Sunday, 26 March 2017

கதை கேளு... கதை கேளு கழகத்தின் கதை கேளு! வளர்ப்பு மகன் திருமண கூத்துக்கள்! -மருத்துவர். இராமதாஸ்

கதை கேளு... கதை கேளு கழகத்தின் கதை கேளு!

வளர்ப்பு மகன் திருமண கூத்துக்கள்!
-மருத்துவர். இராமதாஸ்
எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு ஜெயலலிதா முழுக்க முழுக்க சசிகலா மற்றும் நடராஜனின் கட்டுப்பாட்டிற்குள் வந்து விட்டார். அரண்மனை போன்ற போயஸ் தோட்டத்தில்  ஜெயலலிதா சார்பில் இருந்தவர் அவர் மட்டும் தான். அவரது அண்ணன் ஜெயக்குமார் குடும்பத்தினர் அவ்வப்போது வந்து செல்வார்கள். ஆனால், ஒரு கட்டத்தில் ஜெயலலிதாவுக்கும், அவரது அண்ணன் குடும்பத்திற்கும் இடையே தீராப்பகையை சசிகலா திட்டமிட்டு ஏற்படுத்தினார்.

அதேநேரத்தில் சசிகலா தமது குடும்பத்தினரை ஒவ்வொருவராக போயஸ் தோட்டத்திற்குள் அழைத்து வந்தார்.  தொடக்கத்திலேயே சசிகலாவும், நடராஜனும் போயஸ் தோட்டத்தில் இருந்தனர். எம்.ஜி.ஆர் மறைவுக்கு  பிறகு சசிகலாவின் சகோதரர் திவாகரன், அக்காள் மகன் தினகரன் ஆகியோர் ஜெயலலிதாவுக்கு பாதுகாப்பு அளிப்பதற்காக போயஸ் தோட்டத்திற்குள் நுழைந்தனர். சசிகலாவின் அண்ணன் ஜெயராமன்  ஹைதராபாத்தில் உள்ள ஜெயலலிதாவின் திராட்சைத் தோட்டத்தில் நடந்த கட்டுமானப் பணிகளை கவனித்து வந்தார். 1991-ஆம் ஆண்டு திசம்பர் மாதம் ஹைதராபாத் திராட்சைத் தோட்டத்தில் நிகழ்ந்த விபத்தில் மின்சாரம் தாக்கி அவர் உயிரிழந்தார்.

இளவரசி வருகை

அரசு ஊழியரான ஜெயராமன் மறைந்ததால் அவரது குடும்பம் ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்பட்டது.  அதைக்கண்டு பரிதாபப்பட்ட ஜெயலலிதா ஜெயராமனின் மனைவி இளவரசி மற்றும் குடும்பத்தினரை போயஸ் தோட்டத்தில் சேர்த்துக் கொண்டார்.  இந்த இளவரசி தான் சொத்துக்குவிப்பு வழக்கின் நான்காவது குற்றவாளி ஆவார்.

சசிகலாவுக்கு குழந்தைகள் இல்லாததால் தமது சகோதரி வனிதாமணியின் மகன்களான தினகரன்,  பாஸ்கரன், சுதாகரன் ஆகிய மூவர் மீதும் அளவு கடந்த பாசம். அவர்கள் அனைவரையும் போயஸ் தோட்டத்திற்குள் கொண்டு வந்து வாரிசாக்கி விட வேண்டும் என்பது தான் சசிகலாவின் நீண்டகால நோக்கம். அத்திட்டத்தின்படி தினகரன் ஏற்கனவே போயஸ் தோட்டத்திற்குள் கொண்டுவரப்பட்டுவிட்ட  நிலையில், சகோதரியின் இரண்டாவது மகனான பாஸ்கரனுக்கு திரையுலகில் நாட்டம் இருந்ததால் அவர் போயஸ் தோட்டத்தின் பக்கம் திரும்பவில்லை.

சுதாகரனின் நுழைவு

இத்தகைய சூழலில் தான் சசிகலாவின் சகோதரி வனிதாமணியின் மூன்றாவது மகன் சுதாகரன்  சென்னை இராயப்பேட்டையில் உள்ள புதுக்கல்லூரியில் சேர்ந்தார். அவருக்கு சென்னையில் தங்க வேறு இடம் இல்லாதது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி சுதாகரனையும் போயஸ் தோட்டத்திற்குள் கொண்டு வந்தார் சசிகலா.  தினகரன் மீது ஜெயலலிதாவுக்கு பெரிய அளவில் நல்ல அபிமானம் இல்லாத நிலையில், சுதாகரன் ஜெயலலிதாவின் நம்பிக்கையை பெற்றார்.

