கதை கேளு... கதை கேளு கழகத்தின் கதை கேளு!
தமிழர் வாழ்வுரிமை மாநாடு!
-மருத்துவர். இராமதாஸ்
1991 சட்டப்பேரவைத் தேர்தலில் மிகப்பெரிய பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற ஜெயலலிதா, தம்மை ஜான்சி ராணியாகவே நினைத்துக் கொண்டு ஆட்சி செய்யத் தொடங்கினார். தம்மை யார் எதிர்த்தாலும் அவர்கள் மீது கஞ்சா வழக்கு பதிவு செய்து, கைது செய்து சிறையில் அடைப்பது ஜெயலலிதாவின் வழக்கமாக மாறியது.
சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றதற்கு காரணம் ராஜிவ் படுகொலையால் ஏற்பட்ட அனுதாபம். தி.மு.க. படுதோல்வி அடைந்ததற்கு காரணம் ராஜிவ் காந்தி படுகொலையால் ஏற்பட்ட வெறுப்பு ஆகும். பாட்டாளி மக்கள் கட்சியின் ஈழ ஆதரவு நிலைப்பாட்டை எடுத்திருந்ததால், ராஜிவ் கொலையால் பா.ம.கவின் வெற்றி வாய்ப்பும் கடுமையாக பாதிக்கப்பட்டது. தேர்தலுக்குப் பிறகும், தமிழகத்தில் விடுதலைப்புலிகள் மற்றும் ஈழத்தமிழர்களுக்கு எதிரான மனநிலை நிலவியது.
நீதிபதி மருமகன் மீது கஞ்சா வழக்கு
இதைப்பயன்படுத்தி தமது செல்வாக்கைத் தக்க வைத்துக் கொள்ளலாம்; எதிரிகளை அடக்கலாம் என்ற எண்ணத்தில், அரசியல் எதிரிகள் மீது மிகக்கடுமையான அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டார். 1991&96 ஆட்சிக்காலத்தில் தமக்கு எதிராக அப்போதைய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியும், பின்னாளில் உச்சநீதிமன்ற நீதிபதியாகவும், இந்திய சட்ட ஆணையத்தின் தலைவராகவும் பதவி வகித்த நீதியரசர் ஏ.ஆர். லட்சுமணன் தீர்ப்பளித்ததால் ஆத்திரமடைந்த ஜெயலலிதா, அவரது மருமகன் மீது கஞ்சாக் கடத்தல் வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வைத்தார்.
அதேபோல், ஜெயலலிதாவுக்கு எதிராக ஊழல் வழக்குத் தொடர அனுமதி அளித்தது சரியானது என்று தீர்ப்பளித்த நீதிபதி சீனிவாச சாஸ்திரிகளின் வீட்டிற்கு மின்சாரம் மற்றும் குடிநீர் இணைப்புகளை துண்டித்து மிரட்டினார். அரசு அதிகாரிகள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் என ஜெயலலிதாவின் அடக்குமுறைக்கு ஆளாகாத ஆளே இல்லை. பொதுவானவர்களை ஒடுக்க கஞ்சா வழக்கு என்றால், அரசியல் எதிரிகளை ஒடுக்க அவருக்கு பயன்பட்டது தடா மற்றும் தேசத்துரோக சட்டங்கள் தான். அதற்கு வசதியாக விடுதலைப்புலிகள் என்பவர்கள் போராளிகள் என்றிருந்த மக்களின் மனநிலையை மாற்றி, அவர்கள் பயங்கரவாதிகள் என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த ஜெயலலிதா முயன்றார்.
கொலை செய்ய சதி
அதற்காகவே ஒருமுறை சட்டப்பேரவையில்,‘‘என்னைக் கொல்ல புலிகள் இயக்கத்தின் தறகொலைப்படை தமிழகத்துக்குள் ரகசியமாக ஊடுருவி உள்ளனர். ராஜிவ் கொலை தொடர்பான விசாரணை நடத்தி வரும் சிறப்புப் புலனாய்வுக் குழு அலுவலகத்தை தகர்க்கவும் ராஜிவ் கொலையில் கைதாகியுள்ள முக்கியப் புள்ளிகளை மீட்கவும் அவர்கள் சதித் திட்டம் தீட்டியுள்ளனர்’’ என்று குற்றஞ்சாற்றினார்.
