Monday, 27 March 2017

முடங்கி கிடக்கும் விஷன் - 2023: வெள்ளை அறிக்கை வெளியிடுக! -மருத்துவர். இராமதாஸ் ----அறிக்கை----

முடங்கி கிடக்கும் விஷன் - 2023:
வெள்ளை அறிக்கை வெளியிடுக!
     -மருத்துவர். இராமதாஸ்
              ----அறிக்கை----

ஆடம்பரமாக திட்டங்களை அறிவித்து, அதில் எந்த முன்னேற்றத்தையும் எட்டாமல் அடக்கம் செய்வது தான் அதிமுக அரசின் வழக்கம் என்பதற்கு இன்னுமொரு உதாரணமாக தொலைநோக்குத் திட்டம் - 2023 (விஷன்-2023) அமைந்திருக்கிறது. இத்திட்டம் அறிவிக்கப்பட்டு ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்து விட்ட நிலையில், இத்திட்டத்தில் 5% கூட முன்னேற்றம் எட்டப்படாதது கடுமையாக கண்டிக்கத்தக்கது.

2011-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்த ஜெயலலிதா, அதன்பின்  10 மாதங்கள் கழித்து தொலைநோக்குத் திட்டம்-2023 என்ற வளர்ச்சித் திட்ட அறிக்கையை 22.03.2012 அன்று வெளியிட்டார். இத்திட்டத்தின் இலக்குகள் எட்டப்பட்டால் அமெரிக்காவே நமக்கு அடிமையாகும்; ஜப்பான் நம்மிடம் சரணடைந்து விடும் என்றெல்லாம் முழங்கினார். ஆனால், அடுத்த வாரம் இதேநாளில் இத்திட்டம் அறிவிக்கப்பட்டு 5 ஆண்டுகள் நிறைவடைகின்றன. எனினும், இந்த காலத்தில் இத்திட்டத்தில் எந்த அளவுக்கு முன்னேற்றம் ஏற்பட்டிருக்க வேண்டுமோ, அதில் பத்தில் ஒரு பங்கு முன்னேற்றம் கூட எட்டப்படவில்லை. தமிழக அரசின் செயல்திறன் எவ்வளவு என்பதை இதிலிருந்தே அறியலாம்.

உதாரணமாக,  தமிழ்நாடு அடுத்த 11 ஆண்டுகளுக்கு தலா 11% வளர்ச்சியை எட்டும். 2023 ஆம் ஆண்டில் தமிழகத்தின் தனிநபர் வருவாய் ரூ.6.50 லட்சமாக இருக்கும் என்று தொலைநோக்குத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த இலக்கை எட்ட வேண்டுமானால் நடப்பாண்டில் தமிழகத்தின் தனிநபர் வருமானம் நடப்பாண்டில் ரூ.3.63 லட்சம் என்ற இலக்கை எட்டியிருக்க வேண்டும். ஆனால், நடப்பாண்டில் தமிழகத்தின் தனிநபர் வருமானம் உத்தேசமாக ரூ.1,58,072 என கணக்கிடப்பட்டிருக்கிறது. அதாவது இலக்கின்படி எட்டப்பட வேண்டிய வருவாயில் 43.5 விழுக்காட்டை மட்டுமே தமிழக அரசு எட்டியிருக்கிறது.

தனிநபர் வருவாய் அடிப்படையில் தமிழகத்தை முதலிடத்திற்கு கொண்டு வருவதாக  ஜெயலலிதா அறிவித்திருந்தார். ஆனால், தமிழகம் இப்போது 11-ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறது. கோவாவின் தனிநபர் வருவாய் ரூ.4.00 லட்சமாகவும், தில்லியின் தனிநபர் வருமானம் ரூ.3.63 லட்சமாகவும் உயர்ந்துள்ளது. ஆனால், இம்மாநிலங்களின் தனிநபர் வருவாயில் பாதியைக் கூட தமிழகம் எட்டவில்லை.

அனைவருக்கும் பயனுள்ள வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்படும் என்று தொலைநோக்குத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கடந்த ஐந்தாண்டுகளில் 96 லட்சம் பேர் வேலைகேட்டு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் புதிதாக பதிவு செய்துள்ள நிலையில், அவர்களில் 96,000 பேருக்குக் கூட அரசு வேலை வழங்கப்படவில்லை. இதனால் நம்பிக்கை இழந்த சுமார் ஒரு கோடி பேர் வேலைவாய்ப்பக பதிவை புதுப்பிக்காமல் வெளியேறியிருக்கின்றனர். இது தமிழகத்திற்கு மிகப்பெரிய அவமானமாகும்.
குழந்தைகள் இறப்பு விகிதம், தாய்மார்கள் இறப்பு விகிதம் உள்ளிட்ட சுகாதாரக் குறியீடுகள் சிறப்பாக மேம்படுத்தப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த குறியீடுகளில் குறிப்பிடத்தக்க அளவில் எந்த முன்னேற்றமும் இல்லை. மாறாக தருமபுரி, விழுப்புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் கொத்துக்கொத்தாக குழந்தைகள் இறந்த கொடுமை கடந்த காலங்களில் நடந்தது. மாவட்ட அரசு மருத்துவமனைகளிலேயே தாய்-சேய் கவனிப்பு இல்லாத பேரவலம் நிலவுகிறது.

