Saturday, 11 March 2017

கதை கேளு... கதை கேளு கழகத்தின் கதை கேளு! மறைந்தார் எம்.ஜி.ஆர்!    -மருத்துவர். இராமதாஸ்

கதை கேளு... கதை கேளு கழகத்தின் கதை கேளு!
  
          மறைந்தார் எம்.ஜி.ஆர்!
   -மருத்துவர். இராமதாஸ்

அமெரிக்காவில் இரண்டாவது முறையாக சிகிச்சைப் பெற்று எம்.ஜி.ஆர் திரும்பினாலும் அவரது உடல்நிலை அன்றாட பணிகளுக்கு ஒத்துழைக்கவில்லை. இட ஒதுக்கீடு தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டத்திலேயே அவர் மிகவும் தளர்வாக காணப்பட்டதை என்னால் உணர முடிந்தது. அரசு நிர்வாகத்தில் அவருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் விதத்தில் எந்த நெருக்கடியும் இல்லை. ஆனால், அதிமுக நிர்வாகத்தில் தான் அவருக்கு ஏராளமான பிரச்சினைகள்.
அப்போதைய பிரதமர் ராஜிவ் காந்தி மூலம் எம்.ஜி.ஆருக்கு ஜெயலலிதா ஏராளமான நெருக்கடிகளைக் கொடுத்தார். துணை முதலமைச்சர் பதவியை ஜெயலலிதாவுக்கு விட்டுத் தர வேண்டும் என்று எம்.ஜி.ஆருக்கு தொடர்ந்து அழுத்தம் தரப்பட்டது.

இதனால் வெறுத்துப் போன எம்.ஜி.ஆர் ஒரு கட்டத்தில்  ஜெயலலிதாவை கட்சியில் இருந்து நீக்க முடிவு செய்தார். அப்போது பொதுச்செயலாளராக இருந்த இராகவானந்தத்தை தமது இல்லத்திற்கு அவர் அழைத்தார். ஜெயலலிதாவை கட்சியை விட்டு நீக்கும் அறிவிப்பு தயாராகி விட்ட நிலையில், எம்.ஜி.ஆரை சந்தித்த அமைச்சர் திருநாவுக்கரசு ஜெயலலிதாவை கட்சியை விட்டு நீக்கக் கூடாது என்று வாதாடினார். எம்.ஜி.ஆரும் அதை ஏற்று முடிவைத் தள்ளி வைத்தார்.

எச்சரித்த இராகவானந்தம்

அப்போது எம்.ஜி.ஆரின் முகத்துக்கு எதிராகவே திருநாவுக்கரசுவை கண்டித்த இராகவானந்தம்,‘‘ ஜெயலலிதாவுக்கு ஆதரவாக பேசி அவரை கட்சியை விட்டு நீக்கும் முடிவை தடுத்து நிறுத்தியதன் மூலம் அதிமுகவுக்கு மிகப்பெரிய தீமையை நீங்கள் செய்திருக்கிறீர்கள். இதற்காக பின்னாளில் நீங்கள் நிச்சயமாக வருத்தப்படுவீர்கள்’’ என்று எச்சரித்துள்ளார். அப்போது அவர் கூறியது இப்போது உண்மையாகி விட்டது. அண்மையில் சென்னையில் ஆர்.எம்.வீரப்பன் ஏற்பாடு செய்து, நானும் பங்கேற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் இந்த உண்மையை திருநாவுக்கரசரே தெரிவித்தார்.

இப்படியாக கடுமையான மன உளைச்சலில் எம்.ஜி.ஆர் பாதிக்கப்பட்டிருந்ததால் அவரது உடல்நிலை மிகவும் மோசமானது. 21.12.1987 அன்று சென்னை கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் ஜவகர்லால் நேரு சிலை திறப்பு விழாவில் பிரதமர் இராஜீவ் காந்தியுடன் எம்.ஜி.ஆரும் கலந்து கொண்டார். அவரது உடல்நிலையை அறிந்து கவலைப்பட்ட இராஜீவ்,‘‘ துணை முதல்வர் பதவியில் ஒருவரை நியமித்து விட்டு, நீங்கள் ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்’’ என்று கூறியதாக செய்திகள் வெளிவந்தன.

மறைந்தார் எம்.ஜி.ஆர்

அன்றிலிருந்து மூன்றாவது நாள் 24.12.1987 அன்று எம்.ஜி.ஆர் பெயரிலான மருத்துவப் பல்கலைக்கழகம் சென்னை கிண்டியில் திறக்கப்பட இருந்தது. மாலையில் விழா நடைபெறவிருந்த நிலையில் அதிகாலையில் எம்.ஜி.ஆரின் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது. மருத்துவர்கள் விரைந்து வந்து சிகிச்சை அளித்த போதிலும் எந்த பயனும் இல்லை. எம்.ஜி.ஆர் உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது.

எம்.ஜி.ஆர் பெயரிலான மருத்துவப் பல்கலைக்கழகத் தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு முழுவதிலுமிருந்து அதிமுக தொண்டர்கள் அதிகாலையிலேயே சென்னையில் குவிந்தனர். கட்டுக்கடங்காத கூட்டம். எம்.ஜி.ஆரின் மறைவைத் தொடர்ந்து அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. வந்தவர்களுக்கு உணவு கூட கிடைக்காததால் சில இடங்களில் வன்முறைகள் வெடித்தன. இதைப்பயன்படுத்திக் கொண்டு  சமூக விரோத கும்பல்கள் வன்முறையில் ஈடுபட்டன.

