Friday, 22 July 2016

காதல் கதை பகுதி 3

(இன்று மனோகரன் மான்செஸ்டரிலிருக்கும் தனது உறவினர்களின் வீட்டுக்குப் போய்விட்டான்.)
காதல்  கதை பகுதி  2

அவளைத் தனது வீட்டுக்குக் கூட்டிக் கொண்டுபோய்ச் சமைத்துக் கொடுக்கவேண்டுமென்று ஆசைப் பட்டான்.

அவளும் சரி என்று நீண்ட நேர யோசனையின் பின் சொல்லியிருக்கிறாள்.அவள் இவனின் வேண்டுகோளுக்கு, உடனடியாகச் சம்மதம் தெரிவிக்கவில்லை.

அவள் தயங்கியபோது,’என்னில் நம்பிக்கையில்லையா?’ சிவசங்கர் வாய்விட்டுக் கேட்டுவிட்டான்.

‘அப்படியெல்லாம் சொல்லவேண்டாம்’ என்று மழுப்பினாள்.

கொஞ்ச தயக்கத்தின் பின் இவனின் வீட்டுக்குச் சாப்பாட்டுக்குவரச் சம்மதித்தாள்;.

அவளுக்காகச் சிவசங்கர் காத்திருக்கிறான். மழையையும் குளிரையும் பொருட்படுத்தாமல் மனதில் பொங்கும் பல உணர்வுகளுடன் அவளுக்காகக் காத்திருக்கிறான்.

‘இறுக்கமாகவும் நெருக்கமாகவும் பழகச் சந்தர்ப்பம் வந்தால் விடாதே,ஆனால் பிடி கொடுக்காமல் நடந்து கொள்’ மனோகரன் தானொரு பாலியல் பேராசிரியர் மாதிரிச் சிவசங்கரின் காதல் எப்படி நடைமுறைப் படுத்தப்படவேண்டும் என்று புத்தி சொன்னான்.

மனோகரன் தன்னிடமுள்ள உண்மையான சினேகிதத்திற் சொல்கிறானா அல்லது மனோகரனுக்கு ஒரு பெண் சினேகிதிகளுமில்லாத ஆதங்கத்தில் சிவசங்கரைக் குழப்புகிறானா என்று அவனாற் புரிந்து கொள்ள முடியவில்லை.

ஆனாலும் அவளைக் கண்டதும் அவனைப் பற்றிப் பல விடயங்களை அவளுடன் பகிர்ந்து கொள்ளவேண்டுமென்று அவன் நினைத்தான் லண்டனுக்கு வர அவன் பட்ட கடன், குடும்பப் பொறுப்பக்கள் முடியவிட்டுத் தானும் படித்து லண்டனில் ஒரு பட்டதாரியாக வரும் தன் இலட்சியத்தை அவளுக்குச் சொல்லவேண்டுமென்ற நினைத்தான்.லண்டனில் அவனது உப்புச் சப்பற்ற வெற்று வாழ்வுக்கு அவள் ஒரு கலங்கரை விளக்காக வந்திருக்கிறாள் என்ற அவனது உண்மையான உணர்வை அவளுக்குக் கட்டாயம் சொல்லவேண்டும் என்ற நினைத்தான். அப்படிச் சொன்னால்,அவன் எவ்வளவு தூரம் அவளை நெருங்கிப் பழக விரும்புகிறான் என்பதை அவள் புரிந்து கொள்வாள் என்ற அவன் நம்பினான்.

மனோகரனிடம் அவற்றையெல்லாம் அவன் பகிர்ந்து கொள்வது கிடையாது.

அவனுக்குத் தான் சிந்தியாவைச் சாப்பாட்டுக்க அழைத்ததசை; சிவசங்கர் சொன்னான். சிவசங்கர் ஏன் புதிய சாப்பாட்டுத் தட்டுகளை வாங்கினான் என்ற மனோகரன் கேள்விக் குறியுடன் பார்த்தபோது, வேறு வழியில்லாமல் சிவசங்கர் உண்மையைச் சொல்லவேண்டி வந்தது.

அதைக்கேட்டதும் மனோகரனின் முகத்தில் பரவிய உணர்வு அவனது பொறாமையா அல்லது கிண்டலா என்று சிவசங்கருக்குப் புரியவில்லை.

‘ஐ லவ் யு என்று சொன்னால் இவளவை ஆரோடும் படுத்துப்போட்டுப் போவாளவை, உனக்குப் பெரிய பொறுப்புக்கள் இருக்கிறது என்பதை மறந்துபோகாதே ‘ மனோகரன் பெரிய அனுபவசாலியாகச் சொன்னான்.

