொத்தம் 7 இடங்களில் சோதனைசாவடிகளை அமைத்துள்ள காவல்துறையினர், அவ்வழியே நெடுவாசல் செல்லும் அனைத்து வாகனங்களின் பதிவு எண்களையும், அதில் பயணம் செய்வோரின் விவரங்களையும் பதிவு செய்கின்றனர். போராட்டத்தில் பங்கேற்கச் செல்லும் மாணவர்களுக்கு அனுமதி மறுத்து கட்டாயப்படுத்தி திருப்பி அனுப்புகின்றனர்.

பெற்றோரின் அனுமதி இல்லாமல் மாணவர்கள் போராட்டத்தில் பங்கேற்கக் கூடாது என்ற வினோத விதியைக் கூறி அவர்களை விரட்டியடிக்கின்றனர்.
காவல்துறையினரின் நடவடிக்கைகள் கேலிக்கூத்தான ஒடுக்குமுறையாக உள்ளன. போராட்டங்களில் பங்கேற்பது மாணவர்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவன பணியாளர்களின் உரிமை ஆகும். போராட்டம் நடத்தப்படுவதற்கான காரணம் என்னவென்பதை அறிந்து அதை சரி செய்வது தான் ஆட்சியாளர்களுக்கு அழகாகும். மாறாக, பணியாளர்களை போராட்டத்திற்கு அனுப்பக் கூடாது என்று தகவல் தொழில்நுட்ப நிறுவன அதிகாரிகளை மிரட்டுவதும், இந்தியாவுக்கு அந்நிய செலாவணியை ஈட்டித் தரும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை ஏதோ போராட்டத்தில் நடிப்பதற்கு ஆட்களை அனுப்பும் துணை நடிகர்கள் முகவர்களைப் போல கையாளுவதும் கேலிக்கூத்தான செயல்கள் ஆகும்.

மதுக்கடைகளில் 21 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு மது விற்பனை செய்யக்கூடாது என்ற விதியை அரசாலோ, காவல்துறையாலோ முழுமையாக நடைமுறைப்படுத்த முடியவில்லை. அதில் தோல்வியடைந்த அரசும், காவல்துறையும் போராட்டத்தில் பங்கேற்க வரும் மாணவர்களுக்கு பெற்றோரின் அனுமதி தேவை என்ற புதிய விதியை உருவாக்கி செயல்படுத்துவது கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற் மிரட்டல்களால் மக்கள் போராட்டத்தை முறியடித்துவிட முடியும் என அரசு நினைப்பது, சீப்பை ஒளித்து வைப்பதன் மூலம் திருமணத்தை நிறுத்திவிட முடியும் என நினைப்பதற்கு சமமான அறியாமையின் வெளிப்பாடாகும்.

எனவே, இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதை விடுத்து, நெடுவாசல் மக்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி அதன் மூலம் போராட்டத்திற்கு முடிவு காண அரசு முன்வர வேண்டும்.

மருத்துவர். அன்புமணி இராமதாஸ்

#Anbumani #Ramadoss #PMK
#SaveFarmers #SaveNeduvasal #StopMethaneExtraction

Wednesday, 1 March 2017

கதை கேளு... கதை கேளு கழகத்தின் கதை கேளு!           முதலமைச்சர் ஆனார் எம்.ஜி.ஆர்!  -மருத்துவர். இராமதாஸ்    

கதை கேளு... கதை கேளு கழகத்தின் கதை கேளு!

          முதலமைச்சர் ஆனார் எம்.ஜி.ஆர்!
             -மருத்துவர். இராமதாஸ்  
  
1977 சட்டப்பேரவைத் தேர்தலில் எம்.ஜி.ஆரின் வெற்றி கிட்டத்தட்ட முன்கூட்டியே உறுதி செய்யப்பட்டு விட்டதாகத் தான் கூற வேண்டும். 1976 -77 ஆண்டுகள் திமுகவின் வரலாற்றில் கருப்பு ஆண்டுகள். ஆட்சிக் கலைப்பு, மிசாவில் கைது, சர்க்காரியா கமிஷன் விசாரணை ஆகியவற்றை எதிர்கொண்ட திமுக 1977ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் படுதோல்வியை சந்தித்தது. அதுமட்டுமின்றி, அக்கட்சியின் தூண்கள் என்று போற்றப்பட்ட தலைவர்கள் அனைவரும் திமுகவிலிருந்து  வெளியேறினார்கள். இதனால் திமுக வலுவிழந்து காணப்பட்டது.

