கதை கேளு... கதை கேளு கழகத்தின் கதை கேளு!
ஜெயலலிதாவின் அநாகரீகங்கள்!
-மருத்துவர். இராமதாஸ்
1991- 96 காலத்தில் ஜெயலலிதா ஆட்சியில் நடைபெற்ற வன்முறை மற்றும் அடக்குமுறைகளை முந்தைய அத்தியாயத்தில் விவரித்திருந்தேன். சந்திரலேகா மீது அமிலம் வீசப்பட்டது, வழக்கறிஞர்கள் கே.எம். விஜயன், சண்முகசுந்தரம் ஆகியோர் தாக்கப்பட்டது குறித்து விரிவாகவும், வேறு சில தாக்குதல்கள் குறித்து ஒற்றை வரியிலும் குறிப்பிட்டிருந்தேன். அந்த அத்தியாயத்திற்கு வாசகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.
அதேநேரத்தில் ஜெயலலிதாவின் அடக்குமுறைகள் மற்றும் அநாகரீகங்கள் குறித்து விரிவாக எழுதுங்கள் என்று உரிமையுடன் கேட்டுக் கொண்டனர். அவர்களின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காகவே இந்த அத்தியாயம் ஆகும். சசிகலாவும், ஜெயலலிதாவும் சேர்த்த சொத்துக்கள் குறித்து அடுத்த அத்தியாயத்தில் எழுதுகிறேன்.
ஜெயலலிதாவுக்கு அரசியல் நாகரீகம் என்பது அறவே கிடையாது. தம்மை எவரும் எதிர்க்கக் கூடாது -அனைவரும் தமது காலில் விழுந்து கிடக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். அவ்வாறு காலில் விழ மறுப்பவர்களை அரசியல் ரீதியாகப் பழிவாங்குவதுதான் ஜெயலலிதாவின் வழக்கமாகும். ஜெயலலிதாவால் அரசியல் ரீதியாகப் பழிவாங்கப்பட்டவர்களின் பட்டியல் மிகவும் நீளமானது.
சுப்ரமணியன்சுவாமிக்கு எதிராக ஆபாச நடனம்
1991-ஆம் ஆண்டில் ஜெயலலிதா முதலமைச்சராக பதவியேற்ற பின்னர், அவருக்கு எதிராகப் பல்வேறு ஊழல் வழக்குகளை தொடர்ந்தார் ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணிய சுவாமி. இதனால் ஆத்திரமடைந்த ஜெயலலிதா சுப்ரமணிய சுவாமிக்கு கடுமையான நெருக்கடிகளைக் கொடுத்தார். ஜெயலலிதா மீதான ஊழல் வழக்குகளில் வாதிடுவதற்காக சென்னை உயர்நீதி மன்றத்திற்கு வந்த சுவாமியை அ.தி.மு.க. மகளிர் அணியினர் செருப்புகளை வீசித் தாக்கினர். அதுமட்டுமின்றி, அதிமுக மகளிர் அணியினர் தங்களது ஆடைகளை சுவாமியிடம் தூக்கிக் காட்டி நடனமாடி, ஆபாசமான சைகைகளை (கலாச்சார நடனம்) காட்டினர். இதுதான் ஜெயலலிதாவின் அரசியல் (அ)நாகரீகம்.
