Sunday, 26 March 2017

கதை கேளு... கதை கேளு கழகத்தின் கதை கேளு! கூட்டணியால் கிடைத்த வெற்றி! -மருத்துவர். இராமதாஸ்

கதை கேளு... கதை கேளு கழகத்தின் கதை கேளு!

கூட்டணியால் கிடைத்த வெற்றி!
-மருத்துவர். இராமதாஸ்

1996 சட்டப்பேரவைத் தேர்தலில் படுதோல்வி அடைந்ததுடன், பத்துக்கும் மேற்பட்ட ஊழல் வழக்குகளை ஜெயலலிதா எதிர்கொண்டு வந்தார். ஜெயலலிதா மற்றும் அவரது அமைச்சரவை சகாக்கள் மீதான வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டதால் ஓராண்டுக்குள் அனைத்து வழக்குகளும் விசாரித்து தீர்ப்பளிக்கப்பட்டு விடும் என்று செய்திகள் பரப்பப்பட்டன. இவற்றையெல்லாம்  வைத்துப் பார்க்கும் போது தமிழக அரசியல் அரங்கில் ஜெயலலிதா ஒழிக்கப்பட்டு விடுவார் என்பதே அனைவரின் கருத்துமாக இருந்தது.

ஜெயலலிதாவின் கவலை

தேர்தல் தோல்வி மற்றும் ஊழல் வழக்குகளால் ஜெயலலிதாவும் துவண்டு போயிருந்தார். இவற்றில் இருந்து மீண்டு வரவேண்டும் என்றால் ஒரு தேர்தல் வெற்றி தேவை என்பதை அவர் உணர்ந்திருந்தார். ஆனால், அப்போது தான் சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்திற்கு தேர்தல் நடத்தப்பட்டிருந்தது என்பதால் உடனடியாக தேர்தல் வருவதோ, தமது அரசியல் எதிர்காலம் துளிர்ப்பதோ சாத்தியமில்லை என்றே ஜெயலலிதாவும் நம்பினார்.

ஆனால், அரசியல் சாதகக் காற்று அவரை நோக்கி வீசியது. மத்தியில் முதலில் தேவகவுடா தலைமையில் அமைக்கப்பட்ட ஐக்கிய முன்னணி ஆட்சி, காங்கிரஸ் தலைவர் சீதாராம் கேசரியுடனான மோதலால் ஓராண்டு கூட தாக்குப்பிடிக்க முடியவில்லை. பத்து மாதங்கள் மற்றும் 11 நாட்களில் அவரது ஆட்சி கவிழ்ந்தது. அதைத்தொடர்ந்து தேர்தலை சந்திக்க எந்தக் கட்சியும் தயாராக இல்லை என்பதால் ஐக்கிய முன்னணி சார்பில் வேறு ஒருவர் பிரதமராக தேர்வு செய்யப்பட்டால் அவரை ஆதரிக்கத் தயாராக இருப்பதாக காங்கிரஸ் தலைவர் சீதாராம் கேசரி அறிவித்தார்.

மூப்பனாருக்கு பதவி மறுப்பு

இதைத் தொடர்ந்து ஐக்கிய முன்னணி சார்பில் பிரதமர் பதவிக்கு மூப்பனாரை முன்னிறுத்த ஏற்பாடுகள் நடைபெற்றன. ஆனால், காங்கிரஸ்காரரான அவரை பிரதமர் பதவியில் அமர்த்தக்கூடாது  என்று மார்க்சிஸ்ட் கட்சி கடுமையாக எதிர்த்தது. ஆனால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அவ்வாறு எதிர்ப்பு தெரிவிக்க காரணமே திமுக தலைவர் கலைஞர் தான் என்றும், தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் தம்மைவிட பெரிய பதவிக்கு வருவதை கலைஞர் விரும்பவில்லை என்றும் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியினர் கருதினார்கள். தலைவர்கள் நிலையில் இந்த குற்றச்சாற்று வெளிப்படையாக கூறப்படவில்லை என்றாலும் கூட கீழ்மட்ட தலைவர்கள் இக்குற்றச்சாற்றை வெளிப்படையாக கூறினார்கள்.