தலைவர்கள் அஞ்சலி....
சமூக விரோதிகள் வன்முறை!

ஒருபுறம் எம்.ஜி.ஆரின் உடலுக்கு பிரதமர் ராஜீவ் காந்தி,  அண்டை மாநில முதலமைச்சர்கள், லட்சக் கணக்கான தொண்டர்கள் அஞ்சலி செலுத்திக் கொண்டிருந்த நிலையில், மற்றொருபுறம் சென்னையின் பல பகுதிகளில் வன்முறை வெடித்தது. திறந்திருந்த ஒட்டல்களில் டீ குடித்துவிட்டு, காசு கொடுக்காமல் கடைக்காரர்களைத் தாக்கினார்கள் சமூக விரோதிகள்.  கோடம்பாக்கம் பகுதியில் நான்கு டீக்கடைக்காரர்கள் காயம் அடைந்தார்கள். போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்கப்போக, ’உங்களை யாருய்யா கடையை திறக்கச் சொன்னது? உயிரோட வந்திருக்கீங்களே...இதுவே பெரிசு!’ என்று சொல்லி விரட்டினார்கள்.

கலைஞர் சிலை தகர்ப்பு

வாகனங்களில் செல்பவர்களின் மீது கல்லெறியும் கலாட்டா துவங்கியபோது, காலை மணி எட்டு. நுங்கம்பாக்கம் வள்ளுவர் சிலையருகே ஒரு மகிழுந்தை சூறையாடினார்கள். அண்ணா சாலையின் இருபுறமும் சவுக்குக் கம்புகளால் தடுப்பு அமைக்கப்பட்டிருந்தது. அந்த சவுக்குக் கம்புகளை ஆளுக்கொன்றாய் உருவிக்கொண்டு சைக்கிளில் செல்பவர்கள் மீது கூட அடித்து சந்தோஷப்பட்டார்கள். ஆயிரம் விளக்குப் பகுதியில் ஒரு ஜவுளிக்கடை, மாடியில் தையல்கடை போன்றவற்றைச்  சூறையாடினார்கள். அண்ணா மேம்பாலம் முதல் அண்ணா சிலை வரையிலான பகுதிகளில் இருந்த கடைகள்தான் அதிகம் பாதிப்புக்குள்ளானது. அண்ணா சாலையில் இருந்த திமுக தலைவர் கலைஞரின்  சிலை தகர்க்கப்பட்டது.

திசம்பர் 24&ஆம் தேதி  இரவு நிலைமை இதைவிட மோசமானது. திருவல்லிக்கேணி பகுதியில் சாலையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர், பைக் போன்ற எல்லா வாகனங்களின் பெட்ரோல் டாங்கிலும் மணலை போட்டுவிட்டுப் போனது ஒரு கும்பல். மைலாப்பூர் பகுதியில் ஒரே நாளில் 47 சைக்கிள்கள் காணாமல் போயின. தேனாம்பேட்டை பகுதியில் 12 வயது சிறுவனின் உடல் மீது மண்ணெண்ணை ஊற்றிவிட்டு, தீ வைத்துவிடுவோம் என்று மிரட்டி பணம் வசூல் செய்து கொண்டு நகர்ந்தது.

வன்முறை பயங்கரங்கள்!

அமைந்தகரை பகுதியில் வீடு வீடாகப் போய், கதவைத் தட்டி உணவு கேட்டார்கள். இல்லை என்று சொன்ன வீடுகளில் கல் எறிந்து கலாட்டா செய்தார்கள். சென்னை சென்ட்ரலுக்கு வந்த ரயில்களெல்லாம் சில சமூக விரோதிகளால் கற்களால் அடித்து நொறுக்கப்பட்டு, எண்ணூர் அருகேயே நிறுத்தப்பட்டுவிட்டன. பாவம்... பயணிகள் கம்பார்ட்மென்ட் கதவுகளை இறுக்கமாக மூடியபடி, நடுங்கியபடி காத்திருந்த காட்சிகள் அரங்கேறின.

ஜெயலலிதா அவமதிப்பு

அதற்கு அடுத்த நாள் பிற்பகலில் எம்.ஜி.ஆர் உடல் அடக்கம் செய்வதற்காக இராஜாஜி அரங்கத்தில் இருந்து கடற்கரை நோக்கி இராணுவ வண்டியில் பயணத்தை தொடங்கியது. எம்.ஜி.ஆருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி முழுவதும் அவரது தலைமாட்டிலேயே நின்று கொண்டிருந்த ஜெயலலிதாவும் ராணுவ  வாகனத்தில் ஏற முயன்றார். அதை விரும்பாத எம்.ஜி.ஆர் மனைவி ஜானகி வழி உறவினரும், நடிகருமான  திலீபன், அதிமுக சட்டப்பேரவை உறுப்பினரும் பின்னாளில் திமுகவில் இணைந்து மாநிலங்களவை உறுப்பினர் ஆக்கப்பட்டவருமான கே.பி. இராமலிங்கம் ஆகிய இருவரும் சேர்ந்து ஜெயலலிதாவை ராணுவ வண்டியிலிருந்து இறக்கி விட்டனர். இதைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டு அதையும் அரசியல் ஆக்கினார் ஜெயலிதா.

