Sunday, 26 March 2017

கதை கேளு... கதை கேளு கழகத்தின் கதை கேளு! வன்முறையும் அடக்குமுறையும்! -மருத்துவர். இராமதாஸ்

கதை கேளு... கதை கேளு கழகத்தின் கதை கேளு!

         வன்முறையும் அடக்குமுறையும்!
-மருத்துவர். இராமதாஸ்

ஜெயலலிதா தலைமையிலான 1991-96 ஆட்சிக்காலத்தில் அடக்குமுறையும், வன்முறையும் கட்டுப்பாடு இல்லாமல் கட்டவிழ்த்து விடப்பட்டது. ஆட்சியாளர்களுக்கு எதிராக யாராவது பேசினால் அவர்கள் வீட்டுக்கு ஆட்டோவில் அடியாட்கள் வருவார்கள்... அரசை எதிர்த்தவர்களை அடித்து நொறுக்குவார்கள். வந்த வேலையை முடித்துக் கொண்டு திரும்பிவிடுவார்கள். சாதாரண மக்கள் தொடங்கி சமூகத்தில் மதிப்புள்ளவர்களாக இருக்கும் வழக்கறிஞர்கள், ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள், அவ்வளவு ஏன்.... இந்திய தலைமைத் தேர்தல் ஆணையராக பதவி வகித்த டி.என். சேஷன் கூட இந்த அடக்குமுறைக்கு தப்பவில்லை. அந்தக் காலத்தில் வீட்டிற்கு ஆட்டோ வரும் என்று யாராவது மிரட்டினால் மிரட்டப்படுபவர் நடுங்கி விடுவார். அந்த அளவுக்கு பலர் தாக்கப்பட்டனர்.

சந்திரலேகா ஐ.ஏ.ஏஸ்.

தமிழக அரசின் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணியாற்றியவர் சந்திரலேகா. இவர் ஜெயலலிதாவுக்கு  இளம்வயதிலேயே நெருக்கமானவர். இன்னும் கேட்டால்  இவர் தான் சசிகலாவையும், அவரது கணவர் நடராஜனையும் ஜெயலலிதாவுக்கு அறிமுகம் செய்து வைத்தவர். ஜெயலலிதாவுக்கு மிகவும் நேருக்கமானவர் என்பதற்காக இவரையும் ஊழல்வாதி என்று நினைத்து விட வேண்டாம். இவர் மிக நேர்மையான அதிகாரி. அதுவே அவருக்கு ஆபத்தாக முடிந்தது.
ஜெயலலிதா அரசியலில் ஆழமாக காலூன்றுவதற்கு உதவியவர்களில் ஸ்பிக் நிறுவன அதிபர் ஏ.சி. முத்தையா முக்கியமானவர். அதற்கு நன்றிக்கடன் செலுத்தும் விதமாக ஸ்பிக் நிறுவனத்தில் தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான டிட்கோவுக்கு 26 விழுக்காடு பங்குகள் இருந்தன. அவற்றை ஏ.சி. முத்தையாவின் ஸ்பிக் நிறுவனத்திடமே கொடுத்து விடுவதற்கு ஜெயலலிதா முடிவு செய்தார்.