மற்றொரு பக்கம் சமாஜ்வாதிக் கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவ் பிரதமர் பதவிக்கு ஆசைப்பட்டார்.  அவரை ஆதரிக்க மார்க்சிஸ்ட் கட்சி முன்வந்தாலும் கூட, அவரது உறவினரும், பிகார் முதல்வருமான லாலுபிரசாத் யாதவ் முன்வரவில்லை. கடைசியில் ஜனதா தளத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஐ.கே.குஜ்ரால் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், மூப்பனார் பிரதமர் பதவிக்கு  தேர்வு செய்யப்படாததை கண்டிக்கும் வகையில் மத்திய அமைச்சரவையில் தமாகா சேரவில்லை. ஆனாலும்,  திமுக தலைவர் கலைஞர் இதுதொடர்பாக விளக்கம் அளித்ததைத் தொடர்ந்து மத்திய அமைச்சரவையில்  தமாகா மீண்டும் சேர்ந்தது.

குஜ்ரால் அரசும் கவிழ்ந்தது

தேவகவுடா அமைச்சரவையில் ப.சிதம்பரம், எம்.அருணாச்சலம், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், தனுஷ்கோடி ஆதித்தன் ஆகிய நால்வர் மட்டுமே இடம்பெற்றிருந்தனர். குஜ்ரால் அமைச்சரவையில் ஜெயந்திநடராஜன் கூடுதலாக சேர்த்துக் கொள்ளப்பட்டார். பிகு செய்ததற்கான வெகுமதியாகவே அது பார்க்கப்பட்டது.

ஆனால், குஜ்ரால் அரசும் அதிக காலம் நீடிக்கவில்லை. 1997-ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் தேதி குஜ்ரால் புதிய பிரதமராக பதவியேற்றார். அந்த ஆண்டு ஆகஸ்ட் 28&ஆம் தேதி, ராஜிவ் கொலையின் பின்னணி குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதி ஜெயின் கமிஷனின் இடைக்கால அறிக்கை மத்திய அரசிடம் தாக்கல் செய்யப்பட்டது. அதில் விடுதலைப்புலிகளுக்கும், கலைஞருக்கும் தொடர்பு இருந்ததாக கூறப்பட்டிருந்தது. இதையடுத்து மத்திய அமைச்சரவையிலிருந்து திமுக அமைச்சர்களை நீக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சீத்தாராம் கேசரி கோரிக்கை விடுத்தார். அதை ஏற்க பிரதமர் குஜ்ராலும் தயாராக இல்லை... திமுக தலைவர் கலைஞரும் தயாராக இல்லை. இதனால் ஆத்திரமடைந்த காங்கிரஸ் கட்சி 1997-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 28&ஆம் தேதி குஜ்ரால் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் வாங்கியது. இதையடுத்து பிரதமர் பதவியிலிருந்து குஜ்ரால் விலகினார்.

மக்களவைக்கு இருகட்ட தேர்தல்

வேறு எந்தக் கட்சியும் புதிய அரசு அமைக்கத் தயாராக இல்லாத நிலையில், மக்களவைக்கு 1998-ஆம் ஆண்டு பிப்ரவரி 16, 22 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
மத்தியில் கூட்டணி ஆட்சி ஆட்டம் காணத் தொடங்கியதுமே ஜெயலலிதா தமிழக அரசியலில் காய்களை நகர்த்தத் தொடங்கினார். அதேநேரம் வலிமையான கூட்டணி இல்லாவிட்டால் அதிமுகவுக்கு வெற்றி கிடைக்காது என்பதில் அவர் உறுதியாக இருந்தார். ஜெயலலிதாவைப் பொறுத்தவரை ஒரு குணம் உண்டு.  காரியம் ஆக வேண்டுமென்றால் எந்த அளவுக்கும் பணிந்து போவார்... காரியம் முடிந்தால் யாரையும் மதிக்க மாட்டார்.
தமிழகத்தில் திமுக- தமாகா அணியை வீழ்த்த வலிமையான அணி தேவை என்பதை உணர்ந்த  ஜெயலலிதா பாட்டாளி மக்கள் கட்சியை அதிமுக அணியில் சேர்க்க விரும்பினார். அதற்கு முன்பாக  நாவலர் நெடுஞ்செழியன் மூலமாக மதிமுகவும், ஜனா.கிருஷ்ணமூர்த்தி மூலமாக பாரதிய ஜனதாவும் அதிமுக அணியில் சேர முடிவு செய்துவிட்டன. ஆனாலும் அதிமுக அணியில் சேருவதில் எனக்கு தயக்கம் இருந்தது.

