Friday, 21 April 2017

கதை கேளு... கதை கேளு கழகத்தின் கதை கேளு! காலமானார் ஜெயலலிதா! - மருத்துவர். இராமதாஸ்

கதை கேளு... கதை கேளு கழகத்தின் கதை கேளு!

காலமானார் ஜெயலலிதா!
     - மருத்துவர். இராமதாஸ்

அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதாவின் உடல்நிலை தேறிவிட்டது என்று தமிழகத்தை நம்பவைக்க அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தது.  குறிப்பாக அப்பல்லோ மருத்துவமனை குழுமத்தின் தலைவரான பிரதாப் ரெட்டி இதற்காக குறிப்பிட்ட இடைவெளியில் பத்திரிகையாளர்களை தொடர்ந்து சந்தித்து வந்தார்.

நவம்பர் 3-ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய  பிரதாப் ரெட்டி, முதலமைச்சர்  ஜெயலலிதா அவரைச்  சுற்றி நடப்பவை குறித்து அறிந்திருப்பதாகவும்,அவரைச் சுற்றி நடப்பது குறித்து தெளிவான புரிதலோடு இருப்பதாகவும் கூறினார்.

விரும்பும்போது வீடு திரும்புவார்!
அதைத்தொடர்ந்து ஜெயலலிதா தனி அறைக்கு மாற்றப்பட்ட பின்னர் நவம்பர் 19-ஆம் தேதி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின்னர்  செய்தியாளர்களிடம் பேசிய அவர்,செயற்கை சுவாசக் கருவி உதவியின்றி முதலமைச்சர் ஜெயலலிதா சுவாசிப்பதாகவும், விரைவில் குணமாகி, விரும்பும்போது அவர் வீடு திரும்புவார் என்றும் கூறினார். தொடர்ந்து நவம்பர் 25-ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசும்போது  ஜெயலலிதா கிட்டத்தட்ட முழுமையாக குணமடைந்து விட்டார் என்று பிரதாப் ரெட்டி கூறினார்.‘‘முதல்வர் ஜெயலலிதா 90 சதவீதம் சுயமாக சுவாசிக்கிறார்; கழுத்தில் உள்ள துளையில் பொருத்தப்பட்டுள்ள ஒலிபெருக்கி மூலம் சிறிது நேரம் முதல்வர் ஜெயலலிதா பேசுகிறார்; அவர் விரும்பும்போது வீடு திரும்புவார்’’ என்று அவர் தெரிவித்தார்.

வழக்கமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளி எப்போது வீடு திரும்புவார் என்பதை   மருத்துவமனை நிர்வாகம் அல்லது மருத்துவர் தான் தெரிவிப்பார். ஆனால், ஜெயலலிதா விஷயத்தில்  அவர் எப்போது வீடு திரும்புவார் என்பதை அவரே முடிவு செய்வார் என்று அப்பல்லோ தலைவர் பிரதாப் ரெட்டி கூறியது கேலிக்கும், கிண்டலுக்கும் உள்ளானது. ஆனாலும், ஜெயலலிதா உடல்நலம் பெறத் தொடங்கி விட்டார் என்று தமிழ்நாட்டு மக்கள் உண்மையாகவே நினைக்கத் தொடங்கினார்கள்.

கிட்டத்தட்ட ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்த  செய்திகளை மறந்து, மோடி அரசு அறிவித்த பணமதிப்பிழத்தல் நடவடிக்கையால் பணத்திற்கு ஏற்பட்ட தட்டுப்பாட்டை சமாளிக்க ஏ.டி.எம். வாசல்களில்  மக்கள் காத்துக்கிடந்த  நேரத்தில் தான், திசம்பர் 4-ஆம் தேதி இரவு 9 மணி வாக்கில் பரபரப்பான அந்த செய்தி வெளியானது. அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா உடல்நலம் தேறி வந்த நிலையில் திசம்பர் 4-ஆம் தேதி மாலை 4.50 மணிக்கு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும், அவருக்கு எக்மோ கருவி மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அப்பல்லோ மருத்துவமனை  செய்தி வெளியிட்டது.

மறைந்தார் ஜெயலலிதா!