அடிமாட்டு விலை

ஸ்பிக் நிறுவன பங்குகளை அடிமாட்டு விலைக்கு வாங்க முத்தையாவும், அவரது தந்தை சிதம்பரம் செட்டியாரும் முயன்றனர். ஜெயலலிதாவும் அவர்கள் கேட்ட விலைக்கே வழங்கத் தயாராக இருந்தார். ஆனால், அப்போது தொழில் துறை செயலராக இருந்த பி.சி.சிரியாக்கும், டிட்கோ நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனராக இருந்த சந்திரலேகாவும்  நேர்மையான அதிகாரிகள் என்பதால் அதற்கு ஒப்புகொள்ளவில்லை. சந்தை மதிப்பின்படியே பங்குகளை விற்க வேண்டும் என்று அரசுக்கு அவர்கள் குறிப்பு எழுதினார்கள். இதனால் வேறு வழியின்றி அரசும், ஸ்பிக் குழுமமும் இதற்கு ஒப்புக்கொண்டன.
அதன்படி,  24 ஜனவரி 1992 அன்று ஸ்பிக் குழுமத்திற்கு பங்குகளை விற்பனை செய்யலாம் என்று முடிவெடுத்த அன்று, ஒரு பங்கின் விலை 80. அரசு விற்பனை செய்ய ஒப்பந்தம் போட்ட நாள் 23 மார்ச் 1992. இடைப்பட்ட காலத்தில்  ஸ்பிக் பங்கு விலை கிட்டத்தட்ட மும்மடங்காக, அதாவது  ரூபாய் 210 ஆக  உயர்ந்தது. ஆனால், பழைய விலையான 80 ரூபாய்க்கே பங்குகளை விற்க வேண்டும்  என்றும் முதலமைச்சர் ஜெயலலிதா விரும்பினார். ஆனால்,  டிட்கோ தலைவரான சந்திரலேகா ஐஏஎஸ், 80 ரூபாய்க்கு விற்பனை செய்வதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கிறார்.

தொலைபேசியில் மோதல்

இதையடுத்து,  சந்திரலேகாவை ஜெயலலிதா நேரடியாக தொலைபேசியில் அழைத்துப் பேசுகிறார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் வளர்ந்து, அது மோசமான உரையாடலாக மாறியதாக கூறப்படுகிறது. ஆணவத்தில் இருவரும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்ல என்பதால் வார்த்தைகள் தடித்தன. இருவரில் யார் அழகு என்ற ரீதியில் வாக்குவாதம் வளர்ந்ததாகவும், உரையாடலின் இறுதியில், முதலமைச்சராவதற்கு, தோற்றம் அடிப்படை என்றால், நானும் முதல்வராகியிருப்பேன் என்று சந்திரலேகா கூறியதாகவும் அப்போது செய்திகள் வெளியாகின.

இதனால், ஆத்திரமடைந்த ஜெயலலிதா அப்போதைய அமைச்சர் மதுசூதனனிடம் விஷயத்தைக் கூறி  சந்திரலேகாவுக்கு தக்க பாடம் புகட்ட ஆணையிட்டார். இதுபோன்ற செயல்களை செய்வதையே வழக்கமாகக்  கொண்டிருந்த மதுசூதனன் இதை திண்டுக்கல் சீனிவாசனிடம் சொல்ல,  அதைக்கேட்ட சீனிவாசன், இந்த பொறுப்பை தமது அப்போதைய கைத்தடியான நத்தம் விஸ்வநாதன் என்று அழைக்கப்படும் விஸ்வநாதனிடம் கூறியதாகவும், நத்தம் விஸ்வநாதன் ஏற்பாடு செய்தபடியே, மும்பையை சேர்ந்த சுடலை என்கிற சுர்லா சந்திரலேகா மீது  அமிலம் வீசினார். இதில் சந்திரலேகாவின் முகம் சிதைந்தது. பல மாதங்கள் சிகிச்சை பெற்ற அவர், ஒருகட்டத்தில் ஜெயலலிதாவை பழிவாங்க வேண்டும்  என்ற எண்ணத்தில் அப்போது தீவிரமாக ஜெயலலிதா எதிர்ப்பு அரசியல் செய்து கொண்டிருந்த சுப்பிரமணியசாமியின் ஜனதாக் கட்சியில் சேர்ந்தார். இப்போது அவரும் பாரதிய ஜனதாவில் சேர்ந்து விட்டார்.

