Friday, 21 April 2017

கதை கேளு... கதை கேளு கழகத்தின் கதை கேளு! சாம பேத தான தண்டத்தை பயன்படுத்தி அதிமுக பெற்ற வெற்றி! -மருத்துவர். இராமதாஸ

கதை கேளு... கதை கேளு கழகத்தின் கதை கேளு!

    சாம பேத தான தண்டத்தை
பயன்படுத்தி அதிமுக பெற்ற வெற்றி!
    -மருத்துவர். இராமதாஸ்

2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு பணத்தின் உதவியால் பெற்ற வெற்றியும், வருவாய்க்கு மீறிய வகையில் சொத்துக்குவிப்பு வழக்கில் பணத்தின் உதவியால் பெற்ற தீர்ப்பும் ஜெயலலிதாவுக்கு மிகப்பெரிய துணிச்சலையும், தன்னம்பிக்கையையும் ஏற்படுத்தியிருந்தன. அதே பார்முலாவைப் பயன்படுத்தி 2016-ஆம் ஆண்டு தேர்தலிலும் வெற்றி பெற வேண்டும் என்று தீர்மானித்தார்.

அதிமுகவின் வலிமையை அதிகரிக்க வேண்டும் என்பதைவிட எதிர்க்கட்சிகளின் வலிமையை குறைக்க வேண்டும் என்பது தான் ஜெயலலிதாவின் நோக்கமாக இருந்தது. அதற்கான ஏற்பாடுகளை தனது அதிகாரத்தையும், பணபலத்தையும் பயன்படுத்தி ஜெயலலிதா மேற்கொண்டார். 2016-ஆவது ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின் முக்கிய அம்சமே தமிழகத்தில் திராவிடக் கட்சிகளின் ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் என்று மக்கள் நினைத்தது தான். மக்களின் உணர்வுகளை புரிந்து வைத்திருந்த பாட்டாளி மக்கள் கட்சி 2016-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் முதலமைச்சர் பதவிக்கான வேட்பாளராக மருத்துவர் அன்புமணி இராமதாசை அறிவித்தது.

ஜெயலலிதாவின் திருவிளையாடல்

தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்; திமுக, அதிமுக அல்லாத கட்சியை ஆட்சியில் அமர்த்த வேண்டும் என்பது தான் மக்களின் எதிர்பார்ப்பாக இருந்தது என்பதால், அதை நிறைவேற்றும் நோக்கத்துடன் அதிமுக, திமுக அல்லாத கட்சிகள் பாட்டாளி மக்கள் கட்சி தலைமையிலான அணியில் இணைய வேண்டும் என்று நான் வெளிப்படையாக அழைப்பு விடுத்தேன். ஆனால், அதை தமிழகத்தில் எந்தக் கட்சியும் ஏற்கவில்லை. இதற்குக் காரணம் ஜெயலலிதா தான். தமிழகத்தில் அதிமுக அரசுக்கு எதிரான வாக்குகள் சிதற வேண்டும்; ஒன்றுபடக்கூடாது என்பது தான் ஜெயலலிதாவின் நோக்கமாக இருந்தது.  அதனால் தான் பா.ம.க. அணியில் எந்தக் கட்சியும் சேரக்  கூடாது என்ற தமது விருப்பத்தை சிறிய கட்சிகளின் தலைவர்களிடம் தெரிவித்து செயல்படுத்தினார்.

அதிமுகவுக்கு எதிரான வாக்குகள் சிதற வேண்டும் என்ற ஜெயலலிதாவின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் தேமுதிக, மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், தமிழ் மாநில காங்கிரஸ் என மொத்தம் 6 கட்சிகள் இணைந்தன. ஜெயலலிதாவின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் அந்த அணி தான் தமிழகத்தில் மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தப் போவதைப் போன்றத் தோற்றத்தை ஊடகங்கள் ஏற்படுத்தின. அந்த அணி உருவான அன்று அது குறித்த செய்தி தான் பல ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக இடம்பெற்றிருந்தது. ஜெயலலிதாவின் ஆசி இல்லாமல் இது நடக்க வாய்ப்பில்லை.

திமுக முயற்சி தோல்வி

மற்றொருபுறம் திமுக தலைமை தேமுதிகவை தங்கள் அணிக்கு கொண்டு வர பல வழிகளில் முயன்றது. இதற்காக திமுக தலைவர் கலைஞர், அக்கட்சியின் பொதுச்செயலாளர் மு.க.ஸ்டாலின் மற்றும் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் எண்ணற்ற முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால், அந்த முயற்சிகள் பலிக்கவில்லை. கடைசியில் விஜயகாந்த் மக்கள் நலக் கூட்டணியில் சரணடைந்தார். அதேபோல், விஜயகாந்தை பாரதிய ஜனதா அணிக்கு இழுக்கும் முயற்சியும் தோல்வியடைந்து விட்டது.