மின்சாரம், போக்குவரத்து, கல்வி, பாசனம், துறைமுகம், விமானநிலையம் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.15 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. அதன்படி 5 ஆண்டுகளில் ரூ.7 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால், கடந்த 2016-17 ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்ட ரூ.2100 கோடியையும் சேர்த்து மொத்தம்   ரூ.3100 கோடி மட்டும் தான் அரசுத் தரப்பிலிருந்து ஒதுக்கீடு  செய்யப்பட்டது. அதுவும் கூட முதலீடு செய்யப்பட்டதா? அல்லது கடலில் கரைத்த பெருங்காயம் போன்று கணக்கு காட்டப்பட்டு விட்டதா?  என்பது தெரியவில்லை. ஆரோக்கியமான முதலீட்டு சூழல் ஏற்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 2015-ஆம் ஆண்டில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.2.42 லட்சம் கோடி முதலீடு வந்ததாகவும், அதில் இதுவரை ரூ.85,000 கோடி முதலீடு செய்யப்பட்டு விட்டதாகவும்  தமிழக அரசுத்  தரப்பில் கூறப்பட்ட போதிலும் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் பெரிய அளவில் எந்தத் திட்டமும் புதிதாக தொடங்கப்படவில்லை; அதனால் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும் உருவாக்கித் தரப்படவில்லை.

கல்விக்கும், ஆராய்ச்சிக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, தமிழகம் அறிவுசார் மையமாக மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், முக்கியத்துவம் வாய்ந்த சென்னைப் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், காமராஜர் பல்கலைக்கழகம், அம்பேத்கர் பல்கலைக்கழகம் உள்ளிட்ட 5 பல்கலைக்கழகங்களின்  துணைவேந்தர் பதவிகள் நிரப்பப்படாமல் இருப்பதும், இதனால் அங்கு படித்து முடித்த மாணவர்களுக்குக் கூட பட்டம் வழங்கப்படாமல் இருப்பதும் தான் அம்மா ஆட்சியிலும், அவரது வழியில் நடைபெற்ற, நடைபெறும் பினாமி ஆட்சிகளிலும் தமிழகம் கண்ட பயன்கள் ஆகும்.

இயற்கை சீற்றங்கள் ஏற்படும் போது பாதிப்புகள் ஏற்படாத வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதன்பின் 2015-ஆம் ஆண்டில் சென்னை  மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களில் கடுமையான வெள்ளமும், நடப்பாண்டில் வரலாறு காணாத வறட்சியும் அடுத்தடுத்து ஏற்பட்டு தமிழக மக்கள் வரலாறு காணாத இன்னல்களை அனுபவித்தது மட்டும் தான் மிச்சம். இதுபோன்று எட்டப்படாத இலக்குகளை பட்டியலிட்டுக் கொண்டே செல்லலாம்.

தொலைநோக்குத் திட்டம் -2023ல் 10 வகையான இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டிருந்தன. அவற்றை 2023 ஆம் ஆண்டிற்குள் எட்ட வேண்டும் என்பது தான் தொலைநோக்குத் திட்டத்தின் நோக்கமாகும். ஆயினும் திட்டக்காலத்தில் கிட்டத்தட்ட பாதிக் காலம் முடிவடைந்து விட்ட நிலையில், தொலைநோக்குத் திட்டங்கள் மக்களுக்கு பயனளிக்கத் தொடங்கியிருக்க வேண்டும். ஆனால், அதற்கான அறிகுறிகள் கூட இன்னும் தென்படவில்லை. அதுமட்டுமின்றி நீண்டகாலத் திட்டங்கள் செயல்படுத்தப்படும்போது,  அதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து ஒவ்வொரு ஆண்டும் அறிக்கை வெளியிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், கடந்த 4 ஆண்டுகளில் இத்தகைய அறிக்கைகள் எதுவும் வெளியிடப்படவில்லை.

2017-18 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை தமிழக சட்டப்பேரவையில் நாளை தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், அத்துடன் சேர்த்து தொலைநோக்குத் திட்டம்-2023 இலக்குகளை எட்டுவதற்காக கடந்த 5 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவான வெள்ளை அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும். இன்று வரையிலான தொலைநோக்குத் திட்ட இலக்குகளை எட்டத் தவறியதற்காக தமிழக மக்களிடம் ஆட்சியாளர்கள் வெளிப்படையான மன்னிப்பு கேட்க வேண்டும்.

மின்வாரிய பணியாளர்கள் நேர்காணலை தாமதிப்பதன் பின்னணியில் ஊழலா? -மருத்துவர். இராமதாஸ் --அறிக்கை---

மின்வாரிய பணியாளர்கள் நேர்காணலை
தாமதிப்பதன் பின்னணியில் ஊழலா?
     -மருத்துவர். இராமதாஸ்
                  --அறிக்கை---

தமிழ்நாட்டில் அரசு எந்திரம் ஒன்று இயங்குகிறதா? என்று வினா எழுப்பும் வகையில் தான் தமிழக அரசின் செயல்பாடுகள் உள்ளன. இயல்பாக நடக்க வேண்டிய அரசின் செயல்பாடுகள் கூட முடங்கிக் கிடப்பதால் அடிப்படை வசதிகளைக் கூட பெற முடியாமல் தமிழக மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

தமிழ்நாடு மின்வாரியத்திற்கு கள உதவியாளர்கள் 900 பேர், மின்சார தொழில்நுட்ப உதவியாளர்கள் 500 பேர், இளநிலை உதவியாளர்கள் 250 பேர், தட்டச்சர்கள் 200 பேர், உதவியாளர்கள் 100 பேர், பரிசோதகர்கள் 100 பேர், உதவி வரைவாளர்கள் 50 பேர், தலா 25 சுருக்கெழுத்தர், எந்திரவியல் உதவியாளர், இளநிலை தணிக்கையாளர் என மொத்தம் 2175 பணியாளர்களை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கையை கடந்த ஆண்டு தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டது. அதைத் தொடர்ந்து இப்பணிகளுக்கான எழுத்துத் தேர்வு கடந்த ஆண்டு ஜூன் மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நடைபெற்றது.

