கதை கேளு... கதை கேளு கழகத்தின் கதை கேளு!
மருத்துவமனையில் ஜெயலலிதா!
-மருத்துவர். இராமதாஸ்
பணபலத்தையும், படைபலத்தையும் பயன்படுத்தி 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் ஜெயலலிதா வெற்றி பெற்று விட்டாலும் கூட அவரது உடல்நிலையும், அரசியல் பயணமும் சுமூகமாக இல்லை. ஒருபுறம் அவரது உடல்நிலை மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டிருந்தது. மற்றொருபுறம் சொத்துக்குவிப்பு வழக்கு என்ற கத்தி அவரது தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருந்தது. இவை தவிர அரசியல் ரீதியாகவும் ஜெயலலிதாவுக்கு சில நெருக்கடிகள் இருந்து வந்தன. தமக்கு இத்தகைய நிலை ஏற்பட்டதற்கு சசிகலாவும், அவரது குடும்பத்தினரும் தான் காரணம் என்று ஜெயலலிதா கருதினார். இதுதொடர்பாக ஜெயலலிதாவுக்கும், சசிகலாவுக்கும் அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டு வந்தன.
நள்ளிரவில் அனுமதி... காரணம் என்ன?
இத்தகைய சூழலில் கடந்த செப்டம்பர் 22-ஆம் தேதி நள்ளிரவு 11.30 மணிக்கு முதலமைச்சர் ஜெயலலிதா அவசர ஊர்தியில் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மயங்கிய நிலையில் தான் அவர் அனுமதிக்கப்பட்டார். ஆனா, ஜெயலலிதாவின் உடல்நிலை நன்றாக இருப்பதாகவும், காய்ச்சல், நீர்ச்சத்துக் குறைவு காரணமாகவே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. அதேநேரத்தில் போய்ஸ்தோட்டத்தில் ஜெயலலிதாவுக்கும், சசிகலாவுக்கும் கடுமையான மோதல் ஏற்பட்டது. அந்த மோதலின் போது ஜெயலலிதா தவறி விழுந்ததால் தான் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது என்றும் ஒரு செய்தி பரவியது. ஆனால், இதை உறுதி செய்வதற்கு போதிய ஆதாரங்களோ, சாட்சியங்களோ இல்லை.
ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கு அடுத்த நாள் அதாவது செப்டம்பர் 24-ஆம் தேதி அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், ஜெயலலிதா உடல்நிலை இயல்புநிலைக்கு திரும்பிவிட்டதாகவும், வழக்கமான உணவுகளை எடுத்துக் கொள்ளத் தொடங்கி விட்டதாகவும் கூறப் பட்டிருந்தது. அடுத்தடுத்த நாட்களிலும் அதேபோன்ற அறிவிப்புகள் வெளியாகின. ஆனால், முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து தொடர்ந்து வதந்திகள் பரவிக் கொண்டிருந்தன. இதையடுத்து ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க தமிழக அரசு நடவடிக்கை என்று 27.09.2016 அன்று வெளியிட்ட அறிக்கையில் வலியுறுத்தினேன்.
விளக்கம் தேவை!
‘‘தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து நேற்று பிற்பகலில் பரவிய வதந்திகளால் தமிழகத்தின் பல பகுதிகளில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. முதல்வரின் உடல்நிலை குறித்த வதந்திகளால் பல வகைகளில் மக்களுக்கு பாதிப்புகள் ஏற்பட்டன. சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு ஊர்களுக்கும், பல்வேறு ஊர்களில் இருந்து சென்னைக்கும் நேற்றிரவு பயணம் செய்ய இருந்தவர்களில் பெரும்பான்மையினர் கடைசி நிமிடத்தில் பயணத்தை ரத்து செய்து விட்டனர். கடைகள் மூடப்பட்டதால் வணிகம் கடுமையாக பாதிக்கப்பட்டது. காவல்துறை தலையிட்டு, வதந்திகளை நம்ப வேண்டாம் என வேண்டுகோள் விடுத்த பிறகு தான் பல இடங்களில் ஓரளவு இயல்பு நிலை திரும்பியுள்ளது. இதில் கொடுமை என்னவென்றால், ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றி உண்மை நிலையை மக்களுக்கு விளக்க வேண்டிய அதிமுகவினரே பல இடங்களில் வதந்திக்கு இரையாகி கடைகளை அடைக்குமாறு மிரட்டியதும், இயல்பு வாழ்க்கையை சீர்குலைத்ததும் தான்.
