கதை கேளு... கதை கேளு கழகத்தின் கதை கேளு!
ஊழல் வழக்கில் கைது - சிறை
-மருத்துவர். இராமதாஸ்
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்தது. ஆனால், அந்த தோல்விக்கு பொறுப்பேற்க ஜெயலலிதா தயாராக இல்லை. மாறாக, தலைமைத் தேர்தல் ஆணையர் சேஷன் தமக்கு எதிராக சதி செய்தார் என்பது உள்ளிட்ட ஏராளமான குற்றச்சாற்றுகளை ஜெயலலிதா முன் வைத்தார். ஆனால், அவரது வாதம் மக்களிடையே எடுபடவில்லை.
அதைத்தொடர்ந்து ஆகஸ்ட் 18&ஆம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா பெயரில் ஓர் அறிக்கை வெளியானது. அதில் அதிமுகவின் தோல்விக்கு தாம் பொறுப்பேற்பதாக கூறியிருந்தாலும், அமைச்சர்கள் நிர்வாகிகள், தமக்கு நெருக்கமாக இருந்தவர்கள் செய்த தவறுகள் தான் தோல்விக்கு காரணம் என்று குற்றஞ்சாற்றினார். தாம் ஒரு நாளைக்கு 16 முதல் 18 மணி நேரம் பணியாற்றியதாகவும், மற்றவர்கள் செய்த துரோகங்களால் அதிமுக தோல்வியடைந்ததாகவும் ஜெயலலிதா கூறியிருந்தார்.
மொத்தம் 33 ஊழல் வழக்குகள்
ஒருவழியாக தோல்வியிலிருந்து மீண்ட ஜெயலலிதா கட்சியை வலுப்படுத்தும் பணிகளில் இறங்கிய போது, ஊழல் வழக்குகள் அவரை சுற்றி வளைக்கத் தொடங்கின.1996ஆம் ஆண்டில் ஜெயலலிதா மற்றும் அவரது சகாக்கள் மீது மொத்தம் 33 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதில் ஜெயலலிதா மீது மட்டும் சொத்துக்குவிப்பு வழக்கு, நிலக்கரி இறக்குமதி ஊழல் வழக்கு, டான்சி வழக்கு, பிளசன்ட் ஸ்டே வழக்கு, வண்ணத்தொலைக்காட்சிப் பெட்டி ஊழல் வழக்கு, பிறந்த நாள் பரிசு வழக்கு, வருமானவரி கணக்கு தாக்கல் செய்யாத வழக்கு, ஹைதராபாத் திராட்சைத் தோட்ட வருமான வழக்கு, தெற்காசிய விளையாட்டுப் போட்டி விளம்பர வழக்கு, கிரானைட் குவாரி வழக்கு, ஸ்பிக் பங்கு வழக்கு, வெளிநாட்டிலிருந்து பணம் பெற்ற வழக்கு என 12 வழக்குகள் தொடரப்பட்டன.
இவற்றில் ஹைதராபாத் திராட்சைத் தோட்ட வருமான வழக்கு, கிரானைட் குவாரி வழக்கு, ஸ்பிக் பங்கு வழக்கு, பிறந்த நாள் பரிசு வழக்கு, வருமானவரி கணக்கு தாக்கல் செய்யாத வழக்கு ஆகிய ஐந்து வழக்குகள் விசாரணை நிலையில் இருந்ததால் அவற்றைத் தவிர மீதமுள்ள 7 வழக்குகளில் ஜெயலலிதாவை கைது செய்ய காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டது. இதையறிந்த ஜெயலலிதா இந்த 7 வழக்குகளிலும் தமக்கு முன்பிணை வழங்க வேண்டும் என்று கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு செய்தார். ஆனால், அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன.