ஜெயலலிதா உடல்நலம் பெற்று இல்லம் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக வெளியான செய்தி தமிழகம் முழுவதும் உள்ள மக்களை சோகத்தில் ஆழ்த்தியது. ஜெயலலிதா உடல்நலம் பெற வேண்டும் என்ற எனது விருப்பத்தைத் தெரிவித்தேன். தமிழகம் முழுவதும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. ஆனாலும் பயனில்லை. திசம்பர் 5-ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு ஜெயலலிதா உயிரிழந்ததாக முறைப்படி அறிவிக்கப்பட்டது. தமிழகமே சோகத்தில் ஆழ்ந்தது. இரவோடு இரவாக ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்றது.

திசம்பர் 6-ஆம் தேதி சென்னை இராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு நான் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினேன். பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ், முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே. மூர்த்தி உள்ளிட்டோரும் என்னுடன் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், அண்டை மாநில முதலமைச்சர்கள் என ஏராளமான தலைவர்கள் ஜெயலலிதாவுக்கு மரியாதை செலுத்தினர். அன்று மாலை சென்னை மெரினா கடற்கரையில் எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் ஜெயலலிதாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

மறையாத மர்மங்கள்!

ஜெயலலிதா மறைந்தாலும் அவருக்கு மருத்துவமனையில் மருத்துவம் அளிக்கப்பட்டது முதல் மரணம் வரையிலான மர்மங்கள் மட்டும் மறையவில்லை. ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மங்கள் குறித்து விசாரணை நடத்த ஆணையிட வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடரப்பட்டது. திசம்பர் 29&ஆம் தேதி இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், வி.பார்த்திபன் ஆகியோர் அடங்கிய அமர்வு ‘‘முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் எனக்கு சந்தேகம் உள்ளது. அவர் குணமடைந்து வருகிறார்; உணவு சாப்பிடுகிறார்; நடைபயிற்சி மேற்கொள்கிறார் என்றெல்லாம் செய்திகள் வெளியாயின. ஆனால், திடீரென அவர் மரணம் அடைந்தது எப்படி? அவரை பார்க்க அவரது உறவினர்களை ஏன் அனுமதிக்க வில்லை. ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து முழுமையான தகவல்களை ஏன் வெளியிடவில்லை. ஜெயலலிதாவின் மரணத்திற்கு பிறகாவது அதில் உள்ள மர்மங்கள் வெளிக்கொண்டு வரப்பட வேண்டும்’’ என்று வினா எழுப்பியது.

நான் எழுப்பிய வினாக்கள்!

உயர்நீதிமன்ற நீதிபதிகள் எழுப்பிய வினாவில் நியாயம் இருப்பதை சுட்டிக்காட்டிய நான், இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்று வலியுறுத்தினேன். ‘‘கடந்த செப்டம்பர் 22-ஆம் தேதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஜெயலலிதா முழுமையாக குணமடைந்து விட்டதாகவும், அதிதீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து  தனி அறைக்கு மாற்றப்பட்டு விட்டதாகவும் அப்பல்லோ மருத்துவமனையின்  நிறுவனர் பிரதாப் ரெட்டி நவம்பர் மாதம் அறிவித்தார். அடுத்த சில நாட்களில் ஜெயலலிதா முழுமையாக குணமடைந்து விட்டதாகவும், அவர் விரும்பும் போது வீடு திரும்பலாம் என்றும் அவர் கூறியிருந்தார்.
அப்படியானால், ஜெயலலிதா குணடைந்திருந்த காலத்தில் மருத்துவர்களுடனோ, மற்றவர்களுடனோ உரையாடும் காட்சிகளையோ, மருத்துவமனையில் ஜெயலலிதா உயிருடன் இருக்கும் காட்சிகளையோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டிருக்கலாம். ஆனால், அப்பல்லோ நிர்வாகம் அதை செய்யாதது ஏன்? அதுமட்டுமின்றி, சில வாரங்கள் மருத்துவமனையில் இருந்தாலே நோயாளியின் உடல் மெலிந்து எடை குறைந்து விடும். ஆனால், ஜெயலலிதா 75 நாட்கள் மருத்துவமனையில் இருந்த போதிலும் அவரது உடல் மெலியவோ, எடை குறையவோ இல்லை என்பது பல்வேறு ஐயங்களை ஏற்படுத்துகிறது.