அதிமுக அணியில் பாமக

ஆனால், அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவிடமிருந்து கூட்டணியில் இணைய தொடர்ந்து அழைப்புகள் வந்து கொண்டிருந்தன. அக்கட்சியின் இரண்டாம் நிலைத் தலைவர்களும் கூட்டணியில் இணையும்படி அன்புத்தொல்லைக் கொடுத்துக் கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் திவாரி காங்கிரசில் இருந்து விலகி, தமிழக ராஜீவ் காங்கிரஸ் என்ற பெயரில் தனிக்கட்சித் தொடங்கிய வாழப்பாடி இராமமூர்த்தியும் அதிமுக அணியில் சேரும்படி எனக்கு வேண்டுகோள் விடுத்துக் கொண்டிருந்தார்.  ஒருகட்டத்தில் கூட்டணிப் பேச்சுக்கள் தொடங்குவதன் அடையாளமாக சென்னை தேனாம்பேட்டையில்  உள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் அலுவலகத்துக்கே ஜெயலலிதா வந்து, என்னையும் கட்சியின் மற்ற தலைவர்களையும் சந்தித்து அதிமுக தலைமையிலான அணியில் இணையும்படி வேண்டுகோள் விடுத்தார். அதைத்தொடர்ந்து அதிமுக அணியில் பாட்டாளி மக்கள் கட்சி இணைந்தது.

அதேபோல், மதிமுக, பாஜக, தமிழக ராஜிவ் காங்கிரஸ், ஜனதாக் கட்சி ஆகிய கட்சிகளின் அலுவலகங்களுக்கும்  ஜெயலலிதா மரியாதை நிமித்தம் சென்று வந்தார். அதைத் தொடர்ந்து அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பா.ம.க., மதிமுக, பாஜக, தமிழக ராஜிவ் காங்கிரஸ், ஜனதாக் கட்சி ஆகிய கட்சிகள் இணைந்தன. அதிமுக மொத்தம் 23 இடங்களில் போட்டியிட்டது. பா.ம.க., மதிமுக, பாஜக ஆகிய கட்சிகளுக்கு தலா 5 இடங்களும், தமிழக ராஜிவ் காங்கிரஸ், ஜனதா ஆகிய கட்சிகளுக்கு தலா ஓரிடமும் ஒதுக்கப்பட்டன.

அதிமுக அணி வெற்றி

திமுக அணியில் அக்கட்சிக்கு 18 இடங்களும், தமாகாவுக்கு 20 இடங்களும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு இரு இடங்களும் ஒதுக்கப்பட்டன. காங்கிரசும், திருநாவுக்கரசர் தலைமையிலான எம்ஜிஆர் அண்ணா திமுகவும் தனி அணியாகவும் போட்டியிட்டன. 1998 ஆம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி தொடங்கி நெல்லை பாளையங்கோட்டையில் நடைபெற்ற அதிமுகவின் வெள்ளிவிழாவில்  வாஜ்பாய், அத்வானி, ஜெயலலிதா, நான் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டோம்.தேர்தலுக்கு முன்பாக திமுக, தமாகா அணிக்கு ஆதரவாக நடிகர் ரஜினிகாந்த் தொலைக்காட்சி மூலம் வாக்கு சேகரித்தார். அதற்கு முன்பாக 1998 ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி கோவையில் அத்வானி பிரச்சாரம் செய்யவிருந்த இடத்தில் குண்டு வெடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அதைத் தொடர்ந்து இரு கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் அதிமுக அணி தமிழகத்தில் மொத்தம் 30 இடங்களில் வெற்றி பெற்றது. அதிமுக 18 இடங்களையும், பா.ம.க. 4 இடங்களையும் வென்றன.  மதிமுக, பாஜக ஆகியவை தலா 3 இடங்களிலும், ராஜிவ் காங்கிரஸ், ஜனதாக் கட்சி ஆகிய கட்சிகள் தலா ஓரிடத்திலும் வென்றன. அதைத்தொடர்ந்து மத்தியில் அமைந்த வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் தமிழகத்திலிருந்து அதிமுக, பா.ம.க., தமிழக ராஜிவ் காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் இடம் பெற்றன.

No comments:

Post a Comment