தீப ஒளி திருநாளுக்கு இன்னும் ஒரு மாதம் மட்டுமே இருக்கும் நிலையில், இத்தகைய வதந்திகளும், பதற்றமும் தொடர்ந்தால் அது வணிகத்தையும், மக்களின் இயல்பு வாழ்க்கையையும் மிகக்கடுமையாக பாதிக்கும். இதைக் கருத்தில் கொண்டு, முதலமைச்சரின் உடல்நிலை குறித்து வதந்திகள் பரப்பப்படுவதை தடுக்க வேண்டிய பெருங்கடமை தமிழக அரசுக்கும், முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கும் இருக்கிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை தேறி விட்டதாகவும், அவர் வழக்கமான உணவுகளை உட்கொண்டு வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேல் சிகிச்சைக்காக ஜெயலலிதா வெளிநாடு செல்லும் திட்டம் இல்லை; அதற்கான தேவையும் இல்லை என்றும் மருத்துவர் கூறியுள்ளனர். இந்த விளக்கம் ஏற்கத்தக்கதாகும்.
வீடியோ பதிவின் மூலம் விளக்கம்
நிர்வாகப்பணிகளின் அடிப்படையில் பார்த்தால், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதற்கு அடுத்த நாளே தகவல் தொழில்நுட்பத் துறை, இந்து சமய அறநிலையத்துறை சார்ந்த புதிய திட்டங்களை முதலமைச்சர் அறிவித்துள்ளார். உடல் நலம் தேற வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடியும், ஆளுனர் வித்யாசாகர் ராவும் எழுதிய கடிதங்களுக்கு நன்றி தெரிவித்து பதில் கடிதம் எழுதியுள்ளார். உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்ட 15 மணி நேரத்தில் மாநகராட்சி உறுப்பினர் பதவிக்கு 919 வேட்பாளர்கள், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு 655 பேர் என 1574 வேட்பாளர்களை அதிமுக பொதுச்செயலாளர் என்ற முறையில் தேர்வு செய்து அறிவிக்கிறார். அரியலூர் மாவட்டத்தில் நடந்த சாலை விபத்தில் 14 பேர் இறந்ததற்கு இரங்கல் தெரிவித்ததுடன், அவர்களின் குடும்பத்திற்கு நிதி உதவியையும் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இவற்றை வைத்துப் பார்க்கும்போது முதலமைச்சர் ஜெயலலிதா முழு உடல் நலம் பெற்று விட்டார் என்பதுடன், தமிழக அரசு மற்றும் அதிமுக கட்சிப் பணிகளையும் கவனிக்கத் தொடங்கி விட்டார் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.
ஆனால், இதை மக்களுக்கு புரியவைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்காதது தான் முதல்வரின் உடல்நிலை குறித்து விஷமிகள் வதந்தி பரப்புவதற்கு வாய்ப்பாக அமைகிறது. முதலமைச்சரின் உடல்நிலை குறித்து அவரே வெளிப்படையாக அறிவிப்பதன் மூலம் இத்தகைய வதந்திகளை முளையிலேயே கிள்ளி எறிய முடியும்.முதலமைச்சர் ஜெயலலிதாவும் அவரது உடல்நிலை குறித்து காணொலி மூலமாகவோ, வீடியோ பதிவு மூலமாகவோ விளக்கம் அளித்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்’’ என்று அந்த அறிக்கையில் நான் குறிப்பிட்டிருந்தேன். அதன்பின் 3 நாட்கள் கழித்து திமுக தலைவர் கலைஞரும் இதே கருத்தை வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டார். ஆனாலும், ஜெயலலிதாவின் உடல்நிலை தொடர்பாக வெளிப்படையாக எந்த தகவலையும் அப்பல்லோ மருத்துவமனையோ அல்லது தமிழக அரசோ வெளியிடவில்லை. அக்டோபர் 1&ஆம் தேதி தமிழக ஆளுனர் வித்யாசாகர் ராவ் மருத்துவமனைக்கு சென்றார். ஆனால், அவருக்கும் ஜெயலலிதாவை சந்தித்த அனுமதி அளிக்கப்படவில்லை. ஆனால், ஜெயலலிதா மிகவும் நன்றாக இருப்பதாக ஆளுனர் மாளிகை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ரிச்சர்ட் பேல் சிகிச்சை