சி.பி.ஐ. விசாரணை தேவை!

ஜெயலலிதா தனி மனிதராக இருந்தாலோ, அதிமுகவின் பொதுச்செயலாளராக மட்டும் இருந்திருந்தாலோ அவரது மரணத்தில் உள்ள மர்மம் குறித்து மாற்றுக் கட்சியைச் சேர்ந்த நான் கேள்வி கேட்க வேண்டிய தேவையில்லை. ஆனால், ஜெயலலிதா தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த நேரத்தில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மர்மமான சூழலில் மரணமடைந்திருக்கிறார். அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து அறியும் உரிமை தமிழக மக்களுக்கு உண்டு. எனவே, இதுதொடர்பாக உயர்நீதிமன்றம் எழுப்பியுள்ள வினாக்களுக்கு தமிழக அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும். இவை ஒருபுறமிருக்க, ஜெயலலிதா இறப்பில் உள்ள மர்மங்களை வெளிக்கொண்டு வர சி.பி.ஐ. விசாரணைக்கு ஆணையிட வேண்டும்’’ என்று திசம்பர் 29-ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் நான் வலியுறுத்தியிருந்தேன்.

ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததால் சசிகலா தரப்பு கவலை அடைந்தது. இதை சமாளிக்கும் வகையில் 2017-ஆம் ஆண்டு பிப்ரவரி 6-ஆம் தேதி  இங்கிலாந்து மருத்துவர் ரிச்சர்ட் பேல், அப்பல்லோ மருத்துவர் பாபு ஆப்ரஹாம், அரசு மருத்துவர் பாலாஜி ஆகியோரைக் கொண்டு செய்தியாளர் சந்திப்புக்கு தமிழக அரசு ஏற்பாடு செய்திருந்தது. அப்போது முதலமைச்சராக இருந்தவர் ஓ.பன்னீர்செல்வம் தான் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த செய்தியாளர் சந்திப்பில் லண்டன்  மருத்துவர்களும், உள்ளூர் மருத்துவர்களும் அளித்த விளக்கங்கள் ஐயத்தை அதிகரித்ததே தவிர  தீர்க்கவில்லை.

பன்னீர்செல்வத்தின் புகார்!

இந்த செய்தியாளர் சந்திப்பு நடைபெற்ற நாள் அன்று சசிகலா அணியில் இருந்த ஓ.பன்னீர்செல்வம், அடுத்த நாள் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் தியானம் செய்து தனி அணி தொடங்கினார். அதன்பின்  ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க பணியில் உள்ள உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்று பன்னீர்செல்வம் அறிவித்தார். அதன்பின் ஒரு வாரத்திற்கும் மேல் அவர் முதலமைச்சராக இருந்த போதிலும் தனது அறிவிப்புக்கு செயல்வடிவம் கொடுக்கவில்லை.

ஜெயலலிதாவின் மரணம் குறித்து தொடர்ந்து பல்வேறு ஐயங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. ஆனால், அந்த ஐயங்களுக்குத் தான் இன்று வரை விடை கிடைக்கவில்லை. எல்லா மர்மங்களுக்கும் என்றாவது ஒரு நாள் விடை கிடைக்கும் என்பதற்கிணங்க ஜெயலலிதா மரணம் குறித்த மர்மமும் என்றாவது ஒரு நாள் விலகும் என்பது தான் அனைவரின் நம்பிக்கை.

பள்ளி மேலாண்மை மற்றும் வளர்ச்சி நிதி ஊழல் குறித்து விசாரணை வேண்டும்! ----அறிக்கை---- -மருத்துவர். இராமதாஸ

பள்ளி மேலாண்மை மற்றும் வளர்ச்சி நிதி
ஊழல் குறித்து விசாரணை வேண்டும்!
                         ----அறிக்கை----
      -மருத்துவர். இராமதாஸ்

