Saturday, 4 March 2017

ஊழல் குற்றவாளி ஜெயலலிதா படத்துடன் அரசு விளம்பரங்களை வெளியிடுவதா? -மருத்துவர் இராமதாஸ் அறிக்கை---

ஊழல் குற்றவாளி ஜெயலலிதா படத்துடன்
அரசு விளம்பரங்களை வெளியிடுவதா?
                       ---அறிக்கை---
        -மருத்துவர் இராமதாஸ்

தமிழக அரசின் நலத்திட்டப் பணிகள் தொடக்க விழாவையொட்டி, ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட குற்றவாளி ஜெயலலிதா புகைப்படத்துடன் கூடிய முழுபக்க விளம்பரத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றத்தால் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டவரின் படத்தை அரசு விளம்பரத்தில் வெளியிடுவது நீதிமன்றத்தை மட்டுமின்றி தமிழக மக்களையும் அவமதிக்கும் செயலாகும்.

தமிழ்நாட்டில் செயல்படுத்தி முடிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள் நலத் திட்டங்கள் திறக்கப்படாமல் இருப்பதால் மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அத்திட்டங்களை உடனடியாக திறக்காவிட்டால், பாட்டாளி மக்கள் கட்சியினரே அவற்றைத் திறந்து வைப்பார்கள் என்றும் கடந்த மாதம் 4&ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் எச்சரித்திருந்தேன். அதன்பின் சரியாக ஒரு மாதம் கழித்து அத்திட்டப்பணிகளை தமிழக முதலமைச்சர் திறந்து வைப்பதில் மகிழ்ச்சி. காணொலி மூலம் நடத்தப்படும் திறப்பு விழாவுக்கு பல கோடி ரூபாய் மக்கள் வரிப்பணத்தை செலவு செய்து விளம்பரம் வெளியிட வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை. ஆனாலும் அரசு விளம்பரங்கள் பக்கம்பக்கமாக வெளியிடப்பட்டிருக்கின்றன. அவற்றில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி படத்துடன், ஊழல் குற்றவாளி ஜெயலலிதா படமும் இடம்பெற்றுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கை விசாரித்த பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் ஜெயலலிதாவை குற்றவாளி என அறிவித்ததுடன், அவர் 4 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும்; ரூ.100 கோடி அபராதம் செலுத்த வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை கடந்த மாதம் உச்சநீதிமன்றமும் உறுதி செய்திருக்கிறது.

அதுமட்டுமின்றி, பொதுவாழ்வில் ஊழலை ஒழிப்பதற்காக குடிமக்கள் அனைவரும் போராட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் அழைப்பு விடுத்துள்ளது. இதைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு அலுவலகங்களில் இருந்து ஜெயலலிதாவின் உருவப்படங்களை உடனடியாக அகற்ற வேண்டும்; அம்மா திட்டங்கள் என்ற பெயரில் செயல்படுத்தப்படும் திட்டங்களின் பெயர்களை அரசுத் திட்டங்கள் என்று மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தேன். இதுதொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு அரசுக்கு அறிவிக்கையும் அனுப்பப்பட்டிருக்கிறது.

இவ்வளவுக்குப் பிறகும் சென்னையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஜெயலலிதா படத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மலர்மரியாதை செய்திருக்கிறார். அத்துடன் ஜெயலலிதா படத்துடன் முழுப்பக்க விளம்பரங்களையும் ஆட்சியாளர்கள் வெளியிட்டிருக்கிறார்கள் என்றால், உச்ச நீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்றத் தீர்ப்புகளை திட்டமிட்டு அவமதிக்கிறார்கள் என்று தான் பொருளாகும். ஊழலுக்கு எதிராக அனைவரும் போராட வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ள நிலையில், மக்கள் பணத்தை கொள்ளையடித்த ஒருவரின் படத்தை மக்களின் வரிப்பணத்தை செலவழித்து விளம்பரத்தில்  வெளியிடச் செய்வது ஊழலை ஊக்குவிக்கும் செயலாக அமையுமே தவிர, ஊழலை ஒழிக்க உதவாது.

அதுமட்டுமின்றி,  எந்த பதவியிலும் இல்லாத ஜெயலலிதாவின் படத்தை தமிழக அரசின் விளம்பரத்தில் இடம் பெறச் செய்வது அரசு விளம்பரங்கள் தொடர்பான உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை மீறும் செயலாகும். அரசு விளம்பரங்கள் தொடர்பாக கடந்த 13.05.2015 அன்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில்,‘‘ அரசு விளம்பரங்களில் குடியரசுத் தலைவர், பிரதமர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோரின் படங்கள் மட்டுமே இடம்பெற வேண்டும். மற்ற எவரின் படங்களும் இடம்பெறக்கூடாது’’ என்று கூறப்பட்டிருந்தது. அத்தீர்ப்பில் மாற்றம் செய்து 18.03.2016 அன்று அளித்த தீர்ப்பில் மாநில ஆளுனர்கள், முதலமைச்சர்கள், மத்திய, மாநில அமைச்சர்கள் ஆகியோரின் படங்களும் இடம்பெறலாம் என்று சலுகை அளித்தது. அதே நேரத்தில் அரசு விளம்பரங்களில் மற்றவர்களின் படங்களை போடக்கூடாது என்ற முந்தைய நிபந்தனை செல்லும் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், பி.சி.கோஷ் அறிவுறுத்தினர்.

