Sunday, 26 March 2017

கதை கேளு... கதை கேளு கழகத்தின் கதை கேளு! அனுதாபத்தால் வென்ற அதிமுக! -மருத்துவர். இராமதாஸ்

கதை கேளு... கதை கேளு கழகத்தின் கதை கேளு!

அனுதாபத்தால் வென்ற அதிமுக!
       -மருத்துவர். இராமதாஸ்

சட்டப்பேரவையில்  நடந்த வன்முறை, திமுகவினரால் தாக்கப்பட்டது ஆகியவற்றுக்குப் பிறகு ஜெயலலிதாவின் ஒற்றை நோக்கம் திமுக அரசை கலைத்துவிட்டு தாம் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதாகத் தான் இருந்தது. அதற்கேற்றவாறு ஜெயலலிதாவின் வலிமை அதிகரித்துக் கொண்டே சென்றது.

அதிமுகவின் ஜா அணி  ஜெயலலிதாவுடன் இணைந்த பிறகும் ஆர்.எம்.வீரப்பன், கா.காளிமுத்து ஆகியோர் தனியாகவே செயல்பட்டு வந்தனர். எந்த நேரமும் மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்படலாம்  என்றிருந்த நிலையில், ஜானகி அணியிலிருந்து ஜெயலலிதாவைஒ மிகக்கடுமையாக விமர்சித்துக் கொண்டிருந்த முன்னாள் அமைச்சர் கா.காளிமுத்து  திடீரென ஜெயலலிதாவை சந்தித்து அதிமுகவில் இணைந்தார். அவரைத் தொடர்ந்து  ஜெயலலிதாவுக்கு ஜென்ம விரோதியாக பார்க்கப்பட்ட ஆர்.எம்.வீரப்பன் அதிமுகவின் இணைந்தார்.

அதிமுகவில் நாவலர்!

அவர்களைத் தொடர்ந்து உதிர்ந்த ரோமம் என்று ஜெயலலிதாவால் விமர்சிக்கப்பட்ட நாவலர் நெடுஞ்செழியன், ப.உ.சண்முகம், கே.ஏ.கிருஷ்ணசாமி, இப்போது திமுக எம்.எல்.ஏ ஆகவும், முன்னாள் அமைச்சராகவும் இருந்த எ.வ.வேலு என்கிற வஜ்ஜிரவேலு ஆகியோரும் அதிமுகவில் இணைந்தனர். இதனால் அதிமுக பலம் பொருந்தியதாக மாறியது.
1989-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலிலேயே காங்கிரசும், அதிமுகவும் கூட்டணி அமைக்கத் திட்டமிட்டிருந்தன. ஆனால், மூப்பனார் தான் தலைமைக்கு தவறான தகவல்களைக் கொடுத்து தனித்து போட்டியிட்டாலே வெற்றி பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்திருந்தார். ஆனால், அத்தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்ததால் மூப்பனார் தலைவர் பதவியிலிருந்து விலகினார். அவருக்கு பதில் வாழப்பாடி இராமமூர்த்தி புதிய தலைவராக நியமிக்கப்பட்டார். அதிமுகவுக்கும், காங்கிரசுக்கும் இடையிலான உறவும் வலுவடைந்தது.

பா.ம.க. உதயம்!

மற்றொரு பக்கம் வன்னியர்களின் இட ஒதுக்கீட்டுக் கோரிக்கையை கலைஞர் முழுமையாக நிறைவேற்றாமல் துரோகம் செய்ததால், பாட்டாளி மக்களுக்கு அரசியல் அதிகாரத்தை வென்றெடுக்கும் நோக்கத்துடன் 1989-ஆம் ஆண்டு ஜூலை 16 அன்று சென்னை கடற்கரை சீரணி அரங்கத்தில் பாட்டாளி மக்கள் கட்சியைத் தொடங்கினேன். சமூக நீதி, ஜனநாயகம், சமத்துவம், மனிதநேயம் ஆகிய நான்கு கொள்கைகளை முழக்கமாகக் கொண்டு தந்தை பெரியார், அம்பேத்கர், கார்ல் மார்க்ஸ் ஆகியோரை கொள்கை வழிகாட்டிகளாகக் கொண்டு பாட்டாளி மக்கள் கட்சி பயணத்தைத்  தொடங்கியது.