அந்த நேரத்தில் ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமாரின் குடும்பத்தினர் தங்கள் குழந்தைகளை ஜெயலலிதாவின் வாரிசுகளாக அறிவிக்க வைத்து விட வேண்டும் என்று திட்டமிட்டனர். ஆனால், சசிகலா மிகவும் நுணுக்கமாக காய் நகர்த்தி ஜெயக்குமாரின் குடும்பத்தினரை முந்திக் கொண்டார்.   சசிகலாவின் நச்சரிப்பு தாங்க முடியாமல் 1995&ஆம் ஆண்டில் சுதாகரனை வளர்ப்பு மகனாக அறிவித்தார். அதே ஆண்டின் செப்டம்பர் 7-ஆம் தேதி வளர்ப்பு மகன் சுதாகரனுக்கும், நடிகர் சிவாஜியின் மகள்  வழி பெயர்த்தி சத்தியலட்சுமிக்கும் சென்னை நகரம் மட்டுமின்றி, தமிழகமே அதிரும் வகையில்  திருமணம் நடைபெற்றது.

ரூ.6 கோடி ஆனால், 100 கோடி

வளர்ப்பு மகனின் திருமணத்திற்காக அதிகாரப்பூர்வமாக செய்யப்பட்ட செலவு ரூ.6 கோடி என்று கணக்குக் காட்டப்பட்டது. ஆனால், ஒட்டுமொத்தமாக செய்யப்பட்ட செலவு ரூ.100 கோடியைத் தாண்டும். பிரமாண்டத் திருமணம் என்ற பெயரில் ஏராளமானக் கூத்துக்கள் அரங்கேற்றப்பட்டன. சென்னையின் பணக்காரப் பகுதி என்றழைக்கப்படும் எம்.ஆர்.சி. நகரில் தான் திருமணம் நடைபெற்றது. இதற்காக அந்த பகுதியே பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டது. வளர்ப்பு மகன் திருமணத்தை  சிறப்பாக நடத்த வேண்டும்  என்பதற்காக அத்தனை மனித உரிமை மீறல்களும் அரங்கேற்றப்பட்டன.
திருமணம் நடைபெறும் பகுதியில் வாழும் மக்களில் பெரும்பான்மையானோர் பணக்காரர்கள். ஆனால், எவ்வளவு பணக்காரர்களாக இருந்தாலும் அவர்களால் சகல அதிகாரங்களும் பொருந்திய முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்தும், அவரது அராஜகங்களுக்கு துணையாக இருக்கும் அரசு எந்திரத்தை எதிர்த்தும் என்ன செய்துவிட முடியும். திருமண ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் எம்.ஆர்.சி. நகரிலும், அதையொட்டிய பகுதிகளிலும் வாழும் மக்களுக்கு பலவிதங்களில் இடையூறுகள் செய்யப்பட்டன.

மக்கள் வெளியேற்றம்!

திருமணத்திற்கு இரு நாட்கள் முன்பாக அங்கு வந்த காவல்துறை அதிகாரிகள் வீடுவீடாக திருமணத்துக்கு முன்நாளும், திருமண நாளிலும் இந்த பகுதியில் அதிமுக தொண்டர்கள்  லட்சக்கணக்கில் குவிந்து விடுவார்கள். அப்போது உங்களால் வீட்டை விட்டு வெளியில் வரமுடியாது. எனவே, நீங்களெல்லாம், உங்களுக்கு விருப்பப்படும் ஓட்டல்களுக்குப் போய்க் குடும்பத்தோடு தங்கிக் கொள்ளுங்கள். அதன்பின்னர் தங்கியதற்கான ரசீதைக் கொடுத்தால் அந்த  பணத்தை நாங்கள் கொடுத்து விடுகிறோம். அதனால் அனைவரும் இப்போதே இங்கிருந்து வெளியேறி விடுங்கள்’’ என்று கூறினார்கள்.
சென்னையிலும், தமிழகத்திலும் எந்த சொத்தைப் பார்த்தாலும் அடிமாட்டு விலைக்கு வளைத்துப் போடுவதையே வாடிக்கையாக கொண்ட ஜெயலலிதாவும், அவரின் அடிமையான காவல்துறையுமா தாங்கள் தங்கிய விடுதிக்கான வாடகையை செலுத்தப் போகிறார்கள் என்ற ஐயம் அங்கு வாழும் மக்களுக்கு ஏற்பட்டது. ஆனாலும், இந்த ஐயத்திற்கு விடை கேட்காமல் விடுதிக்கு சென்றால் வாடகை மட்டும் தான் செலவு... அதற்கு விடை தேட முயன்றால் மருத்துவமனைக்கும் செலவழிக்க வேண்டுமே? என்று அஞ்சிய அப்பகுதி மக்கள் வீடுகளை பூட்டிவிட்டு தங்களின் உறவினர் வீடுகள், நண்பர்கள் வீடுகள், விடுதிகள் என தங்குவதற்கு இடம் தேடி ஓடினார்கள்.

