Friday, 21 April 2017

கதை கேளு... கதை கேளு கழகத்தின் கதை கேளு! காலமானார் ஜெயலலிதா! - மருத்துவர். இராமதாஸ்

கதை கேளு... கதை கேளு கழகத்தின் கதை கேளு!

காலமானார் ஜெயலலிதா!
     - மருத்துவர். இராமதாஸ்

அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதாவின் உடல்நிலை தேறிவிட்டது என்று தமிழகத்தை நம்பவைக்க அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தது.  குறிப்பாக அப்பல்லோ மருத்துவமனை குழுமத்தின் தலைவரான பிரதாப் ரெட்டி இதற்காக குறிப்பிட்ட இடைவெளியில் பத்திரிகையாளர்களை தொடர்ந்து சந்தித்து வந்தார்.

நவம்பர் 3-ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய  பிரதாப் ரெட்டி, முதலமைச்சர்  ஜெயலலிதா அவரைச்  சுற்றி நடப்பவை குறித்து அறிந்திருப்பதாகவும்,அவரைச் சுற்றி நடப்பது குறித்து தெளிவான புரிதலோடு இருப்பதாகவும் கூறினார்.

விரும்பும்போது வீடு திரும்புவார்!
அதைத்தொடர்ந்து ஜெயலலிதா தனி அறைக்கு மாற்றப்பட்ட பின்னர் நவம்பர் 19-ஆம் தேதி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின்னர்  செய்தியாளர்களிடம் பேசிய அவர்,செயற்கை சுவாசக் கருவி உதவியின்றி முதலமைச்சர் ஜெயலலிதா சுவாசிப்பதாகவும், விரைவில் குணமாகி, விரும்பும்போது அவர் வீடு திரும்புவார் என்றும் கூறினார். தொடர்ந்து நவம்பர் 25-ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசும்போது  ஜெயலலிதா கிட்டத்தட்ட முழுமையாக குணமடைந்து விட்டார் என்று பிரதாப் ரெட்டி கூறினார்.‘‘முதல்வர் ஜெயலலிதா 90 சதவீதம் சுயமாக சுவாசிக்கிறார்; கழுத்தில் உள்ள துளையில் பொருத்தப்பட்டுள்ள ஒலிபெருக்கி மூலம் சிறிது நேரம் முதல்வர் ஜெயலலிதா பேசுகிறார்; அவர் விரும்பும்போது வீடு திரும்புவார்’’ என்று அவர் தெரிவித்தார்.

வழக்கமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளி எப்போது வீடு திரும்புவார் என்பதை   மருத்துவமனை நிர்வாகம் அல்லது மருத்துவர் தான் தெரிவிப்பார். ஆனால், ஜெயலலிதா விஷயத்தில்  அவர் எப்போது வீடு திரும்புவார் என்பதை அவரே முடிவு செய்வார் என்று அப்பல்லோ தலைவர் பிரதாப் ரெட்டி கூறியது கேலிக்கும், கிண்டலுக்கும் உள்ளானது. ஆனாலும், ஜெயலலிதா உடல்நலம் பெறத் தொடங்கி விட்டார் என்று தமிழ்நாட்டு மக்கள் உண்மையாகவே நினைக்கத் தொடங்கினார்கள்.

கிட்டத்தட்ட ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்த  செய்திகளை மறந்து, மோடி அரசு அறிவித்த பணமதிப்பிழத்தல் நடவடிக்கையால் பணத்திற்கு ஏற்பட்ட தட்டுப்பாட்டை சமாளிக்க ஏ.டி.எம். வாசல்களில்  மக்கள் காத்துக்கிடந்த  நேரத்தில் தான், திசம்பர் 4-ஆம் தேதி இரவு 9 மணி வாக்கில் பரபரப்பான அந்த செய்தி வெளியானது. அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா உடல்நலம் தேறி வந்த நிலையில் திசம்பர் 4-ஆம் தேதி மாலை 4.50 மணிக்கு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும், அவருக்கு எக்மோ கருவி மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அப்பல்லோ மருத்துவமனை  செய்தி வெளியிட்டது.