சுpவசங்கர் தனது பாலியவயதில், சுரப்பிகளின் தூண்டுதல்களால், கோயிற் திருவிழாக்களிலும், நெருக்கமான கடைத்தெருக்களிலும் சாடையாக ‘உரஞ்சிப் பார்த்த’ குறும்புத்தனமான சேட்டைகள் ஞாபகம் வந்தன. சிந்தியாவுடன் பழகும்போது அப்படியொரு சேட்டைத்தனமான உணர்வுகளும் அவனுக்கு வரவில்லை.

மனோகரன் சொல்வதுபோல், அவனின் பாலியல் வெறிக்கு அவனுடன் அன்புடன்(?,), நேசத்துடன்(?),முக்கியமாக மரியாதையுடன் அவளைப் ‘பாவிக்கப் பார்க்கும்’ எந்த யோசனையும் எள்ளளவும் அவன் மனதிற் கிடையாது.

ஆனால் அவளில் அவனுக்குண்டான நுண்ணியமான இணைவான நெருக்கத்தை அவன் மறுக்கத் தயாராகவில்லை.

அவள் இன்னும் வரவில்லை. மழை சோ எனப் பெய்து கொண்டிருக்கிறது. வரமாட்டாளா? அவன் மனம் சிறகடித்தது.

என்னில் அவளுக்கு நம்பிக்கையில்லையா?

நான் கண்ணியமற்றவன் என்ற அவள் நினைக்குமளவுக்கு நான் பழகவில்லையே? அவன் பல கேள்விகளைத் தனக்குள் கேட்டுக் கொண்டான்.

அவன் தனது கேள்விகளுக்கு மறுமொழி தேடமுதல் அவள் மழையில் குடையைப் பிடித்துக்கொண்டு வருவது தெரிந்தது.

‘வெரி சாரி சங்கர்’ அவள் குடையை மடித்துக் கொண்டு சொன்னாள். அவள் முகத்தில் விழுந்த சில மழைத்துளிகள் முத்துக்களாக அவள் கன்னங்களில் உருண்டன.

அவன் கடிகாரத்தைப் பார்த்தான்.

‘ ஐ ஆம் வெரி சாரி’ உண்மையான மன்னிப்புக் கேட்கும் அவள் குரலில் அழகிய வீணையொலித்தது.

அவன் மறுமொழி சொல்லாமல் அவள் கன்னத்தில் உருளும் மழைத்துளிகளைப் பொறாமையாகப் பார்த்தான்.

அவள் தர்ம சங்கடத்துடன்,’ எதாவது குடிக்கப் போவோமா?’ அவள் பார்வை பக்கத்திலிருந்த ‘பப்பில்’ பதிந்தது.

அங்கு போனதும் அவன் தனக்கு பியரும் அவள் ஆரன்ஞ் சாறும் ஓர்டர் பண்ணிக் கொண்டார்கள்.

கடந்த ஒன்றிரண்டு மாதங்களில் சிலவேளைகளில் இப்படி அவர்கள் ஒன்றாகப் ‘பப்புக்குப்’ போயிருக்கிறார்கள்.

‘சங்கா’ அவள் குரலில் தயக்கம்.

அவன் அவளை ஏறிட்டுப் பார்த்தான்.

;நான் உன்னுடன் உனது வீட்டுக்குச் சாப்பிட வராவிட்டால் கோபித்துக் கொள்ள மாட்டாயே?’

அவன் தனது அதிருப்தியை மறைத்துக் கொள்ளத் தர்மசங்கடத்துடன் ஒரு புன்முறுவலைத் தன் முகத்திற் தவழவிட்டான்.

‘நான் உன்னைக் கட்டாயப் படுத்தவில்லையே’ அவன் எதிர்பார்ப்புக்குக் கிடைத்த ஏமாற்றத்தை மறைத்துக் கொண்டு சொன்னான்.

அவன் ஒரு நடிகனல்ல. அவனது ஏமாற்றத்தை அவள் புரிந்து கொண்டாள்.

‘நான் நீண்டநேரம் யோசித்தேன்’ அவள் அவனை நேரே பார்த்துக்கொண்டு சொன்னாள். அவள் கண்கள் அழகானவை. பளிங்குபோன்ற அவள் முகத்தில் பதித்து வைத்த வைரம்மாதிரி அவனைப்பார்த்தன.