ஆனால், கள உதவியாளர் மற்றும், தொழில்நுட்ப உதவியாளர் பணிகளுக்கான ஆள் தேர்வை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டதால், அப்பணிகள் தவிர மீதமுள்ள 750 பணி இடங்களுக்கான தேர்வு முடிவுகள் 19.10.2016 அன்று வெளியிடப்பட்டன. அவற்றில் உதவி வரைவாளர்,  இளநிலை தணிக்கையாளர்கள், சுருக்கெழுத்தர் உள்ளிட்ட பணிகளுக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 2 முதல் 7-ஆம் தேதி வரை நேர்காணல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அப்போது தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்கு தேர்தல்கள் அறிவிக்கப்பட்டதால் நேர்காணல்கள் ஒத்திவைக்கப்பட்டன. நேர்காணல் தேதி 19.11.2016-க்குப் பிறகு அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால், இன்று வரை நேர்காணல் தேதி அறிவிக்கப்படவில்லை.

முடிவுகள் அறிவிக்கப்பட்ட 750 பணியிடங்களுக்கான தேர்வுகளில் 100 பணியிடங்களுக்கு மட்டும் தான் நேர்காணல் அறிவிக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்டன. மீதமுள்ள 650 பணியிடங்களுக்கு இதுவரை நேர்காணல் அறிவிக்கப்படவில்லை. அதுமட்டுமின்றி தொழில்நுட்பம் சார்ந்த 1425 பணியிடங்களுக்கான ஆள்தேர்வை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை முடிவுக்கு கொண்டு வந்து பணியாளர் நியமனங்களை செய்ய தமிழக அரசு எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை.

மின்வாரியப் பணிகளுக்கான அறிவிக்கை வெளியிடப்பட்டு ஓராண்டுக்கும் மேலாகிவிட்ட நிலையில், இன்னும் ஒரு பணியாளர் கூட நியமிக்கப்படாதது அரசு நிர்வாகம் செயல்படாததையே காட்டுகிறது. தஞ்சாவூர் உள்ளிட்ட 3 தொகுதி இடைத்தேர்தல்கள் முடிந்து நான்கு மாதங்கள் முடிவடைந்து விட்டன. இவ்வளவு நாட்களாகியும் நேர்காணல்களை நடத்தி பணியாளர்களை நியமிக்காததற்கு ஊழல் தான் காரணம் என்று கூறப்படுகிறது. நேர்காணல்கள் அறிவிக்கப்படுவதற்கு முன்பே மின்வாரியத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி அத்துறை அமைச்சருக்கு நெருக்கமானவர்கள் கோடிக்கணக்கில் வசூலித்து விட்டதாகவும், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு புதிய அதிகார மையமாக உருவெடுத்துள்ள சசிகலாவின் உறவினர்கள் தாங்கள் தரும் பட்டியலில் உள்ளவர்களுக்கு மட்டும் தான் வேலை வழங்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதாகவும், அதனால் தான் மின்வாரிய பணியாளர் நியமனங்கள் கிடப்பில் போடப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இது உண்மையென்றால் கண்டிக்கத்தக்கதாகும்.

ஏற்கனவே முந்தைய ஆட்சியில் அரசு பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கு 4362 பேரை தேர்வு செய்வதற்கான போட்டித் தேர்வுகள் 2015 மே 31ஆம் தேதி நடத்தப்பட்டது. அதன்பின் 25 மாதங்கள் ஆகியும் இன்று வரை முடிவுகள் அறிவிக்கப்படவில்லை. இதிலும் பெருமளவில் ஊழல்கள் நடைபெற்று இருப்பது தான் முடிவுகள் அறிவிக்கப்படாததற்கும், பணி நியமனம் நடக்காததற்கும் காரணம் ஆகும்.

திராவிட ஆட்சிகளில் ஊழலில் கொடுங்கரங்கள் எந்த துறையையும் விட்டு வைக்காமல் அபகரித்து வருகின்றன. திறமையாக படித்து நல்ல மதிப்பெண்கள் வாங்கிய மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய வேலைவாய்ப்புகள், ஊழல் காரணமாக திறமையற்றவர்களுக்கு தாரை வார்க்கப்படுகின்றன. இந்த மோசமான அணுகுமுறைக் காலப்போக்கில் அரசு நிர்வாகம் அடியோடு செயலிழக்கவும், சமுகத்தில் புரட்சி ஏற்படவும் வழி வகுத்து விடும்.

எனவே, ஊழல்களையும், முறைகேடுகளையும் ஒதுக்கி வைத்து விட்டு, திறமை மற்றும் தகுதியின் அடிப்படையில் மட்டும் பணியாளர்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.  அதனடிப்படையில் மின்வாரியப் பணியிடங்களுக்கான நேர்காணலை நடத்தியும், அரசு பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்காக முடிவுகளை வெளியிட்டும் தகுதியானவர்களை அரசு நியமிக்க வேண்டும்.

பாட்டாளி மக்கள் கட்சி தமிழக மக்கள் மாமன்றத்தில் முன்வைக்கும் தமிழக அரசிற்கான 2017- 2018 ஆம் ஆண்டின் பொது நிழல் நிதிநிலை அறிக்கை.

பாட்டாளி மக்கள் கட்சி தமிழக மக்கள் மாமன்றத்தில் முன்வைக்கும் தமிழக அரசிற்கான 2017- 2018 ஆம் ஆண்டின் பொது நிழல் நிதிநிலை அறிக்கை. நாள்: 12.03.2017

----------------------
முக்கிய அம்சங்கள் - பகுதி 1: (சுருக்கம் 1 முதல் 73 வரை)
----------------------

வரவு- செலவு

1.     2017-18 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின்  வருவாய் வரவுகள் ரூ.3,29,712 கோடியாக இருக்கும். இது கடந்த ஆண்டில் மொத்த வருவாயை விட ரூ.1,25,908 கோடி அதிகமாக இருக்கும். கனிம வளங்களை சிறப்பான முறையில் கையாளுவதன் மூலமும், வணிக வரி வசூலை மேம்படுத்துவதன் மூலமும் ரூ.1,05,000 கோடி கூடுதல் வருவாய் ஈட்ட திட்டம் வகுத்திருப்பதன் மூலமும் தான் இந்த அளவுக்கு அதிக வருவாய் சாத்தியமாகிறது.