மாணவிகளின் பணி

திருமண நிகழ்ச்சியைக் காரணம் காட்டி கல்லூரி மாணவிகளும் பாடாய்படுத்தப்பட்டனர். அதுகுறித்து  அப்போது வெளியான 10.09.1995 தேதியிட்ட விகடன் இதழில் விரிவாக செய்தி வெளியிடப்பட்டிருந்தது.  ‘‘வி.ஐ.பி.க்கள் உட்காரும் இடம் என தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதியில் இடைஞ்சலாக இருந்ததால் கிட்டத்தட்ட நாற்பது மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டன! தனது வளர்ப்பு மகன் திருமணத்துக்கு வரும் வெளிமாநில வி.ஐ.பி.க்கள் எந்த சிரமும் இன்றி, குழப்பம் இன்றித் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் சென்று அமர வேண்டும் என்பது முதல்வரின் விருப்பம்! இந்தப் பிரச்னையை அழகாகத் தீர்த்து வைக்க முன்வந்தது கல்வித் துறை! தமிழகத்தின் முக்கியமான சில கல்லூரிகளுக்கு அவசரச் செய்தி சென்றது! ஒவ்வொரு கல்லூரியும் தங்களிடம் பயிலும் மிக அழகான பத்து மாணவிகளைத் தேர்ந்தெடுத்து சென்னை முன்கூட்டி அனுப்புகின்றன! மணமகன் வீட்டுச் செலவிலேயே விலை உயர்ந்த பட்டுச் சேலை ஜாக்கெட் தைத்து அளிக்கிறார்கள்! இந்த மாணவிகள்தான் வரவேற்பு கமிட்டி! புன்னகைத்த முகத்துடன் வி.ஐ.பி-க்களை வரவேற்று அழைத்துச் சென்று அவரவர் இடங்களில் அமர்த்த வேண்டும்! திருமணம் முடிந்த பிறகு தலைக்குப் பத்தாயிரம் ரூபாய் இந்த மாணவிகளுக்கு அளிக்கப்படும் என்றும் கல்வித்துறை அதிகாரிகள் சொல்கிறார்கள்! ஆறு மற்றும் ஏழாம் தேதிகளில் சென்னை நகரின் பியூட்டி பார்லர்கள் (அழகுநிலையங்கள்) பெரும்பாலும் புக்’ செய்யப்பட்டுவிட்டன. சசிகலா குடும்பத்துப் பெண்களின் விசேஷ அலங்காரத்துக்காக! தனது திருமண நிகழ்ச்சி பற்றி அநாவசியமான விமரிசனங்கள் பத்திரிகைகளில் வருவதை வளர்ப்பு மகன் சுதாகரன் விரும்பவில்லையாம். இதனால் திருமணத்துக்கு நிருபர்கள் வர அனுமதியில்லை! பத்திரிகை புகைப்படக்காரர்களுக்கு நிச்சயம் அனுமதியில்லை!’’ என்று ஜுனியர் விகடன் இதழில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

மாப்பிள்ளை ஊர்வலம்

திருமண நாளுக்கு முந்தைய நாள் மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தில் தான் ஜெயலலிதாவும் அவரது உடன்பிறவா சகோதரி சசிகலாவும் நடமாடும் நகைக்கடைகளாக காட்சி அளித்தனர். அப்போது தமிழக காவல்துறை தலைமை இயக்குனராக இருந்த தேவாரம், தமது நிலையிலிருந்து வெகுதூரம் கீழே இறங்கி சாதாரண காவலரைப் போன்று ஊர்வலத்தில் பாதுகாப்புக்காக வந்தார். ‘‘அடையாறு சிக்னல் அருகில் உள்ள சுந்தரவிநாயகர் கோயிலில் இருந்து மாப்பிள்ளை ஊர்வலம்! மாப்பிள்ளைக்காக அலங்கார சாரட் வண்டி காத்திருக்க, மக்கள் கூட்டமோ ‘மணமகனை’ எதிர்பார்த்து நிற்க... சரியாக 6.30-க்கு வந்தார் சுதாகரன்! அந்தக் கால இளவரசர் கெட்-அப்பில் சிரிப்பு கொப்பளிக்க சுதாகரன் நிற்க... சுற்றிலும் குவிந்திருந்த அமைச்சர்களோ ‘ஏவலர்கள்’ போல அவரையே மொய்த்துக் கிடந்தனர். சில நிமிடங்களுக்குள் வெள்ளை காரில் வந்திறங்கிய ஜெயலலிதா, குத்துமதிப்பாக ஒரு கும்பிடு போட்டு விட்டு வளர்ப்பு மகனைப் பார்த்து வாஞ்சையோடு சிரித்தார்!