மற்றொருபுறம், அதிமுக தொடர்ச்சியான வெற்றியால் உற்சாகத்துடன் இருந்தது. 1977ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் எம்.ஜி.ஆர் தீவிரப் பரப்புரை மேற்கொண்டார். அதுமட்டுமின்றி, மொத்தம் 4 அணிகள் போட்டியிட்டதும் எம்.ஜி.ஆருக்கு மிகவும் வசதியாக இருந்தது.  ஜூன் 10&ஆம் தேதி நடைபெற்றத் தேர்தலில் அதிமுக 130 இடங்களிலும், அதன் கூட்டணி கட்சிகள் 14 இடங்களிலும் வெற்றி பெற்றன. திமுக 48 இடங்களிலும், காங்கிரஸ் அணி 32 இடங்களிலும் வெற்றி பெற்றன.

பதவியேற்பு தாமதம்

அதிமுக வெற்றி பெற்று முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகும், அவர் 20 நாட்களுக்கு பதவி ஏற்கவில்லை. காரணம்... அவர் நடித்து பாதியில் நின்ற மீனவ நண்பன், மதுரை மீட்ட சுந்தரபாண்டியன் உள்ளிட்ட சில படங்களை முடித்துத் தர வேண்டிய கட்டாயத்தில் இருந்தது தான் அதற்கு காரணமாகும். படங்களை நடித்துக் கொடுத்த பின்னர், 1977&ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதி முதலமைச்சராக பொறுப்பேற்றார்.

எம்.ஜி.ஆர் முதலமைச்சர் ஆனதை மாநிலமே கொண்டாடியது. தங்களின் குடும்பத்தில் ஒருவர் முதல்வர் ஆகிவிட்டதாக அனைவரும் மகிழ்ந்தனர். எம்.ஜி.ஆரும் மக்களை சந்திப்பது, கை கொடுப்பது, பாட்டிகளை அரவணைப்பது என காலத்தை கடத்தினார். ஆனால், சொல்லிக்கொள்ளும்படியாக மக்களின் நலனுக்கோ, தமிழகத்தின் வளர்ச்சிக்கோ எந்த திட்டமும் செயல்படுத்தப்படவில்லை. மாறாக தமக்கு புகழ் தேடித்தந்த திரையுலகுக்கு சலுகைகளை வாரி இறைத்தார்.

வெளியுலகில் எம்.ஜி.ஆர் மன்னனாக இருந்தாலும், சட்டப்பேரவையில் அவர் நாடோடியாகத் தான் இருக்க வேண்டியிருந்தது. 48 உறுப்பினர்களை வைத்துக் கொண்டு கலைஞர் கொடுத்த குடைச்சல் கொஞ்ச நஞ்சமல்ல. அதிலும் குறிப்பாக திமுகவின் மூவரணியாக துரைமுருகன், க.சுப்பு, இரகுமான்கான் ஆகியோர் எழுப்பிய வினாக்களுக்கு பதிலளிக்க ஆளுங்கட்சியின் முதலமைச்சரும், அமைச்சர்களும் திணறினார்கள்.

திரைப்படமும், அரசியலும்!

ஒரு கவலையும் இல்லாமல் திரையுலகில் கதாநாயகிகளும் டூயட், வில்லன்களுடன் சண்டை, ரசிகர்களுடன் கொண்டாட்டம் என மகிழ்ச்சியாக இருந்த எம்.ஜி.ஆருக்கு அரசியல் எவ்வளவு சிக்கலானது என்பது புரியத் தொடங்கியது. அதேநேரத்தில், மக்களுக்காக புதியத் திட்டங்கள் செயல்படுத்தப்படாவிட்டாலும்,  ஊழல்கள் தலைவிரித்தாடிய கலைஞர் ஆட்சியுடன் ஒப்பிடும் போது எம்.ஜி.ஆர் ஆட்சியில் கண்ணுக்கு தெரியும் அளவுக்கு ஊழல் இல்லாதது மக்களுக்கு மிகப்பெரிய நிம்மதியை அளித்தது. அதுவே அவர்களுக்கு போதுமானதாக இருந்தது.