2.    நடப்பாண்டின் மொத்த செலவினம் ரூ.3,34,433 கோடியாகவும், வருவாய் செலவினம் ரூ.2,93,186 கோடியாகவும் இருக்கும். வருவாய் செலவினத்தில் ரூ.45,000 கோடி நிலுவையில் உள்ள கடனை அடைப்பதற்காக அசலாக செலுத்தப்படும். இதன்படி, அடுத்த 5 ஆண்டுகளில் தமிழக அரசின் தற்போதைய கடன் அடைக்கப்படும். வளர்ச்சித் திட்டங்களுக்காக புதிதாக வாங்கப்படும் கடன் மிகமிக குறைந்த அளவிலேயே இருக்கும்படி பார்த்துக்கொள்ளப்படும்.

3.    2017-18 ஆம் ஆண்டில் தமிழக அரசின் வருவாய்க் கணக்கில் ரூ.36,526 கோடி உபரியாக இருக்கும். நிதிப்பற்றாக்குறை ரூ.4,721 கோடி என்ற அளவில் மிகமிகக் குறைவாக இருக்கும். வருவாய்க் கணக்கில் உபரியாக இருக்கும் தொகை மூலதன செலவுகளுக்காக செலவிடப்படும் என்பதால் நிதிப்பற்றாக்குறை பெருமளவில் குறைந்திருக்கிறது.

----------------------
நிர்வாக சீர்திருத்த ஆணையம்
----------------------

4.    தமிழக அரசு நிர்வாகக் கட்டமைப்பை நிகழ்காலச் சூழலுக்கு ஏற்ப மாற்றி அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக தமிழகத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவர் தலைமையில் நிர்வாக சீர்திருத்த ஆணையம் அமைக்கப்படும்.

5.    தமிழக அரசின் வருவாய் வளர்ச்சி கடந்த 5 ஆண்டுகளில் பெருமளவில் குறைந்திருக்கிறது. 2013-14 முதல் 2017-18 வரையிலான ஐந்தாண்டுகளில் தமிழக அரசின் சொந்த வரிவருவாய் எதிர்பார்க்கப்பட்டதைவிட, 67,000 கோடி ரூபாய் அளவுக்கு குறைந்திருக்கிறது.

6.    மது விற்பனை மூலம் கிடைக்கும் ஆயத்தீர்வை வருவாயைத் தவிர பிற வருவாய் இனங்கள் எதிலும் கடந்த 5 ஆண்டுகளில் இலக்கை எட்ட முடியவில்லை.

----------------------
அரசின் வருவாயை அதிகரிக்கக் குழு
----------------------

7.    தமிழக அரசின் வரி வசூல் கட்டமைப்பில் நிலவும் குளறுபடிகள், ஊழல்கள் ஆகியவற்றை கலைந்து அரசின் வருவாயை அதிகரிப்பதற்கான பரிந்துரைகளை வழங்க பணியில் உள்ள இ.ஆ.ப. அதிகாரி ஒருவர் தலைமையில் குழு அமைக்கப்படும்.

----------------------
அம்மா பெயர் நீக்கம்
----------------------

8.    தமிழ்நாட்டில் முன்னாள் முதலமைச்சரின் பெயரைக் குறிக்கும் வகையில் நடைமுறையில் உள்ள அம்மா திட்டங்களின் பெயர்கள் மாற்றப்பட்டு அரசுத் திட்டங்களாக செயல்படுத்தப்படும்.
9.    இனி வரும் காலங்களில் அறிவிக்கப்படும் எந்தத் திட்டமும் தனி மனிதர்களின் பெயரால் அழைக்கப்படாது. அரசுத் திட்டங்கள் என்றே அழைக்கப்படும்.

10.    தமிழ்நாட்டில் தேர்தல் ஊழல் மற்றும் முறைகேடுகளுக்கு முடிவுகட்டுவதற்கு வசதியாக மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் திருத்தம் செய்யும்படி மத்திய அரசையும், இந்திய தேர்தல் ஆணையத்தையும் நேரில் சந்தித்து வலியுறுத்த முதலமைச்சர் தலைமையில் குழு அமைக்கப்படும்.

----------------------
உள்ளாட்சித் தேர்தல் ஏற்பாடுகள்
----------------------

11.    மே மாதம் 2வது வாரத்தில் உள்ளாட்சித் தேர்தல்களை நடத்த வசதியாக ஏப்ரல் முதல் வாரத்திற்குள் தொகுதி மறுவரையரை செய்யும் பணிகள் முடிக்கப்படும். இப்பணிகளுக்காக ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

12.    மத்திய அரசு அறிவிக்காவிட்டாலும், 13வது ஐந்தாண்டு திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தும். இத்திட்ட காலத்திற்கான திட்டமதிப்பு ரூ.3.42 லட்சம் கோடியாக இருக்கும். 2017-18ஆம் ஆண்டிற்கான திட்டஒதுக்கீடு ரூ.61,000 கோடியாக இருக்கும்.

13.    தமிழ்நாட்டில் பொதுத்துறை வங்கிகளில் கடன் பெற்று படித்து வேலையில்லாமல் தவிக்கும் மாணவர்களின் கல்விக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். தமிழக மாணவர்களுக்கு ரூ.18,000 கோடி கல்விக்கடன் வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் வாராக்கடனின் அளவு ரூ.2,000 கோடி ஆகும். இந்தக் கடன் உடனடியாக தள்ளுபடி செய்யப்படுகிறது. இதற்கான தொகையை பொதுத்துறை வங்கிகளுக்கு தமிழக அரசே செலுத்தும்.

----------------------
நீட் தேர்வு ரத்து
----------------------

14.    கல்விக் கடன் பெற்று உயர் கல்வி கற்ற மாணவர்களில் வேலைகிடைக்காதவர்களின் விவரத்தைத் திரட்ட கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அவர்களின் கடன்களையும் அரசே செலுத்தும். இந்த பணிகள் நடப்பாண்டின் இறுதிக்குள் நிறைவடையும்.