அறம் மற்றும் நன்னெறியை கற்றுத்தர வேண்டிய பள்ளிக்கூடங்கள் ஊழலின் உறைவிடமாக மாறி வருவது வேதனையளிக்கிறது. பள்ளிகளின் வளர்ச்சிக்காக ஒதுக்கப்படும் நிதியை ஆளுங்கட்சியினரும், அதிகாரிகளும் கூட்டணி அமைத்து கொள்ளையடிப்பது பற்றி அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

மத்திய அரசு நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்கத்தின் மூலம் மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் உயர்நிலைப்பள்ளிகளில் கல்வி வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள வசதியாக ஒவ்வொரு பள்ளிக்கும் ஆண்டுக்கு ரூ.50,000 ஒதுக்கீடு செய்யப்படுகிறது. பள்ளிக்குத் தேவையான கற்றல் உபகரணங்களை வாங்கவும், கல்வி வளர்ச்சி சார்ந்த பிற பணிகளுக்காகவும் இதை செலவிடலாம். எந்தெந்த பணிகளுக்காக இந்நிதியை செலவிடலாம் என்பதை தீர்மானிப்பதற்காக  பள்ளி மேலாண்மை மற்றும் வளர்ச்சிக்குழு ஒவ்வொரு பள்ளியிலும் அமைக்கப்பட்டிருக்கிறது. பள்ளியின் தலைமை ஆசிரியர் தலைமையிலான இக்குழுவில் உதவித் தலைமை ஆசிரியர், பெற்றோர்-ஆசிரியர் சங்கப் பிரதிநிதி, உள்ளாட்சி உறுப்பினர், தொண்டு நிறுவன பிரதிநிதி என 5 பேர் உறுப்பினர்களாக இருப்பர். இவர்களின் ஒப்புதல் பெற்றுத் தான் நிதி செலவிட முடியும் என விதிகளில் கூறப்பட்டுள்ளது.

ஆனால், இந்த நிதி கட்டுப்பாடற்ற முறையில் அதிகாரிகளால் கொள்ளையடிக்கப்படுகிறது. ஒவ்வொரு கல்வியாண்டின் தொடக்கத்திலும் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிக்கு நெருக்கமான நிறுவனத்தில் இருந்து அனைத்துப் பள்ளிகளுக்கும் விஞ்ஞானப் பொருட்கள் (Scientific Things) என்ற பெயரில் ஒரு பெட்டி அனுப்பப்படும். அந்தப் பெட்டியில் எதற்கும் பயன்படாத பிளாஸ்டிக் பொருட்கள் மட்டுமே இருக்கும். அவற்றின் மொத்த மதிப்பு  சில நூறு ரூபாய்களைத் தாண்டாது. ஆனால், அவை உலகத்தரம் வாய்ந்தவை என்றும், மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு தவிர்க்க முடியாத அப்பொருட்களின் மதிப்பு ரூ.25,000 என்றும் கூறி முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்திலிருந்து அதிகாரப்பூர்வமற்ற  முறையில் அனைத்துப் பள்ளிகளுக்கும் தகவல் அனுப்பப்படும். அதையேற்று அனைத்து பள்ளிகளிலும்  உள்ள பள்ளி மேலாண்மை மற்றும் வளர்ச்சிக்குழுவின் நிதியிலிருந்து விஞ்ஞான பொருட்களை வழங்கிய நிறுவனத்திற்கு தலா ரூ.25,000 வழங்கப்படும். அந்நிறுவனம் பொருட்களுக்கான விலை மற்றும் கமிஷனாக சில ஆயிரங்களை எடுத்துக் கொண்டு மீதத்தை முதன்மைக் கல்வி அலுவலரிடம் ஒப்படைத்து விடும்.

அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்கம் கடந்த 2009-ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது தொடங்கி 8 ஆண்டுகளாக இந்த ஊழல் நடைபெற்று வருகிறது. விஞ்ஞான பொருட்கள்  என்ற பெயரில் வாங்கப்படும் பொருட்கள் மாணவர்களுக்கு எந்த வகையிலும் பயன்படாது. ரூ.1000 கூட மதிப்பில்லாத அந்தப் பொருட்கள் ஊழல் செய்வதற்காகவே ரூ.25000க்கு கொள்முதல் செய்யப் படுகின்றன. இவ்வாறு ஊழல் செய்யப்படும் பணத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வரை பங்கு செல்வதாக அத்துறை அதிகாரிகளே ஒப்புக்கொள்கின்றனர். சில நேர்மையான தலைமை ஆசிரியர்களும், பள்ளி மேலாண்மை மற்றும் வளர்ச்சிக்குழு உறுப்பினர்களும் இந்த ஊழலுக்கு எதிர்ப்பு தெரிவித்தால் பணியிட மாற்றம், விசாரணை போன்ற வழிகளில் கடுமையான பழிவாங்கலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.