அரசியல் நெருப்பின் சூட்டை தாங்கிக் கொள்ள முடியாத எம்.ஜி.ஆர், திரைப்படச் சோலையில் இளைப்பாற  விரும்பினார். அதிலும் பல கூத்துக்கள் நடந்தன. எதையும் துணிச்சலாக செய்யும் திறன் இல்லாத எம்.ஜி.ஆர். தாம் மீண்டும் திரைப்படத்தில் நடிக்க மத்திய அரசின் அனுமதியை கேட்க முடிவு செய்தார்.  அதற்கான அனுமதி கேட்டு, மூன்றாம் வகுப்பு மாணவர் ஆசிரியருக்கு விடுப்புக் கடிதம் எழுதுவதைப் போன்ற ஒரு கடிதத்தை எழுதினார். ஆனால், பிரதமரோ, இதற்கெல்லாம் எனது அனுமதி தேவையில்லை... நடிப்பதைப் பற்றி நீங்களே முடிவு எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டார்.

மீண்டும் அரிதாரம்!

அதைத்தொடர்ந்து கவிஞர் வாலியின் கதை வசனத்தில் ‘உன்னை விட மாட்டேன்’ என்ற திரைப்படத்தில் நடிக்க எம்.ஜி.ஆர் முடிவு செய்தார். இதற்காக அவர் தரப்பில் கூறப்பட்ட காரணம்... ஏராளமாக வரிபாக்கி இருப்பதால் அதை கட்ட கூடுதல் வருவாய் ஈட்ட வேண்டும் என்பது தான். அப்போது வரி செலுத்தவே பணம் இல்லாத முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர் பின்னாளில் தமது உறவினர்களுக்கும், தத்துப் பிள்ளைகளுக்கும் பல ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துக்களைக் குவித்து வைத்தது எப்படி? என்ற வினா உங்களுக்கு எழுந்தால் அதற்கான பதில் என்னிடம் இல்லை.

விவசாயிகள் போராட்டம்!

உன்னை விட மாட்டேன் திரைப்படத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில்,  எம்.ஜி.ஆருக்கு அடுத்த நெருக்கடி ஆரம்பம் ஆனது. இந்த முறை எம்.ஜி.ஆருக்கு நெருக்கடி கொடுத்தது கலைஞரோ அல்லது பிற அரசியல் கட்சிகளோ இல்லை. மாறாக விவசாயிகள்.  விவசாயிகளின் சார்பில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் நாராயணசாமி முதலமைச்சர் எம்.ஜி.ஆருக்கு கடிதம் எழுதினார். விவசாயிகளின்  பல்வேறு கோரிக்கைகளை பட்டியலிட்டிருந்த நாராயண சாமி நாயுடு, அவற்றை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும், அவ்வாறு நிறைவேற்றா விட்டால், தமிழகம் தழுவிய அளவில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரித்திருந்தார். அந்த கடிதம் எம்.ஜி.ஆருக்கு கலக்கத்தை ஏற்படுத்தியது. உன்னை விட மாட்டேன் என்று திரைப்படம் தயாரிக்கவிருக்கும் நிலையில், இவர் நம்மை விட மாட்டார் போலிருக்கிறதே என்று எம்.ஜி.ஆர் அஞ்சினார்.

எம்.ஜி.ஆரின் அச்சத்துக்கு அர்த்தம் இருந்தது. காரணம்... நாராயணசாமி நாயுடு உறுதிப்பாடு மிக்கவர்.  எந்த ஒரு போராட்டத்தை அறிவித்தாலும் அதில் வெற்றி பெறாமல் பின்வாங்க மாட்டார். அதுமட்டுமின்றி, இப்போதுள்ள விவசாயிகள் சங்கங்களைப் போன்று நாராயணசாமி நாயுடுவின் சங்கம் பெயரளவிலோ, விளம்பரத்திற்காகவோ இயங்கிய சங்கம் அல்ல. அந்த சங்கத்தில் லட்சக்கணக்கான விவசாயிகள் உறுப்பினர்களாக இருந்தனர். கடந்த காலங்களில் கோரிக்கைகளை நிறைவேற்ற உயிர்த்தியாகம் செய்யவும் அந்த சங்கத்தினர் தயங்கியதில்லை.