இத்தனை பரபரப்புகளுக்கு நடுவே எம்.ஜி.ஆரின் உடல் சென்னை மெரினா கடற்கரையில் அடக்கம் செய்யப்பட்டது. புதிய முதலமைச்சர் தேர்ந்தெடுக்கப்படும் வரை நாவலர் நெடுஞ்செழியன் தலைமையில் இடைக்கால அமைச்சரவை  பொறுப்பேற்றது.

புதிய முதலமைச்சராக எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி இராமச்சந்திரனை ஆர்.எம்.வீரப்பனும், அவரது ஆதரவாளர்களும்  முன்னிறுத்தினார்கள். இதனால் அதிருப்தி அடைந்த நெடுஞ்செழியன் தமக்குத் தான் முதலமைச்சர் பதவி என்றும், அப்பதவிக்கு யார் முன்னிறுத்தப்பட்டாலும் அவர்களை எதிர்த்து  தாம் போட்டியிடப் போவதாகவும் அறிவித்தார்.  நெடுஞ்செழியனை ஆதரிப்பதாக ஜெயலலிதாவும் அறிவித்தார். கலகம் தொடங்கியது.... கழகம் உடைந்தது.

Friday, 10 March 2017

மின்வாரியப் பணிக்கான நேர்காணலை நட்சத்திர விடுதியில் நடத்துவதா?    -மருத்துவர். இராமதாஸ் -----அறிக்கை------

மின்வாரியப் பணிக்கான நேர்காணலை
நட்சத்திர விடுதியில் நடத்துவதா?
                   -----அறிக்கை------
      -மருத்துவர். இராமதாஸ்

தமிழ்நாடு மின்வாரியத்திற்கு உதவிப் பொறியாளர் பணிக்கு தகுதியானவர்களை தேர்வு செய்வதற்கான நேர்காணல் சென்னை அரும்பாக்கத்திலுள்ள தனியார் நட்சத்திர விடுதியில் வரும் 13&ஆம் தேதி முதல் 18&ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. தார்மீக நெறிமுறைகளுக்கு எதிரான, ஊழலுக்கு வழிவகுக்கக் கூடிய தமிழ்நாடு மின்வாரியத்தின் இந்த அணுகுமுறை கண்டிக்கத்தக்கதாகும்.

மின்சாரவாரியத்திற்கு 300 மின்னியல் உதவிப் பொறியாளர்கள், 25 எந்திரவியல் உதவி பொறியாளர்கள், 50 சிவில் உதவிப் பொறியாளர்கள் என மொத்தம் 375 உதவிப் பொறியாளர்களை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கை கடந்த 28.12.2015 அன்று வெளியிடப்பட்டு, அண்ணா பல்கலைக்கழகம் மூலம் 31.01.2016 அன்று எழுத்துத் தேர்வுகள் நடத்தப்பட்டன. அதன் முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்ட நிலையில், அதில் தகுதி காண் மதிப்பெண் எடுத்தவர்களுக்கு வரும் 13-ஆம் தேதி முதல் நேர்காணல் நடைபெற உள்ளது. மின்னியல் உதவி பொறியாளர்களுக்கு 1-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதி வரையும், மற்ற பிரிவு உதவிப் பொறியாளர்களுக்கு 17, 18 ஆகிய தேதிகளிலும் அரும்பாக்கம் 100 அடி சாலையில் உள்ள நட்சத்திர விடுதியில் நேர்காணல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. நேர்காணலில் பெரும் முறைகேடு செய்ய வேண்டும் என்பதைத் தவிர இதற்கு வேறு நோக்கம் இருக்க வாய்ப்பில்லை.

ரூ1.13 லட்சம் கோடி சொத்து மதிப்புள்ள தமிழ்நாடு மின்வாரியத்திற்கு சென்னை அண்ணாசாலையில் மிகப்பெரிய தலைமை அலுவலகம் உள்ளது. அங்கு மாநாடு நடத்தும் அளவுக்கு வசதிகள் உள்ளன. இதுவரை மின்சார வாரியம் சார்ந்த அனைத்து நேர்காணல்களும் அங்கு தான் நடைபெற்றிருக்கின்றன. அவ்வாறு இருக்கும் போது, உதவி பொறியாளர்களுக்கான நேர்காணலை நட்சத்திர விடுதியில் நடத்த வேண்டிய தேவை என்ன? தேசிய அளவிலோ, மாநில அளவிலோ எந்த பணிக்கான நேர்காணலும்  நட்சத்திர விடுதிகளில் நடைபெற்ற வரலாறு இல்லை. இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுனர் பதவிக்கான நேர்காணல் கூட சம்பந்தப்பட்ட அமைச்சகத்தில் தான் நடந்ததே தவிர, நட்சத்திர விடுதியில் அல்ல.

தமிழ்நாடு அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் பணியாளர் நியமனங்களைப் பொறுத்தவரை நேர்காணல்களில் தான் மிக அதிக அளவில் முறைகேடுகள் நடக்கின்றன. இதைத் தடுக்க வேண்டும்  என்பதற்காகத் தான் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் நேர்காணல் நடக்கும் அறையில்  கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலகத்திலும் நேர்காணல் நடத்துவதற்கான அறையில் கண்காணிப்பு காமிராக்களை பொருத்தி அங்கு நேர்காணல் நடைபெறும் என்று அறிவித்திருந்தால், அது பாராட்டத்தக்கதாக இருந்திருக்கும். ஆனால், அதைவிடுத்து   தனியார் நட்சத்திர விடுதியில் நேர்காணலை நடத்துவதன் நோக்கம் தரகர்கள் தடையின்றி நடமாடவும், நேர்காணலுக்கு வருபவர்களிடம் அந்த இடத்திலேயே பேரம் பேசுவதற்கும் வசதி செய்தி தருவது என்பதைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும். மின்சார வாரியத்தின் உதவிப் பொறியாளர்கள் நியமனத்தில் மிகப்பெரிய ஊழல் நடைபெறப்போகிறது என்பதற்கு இது தான் சிறந்த ஆதாரம் ஆகும்.