ஆனால், தமிழக அரசில் எந்த ஒரு பதவியிலும் இல்லாத ஜெயலலிதாவின் படத்தை விளம்பரத்தில் வெளியிட்டிருப்பது உச்சநீதிமன்ற அவமதிப்பாகும். ஊழலை உயர்த்திப் பிடிக்கும் தமிழக அரசின் இந்த செயலையும், அதற்கு தமிழக அரசின் தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் போன்ற நேர்மையான அதிகாரிகள் துணை போவதையும் ஏற்க முடியாது. இதுபோன்ற செயல்கள் இனியும் நடக்காத வண்ணம்  தடுப்பதற்கான எச்சரிக்கையாக, இந்த விளம்பரத்திற்கான செலவுத் தொகை முழுவதையும் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனிடமிருந்து வசூலிக்க ஆளுனர் நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவைப்பட்டால் இதற்காக உச்சநீதிமன்றத்தை அணுகவும் பா.ம.க. தயாராக உள்ளது.

கதை கேளு... கதை கேளு கழகத்தின் கதை கேளு!பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு!  -மருத்துவர் இராமதாஸ்

கதை கேளு... கதை கேளு கழகத்தின் கதை கேளு!

 பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு!
    -மருத்துவர் இராமதாஸ்
‘‘உன் நண்பன் யார் என்று சொல், நான் உன்னைப் பற்றிச் சொல்கிறேன்’’ என்று சொல்வது உண்டு.  1977-ஆம் ஆண்டில் முதலமைச்சராக பதவியேற்ற எம்.ஜி.ஆரின் நண்பர்கள் யார் என்பதை 1979-ஆம் ஆண்டில் அவர் கொண்டு வந்த பொருளாதார இட ஒதுக்கீடு என்ற அறிவிப்பே காட்டி விடும்.

பொருளாதார இட ஒதுக்கீடு

1977-ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த எம்.ஜி.ஆர் அடுத்த இரு ஆண்டுகளுக்கு சொல்லிக் கொள்ளும் படியாக எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. இந்த நேரத்தில் தான் பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு என்ற புதிய அறிவிப்பை வெளியிட்டார் எம்.ஜி.ஆர். அதாவது யாருக்கெல்லாம் குடும்ப வருமானம்  ரூ.9 ஆயிரத்துக்கும் குறைவாக இருக்கிறதோ, அவர்கள் அனைவருக்கும் இட ஒதுக்கீடு உண்டு; இதற்கு சாதி தடையாக இருக்காது என்று அறிவித்தார். இந்த அறிவிப்பைக் கேட்டதும் பலருக்கும் அதிர்ச்சி.
திராவிடக் கட்சிகளின் அடிப்படையே சமூக நீதி தான். சமுக நீதியும், இட ஒதுக்கீடும் சாதியைத்  அடிப்படையாக கொண்டிருந்தன. ஆனால், எம்.ஜி.ஆர் புரட்சியின் தலைவர் அல்லவா? அதனால் யாரிடமும் கலந்து பேசாமல் இப்படி ஒரு திட்டத்தை அறிவித்தார். பிராமனர்கள் உள்ளிட்ட உயர்சாதிகளைச் சேர்ந்த  ஏழைக் குடும்பத்தினரும் இடஒதுக்கீட்டின் பயன்களை அனுபவிக்க வேண்டும் என்றால் பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவது தான் சரியானது என்று தம்மை எதிர்ப்பவர்களிடம் எல்லாம் எம்.ஜி.ஆர் விளக்கம் அளித்தார். ஆனால், சமூக நீதியில் அக்கறை கொண்டவர்களால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

நீதிமன்றத் தீர்ப்ப்பு

ஆரிய மாயை என்ற தலைப்பில் புத்தகம் எழுதிய அண்ணாவின் பெயரில் கட்சியைத் தொடங்கி அவரது கொள்கைகளுக்கு எதிராக செயல்படுவதை ஏற்க முடியாது என்று அதிமுகவின் முன்னணித் தலைவர்கள் போர்க்கொடி உயர்த்தினர். அதனால் அதைப்பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை என்று எம்.ஜி.ஆர் சமாதானப்படுத்தினார்.

பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி எதிர்க்கட்சிகள் வழக்குத் தொடர்ந்தன.  ஆனால், நீதிமன்றமோ அந்த வழக்கை தள்ளுபடி செய்து எம்.ஜி.ஆர் வழங்கிய இட ஒதுக்கீடு சரி தான் என்று தீர்ப்பளித்தது. தமிழ்நாடு முழுவதும் எம்.ஜி.ஆர் நல்லவரா?: கெட்டவரா? என்ற விவாதம் நடைபெற்றது.

அதிமுக-திமுக இணைப்பு முயற்சி

இந்த நேரத்தில் இன்னொரு அரசியல் சூறாவளி மையம் கொள்ளத் தொடங்கியது. அதிமுகவையும், திமுகவையும் இணைக்க வேண்டும் என்ற யோசனை தான் அது. இதற்கான முயற்சிகளை மேற்கொண்டவர் அப்போதைய மத்திய எஃகுத்துறை அமைச்சரும், ஒரிசா மாநில முதலமைச்சராக பின்னாளில் பதவி வகித்தவருமான பிஜு பட்நாயக் ஆவார். திமுக தலைவர் கலைஞர், அதிமுக தலைவர் எம்.ஜி.ஆர் ஆகிய இருவரிடமும் அவர் நெருக்கமான உறவு கொண்டிருந்தார்.  ஆயினும் அதிமுக, திமுக இணைப்பு என்ற யோசனையை அவர் உருவாக்க வில்லை. மாறாக எம்.ஜி.ஆர் தான் இப்படி ஒரு திட்டத்தை பட்நாயக்கிடம் முன்மொழிந்ததாக கூறப்படுகிறது.