அதற்கு அடுத்த நாள் ஜெயலலிதாவின் உடல்நிலை நன்றாக தேறி விட்டதாகவும், அடுத்த ஒருசில நாட்களில் அவர் வீடு திரும்புவார் என்றும் அதிமுக நிர்வாகிகள் தெரிவித்தனர். ஆனால், இவையெல்லாம் தொண்டர்களை திருப்திப்படுத்துவதற்காக வெளியிடப்பட்ட அறிவிப்புகளாகவே இருந்தன. அதன்பின் அக்டோபர் 6-ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிக்கை தான் ஜெயலலிதாவின் உடல்நிலையை ஓரளவு வெளிப்படுத்துவதாக அமைந்திருந்தது. அதன் விவரம் வருமாறு:
‘‘முதல்வரின் உடல்நிலையை மருத்துவர்கள் குழு தொடர்ந்து கண்காணித்து வருகின்றது. நோய் எதிர்ப்பு மருந்து வழங்குதல் உள்ளிட்ட சிகிச்சைகள் தொடர்ந்து அளிக்கப்படுகிறது. முதல்வரின் உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து மருத்துவ நிபுணர்கள் அப்பல்லோவிற்கு வந்துள்ளனர். முதல்வருக்கு சிகிச்சை அளித்துவரும் மருத்துவர்களூடன் எய்ம்ஸ் மருத்துவர்கள் ஆலோசனை நடத்தினர். பின், எய்ம்ஸ் மருத்துவர்கள் கில்னானி, அஞ்சன் டிரிக்கா, நிதிஷ் நாயக் ஆகியோர் முதல்வருக்கு சிகிச்சை அளித்தனர். மேலும், இங்கிலாந்து மருத்துவ நிபுணர் ரிச்சர்ட் பேல் இன்று மீண்டும் முதல்வருக்கு மருத்துவ பரிசோதனை செய்தார். முதல்வர் மேலும் சில நாட்கள் மருத்துவமனையில் தங்கியிருக்க வேண்டும் என மருத்துவர்கள் கேட்டுக்கொண்டனர். அதன்படி ஜெயலலிதா இன்னும் சில நாட்கள் மருத்துவமனையில் தங்கியிருப்பார்’’ என்று அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்ட மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
கைரேகை சர்ச்சை
ஆனாலும், ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்த வதந்திகள் தொடர்ந்த வண்ணம் இருந்தன. இதற்கிடையே தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்கான தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களுக்கான ‘பி’ படிவத்தில் ஜெயலலிதாவின் கையெழுத்துக்கு பதிலாக கைரேகை வைக்கப்பட்டிருந்தது. இது வதந்திகளுக்கு மேலும் இடம் கொடுத்தது. வதந்திகளுக்கு விளக்கமளிக்க வேண்டிய தமிழக அரசு, ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து பேசுபவர்களை வதந்தி பரப்பியதாக கைது செய்தது.
மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட நாளில் இருந்தே அவரது உடல்நிலை தொடர்பாக வதந்திகள் பரப்பப்பட்டு வந்தன. தமிழக காவல்துறையும் வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தும் எந்த பயனும் ஏற்படவில்லை. அதைத் தொடர்ந்து வதந்தி பரப்புவதாக 52 பேர் மீது வழக்குப் பதிவு செய்த தமிழக காவல்துறையினர் அவர்களில் 4 பேர் கைது செய்யப்பட்டதாக அறிவித்தனர். அவர்களைத் தொடர்ந்து கோவையில் இரு வங்கி ஊழியர் வதந்தி பரப்பியதாக கைது செய்யப்பட்டனர்.
தனி அறைக்கு மாற்றம்
58 நாள்கள் சிகிச்சைக்குப் பிறகு ஜெயலலிதா உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து, நவம்பர் 19-ஆம் தேதியன்று சிறப்பு வசதிகள் கொண்ட தனி அறைக்கு மாற்றப்பட்டார். இதையடுத்து அதிமுகவினர் மகிழ்ச்சியைக் கொண்டாடும் வகையில் ஆடிப்பாடி இனிப்புகளை பரிமாறிக்கொண்டனர். அடுத்த சில நாட்களில் 3 தொகுதி தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றது. இதற்காக வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில், தமது மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை என்று கூறினார். இதுதொடர்பாக ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில் முதலில் அவரது கையெழுத்து இல்லை. பின்னர் அவரது கையெழுத்துடன் அறிக்கை வெளியானது.
இதனால் ஜெயலலிதாவின் உடல்நிலை உண்மையாகவே தேறி விட்டது போன்ற தோற்றம் உருவானது. தமிழக அரசும், அப்பல்லோ மருத்துவமனையும் திட்டமிட்டு இந்த தோற்றத்தை ஏற்படுத்தின. ஆனால், உண்மை நிலை வேறாக இருந்தது. அது அடுத்த இரு வாரத்தில் அம்பலமானது
No comments:
Post a Comment