Monday, 27 March 2017

முடங்கி கிடக்கும் விஷன் - 2023: வெள்ளை அறிக்கை வெளியிடுக! -மருத்துவர். இராமதாஸ் ----அறிக்கை----

முடங்கி கிடக்கும் விஷன் - 2023:
வெள்ளை அறிக்கை வெளியிடுக!
     -மருத்துவர். இராமதாஸ்
              ----அறிக்கை----

ஆடம்பரமாக திட்டங்களை அறிவித்து, அதில் எந்த முன்னேற்றத்தையும் எட்டாமல் அடக்கம் செய்வது தான் அதிமுக அரசின் வழக்கம் என்பதற்கு இன்னுமொரு உதாரணமாக தொலைநோக்குத் திட்டம் - 2023 (விஷன்-2023) அமைந்திருக்கிறது. இத்திட்டம் அறிவிக்கப்பட்டு ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்து விட்ட நிலையில், இத்திட்டத்தில் 5% கூட முன்னேற்றம் எட்டப்படாதது கடுமையாக கண்டிக்கத்தக்கது.

2011-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்த ஜெயலலிதா, அதன்பின்  10 மாதங்கள் கழித்து தொலைநோக்குத் திட்டம்-2023 என்ற வளர்ச்சித் திட்ட அறிக்கையை 22.03.2012 அன்று வெளியிட்டார். இத்திட்டத்தின் இலக்குகள் எட்டப்பட்டால் அமெரிக்காவே நமக்கு அடிமையாகும்; ஜப்பான் நம்மிடம் சரணடைந்து விடும் என்றெல்லாம் முழங்கினார். ஆனால், அடுத்த வாரம் இதேநாளில் இத்திட்டம் அறிவிக்கப்பட்டு 5 ஆண்டுகள் நிறைவடைகின்றன. எனினும், இந்த காலத்தில் இத்திட்டத்தில் எந்த அளவுக்கு முன்னேற்றம் ஏற்பட்டிருக்க வேண்டுமோ, அதில் பத்தில் ஒரு பங்கு முன்னேற்றம் கூட எட்டப்படவில்லை. தமிழக அரசின் செயல்திறன் எவ்வளவு என்பதை இதிலிருந்தே அறியலாம்.

உதாரணமாக,  தமிழ்நாடு அடுத்த 11 ஆண்டுகளுக்கு தலா 11% வளர்ச்சியை எட்டும். 2023 ஆம் ஆண்டில் தமிழகத்தின் தனிநபர் வருவாய் ரூ.6.50 லட்சமாக இருக்கும் என்று தொலைநோக்குத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த இலக்கை எட்ட வேண்டுமானால் நடப்பாண்டில் தமிழகத்தின் தனிநபர் வருமானம் நடப்பாண்டில் ரூ.3.63 லட்சம் என்ற இலக்கை எட்டியிருக்க வேண்டும். ஆனால், நடப்பாண்டில் தமிழகத்தின் தனிநபர் வருமானம் உத்தேசமாக ரூ.1,58,072 என கணக்கிடப்பட்டிருக்கிறது. அதாவது இலக்கின்படி எட்டப்பட வேண்டிய வருவாயில் 43.5 விழுக்காட்டை மட்டுமே தமிழக அரசு எட்டியிருக்கிறது.

தனிநபர் வருவாய் அடிப்படையில் தமிழகத்தை முதலிடத்திற்கு கொண்டு வருவதாக  ஜெயலலிதா அறிவித்திருந்தார். ஆனால், தமிழகம் இப்போது 11-ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறது. கோவாவின் தனிநபர் வருவாய் ரூ.4.00 லட்சமாகவும், தில்லியின் தனிநபர் வருமானம் ரூ.3.63 லட்சமாகவும் உயர்ந்துள்ளது. ஆனால், இம்மாநிலங்களின் தனிநபர் வருவாயில் பாதியைக் கூட தமிழகம் எட்டவில்லை.

அனைவருக்கும் பயனுள்ள வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்படும் என்று தொலைநோக்குத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கடந்த ஐந்தாண்டுகளில் 96 லட்சம் பேர் வேலைகேட்டு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் புதிதாக பதிவு செய்துள்ள நிலையில், அவர்களில் 96,000 பேருக்குக் கூட அரசு வேலை வழங்கப்படவில்லை. இதனால் நம்பிக்கை இழந்த சுமார் ஒரு கோடி பேர் வேலைவாய்ப்பக பதிவை புதுப்பிக்காமல் வெளியேறியிருக்கின்றனர். இது தமிழகத்திற்கு மிகப்பெரிய அவமானமாகும்.
குழந்தைகள் இறப்பு விகிதம், தாய்மார்கள் இறப்பு விகிதம் உள்ளிட்ட சுகாதாரக் குறியீடுகள் சிறப்பாக மேம்படுத்தப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த குறியீடுகளில் குறிப்பிடத்தக்க அளவில் எந்த முன்னேற்றமும் இல்லை. மாறாக தருமபுரி, விழுப்புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் கொத்துக்கொத்தாக குழந்தைகள் இறந்த கொடுமை கடந்த காலங்களில் நடந்தது. மாவட்ட அரசு மருத்துவமனைகளிலேயே தாய்-சேய் கவனிப்பு இல்லாத பேரவலம் நிலவுகிறது.