அதற்கு முன்பாக நடந்த நிகழ்வுகளும் இதை உறுதி செய்கின்றன. 1979&ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 6&ஆம் தேதி தில்லி சென்ற எம்.ஜி.ஆர். இந்திரா காந்தியை சந்தித்து அதிமுக & காங்கிரஸ் கூட்டணி குறித்து விவாதிக்க திட்டமிட்டிருந்ததாக செய்திகள் வெளியாகின. ஆனால், அன்று அந்த சந்திப்பு நடக்கவில்லை. மாறாக மத்திய அமைச்சர் பிஜு பட்நாயக்கை எம்.ஜி.ஆர் சந்தித்து பேசினார். அன்று இரவே கலைஞரை தொடர்பு கொண்டு பேசிய பட்நாயக், விஷயத்தைக் கூறாமல் முக்கியப் பிரச்சினை குறித்து விவாதிக்க உங்களை சந்திக்க வேண்டும் என்று கூறினார். அதற்குள்ளாகவே, அவர் சந்திக்க விரும்புவதன் காரணம் குறித்து கலைஞருக்கு தெரிந்து விட்டது. அவருக்கும் அதிமுக & திமுக இணைப்பில் சம்மதம் தான் என்பதால் சந்திப்புக்கு ஒப்புதல் அளித்தார்.

திமுகவின் நிபந்தனைகள்

அதன்படி, செப்டம்பர் 12-ஆம் தேதி திமுக தலைவர் கலைஞரை அவரது கோபாலபுரம் இல்லத்தில் பிஜு பட்நாயக் சந்தித்து பேசினார். அந்த சந்திப்பில் திமுகவின் மூத்த தலைவர்களான அன்பில் தர்மலிங்கம், முரசொலி மாறன் உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர். இந்த இணைப்பு முயற்சியை  முன்மொழிந்தவர் யார்? என்று படநாயக்கிடம் திமுக தலைவர்கள் கேட்க, அவரும் எம்.ஜி.ஆர் தான் இந்த யோசனையை தெரிவித்ததாக கூற இரு தரப்பிலும் மட்டற்ற மகிழ்ச்சி.
இந்த யோசனையை ஏற்றுக் கொண்ட கலைஞர், இரு கட்சிகளின் இணைப்புக்காக சில நிபந்தனைகளை  விதித்தார். அவற்றின் விவரம் வருமாறு:

1. இரு கட்சிகளும் இணைந்து தி.மு.க. என்ற பெயரில்தான் இயங்கவேண்டும்.

2. அக்கட்சிக்கு அண்ணா படம் பொறித்த கொடியே இருப்பதில் எங்களுக்கு எந்த மறுப்பும் இல்லை.

3. முதலமைச்சராக இப்போதுள்ள எம்.ஜி.ஆர். அவர்களே அப்பதவியில் நீடிக்கட்டும்.

4. இரு கட்சிகளும் இணைவது என்பதற்காகத் தி.மு.கவில் இப்போதுள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் யாருக்கும் அமைச்சர் பதவி எதுவும் தேவையில்லை.

5. இரு கட்சிகளும் இணைந்த பிறகு, உரிய நேரத்தில் தலைமைக் கழகத்தின் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் மற்றும் நிர்வாகப் பொறுப்புகள் குறித்து முடிவு செய்து கொள்ளலாம்.

6. முக்கியமான விஷயம்: எம்.ஜி.ஆர். அவர்கள் ஆட்சியில் இடஒதுக்கீட்டில் கொண்டு வந்துள்ள சமூக நீதிக்குப் புறம்பான ஒன்பதாயிர ரூபாய் உச்சவரம்பு ஆணை; பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு என்பது உடனடியாகத் திரும்பப் பெறப்பட வேண்டும்.

கலைஞர் - எம்.ஜி.ஆர் சந்திப்பு

அதைக் கேட்ட பிஜு பட்நாயக் “இந்த நிபந்தனைகளை எம்.ஜி.ஆர். ஏற்றுக் கொள்ள எந்தக் கஷ்டமும் இருக்காது. நான் இப்போதே எம்.ஜி.ஆர். இல்லம் செல்கிறேன். இன்றைக்கே உங்கள் இருவரையும் சந்திக்க வைக்கிறேன்’’ என்று கூறினார். ஆனால், கலைஞரோ,“அவரைச் சந்திப்பதில் எனக்கொன்றும் மறுப்பு இல்லை. சந்திப்பதற்கு முன்பு கழக முன்னோடிகள் அனைவரிடமும் நான் கலந்து பேச வேண்டும். பொதுச் செயலாளர் வெளியூர் சென்றுள்ளார். இன்று மாலையில்தான் வருகிறார். அவரையும் மற்றவர்களையும் கலந்து பேசிக் கொள்கிறேன். எனவே சந்திப்புக்கு நாளைய தினம் ஏற்பாடு செய்யுங்கள்” என்று கேட்டுக் கொண்டார்.

அதன்படியே 1979-ஆம் ஆண்டு செப்டம்பர் 13&ஆம் தேதி பிஜு பட்நாயக் முன்னிலையில், எம்.ஜி.ஆரும், கலைஞரும் சந்தித்து பேசினார்கள். இந்த சந்திப்பின் விவரங்களை திமுக தலைவர் கலைஞரின் வார்த்தைகளில் கேட்போம்....