15.    தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு ரத்து செய்யப்படுகிறது. இதுதொடர்பாக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள சட்டத்திருத்தத்திற்கு இம்மாத இறுதிக்குள் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்படும்.

16.    தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள், நிகர்நிலை பல்கலைக் கழகங்களில் உள்ள இடங்கள் ஆகியவற்றுக்கு நீட் தேர்வு பொருந்தும். நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஒற்றைச்சாளர முறைப்படி இந்த இடங்களுக்கான கலந்தாய்வை தமிழக அரசே நடத்தும்.

----------------------
அண்ணாமலை பல்கலைக்கு ரூ.1000 கோடி
----------------------

17.    கடுமையான நிதிநெருக்கடியில் சிக்கித்தவிக்கும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்திற்கு உதவும் வகையில் ஒருமுறை நிதி உதவியாக ரூ.1,000 கோடி வழங்கப்படுகிறது.

18.    அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் அனுமதிக்கப்பட்ட பணியாளர்கள் எண்ணிக்கை 5456 ஆக உயர்த்தப்படும். இதன் மூலம் அண்ணாமலை பல்கலைக் கழக நிதிநெருக்கடிக்கும், கூடுதல் பணியாளர்கள் வேறு கல்வி நிறுவனங்களுக்கு இடமாற்றம் செய்யப்படுவதற்கும் முடிவுகட்டப்படும்.

----------------------
மின் கட்டணம் குறைப்பு
----------------------

19.    தமிழ்நாட்டில் மின் கட்டணம் 10% குறைக்கப்படும். இரு மாதங்களுக்கு ஒரு முறை மின்கட்டணம் செலுத்தும் முறை மாற்றப்பட்டு, மாதம் ஒருமுறை மின்கட்டணம் செலுத்தும் முறை அறிமுகம் செய்யப்படும். இதனால் மின்கட்டணம் மேலும் 25% குறையும்.

----------------------
பேருந்துக்கட்டணம் குறைப்பு
----------------------

20.    தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு குறைக்கப்பட்ட கட்டணமே இந்த ஆண்டும் நீடிக்கும். அடுத்த 3 ஆண்டுகளுக்கு பேருந்துக் கட்டணங்கள் உயர்த்தப்படாது.

21.    சென்னையில் மாநகரப் பேருந்துகளின் எண்ணிக்கை 2017-18 ஆம் ஆண்டில் 5,000ஆக உயர்த்தப்படும். சென்னை மாநகரப் பேருந்துகளில், ஏப்ரல் 1ம் தேதி முதல் கட்டணமில்லாப் பயணத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும். அன்று முதல் மாநகரப் பேருந்துகளில் அனைவரும் இலவசமாக பயணம் செய்யலாம் என்று தமிழக அரசு மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறது.

22.    மத்திய அரசுடன் பேசி தணிக்கை செய்வதன் மூலம் தமிழகத்தில் நெடுஞ்சாலைகளுக்கான சுங்கக்கட்டணங்கள் முறைப்படுத்தப்படும். முதலீடு ஈட்டப்பட்ட சுங்கச் சாவடிகளில் 40% மட்டுமே பராமரிப்புக் கட்டணமாக வசூலிக்கப்படும்.

----------------------
பள்ளிக் கல்விக்கு ரூ.50,000 கோடி
----------------------

23.    தமிழ்நாட்டில் சி.பி.எஸ்.இ-க்கு இணையான பாடத்திட்டம் 2018-19 ஆம் கல்வி ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும். இப்பாடத்திட்டத்தை தயாரிக்க கல்வியாளர்கள் குழு அமைக்கப்படும்.

24.    தமிழ்நாட்டில் மாவட்டத்திற்கு குறைந்தபட்சம்  10 பள்ளிகள் வீதம் தமிழகம் முழுவதும் 500 பள்ளிகள் மாதிரிப் பள்ளிகளாக மாற்றப்படும்.  இந்தப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை இருக்கும்.

25.    தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு இணையாக தரம் உயர்த்தப்படும். ஒவ்வொரு மாணவருக்கும் கல்வி வழங்க ஆண்டுக்கு ரூ.30,000 செலவிடப்படும்.

26.    பள்ளிக் கல்வித் துறைக்கு நடப்பாண்டில் ரூ.50,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

27.    தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகளை எதிர்கொள்ள வசதியாக 9ஆம் வகுப்பிலிருந்தே சிறப்புப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்.

----------------------
திறன்சார் கல்வி
----------------------

28.    பள்ளிகளில் திறன் சார் கல்வி (Skill Based Education), அறிவுசார் கல்விமுறை (Knowledge Based Education), தொழில்கல்வி (Vocational Education) ஆகிய கல்வி முறைகள் அறிமுகப்படுத்தப்படும். அதன்படி 11-ஆம் ஆண்டில் வழக்கமான பாடங்களுடன் வேலைவாய்ப்புத் திறனை அதிகரிப்பதற்கான பயிற்சிப் பாடம் கூடுதலாகச் சேர்க்கப்படும். அது மாணவர்கள் படிக்கும் விருப்பப்பாடம் சார்ந்ததாக இருக்கும்.

29.    மாணவர்கள் பள்ளிகளுக்கு எளிதாகச் சென்றுவர வசதியாக, “மாணவர்கள் மட்டும்” பேருந்துகள் இயக்கப்படும்.

30.    அனைத்து மாவட்டங்களிலும் முறையே ஒரு மருத்துவக் கல்லூரியும், ஒரு பொறியியல் கல்லூரியும் அமைக்கப்படுவது உறுதி செய்யப்படும். அந்த வகையில், அடுத்த ஆண்டில் புதுக்கோட்டை, விருதுநகர், பெரம்பலூர், திண்டுக்கல், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படும்.

31.    நாகப்பட்டினம், அரியலூர் மாவட்டங்களில் 2018-19 ஆம் ஆண்டில் அரசுப் பொறியியல் கல்லூரிகள் அமைக்கப்படும்.