பாட்டாளி மக்கள் கட்சி 2015-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15-ஆம் தேதி மருத்துவர் அன்புமணி இராமதாசை முதலமைச்சர் பதவிக்கான வேட்பாளராக அறிவித்த நாளில் இருந்தே தேர்தல் பணியை தொடங்கிவிட்டது. தமிழகத்தின் 8 மண்டலங்களிலும் மண்டல மாநாடுகளை நடத்திய பின்னர், இறுதியாக சென்னை வண்டலூரில் 27.02.2017 அன்று மாநில மாநாடு நடைபெற்றது. மக்களிடையே  பாட்டாளி மக்கள் கட்சிக்கு உள்ள செல்வாக்கை வெளிப்படுத்தும் வகையில் அம்மாநாடு அமைந்திருந்தது.

கருத்துத்திணிப்பு

மக்களிடம் பா.ம.க.வுக்கு செல்வாக்கு அதிகரிப்பதை பொறுத்துக் கொள்ள முடியாத ஜெயலலிதாவும், கலைஞரும் பா.ம.க.வுக்கு எதிரான அடுத்தத் தாக்குதலை ஊடகங்கள் மூலம் தொடுத்தனர். திமுக ஆதரவு ஏடான தினமலர் - நியூஸ் 7 தொலைக்காட்சி, அதிமுக ஆதரவு ஊடகங்களான தினத்தந்தி நாளிதழ், தந்தி தொலைக்காட்சி ஆகியவை கருத்துக் கணிப்பு என்ற பெயரில் பா.ம.க.வுக்கு எதிரான கருத்துக்களைத் திணித்தன.
தினமலர் நடத்தியக் கருத்துக்கணிப்பில் திமுக ஆட்சியைப் பிடிக்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதேநேரத்தில் தந்தி தொலைக்காட்சி நடத்திய கருத்துக்கணிப்பில் அதிமுக ஆட்சியைப் பிடிக்கும் என்று முடிவுகள் அறிவிக்கப்பட்டிருந்தன. அனைத்து ஊடகங்களும் தங்களை நடுநிலையானவையாகவே காட்டிக் கொள்கின்றன. ஆனால், அந்த ஊடகங்கள் வெளியிடும் கருத்துக்கணிப்பு முடிவுகள் ஒன்றுக்கொண்டு முரணாக இருந்தன. அனைத்து ஊடகங்களும் நியாயமாகவும், நேர்மையாகவும், கருத்துக்கணிப்புக்கான விதிகளின்படியும்    கருத்துக்கணிப்பு நடத்தியிருந்தால் அதை உண்மையாக இருந்திருக்கும். உண்மை எந்த ஊடகங்களால் சொல்லப்பட்டாலும் ஒரே மாதிரியாகத் தான் இருந்திருக்கும். ஆனால், சில ஊடகங்களின் கருத்துக் கணிப்பு முடிவுகள் அண்ணா அறிவாலயத்திலும், வேறு சில ஊடகங்களின் கருத்துக்கணிப்பு முடிவுகள் அம்மா ஆலயத்திலும் எழுதப்பட்டதால் தான் அவை முன்னுக்குப்பின் முரணாக அமைந்திருந்தன.

கருத்துக்கணிப்பு ரகசியம்!

தமிழகத்தில் உள்ள ஊடகங்கள் கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிடுகின்றனவே தவிர, மொத்தம் எத்தனை பேரிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டன; முடிவுகள் எந்த அடிப்படையில் தொகுக்கப் பட்டன என்பதை எந்த ஊடகமும் மனசாட்சிக்கு விரோதமில்லாமல் வெளியிடவில்லை. கருத்துக்கணிப்பு முடிவுகளிலும், அது மேற்கொள்ளப்பட்ட விதத்திலும் சிறிதளவு கூட வெளிப்படைத்தன்மை இல்லை.

கருத்துக்கணிப்பு வெளியான 03.05.2016 அன்று இரவு பிரச்சாரம் முடித்து திரும்பும் போது இந்த கருத்துக்கணிப்புடன் தொடர்புடைய மூத்த பத்திரிகையாளர் ஒருவர் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கருத்துக்கணிப்பு  எவ்வாறு நடத்தப்பட்டன என்பது குறித்த விவரங்களை தெரிவித்தார். சம்பந்தப்பட்ட ஊடகங்கள் தெரிவிப்பதைப் போல இந்த கருத்துக்கணிப்பு ஒரு வாரம் நடைபெறவில்லை; ஒரு தொகுதிக்கு  1000 பேரிடம் கருத்துக்கணிப்பு படிவங்கள் கொடுத்து நிரப்பி வாங்கப்படவில்லை.

மாறாக ஒவ்வொரு தொகுதியிலும் 5 நாளிதழ் முகவர்களை அழைத்து அவர்களிடம் தலா 200 படிவங்களைக் கொடுத்து ஒரே நாளில் அனைத்து படிவங்களையும் நிரப்பித் தர வேண்டும். மக்களிடம் கொடுத்து தான் கருத்துக் கேட்டு நிரப்பி வாங்க வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை. விரைவாக நிரப்பித் தர வேண்டும் என்பது மட்டும் தான் நிபந்தனை.