‘‘செப்டம்பர் 13&ஆம் தேதி காலை 11 மணியளவில் பிஜுபட்நாயக் முன்னிலையில் நானும் எம்.ஜி.ஆரும் சென்னை சேப்பாக்கம் அரசினர் விடுதியில் சந்தித்துப் பேசினோம். அப்போது கழகப் பொதுச் செயலாளர் பேராசிரியர், அ.தி.மு.க. சார்பில் நாவலர் நெடுஞ்செழியன், பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.

பிறகு நானும் எம்.ஜி.ஆர். அவர்களும் அந்த விடுதியின் வேறொரு அறையில் தனிமையில் பேசினோம். பிஜுபட்நாயக்கிடம் நான் தெரிவித்த கருத்துக்களும் நிபந்தனைகளும் உண்மைதானா? என்று எம்.ஜி.ஆர். வியப்புடன் கேட்டார். இரு கட்சிகளும் இணைந்து தி.மு.க. என்ற பெயரில் இயங்க வேண்டுமென்பதற்கு தி.மு.க. என்ற பெயரில்தான் ஏற்கனவே பல இடங்களில் கட்டிடங்கள், சொத்துக்கள் இருக்கின்றன என்பது மட்டுமல்லாமல், தி.மு.க. என்பதுதான் அண்ணா உருவாக்கிய கழகம்; எனவே அந்தப் பெயரே நிலைக்கலாம் என்பதையும் அவரிடம் விளக்கினேன்.

அண்ணா கொடியே நீடிக்கட்டும்

அண்ணாவின் படத்தைப் பதித்துள்ள கொடியே இணைந்து விடப் போகும் கட்சியின் கொடியாக இருக்கட்டுமென்றும் கூறினேன். மற்றும் பிஜு பட்நாயக்கிடம் கூறிய மற்றவைகளையும் எம்.ஜி.ஆரிடம் விளக்கினேன். அவர் எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டது மட்டுமல்லாமல், ஒரு குறிப்பிட்ட நாளில் இரண்டு கட்சிகளின் செயற்குழு, பொதுக் குழுக்களையும் வெவ்வேறு இடங்களில் கூட்டி இரு கட்சிகளின் இணைப்புத் தீர்மானத்தை நிறைவேற்றி விடலாம் என்றும் அறுதியிட்டுக் கூறினார்.

பின்னர் இருவரும் நாங்கள் தனித்துப் பேசிக் கொண்டிருந்த அறையிலிருந்து வெளியே வந்து பிஜு பட்நாயக்கிடமும் அங்கிருந்த இரு கட்சிகளின் தலைவர்களிடமும் பேச்சின் முடிவு குறித்துத் தெரிவித்தோம். செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள் எங்களைச் சூழ்ந்து கொண்டு கை குலுக்கினர். புகைப்படமெடுத்தனர். நிருபர்களின் கேள்விக்குப் பதில் அளித்த போதும் நான், எம்.ஜி.ஆர். இருவருமே இரு கட்சிகளின் செயற் குழு, பொதுக்குழுக்களில் விவாதித்து முடிவு அறிவிக்கப்படுமென்று கூறினோம்’’

24 மணி நேரத்தில் முயற்சி தோல்வி

இந்த நிகழ்வுகளை தமிழகம் மட்டுமின்றி ஒட்டு மொத்த இந்தியாவும் ஆவலுடனும், ஆச்சரியத்துடன் பார்த்தது. ஆனால், அந்த ஆவலும், ஆச்சரியமும் 24 மணி நேரம் கூட நீடிக்கவில்லை.  அதற்கு அடுத்த நாள் வேலூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் நிலைமை தலைகீழானது. எம்.ஜி.ஆர் இணைப்பு குறித்து ஒரு வார்த்தையும் பேசவில்லை. எம்.ஜி.ஆரின் அமைச்சரவையில் இருந்த அமைச்சர்கள் திமுகவை கடுமையாக தாக்கி பேசினர். இரு கட்சிகளையும் இணைக்க வேண்டும் என்ற யோசனைக்கு அக்கூட்டத்தில் முடிவுரை எழுதப்பட்டது.
எம்.ஜி.ஆரால் ஆர்வத்துடன் தொடங்கப்பட்ட இணைப்பு முயற்சி முறிந்ததற்கான காரணம் யாருக்கும் உறுதியாக தெரியவில்லை. ஆனால், இப்போது ஜெயலலிதா சமாதி முன் தியானம் செய்து அம்மாவின் ஆன்மா தம்மிடம் கூறியதாக ஓ.பன்னீர் செல்வம் பல விஷயங்களைச் சொல்வதைப்போல, அப்போது தமது கனவில் தாயார் வந்ததாகவும், இந்த இணைப்பு வேண்டாம் என்று கூறிவிட்டதாகவும் அன்றைய காவல்துறை தலைவர் மோகன்தாசிடம் எம்.ஜி.ஆர் கூறியதாக ஒரு செய்தி நிலவி வருகிறது.

காரணம் யார்?

ஆனால், அதிமுக -திமுக இணைப்பு முயற்சியை கெடுத்தவர் பண்ருட்டி இராமச்சந்திரன் தான் என்று பின்னாளில் கலைஞர் குற்றஞ்சாற்றினார். இந்த முயற்சிகளுக்கு பிறகு 2008&ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னையில் நடைபெற்ற திமுக விருது வழங்கும் விழாவில் பேசிய கலைஞர் கீழ்க்கண்டவாறு கூறினார்.