மறைந்தார் ஜெயலலிதா!

ஜெயலலிதா உடல்நலம் பெற்று இல்லம் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக வெளியான செய்தி தமிழகம் முழுவதும் உள்ள மக்களை சோகத்தில் ஆழ்த்தியது. ஜெயலலிதா உடல்நலம் பெற வேண்டும் என்ற எனது விருப்பத்தைத் தெரிவித்தேன். தமிழகம் முழுவதும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. ஆனாலும் பயனில்லை. திசம்பர் 5-ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு ஜெயலலிதா உயிரிழந்ததாக முறைப்படி அறிவிக்கப்பட்டது. தமிழகமே சோகத்தில் ஆழ்ந்தது. இரவோடு இரவாக ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்றது.

திசம்பர் 6-ஆம் தேதி சென்னை இராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு நான் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினேன். பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ், முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே. மூர்த்தி உள்ளிட்டோரும் என்னுடன் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், அண்டை மாநில முதலமைச்சர்கள் என ஏராளமான தலைவர்கள் ஜெயலலிதாவுக்கு மரியாதை செலுத்தினர். அன்று மாலை சென்னை மெரினா கடற்கரையில் எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் ஜெயலலிதாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

மறையாத மர்மங்கள்!

ஜெயலலிதா மறைந்தாலும் அவருக்கு மருத்துவமனையில் மருத்துவம் அளிக்கப்பட்டது முதல் மரணம் வரையிலான மர்மங்கள் மட்டும் மறையவில்லை. ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மங்கள் குறித்து விசாரணை நடத்த ஆணையிட வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடரப்பட்டது. திசம்பர் 29&ஆம் தேதி இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், வி.பார்த்திபன் ஆகியோர் அடங்கிய அமர்வு ‘‘முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் எனக்கு சந்தேகம் உள்ளது. அவர் குணமடைந்து வருகிறார்; உணவு சாப்பிடுகிறார்; நடைபயிற்சி மேற்கொள்கிறார் என்றெல்லாம் செய்திகள் வெளியாயின. ஆனால், திடீரென அவர் மரணம் அடைந்தது எப்படி? அவரை பார்க்க அவரது உறவினர்களை ஏன் அனுமதிக்க வில்லை. ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து முழுமையான தகவல்களை ஏன் வெளியிடவில்லை. ஜெயலலிதாவின் மரணத்திற்கு பிறகாவது அதில் உள்ள மர்மங்கள் வெளிக்கொண்டு வரப்பட வேண்டும்’’ என்று வினா எழுப்பியது.

நான் எழுப்பிய வினாக்கள்!

உயர்நீதிமன்ற நீதிபதிகள் எழுப்பிய வினாவில் நியாயம் இருப்பதை சுட்டிக்காட்டிய நான், இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்று வலியுறுத்தினேன். ‘‘கடந்த செப்டம்பர் 22-ஆம் தேதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஜெயலலிதா முழுமையாக குணமடைந்து விட்டதாகவும், அதிதீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து  தனி அறைக்கு மாற்றப்பட்டு விட்டதாகவும் அப்பல்லோ மருத்துவமனையின்  நிறுவனர் பிரதாப் ரெட்டி நவம்பர் மாதம் அறிவித்தார். அடுத்த சில நாட்களில் ஜெயலலிதா முழுமையாக குணமடைந்து விட்டதாகவும், அவர் விரும்பும் போது வீடு திரும்பலாம் என்றும் அவர் கூறியிருந்தார்.
அப்படியானால், ஜெயலலிதா குணடைந்திருந்த காலத்தில் மருத்துவர்களுடனோ, மற்றவர்களுடனோ உரையாடும் காட்சிகளையோ, மருத்துவமனையில் ஜெயலலிதா உயிருடன் இருக்கும் காட்சிகளையோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டிருக்கலாம். ஆனால், அப்பல்லோ நிர்வாகம் அதை செய்யாதது ஏன்? அதுமட்டுமின்றி, சில வாரங்கள் மருத்துவமனையில் இருந்தாலே நோயாளியின் உடல் மெலிந்து எடை குறைந்து விடும். ஆனால், ஜெயலலிதா 75 நாட்கள் மருத்துவமனையில் இருந்த போதிலும் அவரது உடல் மெலியவோ, எடை குறையவோ இல்லை என்பது பல்வேறு ஐயங்களை ஏற்படுத்துகிறது.