ஊர்வலத்தில் ஜெயலலிதா!

மாலை 6.20-க்குத் தொடங்கியது மாப்பிள்ளை ஊர்வலம். சந்தனமரத்தால் இழைத்துத் தயாரிக்கப்பட்ட ‘சாரட்’ வண்டி என்று முதல்வர் தரப்பில் இருந்தே பெருமையுடன் செய்திகள் அளிக்கப்பட்டிருந்தன! ஆனால், அந்தச் சந்தன அழகை ரசிக்க முடியாதபடி சிவப்புநிற ‘வெல்வெட்’ துணியால் மறைக்கப்பட்டிருந்தது சாரட்! சட்டம் - ஒழுங்கு காப்பது தவிர, கரகாட்டம், ஒயிலாட்டத்துக்கூட இதற்கென ஸ்பெஷல் பயிற்சி பெற்ற போலீஸ் டீம் பயன்படுத்தப்பட்டது! கலைக்குழுக்கள் ஆட்டத்தோடு முன்னே செல்ல... அடுத்ததாக பாண்டு வாத்தியக்குழு பாடி கலக்க... தொடர்ந்து சிறப்புப் பாதுகாப்புப்படை அணிவகுத்தது! அதன் பின்னே பார்த்தால் அதிசயம்... ஆச்சரியம்! இதுவரை இல்லாத வகையில் கிட்டத்தட்ட கும்பலோடு கும்பலாக ‘அம்மா’ நடந்து வந்துகொண்டிருந்தார்! அவரை ஒட்டியபடியே ‘நடமாடும் ஜுவல்லரியாக’ உடல் முழுதும் நகை மறைக்க தோழி சசிகலா கம்பீரமாக நடந்துவர... அவரது உறவுக்காரப் பெண்கள் அதைவிட சற்றே குறைந்த நகைகளுடன் சிரிப்பும் சந்தோஷமுமாக நடைபோட்டனர்.

இருபத்தைந்து நிமிடம் நடந்து சாதனைபடைத்த நிலையில், ஜெயலலிதா முகத்தில் களைப்பு பெருகியது. தடித்த வைர வளையல் மாட்டிய தனது வலது கையால் முகத்தை லேசாகத் துடைத்தபடி அவர் திரும்பிப் பார்க்க... கூடவே ஊர்ந்து வந்த அவரது கார் கதவு திறந்தது. ஏறிக்கொண்டார்! அடையாறு பாலத்தைக் கடந்து அமைச்சர்கள் இல்லத்துக்கு அருகே போடப்பட்டிருந்த ‘கோட்டை செட்டிங்கை’ ஊர்வலம் நெருங்கியபோது, முதல்வரின் கார் நின்றது. மீண்டும் ‘வாக்’ செய்ய ஆரம்பித்து விட்டார்! இசைக்கல்லூரி அருகே மதில்மேல் உட்கார்ந்திருந்த அழுக்கு உடை அணிந்த இளைஞர் ஒருவர், அம்மாவைக் கிட்டத்தில் பார்த்தவுடன் அவரை நோக்கி அப்படியே ஓடிவர... சுதாரித்த போலீஸ் பாய்ந்து ஒரே அமுக்காய் கொண்டுபோனது! மீண்டும் காரில் முதல்வர்! நல்லவேளையாக, மாப்பிள்ளை ஊர்வலம் மண்டபம் போய்ச் சேர்ந்த பிறகு சொல்லி வைத்ததுபோல இருபது நிமிடத்துக்கு ‘சோ’வெனப் பெய்தது மழை! திடுக்கிட்ட தொண்டர்கள் ஓடி ஒளிய இடம் பார்ப்பதற்குள், அவர்களை முற்றிலுமாக நனைத்து முடித்தது மழை! உள்ளே மணவீட்டார் நலுங்கு சம்பிரதாயங்களை நடத்திவிட்டு சாப்பிடத் துவங்கியபோது, வெளியே கட்சிக்காரர்கள் பலர் குளிரில் வெடவெடத்துக்கொண்டிருந்தனர்’’ என்று திருமணத்திற்கு முதல் நாள் நிகழ்வை படம்பிடித்துக் காட்டியிருந்தது ஜூனியர் விகடன் வார இதழ்.

