கதை கேளு... கதை கேளு கழகத்தின் கதை கேளு!
பதவிப்போட்டி... உடைந்தது அதிமுக!
-மருத்துவர். இராமதாஸ்
பணம் பத்தும் செய்யும் என்றால், பதவி அதையும் தாண்டியவற்றை செய்யும் அல்லவா? அப்படிப்பட்ட பதவி ஆசை தான் அதிமுகவை உடைத்தது. திசம்பர் 54&ஆம் தேதி இரவு ஜெயலலிதா உயிரிழந்த நிலையில், அடுத்த ஒருசில மணி நேரத்தில் புதிய அமைச்சரவை பதவியேற்றது. ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த அமைச்சர்கள் அனைவருக்கும் மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டது.
அமைச்சர்களின் நடிப்பு
பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்களின் பதவியேற்பு விழாவிலேயே அவர்களின் நாடகமும், நடிப்பும் அம்பலமானது. 2014-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஊழல் வழக்கில் ஜெயலலிதா தண்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து பன்னீர்செல்வம் தலைமையிலான புதிய அமைச்சரவை பதவியேற்றது. அப்போது பன்னீர் செல்வத்தில் தொடங்கி கடைசி அமைச்சர் வரை அனைவரும் கதறி அழுதபடியே பதவியேற்றனர். ஆனால், இப்போது ஜெயலலிதா உயிரிழந்து விட்ட நிலையில் அதுகுறித்த சோகத்தையே காட்டிக் கொள்ளாமல், அழுது வடியாமல் அனைத்து அமைச்சர்களும் பதவியேற்றார்கள். அப்போது தான் முன்பு ஜெயலலிதா உயிருடன் இருந்ததால் அவர் பார்க்க வேண்டும் என்பதற்காக அழுவதைப் போல நடித்ததும், இப்போது ஜெயலலிதா இல்லாததால் அவர் பார்க்க மாட்டார் என்ற நம்பிக்கையில் அழுவதை தவிர்த்ததும் நினைவுக்கு வந்தது.
உண்மையில் முதலமைச்சர் பதவியை கைப்பற்றுவது சசிகலாவின் கனவாகத் தான் இருந்தது. ஆனால், ஜெயலலிதாவின் உடல் அடக்கம் கூட நடைபெறாத நிலையில் அவர் முதலமைச்சராக பதவி ஏற்பது தேவையில்லாத விமர்சனங்களை ஏற்படுத்தும் என்பதால் தற்காலிக ஏற்பாடாக பன்னீர்செல்வத்தை முதலமைச்சர் பொறுப்பை ஏற்கும்படி சசிகலா கேட்டுக் கொண்டார்.
சசிகலா பொதுச்செயலாளர்
அடுத்தக்கட்டமாக பொதுச்செயலாளர் பதவியை ஏற்க முடிவு செய்த சசிகலா அதற்கான காய்களை நகர்த்த ஆரம்பித்தார். அதிமுகவின் மூத்த தலைவர்கள் பலரும் ஜெயலலிதாவை சந்தித்து பேசுவதும், பேசி முடித்து விட்டு வெளியில் வந்து கட்சியின் பொதுச்செயலாளர் பதவியை சசிகலா ஏற்க வேண்டும் என்று கூறிவிட்டுச் செல்வதும் வாடிக்கையான நிகழ்வுகளாக மாறின.
அதைத்தொடர்ந்து திசம்பர் 29-ஆம் தேதி அதிமுகவின் புதிய பொதுச்செயலாளரை தேர்வு செய்ய அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள திருமண அரங்கத்தில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் சசிகலாவை அதிமுகவின் தற்காலிக பொதுச்செயலாளராக தேர்வு செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்தப் பொதுக்குழுவில் சசிகலா பங்கேற்கவில்லை. அதனால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் நகலை சசிகலாவிடம் வழங்க அதிமுக பொருளாளர் பன்னீர்செல்வம், தம்பித்துரை, எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் போயஸ்தோட்ட இல்லத்திற்கு விரைந்தனர். அங்கு சசிகலாவை சந்தித்த அவர்கள், அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவியை ஏற்று கட்சியைக் காக்கும்படி கதறினர். அதைக்கேட்ட சசிகலா அவர்கள் கேட்டுக்கொண்டதால் பதவியை ஏற்பதாக அறிவித்தார்.