‘எதைப்பற்றி’

‘எங்களைப்பற்றி’ அவள பார்வை அவனில் இறுக்கமாகப் பதிந்து கிடந்தது.

‘எங்களைப்பற்றியா?’ அவன் குரலில் அவள் அவனையிணைத்து ‘ எங்களைப் பற்றியது’ என்ற சொன்னது அவனை நெகிழப் பண்ணியது.

‘ஆமாம் எங்கள் உறவைப் பற்றி’ அவள் அழுத்தமாகச் சொன்னாள்.

‘ நான் உன்னைச் சாப்பிடத்தான் என் வீட்டுக்கு அழைத்தேன்’ அவனுக்கு அவளின் பேச்ச தர்மசங்கடத்தையுண்டாக்கியது. மடமடவென்ற பியரைக் குடித்தான்.

‘கட்டிலுக்க வரச்சொல்லிய இன்விட்டேஷன் உனது கண்களிற் தெளிவாக இருந்தது’ அவள் நிதானமாக அவனைப் பார்த்தபடி சொன்னாள். அதற்காக நான் உன்னில் கோபப்படவில்லை என்ற மறைமுக ஆறுதல் அவள் தொனியில் பிரதிபலித்தது.

அவன் மௌனமானான். கொஞ்சம் புத்திசாலியாக இருந்திருக்கக் கூடாதா? தன்னைத்தானே தன் மனதில் திட்டிக் கொண்டான்.

‘சாரி சங்கர் நான் இப்போது உனது வீட்டுக்கு வரமுடியாது’

‘ ஏன் என்ற தெரிந்து கொள்லாமா?’ அவனது ஏமாற்றத்தை, அவமான உணர்வை மறைத்துக்கொண்டு அவன் கேட்டான்.

‘ நாங்கள் இப்போது நல்ல சினேகித்களாகப் பழகுகிறோம்..அப்படியே கொஞ்சக் காலம் இருக்கமுடியாதா?’

அவள் குரலில் ஏதோ ஒரு கெஞ்சல். வாழ்க்கை முழுதும் நல்ல சினேகிதர்களாக இருக்க முடியாதா என்று அவள் கேட்கவில்லை. கொஞ்ச காலம் இப்படியே இருக்க முடியாதா என்று கேட்கிறாள்.

‘ சிந்தியா ஐ லவ் யு’ அவன் பட்டென்று சொன்னான்.அவனையறியாமல் துள்ளி வந்த வார்த்தைகளின் பிரதிபலிப்பு எப்படியிருக்கும் என்று அவன் சிந்திக்கவில்லை. சிந்திக்கும் மனநிலையிலும் இல்லை.

அவன் அப்படிச் சொல்லவேண்டுமென்று கனவிலும் நினைத்திருக்கவில்லை. அநியாயமான மனோகரன் அப்படித்தானே சொல்லச் சொன்னான்ஃ

அப்படிச் சொல்வதற்கான விதை விதைத்த மனோகரனிலும், அதைத் தன் மனதிலிருந்து அகற்றாமலிருந்த தன்னிலும்; அவனுக்குக் கோபம் வந்தது.

அவன் அப்படிச் சொன்னதும் அவள் ஒருதுளியும் பதற்றப் படாமல் அவனை அன்புடன் பார்த்தாள்.

‘சிவசங்கர் லவ் இஸ் வெரி ஸ்பெசியல்’ அவள் கொஞ்ச நேரம் மௌனமானாள். இருவரும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக் கொள்ளவில்லை.

அவனுக்கு அங்கிருப்பதே தர்மசங்கடமாகவிருந்தது.

‘காதல் உடம்பின் இணைவு மட்டுமல்ல.. உள்ளங்களின் இணைவு’

உறவுகளை. இணைவுகளை, பாலியல் செயற்பாடுகளை ஆண்களின் பார்வையில், பரிணாமத்தில் பார்த்தும் வழக்கப்படுத்தியும் வந்த கலாச்சாரத்திலிருந்த சிவசங்கர் ஒரு மாணவன் மாதிச் சிலையாக அமர்ந்திருந்த அவள் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தான்.

(தாயகம் -கனடா பிரசுரம்-1.1.1993. இந்தக் கதை ‘ஐ லவ் யு’ என்ற பெயரில் வெளிவந்தது. சில திருத்தங்களுடன் மேற்கண்ட தலையங்கத்துடன் எழுதப் பட்டிருக்கிறது) 

No comments:

Post a Comment