மின்சாரம், போக்குவரத்து, கல்வி, பாசனம், துறைமுகம், விமானநிலையம் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.15 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. அதன்படி 5 ஆண்டுகளில் ரூ.7 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால், கடந்த 2016-17 ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்ட ரூ.2100 கோடியையும் சேர்த்து மொத்தம்   ரூ.3100 கோடி மட்டும் தான் அரசுத் தரப்பிலிருந்து ஒதுக்கீடு  செய்யப்பட்டது. அதுவும் கூட முதலீடு செய்யப்பட்டதா? அல்லது கடலில் கரைத்த பெருங்காயம் போன்று கணக்கு காட்டப்பட்டு விட்டதா?  என்பது தெரியவில்லை. ஆரோக்கியமான முதலீட்டு சூழல் ஏற்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 2015-ஆம் ஆண்டில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.2.42 லட்சம் கோடி முதலீடு வந்ததாகவும், அதில் இதுவரை ரூ.85,000 கோடி முதலீடு செய்யப்பட்டு விட்டதாகவும்  தமிழக அரசுத்  தரப்பில் கூறப்பட்ட போதிலும் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் பெரிய அளவில் எந்தத் திட்டமும் புதிதாக தொடங்கப்படவில்லை; அதனால் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும் உருவாக்கித் தரப்படவில்லை.

கல்விக்கும், ஆராய்ச்சிக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, தமிழகம் அறிவுசார் மையமாக மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், முக்கியத்துவம் வாய்ந்த சென்னைப் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், காமராஜர் பல்கலைக்கழகம், அம்பேத்கர் பல்கலைக்கழகம் உள்ளிட்ட 5 பல்கலைக்கழகங்களின்  துணைவேந்தர் பதவிகள் நிரப்பப்படாமல் இருப்பதும், இதனால் அங்கு படித்து முடித்த மாணவர்களுக்குக் கூட பட்டம் வழங்கப்படாமல் இருப்பதும் தான் அம்மா ஆட்சியிலும், அவரது வழியில் நடைபெற்ற, நடைபெறும் பினாமி ஆட்சிகளிலும் தமிழகம் கண்ட பயன்கள் ஆகும்.

இயற்கை சீற்றங்கள் ஏற்படும் போது பாதிப்புகள் ஏற்படாத வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதன்பின் 2015-ஆம் ஆண்டில் சென்னை  மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களில் கடுமையான வெள்ளமும், நடப்பாண்டில் வரலாறு காணாத வறட்சியும் அடுத்தடுத்து ஏற்பட்டு தமிழக மக்கள் வரலாறு காணாத இன்னல்களை அனுபவித்தது மட்டும் தான் மிச்சம். இதுபோன்று எட்டப்படாத இலக்குகளை பட்டியலிட்டுக் கொண்டே செல்லலாம்.

தொலைநோக்குத் திட்டம் -2023ல் 10 வகையான இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டிருந்தன. அவற்றை 2023 ஆம் ஆண்டிற்குள் எட்ட வேண்டும் என்பது தான் தொலைநோக்குத் திட்டத்தின் நோக்கமாகும். ஆயினும் திட்டக்காலத்தில் கிட்டத்தட்ட பாதிக் காலம் முடிவடைந்து விட்ட நிலையில், தொலைநோக்குத் திட்டங்கள் மக்களுக்கு பயனளிக்கத் தொடங்கியிருக்க வேண்டும். ஆனால், அதற்கான அறிகுறிகள் கூட இன்னும் தென்படவில்லை. அதுமட்டுமின்றி நீண்டகாலத் திட்டங்கள் செயல்படுத்தப்படும்போது,  அதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து ஒவ்வொரு ஆண்டும் அறிக்கை வெளியிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், கடந்த 4 ஆண்டுகளில் இத்தகைய அறிக்கைகள் எதுவும் வெளியிடப்படவில்லை.

2017-18 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை தமிழக சட்டப்பேரவையில் நாளை தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், அத்துடன் சேர்த்து தொலைநோக்குத் திட்டம்-2023 இலக்குகளை எட்டுவதற்காக கடந்த 5 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவான வெள்ளை அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும். இன்று வரையிலான தொலைநோக்குத் திட்ட இலக்குகளை எட்டத் தவறியதற்காக தமிழக மக்களிடம் ஆட்சியாளர்கள் வெளிப்படையான மன்னிப்பு கேட்க வேண்டும்.

No comments:

Post a Comment