ஆளுனர் சென்னாரெட்டிக்கு
எதிராக அவதூறு குற்றச்சாட்டு
1993-ஆம் ஆண்டில் தமிழக ஆளுனராகப் பதவியேற்ற சென்னாரெட்டி, ஜெயலலிதா அரசுக்குத் தலையாட்டி பொம்மையாக இருக்கவில்லை. அரசின் தவறுகளைச் சுட்டிக்காட்டி, தட்டிக் கேட்டு வந்தார். இதனால் அவரைப் பல வழிகளில் முதலமைச்சர் ஜெயலலிதா அவமானப்படுத்தினார். ஒருமுறை சட்டப்பேரவையில் பேசும் போது, “ஆளுனரைச் சந்திப்பதற்காக ஆளுனர் மாளிகைக்கு சென்ற என்னிடம் ஆளுனர் சென்னாரெட்டி தவறாக நடந்து கொள்ள முயன்றார்’’ என்று அதிரடியாகக் குற்றஞ்சாற்றினார். 1995-ஆம் ஆண்டு திண்டிவனம் அருகே ஓமந்தூரில் நடைபெற்ற முன்னாள் முதலமைச்சர் ஓமந்தூர் இராமசாமி ரெட்டியாரின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்று விட்டு திரும்பிய ஆளுனர் சென்னாரெட்டியை திண்டிவனம் அருகே வழிமறித்த அதிமுகவினர் அவரைத் தாக்க முயன்றனர். இத் தாக்குதலில் அவரது கார் சேதமடைந்தது.
டி.என். சேஷனை மிரட்ட
குண்டர் படைத் தாக்குதல்
தமிழகத்தில் இடைத்தேர்தல்களை நடத்தும்போது ஆளுங்கட்சியான அதிமுகவினர் முறைகேடுகளில் ஈடுபடுவதை இந்திய தேர்தல் ஆணையராக இருந்த சேஷன் கடுமையாக கண்டித்தார். இதனால் ஆத்திரமடைந்த ஜெயலலிதா அவரைப் பல வழிகளில் அவமானப்படுத்தினார். ஒருமுறை சென்னை வந்த டி.என். சேஷனை விமான நிலையத்தைவிட்டு வெளியே வரமுடியாத அளவுக்கு ஆயிரக்கணக்கான அதிமுகவினர் விமான நிலையத்தை முற்றுகையிட்டனர். விமான நிலையத்திற்கு வெளியில் உள்ள சாலையிலும் அதிமுகவினர் மறியல் செய்ததால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து வந்த வாகனங்கள் 5 மணி நேரத்திற்கும் மேலாக சென்னைக்குள் நுழைய முடியாமல் பல கிலோ மீட்டர் தொலைவுக்குத் தேங்கி நின்றன. தமிழக அரசின் தலைமைச் செயலாளர், காவல்துறை தலைமை இயக்குனர் ஆகியோரைத் தொடர்பு கொண்ட சேஷன் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினரை அகற்றும்படி ஆணையிட்டார். ஆனால் அவ்வாறு செய்ய அவர்கள் மறுத்துவிட்டனர்.
புரோட்டாகால்படி டி.என்.சேஷன் சென்னை வந்தால் அவர் தங்க அரசினர் விடுதியில் அறை வழங்கவேண்டும். ஆனால், சேஷனுக்கு அறை வழங்க மறுத்து அவரை ஜெயலலிதா அவமானப்படுத்தினார். அதன்பின்னர் வேறு வழியில்லாமல் தாஜ் கோரமண்டல் நட்சத்திர ஹோட்டலில் சேஷன் தங்கினார். அவருக்கு அறை கொடுத்த ஒரே காரணத்திற்காக குண்டர்களை அனுப்பி அந்த ஹோட்டலை சூறையாட வைத்தவர் தான் ஜெயலலிதா.
ப. சிதம்பரம் மீது தாக்குதல்
மத்திய அமைச்சர் சிதம்பரம் மீது கோபம் கொண்டிருந்த ஜெயலலிதா, கடந்த 16.08.1991 திருச்சி விமான நிலையத்திலிருந்து காரைக்குடி செல்வதற்காக வந்த அப்போதைய மத்திய இணை அமைச்சர் ப. சிதம்பரத்தை தமது கட்சியினரைத் தூண்டிவிட்டு தாக்குதல் நடத்த வைத்தார். இதில் சிதம்பரத்தின் கார் சேதப்படுத்தப்பட்டது. சிதம்பரம் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இத்தாக்குதலை நடத்திய சிவபதி, பரஞ்ஜோதி, மரியம் பிச்சை ஆகியோருக்கு அமைச்சர் பதவியும், மனோகரனுக்கு தலைமைக் கொறடா பதவியும், இளவரசனுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவியையும் ஜெயலலிதா வாரி வழங்கினார். இத்தாக்குதலில் சம்பந்தப்பட்ட இன்னொருவரான ரத்தினவேலுவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்பட்டிருக்கிறது.