தமிழகத்தில் இன்றைய நிலையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளின் எண்ணிக்கை சுமார் 8000 ஆகும். ஒரு பள்ளிக்கு ரூ.25,000 என வைத்துக் கொண்டால் 8000 பள்ளிகளிலும் சேர்த்து ஆண்டுக்கு ரூ.20 கோடி அளவுக்கு ஊழல் செய்யப்படுகிறது. பள்ளிகளில் கல்வி வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் தான் பள்ளி மேலாண்மை மற்றும் வளர்ச்சிக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு அவற்றின் மூலம் ஒவ்வொரு பள்ளிக்கும் ஆண்டுக்கு ரூ.50,000 நிதி வழங்கப்படுகிறது. இதைக் கொண்டு அரசு பள்ளிகளை ஆக்கப்பூர்வமான வழிகளில் மேம்படுத்த முடியும். ஆனால், இதிலும் கூட ஊழல் செய்து பணம் பார்க்க அரசியல்வாதிகளும்  அதிகாரிகளும் முயல்வது மிகக்கடுமையாக கண்டிக்கத்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்.

தமிழகத்தின் பள்ளிக்கல்வித்துறை செயலாளராக அண்மையில் பொறுப்பேற்றுள்ள இ.ஆ.ப. அதிகாரி உதயச்சந்திரன் தமிழகத்தின் நேர்மையான அதிகாரிகளில் ஒருவர். ஊழல் நிறைந்த தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை சீரமைத்ததில் இவரது பங்கு குறிப்பிடத்தக்கது. பள்ளிக்கல்வித்துறை செயலாளராக பதவியேற்ற பின்னர் கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின்படியான 25% மாணவர் சேர்க்கையை ஆன்லைன் முறையில் நடத்த நடவடிக்கை மேற்கொண்டிருக்கிறார். இவை பாராட்டத்தக்கவை ஆகும். அதேபோல், பள்ளி மேலாண்மை மற்றும் வளர்ச்சிக்குழு நிதியில் நடைபெறும் ஊழலைக் களையவும், இதுவரை நடந்த ஊழலுக்கு காரணமானவர்களை தண்டிக்கவும் அவர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கதை கேளு... கதை கேளு கழகத்தின் கதை கேளு! மருத்துவமனையில் ஜெயலலிதா! -மருத்துவர். இராமதாஸ்

கதை கேளு... கதை கேளு கழகத்தின் கதை கேளு!

மருத்துவமனையில் ஜெயலலிதா!
   -மருத்துவர். இராமதாஸ்

பணபலத்தையும், படைபலத்தையும் பயன்படுத்தி 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் ஜெயலலிதா வெற்றி பெற்று விட்டாலும் கூட அவரது உடல்நிலையும், அரசியல் பயணமும் சுமூகமாக இல்லை. ஒருபுறம் அவரது உடல்நிலை மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டிருந்தது. மற்றொருபுறம் சொத்துக்குவிப்பு வழக்கு என்ற கத்தி அவரது தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருந்தது. இவை தவிர அரசியல் ரீதியாகவும்  ஜெயலலிதாவுக்கு சில நெருக்கடிகள் இருந்து வந்தன. தமக்கு இத்தகைய நிலை ஏற்பட்டதற்கு சசிகலாவும், அவரது குடும்பத்தினரும் தான் காரணம் என்று ஜெயலலிதா கருதினார். இதுதொடர்பாக ஜெயலலிதாவுக்கும், சசிகலாவுக்கும் அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டு வந்தன.

நள்ளிரவில் அனுமதி... காரணம் என்ன?