32.    தமிழ்நாட்டில் உள்ள மத்திய கல்வி நிறுவனங்கள் அனைத்திலும் 50 விழுக்காடு இடங்களை மாநில ஒதுக்கீடாக வழங்கவேண்டும் என்று மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்தும்.
33.    2017 -2018 ஆம் ஆண்டில் உயர்கல்வித் துறைக்கான நிதி ஒதுக்கீடு ரூ.13,100 கோடியாக அதிகரிக்கப்படுகிறது.

----------------------
புதிய கல்வி நிறுவனங்கள்
----------------------

34.    சென்னைப் பல்கலைக் கழகமும், அண்ணா பல்கலைக் கழகமும் திறன்சார் அறிவு மையங்களாக (Centre of  Excellence) தரம் உயர்த்தப்படும்.

35.    தமிழகத்தில் 6 ஒருமைப் பல்கலைக்கழகங்கள் (Unitary Universities) அமைக்கப்படும். ஆராய்ச்சிகளைச் செய்வது மட்டுமே இவற்றின் முதன்மை நோக்கமாக இருக்கும்.

36.    சென்னையில் இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (Indian Institute of Science Education and Research - IISER) அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய அரசிடம் வலியுறுத்தி, ஓராண்டிற்குள் இந்த உயர் கல்வி நிறுவனம் தொடங்கப்படும்.

37.    தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களும் 5 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு மண்டலத்திலும் ஐ.ஐ.டி.க்கு இணையான ஓர் உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (Tamilnadu Institute of Technology - TIT) அமைக்கப்படும்.

38.    ஒவ்வொரு மண்டலத்திலும் ஒரு சட்டக்கல்லூரியும், ஒரு வேளாண் கல்லூரியும் அமைக்கப்படும்.

39.    அனைத்து மாவட்டங்களிலும் மகளிர் அரசு கலை அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும். முதல்கட்டமாக 2018-19ஆம் ஆண்டில் 10 மாவட்டங்களில் மகளிர் கல்லூரிகள் தொடங்கப்படும்.
தமிழ்நாடு - ஆந்திரா ஒருங்கிணைந்த தொழில் மண்டலம்

40.    தமிழ்நாட்டில் திருபெரும்புதூர் முதல் கும்மிடிப்பூண்டி வரையிலான பகுதிகள் சிறப்புப் பொருளாதார மண்டலங்களாக உருவெடுத்துள்ளன. இப்பகுதியையொட்டிய ஆந்திர மாநிலத்தின் ஸ்ரீசிட்டியும் சிறப்புப் பொருளாதார மண்டலமாக உருவெடுத்துள்ளது. அதேபோல், வேலூர் மாவட்டத்தையொட்டிய இருமாநில எல்லைகளிலும் புதிய தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

41.    தமிழ்நாடு- ஆந்திர மாநில எல்லையில் உள்ள தொழில் பகுதிகளை ஒருங்கிணைந்த தொழில்மண்டலமாக அறிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆந்திர அரசுடன் பேச்சு நடத்தி மற்ற விஷயங்கள் முடிவு செய்யப்படும்.

42.    இருமாநில தொழில்பகுதிகளையும் ஒருங்கிணைப்பதன் மூலம் தொழிற்சாலைகளுக்கு தேவையான  கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த முடியும். இதனால் இரு மாநிலங்களிலும் தொழில் முதலீடு குவியும்.

----------------------
தொழில் வளர்ச்சி
----------------------

43.    தமிழ்நாட்டில் புதிய தொழில் தொடங்குவதற்கான அனுமதி ஒற்றைச்சாளர முறையில் 3 வாரங்களில் வழங்கப்படும். ரூ.100 கோடிக்கும் அதிக மதிப்புள்ள திட்டங்களில் முதலீட்டாளர்களுக்கு உதவ முதலமைச்சர் அலுவலகத்தில் தனிப்பிரிவு ஏற்படுத்தப்படும்.

44.    தொழில் முதலீடு செய்பவர்களை சந்தித்து பேச முதலமைச்சர் வாரம் 3 மணி நேரம் ஒதுக்குவார்.

45.    தொழில் முதலீட்டை ஈர்க்கும் வகையில் தமிழகம் 5 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு மண்டலமும் ஒரு பொருளாதார ஆணையரகமாக செயல்படும்.

46.    ஒவ்வொரு மண்டலத்திலும் தலைமைச் செயலாளர் நிலையிலுள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர் பொருளாதார ஆணையராக செயல்படுவார்.

----------------------
ஒரு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு
----------------------

47.    வேலைவாய்ப்பு அலுவலகங்களில் வேலை கேட்டு காத்திருக்கும் 83.33 லட்சம் இளைஞர்களில் சுய தொழில் தொடங்க விருப்பம் உள்ளவர்களுக்கு ரூ. 5 லட்சம் வரை கடன் வழங்கப்படும். இதற்காக சுயதொழில் முதலீட்டுக் கழகம் என்ற புதிய அமைப்பு தொடங்கப்படும்.
48.    தமிழ்நாட்டில் அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு கோடி பேருக்கு வேலை வழங்கும் நோக்குடன் சிறப்புத்திட்டம் ஒன்று செயல்படுத்தப்படும்.

49.    இத்திட்டத்தின்படி தமிழகத்தை சர்வதேச தளவாடக் கிடங்கு மையமாக மாற்றுதல், சுற்றுலா மற்றும் மென்பொருள் சார்ந்த சேவைகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

----------------------
விவசாயம்
----------------------

50.    வேளாண்மைக்குத் தேவையான தரமான விதைகள், உரம், பூச்சிக்கொல்லி மருந்து உள்ளிட்ட அனைத்து இடுபொருட்களும் இலவசமாக வழங்கப்படும்.