ஒருவேளை வசதி கருதி தான் நட்சத்திர விடுதியில் நேர்காணல் நடத்தப்படுகிறது என்று வைத்துக் கொண்டாலும் கூட, இவ்வளவு வீண் செலவுகளை தாங்கும் வகையிலா தமிழ்நாடு மின்வாரியத்தின்  நிதிநிலைமை இருக்கிறது? ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிக கடன் சுமையில் சிக்கித் தவிக்கும்  மின்சார வாரியம் ஆண்டுக்கு ரூ.12,000 கோடி முதல் ரூ.15,000 கோடி வரை இழப்பைச் சந்தித்து வருகிறது. நிதி நெருக்கடியை சமாளிக்க கடந்த 5 ஆண்டுகளில் இரு முறை மின்கட்டணங்களை மின்சார வாரியம் உயர்த்தியிருக்கிறது. மின் திட்டங்களை செயல்படுத்த நிதி இல்லாமல் தடுமாறும் சூழலில் தனியார் நட்சத்திர விடுதியில் நேர்காணல் நடத்துவது ஏற்றுகொள்ள முடியாத ஊதாரித்தனமாகும்.

இவையெல்லாம் ஒருபுறமிருக்க, அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கான பணியாளர்களை  தேர்ந்தெடுக்க  அரசுப் பணியாளர் தேர்வாணையம் என்ற சட்டப்பூர்வ அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஆசிரியர் தேர்வு வாரியம், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம், சீருடைப் பணியாளர் தேர்வாணையம், மின்வாரியப் பணியாளர் வாரியம் என தனித்தனி தேர்வு வாரியங்கள் செயல்படுவது செயல்படுவது பணியாளர் நியமனத்தில் ஊழலும், முறைகேடுகளும் பெருகுவதற்கே வழி வகுக்கும்.

எனவே, தனியார் நட்சத்திர விடுதியில் 13-ஆம் தேதி முதல் நடைபெறவுள்ள நேர்காணல்களை மின்வாரியத் தலைமை அலுவலகத்துக்கோ அல்லது அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கோ மாற்ற  வேண்டும். அனைத்து பணியாளர்களையும் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்ந்தெடுக்க வகை செய்ய வேண்டும். இதை செய்யத் தவறினால், வரும் 13-ஆம் தேதி முதல் நேர்காணல் நடைபெறவிருக்கும் சென்னை அரும்பாக்கம் தனியார் நட்சத்திர விடுதியில் தமிழக மாணவர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் தொடர் முழக்கப் போராட்டம் நடத்துவார்கள் என்று எச்சரிக்கிறேன்.

கதை கேளு... கதை கேளு கழகத்தின் கதை கேளு! சுட்டுக் கொல்லப்பட்ட சொந்தங்கள்!  - மருத்துவர். இராமதாஸ்

கதை கேளு... கதை கேளு கழகத்தின் கதை கேளு!
           சுட்டுக் கொல்லப்பட்ட சொந்தங்கள்!
   - மருத்துவர். இராமதாஸ்

தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 விழுக்காடும், மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 2 விழுக்காடும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி  தொடர் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. திண்டிவனத்தில் நடைபெற்ற போராட்டத்திற்கு நான் தலைமையேற்றிருந்தேன். போராட்டத்தின் முதல் நாளிலேயே நானும் மற்ற தலைவர்களும் கைது செய்யப் பட்டு, சென்னை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டோம்.

சமூக நீதிக்கான இந்த போராட்டத்தை எப்படியாவது சிதைத்து விட வேண்டும் என்ற முடிவில் இருந்த பொறுப்பு முதலமைச்சர் நெடுஞ்செழியன், அமைச்சர்கள் பண்ருட்டி இராமச்சந்திரன், ப.உ.சண்முகம், வி.வி.சுவாமிநாதன் ஆகியோர், போராட்டம் தொடங்கிய 3 மணி நேரத்தில் அடக்குமுறையை கட்டவிழ்த்து  விட்டனர்.

போராட்டத்தில் முதல் பலி

தென்னாற்காடு மாவட்டம் பார்ப்பனப்பட்டியை அதிகாலை 3.00 மணிக்கு முற்றுகையிட்ட காவல்துறையினர், அங்கு போராட்டம் நடத்தியவர்கள் மீதும், வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் மீதும் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தத் தொடங்கினார்கள். அதிகாலை 3.00 மணிக்கு அடிப்படை வசதி இல்லாத கிராமத்தில் எந்த அளவுக்கு இருள் இருக்கும் என்பதை உங்களால் யூகிக்க முடியும். அந்த இருட்டில் அஞ்சி ஓடிக்கொண்டிருந்தவர்கள் மீது, தடியடி நடத்துவது, கண்ணீர் புகைக் குண்டுகளை வீசுவது, முழங்காலுக்கு கீழே சுட்டு எச்சரிக்கை செய்யாமல் காக்கை குருவிகளை சுடுவது போல சுட்டனர் காவல்துறையினர். இதில் குண்டடிபட்ட வீரப்பன் என்ற 25 வயது இளைஞர் தட்டுத்தடுமாறி மாரியம்மன் கோவில் வாசலில் மயங்கி விழுந்தார்.

