கதை கேளு... கதை கேளு கழகத்தின் கதை கேளு!
அச்சம் என்பது வீரமடா!
-மருத்துவர் இராமதாஸ்
புதிதாக எதுவும் சொல்வதற்கு இல்லை... ஏற்கனவே பலமுறை குறிப்பிட்டது தான். அரசியலில் எம்.ஜி.ஆர் துணிச்சல் இல்லாத கோழை. இதற்கு ஏற்கனவே பல உதாரணங்களைக் கூறியிருக்கிறேன். அதற்கு இன்னொரு உதாரணம் தான் தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் இந்திரா காந்தியை ஆதரிப்பதாக அறிவித்து விட்டு எம்.ஜி.ஆர் பின்வாங்கிய கதை.
விசாரணை ஆணையம் அமைப்பு
1977&ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட்ட இந்திரா காந்தி படுதோல்வி அடைந்தார். காங்கிரஸ் கட்சியும் படுதோல்வி அடைந்ததால் கிட்டத்தட்ட அரசியல் துறவறம் பூண்டவராக இந்திரா காந்தி ஒதுங்கி இருந்தார்.
மரங்கள் ஓய்வெடுக்க விரும்பினாலும், காற்று அதை அனுமதிப்பதில்லை என்பதைப் போல இந்திரா ஒதுங்கி இருந்தாலும் அவரை சீண்டிக் கொண்டே இருந்தது மொரார்ஜி தேசாய் தலைமையிலான ஜனதா அரசு. இந்திரா காந்தியை அரசியலில் இருந்து நிரந்தரமாக விரட்ட வேண்டும் என்று நினைத்த தேசாய், இந்திரா காந்தி ஆட்சியில் நெருக்கடி நிலையின் போது நடந்த அத்துமீறல்கள் குறித்து விசாரிக்க நீதிபதி ஷா தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது. எந்த பதவியிலும் இல்லாமல் இருந்தால் ஷா ஆணையத்தால் விசாரணை என்ற பெயரில் நெருக்கடிக்கு ஆளாக்கப்படுவோம் என்று இந்திரா காந்தி நினைத்தார்.
கைது - விமானம் கடத்தல்
தமக்கு ஏதேனும் பதவி தேவை என்று நினைத்த இந்திரா, கர்நாடக மாநிலம் சிக்மகளூர் இடைத்தேர்தலில் 1978&ஆம் ஆண்டு போட்டியிட்டார். ஆனால், அவரை அந்த பதவியிலிருந்தும் விரட்ட வேண்டும் என்பதில் பிரதமர் மொரார்ஜி தேசாய் உறுதியாக இருந்தார். அந்த நேரத்தில் மாருதி கார் நிறுவனத்தில் நடந்த விதி மீறல்கள் மற்றும் முறைகேடுகள் குறித்த வழக்கில் இந்திராவும் சிக்கினார். எனினும் இந்த வழக்கில் அவர் கைது செய்யப்படவில்லை. இதுகுறித்து இந்திரா காந்தியிடம் விசாரிப்பதற்காகச் சென்ற நாடாளுமன்ற அதிகாரிகள் 4 பேரை இந்திரா காந்தி அவமதித்ததாக குற்றச்சாற்று எழுந்தது. இதற்காக இந்திரா காந்தி மீது உரிமை மீறல் பிரச்சினை எழுப்பப்பட்டு, அவரை தண்டிப்பதற்கான தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதன் காரணமாக அவரது மக்களவை உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி, 1978&ஆம் ஆண்டு திசம்பர் 19&ஆம் தேதி இந்திரா காந்தி கைது செய்யப்பட்டு, தில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். அதைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் கடுமையான போராட்டங்களை நடத்தினார்கள். சில காங்கிரஸ் தொண்டர்கள் இந்திரா காந்தியை விடுதலை செய்யக் கோரி ஏர் இந்தியா விமானத்தையே கடத்தினார்கள். இதைத் தொடர்ந்து ஒரு வாரத்தில் அதாவது திசம்பர் 26&ஆம் தேதி அவர் விடுதலை செய்யப்பட்டார்.