51.    விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் தடையின்றி பயிர்க்கடன் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். நடப்பாண்டில் ரூ.12,000 கோடி பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

52.    விவசாய வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு ஒவ்வொரு ஊராட்சிக்கும் ஒரு டிராக்டர் இலவசமாக வழங்கப்படும். இதை விவசாயிகள் உழவுப் பணிகளுக்காக கட்டணமின்றி பயன்படுத்திக் கொள்ளலாம்.

53.    நீர்ப்பாசனத் திட்டங்களை செயல்படுத்துவதற்கான செலவில் 50 விழுக்காடு மானியமாக வழங்கப்படும்.

----------------------
உழவர்கள் தற்கொலை இல்லா ஆண்டு
----------------------

54.    2017-18 ஆம் ஆண்டை உழவர்கள் தற்கொலை இல்லாத ஆண்டாக மாற்ற வேண்டும் என்பற்காக கீழ்க்கண்ட அம்சங்களைக் கொண்ட சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்.

*    வேளாண்மைக்குத் தேவையான அனைத்து இடுபொருட்களையும் இலவசமாக வழங்குதல்.
*    வேளாண் விளைப்பொருட்களுக்கு நியாயமான விலை வழங்குதல்.
*    கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் வழங்கவேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாகப் பெற்றுத் தருதல்.
*    கூட்டுறவு வங்கிகளில் உழவர்கள் வாங்கிய பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்ட நிலையில், பொதுத்துறை வங்கிகளில் வாங்கிய கடன் சுமையிலிருந்தும் உழவர்களை விடுவித்தல்.
*    இயற்கைச் சீற்றங்களால் விவசாயம் பாதிக்கப்படும்போது, அதன் பாதிப்பு விவசாயிகளைத் தாக்காத வகையில், பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்தி இழப்பீடு வழங்குதல்
ரூ. 5 கோடி இழப்பீடு

55.    இந்த நடவடிக்கைகள் மூலம் விவசாயிகள் தற்கொலைகளை தடுக்க  முடியும் என்பது எங்கள் நம்பிக்கை. இதையும் தாண்டி வேளாண்மை சார்ந்த  பாதிப்புகள் காரணமாக விவசாயிகள் எவரேனும் தற்கொலை செய்துகொண்டால், அது அரசின் தோல்வியாகக் கருதப்பட்டு, அந்த உழவரின் குடும்பத்திற்கு ரூ.5 கோடி இழப்பீடு வழங்கப்படும்.

56.    2016-17-ஆம் ஆண்டில் தற்கொலை செய்து கொண்டும், அதிர்ச்சியால் மாரடைப்பு ஏற்பட்டும் உயிரிழந்த 300-க்கும் கூடுதலான விவசாயிகளின் பட்டியல் மாவட்ட வாரியாக தயாரிக்கப்பட்டு, இம்மாத இறுதிக்குள் அரசிடம் தாக்கல் செய்யப்படும். அதன்பின் அடுத்த மாத இறுதிக்குள் அவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வீதம் இழப்பீடு வழங்கப்படும்.

----------------------
வறட்சியால் பாதிக்கப்பட்ட உழவர்களுக்கு இழப்பீட்டுத் திட்டம்
----------------------

57.    வறட்சியால்  உழவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளைப் போக்கும் வகையில் நிவாரணத் திட்டம் ஒன்றைச் செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன் விவரம் வருமாறு:

அ.    வறட்சியால் பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.25,000 வீதம் இழப்பீடு வழங்கப்படும்.
ஆ.    கரும்புக்கு ஏக்கருக்கு ரூ.90,000 வீதமும், நிலக்கடலைக்கு ரூ.25,000 வீதமும் இழப்பீடு வழங்கப்படும்.
இ.    பிற பணப்பயிர்களுக்கு அவற்றின் சந்தை மதிப்புக்கு ஏற்ப ஏக்கருக்கு ரூ.1 லட்சம் வரை இழப்பீடு வழங்கப்படும்.
ஈ.    நிலமற்ற ஏழைத் தொழிலாளர்கள், நிலம் இருந்தும் வறட்சி காரணமாக சாகுபடி செய்யாத சிறு, குறு விவசாயிகள் ஆகியோருக்கு ஒருமுறை உதவியாக ரூ.25,000 நிதியுதவி வழங்கப்படும்.
ஊ.    வறட்சியால் பாதிக்கப்பட்ட உழவர்களின் கூட்டுறவுப் பயிர்க்கடன்கள் எந்த நிபந்தனையும் இன்றி முழுமையாக தள்ளுபடி செய்யப்படும்.

----------------------
பொதுத்துறை வங்கிக்கடன் தள்ளுபடி
----------------------

58.    பொதுத்துறை வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன்களில், மூலதனக் கடன்கள் தவிர ரூ.22,000 கோடி பயிர்க்கடன்கள் மட்டும் தள்ளுபடி செய்யப்படும். இந்த தொகையை பொதுத்துறை வங்கிகளுக்கு  வட்டியுடன் சேர்த்து 5 சம தவணைகளில் தமிழக அரசு வழங்கும்.

59.    கூட்டுறவு வங்கிகள் மூலம் நடப்பு ஆண்டில் ரூ.12,000 கோடி கடன் வழங்கப்படும்.

----------------------
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி இல்லை
----------------------

60.    ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு நெடுவாசல் மக்களும், உழவர் அமைப்புகளும் எதிர்ப்புத் தெரிவித்து வருவதால், இத்திட்டத்திற்கு அனுமதி அளிப்பதில்லை என்று தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது. அரசின் இந்த முடிவு, மத்திய அரசுக்கு  தெரிவிக்கப்படும்.

61.    தமிழ்நாட்டில் எண்ணூர் - நாகப்பட்டினம், நாகப்பட்டினம் & மதுரை, நாகப்பட்டினம் - தூத்துக்குடி, திருவள்ளூர் - பெங்களூர் ஆகிய 4 வழித்தடங்களில் 1,175 கிலோமீட்டர் நீளத்திற்கு எரிவாயு குழாய்ப் பாதை அமைக்க இந்தியன் ஆயில் நிறுவனம் முடிவு செய்திருக்கிறது. இத்திட்டத்தால்  விளைநிலங்கள் பாதிக்கப்படும் என்பதால் இதற்கு அளிக்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்படும்.