ஜனநாயகப் படுகொலை

அதுமட்டுமின்றி ஒவ்வொரு தொகுதி முடிவும் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு விட்டதாகக் கூறி அதன் விவரங்களைத் தெரிவித்த நாளிதழ் நிர்வாகிகள், அதற்கேற்றவாறு படிவத்தில் உள்ள அரசியல் கட்சிகளின் பெயர்களை டிக் செய்யுங்கள் என்று கூறியுள்ளனர். அதன்படி அனைத்துக் கருத்துக்கணிப்பு படிவங்களையும் முகவர்களே தங்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் உதவியுடன் சில மணி நேரங்களில் நிரப்பப்பட்டு,  உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்த லட்சனத்தில் தான் கருத்துக்கணிப்புகள் நடத்தப்பட்டன. ஊடகங்கள் நடுநிலையாக செயல்படுவதற்கு பதிலாக சில அரசியல் கட்சிகளுடன் கூட்டணி அமைத்துக் கொண்டு  ஜனநாயகப் படுகொலைக்கு துணைபோயின என்பது உண்மை.

அடுத்தக்கட்டமாக இரு கட்சிகளும் பணத்தை வாரி இறைத்தன. ஜெயலலிதா பங்கேற்கும் பிரச்சாரக் கூட்டங்களுக்கு தொண்டர்களை அழைத்து வர ஒவ்வொருவருக்கும் ரூ.500 பணம், மது, உணவு உள்ளிட்டவை வழங்கப்பட்டன. ஸ்டாலின் பங்கேற்ற பொதுக்கூட்டங்களுக்கும் அதே அளவு பணம் வாரி இறைக்கப்பட்டது.  மே மாதம் 10&ஆம் தேதியிலிருந்து தமிழகத்தின் அனைத்துத் தொகுதிகளிலும்   ஓட்டுக்கு பணம் கொடுக்கப்பட்டது. திமுகவும், அதிமுகவும் ஒருவருக்கொருவர் சளைக்காமல் பணத்தை அள்ளி வீசினார்கள். இதை காவல்துறையோ, தேர்தல் கண்காணிப்பாளர்களோ கண்டுகொள்ளவில்லை.

வெள்ளமாக பாய்ந்த பணம்

மே 16-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவிருந்த நிலையில், மே 14-ஆம் தேதி மாலை முதல் கட்டுப்பாடின்றி வாக்காளர்களுக்கு பணம் வாரி இறைக்கப்பட்டது. பண வினியோகத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு ஏராளமான புகார்கள் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தேர்தலுக்கு முதல் நாளன்று தான் பெருமளவில் பண வினியோகம் நடைபெறும் என்பதால் அன்று தான் கண்காணிப்பு தீவிரமாக நடைமுறைப் படுத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், தமிழகத்தில் அனைத்து சோதனைச் சாவடிகளும் அன்று செயல்படவில்லை. எந்த சோதனைச் சாவடியிலும் ஆட்கள் இல்லை; அதிகாரிகளும் இல்லை. சோதனைச்சாவடி அலுவலகங்கள் மூடப்பட்ட நிலையில் இருக்க , அனைத்து வாகனங்களும் எந்த கட்டுப்பாடும் இல்லாமல் சென்றன.

2014 மக்களவைத் தேர்தலின் போது வாக்குப்பதிவுக்கு இரு நாட்கள் முன்பாக தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்து வாக்காளர்களுக்கு ஆளுங்கட்சி தடையின்றி பண வினியோகம் செய்ய தேர்தல் ஆணையம் உதவி செய்தது. இந்த ஆண்டு சோதனைச்சாவடிகளை திறந்து வைத்து வாக்காளர்களுக்கு தருவதற்கான பணத்தை தடையின்றி கொண்டு செல்ல ஆணையம் உதவி செய்தது. தமிழகத்தில் இந்த அளவுக்கு பண வினியோகம் நடந்த பிறகு எப்படி தேர்தல் நியாயமாக நடைபெற்றிருக்க முடியும்? ஓட்டுக்கு பணம் கொடுக்கப்பட்டது குறித்த குற்றச்சாற்றுகளின் அடிப்படையில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி ஆகிய இரு தொகுதிகளின் தேர்தல்கள் மட்டும் ஒத்திவைக்கப்பட்டன. மீதமுள்ள 232 தொகுதிகளிலும் திட்டமிட்டபடி தேர்தல் நடைபெற்றது.

மே16-ஆம் தேதி பதிவான வாக்குகள் மே19-ஆம் தேதி எண்ணப்பட்ட போது எனது ஐயம் உறுதியானது. தமிழகத்தில் எந்த திமுகவும், அதிமுகவும் ஆட்சிக்கு வரக்கூடாது என்று மக்கள் விரும்பினார்களோ, அந்த அதிமுகவையும், திமுகவையும் தான் மக்கள் வெற்றி பெறச் செய்தனர். அதிமுக 134 இடங்களிலும், திமுக கூட்டணி 98 இடங்களிலும் வெற்றி பெற்றன. 5.23% வாக்குகளுடன் பாட்டாளீ மக்கள் கட்சி மூன்றாவது பெரியக் கட்சியாக உருவெடுத்தது.

No comments:

Post a Comment