ஜெயலலிதா சிறையிலடைப்பு
அதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதா மேல்முறையீடு செய்தார்.ஆனால், அந்த மனுக்களை விசாரித்த நீதிபதி சிவப்பா அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தார். குறைந்தபட்சம் 10 நாட்களுக்கு தம்மை கைது செய்யாமல் இருக்க வேண்டும் என்று ஜெயலலிதா சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், அதையும் ஏற்க நீதிபதி சிவப்பா மறுத்துவிட்டார். அதுமட்டுமின்றி, இந்த வழக்குகளில் ஜெயலலிதாவை ஏன் இன்னும் கைது செய்யவில்லை? என்றும் காவல்துறைக்கு கண்டனம் தெரிவித்தார். இதனால் நீதிபதி சிவப்பா மீது ஜெயலலிதா கோபம் அடைந்ததும், அதற்கு பழிவாங்கும் வகையில் பின்னாளில் அதிமுகவைச் சேர்ந்த தம்பித்துரை மத்திய சட்ட அமைச்சராக இருந்த போது, நீதிபதி சிவப்பா பணிநீக்கம் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கு வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளை வாங்கியதில் ரூ.8.53 கோடி ஊழல் செய்த வழக்கில் 07.12.1996 அன்று காலை 9.50 மணிக்கு போயஸ் தோட்ட இல்லத்தில் கைது செய்யப்பட்டார். காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் வைத்து ஒரு மணி நேரம் விசாரணை நடத்தப்பட்ட பின்னர் நீதிமன்றத்தில் நேர்நிறுத்தப்பட்டு சென்னை மத்திய சிறையில் ஜெயலலிதா அடைக்கப்பட்டார்.
கைதுக்கு பாராட்டு
ஜெயலலிதா கைது செய்யப்பட்டதை அதிமுக மற்றும் அதன் ஆதரவு கட்சிகளைத் தவிர மற்ற அனைவரும் வரவேற்றனர். இதுபற்றி கருத்து தெரிவித்த நான்,‘‘ ஜெயலலிதா கைது செய்யப்பட்டிருப்பது மிகவும் தாமதமான நடவடிக்கை. ஆனாலும், அவரைக் கைது செய்திருப்பதைப் பாராட்டுகிறேன்’’ என்று கூறியிருந்தேன். திமுக, இடதுசாரிக் கட்சிகளும் இந்த நடவடிக்கையை வரவேற்றன.
கி.வீரமணி கருத்து
ஆனால், திமுகவும், திகவும் இரட்டைக்குழல் துப்பாக்கிகள் என்று இப்போது கூறிவரும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தான் இந்த நடவடிக்கையை மிகக்கடுமையாக விமர்சித்தார்.‘‘ தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக நடைபெறுபவை அப்பட்டமான பழிவாங்கும் நடவடிக்கைகள். அதீதமான கொடுமையான நடவடிக்கைகள் என்ற உணர்வினைத் தான் ஏற்படுத்தியிருக்கின்றன. குறிப்பாக ஜெயலலிதாவின் வங்கிக் கணக்குகளை முடக்கிவிட்டு, வருமானவரி கட்டவில்லை என்பதற்காக ஜப்தி, ஏல நடவடிக்கை என்றால் அதைவிட கொடூரமான மனிதாபிமானமற்ற செயல் உண்டா?’’ என்று ஜெயலலிதாவுக்கு ஆதரவாக கி.வீரமணி பொங்கி எழுந்தார்.
தொடர்ந்து ஜெயலலிதாவை பிணையில் எடுப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரமடைந்தன. அதன்பயனாக 28 நாட்கள் சிறைவாசத்திற்கு பிறகு ஜெயலலிதா பிணையில் விடுதலை செய்யப்பட்டார். அவர் மீதான 12 வழக்குகளில் பெரும்பாலானவற்றில் விசாரணை நீதிமன்றத்தில் தண்டிக்கப்பட்டாலும், உயர்நீதிமன்றத்தாலும், உச்சநீதிமன்றத்தாலும் விடுதலை செய்யப்பட்டார். சொத்துக்குவிப்பு வழக்கில் மட்டும் தான் அவர் மீதான குற்றச்சாற்று உச்சநீதிமன்றத்திலும் உறுதி செய்யப்பட்டது. ஆனால், அவர் இறந்து விட்டதைக் காரணம் காட்டி அவருக்கு தண்டனையோ, அபராதமோ விதிக்கப்படவில்லை. ஆனால், அவருக்கு அபராதம் விதிக்கப்பட வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு இப்போது மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
ஜெயலலிதா மீதான ஊழல் வழக்குகள் மற்றும் அதன் முடிவுகளை உங்கள் பார்வைக்காக இங்கு அளிக்கிறேன்.