நாராயணசாமி நாயுடு

உதாரணமாக, 1972-ஆம் ஆண்டில் மின் கட்டண உயர்வைக் கண்டித்தும், அதை திரும்பப் பெற வலியுறுத்தியும் ஜூன் 2 ஆம் தேதி முதல் 4 ஆம் தேதி வரை காய்கறிகளையும் பாலையும் விவசாயிகள் நகரங்களுக்கு அனுப்புவதை நிறுத்தி போராட்டம் நடத்தினார்கள். ஆனால், அந்த போராட்டத்தை தமிழக அரசு கண்டு கொள்ளாத நிலையில், அடுத்தக்கட்டமாக விவசாயிகள் 07.06.1972 அன்று கோவையில் புதுமையாக மாட்டு வண்டிப் போராட்டத்தை நடத்தினார்கள். மாவட்டத்தின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் புறப்பட்ட பல்லாயிரக் கணக்கான மாட்டு வண்டிகள், கோவை நகரின் சாலைகளிலும் சந்துபொந்துகளிலும் மத்திய சிறைச்சாலைக்கு முன்பும் நிறுத்தப்பட்டன. கோவை நகரம் நிலைகுலைந்த்தது. அமெரிக்காவிலிருந்து வெளிவரும் ‘தி நியூயார்க் டைம்ஸ்’ உள்ளிட்ட உலகப் பத்திரிகைகள் அவர்களைப் பாராட்டி ‘மாட்டு வண்டிகள் இந்திய விவசாயிகளின் பாட்டன் டாங்குகள்’ என்று இந்தப் போராட்டச் செய்தியை வெளியிட்டன. இதற்குக் காரணமாக இருந்த  தலைவர்களில் நாராயணசாமி நாயுடு குறிப்பிடத் தக்கவர் ஆவார்.

போராட்டத்தின் வீச்சை உணர்ந்த அரசு பணிந்தது. நாராயணசாமி நாயுடு தலைமையில் 1972 ஜூலை 13-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை அரசுடன் பேச்சு வார்த்தை நடந்தது. அதன்படி ஜூலை 19-ல் ஒப்பந்தம் ஏற்பட்டது. தற்காலிகமாக மின் கட்டண உயர்வு பிரச்சினைக்குத் தீர்வு ஏற்பட்டது. மின் கட்டணத்தில் யூனிட் ஒன்றுக்கு ஒரு பைசா என்ற அளவில் குறைக்கப்பட்டது. சிறையில் இருந்த அனைத்து விவசாயிகளும் விடுவிக்கப்பட்டார்கள்.

நிழலும் நிஜமும்!

இந்த வெற்றி நாராயணசாமி நாயுடுவை தமிழக விவசாயிகளின் ஒப்பற்ற தலைவராக உயர்த்தியது. தனக்குக் கிடைத்த அங்கீகாரத்துடன் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, விவசாயிகளின் மாநாடுகளை நடத்தினார். சாதி, மத பேதங்களைத் தாண்டி, தமிழக விவசாயிகள் அனைவரும் ஓரணியில் திரண்டதைப் பயன்படுத்தி, ‘தமிழக விவசாயிகள் சங்கம்’ என்ற புதிய அமைப்பை 13.11.1973-ல் தொடங்கினார். அதன் தலைவராக நாராயணசாமி நாயுடு ஒருமனதாகத் தேர்ந் தெடுக்கப்பட்டார். அந்த அமைப்பின் சார்பில் தான் நாராயணசாமி நாயுடு எம்.ஜி.ஆருக்கு கடிதம் எழுதியிருந்தார்.

ஆனால், எம்.ஜி.ஆர் விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்கும் மனநிலையில் இல்லை....