‘‘ இரு கட்சிகளின் இணைப்பு குறித்து பேசிய எம்.ஜி.ஆர், அதற்கு அடுத்த நாள் பொதுக்கூட்டத்தில் பேசுவதற்காக வேலூர் சென்றார். காரில் சென்றபோது என்ன நடந்ததோ எனக்கு தெரியாது. காரிலே அவரோடு சென்றவர், காதுக்குள்ளே புகுந்தார். கருத்தை மாற்றினார். வேலூர் பொதுக்கூட்டத்திலே எம்ஜிஆர் பேசும்போது, மாலை பத்திரிகையில் நானும், கருணாநிதியும் இணைய போகிறோம். திமுகவும், அதிமுகவும் இணையப்போகின்றன என்று வந்துள்ள செய்தியை யாரும் நம்பாதீர்கள் என்று ஒரு செய்தியை அங்கே வெளியிட்டார். நான் உங்களுக்கு சொல்கிறேன். இது எப்படி விளைந்தது என்று கேட்டால் அப்போதே சொன்னேன்... பெயர் சொல்ல விரும்பாத ஒருவர் என்று- அவரும் அந்த காரில் சென்றார். அதனுடைய விளைவு இந்த முடிவுக்கு காரணமாக ஆனது’’. எம்.ஜி.ஆருடன் காரில் சென்று காதுக்குள் புகுந்து முடிவை மாற்றியதாக

கலைஞர் குறிப்பிட்ட அந்த நபர் பண்ருட்டி இராமச்சந்திரன்.

Friday, 3 March 2017

கதை கேளு... கதை கேளு கழகத்தின் கதை கேளு!      அச்சம் என்பது வீரமடா!                  -மருத்துவர் இராமதாஸ்

கதை கேளு... கதை கேளு கழகத்தின் கதை கேளு!

     அச்சம் என்பது வீரமடா!
                 -மருத்துவர் இராமதாஸ்

புதிதாக எதுவும் சொல்வதற்கு இல்லை... ஏற்கனவே பலமுறை குறிப்பிட்டது தான். அரசியலில் எம்.ஜி.ஆர் துணிச்சல் இல்லாத கோழை. இதற்கு ஏற்கனவே பல உதாரணங்களைக் கூறியிருக்கிறேன். அதற்கு இன்னொரு உதாரணம் தான் தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் இந்திரா காந்தியை ஆதரிப்பதாக அறிவித்து விட்டு எம்.ஜி.ஆர் பின்வாங்கிய கதை.

விசாரணை ஆணையம் அமைப்பு

1977&ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட்ட இந்திரா காந்தி படுதோல்வி அடைந்தார். காங்கிரஸ் கட்சியும் படுதோல்வி அடைந்ததால் கிட்டத்தட்ட அரசியல் துறவறம் பூண்டவராக இந்திரா காந்தி ஒதுங்கி இருந்தார்.

மரங்கள் ஓய்வெடுக்க விரும்பினாலும், காற்று அதை அனுமதிப்பதில்லை என்பதைப் போல இந்திரா ஒதுங்கி இருந்தாலும் அவரை சீண்டிக் கொண்டே இருந்தது மொரார்ஜி தேசாய் தலைமையிலான ஜனதா அரசு. இந்திரா காந்தியை அரசியலில் இருந்து நிரந்தரமாக விரட்ட வேண்டும் என்று நினைத்த தேசாய், இந்திரா காந்தி ஆட்சியில் நெருக்கடி நிலையின் போது நடந்த அத்துமீறல்கள் குறித்து விசாரிக்க நீதிபதி ஷா தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது. எந்த பதவியிலும் இல்லாமல் இருந்தால் ஷா ஆணையத்தால் விசாரணை என்ற பெயரில் நெருக்கடிக்கு ஆளாக்கப்படுவோம் என்று இந்திரா காந்தி நினைத்தார்.

கைது - விமானம் கடத்தல்

தமக்கு ஏதேனும் பதவி தேவை என்று நினைத்த இந்திரா, கர்நாடக மாநிலம் சிக்மகளூர் இடைத்தேர்தலில் 1978&ஆம் ஆண்டு போட்டியிட்டார். ஆனால், அவரை அந்த பதவியிலிருந்தும் விரட்ட வேண்டும் என்பதில் பிரதமர் மொரார்ஜி தேசாய் உறுதியாக இருந்தார். அந்த நேரத்தில் மாருதி கார் நிறுவனத்தில் நடந்த விதி மீறல்கள் மற்றும் முறைகேடுகள் குறித்த வழக்கில் இந்திராவும் சிக்கினார். எனினும் இந்த வழக்கில் அவர் கைது செய்யப்படவில்லை. இதுகுறித்து இந்திரா காந்தியிடம் விசாரிப்பதற்காகச் சென்ற நாடாளுமன்ற அதிகாரிகள் 4 பேரை இந்திரா காந்தி அவமதித்ததாக குற்றச்சாற்று எழுந்தது. இதற்காக இந்திரா காந்தி மீது உரிமை மீறல் பிரச்சினை எழுப்பப்பட்டு, அவரை தண்டிப்பதற்கான தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதன் காரணமாக அவரது மக்களவை உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி, 1978&ஆம் ஆண்டு திசம்பர் 19&ஆம் தேதி இந்திரா காந்தி கைது செய்யப்பட்டு, தில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். அதைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் கடுமையான போராட்டங்களை நடத்தினார்கள். சில காங்கிரஸ் தொண்டர்கள் இந்திரா காந்தியை விடுதலை செய்யக் கோரி ஏர் இந்தியா விமானத்தையே கடத்தினார்கள். இதைத் தொடர்ந்து ஒரு வாரத்தில் அதாவது திசம்பர் 26&ஆம் தேதி அவர் விடுதலை செய்யப்பட்டார்.

