கதை கேளு... கதை கேளு கழகத்தின் கதை கேளு!
ஜெயலலிதா, சசிகலாவின் சொத்துக்குவிப்பு!
-மருத்துவர். இராமதாஸ்
உண்மையில் இந்த அத்தியாயத்தின் தலைப்பே தவறு என்று தான் கூறவேண்டும். காரணம் சொத்துக் குவிப்பு என்பது, நியாயமான வழியில் உழைத்துச் சேர்த்த பணத்தைக் கொண்டு நடந்திருந்தால் அது தவறு அல்ல. ஆனால், ஜெயலலிதாவும் சசிகலாவும் சொத்துக்களை முறையான வழியில் வாங்கிக் குவிக்கவில்லை.... மாறாக விருப்பப்பட்ட சொத்துக்களை அவற்றின் உரிமையாளர்களிடமிருந்து பறித்துக் கொண்டனர். அதனால், இந்த அத்தியாயத்திற்கு ஜெயலலிதா, சசிகலாவின் சொத்துப் பறிப்பு என்று தான் தலைப்பிட்டிருக்க வேண்டும்.
சரி... இனி சொத்துப் பறிப்புகளைப் பார்ப்போம்....
1991 ஆம் ஆண்டில் முதன் முறையாக தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற ஜெயலலிதா, தம்மை ஒரு சர்வாதிகாரியாகவே நினைத்துக்கொண்டார். தமது நடவடிக்கைகளை எவரும் குறை கூறக்கூடாது; தமக்குப் பிடித்ததை எடுத்துக்கொள்ள எவரும் தடைபோடக் கூடாது என்று கருதினார். இயற்கையாகவே சொத்துக்களை குவிப்பதில், அவருக்கு ஆர்வம் உண்டு என்பதால், சென்னை மாநகரின் அடையாளமாக விளங்கிய கட்டிடங்கள் அனைதையு-ம், தமக்குச் சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும் என்று துடித்தார். அதற்காக தமது தோழி சசிகலா மூலமாக சட்டத்தைத் தாண்டிய அனைத்துச் செயல்களையும் அரங்கேற்றினார். ஜெயலலிதா, சசிகலா இணையரால் பறிக்கப்பட்ட சில சொத்துக்களின் விவரம்:
பையனூர் பங்களா
மாமல்லபுரம் அருகே ஓய்வெடுப்பதற்காக பண்ணைத் தோட்ட மாளிகை அமைக்க முடிவு செய்த ஜெயலலிதாவின் கண்களில் பட்டது, இசையமைப்பாளர் கங்கை அமரனுக்குச் சொந்தமான பையனூர் பண்ணைத் தோட்டம் ஆகும். இந்தத் தோட்டத்தை தமக்கு விற்பனை செய்யும்படி, கங்கை அமரனிடம் ஜெயலலிதா சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது, ஆனால், தமது தமது பண்ணைத்தோட்டத்தை விற்பனை செய்வதற்கு கங்கை அமரன் தயங்கினார். இதையடுத்து, கங்கை அமரனுக்கு மிரட்டல்கள் வந்தன. அதை எதிர்க்கொள்ள முடியாத கங்கை அமரன், பையனூர் மாளிகை அமைந்துள்ள பண்ணைத் தோட்டத்தை முதலமைச்சர் ஜெயலலிதா சார்பில் சசிகலா கொடுத்த காசை வாங்கிக் கொண்டு விற்பனை செய்தார். ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கில் இந்த மாளிகையும் ஓர் அங்கமாகும்.
ஆழ்வார்பேட்டை இல்லம்
சென்னை ஆழ்வார்பேட்டை டாக்டர் ரங்காச்சாரி சாலையில் ஒரு முதிய தம்பதியருக்குச் சொந்தமான ஆடம்பர மாளிகையை விலைக்கு வாங்க ஜெயலலிதாவும், சசிகலாவும் திட்டமிட்டனர். ஆனால், அந்தத் தம்பதியர் தங்கள் வீட்டை விற்க மறுத்து விட்டனர். இதனால் ஆத்திரமடைந்த ஜெயலலிதா, குண்டர்களை அனுப்பி வயது முதிர்ந்தவர்கள் என்று கூட பார்க்காமல், அவர்களை தாக்கச் செய்தார்.
அமிர்தாஞ்சன் இல்லம்
சென்னை மயிலாப்பூரின் அடையாளங்களில் ஒன்று அமிர்தாஞ்சன் இல்லமாகும். நாகே-ஸ்வரராவ் பூங்காவுக்கு அருகே பல கட்டடங்களுடன் அமைந்துள்ள அந்த மாளிகையை தமதாக்கிக் கொள்ள வேண்டும் என்று ஜெயலலிதா முடிவு செய்தார். அமிர்தாஞ்சன் நிறுவனத்தின் உரிமையாளர்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிப்பதைப் பயன்படுத்திக் கொண்டு, அந்தக் கட்டடத்தை தமதாக்கிக்கொள்ள சசிகலாவும், ஜெயலலிதாவும் முயன்றனர். இந்த மாளிகையில் தேசத் தந்தை மகாத்மா காந்தியடிகள் ஒரு காலத்தில் தங்கியிருந்தார் என்பதால், இதைப் புனிதமாகக் கருதிய காந்தியவாதிகள், ஜெயலலிதாவின் முயற்சிக்கு எதிராகப் போராடினார்கள். இதன் பயனாக இந்த மாளிகையை கைப்பற்றும் முயற்சியை ஜெயலலிதா கைவிட்டார்.