வீரப்பனின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அவரது தந்தை ரெங்கநாதனை காவல்துறையினர் சரமாரியாக  சுட்டுக் கொன்று அவரது உடலை கால்களைப் பிடித்து இழுத்துச் சென்றனர். இதை அந்த ஊரைச் சேர்ந்த சிறுவனை துப்பாக்கியின் அடிக்கட்டையால் தாக்கி காயப்படுத்தினார்கள் காவல்துறையினர்.
காவல்துறையினரின் மிருகத்தனம்
அதேநாளில் கோலியனூர் கூட்டுச் சாலையில் காவல்துறையினர் நடத்தியத் துப்பாக்கிச் சூட்டில் சித்தணி ஏழுமலை, முண்டியம்பாக்கம் சிங்கார வேலு ஆகிய இருவர் கொல்லப்பட்டனர். இவர்களில் ஏழுமலை 25 வயது மட்டுமே நிறைந்த இளைஞர். அவர் மறைந்ததால் அவரது மனைவி அஞ்சலாட்சியும், ஒரு வயதுக்  குழந்தையும் ஆதரவற்றவர்களாகி விட்டனர்.

முண்டியம்பாக்கம் சிங்காரவேலு துப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்திருந்த நிலையில் காவல்துறையினர் நினைத்திருந்தால் அவரைக் காப்பாற்றியிருக்கலாம். ஆனால், 25 மணி நேரமாக அவரை மருத்துவமனைக்குக் கூட எடுத்துச் செல்லாமலும், குடிப்பதற்கு தண்ணீர் கூட தராமலும் காவல்துறையினர் கொடுமைப்படுத்திக் கொன்றனர்.

கயத்தூரைச் சேர்ந்த முனியன், முத்து, தாண்டவராயன் ஆகியோரும் காவல்துறையினரின் துப்பாக்கிக் குண்டுகளுக்கு இரையானார். இவர்களில் முனியன் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நிலையில்,  தாகத்தை தணிக்க தண்ணீர் தரும்படி கேட்டான். ஆனால், தண்ணீர் தர மறுத்த காவலர்கள் முனியனின் வாயில் சிறுநீரை ஊற்றிக் கொடுமைப்படுத்தினர். முனியன் கொல்லப்பட்ட போது அவருக்கு திருமணமாகி 10 மாதங்கள் கூட ஆகவில்லை. அப்போது அவரது மனைவி ஜெயா 7 மாத கர்ப்பினிணியாக  இருந்தார். ஜெயாவின் கதறலை என்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை. ‘‘ கதறிக்கதறி அழும் அந்த கர்ப்பிணியின் கண்களுக்கு சுட்டெரிக்கும் சக்தி மட்டும் இருந்திருந்தால் பொசுங்கிப் போயிருந்திருப்பார் அந்த பொல்லாத போலீசார்’’ என்று இரங்கல் செய்தியில் நான் குறிப்பிட்டிருந்தேன்.

மற்றொருவரான முத்து திருமணமாகாதவர். அவரது உடலைப் பார்ப்பதற்கு ஓடி வந்த அவரது தாயை, மகனின் உடலைகூட பார்க்க விடாமல் துரத்தியடித்தனர்.

உத்தமவீரன் தாண்டவராயன்

தாண்டவராயன் படுகொலை செய்யப்பட்ட விதம் தான் நினைத்துப் பார்க்க முடியாததாகும். போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தாண்டவராயனை அவரது உயிர்நிலை அருகில் சுட்ட காவல்துறையினர், அவர் இறந்து விட்டாரா? என்று சோதித்து பார்த்துள்ளனர். அவர் உயிருடன் இருப்பதை அறிந்து  மார்பில் துப்பாக்கிக்  கட்டையால் குத்தி கொடுமைப்படுத்தியுள்ளனர். அதன்பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தாண்டவராயன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார். தாண்டவராயனின் இறப்பு என்னை மிகவும் பாதித்தது. அவரது மறைவு குறித்த இரங்கல் செய்தியில்,‘‘நாட்டை நாசப்படுத்துபவன் எல்லாம் நடமாடிக் கொண்டிருக்கையில் உரிமைக்காக போராடிய உத்தமவீரன் போலீஸ் கொடுங்கோலர்கள் சுட்டதால் படுகாயமுற்றுத் தாள முடியாது மீளா இடம் நோக்கிப் போய்விட்டான். உழைப்பை நேசிக்கும் பாட்டாளியைப் போல் வன்னியர் சங்கத்தை நேசித்து வளர்த்த  தீரன் தாண்டவராயன் மறைவு நெஞ்சத்தை  விட்டு நீங்காத வடுவாகும்’’ என்று நான் குறிப்பிட்டிருந்தேன்.
கோலியனூர் கோவிந்தனின் மரணமும் இத்தகையது தான்.  சதிகாரர்கள் சுட்டும் சாகாமலிருந்த கோலியனூர் கோவிந்தனைக் கொலைவெறி சண்டாளர்கள் நாயை அடித்துத் தூக்கிப் போடுவதைப் போல வேனில் தூக்கிப் போட்டு பூட்ஸ் கால்களாலேயே எட்டி எட்டி உதைத்தும், துப்பாக்கி அடிக்கட்டையால் குத்தியும் கொலை செய்திருக்கிறார்கள்.