அடுத்த சில மாதங்களில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளில் 39 தொகுதிகளில் அதிமுக காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது. திமுக கூட்டணியில் அக்கட்சி போட்டியிட்ட இடங்கள் அனைத்திலும் தோல்வியடைந்தது. நாகப்பட்டினம் தொகுதியில் மட்டும் அக்கூட்டணி சார்பில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் செல்வராஜ் வெற்றி பெற்றார். தமிழகத்தில் அமோக வெற்றி பெற்றதால் திமுக அரசை கலைத்து விட்டு, ஆட்சிக்கு வந்து விடலாம் என்ற நம்பிக்கை ஜெயலலிதாவுக்கு எழுந்தது. ஆனால், தேர்தல் முடிவுகள் முழுமையாக வந்திருந்த போது அந்த நம்பிக்கை பட்டுப் போய்விட்டது. காரணம்.... தமிழகத்தில் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றிருந்தாலும், தேசிய அளவில் காங்கிரஸ் படுதோல்வியடைந்தது.

மத்தியில் வி.பி.சிங் ஆட்சி

காங்கிரஸ் கட்சியின் போபர்ஸ் ஊழலை மையப்படுத்தி தேர்தலை சந்தித்த வி.பி.சிங் இடதுசாரிகள் மற்றும் பாரதிய ஜனதாக் கட்சியின் ஆதரவுடன் ஆட்சியைப் பிடித்தார். எதிர்க்கட்சியாக அமர்ந்தது காங்கிரஸ். தமிழகத்தில் ஓரிடத்தில் கூட வெற்றி பெறாவிட்டாலும் கூட மத்திய அரசில் திமுகவும் சேர்த்துக்கொள்ளப்பட்டது. அக்கட்சியைச் சேர்ந்த முரசொலிமாறன் மத்திய அமைச்சராக பதவியேற்றார். இதனால் திமுக அரசைக் கலைக்கும் முயற்சி பலிக்காது என்ற விரக்தியில் ஜெயலிதா சோர்ந்து போனார்.

மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்ற வி.பி.சிங் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக சில நடவடிக்கைகளை மேற்கொண்டார். அதில் முக்கியமானது இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான தாக்குதலில் ஈடுபடுத்தப்பட்ட இந்திய அமைதிப்படையை திரும்ப அழைத்துக் கொள்வதாகும். 1990 தொடக்கத்தில்  சென்னை வழியாக இந்தியா திரும்பிய அமைதிப்படையை வரவேற்கச் செல்ல முடியாது என கலைஞர் அறிவித்தார்; அதை செயல்படுத்தவும் செய்தார். இது இந்திய ராணுவத்தை அவமதிக்கும் செயல் என்று காங்கிரஸ் குற்றஞ்சாற்றியது. ஆனால், அதை கலைஞர் கண்டு கொள்ளவில்லை.

மண்டல் பரிந்துரைகள் நடைமுறை

மத்தியில் வி.பி.சிங் அரசுக்கு ஒருபுறம் ஆதரவளித்து வந்த பாரதிய ஜனதா மற்றொரு புறம் வீண் தொல்லைகளை கொடுத்து வந்தது. ஒருகட்டத்தில் மண்டல் கமிசன் பரிந்துரைகளை நடைமுறைப் படுத்துவதாக வி.பி.சிங் அறிவித்தார். அதைத் தொடர்ந்து பாரதிய ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புகள் போராட்டத்தில் இறங்கின.
மற்றொருபுறம் அயோத்தியில் இராமர் கோவில் கட்ட வேண்டும்  என்ற கோரிக்கையை வலியுறுத்தி  பாரதிய ஜனதா தலைவர் அத்வானி இரதயாத்திரை மேற்கொண்டிருந்தார். அத்வானியின் இரத யாத்திரை  மதவெறியைத் தூண்டுவதாகவும், பிகார் எல்லைக்குள் இரத யாத்திரை நுழைந்தால் அத்வானி கைது செய்யப்படுவார் என்றும் லாலு பிரசாத் எச்சரித்திருந்தார். ஆனால், அதைப் பொருட்படுத்தாமல் 23.10.1990 அன்று பிகார் எல்லைக்குள் அத்வானியின் யாத்திரை நுழைந்தது. அங்கு அவர் கைது செய்யப்பட்டார்.
வி.பி.சிங் அரசுக்கு அளித்துவந்த ஆதரவை வாபஸ் பெறுவதென பாரதிய ஜனதா ஏற்கனவே தீர்மானித்து விட்டது. அதற்கான காரணத்தைத் தேடிக் கொண்டிருந்த போது, தடையை மீறி ரத யாத்திரை நடத்தும் யோசனை வந்தது. லாலு பிரசாத் யாதவ் வி.பி.சிங் கட்சியைச் சேர்ந்தவர் என்பதால், கைது நடவடிக்கையை காரணம் காட்டி ஆதரவையும் வாபஸ் பெறலாம்; இராமர் கோவிலுக்காக கைது ஆனதால் இந்து மக்களிடமும் நல்ல பெயர் கிடைக்கும் என்ற யோசனையுடன் பாரதிய ஜனதா இவ்வாறு செய்தது.

