கதை கேளு... கதை கேளு கழகத்தின் கதை கேளு!
பரிசாக கிடைத்த படுதோல்வி!
-மருத்துவர். இராமதாஸ்
தமிழக அரசியல் வரலாற்றில் 1991-96 ஆட்சிக்காலத்தை விட மிக மோசமான ஆட்சிக்காலத்தை தமிழக மக்கள் பார்த்திருக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீரழிவு முதல் வன்முறை, ஊழல் வரை அனைத்தும் தலைவிரித்தாடின. அதற்கு முன் தமிழகத்தில் மிக மோசமான ஆட்சி என்றால் அது 1971-76 இடையிலான திமுக ஆட்சியைத் தான் சொல்வார்கள். அப்போது கலைஞர் தலைமையிலான அரசுக்கு அவப்பெயர் ஏற்படுவதற்குக் காரணம் லெவி முறை காரணமாக அரிசிக்கு ஏற்பட்ட தடுப்பாடும், திமுகவினரின் அட்டகாசமும் தான். ஆனால், அப்படிப்பட்ட திமுக அரசையே பரவாயில்லை என்று சொல்லும் அளவுக்கு மிக மோசமான ஆட்சியை தமது முதல் பதவிக் காலத்திலேயே ஜெயலலிதா வழங்கினார்.
மக்கள் கோபம்!
வழக்கமாக தேர்தல் வந்தால் பதவியில் உள்ள கட்சியை வீழ்த்தி விட்டு நாம் ஆட்சியைப் பிடிக்கலாம் என்று எதிர்க்கட்சிகள் ஆசைப்படுவது வழக்கம். ஆனால், 1996 தேர்தலைப் பொறுத்தவரை எப்போது தேர்தல் வரும்... ஜெயலலிதா ஆட்சியை வீட்டுக்கு அனுப்பலாம் என்று மக்கள் நினைத்துக் கொண்டிருந்தனர். ஜெயலலிதா ஆட்சியை அகற்ற வேண்டும் என்பது தான் மக்களின் எண்ணமாக இருந்ததே தவிர, யாரை ஆட்சியில் அமர்த்துவது என்பதில் தெளிவில்லை. ஆனாலும், அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் ஜெயலலிதா ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதில் தமிழக மக்கள் உறுதியாக இருந்தனர். ஜெயலலிதா ஆட்சிக் கொடுமையை அனுபவித்ததால் ஏற்பட்ட கோபம் தான் அதற்கு காரணம் ஆகும்.
ஆளுங்கட்சிக்கு எதிராக மக்கள் கொந்தளித்து இருந்தால் அது இயல்பாகவே எதிர்க்கட்சிக்கு தான் சாதகமாக அமையும். ஆனால், தமிழகத்தில் 1996 தேர்தலுக்கு முன் எதிர்க்கட்சியான திமுகவும் கலக்கத்தில் தான் இருந்தது. காரணம்... திமுகவுக்கு மக்கள் மத்தியில் பெரிய அளவில் ஆதரவு இல்லை. அதுமட்டுமின்றி, 1992-ஆம் ஆண்டில் தான் திமுக இரண்டாக உடைந்து மதிமுக என்ற கட்சி வைகோ தலைமையில் உருவாகியிருந்தது.
கலைஞருக்கு நாற்காலி
1996 தேர்தலில் எப்படியாவது ஆட்சியைக் கைப்பற்றிவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த கலைஞர், அதற்காக பாட்டாளி மக்கள் கட்சியுடன் கூட்டணி அமைக்க விரும்பினார். இரு தரப்பிலும் அதற்கு ஆதரவான நிலைப்பாடு இருந்ததால் அதுகுறித்த பேச்சுக்கள் நடைபெற்றன. அதன் ஒரு கட்டமாக 1995-ஆம் ஆண்டு அக்டோபர் 8-ஆம் தேதி விழுப்புரத்தில் நடைபெற்ற அரசியல் விழுப்புணர்வு மாநாட்டில் திமுக தலைவர் கலைஞர் கலந்து கொண்டார். காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி இருந்த வாழப்பாடி இராமமூர்த்தி, இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் ப.மாணிக்கம், தேசிய லீக் தலைவர் அப்துல் லத்தீப் ஆகியோரும் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் தான் கலைஞருக்கு மஞ்சள் துண்டு போர்த்தியதுடன், இராஜா நாற்காலியும் வழங்கி அமரவைத்தோம்.
மற்றொரு பக்கம் காங்கிரசுடன் கூட்டணி அமைக்க அதிமுக துடித்தது. ஆனால், காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர்களுக்கு அதில் உடன்பாடு இல்லை. ஆனாலும், பிரதமராகவும், காங்கிரஸ் தலைவராகவும் இருந்த நரசிம்மராவ் அதிமுகவுடனான கூட்டணியையே விரும்பினார்.
அதிமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி
அந்த நேரத்தில் தமிழகத்தில் அதிமுகவுடன் தான் கூட்டணி என காங்கிரஸ் மேலிடப் பார்வையாளர்கள் அறிவிப்பதும், அதை தமிழக காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன் உள்ளிட்ட தலைவர்கள் மறுப்பதும் வாடிக்கையான நிகழ்வுகளாக மாறியிருந்தன. ஒருகட்டத்தில் அதிமுகவின் மூத்த தலைவர்களாக எஸ்.டி.சோமசுந்தரமும், முத்துசாமியும் தில்லி சென்று பிரதமர் நரசிம்மராவை சந்தித்து கூட்டணி குறித்து பேசினார்கள். கடந்த 1991 ஆம் ஆண்டு தேர்தலைப் போலவே அதிமுகவுக்கு 168 சட்டப்பேரவைத் தொகுதிகள், 10 மக்களவைத் தொகுதிகள், காங்கிரசுக்கு 66 சட்டப்பேரவைத் தொகுதிகள் 29 மக்களவைத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதுகுறித்த அறிவிப்பை சென்னையில் ஜெயலலிதாவும், தில்லியில் காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் வி.என்.காட்கிலும் அறிவித்தனர்.
இந்த செய்தி கேட்டதும் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். காரணம் அவர்களின் கனவு கலைந்தது தான். தமிழகத்தில் அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளுக்கும் மக்களிடையே எதிர்ப்பு நிலவுவதைப் பார்த்த அவர்கள் மூன்றாவது அணியை அமைத்து வெற்றி பெற்று விடலாம் என்று நினைத்தனர். அந்த நேரத்தில் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டிருந்த ஆர்.எம்.வீரப்பன் உள்ளிட்ட தலைவர்கள் தனிக்கட்சியை தொடங்கி காங்கிரசுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடலாம் என்று யோசனை தெரிவித்திருந்தனர். ஆர்.எம்.வீரப்பன் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் மூத்த அமைச்சராக இருந்தார். அவரது தயாரிப்பில் வெளியான, நடிகர் ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா திரைப்படத்தின் வெற்றி விழாவில், ஆர்.எம்.வீரப்பனை வைத்துக் கொண்டு ரஜினிகாந்த் பேசிய பேச்சுக்கள் தான் அமைச்சர் பதவியிலிருந்தும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் வீரப்பன் நீக்கப்படுவதற்கு காரணமாக அமைந்தது. அதனால் வீரப்பனுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு பரிகாரம் தேடும் வகையில், ஆர்.எம்.வீரப்பன் இருக்கும் அணிக்கு ஆதரவு தர ரஜினி உறுதியாக இருந்தார். ஆனால், அந்த திட்டத்தை காங்கிரஸ் தலைவர் நரசிம்மராவ் ஏற்க மறுத்தது தான் அவர்களின் கோபத்துக்குக் காரணம் ஆகும்.
த.மா.கா. உதயம்
அதிமுகவுடனான கூட்டணியை ஏற்க முடியாது என்று கூறிய மூப்பனார், தேர்தலில் பிரச்சாரம் செய்யப் போவதில்லை என்றும் அறிவித்தார். ஆனால், அதன்பிறகும் தமது முடிவை மாற்றிக்கொள்ளாத நரசிம்மராவ், அதிமுகவுடன் தான் கூட்டணி; அதில் எந்த மாற்றமும் இல்லை என்று அறிவித்தார். இதைக்கேட்டு ஆத்திரமடைந்த காங்கிரஸ் தொண்டர்கள் கோபத்தில் சத்தியமூர்த்தி பவனில் வன்முறையில் ஈடுபட்டனர்.
ஆனால், எதிர்பார்த்த மாதிரியே காங்கிரசிலிருந்து மூப்பனார் தலைமையில் ஒரு பிரிவினர் வெளியேறி தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியைத் தொடங்கி விட்டனர். அதுவரை பாட்டாளி மக்கள் கட்சியுடன் பேச்சு நடத்தி வந்த திமுக திடீரென தமிழ் மாநில காங்கிரஸ் பக்கம் சாய்ந்து விட்டது.
பா.ம.க. கூட்டணி
பாட்டாளி மக்கள் கட்சி தலைமையில் வாழப்பாடி இராமமூர்த்தி தலைமையிலான திவாரி காங்கிரஸ் உள்ளிட்ட 12 கட்சிகள் அடங்கிய ஊழல் ஒழிப்பு & சமூகநீதி முன்னணி உருவாக்கப்பட்டது. மதிமுக தலைமையில் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ஜனதாதளம் ஆகிய கட்சிகள் அடங்கிய கூட்டணியும் உருவானது.