விவசாயி .... விவசாயி ....
கடவுள் என்னும் முதலாளி
கண்டெடுத்த தொழிலாளி
விவசாயி .... விவசாயி ...
முன்னேற்ற பாதையிலே மனச வைத்து
முழு மூச்சா அதற்காக தினம் உழைத்து
முன்னேற்ற பாதையிலே மனச வைத்து
முழு மூச்சா அதற்காக தினம் உழைத்து
மண்ணிலே முத்தெடுத்து பிறர் வாழ
மண்ணிலே முத்தெடுத்து பிறர் வாழ
வழங்கும் குணம் உடையோன் விவசாயி
விவசாயி ... விவசாயி ....
என்று திரைப்படங்களில் பாடி நடித்தாலும்,  உண்மை வாழ்வில் அந்த வரிகளுக்கு உயிர் கொடுக்க எம்.ஜி.ஆர் தயாராக இல்லை.

‘‘நான் ஆணையிட்டால், அது நடந்து விட்டால்
இங்கு ஏழைகள் வேதனை படமாட்டார்.
உயிர் உள்ள வரை, ஒரு துன்பம் இல்லை.
அவர் கண்ணீர் கடலிலே விழ மாட்டார்.

-என்றெல்லாம் திரைப்படங்களில் முழங்கியவர் ஆணையிடும் நிலைக்கு வந்த பிறகு எதுவும் செய்யவில்லை.

விவசாயிகள் சுட்டுக்கொலை

இதனால் அதிர்ச்சியடைந்த விவசாயிகள் போராட்டத்திற்கு ஆயத்தமானார்கள். ஆனால், எம்.ஜி.ஆரோ இவ்வளவுக்கும் காரணம் நாராயணசாமி நாயுடு தான் என்று கருதி 1978&ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2&ஆம் தேதி திண்டுக்கல்லில் தங்கியிருந்த அவரை கைது செய்தார். அதைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தை ஒடுக்க காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியது. தமிழகத்தின் பல இடங்களில் 5 விவசாயிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அதன்பிறகும் உழவர்கள் போராட்டம் முடிவுக்கு வரவில்லை.

காவல்துறையினரால் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர முடியாத நிலையில், இராணுவத்தை அழைத்த எம்.ஜி.ஆர் அவர்களின் உதவியுடன் உழவர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தார்.
இதனால் எம்.ஜி.ஆர் அரசு மீது மக்கள் பெருங்கோபம் கொண்டிருந்த நிலையில், அவரோ அதைப்பற்றி கவலைப்படாமல் 1972&ஆம் ஆண்டு ஏப்ரல் 14-ஆம் தேதி தமிழ் புத்தாண்டு அன்று உன்னை விட மாட்டேன் திரைப்படத்திற்கு பூஜை போட்டார். ஏழைப்பங்காளன் என்ற தோற்றத்தை ஏற்படுத்தியிருந்த எம்.ஜி.ஆர் எப்படிப்பட்டவர் என்பதை அன்று தான் விவசாயிகள் புரிந்து கொண்டனர்.

            

சட்டவிரோத மதுக்கடை பலகை மீது ஸ்டிக்கர் ஒட்டும் போராட்டம் - மருத்துவர் அன்புமணி இராமதாஸ் MP பங்கேற்பு

சட்டவிரோத மதுக்கடை பலகை மீது ஸ்டிக்கர் ஒட்டும் போராட்டம் - மருத்துவர் அன்புமணி இராமதாஸ் MP பங்கேற்பு

---------------
உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் இன்னும் அகற்றப்படாமல் இருக்கும் வழிகாட்டி பலகைகள் மற்றும் அறிவிப்பு பலகைகள் மீது  ஸ்டிக்கர் ஒட்டும் போராட்டத்தில் இன்று கலந்து கொண்டு, சென்னை அசோக்நகர் மதுக்கடை பலகை மீது ஸ்டிக்கர் ஒட்டினேன்.

மது ஒழிப்புக்காக போராடிய என்னையும் பாமக தொண்டர்களையும் காவல்துறையினர் கைது செய்து, தற்போது மேற்கு மாம்பலம் ராமகிருஷ்ணா திருமண மண்டபத்தில் வைத்துள்ளார்கள்.

#AnbumaniProtest #BanTasmac #SavePeople #ScVerdict