அதிமுக பிரபலங்கள்

இந்த வழக்கை பின்னர் சிபிஐ விசாரித்தது. அதன் விசாரணையில் சுர்லா மதுசூதனனின் பெயரை கூறியதன் அடிப்படையில் மதுசூதனனை கைது செய்தது. ஒருகட்டத்தில் சுர்லா எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு சிறையிலேயே இறந்து போனான். ஆனாலும், இந்த வழக்கின் உண்மைக் குற்றவாளிகள் யார் என்பது இறுதிவரை வெளியிடப்படவில்லை; குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்படவில்லை. இந்த வழக்கில் நாம் பார்த்த மதுசூதனன் தான் அதிமுக பன்னீர்செல்வம் பிரிவின் அவைத்தலைவராக இருப்பதுடன் ஆர்.கே.நகர்  தொகுதியிலும் போட்டியிடுகிறார். திண்டுக்கல் சீனிவாசன் அமைச்சராகி உள்ளார். அவரது அடியாளாக இருந்த நத்தம் விஸ்வநாதன் அவரை விட பெரிய ஆளாக வளர்ந்து பல்லாயிரக்கணக்கான கோடிகளை சேர்த்து விட்டார். அவர் இப்போது பன்னீர்செல்வம் அணியின் முக்கியத்தலைவர்களில் ஒருவராவார்.

வழக்கறிஞர் கே.எம்.விஜயன்

தமிழகத்தின் மிக முக்கியமான வழக்கறிஞர்களில் ஒருவரான கே.எம்.விஜயன் அப்போது  கோடம்பாக்கத்தில் வாழ்ந்து வந்தார். இடஒதுக்கீட்டின் அளவு 50 விழுக்காட்டுக்கு மேல் அதிகரிக்கக்கூடாது என்று உச்சநீதிமன்றம் ஓர் வழக்கில் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து, தமிழகத்தில் 69% இடஒதுக்கீட்டுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணைக்கு நேர்நிற்பதற்கு தில்லி செல்வதற்காக 21.07.1994 அன்று தமது வீட்டை விட்டு வெளியே வந்த விஜயனை பயங்கர ஆயுதங்களுடன் வந்த கும்பல் சரமாரியாக வெட்டி வீழ்த்தியது. அதன்பின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயன் பல மாதங்களுக்குப் பிறகே நலமடைந்தார்.

விஜயன் மீதான தாக்குதலுக்கு அனைத்துத் தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்தன. வழக்கறிஞர்கள் போராட்டம் காரணமாக தமிழகத்தில் உள்ள நீதிமன்றங்கள் பல நாட்கள் மூடிக்கிடந்தன. இவ்வழக்கை தமிழக அரசு சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றி முடிக்க நினைத்தது. ஆனாலும் அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் இவ்வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றியது.  சி.பி.ஐ. விசாரணையில் திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தன. இவ்வழக்கில் விஜயனைத் தாக்கியதாகக் கூறி நீதிமன்றத்தில் சரணடைந்த நால்வரும் போலிக்குற்றவாளிகள் என்பது தெரியவந்தது.

அப்போதைய அமைச்சர் எஸ்.டி.சோமசுந்தரம், அதிமுகவின் மாவட்ட செயலாளரும், வாரியத் தலைவருமான ஆதி.இராஜாராம், மாவட்ட துணைச்செயலாளர் விருகை கண்ணன் உள்ளிட்ட 14 பேர் மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. எனினும் வழக்கறிஞர் விஜயன், காவல்துறை அதிகாரிகள் தவிர மீதமுள்ள அனைத்து சாட்சிகளும் பிறழ்சாட்சியம் அளித்ததால் இவ்வழக்கில் குற்றஞ்சாற்றப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து 30.10.1996 அன்று சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. பின்னர் உயர்நீதிமன்றத்தில் சி.பி.ஐ. மேல்முறையீடு செய்த போதிலும் பயனில்லை.

  வழக்கறிஞர் சண்முகசுந்தரம்

ஜெயலலிதாவின் ஊழலை எதிர்த்ததால் தாக்கப்பட்ட வழக்கறிஞர்களில் முக்கியமானவர் சண்முகசுந்தரம். அரசுக்கு சொந்தமான டான்சி நிலத்தை ஜெயலலிதாவும், சசிகலாவும் இணைந்து ஜெயா பப்ளிகேஷன்ஸ், சசி எண்டர்பிரைசஸ் ஆகிய நிறுவனங்களுக்காக வாங்கினார்கள். அதை எதிர்த்து இந்திய தண்டனை சட்டத்தின் 169-ஆவது பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்ய திமுக முடிவு செய்கிறது. திமுகவின் வழக்கறிஞர் பிரிவு இணைச்செயலாளர் ஆலந்தூர் பாரதி பெயரில் வழக்குப் பதிவு செய்ய சண்முகசுந்தரம் மனுவைத் தயாரித்து வந்தார். இதற்காக அவர்கள் இருவரும் ஒரு மாதத்திற்கும் மேலாக நேரிலும், தொலைபேசியிலும் ஆலோசனை நடத்தி வந்தனர். அந்த காலக் கட்டத்தில் தமக்கு தொலைபேசி மூலம் மிரட்டல்கள் வருவதாக பாரதியிடம் சண்முகசுந்தரம் கூறி வந்தார்.