1991- இல் ஈழத்தமிழ் அகதிகள் தமது குடியிருப்புகளுக்கு அருகில் உள்ள காவல் நிலையங்களில் பதிவு செய்து கொள்ள வேண்டுமென அரசாணை பிறப்பித்தார். ஈழத் தமிழர்களைக் கைது செய்து அகதி முகாம்களைத் திறந்த வெளிச்சிறைச்சாலையாக மாற்றினார். அதுவரை ஈழ அகதிகளின் பிள்ளைகளுக்காக தொழிற்கல்லூரிகளில் இருந்து வந்த இட ஒதுக்கீட்டை ரத்து செய்தார். ஈழ அகதிகளின் குழந்தைகள் கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் சேர்வதைத் தடை செய்தார்.
தடா சட்டத்தில் கைது
பத்மநாபா கொலைவழக்கைக் காரணம் காட்டி முன்னாள் உள்துறைச் செயலாளர் நாகராஜனைக் கைது செய்து மிரட்டி, துன்புறுத்தி அப்ரூவராக்கினார். அவ்வழக்கில் முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமியையும் அவர் கணவர் ஜெகதீசனையும் தடாவில் உள்ளே தள்ளினார். வைகோவின் தம்பி ரவியைத் தடாவில் கைது செய்தார். பத்மநாபா கொலை வழக்கில் குண்டு சாந்தனை தலைமறைவாகப் போகச் சொல்லி கடிதம் எழுதினார் என்று சொல்லி சாந்தனின் வழக்கறிஞரும், திராவிடர் கழக பிரமுகருமான வீரசேகரனை தடா சட்டத்தில் கைது செய்தார்.
தமிழகத்தில் இத்தனை அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்ட போதிலும், அதை எதிர்த்து திமுக எந்த போராட்டத்தையும் பெரிய அளவில் செய்யவில்லை. இத்தனைக்கு தடா சட்டத்தின்படி கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசனும், வைகோவின் சகோதரர் ரவிச்சந்திரனும் திமுகவின் முன்னணி தலைவர்கள் ஆவர். அதிமுகவின் அடக்குமுறைக்கு எதிராக அப்போது குரல் கொடுத்த கட்சி பாட்டாளி மக்கள் கட்சி மட்டுமே. தடா சட்டத்திற்கு எதிராக அடக்குமுறைச் சட்டம் எதிர்ப்பு இயக்கம் என்ற பெயரில் தனி இயக்கம் தொடங்கி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரம் மேற்கொண்டேன். இந்த சட்டத்திற்கு எதிராக தொடர் போராட்டங்களை நடத்தியதால் பாட்டாளி மக்கள் கட்சியையும், என்னையும் பழிவாங்குவற்காக ஜெயலலிதா துடித்தார். ஆனால், ‘‘அச்சம் என்பது மடமையடா’’ என்ற முழக்கத்திற்கு ஏற்ப ஜெயலலிதா அரசின் அடக்குமுறைக்கு எதிராக தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டேன்.
தமிழர் வாழ்வுரிமை மாநாடு
இதன் அடுத்தக்கட்டமாக 1992 செப்டம்பர் மாதம் 10,11, 12 ஆகிய தேதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தமிழர் வாழ்வுரிமை மாநாடு சென்னையில் நடத்தப்பட்டது. முதல் இரு நாட்கள் மாநாடு சென்னை பெரியார் திடலில் நடைபெற்றது. பெரியார் திடலில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் காங்கிரஸ், அதிமுக ஆகிய இரு கட்சிகளைத் தவிர மற்ற அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும், சிறு அமைப்புகள், ஈழத்தமிழர் அமைப்புகளின் தலைவர்களும் பங்கேற்றனர். தமிழீழத்திற்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழீழம் குறித்து பேசினாலோ, விடுதலைப்புலிகளை ஆதரித்தாலோ அடக்குமுறை பாயும் என்றிருந்த நிலையில், இந்த மாநாட்டை பாட்டாளி மக்கள் கட்சி துணிச்சலாக நடத்தியது. அதிலும் குறிப்பாக தடா சட்ட எதிர்ப்பு இயக்கத்தை நடத்தியதற்காக என்னையும், பாட்டாளி மக்கள் கட்சியையும் பழிவாங்க வேண்டும் என்று ஜெயலலிதா துடித்துக் கொண்டிருந்த நிலையில், அவருக்கு சவால் விடுக்கும் வகையில் இந்த மாநாடு மிகவும் சிறப்பாக நடத்தப்பட்டது.