தஞ்சாவூரில் போட்டி

விடுதலைக்கு பிறகு இந்திராவின் அரசியலே தலைகீழாக மாறியது. அதுவரை தம்மை காப்பாற்றிக் கொள்வதற்காக தற்காப்பு அரசியல் நடத்தி வந்த இந்திரா காந்தி, அதன் பிறகு தான் மொரார்ஜி தேசாய் அரசுக்கு எதிராக அதிரடி அரசியலைத் தொடங்கினார். சிறையில் அடைக்கப்பட்டதால், இந்திரா காந்தி பழிவாங்கப்படுவதாக நினைத்து மக்களின் அனுதாபமும் அவர் பக்கம் திரும்பியது. இந்திராவுக்கு செல்வாக்கு பெருகுவதை உணர்ந்த எம்..ஜி.ஆர் மொரார்ஜி தேசாயிடமிருந்து தனது ஆதரவை இந்திராவின் பக்கம் திருப்பி விட்டார். இந்த நேரத்தில் தான் 1979-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மீண்டும் மக்களவை உறுப்பினராக இந்திரா விரும்பினார். அந்த நேரத்தில் தமிழகத்தில் நாகப்பட்டினம், தஞ்சாவூர் ஆகிய இரு மக்களவைத் தொகுதிகள் காலியாக இருந்தன. அவற்றில் தஞ்சாவூர் தொகுதியில் இந்திரா காந்தி போட்டியிடுவது சரியாக இருக்கும் என்று அவரது கட்சியின் மூத்த தலைவர்கள் கூறியதால் அங்கேயே போட்டியிட இந்திரா ஆயத்தமானர். அவருக்கு ஆதரவு அளிப்பதாக எம்.ஜி.ஆரும் வெளிப்படையாக அறிவித்தார்.

தஞ்சாவூரில் இந்திரா போட்டியிட இருப்பதும், அதற்கு எம்.ஜி.ஆர் ஆதரவளிக்கப் போவதும் பிரதமர் மொரார்ஜி தேசாயை ஆத்திரப்படுத்தியது. அரசியலில் இருந்து அகற்றப்பட்டுவிட்ட இந்திராவுக்கு எம்.ஜி.ஆர் வாழ்வளிக்க முயல்கிறாரா? என்று அவர் ஆத்திரப்பட்டார். உடனடியாக எம்.ஜி.ஆரைத் தொடர்பு கொண்ட தேசாய்,‘‘நீங்கள் எங்கள் நண்பனா? எதிரியா?’’ என்று மட்டும் கேட்டுவிட்டு தொலைபேசியை வைத்து விட்டார்.

‘‘அச்சம் என்பது .. மடமையடா..
அஞ்சாமை திராவிடர்  உடமையடா
அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உடமையடா
ஆறிலும் சாவு நூறிலும் சாவு
தாயகம் காப்பது கடமையடா!’’
என்றெல்லாம் திரைப்படத்தில் முழங்கிய எம்.ஜி.ஆருக்கு மொரார்ஜி தேசாயின் கேள்வியில் குலை நடுங்கி விட்டது. கலைஞர் அரசை இந்திரா கலைத்ததைப் போல தமது அரசை மொரார்ஜி தேசாய் கலைத்து விடுவாரோ என்பதில் தொடங்கி என்னென்னவோ ஐயங்கள் அவர் மனதில் ஓடின.

எம்.ஜி.ஆர் பல்டி

உடனடியாக, ஓர் அறிவிப்பை வெளியிட்டார் எம்.ஜி.ஆர்.
தஞ்சாவூர் தொகுதியில் இந்திரா காந்திக்கு பாதுகாப்பு இருக்காது என்பதால் அவர் அங்கு போட்டியிட வேண்டாம் என்பது தான் அந்த அறிவிப்பு. மத்திய அரசுக்கு பயந்து தான் இந்திரா காந்திக்கு ஆதரவு  தர மறுக்கிறீர்களா? என்று கேட்ட போது, ‘‘ தமிழக மக்களின் நலனுக்காக மத்திய அரசை ஆதரிப்பதில் எந்த தவறும் இல்லை’’ என்று சமாதானம் கூறினார்.

ஆனால், இந்திரா காந்திக்கு எம்.ஜி.ஆர் மீது கடுங்கோபம். ‘‘இந்திரா தான் இந்தியா... இந்தியா தான் இந்திரா என்று இருந்த காலம் போய் மக்களவை உறுப்பினர் ஆவதற்கு ஒரு தொகுதி கிடைக்காத நிலை வந்து விட்டதே... நம்மை எம்.ஜி.ஆர் நம்பவைத்து கழுத்தறுத்து விட்டாரே?’’ என்று மனதுக்குள் புழுங்கினார். ஆனால், அப்போது இருந்த சூழலில் அதை அவரால் வெளிக்காட்டிக்கொள்ள முடியவில்லை.