கொடநாடு தேயிலைத் தோட்டம்
ஜெயலலிதாவின் மிக அதிக மதிப்புள்ள சொத்துக்களில் ஒன்று கொடநாடு மாளிகை ஆகும்.இதன் பரப்பளவு 1600 ஏக்கர் ஆகும். இந்த மாளிகைக்குள் அவ்வளவு எளிதில் எவரும் சென்றுவிட முடியாது. ஆனாலும், இந்த மாளிகைக்கு 9 நுழைவு வாயில்கள். இந்த மாளிகை அமைந்துள்ள இடத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவு வரை பாதுகாப்புக்கு ஆட்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பார்கள். அதிமுக ஆளுங்கட்சியாக இருந்தால் பல கிலோமீட்டர் தொலைவுக்கு காவலர்கள் நிறுத்தப்பட்டிருப்பார்கள்.
கொடநாடு தேயிலைத் தோட்டத்தின் இன்றைய சந்தை மதிப்பு ரூ.2000 கோடி ஆகும். இது வெளிநாட்டைச் சேர்ந்த மூத்த இணையருக்கு சொந்தமானது ஆகும். அவர்கள் இதை ஓய்வெடுப்பதற்காக வைத்திருந்தனர். 1991&ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே இந்த மாளிகை சசிகலா கண்களில் பட்டது. அவ்வளவு தான் .... அந்த மூத்த இணையர் மிரட்டப் ட்டனர். சொத்து பறிக்கப்படுவதை தடுக்க பலவழிகளிலும் முயன்றனர். ஆனாலும் பயனில்லை. வெறும் 75 லட்சத்தை வாங்கிக்கொண்டு பத்திரத்தில் கையெழுத்திட்டுவிட்டு சென்றனர்.
கொடைக்கானல் சர்வதேச பள்ளி
கொடைக்கானலில் உள்ள கொடை சர்வதேசப் பள்ளியை கைப்பற்ற ஜெயலலிதாவும், அவரது தோழி சசிகலாவும் முடிவு செய்தனர். ஆனால், பள்ளி நிர்வாகம் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. எனவே, சட்டவிரோதமான முறையில் அந்தப் பள்ளியைப் பறிக்க முயன்ற ஜெயலலிதா, குண்டர்களை அனுப்பி பள்ளியைக் கைப்பற்ற வைத்தார். நள்ளிரவில் பள்ளி மற்றும் விடுதிக்குள் நுழைந்த ஜெயலலிதாவின் கூலிப் படையினர், அங்கிருந்த பள்ளிக் குழந்தைகளை நள்ளிரவில் கொட்டும் பனியில் வெளியே விரட்டி அடித்தனர். இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த அப்போதைய திண்டுக்கல் மாவட்ட நீதிபதி அசோக்குமார், பள்ளியை, பள்ளி நிர்வாகத்திடமே மீண்டும் ஒப்படைக்க உத்தர விட்டார். இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத ஜெயலலிதா, நீதிபதி அசோக்குமாரை தர்மபுரி, திருவண்ணாமலை என, பல மாவட்டங்களுக்குப் பணியிட மாற்றம் செய்ய வைத்தார். அவருக்குக் கொலை மிரட்டல்களும் விடுக்கப்பட்டன.
டான்சி நிலப் பறிப்பு
சென்னை கிண்டியில் உள்ள பொதுத்துறை நிறுவனமான டான்சிக்கு சொந்தமான நிலத்தை வாங்க முடிவு செய்த ஜெயலலிதா, சட்டவிரோத முறைகளைப் பயன்படுத்தி, தமக்குச் சொந்தமான ஜெயா பப்ளிகேஷன்ஸ், சசி என்டர்பிரைஸஸ் நிறுவனங்களின் பெயரில், குறைந்த விலைக்கு வாங்கினார். இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், ஜெயலலிதா தண்டிக்கப்பட்டார். சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணையின் போது, நில விற்பனை தொடர்பான ஆவணங்களில் இடம் பெற்றிருப்பது, தனது கையெழுத்தே அல்ல என திட்டவட்டமாக மறுத்தார். டான்சி நிலத்தைப் பறித்ததற்காக கண்டனம் தெரிவித்த உச்ச நீதிமன்றம், அந்த நிலத்தை திரும்ப ஒப்படைக்கும்படி ஜெயலலிதாவுக்கு ஆணையிட்டது.
No comments:
Post a Comment