சிவசங்கர் அவளுக்காகக் காத்திருக்கிறான். தன்னைச் சுற்றிய உலகை மறந்து அவளுக்காகக் காத்திருக்கிறான். கடந்த சில நாட்களாக மழை அடிக்கடி பெய்கிறது.அத்துடன் மார்கழிமாதக்குளிர், அவன் அணிந்திருக்கும் உடைகளைத் தாண்டி அவன் எலும்புகளில் உறைகிறது. அவன் தனது கைகளைக்குளிரிலிருந்து பாதுகாக்கத் தன் ஜக்கட் பாக்கட்டுகளுக்குள் புதைத்துக்கொண்டான்.
அவளைப் பற்றிய அவனின் நினைவுகளைப் புதைத்துக்கொள்ள அவனின் உலகத்தில் எந்த இடமுமில்லை.
அவளைச் சந்தித்த நாளிலிருந்து அவள் அந்த இடத்துக்கு வருவதற்;கு நேரம் தவறியதை அவன் அறியான்.
அவன் அவளைச் சந்தித்த நாளிலிருந்து அவள் சரியான நேரத்துக்கு இந்த பஸ் ஸ்டாப்புக்கு வருவது அவனுக்குத் தெரியும்..
இருவரும் ஒருத்தொருக்கொருத்தர் அறிமுகமாகிப் பேசத் தொடங்கி சில மாதங்கள்தானாகின்றன.
அவள் அவனைக் காப்பாற்றச் செய்த உதவிக்கு.அவன் சொன்ன நன்றிக்குப்பின் அவளைக் கண்டால்’ ஹலோ’ சொல்லத் தொடங்கியவன் இன்று அவள் வருகைக்காக் காத்திருக்கிறான்.
அவளின் காதலுக்காகக் காத்திருக்கிறான்
இன்னொருதரம் மழை தூறத் தொடங்கிவிட்டது.அருகிலிருக்கும் பாதாள ட்ரெயினுக்குப் போகிறவர்;கள் அவனைத்தாண்டி முண்டியடித்துக்கொண்டு விரைகிறார்கள்.
‘இவர்கள் யாராவது என்னைப்போல் யாரோ ஒருத்திக்காக எங்கேயோ காத்திருப்பார்களா?’
சிவசங்கர் தன்னைத்தானே கேட்டுக்கொள்கிறான்.
அவன் அவளைச் சந்திப்பதை அவனுக்குத் தெரிந்த இலங்கைத் தமிழர்கள் பார்த்து விடக் கூடாது என்ற அவன் அடிமனம் குறுகுறுக்கிறது.சங்கர் தவிப்புடன் அங்கும் இங்கும் பார்க்கிறான்.
பாதாள ட்ரெயினின் பாதைமுடிவில் ஒரு கிற்றார்வாத்தியக்காரனின் ஜோன் வில்லியத்தின் உருக்கமான ராகம் அவன் மனதை நெருடுகிறது. அவள் வராமலே விட்டு விடுவாளோ?
அப்படி நினைத்ததும் கிற்றார் ராகத்தில் ஏதோ அபஸ்வரம் விழுந்ததுபோல் அவன் மனம் குழம்புகிறது.
அவள் பெயர் சிந்தியா. அது ஆங்கிலப் பெயரா அல்லது ஐரிஷ், ஸ்காட்டிஷ் பெயரா என்று அவனுக்குத் தெரியாது.
‘எனது பெயர் சிந்தியா ஸடிவன்ஸன்’ என்று அவள் தன்னை அறிமுகம் செய்து கொண்டபோது,அது அவனுக்கு ‘இந்தியா’என்ற மாதிரிக் கேட்டது.
அதை அவன் தனது நண்பன் மனோகரனுக்குச் சொன்னபோது அவன் சங்கரை ஏறிட்டுப்பார்த்தான். மனோகரனுக்கு,’இந்திய அமைதிப்படை’ இலங்கைக்கு வந்து செய்த அக்கிரமங்களுக்குப் பின் ‘இந்தியாவைப்’ பிடிக்காது.
‘இந்திய வடக்கத்தியாரை’ அவன் சந்தர்பம் வந்தபோதெல்லாம் வைது முடிப்பான்.
சிந்தியாவின் பெயர்,’இந்தியா’மாதிரி ஒலித்ததால் அவளை ஒரு நாளும் நேரிற் பார்க்காமலேயே அவளைத் தனக்குப் பிடிக்காது என்பதை மனோகரன்; காட்டிக்கொண்டான்.