62.    இத்திட்டத்தை மாற்றியமைத்து விளைநிலங்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் செயல்படுத்த இந்தியன் ஆயில் நிறுவனம் முன்வந்தால், அதற்கு அனுமதி தருவது குறித்து அரசு ஆராயும்.

63.    கேரள மாநிலம் கொச்சியிலிருந்து, கர்நாடக மாநிலம் மங்களூருக்கு சேலம், கோவை உள்ளிட்ட 7 மாவட்டங்கள் வழியாக எரிவாயுக் குழாய் பாதை அமைக்கும் திட்டமும் வேளாண்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், அத்திட்டத்தின் பாதையையும் மாற்றி அமைக்கும்படி மத்திய அரசை, தமிழக அரசு கேட்டுக்கொள்ளும்.

----------------------
அத்திக்கடவு -அவினாசி திட்டம்
----------------------

64.    திருப்பூர், ஈரோடு மாவட்டங்களுக்குப் பயனளிக்கும் அத்திக்கடவு - அவினாசித் திட்டம் ரூ.3523 கோடி செலவில் மாநில அரசின் நிதியில் செயல்படுத்தப்படும். இத்திட்டத்திற்கு நடப்பாண்டில்  ரூ.1500 கோடி ஒதுக்கப்படும்.

----------------------
காவிரி - அமைச்சர்கள் குழு
----------------------

65.     காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்த வழக்கில் உச்சநீதிமன்றம் ஏப்ரல் மாதம் தீர்ப்பளிக்க உள்ளது. அதன் பிறகும் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் மத்திய அரசு  காலதாமதம் செய்தால் அதுகுறித்து மத்திய அரசுடன் பேச்சு நடத்தி வாரியம் அமைக்கப்படுவதை உறுதி செய்வதற்கான சட்ட அமைச்சர் தலைமையில் அமைச்சர்கள் குழு அமைக்கப்படுகிறது.

66.     காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு என்ற இடத்தில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்திருக்கிறது. ரூ.5,912 கோடி செலவில் இத்திட்டத்தைச் செயல்படுத்த கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது. இத்திட்டத்தை தடுத்து நிறுத்தும் பணிகளையும் சட்டஅமைச்சர் தலைமையிலான அமைச்சர்கள் குழு மேற்கொள்ளும்.

67.    முல்லைப்பெரியாற்றின் நீர்மட்டத்தை இந்த ஆண்டு இறுதிக்குள் 152 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.

----------------------
சீமைக்கருவேல மரங்களை ஒழிக்க சிறப்புச் சட்டம்
----------------------

68.     தமிழ்நாட்டில் வேளாண்மைக்கும் சுற்றுச்சூலுக்கும் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்திருக்கும் சீமைக் கருவேல மரங்களை ஒழிப்பதற்காக சிறப்புச் சட்டத்தை நிறைவேற்றும்படி, சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை 27.02.2017அன்று ஆணையிட்டிருக்கிறது. உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை மதித்து, நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரிலேயே இச்சட்டம் நிறைவேற்றப்படும்.

69.    சீமைக் கருவேல மரங்களை அகற்றுவதைவிட, அடியோடு அழிப்பதுதான் நிரந்தர தீர்வு ஆகும். பிரேசில், ஆஸ்திரேலியா, சிரியா ஆகிய நாடுகளில் கருவேல மரங்கள் ஒழிக்கப்பட்டு வருவதால், அதே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, தமிழ்நாட்டில் சீமைக் கருவேல மரங்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

70.    யூகலிப்டஸ் தைல மரங்களும், சீமைக் கருவேல மரங்களுக்கு இணையாக நிலத்தடி நீரை உறிஞ்சும் தன்மை கொண்டவை என்பதால், அவற்றை வளர்க்கத் தடை விதிக்கப்படும்.

----------------------
ஊழல் ஒழிப்பு
----------------------

71.     ஊழலை ஒழிப்பதற்காக 12 அம்சத் திட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு துறையிலும் அதன் தலைமை அதிகாரி ஊழல் ஒழிப்பு அதிகாரியாக அறிவிக்கப்பட்டு, அவரிடம் ஊழல் ஒழிப்பு பொறுப்பு ஒப்படைக்கப்படும். ஏதேனும் துறையில் ஊழல் நடந்தால் அதற்கு அதன் தலைமை அதிகாரியே பொறுப்பாவார். இதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

72.     ஊழலை ஒழிப்பதற்கான இன்னொரு முக்கிய நடவடிக்கையாக தமிழகத்தில் லோக் அயுக்தா அமைப்பு ஏற்படுத்தப்படும். அதன் முக்கிய அம்சங்களில் சில பின்வருமாறு:

*    லோக் அயுக்தா தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்பாக இருக்கும்.
*    முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் லோக்அயுக்தா வரம்பிற்குள் கொண்டுவரப்படுவர்.
*    ஊழல் வழக்குகள் 6 மாதங்களுக்குள் விசாரித்து தீர்ப்பளிக்கப்படும்.
*     ஊழல் அதிகாரிக்கு அதிகபட்சமாக ஆயுள்தண்டனை வரை விதிக்கப்படுவதுடன், அவரது ஊழலால்  அரசுக்கு ஏற்பட்ட இழப்பும் அவரிடமிருந்து வசூலிக்கப்படும்.   

73.    பொதுமக்களுக்கு அனைத்து வகையான அரசு சேவைகளும் உரிய நேரத்தில் கிடைப்பதை உறுதி செய்யும் நோக்குடன் பொதுச் சேவைபெறும் உரிமைச் சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றப்படும்.

பகுதி 2:  https://www.facebook.com/DrRamadoss/posts/707360939428195:0