இத்தகைய சூழலில் கடந்த செப்டம்பர் 22-ஆம் தேதி நள்ளிரவு 11.30 மணிக்கு முதலமைச்சர் ஜெயலலிதா அவசர ஊர்தியில் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மயங்கிய நிலையில் தான் அவர் அனுமதிக்கப்பட்டார். ஆனா, ஜெயலலிதாவின் உடல்நிலை நன்றாக இருப்பதாகவும்,  காய்ச்சல், நீர்ச்சத்துக் குறைவு காரணமாகவே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. அதேநேரத்தில் போய்ஸ்தோட்டத்தில் ஜெயலலிதாவுக்கும், சசிகலாவுக்கும் கடுமையான மோதல் ஏற்பட்டது. அந்த மோதலின் போது ஜெயலலிதா தவறி விழுந்ததால் தான் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது என்றும் ஒரு செய்தி பரவியது. ஆனால், இதை உறுதி செய்வதற்கு போதிய ஆதாரங்களோ, சாட்சியங்களோ இல்லை.

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கு அடுத்த நாள் அதாவது செப்டம்பர் 24-ஆம் தேதி அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், ஜெயலலிதா உடல்நிலை இயல்புநிலைக்கு  திரும்பிவிட்டதாகவும், வழக்கமான உணவுகளை எடுத்துக் கொள்ளத் தொடங்கி விட்டதாகவும் கூறப் பட்டிருந்தது. அடுத்தடுத்த நாட்களிலும் அதேபோன்ற அறிவிப்புகள் வெளியாகின. ஆனால், முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து தொடர்ந்து வதந்திகள் பரவிக் கொண்டிருந்தன. இதையடுத்து ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க தமிழக அரசு நடவடிக்கை என்று 27.09.2016 அன்று வெளியிட்ட அறிக்கையில் வலியுறுத்தினேன்.

விளக்கம் தேவை!

‘‘தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து நேற்று பிற்பகலில் பரவிய வதந்திகளால் தமிழகத்தின் பல பகுதிகளில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. முதல்வரின் உடல்நிலை குறித்த வதந்திகளால் பல வகைகளில் மக்களுக்கு பாதிப்புகள் ஏற்பட்டன. சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு ஊர்களுக்கும், பல்வேறு ஊர்களில் இருந்து சென்னைக்கும் நேற்றிரவு பயணம் செய்ய இருந்தவர்களில் பெரும்பான்மையினர் கடைசி நிமிடத்தில் பயணத்தை ரத்து செய்து விட்டனர். கடைகள் மூடப்பட்டதால் வணிகம் கடுமையாக பாதிக்கப்பட்டது. காவல்துறை தலையிட்டு, வதந்திகளை நம்ப வேண்டாம் என வேண்டுகோள் விடுத்த பிறகு தான் பல இடங்களில் ஓரளவு இயல்பு நிலை திரும்பியுள்ளது. இதில் கொடுமை என்னவென்றால், ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றி உண்மை நிலையை மக்களுக்கு விளக்க வேண்டிய அதிமுகவினரே பல இடங்களில் வதந்திக்கு இரையாகி கடைகளை அடைக்குமாறு மிரட்டியதும், இயல்பு வாழ்க்கையை சீர்குலைத்ததும் தான்.
தீப ஒளி திருநாளுக்கு இன்னும் ஒரு மாதம் மட்டுமே இருக்கும் நிலையில், இத்தகைய வதந்திகளும், பதற்றமும் தொடர்ந்தால் அது வணிகத்தையும், மக்களின் இயல்பு வாழ்க்கையையும் மிகக்கடுமையாக பாதிக்கும். இதைக் கருத்தில் கொண்டு, முதலமைச்சரின் உடல்நிலை குறித்து வதந்திகள் பரப்பப்படுவதை தடுக்க வேண்டிய பெருங்கடமை தமிழக அரசுக்கும், முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கும் இருக்கிறது.  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை தேறி விட்டதாகவும், அவர் வழக்கமான உணவுகளை உட்கொண்டு வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேல் சிகிச்சைக்காக ஜெயலலிதா வெளிநாடு செல்லும் திட்டம் இல்லை; அதற்கான தேவையும் இல்லை என்றும் மருத்துவர் கூறியுள்ளனர். இந்த விளக்கம் ஏற்கத்தக்கதாகும்.