தஞ்சாவூரில் போட்டி
விடுதலைக்கு பிறகு இந்திராவின் அரசியலே தலைகீழாக மாறியது. அதுவரை தம்மை காப்பாற்றிக் கொள்வதற்காக தற்காப்பு அரசியல் நடத்தி வந்த இந்திரா காந்தி, அதன் பிறகு தான் மொரார்ஜி தேசாய் அரசுக்கு எதிராக அதிரடி அரசியலைத் தொடங்கினார். சிறையில் அடைக்கப்பட்டதால், இந்திரா காந்தி பழிவாங்கப்படுவதாக நினைத்து மக்களின் அனுதாபமும் அவர் பக்கம் திரும்பியது. இந்திராவுக்கு செல்வாக்கு பெருகுவதை உணர்ந்த எம்..ஜி.ஆர் மொரார்ஜி தேசாயிடமிருந்து தனது ஆதரவை இந்திராவின் பக்கம் திருப்பி விட்டார். இந்த நேரத்தில் தான் 1979-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மீண்டும் மக்களவை உறுப்பினராக இந்திரா விரும்பினார். அந்த நேரத்தில் தமிழகத்தில் நாகப்பட்டினம், தஞ்சாவூர் ஆகிய இரு மக்களவைத் தொகுதிகள் காலியாக இருந்தன. அவற்றில் தஞ்சாவூர் தொகுதியில் இந்திரா காந்தி போட்டியிடுவது சரியாக இருக்கும் என்று அவரது கட்சியின் மூத்த தலைவர்கள் கூறியதால் அங்கேயே போட்டியிட இந்திரா ஆயத்தமானர். அவருக்கு ஆதரவு அளிப்பதாக எம்.ஜி.ஆரும் வெளிப்படையாக அறிவித்தார்.
தஞ்சாவூரில் இந்திரா போட்டியிட இருப்பதும், அதற்கு எம்.ஜி.ஆர் ஆதரவளிக்கப் போவதும் பிரதமர் மொரார்ஜி தேசாயை ஆத்திரப்படுத்தியது. அரசியலில் இருந்து அகற்றப்பட்டுவிட்ட இந்திராவுக்கு எம்.ஜி.ஆர் வாழ்வளிக்க முயல்கிறாரா? என்று அவர் ஆத்திரப்பட்டார். உடனடியாக எம்.ஜி.ஆரைத் தொடர்பு கொண்ட தேசாய்,‘‘நீங்கள் எங்கள் நண்பனா? எதிரியா?’’ என்று மட்டும் கேட்டுவிட்டு தொலைபேசியை வைத்து விட்டார்.
‘‘அச்சம் என்பது .. மடமையடா..
அஞ்சாமை திராவிடர் உடமையடா
அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உடமையடா
ஆறிலும் சாவு நூறிலும் சாவு
தாயகம் காப்பது கடமையடா!’’
என்றெல்லாம் திரைப்படத்தில் முழங்கிய எம்.ஜி.ஆருக்கு மொரார்ஜி தேசாயின் கேள்வியில் குலை நடுங்கி விட்டது. கலைஞர் அரசை இந்திரா கலைத்ததைப் போல தமது அரசை மொரார்ஜி தேசாய் கலைத்து விடுவாரோ என்பதில் தொடங்கி என்னென்னவோ ஐயங்கள் அவர் மனதில் ஓடின.
எம்.ஜி.ஆர் பல்டி
உடனடியாக, ஓர் அறிவிப்பை வெளியிட்டார் எம்.ஜி.ஆர்.
தஞ்சாவூர் தொகுதியில் இந்திரா காந்திக்கு பாதுகாப்பு இருக்காது என்பதால் அவர் அங்கு போட்டியிட வேண்டாம் என்பது தான் அந்த அறிவிப்பு. மத்திய அரசுக்கு பயந்து தான் இந்திரா காந்திக்கு ஆதரவு தர மறுக்கிறீர்களா? என்று கேட்ட போது, ‘‘ தமிழக மக்களின் நலனுக்காக மத்திய அரசை ஆதரிப்பதில் எந்த தவறும் இல்லை’’ என்று சமாதானம் கூறினார்.