பன்னீர்செல்வம் பேட்டி
இதுகுறித்து பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அ.தி.மு.க பொதுக்குழுவில் பல்வேறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. ஜெயலலிதா ஆற்றிய அரும்பணிகளும், செய்த தியாகங்களும் தமிழக மக்கள் மீது கொண்டு இருந்த அளவற்ற பாசமும் நினைவு கூறப்பட்டது. கடந்த 33 ஆண்டுகாலம் ஜெயலலிதாவின் உற்றதுணையாக இருந்து அனைத்து நிலைகளிலும் நீடித்து நிலையாக நின்று பணிகளையும், கடமைகளையும் நிறைவேற்றியவர் சசிகலா. அவரை பொதுச் செயலாளராக பொதுக்குழுவில் ஒருமனதாக தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தெய்வீகத் தலமான வேதா நிலையத்தில் சசிகலாவை சந்தித்து தீர்மானத்தை வழங்கினோம். பொதுச் செயலாளர் பதவியை ஏற்குமாறு அவரை கேட்டுக் கொண்டோம். அவரும் அதனை முழுமனதாக ஏற்றுக் கொண்டார். தீர்மானம் நிறைவேற்றப்பட்ட இன்று முதலே சசிகலா பொதுச் செயலாளர் ஆகிவிட்டார். விரைவில் தலைமை கழகம் வந்து கட்சி பணியை தொடங்குவார்’’ என்று முதலமைச்சர் பன்னீர்செல்வம் அறிவித்தார்.
-அதைத்தொடர்ந்து திசம்பர் 30-ஆம் தேதி சென்னை கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் தாம் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கான தீர்மானத்தை வைத்து வழிபட்டார். பின்னர் சசிகலாவின் காலில் முதலமைச்சர் பன்னீர்செல்வம் விழுந்து வழங்கினார். அதன்பின்னர் மற்ற அமைச்சர்கள் அனைவரும் சசிகலாவின் காலில் விழுந்து வணங்கினார்கள். அதிமுகவின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டதற்கு அக்கட்சியில் எதிர்ப்பு தெரிவித்தவர் கே.பி. முனுசாமி மட்டும் தான். அவர்கூட கொள்கை அடிப்படையில் ஜெயலலிதாவை எதிர்க்கவில்லை. தொடக்கத்தில் இருந்தே சசிகலாவை எதிர்த்து வருபவரான முனுசாமி, முன்னொரு காலத்தில் அதிமுகவிலிருந்து சசிகலா நீக்கப்பட்ட காலத்தில், அவர் இல்லாமல் நடத்தப்பட்ட பொதுக்குழுவில் ‘‘அம்மா நினைத்தால் பிள்ளையார்... நினைக்காவிட்டால் சாணி உருண்டை’’ என சசிகலாவை விமர்சித்தவர். ஆனால், அடுத்த சில மாதங்களில் சசிகலா போயஸ் தோட்டத்தில் மீண்டும் நுழைந்த பிறகு தான் முனுசாமிக்கு வீழ்ச்சி ஆரம்பித்தது.
மக்களவைத் தேர்தலில் அது உச்சத்துக்குப் போனதால் சசிகலாவும், பாப்பிரெட்டிப்பட்டி பழனியப்பனும் கூட்டணி அமைத்து செய்த சதியால் மந்திரி பதவியை இழந்தார். ஆனாலும் சுயமரியாதையுடன் இருந்தவர், ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு சின்னம்மா சசிகலாவுடன் சமரசம் ஆனார். ‘‘உன்னையும் மன்னித்தேன்’’ என்ற சசிகலாவிடம் காலில் விழுந்து பாவமன்னிப்பு வாங்கிய முனுசாமி அதுபோதாது என சில பதவிகளையும் கேட்டார். ஆனால், இம்முறை தம்பித்துரை தடை போட்டதால் நினைத்தது நடக்கவில்லை. அதனால் ஏற்பட்ட கோபம் தான் சசிகலாவுக்கு எதிராக அவரை பொங்கி எழ வைத்தது.