வீடியோ பதிவின் மூலம் விளக்கம்

நிர்வாகப்பணிகளின் அடிப்படையில் பார்த்தால், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதற்கு அடுத்த நாளே தகவல் தொழில்நுட்பத் துறை, இந்து சமய அறநிலையத்துறை சார்ந்த புதிய திட்டங்களை முதலமைச்சர் அறிவித்துள்ளார். உடல் நலம் தேற வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடியும்,  ஆளுனர் வித்யாசாகர் ராவும் எழுதிய கடிதங்களுக்கு நன்றி தெரிவித்து பதில் கடிதம் எழுதியுள்ளார்.  உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்ட 15 மணி நேரத்தில் மாநகராட்சி உறுப்பினர் பதவிக்கு 919 வேட்பாளர்கள், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு 655 பேர் என 1574 வேட்பாளர்களை  அதிமுக பொதுச்செயலாளர் என்ற முறையில் தேர்வு செய்து அறிவிக்கிறார். அரியலூர் மாவட்டத்தில் நடந்த சாலை விபத்தில் 14 பேர் இறந்ததற்கு இரங்கல் தெரிவித்ததுடன், அவர்களின் குடும்பத்திற்கு நிதி உதவியையும் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இவற்றை வைத்துப் பார்க்கும்போது  முதலமைச்சர் ஜெயலலிதா முழு உடல் நலம் பெற்று விட்டார் என்பதுடன், தமிழக அரசு மற்றும் அதிமுக கட்சிப் பணிகளையும் கவனிக்கத் தொடங்கி விட்டார் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

ஆனால், இதை மக்களுக்கு புரியவைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்காதது தான் முதல்வரின் உடல்நிலை குறித்து விஷமிகள் வதந்தி பரப்புவதற்கு வாய்ப்பாக அமைகிறது. முதலமைச்சரின் உடல்நிலை குறித்து அவரே வெளிப்படையாக அறிவிப்பதன் மூலம் இத்தகைய வதந்திகளை முளையிலேயே கிள்ளி எறிய முடியும்.முதலமைச்சர் ஜெயலலிதாவும் அவரது உடல்நிலை குறித்து காணொலி மூலமாகவோ, வீடியோ பதிவு மூலமாகவோ விளக்கம் அளித்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்’’ என்று அந்த அறிக்கையில் நான் குறிப்பிட்டிருந்தேன். அதன்பின் 3 நாட்கள் கழித்து திமுக தலைவர் கலைஞரும் இதே கருத்தை வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டார். ஆனாலும், ஜெயலலிதாவின் உடல்நிலை தொடர்பாக வெளிப்படையாக எந்த தகவலையும் அப்பல்லோ மருத்துவமனையோ அல்லது தமிழக அரசோ வெளியிடவில்லை. அக்டோபர் 1&ஆம் தேதி தமிழக ஆளுனர் வித்யாசாகர் ராவ் மருத்துவமனைக்கு சென்றார். ஆனால், அவருக்கும் ஜெயலலிதாவை சந்தித்த அனுமதி அளிக்கப்படவில்லை. ஆனால், ஜெயலலிதா மிகவும் நன்றாக இருப்பதாக ஆளுனர் மாளிகை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ரிச்சர்ட் பேல் சிகிச்சை

அதற்கு அடுத்த நாள் ஜெயலலிதாவின் உடல்நிலை நன்றாக தேறி விட்டதாகவும்,  அடுத்த ஒருசில நாட்களில் அவர் வீடு திரும்புவார் என்றும் அதிமுக நிர்வாகிகள் தெரிவித்தனர். ஆனால், இவையெல்லாம் தொண்டர்களை திருப்திப்படுத்துவதற்காக வெளியிடப்பட்ட அறிவிப்புகளாகவே இருந்தன. அதன்பின் அக்டோபர் 6-ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிக்கை தான் ஜெயலலிதாவின் உடல்நிலையை ஓரளவு வெளிப்படுத்துவதாக அமைந்திருந்தது. அதன் விவரம் வருமாறு:

‘‘முதல்வரின் உடல்நிலையை மருத்துவர்கள் குழு தொடர்ந்து கண்காணித்து வருகின்றது. நோய் எதிர்ப்பு மருந்து வழங்குதல் உள்ளிட்ட சிகிச்சைகள் தொடர்ந்து அளிக்கப்படுகிறது. முதல்வரின் உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து மருத்துவ நிபுணர்கள் அப்பல்லோவிற்கு வந்துள்ளனர். முதல்வருக்கு சிகிச்சை அளித்துவரும் மருத்துவர்களூடன் எய்ம்ஸ் மருத்துவர்கள் ஆலோசனை நடத்தினர். பின், எய்ம்ஸ் மருத்துவர்கள் கில்னானி, அஞ்சன் டிரிக்கா, நிதிஷ் நாயக் ஆகியோர் முதல்வருக்கு சிகிச்சை அளித்தனர். மேலும், இங்கிலாந்து மருத்துவ நிபுணர் ரிச்சர்ட் பேல் இன்று மீண்டும் முதல்வருக்கு மருத்துவ பரிசோதனை செய்தார். முதல்வர் மேலும் சில நாட்கள் மருத்துவமனையில் தங்கியிருக்க வேண்டும் என மருத்துவர்கள் கேட்டுக்கொண்டனர். அதன்படி ஜெயலலிதா இன்னும் சில நாட்கள் மருத்துவமனையில் தங்கியிருப்பார்’’ என்று அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்ட மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கைரேகை சர்ச்சை

ஆனாலும், ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்த வதந்திகள் தொடர்ந்த வண்ணம் இருந்தன. இதற்கிடையே தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்கான தேர்தலில்  போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களுக்கான ‘பி’ படிவத்தில் ஜெயலலிதாவின் கையெழுத்துக்கு பதிலாக கைரேகை வைக்கப்பட்டிருந்தது. இது வதந்திகளுக்கு மேலும் இடம் கொடுத்தது. வதந்திகளுக்கு விளக்கமளிக்க வேண்டிய தமிழக அரசு, ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து பேசுபவர்களை வதந்தி பரப்பியதாக கைது செய்தது.

மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட நாளில் இருந்தே அவரது உடல்நிலை தொடர்பாக  வதந்திகள் பரப்பப்பட்டு வந்தன. தமிழக காவல்துறையும் வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை  எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தும் எந்த பயனும் ஏற்படவில்லை. அதைத் தொடர்ந்து வதந்தி பரப்புவதாக 52 பேர் மீது வழக்குப் பதிவு செய்த தமிழக காவல்துறையினர் அவர்களில் 4 பேர் கைது செய்யப்பட்டதாக அறிவித்தனர். அவர்களைத் தொடர்ந்து கோவையில் இரு வங்கி ஊழியர் வதந்தி பரப்பியதாக கைது செய்யப்பட்டனர்.

தனி அறைக்கு மாற்றம்

58 நாள்கள் சிகிச்சைக்குப் பிறகு ஜெயலலிதா உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து, நவம்பர் 19-ஆம் தேதியன்று சிறப்பு வசதிகள் கொண்ட தனி அறைக்கு மாற்றப்பட்டார். இதையடுத்து அதிமுகவினர் மகிழ்ச்சியைக் கொண்டாடும் வகையில் ஆடிப்பாடி இனிப்புகளை பரிமாறிக்கொண்டனர். அடுத்த சில நாட்களில் 3 தொகுதி தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றது. இதற்காக வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில், தமது மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை என்று கூறினார். இதுதொடர்பாக ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில் முதலில் அவரது கையெழுத்து இல்லை. பின்னர் அவரது கையெழுத்துடன் அறிக்கை வெளியானது.

இதனால் ஜெயலலிதாவின் உடல்நிலை உண்மையாகவே தேறி விட்டது போன்ற தோற்றம் உருவானது. தமிழக அரசும், அப்பல்லோ மருத்துவமனையும் திட்டமிட்டு இந்த தோற்றத்தை ஏற்படுத்தின. ஆனால், உண்மை நிலை வேறாக இருந்தது. அது அடுத்த இரு வாரத்தில் அம்பலமானது