1. வண்ணத் தொலைக்காட்சி பெட்டி ஊழல் வழக்கு:
1995ம் ஆண்டு தமிழ்நாட்டில் உள்ள ஊராட்சி மன்றங்களுக்கு 45,000 வண்ணத் தொலைக்காட்சி பெட்டிகள் வாங்கியதில் ரூ.8.5 கோடி ஊழல் செய்ததாக ஜெயலலிதா, சசிகலா, முன்னாள் அமைச்சர் செல்வகணபதி உள்ளிட்ட 10 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. இவர்களில் ஜெயலலிதா, சசிகலா, அவரது உறவினர் பாஸ்கரன் தவிர, ஏழு பேருக்கு ஐந்து ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
2. டான்சி ஊழல் வழக்கு:
டான்சி நிறுவனத்துக்கு சொந்தமான நிலத்தை முறைகேடான வழியில் ஜெயலலிதா பங்குதாரராக உள்ள ஜெயா பப்ளிகேஷன்ஸ் நிறுவனம் மற்றும் சசி என்டர்பிரைசஸ் நிறுவனங்கள் வாங்கியதால் அரசுக்கு ரூ.3.5 கோடி இழப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக இரண்டு வழக்குகள் தொடரப்பட்டன. ஒரு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா ஆகியோருக்கு தலா மூன்று ஆண்டுகளும்; இன்னொரு வழக்கில் தலா, 2 ஆண்டுகளும் சிறை தண்டனை விதிக்கப்பட்டன. எனினும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டில் சசிகலா, ஜெயலலிதா ஆகிய இருவரும் விடுவிக்கப்பட்டனர். உச்சநீதிமன்றமும் பின்னர் இதை உறுதி செய்தது.
3. வெளிநாட்டு பரிசு ஊழல் வழக்கு:
1992 - 93ம் ஆண்டில் வெளிநாட்டில் இருந்து வந்த 3 கோடி மதிப்புள்ள பணத்தை தமது வங்கிக் கணக்கில் செலுத்தியதாக வழக்கு தொடரப்பட்டு விசாரணை நிலையிலேயே உள்ளது.
4. பிறந்த நாள் பரிசு வழக்கு:
1992ம் ஆண்டில் பிறந்த நாள் கொண்டாடிய ஜெயலலிதாவுக்கு 59 பேரிடம் இருந்து 2 கோடி ரூபாய் மதிப்புள்ள காசோலைகள் பரிசாக வந்தன. இதுதொடர்பாக ஜெயலலிதா, அவரது அமைச்சர்கள் செங்கோட்டையன், அழகு திருநாவுக்கரசு ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இருந்து அவர்கள் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. ஜெயலலிதா, அழகு திருநாவுக்கரசு ஆகியோர் இறந்து விட்ட நிலையில், அவர்களை நீக்கி விட்டு செங்கோட்டையன் மீதான குற்றச்சாற்றை மட்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் ஆணையிட்டிருக்கிறது.
5. வருமான வரி வழக்கு
1992-94 ஆண்டுகளில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாததற்காக ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டது. 17 ஆண்டுகளாக இந்த வழக்கு நடைபெற்று வந்த நிலையில், வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாததற்காக வருமான வரித்துறையினர் அபராதம் செலுத்தி இந்த வழக்கை முடித்துக் கொள்வதாக ஜெயலலிதா அறிவித்தார். அதை ஏற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயம் இல்லாவிட்டாலும், ஜெயலலிதாவின் கோரிக்கையை ஏற்று அவர் மீதான வழக்கை எழும்பூர் பொருளாதார குற்றங்களுக்கான நீதிபதி தட்சிணாமூர்த்தி தள்ளுபடி செய்தார். இதற்கு பரிசாக அவருக்கு தகவல் ஆணையர் பதவி தரப்பட்டுள்ளது. எனினும் இதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டிருக்கிறது.
