துணைவேந்தரை நியமிக்காமல் அண்ணா
பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா கூடாது!
---அறிக்கை ----
-மருத்துவர். இராமதாஸ்
அண்ணாப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவி சுமார் ஓராண்டாக காலியாக உள்ள நிலையில், துணைவேந்தர் இல்லாமலேயே பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை நடத்த நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் இம்முடிவு கண்டிக்கத்தக்கது.
அண்ணா பல்கலைக்கழக 37-ஆவது பட்டமளிப்பு விழா கடந்த திசம்பர் அல்லது ஜனவரி மாதமே நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், துணைவேந்தர் இல்லாததால் திட்டமிட்டபடி பட்டமளிப்பு விழாவை நடத்த முடியவில்லை. அதேநேரத்தில் அண்ணாப் பல்கலை மற்றும் அதன் இணைப்புக் கல்லூரிகளில் படித்து முடித்தவர்களுக்கு பட்டங்களை வழங்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இதைக் கருத்தில் கொண்டு கடந்த ஆண்டு படிப்பை முடித்த அனைவருக்கும் பட்டம் வழங்க வசதியாக மே மாதம் முதல் வாரத்தில் பட்டமளிப்பு விழாவை நடத்தவும், துணை வேந்தரும், துணை வேந்தரின் கையெழுத்தும் இல்லாமலேயே பட்டங்களை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. கடந்த 29.03.2017 அன்று நடந்த சிண்டிகேட் கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் பெறப்பட்டிருக்கிறது. அடுத்த ஓரிரு நாட்களில் பட்டமளிப்பு விழாவுக்கான தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவும் அண்ணா பல்கலைக்கழகம் தீர்மானித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த ஆண்டு படிப்பை முடித்தவர்களுக்கு கிட்டத்தட்ட ஓராண்டு ஆகியும் பட்டங்களை வழங்காததால் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகளை விட, துணைவேந்தரின் கையெழுத்து இல்லாமல் பட்டங்களை வழங்குவது மிகவும் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி விடும். பல்கலைக்கழகம் சார்பில் வழங்கப்படும் பட்டம் செல்லத்தக்கது என்பதற்கான அடையாளமே துணைவேந்தரின் கையொப்பம் தான். துணைவேந்தரின் கையெழுத்தில்லாமல் பட்டங்கள் வழங்கப்படும் பட்சத்தில், வெளிநாட்டு அல்லது வெளிமாநில பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி கற்க மாணவர்கள் விண்ணப்பிக்கும்போது அவர்களின் பட்டங்கள் செல்லாது என்று அறிவிக்கப்படும் வாய்ப்புள்ளது. இதனால் அவர்களின் உயர்கல்வி வாய்ப்பு பாதிக்கப்படும். அதிலும் குறிப்பாக அண்ணா பல்கலைக்கழகம் தொழில்நுட்பக்கல்வி நிறுவனம் என்பதால், அதில் படித்து பொறியியல், கணிணி பயன்பாடு உள்ளிட்ட தொழில்நுட்ப படிப்புகளை படித்த மாணவர்கள் உயர்கல்விக்காக வெளிநாடு செல்லும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. அதனால் அவர்களின் பட்டங்களில் துணைவேந்தர் கையெழுத்து இடம் பெற வேண்டியது அவசியம்.
அண்ணா பல்கலைக்கழக அமைப்புச் சட்டத்தின்படி, பட்டச் சான்றிதழில் கையெழுத்திடும் அதிகாரம் துணைவேந்தருக்கு மட்டுமே உண்டு. துணைவேந்தர் இல்லாதபட்சத்தில் அவருக்கு பதில் ஆளுனரால் நியமிக்கப்படும் இடைக்கால துணைவேந்தர் பட்டங்களில் கையெழுத்திடலாம். ஆனால், அப்படி செய்வதற்கு பதில் துணைவேந்தர் என்ற இடத்தில் கையெழுத்தின்றியோ, துணைவேந்தருக்கு பதில் உயர்கல்வித்துறை செயலர் கையெழுத்திட்டோ பட்டங்கள் வழங்கப்பட்டால் அவை அவற்றுக்குரிய மரியாதையை இழந்து விடும் ஆபத்து உள்ளது என்பதை பல்கலைக்கழக நிர்வாகம் உணர வேண்டும்.
அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்த இராஜாராம் கடந்த ஆண்டு மே 26-ஆம் தேதி ஓய்வு பெற்றார். அண்ணா பல்கலைக்கழகம் உலகப்புகழ் பெற்ற தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் என்பதாலும், துணைவேந்தர் ஓய்வு பெறும் நாள் அவர் நியமிக்கப்படும்போதே தெரியும் என்பதாலும் புதிய துணைவேந்தர் முன்கூட்டியே தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், தமிழக அரசோ மிகவும் அலட்சியமாக இராஜாராம் ஓய்வு பெற்று 6 மாதங்கள் கழித்து 15.11.2016 அன்று தான் புதிய துணைவேந்தரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்வுக்குழுவையே அமைத்தது. அதற்குப் பிறகு 5 மாதங்கள் ஆகியும் புதிய துணைவேந்தர் நியமிக்கப்படாதது தான் அனைத்துக் குழப்பங்களுக்கும் காரணமாகும்.
-சென்னைப் பல்கலைக்கழகத்திற்கும் இதேபோன்ற சிக்கல் கடந்த ஆண்டு ஏற்பட்டது. அப்பல்கலைக்கு துணை வேந்தர் இல்லாத நிலையில், உயர்கல்வித்துறை செயலாளரின் கையெழுத்துடன் பட்டங்களை வழங்க தீர்மானித்து, 159-ஆவது பட்டமளிப்பு விழா 01.12.2017 அன்று நடைபெறும் என அறிவிக்கப் பட்டிருந்தது. அப்போதும் அதன் பாதிப்புகளை பாட்டாளி மக்கள் கட்சி எடுத்துக் கூறியதன் பயனாகவே கடைசி நேரத்தில் பட்டமளிப்பு விழா ரத்து செய்யப்பட்டது. அதன்பின் ஒரு மாதத்திற்குள் துணைவேந்தர் நியமிக்கப்பட்டு பட்டமளிப்பு விழா நடத்தப்படும் என்று அரசு உறுதி அளித்தது. ஆனால், அதன்பின் 5 மாதங்களாகியும் எதுவும் நடக்கவில்லை. இதனால் கடந்த இரு கல்வியாண்டுகளில் படிப்பை முடித்த 3 லட்சம் மாணவர்கள் பட்டம் பெற முடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர். இவர்களின் உயர்கல்வி வாய்ப்புகளும், வேலைவாய்ப்புகளும் கேள்விக்குறியாகி விட்டதால் மாணவர்கள் மனம் நொந்துள்ளனர்.
அண்ணாப் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் அதேநிலைமை ஏற்பட்டிருக்கிறது. உயர்கல்வியில் தமிழகம் சிறந்து விளங்குவதாக ஆட்சியாளர்கள் கூறிக்கொள்ளும் நிலையில் துணைவேந்தர்களை நியமிப்பதில் இவ்வளவு காலதாமதம் ஏன்? என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. சென்னைப் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் துணைவேந்தர் பணியிடங்கள் நீண்டகாலமாக காலியாக உள்ள நிலையில், உடனடியாக அவற்றை நிரப்பி பட்டமளிப்பு விழாக்களை நடத்த அரசு முன்வர வேண்டும்.
No comments:
Post a Comment