தேர்தல் பிரச்சாரம் தொடங்கிய நாளில் இருந்தே அதிமுக எதிர்ப்பலையை நன்றாக உணர முடிந்தது. முதல்வர் ஜெயலலிதா பர்கூரிலும், அப்போதைய நிதி அமைச் சர் நெடுஞ்செழியன் தேனி தொகுதியிலும், கண்ணப்பன் சிவகங்கையிலும், செங்கோட்டையன் கோபிசெட்டிப்பாளையத்திலும் போட்டியிட்டனர்.
நெடுஞ்செழியன் மீது செருப்புவீச்சு
அப்போது முதன் முதலாக நெடுஞ்செழியன் தேனி தொகுதிக்கு பிரச்சாரத்துக்கு திறந்த ஜீப்பில் சென்றார். அவரது பிரச்சாரத்தின்போது கிராமங்களுக்கு நெடுஞ்செழியன் வரக்கூடாது என்று மக்கள் முற்றுகையிட்டு திருப்பி அனுப்பினர். சில இடங்களில் அவரது வாகனம் மீது கல் வீசி தாக்குதலும் நடத்தப்பட்டது. இன்னும் சில இடங்களில் நெடுஞ்செழியன் மீது செருப்பும் வீசப்பட்டது. இதனால் அவர் பிரச்சாரத்தை ஓரளவுதான் செய்ய முடிந்தது.
நெடுஞ்செழியனைத் தொடர்ந்து, பல அமைச்சர்கள் பிரச்சாரத்துக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் போட்டியியிட்ட ஜெயலலிதாவுக்கு பெரிய அளவில் வரவேற்பு இல்லை. அதேநேரத்தில் திமுக, காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவாக நடிகர் ரஜினிகாந்த் வீடியோ மூலம் பிரச்சாரம் செய்தார். பிரச்சாரத்தின்போதே தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பதை உணர முடிந்தது.
1996&ஆம் ஆண்டு ஏப்ரல் 27, மே 2 ஆகிய தேதிகளில் தேர்தல்கள் நடைபெற்றன. பதிவான வாக்குகள் மே 12 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. திமுகவும், அதன் சின்னத்தில் போட்டியிட்ட சிறிய கட்சிகளும் சேர்ந்து 173 இடங்களை பிடித்தன. த.மா.கா 39 இடங்களையும், இந்திய கம்யூனிஸ்ட் 8 இடங்களையும் பிடித்தன.
மக்களின் வெறுப்பை சம்பாதித்த அதிமுக 4 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. அக்கட்சியில் புதிதாக சேர்ந்திருந்த திருநாவுக்கரசு அறந்தாங்கி தொகுதியில் இருந்தும், தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றவரான தாமரைக்கனி திருவில்லிப்புத்தூர் தொகுதியிலிருந்தும், கருப்பசாமி சங்கரன்கோவிலிலும், பி.ஆர்.சுந்தரம் ராசிபுரத்திலிருந்தும் வெற்றி பெற்றனர்.
ஜெயலலிதா தோல்வி
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தொகுதியில் போட்டியிட்ட முதலமைச்சர் ஜெயலலிதா திமுக வேட்பாளர் சுகவனத்திடம் 8366 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுப்போனார். சுகவனத்துக்கு 59,148 வாக்குகளும், ஜெயலலிதாவுக்கு 50,782 வாக்குகளும் கிடைத்தன. இத்தனைக்கும் ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிட்ட சுகவனம் யார் என்பது கூட அத்தொகுதி மக்களுக்கு அவ்வளவாக தெரியாது. அப்படிப்பட்டவர் எல்லாம் வெற்றி பெறும் அளவுக்கு ஜெயலலிதா மீது மக்கள் கோபமாக இருந்தனர்.
காங்கிரசின் நிலை இன்னும் பரிதாபமாக இருந்தது. அக்கட்சி சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வியடைந்தது. மக்களவைத் தேர்தலைப் பொறுத்தவரை அதிமுக கூட்டணி அனைத்து இடங்களிலும் தோல்வியடைந்தது. தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 இடங்களையும் திமுக - தமாகா வென்றது
.
எடப்பாடி பழனிச்சாமி மூன்றாவது இடம்
பாட்டாளி மக்கள் கட்சி பெண்ணாகரம், தாரமங்கலம், எடப்பாடி, ஆண்டிமடம் ஆகிய 4 இடங்களை வென்றது. எடப்பாடி தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட இப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பா.ம.க., திமுகவுக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டார்.
No comments:
Post a Comment