முதல்வர் பதவிக்கு ஆசை
அதிமுகவின் அதிகாரமையமான பொதுச்செயலாளர் பதவியைக் கைப்பற்றிய சசிகலா அடுத்து முதலமைச்சர் பதவியைக் கைப்பற்ற காய் நகர்த்தினார். ஆனால், சொத்துக்குவிப்பு வழக்கில் எந்த நேரமும் தீர்ப்பு வெளியாகலாம்; ஒருவேளை தீர்ப்பு எதிராக வந்தால் முதலமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்படும் ஆபத்து இருப்பதை உணர்ந்திருந்த சசிகலா சில வாரங்கள் பொறுத்திருந்தார். ஆனால், அதற்குள்ளாக கிடைத்த இடைவெளியைப் பயன்படுத்தி மத்திய ஆட்சியாளர்களின் தயவுடன் தனது பதவியை பன்னீர்செல்வம் வலுப்படுத்திக் கொண்டார். இதேநிலை நீடித்தால் முதலமைச்சர் பதவியை கைப்பற்ற முடியாது என்பதை உணர்ந்த சசிகலா அதிரடியாக பிப்ரவரி 5&ஆம் தேதி சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தைக் கூட்டி தன்னைத் தானே முதலமைச்சராக தேர்ந்தெடுக்க வைத்தார். அதற்கு முன்பாக பன்னீர்செல்வத்தை போயஸ்தோட்ட இல்லத்திற்கு வரவழைத்த சசிகலா, அவரிடமிருந்து பதவி விலகல் கடிதத்தைப் பெற்றுக் கொண்டார்.
பொதுக்குழு கூட்டத்தைப் போலவே சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்திலும் சசிகலா முதலில் பங்கேற்கவில்லை. வழக்கம்போல சசிகலாவை அதிமுக சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக தேர்வு செய்யும் தீர்மானத்தை ஓ.பன்னீர்செல்வம் முன்மொழிய மற்ற அனைத்து உறுப்பினர்களும் வழி மொழிந்தனர். அதன்பிறகே சசிகலா அங்கு வந்து தம்மை முதலமைச்சராக தேர்ந்தெடுத்த உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்தார். மற்றொருபுறம் தமது பதவி விலகல் கடிதத்தையும், புதிய முதலமைச்சராக சசிகலா தேர்வு செய்யப்பட்டதற்கான கடிதத்தையும் தமிழக ஆளுனரிடம் பன்னீர்செல்வம் நேரில் வழங்கினார்.
பன்னீர்செல்வம் போர்க்கொடி
பிப்ரவரி 9-ஆம் தேதி புதிய முதலமைச்சராக சசிகலா பதவியேற்பார் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், திடீரென பிப்ரவரி 7-ஆம் தேதி இரவு பன்னீர்செல்வத்திடம் ஜெயலலிதாவின் ஆன்மா பேசத் தொடங்கியது. அன்றிரவு 9.00 மணிக்கு ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு சென்ற பன்னீர்செல்வம், அங்கு சுமார் 42 நிமிடங்கள் தியானத்தில் ஈடுபட்டார். அதன்பின்னர் சசிகலா மீது அடுக்கடுக்காக குற்றச்சாற்றுகளை முன்வைத்தார். அதன் விபரம் வருமாறு:
‘‘ஜெயலலிதா இறந்த பிறகு கழகத்தின் பொதுச்செயலாளராக மதுசூதனன் அவர்களை அமர்த்த வேண்டும் என்று சொன்னார்கள் அதே சமயத்தில் முதல்வர் பொறுப்பில் என்னை அமரச்சொன்னார்கள். நான் அதை ஏற்க மறுத்தேன். வேறு ஒருவரை அமரவைத்தால் கட்சிக்குக்கும் ஆட்சிக்கும் பங்கம் ஏற்படும் என்று கூறியதால் நான் மீண்டும் அந்த பதவியை ஏற்றுக் கொண்டேன்.
அதன் பிறகு சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் என்னிடம் வந்து கேட்டார், திவாகர் உங்களிடம் கேட்க சொன்னார். கழகத்தின் பொதுச் செயலாளராக தன் அக்காவை ஆக்க வேண்டும். இல்லையென்றால் நான் அவர்களை ஊருக்கு அழைத்து செல்கிறேன் என்று சொன்னார்கள். அப்போது மூத்த அமைச்சர்களிடம் கருத்து கேட்டேன்.அவர்களும் அந்த கருத்துக்கு உடன்பட்டதால் சசிகலா அவர்களை பொதுச் செயலாளராக ஆக்கினோம். அந்த நேரத்தில் வருவாய்துறை அமைச்சர் ஆர்.வி. உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்து சசிகலா முதல்வராக பொறுப்பேற்க வேண்டும் என்று பேட்டி கொடுத்தார். என் அமைச்சரவையில் இருக்கின்ற ஒருவரே வேறொருவரை முதல்வராக ஆக்க வேண்டும் என்று சொன்னால் அது தேவையில்லாமல் ஒரு பிரச்னை உருவாகுமே என்று கேட்ட போது அவரை கண்டித்துவிட்டோம் இனியாரும் அப்படி பேச மாட்டார்கள் என்று கூறினார்கள்.