பிரதமர் புறக்கணிப்பு

திருமணத்திற்கு பிரதமர் நரசிம்மராவ், குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மா ஆகியோர் இவ்விழாவில் கண்டிப்பாக பங்கேற்க வேண்டும் என்று ஜெயலலிதா எதிர்பார்த்தார். ஆனால், திருமணம் என்ற பெயரில் நடந்த கூத்துக்களைப் பற்றிக் கேள்விப்பட்ட அவர்கள் திருமணத்தை புறக்கணித்து விட்டனர்.  விழாவிற்கு வந்த தலைவர்களுக்கே மரியாதை இல்லாத போது தொண்டர்களுக்கு எங்கே மரியாதை கிடைத்து விடப்போகிறது. ஆனாலும், தலைமையின் வளர்ப்பு மகன் திருமணத்தை பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் வந்தவர்களுக்கு திருமணக் கூடத்திற்குள் நுழைவதற்கு கூட அனுமதி இல்லை.  எனினும் தொண்டர்களில் ஒரு பகுதியினருக்கு உணவு கிடைத்தது. பலருக்கு அதுவும் கிடைக்கவில்லை.

திருமணத்திற்கு முன்பாக திருமணச் செலவுகள் என்ற பெயரில் வசூல் வேட்டை நடைபெற்றது. அதுபோதாது என்று திருமணத்தன்று அன்பளிப்பு என்ற பெயரில் கட்டாய வசூல் நடைபெற்றது. இது குறித்து ஊடகங்களில் வெளியான செய்தி ஒன்றில்,‘‘இத்தனை திருமண ஆர்ப்பாட்டங்களுக்கும் இடையில் மிகுந்த கவலையுடன் இருப்பவர்கள் மூன்று அமைச்சர்கள்! கண்ணப்பன், எஸ்.டி.எஸ் மற்றும் செங்கோட்டையன் ஆகிய மூவர்தான் இவர்கள்! 

அன்பளிப்புக் கொள்ளை

‘அன்பளிப்புகளைத் தவிர்க்கவும்’ என்று திருமண அழைப்பிதழில் அச்சிட்டிருந்தாலும் அதற்கு நேர் எதிரான ‘பாலிஸி’தான் கடைப்பிடிக்கப்படுகிறது. திருமணத்துக்குத் தேதி குறிக்கப்பட்ட தினத்திலிருந்தே பணமாகவும், பொருளாகவும் வசூல் தொடங்கிவிட்டது அனைவரும் அறிந்த சேதி!  ஆனால், திருமணத்தன்று வருகிற கட்சி முக்கியஸ்தர்களிடமும் தொழிலதிபர்களிடமும் கண்டிப்புடன் திருமணப் பரிசுகளை வாங்க வேண்டியது மேற்சொன்ன மூன்று அமைச்சர்களின் பணிதான்..!

பரிசுப் பொருட்கள் மற்றும் செக், டிராஃப்ட், சூட்கேஸ் எதுவானாலும் திருமண வளாகத்துக்குக் கொண்டு வரக் கூடாது என்பது முன்கூட்டியே சொல்லப்பட்டுவிட்டது! அதை இந்த மூன்று அமைச்சர்களின் வீடுகளுக்கே கொண்டு சென்று கொடுத்துவிட வேண்டும்..! லட்சம், கோடி எல்லாம் சாதாரணமாக ‘டீல்’ செய்யும் இந்த அமைச்சர்களே மிரண்டுபோயிருக்கிறார்களாம்.  பரிசுப் பொருட்களைப் பெற்று, சரியாக கணக்கு சொல்லி அவற்றைப் பத்திரமாக ஒப்படைக்கும்வரை இவர்களுக்கு நிம்மதி கிடையாது! பல கோடி செலவு செய்து நடக்கும் இந்தத் திருமணத்துக்கு என்னென்ன பரிசுப் பொருட்கள் வரப்போகிறது என்று மத்திய அரசு அதிகாரிகளும் தீவிரமாகக் கண்காணித்துக் கொண்டிருப்பதுதான் அமைச்சர்களின் கவலைக்கு முக்கிய காரணம்’’

வளர்ப்பு மகன் என்ற பெயரில் நடத்தப்பட்டக் கூத்துக்கள் மக்களை முகம் சுழிக்க வைத்தது. அதன் விளைவு அடுத்த சில மாதங்களில் தெரிந்தது.

No comments:

Post a Comment