அருணாச்சலத்திற்கு அவமரியாதை
02.05.1994 அன்று அப்போதைய மத்திய அமைச்சர் அருணாச்சலம் மதுரையில் இருந்து சென்னைக்குப் பயணம் செய்யவிருந்த விமானம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. அதேநேரத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா பயணம் செய்த விமானம் மதுரையில் இருந்து சென்னைக்கு புறப்படவிருந்தது. இதனால் ஜெயலலிதா பயணம் செய்யவிருந்த விமானத்தில் பயணம் செய்யும்படி அருணாச்சலத்தை விமான நிலைய அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர். ஆனால், அருணாச்சலம் தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால், அவரை தம்முடன் பயணம் செய்ய அனுமதிக்கக்கூடாது என்று கூறி விமானத்திலிருந்து இறக்கி விட்டார்.
ஓடஓட விரட்டப்பட்ட
மணிசங்கர் அய்யர்
நாகப்பட்டினத்தில் நடைபெற்ற தமிழக அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, கடுமையாக விமர்சித்தார். இதற்கு அப்போதைய மயிலாடுதுறை தொகுதி மக்களவை உறுப்பினரான மணிசங்கர் அய்யர், கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதைத் தாங்கிக் கொள்ள முடியாத ஜெயலலிதாவின் தூண்டுதலின் பேரில், அப்போதைய அ.தி.மு.க. அமைப்புச் செயலாளரும், இப்போதைய மாநில அமைச்சருமான ஓ.எஸ்.மணியன் தலைமையிலான குழுவினர், விழா முடிந்து வீடு திரும்பிய மணிசங்கர் அய்யரை, பல கிலோ மீட்டர் தூரம் துரத்திச் சென்று வழிமறித்துத் தாக்கினர்.
பெயர் கூறாததற்காக
தாக்கப்பட்ட எம்.பி.
1991-96 ஆட்சிக்காலத்தில், கோவை விமான நிலையத்தில் புதிய முனையத்தைத் திறக்கும் விழாவில், ஜெயலலிதா கலந்து கொண்டார். அவ்விழாவில் பேசிய அப்போதைய கோவை தொகுதி காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சி.கே.குப்புசாமி, முதலில் ஜெயலலிதாவின் பெயரைக் கூறாமல், விழாத் தலைவரின் பெயரைக் கூறி விட்டார். இதனால் ஆத்திரமடைந்த ஜெயலலிதா, தமது கட்சியினருக்கு பிறப்பித்த உத்தரவின்படி, விழா முடிந்து திரும்பிய சி.கே.குப்புசாமியை அ.தி.மு.க.வினர் துரத்திச் சென்று தாக்குதல் நடத்தினர்.
ஆடிட்டர் ராஜசேகருக்கு
சரமாரி செருப்படி
முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் ஆடிட்டராக பணியாற்றிய ராஜசேகர், பணத்தை முறைகேடு செய்து விட்டதாக சந்தேகித்த ஜெயலலிதா, அவரை தமது போயஸ் தோட்ட இல்லத்துக்கு அழைத்து விசாரித்தார். விசாரணை முடிவில், ஜெயலலிதா, சசிகலா, சசிகலாவின் உறவினர் மகாதேவன் ஆகியோர் ராஜசேகரை செருப்பால் அடித்து காயப்படுத்தினர்.
No comments:
Post a Comment