தனி ஆளாக போராட்டம்
ஆனால் அதன் பிறகும் செல்லூர், ராஜூ செங்கோட்டையன் போன்றவர்களும் அதே கருத்தை சொன்னார்கள், அதன் பிறகு என்னை ஏன் இப்படி அவமானப்படுத்த வேண்டும் என்று கேட்டேன். இந்த சூழ்நிலையில்தான் எனக்கு தகவல் இல்லாமல் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை கூட்டி கையெழுத்து பெற்றுக் கொண்டிருப்பதாக சொன்னார்கள். நான் எண்ணூர் எண்ணெய் கசிவு விவாகரத்துக்கான பணியில் இருந்தேன். அப்போது என்னை அழைத்து சசிகலாவை முதல்வராக்க வேண்டும் என்று சொன்னார்கள்.அதற்கு என்ன அவசியம் இப்போது வந்தது என்று கேட்டேன். கட்சியின் கட்டுப்பாட்டை காப்பாற்ற வேண்டும் என்று என்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்தார்கள். அதை மாண்புமிகு ஜெயலலிதாவின் ஆன்மாவுக்கு தெரியப்படுத்தவே இங்கு வந்தேன். இவர்களை எதிர்த்து தனி ஆளாக நான் போராடுவேன்’’ என்று பன்னீர்செல்வம் கூறினார்.
அதைத் தொடர்ந்து பிப்ரவரி 8-ஆம் தேதி சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தைக் கூட்டிய சசிகலா, தமக்கான ஆதரவை உறுதி செய்தார். அதுமட்டுமின்றி, தமது ஆதரவு சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரையும் கூவத்தூரில் உள்ள விடுதிக்கு அழைத்துச் சென்று சென்று தங்க வைத்தார். அதேநேரத்தில் ஓ.பன்னீர்செல்வமோ, தாமாக விரும்பி பதவி விலகவில்லை என்பதால் தம்மை முதல்வர் பதவியில் நீடிக்க அனுமதிக்க வேண்டும் என்று ஆளுனரிடம் கேட்டுக் கொண்டார். இந்தக் குழப்பங்கள் காரணமாகவும், மத்தியிலுள்ள பாரதிய ஜனதாக் கட்சியின் ஆதரவு பன்னீர்செல்வத்துக்கு இருந்ததாலும் சசிகலாவை முதலமைச்சராக பதவியேற்க ஆளுனர் அழைக்கவில்லை. இந்த இடைவெளியைப் பயன்படுத்தி சசிகலா அணியிலிருந்து கணிசமான சட்டப்பேரவை உறுப்பினர்களை இழுக்க வேண்டும் என்பது தான் பன்னீர்செல்வத்துக்கு மத்திய அரசு அளித்த பணியாகும். ஆனால், அவரால் சொல்லிக்கொள்ளும்படியாக யாரையும் இழுக்க முடியவில்லை. ஏற்கனவே அவருக்கு 6 உறுப்பினர்களின் ஆதரவு இருந்த நிலையில், மாஃபா பாண்டியராஜன், செம்மலை, சரவணன், அருண்குமார் உள்ளிட்ட மேலும் 6 பேரை மட்டுமே அவரால் இழுக்க முடிந்தது.
சசிகலாக்கு சிறை... எடப்பாடிக்கு பதவி!
அதற்குள்ளாக சொத்துக்குவிப்பு வழக்கில் பிப்ரவரி 14-ஆம் தேதி தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், சசிகலா உள்ளிட்ட மூவருக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் அளித்த 4 ஆண்டு சிறை தண்டனை, ரூ.10 கோடி அபராதத்தை உறுதி செய்தது. இதையடுத்து ஜெயலலிதா சமாதிக்கு சென்று சத்தியம் செய்து உறுதி எடுத்துக் கொண்ட சசிகலா அடுத்த நாள் 15&ஆம் தேதி பெங்களூர் நீதிமன்றத்தில் சரனடைந்தார். அதைத்தொடர்ந்து அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டார். மற்றொருபுறம் பிப்ரவரி 16-ஆம் தேதி புதிய முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி அரசு பதவியேற்றுக்கொண்டது.
No comments:
Post a Comment