இந்திராவின் கோபத்தை எம்.ஜி.ஆரும் உணர்ந்திருந்தார். இந்திராவை சமாதானப்படுத்த நினைத்த எம்.ஜி.ஆர், தஞ்சாவூர் இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடாது என்று அறிவித்தார். அத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக சிங்கார வடிவேலு அறிவிக்கப்பட, அவரை வெற்றி பெற வைத்தார் எம்.ஜி.ஆர்.

கலைஞரின் துணிச்சல்

ஆனாலும் இந்திரா காந்தியின் கோபம் தணியவில்லை. இந்த இடத்தில் இன்னொரு ஒப்பீடு அவசியமானது ஆகும். நெருக்கடி நிலை காலத்தின் போது தனது அரசியல் எதிரியாக நினைத்த காமராஜரை கைது செய்ய வேண்டும் என்று கலைஞருக்கு இந்திரா காந்தி நெருக்கடி கொடுத்தார். அவரது கோரிக்கையை ஏற்காவிட்டால் ஆட்சி கலைக்கப்படும் என்பது கலைஞருக்கு தெரியும். ஆனாலும், அதைப்பற்றிக் கவலைப்படாமல்,‘‘காமராஜர் தமிழகத்தின் தலைவர். எனது ஆட்சியே போனாலும் பரவாயில்லை. காமராஜரை ஒரு போதும் கைது செய்ய மாட்டேன்’’ என்று துணிச்சலாக எதிர்த்து நின்றார். அதுமட்டுமின்றி, ஜனதாக் கட்சித் தலைவர்கள் பலரும் நெருக்கடி நிலை காலத்தின் போது தமிழகத்தில் தான் தஞ்சம் புகுந்திருந்தனர். அந்த வகையில் அப்போதைய கலைஞரின் துணிச்சல் பாராட்டத்தக்கது.

இந்திராவுக்கு அரசியல் ரீதியில் கை கொடுக்க எம்.ஜி.ஆர் மறுத்து விட்டாலும், தில்லி அரசியல் நிலவரம் அவருக்கு சாதகமாக இருந்தது. ஜனதாக் கட்சிக்குள் ஏற்பட்ட மோதலால்  மொரார்ஜி தேசாய் பதவி விலகினார். அவருக்கு பதில் இந்திரா ஆதரவுடன் சரண்சிங் பிரதமர் ஆனார். அவரது அமைச்சரவையில் அதிமுகவும் இடம் பெற்றது. பாலா பழனூர், சத்தியவாணி என அதிமுகவைச் சேர்ந்த இருவர் மத்திய அமைச்சர்களாக பதவியேற்றனர். இதன்மூலம் மத்திய அமைச்சரவையில் அங்கம் வகித்த முதல் மாநிலக் கட்சி என்ற பெருமையை அதிமுக பெற்றது.
சரண்சிங் தலைமையிலான அரசுக்கு ஆதரவளித்ததை காரணம் காட்டி தம்மீதான வழக்குகளையெல்லாம் வாபஸ் பெற வைத்தார். ஒரு கட்டத்தில் இந்திராவின் நிபந்தனைகளை தாங்க முடியாத சரண்சிங் 24 நாட்களில் பதவி விலகினார். 1980-ஆம் ஆண்டில் மக்களவைக்கு தேர்தல் வந்தது.
                                

Thursday, 2 March 2017

நெடுவாசலுக்காக போராடக் கூடாது என ஐ.டி துறையினரை மிரட்டுவதா? மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கேள்வி

நெடுவாசலுக்காக போராடக் கூடாது
என ஐ.டி துறையினரை மிரட்டுவதா?

தமிழ்நாடு அரசின் செயல்பாடுகள் முரண்பாடுகளின் மொத்த உருவம் என்பது நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்ட விவகாரத்தில் மீண்டும் ஒருமுறை அம்பலமாகியிருக்கிறது.
ஒருபுறம் போராட்டத்தைத் திரும்பப் பெறும்படி மக்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில், மறுபுறம் போராட்டத்தை ஒடுக்குவதற்கான மிரட்டல்களை காவல்துறை தீவிரப்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை தனியார் நிறுவனம் மூலம் செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்திருப்பதைக் கண்டித்து அங்குள்ள மக்கள் கடந்த 15 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் இத்திட்டத்தை எதிர்த்து எனது தலைமையில் நாளை நெடுவாசலில் போராட்டம் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், நெடுவாசல் போராட்டக் குழுவினரை அழைத்து முதலமைச்சர் பழனிச்சாமி நேற்று பேச்சு நடத்தியுள்ளார்.

நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு சுரங்க குத்தகை உரிமத்தை தமிழக அரசு வழங்க வில்லை எனவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் இந்தத் திட்டத்துக்கு தமிழக அரசு அனுமதி வழங்காது என்றும் பழனிச்சாமி உறுதியளித்துள்ளார்.

நெடுவாசல் மக்களும், விவசாயிகளும் எந்த அச்சமும் கொள்ளத் தேவையில்லை என்று கூறியுள்ள அவர், இந்த உறுதியை ஏற்று நெடுவாசலில் நடத்தப்பட்டு வரும் போராட்டத்தை கைவிட வேண்டுமென்றும் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். முதலமைச்சர் பழனிச்சாமி இதே நிலைப்பாட்டில் தொடர்ந்து இருந்தால் அது வரவேற்கத்தக்க ஒன்று தான். இந்த நிலைப்பாட்டின் மூலம் தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டம் வராமல் தடுக்க முடியும்.