மனோகரனுக்கு,சிந்தியாவை மட்டுமல்ல,பெரும்பாலான மனிதர்களை மதிக்கவோ அல்லது புரிந்து கொள்ளவோ முடியாத அளவு தலைக்கனம் பிடித்தவன் என்பதை சங்கர் உணர்வான். ஆனாலும் அவர்கள் சினேகிதர்கள். நாட்டை விட்டோட, யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு வந்தபோது சங்கர் மனோகரனைச் சந்தித்தான். அவனும் நாட்டை விட்டோடும் முயற்சிகளில் அலைந்துகொண்டிருந்தான். தான் ஒரு இயக்கத்திலிருந்ததாகவும் இப்போது இவனை எதிரிகள்’போட்டுத் தள்ளத்’ தேடித்திரிவதாகவும் அதனால் நாட்டை விட்டோட அவன் நாயாய் அலைந்து கொண்டிப்பதாகச் சங்கருக்குச் சொன்னான்.
இலங்கையிலிருந்து வெளிநாடு செல்ல, ஏஜென்சிக்காரனைத்தேடி அவனிடம் பணம் கொடுத்து. அதைத் தொடர்ந்து பல விமானங்கள் ஏறி, பல ஆபிரிக்க நகர்கள் கண்டு லண்டன் எயார்போர்ட்டுக்கு வந்ததம் தங்கள் பாஸ்போர்ட்டைக் கிழிந்தெறிந்து விட்டு அகதிகளாக இங்கிலாந்தில் கால்பதிக்கும்வரை ஒன்றாகத்திரிந்தவர்கள்.
இப்போதும் தோழமை, அத்துடன் ஒருத்தருக்கொருத்தரான உதவிக்காக ஒன்றாக வாழ்பவர்கள்.
ஓரு மனிதனின் படிப்பு,படித்தவர்களின் ஆலோசனைகள்,புத்திசாலிகளுடனான நட்பு என்பன அவனின் சிந்தனையைச் சீராக்குகின்றன என்பது சிவசங்கரனுக்குத் தெரிந்தாலும் தன்னுடன் வாழும் மனோகரனின் பிற்போக்குத்தனமான சிந்தனைகளைப் பெரிதுபடுத்தாமல் வாழப் பழகிக்கொண்டான்.
லண்டனில் வந்திறங்கி புதிய சூழ்நிலை, புதியவாழ்க்கைமுறைகளைக் கிரகிக்க மிகவும் அவதிப்பட்டுக்கொண்டிருக்கும்போது தன்னுடன் வந்த,கிட்டத்தட்டத் தன்னை மாதிரியே லண்டன் அனுபமுள்ள மனோகரனைத் தவிர்த்துக்கொள்ள சங்கர் விரும்பவில்லை.மனோகரனின் பெண்கள் பற்றிய அல்லது தமிழ்த்தேசியம் பற்றிய வியாக்கியானங்கள் எரிச்சலைத் தந்தாலும் அவற்றைப் பொறுக்கப் பழகிக்கொண்டான்.
சிந்தியா சிவசங்கரனின் வாழ்க்கையில் நுழைந்தபோது சங்கருக்;கு அந்த புதிய அனுபவம் ஒரு புத்துணர்வைத் தந்தது. மனோகரனிடமிருந்து மனதளவில் தப்ப ஒரு வழிவந்தது அவனுக்குச் சந்தோசமாகவிருந்தது.
அவளைக் கண்டதும் பழகத் தொடங்கியதும் கனவுபோலிருக்கிறது.
லண்டனுக்கு வந்த நாளிலிருந்து, லண்டனின் மத்தியிலுள்ள ஒரு சீக்கிய முதலாளியின் கடையில் வேலை செய்கிறான்.இலங்கையில் பெரிய படிப்பு படிக்காத பையன்கள்செய்யும் கடையில் எடுபடிசெய்யம் வேலையை, யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் படித்த படிப்பை, சிங்கள அரசின் கெடுபிடியால் அரைகுரையாக முடித்துக்கொண்டு, உயிர் தப்ப நாட்டை விட்டோடி வந்த சங்கர் செய்கிறான்.
சுpவசங்கர் ஒரு சாதாரண ஆசிரியரின் மகன். அரசியல் என்று அலையாமல் பல்கலைக்கழகத்தில் தனது எதிர்கால மலர்ச்சியைக் கனவு கண்டுகொண்டு படிக்கும் காலத்தில், அவன் ஏதோ ஒரு இயக்கத்திலிருப்பதாக அரசாங்க புலனாய்வுத் துறைக்கு யாரோ ‘அள்ளி வைக்க’ அவனும் உயிரைக் காப்பாற்ற, பெற்றோர் உற்றோரைவிட்டு ஓடவேண்டி வந்தததை அவளுக்குச்; சொன்னான்.
