Monday, 27 March 2017

மின்வாரிய பணியாளர்கள் நேர்காணலை தாமதிப்பதன் பின்னணியில் ஊழலா? -மருத்துவர். இராமதாஸ் --அறிக்கை---

மின்வாரிய பணியாளர்கள் நேர்காணலை
தாமதிப்பதன் பின்னணியில் ஊழலா?
     -மருத்துவர். இராமதாஸ்
                  --அறிக்கை---

தமிழ்நாட்டில் அரசு எந்திரம் ஒன்று இயங்குகிறதா? என்று வினா எழுப்பும் வகையில் தான் தமிழக அரசின் செயல்பாடுகள் உள்ளன. இயல்பாக நடக்க வேண்டிய அரசின் செயல்பாடுகள் கூட முடங்கிக் கிடப்பதால் அடிப்படை வசதிகளைக் கூட பெற முடியாமல் தமிழக மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

தமிழ்நாடு மின்வாரியத்திற்கு கள உதவியாளர்கள் 900 பேர், மின்சார தொழில்நுட்ப உதவியாளர்கள் 500 பேர், இளநிலை உதவியாளர்கள் 250 பேர், தட்டச்சர்கள் 200 பேர், உதவியாளர்கள் 100 பேர், பரிசோதகர்கள் 100 பேர், உதவி வரைவாளர்கள் 50 பேர், தலா 25 சுருக்கெழுத்தர், எந்திரவியல் உதவியாளர், இளநிலை தணிக்கையாளர் என மொத்தம் 2175 பணியாளர்களை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கையை கடந்த ஆண்டு தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டது. அதைத் தொடர்ந்து இப்பணிகளுக்கான எழுத்துத் தேர்வு கடந்த ஆண்டு ஜூன் மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நடைபெற்றது.

ஆனால், கள உதவியாளர் மற்றும், தொழில்நுட்ப உதவியாளர் பணிகளுக்கான ஆள் தேர்வை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டதால், அப்பணிகள் தவிர மீதமுள்ள 750 பணி இடங்களுக்கான தேர்வு முடிவுகள் 19.10.2016 அன்று வெளியிடப்பட்டன. அவற்றில் உதவி வரைவாளர்,  இளநிலை தணிக்கையாளர்கள், சுருக்கெழுத்தர் உள்ளிட்ட பணிகளுக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 2 முதல் 7-ஆம் தேதி வரை நேர்காணல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அப்போது தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்கு தேர்தல்கள் அறிவிக்கப்பட்டதால் நேர்காணல்கள் ஒத்திவைக்கப்பட்டன. நேர்காணல் தேதி 19.11.2016-க்குப் பிறகு அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால், இன்று வரை நேர்காணல் தேதி அறிவிக்கப்படவில்லை.

முடிவுகள் அறிவிக்கப்பட்ட 750 பணியிடங்களுக்கான தேர்வுகளில் 100 பணியிடங்களுக்கு மட்டும் தான் நேர்காணல் அறிவிக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்டன. மீதமுள்ள 650 பணியிடங்களுக்கு இதுவரை நேர்காணல் அறிவிக்கப்படவில்லை. அதுமட்டுமின்றி தொழில்நுட்பம் சார்ந்த 1425 பணியிடங்களுக்கான ஆள்தேர்வை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை முடிவுக்கு கொண்டு வந்து பணியாளர் நியமனங்களை செய்ய தமிழக அரசு எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை.

மின்வாரியப் பணிகளுக்கான அறிவிக்கை வெளியிடப்பட்டு ஓராண்டுக்கும் மேலாகிவிட்ட நிலையில், இன்னும் ஒரு பணியாளர் கூட நியமிக்கப்படாதது அரசு நிர்வாகம் செயல்படாததையே காட்டுகிறது. தஞ்சாவூர் உள்ளிட்ட 3 தொகுதி இடைத்தேர்தல்கள் முடிந்து நான்கு மாதங்கள் முடிவடைந்து விட்டன. இவ்வளவு நாட்களாகியும் நேர்காணல்களை நடத்தி பணியாளர்களை நியமிக்காததற்கு ஊழல் தான் காரணம் என்று கூறப்படுகிறது. நேர்காணல்கள் அறிவிக்கப்படுவதற்கு முன்பே மின்வாரியத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி அத்துறை அமைச்சருக்கு நெருக்கமானவர்கள் கோடிக்கணக்கில் வசூலித்து விட்டதாகவும், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு புதிய அதிகார மையமாக உருவெடுத்துள்ள சசிகலாவின் உறவினர்கள் தாங்கள் தரும் பட்டியலில் உள்ளவர்களுக்கு மட்டும் தான் வேலை வழங்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதாகவும், அதனால் தான் மின்வாரிய பணியாளர் நியமனங்கள் கிடப்பில் போடப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இது உண்மையென்றால் கண்டிக்கத்தக்கதாகும்.

ஏற்கனவே முந்தைய ஆட்சியில் அரசு பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கு 4362 பேரை தேர்வு செய்வதற்கான போட்டித் தேர்வுகள் 2015 மே 31ஆம் தேதி நடத்தப்பட்டது. அதன்பின் 25 மாதங்கள் ஆகியும் இன்று வரை முடிவுகள் அறிவிக்கப்படவில்லை. இதிலும் பெருமளவில் ஊழல்கள் நடைபெற்று இருப்பது தான் முடிவுகள் அறிவிக்கப்படாததற்கும், பணி நியமனம் நடக்காததற்கும் காரணம் ஆகும்.

திராவிட ஆட்சிகளில் ஊழலில் கொடுங்கரங்கள் எந்த துறையையும் விட்டு வைக்காமல் அபகரித்து வருகின்றன. திறமையாக படித்து நல்ல மதிப்பெண்கள் வாங்கிய மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய வேலைவாய்ப்புகள், ஊழல் காரணமாக திறமையற்றவர்களுக்கு தாரை வார்க்கப்படுகின்றன. இந்த மோசமான அணுகுமுறைக் காலப்போக்கில் அரசு நிர்வாகம் அடியோடு செயலிழக்கவும், சமுகத்தில் புரட்சி ஏற்படவும் வழி வகுத்து விடும்.

எனவே, ஊழல்களையும், முறைகேடுகளையும் ஒதுக்கி வைத்து விட்டு, திறமை மற்றும் தகுதியின் அடிப்படையில் மட்டும் பணியாளர்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.  அதனடிப்படையில் மின்வாரியப் பணியிடங்களுக்கான நேர்காணலை நடத்தியும், அரசு பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்காக முடிவுகளை வெளியிட்டும் தகுதியானவர்களை அரசு நியமிக்க வேண்டும்.

No comments:

Post a Comment