ஆனால், இந்திரா காந்திக்கு எம்.ஜி.ஆர் மீது கடுங்கோபம். ‘‘இந்திரா தான் இந்தியா... இந்தியா தான் இந்திரா என்று இருந்த காலம் போய் மக்களவை உறுப்பினர் ஆவதற்கு ஒரு தொகுதி கிடைக்காத நிலை வந்து விட்டதே... நம்மை எம்.ஜி.ஆர் நம்பவைத்து கழுத்தறுத்து விட்டாரே?’’ என்று மனதுக்குள் புழுங்கினார். ஆனால், அப்போது இருந்த சூழலில் அதை அவரால் வெளிக்காட்டிக்கொள்ள முடியவில்லை.
இந்திராவின் கோபத்தை எம்.ஜி.ஆரும் உணர்ந்திருந்தார். இந்திராவை சமாதானப்படுத்த நினைத்த எம்.ஜி.ஆர், தஞ்சாவூர் இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடாது என்று அறிவித்தார். அத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக சிங்கார வடிவேலு அறிவிக்கப்பட, அவரை வெற்றி பெற வைத்தார் எம்.ஜி.ஆர்.
கலைஞரின் துணிச்சல்
ஆனாலும் இந்திரா காந்தியின் கோபம் தணியவில்லை. இந்த இடத்தில் இன்னொரு ஒப்பீடு அவசியமானது ஆகும். நெருக்கடி நிலை காலத்தின் போது தனது அரசியல் எதிரியாக நினைத்த காமராஜரை கைது செய்ய வேண்டும் என்று கலைஞருக்கு இந்திரா காந்தி நெருக்கடி கொடுத்தார். அவரது கோரிக்கையை ஏற்காவிட்டால் ஆட்சி கலைக்கப்படும் என்பது கலைஞருக்கு தெரியும். ஆனாலும், அதைப்பற்றிக் கவலைப்படாமல்,‘‘காமராஜர் தமிழகத்தின் தலைவர். எனது ஆட்சியே போனாலும் பரவாயில்லை. காமராஜரை ஒரு போதும் கைது செய்ய மாட்டேன்’’ என்று துணிச்சலாக எதிர்த்து நின்றார். அதுமட்டுமின்றி, ஜனதாக் கட்சித் தலைவர்கள் பலரும் நெருக்கடி நிலை காலத்தின் போது தமிழகத்தில் தான் தஞ்சம் புகுந்திருந்தனர். அந்த வகையில் அப்போதைய கலைஞரின் துணிச்சல் பாராட்டத்தக்கது.
இந்திராவுக்கு அரசியல் ரீதியில் கை கொடுக்க எம்.ஜி.ஆர் மறுத்து விட்டாலும், தில்லி அரசியல் நிலவரம் அவருக்கு சாதகமாக இருந்தது. ஜனதாக் கட்சிக்குள் ஏற்பட்ட மோதலால் மொரார்ஜி தேசாய் பதவி விலகினார். அவருக்கு பதில் இந்திரா ஆதரவுடன் சரண்சிங் பிரதமர் ஆனார். அவரது அமைச்சரவையில் அதிமுகவும் இடம் பெற்றது. பாலா பழனூர், சத்தியவாணி என அதிமுகவைச் சேர்ந்த இருவர் மத்திய அமைச்சர்களாக பதவியேற்றனர். இதன்மூலம் மத்திய அமைச்சரவையில் அங்கம் வகித்த முதல் மாநிலக் கட்சி என்ற பெருமையை அதிமுக பெற்றது.
சரண்சிங் தலைமையிலான அரசுக்கு ஆதரவளித்ததை காரணம் காட்டி தம்மீதான வழக்குகளையெல்லாம் வாபஸ் பெற வைத்தார். ஒரு கட்டத்தில் இந்திராவின் நிபந்தனைகளை தாங்க முடியாத சரண்சிங் 24 நாட்களில் பதவி விலகினார். 1980-ஆம் ஆண்டில் மக்களவைக்கு தேர்தல் வந்தது.
No comments:
Post a Comment