6. கொடைக்கானல் பிளசண்ட் ஸ்டே வழக்கு
கொடைக்கானலில் விதிகளை மீறி பிளசண்ட் ஸ்டே ஹோட்டலுக்கு 7 மாடிக் கட்டிடம் கட்ட அனுமதி அளித்த விவகாரத்தில் ஜெயலலிதா, முன்னாள் அமைச்சர் செல்வகணபதி ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் 5 பேருக்கும் தலா ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப் பட்டது. இதை எதிர்த்து அதிமுகவினர் நடத்திய போராட்டத்தின் போது தான் தருமபுரியை அடுத்த இலக்கியம்பட்டி என்ற இடத்தில் கோவை வேளாண் பல்கலைக்கழக மாணவிகள் 3 பேர் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர். எனினும் இந்த வழக்கிலிருந்து ஜெயலலிதா பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.
7. நிலக்கரி இறக்குமதி ஊழல் வழக்கு
தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு 20 லட்சம் டன் நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டதில் ரூ.6.5 கோடி ஊழல் செய்ததாக முதலமைச்சர் ஜெயலலிதா, அமைச்சர் கண்ணப்பன் உள்ளிட்ட 10 பேர் மீது வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் முக்கிய ஆவணங்கள் அதிமுக ஆட்சியில் அழிக்கப்பட்டு விட்டதால் ஜெயலலிதா உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டனர்.
8. கிரானைட் குவாரி ஊழல் வழக்கு
1991&96 ஆட்சிக் காலத்தில் தான் முதன்முறையாக தனியார் கிரானைட் குவாரிக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதற்காக தனியார் நிறுவனங்களிடமிருந்து ரூ.39 கோடி லஞ்சம் வாங்கியதாக ஜெயலலிதா உள்ளிட்டோர் மீது வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் இன்னும் விசாரணை முடிவடையவில்லை என்பதால் இன்னும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.
9. ஸ்பிக் பங்கு விற்பனை ஊழல்
ஸ்பிக் நிறுவனத்தில் தமிழக அரசின் டிட்கோ நிறுவனத்துக்கு சொந்தமான பங்குகளை குறைந்த விலைக்கு அந்த நிறுவனத்துக்கே விற்பனை செய்ததால் ரூ.28 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக ஜெயலலிதா மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கும் இன்னும் விசாரணை நிலையிலேயே உள்ளது.
10. ரூ.66.65 கோடி சொத்துக்குவிப்பு வழக்கு
முதலமைச்சராக இருந்த போது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி ரூ.66.65 கோடி சொத்துக் குவித்ததாக ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 17 ஆண்டுகள் இழுத்தடிக்கப்பட்ட பிறகு இந்த வழக்கில் கடந்த 27.09.2014 அன்று தீர்ப்பளித்த பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹா, 4 பேருக்கும் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தார். ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடியும், மற்றவர்களுக்கு தலா ரூ.10 கோடியும் அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால், இந்த வழக்கின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி, தவறான கணக்குகளை காட்டி இந்த வழக்கில் அனைவரையும் விடுதலை செய்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் கடந்த பிப்ரவரி மாதம் 14&ஆம் தேதி தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் இவ்வழக்கின் எதிரிகளான சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய மூவரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. ஆனால், ஜெயலலிதா இறந்து விட்டதைக் காரணம் காட்டி அவருக்கு தண்டனையோ, அபராதமோ விதிக்கப்படவில்லை.
இவை தவிர தெற்காசிய விளையாட்டுப் போட்டி விளம்பர ஊழல் வழக்கு, ஹைதராபாத் திராட்சைத் தோட்ட வழக்கு ஆகியவையும் ஜெயலலிதாவுக்கு எதிராக உள்ளன. ஆனால், இந்த வழக்குகள் நீண்ட காலமாக முடக்கப்பட்டு கிடப்பதால் இவற்றில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
No comments:
Post a Comment