சி.பி.ஐ. விசாரணை தேவை!

ஜெயலலிதா தனி மனிதராக இருந்தாலோ, அதிமுகவின் பொதுச்செயலாளராக மட்டும் இருந்திருந்தாலோ அவரது மரணத்தில் உள்ள மர்மம் குறித்து மாற்றுக் கட்சியைச் சேர்ந்த நான் கேள்வி கேட்க வேண்டிய தேவையில்லை. ஆனால், ஜெயலலிதா தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த நேரத்தில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மர்மமான சூழலில் மரணமடைந்திருக்கிறார். அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து அறியும் உரிமை தமிழக மக்களுக்கு உண்டு. எனவே, இதுதொடர்பாக உயர்நீதிமன்றம் எழுப்பியுள்ள வினாக்களுக்கு தமிழக அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும். இவை ஒருபுறமிருக்க, ஜெயலலிதா இறப்பில் உள்ள மர்மங்களை வெளிக்கொண்டு வர சி.பி.ஐ. விசாரணைக்கு ஆணையிட வேண்டும்’’ என்று திசம்பர் 29-ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் நான் வலியுறுத்தியிருந்தேன்.

ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததால் சசிகலா தரப்பு கவலை அடைந்தது. இதை சமாளிக்கும் வகையில் 2017-ஆம் ஆண்டு பிப்ரவரி 6-ஆம் தேதி  இங்கிலாந்து மருத்துவர் ரிச்சர்ட் பேல், அப்பல்லோ மருத்துவர் பாபு ஆப்ரஹாம், அரசு மருத்துவர் பாலாஜி ஆகியோரைக் கொண்டு செய்தியாளர் சந்திப்புக்கு தமிழக அரசு ஏற்பாடு செய்திருந்தது. அப்போது முதலமைச்சராக இருந்தவர் ஓ.பன்னீர்செல்வம் தான் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த செய்தியாளர் சந்திப்பில் லண்டன்  மருத்துவர்களும், உள்ளூர் மருத்துவர்களும் அளித்த விளக்கங்கள் ஐயத்தை அதிகரித்ததே தவிர  தீர்க்கவில்லை.

பன்னீர்செல்வத்தின் புகார்!

இந்த செய்தியாளர் சந்திப்பு நடைபெற்ற நாள் அன்று சசிகலா அணியில் இருந்த ஓ.பன்னீர்செல்வம், அடுத்த நாள் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் தியானம் செய்து தனி அணி தொடங்கினார். அதன்பின்  ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க பணியில் உள்ள உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்று பன்னீர்செல்வம் அறிவித்தார். அதன்பின் ஒரு வாரத்திற்கும் மேல் அவர் முதலமைச்சராக இருந்த போதிலும் தனது அறிவிப்புக்கு செயல்வடிவம் கொடுக்கவில்லை.

ஜெயலலிதாவின் மரணம் குறித்து தொடர்ந்து பல்வேறு ஐயங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. ஆனால், அந்த ஐயங்களுக்குத் தான் இன்று வரை விடை கிடைக்கவில்லை. எல்லா மர்மங்களுக்கும் என்றாவது ஒரு நாள் விடை கிடைக்கும் என்பதற்கிணங்க ஜெயலலிதா மரணம் குறித்த மர்மமும் என்றாவது ஒரு நாள் விலகும் என்பது தான் அனைவரின் நம்பிக்கை.

No comments:

Post a Comment