ஆனால், ஒருபுறம் இவ்வாறு பேசிக்கொண்டு மறுபுறம் நெடுவாசல் மக்கள் போராட்டத்தை சீர்குலைக்கும் செயல்களில் தமிழக அரசு ஈடுபட்டிருக்கிறது. தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு ஆதரவாக நடத்தப்பட்ட போராட்டம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதற்கு காரணம், அதில் மாணவர்களும், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றும் இளைஞர்களும் அதிக அளவில் கலந்து கொண்டது தான்.

இப்போது நெடுவாசல் போராட்டத்திலும் மாணவர்கள் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை பணியாளர்கள் அதிக எண்ணிக்கையில் பங்கேற்றுள்ளனர். அடுத்தக்கட்டமாக சென்னையில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்த அவர்கள் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்தப் போராட்டத்தை முறியடிக்கும் வகையில், சென்னை பழைய மாமல்லபுரம் சாலையில் செயல்படும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் மேலாளர்கள் மற்றும் நிர்வாகிகளை சென்னை மாநகரக் காவல்துறை அதிகாரிகள் நேற்று அழைத்து பேசியுள்ளனர்.
‘‘ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடத்தப்பட்ட போராட்டங்களைப் போன்று, நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராகவும் மிகப்பெரிய அளவில் போராட்டங்களை நடத்த சிலர் முடிவு செய்துள்ளனர். அந்த போராட்டங்களில் உங்கள் நிறுவன பணியாளர்கள் எவரும் பங்கேற்க அனுமதிக்கக் கூடாது. அவ்வாறு பங்கேற்க அனுமதித்தால் அவர்களை கைது செய்வது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். நெடுவாசல் போராட்டத்திற்கு உங்கள் நிறுவனப் பணியாளர்கள் எந்த வகையில் ஆதரவு அளித்தாலும், மோசமான விளைவுகள் ஏற்படும்’’ என்று எச்சரிக்கை விடுத்திருக்கின்றனர். இது கடுமையாக கண்டிக்கத்தக்கது.

மற்றொருபுறம், நெடுவாசல் கிராமத்தில் நடைபெறும் போராட்டங்களில் மாணவர்கள் பங்கேற்பதை தடுக்கும் நடவடிக்கைகளிலும் காவல்துறையினர் ஈடுபட்டிருக்கின்றன. நெடுவாசல் கிராமத்தைச் சுற்றிலும் மொத்தம் 7 இடங்களில் சோதனைசாவடிகளை அமைத்துள்ள காவல்துறையினர், அவ்வழியே நெடுவாசல் செல்லும் அனைத்து வாகனங்களின் பதிவு எண்களையும், அதில் பயணம் செய்வோரின் விவரங்களையும் பதிவு செய்கின்றனர். போராட்டத்தில் பங்கேற்கச் செல்லும் மாணவர்களுக்கு அனுமதி மறுத்து கட்டாயப்படுத்தி திருப்பி அனுப்புகின்றனர்.

பெற்றோரின் அனுமதி இல்லாமல் மாணவர்கள் போராட்டத்தில் பங்கேற்கக் கூடாது என்ற வினோத விதியைக் கூறி அவர்களை விரட்டியடிக்கின்றனர்.
காவல்துறையினரின் நடவடிக்கைகள் கேலிக்கூத்தான ஒடுக்குமுறையாக உள்ளன. போராட்டங்களில் பங்கேற்பது மாணவர்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவன பணியாளர்களின் உரிமை ஆகும். போராட்டம் நடத்தப்படுவதற்கான காரணம் என்னவென்பதை அறிந்து அதை சரி செய்வது தான் ஆட்சியாளர்களுக்கு அழகாகும். மாறாக, பணியாளர்களை போராட்டத்திற்கு அனுப்பக் கூடாது என்று தகவல் தொழில்நுட்ப நிறுவன அதிகாரிகளை மிரட்டுவதும், இந்தியாவுக்கு அந்நிய செலாவணியை ஈட்டித் தரும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை ஏதோ போராட்டத்தில் நடிப்பதற்கு ஆட்களை அனுப்பும் துணை நடிகர்கள் முகவர்களைப் போல கையாளுவதும் கேலிக்கூத்தான செயல்கள் ஆகும்.

மதுக்கடைகளில் 21 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு மது விற்பனை செய்யக்கூடாது என்ற விதியை அரசாலோ, காவல்துறையாலோ முழுமையாக நடைமுறைப்படுத்த முடியவில்லை. அதில் தோல்வியடைந்த அரசும், காவல்துறையும் போராட்டத்தில் பங்கேற்க வரும் மாணவர்களுக்கு பெற்றோரின் அனுமதி தேவை என்ற புதிய விதியை உருவாக்கி செயல்படுத்துவது கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற் மிரட்டல்களால் மக்கள் போராட்டத்தை முறியடித்துவிட முடியும் என அரசு நினைப்பது, சீப்பை ஒளித்து வைப்பதன் மூலம் திருமணத்தை நிறுத்திவிட முடியும் என நினைப்பதற்கு சமமான அறியாமையின் வெளிப்பாடாகும்.

எனவே, இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதை விடுத்து, நெடுவாசல் மக்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி அதன் மூலம் போராட்டத்திற்கு முடிவு காண அரசு முன்வர வேண்டும்.

மருத்துவர். அன்புமணி இராமதாஸ்

#Anbumani #Ramadoss #PMK
#SaveFarmers #SaveNeduvasal #StopMethaneExtraction