சந்திரசேகர் ஆட்சி

வி.பி.சிங் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை பாரதிய ஜனதா வாபஸ் பெற்றதைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் வி.பி.சிங் அரசு கவிழ்ந்தது.  அதைத் தொடர்ந்து  ஜனதா தளத்திலிருந்து பிரிந்து வந்த சந்திரசேகர் காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் 21.11.1990 அன்று ஆட்சியமைத்தார்.  காங்கிரசின் பினாமி அரசு மத்தியில் அமைந்ததால், தமிழகத்தில் கலைஞர் அரசைக் கலைக்க  வேண்டும் என்ற கோரிக்கையை ஜெயலலிதா புதுப்பித்தார்.

அந்த நேரத்தில் தமிழகத்தில் இலங்கை போராளிக் குழுக்கள் சுதந்திரமாக இயங்கிக் கொண்டிருந்தனர். காங்கிரஸ் தலைவர் ராஜிவ் காந்திக்கும் கலைஞர் அரசு மீது கோபங்கள் இருந்தது.  அந்த நேரத்தில் 1990&ஆம் ஆண்டு ஜூன் 19 ஆம் தேதி ஈ.பி.ஆர்.எல்.எஃப் அமைப்பின் தலைவர் பதம்நாபாவை சென்னை கோடம்பாக்கத்தில் விடுதலைப்புலிகள் சுட்டுக் கொன்றனர். இதைக் காரணமாக வைத்து தமிழக அரசை கலைக்க மத்திய அரசும், காங்கிரசும் முடிவு செய்தன. இதற்காக தமிழக ஆளுனர் பர்னாலாவை அழைத்து அறிக்கை தரும்படி கேட்டனர். அவர் அறிக்கை தர மறுத்து விட்ட நிலையில், 30.01.1991 அன்று கலைஞர் அரசு கலைக்கப்பட்டது.

ராஜிவ் படுகொலை

அடுத்த சில மாதங்களில் காங்கிரசின் குடைச்சல்களை தாங்கிக் கொள்ள முடியாமல் 1991 மார்ச் மாதம் சந்திரசேகர் அரசு பதவி விலகியது. இதையடுத்து மக்களவைக்கு மே 20, 23, 26 ஆகிய நாட்களில் மூன்று கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையர் சேஷன் அறிவித்தார். தமிழகத்தில் மக்களவையுடன் சேர்த்து சட்டப்பேரவைக்கும் சேர்த்து கடைசி கட்டமாக தேர்தல் நடைபெறவிருந்தது.  இதற்கான பிரச்சாரத்தில் பங்கேற்பதற்காக வந்த ராஜிவ் காந்தி 21ம் தேதியன்று திருப்பெரும்புதூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்கச் சென்ற போது மனித வெடிகுண்டுக்கு இரையானார்.

அதனால் தமிழகத்தில் மே 26-ஆம் தேதி நடைபெறவிருந்த தேர்தல் ஜூன் 12, 15 ஆகிய தேதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டது. தமிழகத்தில் ராஜிவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதற்கு திமுக தான் காரணம் என்று மக்கள் கருதினர். இதனால் ஏற்பட்ட அனுதாபத்தால் அதிமுக - காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்றது. அதிமுக 158 இடங்களிலும், காங்கிரஸ் 60 இடங்களிலும் வென்றன. திமுகவுக்கு இரு இடங்களும், பா.ம.க.வுக்கு ஓரிடமும் கிடைத்தது. அனுதாபத்தால் கிடைத்த வெற்றியின் காரணமாக  ஜெயலலிதா முதலமைச்சர் ஆனார்!

         

No comments:

Post a Comment