சமூகப் புரட்சியாளன் தொடர்ந்தனூர் வேலு

கோலியனூர் கோவிந்தன், தொடர்ந்தனூர் வேலு  ஆகியோரும் சமூக நீதிக்காக போராடிய போது காவல்துறையினரால் கொடூரமாக கொலை செய்யப்பட்டவர்கள் தான். இவர்களில் கோவிந்தன் 24 வயது மட்டுமே ஆன திருமணம் ஆகாத இளைஞர். அவரை இழந்து வாடிய குள்ளக் கவுண்டர் & பூரணியம்மாள் ஆகிய பெற்றோருக்கும், 4 உடன்பிறப்புகளுக்கும் ஆறுதல் சொல்ல முடியாமல் தவித்தேன்.

வேலுவோ சமூக புரட்சியாளன்.‘‘சாதிகளின் சனத்தொகைக்கு ஏற்ப இட ஒதுக்கீடு கேட்போர் குறுகிய நோக்கம் கொண்டவர்கள்  எனப் பிதற்றும் குறுமதியாளர்களுக்கு  சரியான பதிலடி கொடுக்கும் வகையில் ஓர் ஏழை ஆதிராவிட பெண்ணை மணந்து கொண்டவன் தான் நம் மனங்களில் இன்று இடம் பெற்ற மாவீரன் வேலு. நாட்டில் இன்று பலர் பேச்சுடன் நிறுத்திக் கொள்ளும் புரட்சிகர எண்ணங்களை செயல்படுத்திக் காட்டிய  வன்னிய செம்மலர் அவன்’’ என்று அவனது வீரமரணத்திற்கு வீர வணக்கம் செலுத்தினேன்.
ஓரத்தூர் ஜெகநாதனும் இதேபோன்று கொடூரமாக கொல்லப்பட்டவர் தான். துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில், உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த ஜெகநாதன் குடிக்கத் தண்ணீர் கொடுக்கும்படி கெஞ்சினான். ஆனால், இரக்கமற்ற காவலர்கள் தண்ணீர் தர மறுத்து விட்டனர். அதன்பின்னர் குண்டுபாய்ந்த இடத்திலிருந்து வழிந்த இரத்தத்தை நாவால் நக்கி உயிர் பிழைக்க ஜெகநாதன் முயன்றார். ஆனால், அதையும் அனுமதிக்காமல் காவல்துறையினர் அவரை அடித்துக் கொலை செய்தனர்.

புறநானூற்று வீரன் தேசிங்கு

கொள்ளுக்காரன்குட்டை என்ற இடத்தில் சிறுதொண்டமாதேவி தேசிங்கு என்ற 20 வயது இளைஞரை காவல்துறையினர் சுட்டுக் கொன்றனர்.  புறநானூற்று வீரனுக்கு உதாரணம் சொல்ல வேண்டுமானால்  தேசிங்குவைத் தான் சொல்ல வேண்டும். கொள்ளுக்காரன் குட்டையில் 30, 40 பேருடன் தேசிங்கு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தான். அப்போது அங்கு வந்த காவல்துறையினர் சாலை மறியல் போராட்டத்தைக் கைவிடவில்லை என்றால் சுட்டுவிடுவோம் என்று மிரட்டினார்கள். அதைக் கண்டு அஞ்சாத தேசிங்கு, தனது சட்டைக் கழற்றி பரந்த முதுகைக் காட்டி ‘‘ சுடு.... சுடு’’ என்று முழங்கினான். ஆனால், இரக்கமற்ற, காட்டுமிராண்டி காவலர்கள் தேசிங்குவின் மார்பில் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.

சிறையில் நடந்த கொலைகள்

போராட்டத்தில் பங்கேற்றதற்காக கைது செய்யப்பட்டு சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த   கொழப்பலூர் முனிசாமி கவுண்டர் என்பவர் சிறைக்காவலர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். போராட்டம் தொடங்கிய இரண்டாவது நாளில் திருவெண்ணெய் நல்லூர் ஒன்றியம் பேரங்கியூர் கிராமத்தில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து கொள்ளையடித்த காவல்துறையினர் அண்ணாமலைக் கவுண்டர் என்பவரை அடித்துக் கொலை செய்தனர்.
சேலம் மாவட்டம் அமரத்தனூரைச் சேர்ந்த மயில்சாமி என்பவரை காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டு,  தலையில் குண்டு பாய்ந்த நிலையில் அங்குள்ள கிணற்றில் வீசி எறிந்து விட்டு சென்றுள்ளனர். அடுத்த நாள் அவரது உடல் கண்டெடுக்கப்பட்ட போது அவர் இறந்ததற்கான காரணம் தெரிந்து விடக் கூடாது என்பதற்காக அவரது உடலை காவல்துறையினர் கைப்பற்றி எரித்து விட்டனர்.

மதுராந்தகம் வட்டம் வெளியம்பாக்கம் இராமகிருஷ்ணன், சேலம் மாவட்டம் சிவதாபுரம் குப்புசாமி, காஞ்சி மாவட்டம் மொசரவாக்கம் கோவிந்தராஜ் ஆகியோர் சிறைக்கொடுமையால் படுகொலை செய்யப் பட்டனர்.  காஞ்சிபுரம் மாவட்டம் குருவிமலை கிராமத்தைச் சேர்ந்த முனுசாமி என்பவரையும் காவல்துறையினர் கொடுமைப்படுத்தியே கொலை செய்தனர்.