மாநாட்டின் மூன்றாம் நாள் நிகழ்ச்சிகள் சென்னை கடற்கரையில் உள்ள சீரணி அரங்கில் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சிகள் தொடங்குவதற்கு முன்பாக சைதாப்பேட்டை மறைமலை அடிகளார் பாலம் தொடங்கி சீரணி அரங்கம் வரை பேரணி நடத்தப்பட்டது. தேனாம்பேட்டை பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மேடையிலிருந்து இந்த பேரணியை நானும் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர்களும் பார்வையிட்டோம். லட்சக்கணக்கில் மக்கள் திரண்டிருந்த இந்தப் பேரணி ஓர் இடத்தைக் கடக்க 9 மணி நேரம் ஆனது.
பிரபாகரன் படம் ஏந்தல்
சீரணி அரங்கத்தில் நடைபெற்ற மாநாட்டு நிகழ்ச்சியில் முன்னாள் குடியரசுத் தலைவர் ஜெயில்சிங், ஜனதா தளத் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜார்ஜ் பெர்னாண்டஸ், இப்போது மத்திய அமைச்சராக இருப்பவரும், ஜனதா தளத்தின் மூத்த தலைவருமான ராம்விலாஸ் பாஸ்வான், பகுஜன்சமாஜ் கட்சித் தலைவரும், எனது நெருங்கிய நண்பருமான கான்சிராம், குன்றக்குடி அடிகளார், சிவாஜிகணேசன், பழ.நெடுமாறன், இப்போதைய காங்கிரஸ் தலைவரும், முன்னாள் அமைச்சருமான திருநாவுக்கரசு, பா.ம.க. சட்டப்பேரவை உறுப்பினர் பண்ருட்டி ராமச்சந்திரன், நெல்லிக்குப்பம் கிருஷ்ணமூர்த்தி, பழனிபாபா, தமிழ் தேசிய தலைவர்களாக பெ.மணியரசன், தியாகு, சுப.வீரபாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றுப் பேசினார்கள். அம்மாநாட்டில் தான் விடுதலைப்புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரனின் உருவப்படத்தை சில இளைஞர்கள் தாங்கிப்பிடித்து தங்களின் துணிச்சலை வெளிப்படுத்தினர்.
தேசத்துரோக வழக்கு - கைது
அதேபோல், மாநாட்டில் பங்கேற்ற பலரும் தமிழீழத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். இதை ஜெயலலிதாவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதற்கு அடுத்த நாளே, ‘‘தேசத் துரோக, பிரிவினை சக்திகளுக்கு தமிழகத்தில் சிறிதும் இடமில்லை’’ என ஆவேசமாக அறிக்கை விட்டார் ஜெயலலிதா. அத்துடன் தமிழீழத்துக்கு ஆதரவாக பேசியதற்காக என் மீதும், பழ.நெடுமாறன் பண்ருட்டி ராமச்சந்திரன், நெல்லிக்குப்பம் கிருஷ்ணமூர்த்தி, பெ.மணியரசன், தியாகு, சுப.வீரபாண்டியன் ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வைத்தார். அதைத் தொடர்ந்து நான் தாக்கல் செய்த பிணை மனுவை விசாரித்த சென்னை கூடுதல் தலைமை பெருநகர நீதிமன்ற பொறுப்பு நீதிபதி டி.வி.சுப்ரமணியம் எனக்கு பிணை வழங்கி உத்தரவிட்டார்.
இதை ஜெயலலிதாவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவரை மிரட்டி விடுப்பில் வீட்டுக்கு அனுப்பிவிட்டு, அவருக்கு பதிலாக நீதிபதி கந்தசாமிபாண்டியனை தலைமை பெருநகர நீதிமன்ற பொறுப்பு நீதிபதியாக அமர்த்திப் பிணையை ரத்து செய்ய வைத்தார். அதுமட்டுமின்றி சி.பி.சி.ஐ.டி மூலம் தேசத்துரோகச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வைத்தார். என்னுடன் நெல்லிக்குப்பம் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோரும் தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டனர். சென்னையிலுள்ள பழைய மத்திய சிறையில் தனிமை செல்லில் அடைக்கப்பட்டோம். மலம் கழிப்பது முதல் அனைத்தும் அங்கேயே தான் செய்து கொள்ள வேண்டும். கூவம் கரை என்பதால் ஆயிரக்கணக்கான கொசுக்கள் கடிக்கும். ஒருமுறை குருதிக்கொடை வழங்கினால் எவ்வளவு குருதி எடுக்கப்படுமோ, அதைவிட அதிக ரத்தத்தை கொசுக்கள் எங்களிடமிருந்து உறிஞ்சின. ஆனால், இந்த அடக்குமுறைகளுக்கெல்லாம் நானோ, பாட்டாளி மக்கள் கட்சியோ அஞ்சவில்லை.
No comments:
Post a Comment