அப்பாவின் உபதேசம், அம்மாவின் அழுகை சகோதரிகளின் நகைகள் எல்லாம் சேர்த்து அவனை லண்டனுக்கு அனுப்பி வைத்திருக்கிறது.
குடும்பப்பொறுப்பும் ஏஜென்சிக்காரனுக்குக்கொடுக்கவேண்டிய கடனும் கொடுக்க அவன் மாடாக உழைத்தான்.சீக்கிய முதலாளி ஒருநாளைக்கு அவன் செய்யம் பன்னிரண்டு மணித்தியால வேலைக்கு பதினைந்து பவுண்ஸ்கள் தருவதாகச் சொன்னபோது, ஆறுநாள் வேலைக்குத் தொண்ணூறு பவுண்ஸ்கள் கிடைத்தால், அதில் வாடகைக்கும் சாப்பாட்டுக்கும் நாற்பது பவுண்ஸ்கள் போனாலும் ஐம்பது பவுண்ஸ்கள் மிச்சம் பிடித்து எப்படியும் கடன்களை கொஞசம் கொஞசமாக அடைக்கவேண்டுமென்று கஷ்டப்பட்டான்;.
வாழ்க்கையில் எத்தனையோ கஷ்டப்பட்டு உயிர் தப்பிவரும் இலங்கைத் தமிழ் இளைஞர்களைச் சுரணடும் இந்திய முதலாளியை மனோகரன் வழக்கம்போல் திட்டித் தீர்த்தான்.
சீக்கிய முதலாளியின்; கடை, லண்டனின் மத்தியிலிருக்கிறது.உல்லாசப் பிரயாணிகளுக்கக் கவர்ச்சியான பொருட்களை விற்கும் கடை. ஓரே பிசியாகவிருக்கம். சங்கரின்வேல. பெட்டிகளில் வரும் சாமான்களை எடுத்து அடுக்கி வைப்பதாகும். பெரிய பெட்டிகளைத் தூக்குவதும் அடுக்குவதுமான கஷ்டமான வேலை செய்து விட்டு முதுகு வலியுடன் வீட்டுக்கு வரும்போது, எப்படி எனது கடனை அடைக்கப்போகிறேன் என்று அவன் பெருமூச்சு விடுவான்.
இப்படியான இயந்திர வாழ்க்கை வாழ்வதில் எந்த அர்த்தமும் இருப்பதாக அவனுக்குத் தெரியவில்லை.
அவன் பல்கலைக்கழக மாணவனாக இருந்த காலத்தில்,படித்து ஆளாகி, குடும்பத்தைக் கரையேற்றியபின் தான் ஒரு (அழகிய) பெண்ணைத் திருமணம் செய்து சந்தோசமாக வாழவேண்டுமென்ற பெரும்பாலான இளைஞர்களைப் போலப் பல கற்பனைகள் செய்தான்.அவையெல்லாம் லண்டன் வந்து ஒரு கடையில் வேலைசெய்யும்போது தகர்ந்து விட்டதாக உணர்ந்தான்.
‘ போடா மடையா, இலங்கையில படித்துப் பட்டம் பெற்றாலும் அவர்களுக்கு பெண்கொடுக்காத பெரிய பணக்காரர்கள் லண்டனில் வாழும் மாப்பிள்ளை என்ன வேலை செய்தாலும் பரவாயில்லை என்று இலட்சக்கணக்கில் சீதனம் கொடுத்துத் தங்கள் அழகிய பெண்களை திருமணம் செய்து கொடுக்க விழுந்தடித்து முன்வருகிறார்கள்’ மனோகரன் பெருமையுடன் சொன்னான்.
சுpவசங்கரனோ முன்பின் தெரியாத பெண்ணைச் சீதனத்துக்காகத் திருமணம் செய்வதில்லை என்று சொன்னபோது மனோகரன் ஓஹோ என்று சத்தம்போட்டுச் சிரிக்கத் தொடங்கிவிட்டான்.
‘ நீ வாழத்தெரியாத ஒரு முட்டாள்’ என்று சிவசங்கரைச் சீண்டினான் மனோகரன்.
மனோகரன் இப்படிப் பேசும்போது தனது கோபத்தை மிகக் கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டான் சிவசங்கர்.
(தொடரும்)
No comments:
Post a Comment