பெண்கள் மீதும் ஒடுக்குமுறை

அச்சரப்பாக்கம் ஒன்றியம் கடமலைப்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த மணி என்பவர் வன்னியர் அல்லர். அவர் யாதவ சமுதாயத்தைச் சேர்ந்த இவரை முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் கைது செய்தனர். அவர் தாம் வன்னியர் இல்லை என்று கூறியதையும் பொருட்படுத்தாமல் அவரை கோவை சிறையில் அடைத்தனர். அங்கு அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

இவர்கள் தவிர காவல்துறையினரின் தாக்குதலில் ஏராளமானோர் உடல் உறுப்புகளை இழந்து முடமாகினர். பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டனர். வன்னிய மக்கள் வழிபடும் கோவில்கள்  சூறையாடப்பட்டன. இந்த அடக்குமுறைக்கு துணையாக இராணுவமும் வரவழைக்கப்பட்டது. சுருக்கமாகக் கூற வேண்டுமானால் எம்.ஜி.ஆர் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த அமைச்சர்களால் வன்னியர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர்.

அப்படியும் கூட வன்னியர்களின் எழுச்சி மிகுந்த போராட்டத்தை அடக்க முடியவில்லை. போராட்டம் நடைபெற்ற 7 நாட்களும் தமிழகத்தில் ஒரு வாகனம் கூட ஓடவில்லை. இந்தியாவில் வேறு எங்குமே இப்படி ஒரு போராட்டம் நடத்தப்பட்டதில்லை. அந்த வகையில் இது ஒரு வரலாறு. அறிவிக்கப்பட்ட ஒரு வாரத்தைத் தாண்டியும் போராட்டம் நீடிக்கும் என்று அஞ்சிய அதிகாரிகள், மத்தியச் சிறையில் அடைக்கப் பட்டிருந்த என்னை சந்தித்து, போராட்டத்தை முடித்துக் கொள்ளும்படி வன்னியர் சங்கத்தினருக்கு அறிவுறுத்தல் விடுத்து அறிக்கை வெளியிடும்படி கேட்டுக் கொண்டனர். அதன்படி நானும் அறிக்கை வெளியிட்டேன். அதையேற்று 23&ஆம் தேதியுடன் போராட்டம் கைவிடப்பட்டது.

திமுக முக்கியக் காரணம்

வன்னியர்களுக்கு எதிராக இத்தகைய அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்படுவதற்கு திமுக முக்கியக் காரணம் ஆகும். ஆனால், திமுகவோ அல்லது மற்ற கட்சிகளோ இந்த அடக்குமுறை மற்றும் இனப்படுகொலை குறித்து வாயைத் திறக்கவில்லை; கண்டனம் தெரிவிக்கவில்லை.வன்னியர்களுக்கு எதிராக இவ்வளவு வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. சமூக நீதி கோரி போராட்டம் நடத்தியதற்காக நான் உட்பட 20,461 பேர் கைது செய்யப்பட்டோம். நான் 27 நாட்கள்  சிறையில் அடைக்கப்பட்டிருந்தேன். மற்றவர்களும் பல நாட்கள் சிறையில் வாடினார்கள்.
வன்னியர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அடக்குமுறைகள் குறித்து அப்போது வெளிவந்த தராசு, பல்லவராயர் போன்ற வார இதழ்கள் தான் சமூக அக்கறையுடன் செய்திகளை வெளியிட்டன. தினந்தந்தி, மாலைமலர் போன்ற நாளிதழ்கள் ஓரளவு செய்திகளை வெளியிட்டன. மற்ற ஊடகங்கள் இந்த அடக்குமுறைகள் குறித்து வாய் திறக்கவில்லை. ஆனால், அமெரிக்காவிலிருந்து வெளியாகும் நியூயார்க் டைம்ஸ் இதழ் இந்த போராட்டம் குறித்து போராட்டக்களத்தில் நான் இருக்கும் படத்துடன் கால் பக்கம் அளவுக்கு செய்தி வெளியிட்டது.

மரம்வெட்டிப் பட்டம்

அதேநேரத்தில் சாலையில் போக்குவரத்தை தடுக்க வேண்டும் என்ற உணர்ச்சி வேகத்தில் ஒருசில இடங்களில் மரங்கள் வெட்டப்பட்டு சாலையின் ஓரத்தில் கிடத்தப்பட்டன. இதுபற்றி செய்தி அறிந்ததும் ஊடகங்கள் அதுகுறித்து ஒப்பாரி வைத்தன. எங்களுக்கு மரம் வெட்டி என்று பட்டங்கள் வழங்கின. பல பத்திரிகைகள் பல ஆண்டுகளுக்கு என்னை மரம்வெட்டி இராமதாசு என்றே எழுதின. உண்மையில் 100 மரங்கள் கூட வெட்டப்படவில்லை. அதைத்தொடர்ந்து பசுமைத் தாயகம் அமைப்பை ஏற்படுத்தி பல லட்சம் மரக்கன்றுகளை நட்டோம். அவற்றையெல்லாம் பாராட்ட யாருக்கும் மனம் வரவில்லை. மாறாக, முன்பு மரம் வெட்டியதற்காக இப்போது மரம் நட்டு பரிகாரம் தேடுவதாக ஊடகங்கள் குதர்க்கமாக எழுதின.
சரி... அந்த ஆதங்கங்கள் ஒருபுறம் இருக்கட்டும்.
எண்ணற்ற உயிர்களை பலி கொடுத்து ஏராளமான இழப்புகளை சந்தித்த பிறகும் கூட எங்களுடன் பேச்சு நடத்த பொறுப்பு முதலமைச்சர் நெடுஞ்செழியன் மறுத்தார். அதற்கான அடிப்படையே இல்லை என்று கூறினார். ஆனால், என் மீதும், வன்னியர் சங்கத் தலைவர் சா. சுப்பிரமணியன் மீதும் வழக்குகள் பதிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கொக்கரித்தார்.