1995-ஆம் ஆண்டு மே 31 ஆம் தேதி நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்படவிருந்தது. அதற்கு முதல் நாள் மே 30-ஆம் தேதி இருவரும் கீழ்ப்பாக்கத்தில் உள்ள சண்முகசுந்தரத்தின் வீட்டில் சந்தித்து பேசினர். அதன்பின் பாரதி அவரது வீட்டிற்கு புறப்பட்டுச் சென்றார். அப்போது பிரபல ரவுடி வெல்டிங் குமார் தலைமையில் வந்த கும்பல் அவரை சரமாரியாக  தாக்கியது. இரும்பு கம்பிகள் மற்றும் உருட்டுக்கட்டைகளால் தாக்கப்பட்டதுடன், அரிவாள்களாலும் வெட்டப்பட்டார். இதில்  சண்முகசுந்தரத்தின் கை, கால்களில் பல இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது. கைகளில் ஆழமான அரிவாள் வெட்டு விழுந்தது. இடது கையின் சுண்டு விரல் வெட்டித் துண்டிக்கப்பட்டது. பல வாரங்கள் மருத்துவமனையில் உயிருக்குப் போராடிய இவர், மருத்துவர்களின் தொடர் சிகிச்சையால் உயிர் பிழைத்தார்.

வழக்கறிஞர்கள் போராட்டம்

சண்முகசுந்தரம் தாக்கப்பட்டதைக் கண்டித்து சென்னை உயர்நீதிமன்ற  வழக்கறிஞர்கள் தொடந்து 3 வாரங்களுக்கு போராட்டங்களை நடத்தினர். அப்போது சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் நடத்தப்பட்ட போராட்டத்திற்கு மூத்த வழக்கறிஞர்கள் காந்தி, பால்பாண்டியன் ஆகியோர்  தலைமையேற்றனர். இவ்வழக்கில் குற்றஞ்சாற்றப்பட்ட 7 பேரில் 6 பேருக்கு ஆயுள்தண்டனை விதித்து சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஜெயலலிதா ஆட்சியில் நடத்தப்பட்ட தாக்குதல்களை பட்டியலிட பக்கங்கள் போதாது. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த உடனேயே தராசு அலுவலகம் மீது நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டனர். நக்கீரன் இதழ் அலுவலகம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார். தேர்தல் ஆணையத்தின் தலைவராக இருந்த டி.என்.சேஷன், அசோகா ஓட்டலில் இருந்து வெளியே வரமுடியாமல் அவர்கள் மீது தாக்குதல், மத்திய அமைச்சர் சிதம்பரம் மீது இளவரசன் என்ற அதிமுக பிரமுகர் தாக்குதல் நடத்தினார். அதற்குப் பிறகு இளவரசனுக்கு பால்வளத்துறையின் தலைவர், நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் என்று பதவி கொடுத்து அதிமுக அழகு பார்த்தது.

அண்ணா பல்கலைக்கழகத்தில் இடஒதுக்கீட்டு உச்சவரம்பை நடைமுறைப்படுத்துவேன் என்று கூறியதற்காக அப்போதைய அண்ணா பல்கலைக்கழகதுணைவேந்தர் அனந்தகிருஷ்ணன் வீட்டிற்குள் ரவுடிகள் புகுந்து மிரட்டியது, அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் வி.பி.ஆர். ரமேஷ், சொக்கலிங்கம் ஆகியோர் தாக்கப்பட்டது  என்று பட்டியல் நீண்டு கொண்டே செல்லும்.

No comments:

Post a Comment