எம்.ஜி.ஆருடன் பேச்சு

எங்கள் போராட்டத்தின் போது அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த எம்.ஜி.ஆர் தமிழகம் திரும்பியதும்  அனைத்து சமுதாயத்தினரையும் அழைத்துப் பேச்சு நடத்தினார். 25.11.1987 அன்று பேச்சு வார்த்தை நடந்தது. அதில் எங்களின்  கோரிக்கைகளை முன்வைத்தோம். அதைத் தொடர்ந்து அனைத்து சாதித் தலைவர்களின் கூட்டுக் கூட்டத்தை எம்.ஜி.ஆர் நடத்தினார். தலைமைச் செயலகத்தில் நாமக்கல் கவிஞர் மளிகையில் நடைபெற்ற அந்தக் கூட்டத்தில் முதன்முதலில் என்னைப் பேசும்படி கேட்டுக் கொண்டார். அப்போது இட ஒதுக்கீட்டுக்காக வன்னியர் சங்கம் நடத்திய போராட்டங்கள் குறித்தும், அதை ஆட்சியாளர்கள் கண்டு கொள்ளாதது குறித்தும் விரிவாக விளக்கினேன்.

அதுமட்டுமின்றி, வன்னிய மக்களின் நிலை குறித்தும் விரிவாக எடுத்துக் கூறினேன்.‘‘ எங்களின் கோரிக்கை மற்றும் அதில் உள்ள நியாயங்கள் குறித்து உங்களை சந்தித்து பேசுவதற்காக 10 நிமிடம் நேரம் ஒதுக்கித் தரும்படி பண்ருட்டி இராமச்சந்திரன் மூலமாக கடந்த 5 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால், அது நடக்கவில்லை. இதுகுறித்து விவாதிப்பதற்காக அமைச்சர் பண்ருட்டி  இராமச்சந்திரன் அவரது இல்லத்திற்கு வரும்படி கூறுவார். நாங்களும் சென்று காத்திருந்து, சந்திப்போம். ஆனால், கடைசிவரை நேரம் வாங்கித் தராமல் ஏமாற்றி விட்டார்’’ என்று கூறினேன்.
அதைக் கேட்ட எம்.ஜி.ஆர் அதுகுறித்த விவரங்களை தனது கவனத்திற்கு கொண்டு வராதது ஏன்? என்று அமைச்சர்களையும், அதிகாரிகளையும் கடிந்து கொண்டார். கூட்டம் முடிந்து எம்.ஜி.ஆர் வெளியே வரும் போது அங்கு கூடியிருந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் ‘‘வன்னியர் சங்கம் வாழ்க’’, ‘‘மருத்துவர் அய்யா வாழ்க’’ என்று முழக்கமிட்டனர். எம்.ஜி.ஆரின் வரலாற்றில் அவருக்கு முன் கூடியிருந்த மக்கள் கூட்டம் அவரை வாழ்த்தி முழக்கமிடாமல்  மற்றவரை வாழ்த்தி முழக்கமிட்டது அதுவே முதலும், கடைசியுமாக இருக்கும்.

13% இட ஒதுக்கீடு

இடஒதுக்கீடு குறித்த பேச்சுக்களின் போது வன்னியர்களின் கோரிக்கைகளில் உள்ள நியாயத்தை உணர்ந்த எம்.ஜி.ஆர் 13 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்க முடிவு செய்திருந்ததாகவும், அதற்குள் அவர்  மறைந்து விட்டதால் அது தொடர்பாக தயாரித்து வைக்கப்பட்டிருந்த கோப்புகள் அழிக்கப்பட்டு விட்டதாகவும் பின்னர் அறிந்தேன். அப்போது சட்ட அமைச்சராக இருந்த கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த குட்டையான அமைச்சர் தான் அனைத்துக்கும் காரணம் என்று அவரது அமைச்சரவை சகாக்கள் சிலரே பின்னாளில் என்னிடம் தெரிவித்தனர்.

இட ஒதுக்கீட்டுக்கான போராட்டத்தை குலைக்கும் வகையில் திமுக அண்ணா அறிவாலய திறப்பு விழாவை நடத்தியது, 1989-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தவுடன் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதில் துரோகம் செய்தது என இன்னும் சொல்ல வேண்டியவை ஏராளமாக உள்ளன. அவை குறித்தெல்லாம் புதிய தலைமுறை இளைஞர்கள் அறிந்து கொள்ளும் வகையில் இட ஒதுக்கீட்டு போராட்ட வரலாறு குறித்த தனி நூல் எழுதும் திட்டமும் உள்ளது. அப்போது இது குறித்தெல்லாம் விரிவாக எழுதுகிறேன்.