Sunday, 26 March 2017

கதை கேளு... கதை கேளு கழகத்தின் கதை கேளு! சிதைக்கப்பட்ட சட்டப்பேரவை மாண்புகள்! -மருத்துவர். இராமதாஸ்

கதை கேளு... கதை கேளு கழகத்தின் கதை கேளு!
சிதைக்கப்பட்ட சட்டப்பேரவை மாண்புகள்!
    -மருத்துவர். இராமதாஸ்

பாட்டாளி மக்கள் கட்சி 1989-ஆம் ஆண்டு ஜனவரி 21-ஆம் தேதி நடைபெற்ற தேர்தலை புறக்கணித்திருந்த நிலையில், திமுக  அமோக வெற்றி பெற்றிருந்தது. அக்கட்சி 146 இடங்களிலும்,  அதன் கூட்டணிக் கட்சிகள் 24 இடங்களிலும், அதிமுக ஜெயலலிதா அணி 27 இடங்களிலும், அதன் கூட்டணி கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூன்று இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தன.

தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்து விட வேண்டும் என்று இப்போது பாரதிய ஜனதா துடிப்பதைப் போல அப்போது காங்கிரஸ் துடித்தது. ஆளுனர் ஆட்சி நடைமுறையில் இருந்ததை பயன்படுத்திக் கொண்டு தமக்கு தேவையான விஷயங்களையெல்லாம் அக்கட்சி செய்து கொண்டது. காங்கிரசை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்பதற்காக ராஜிவ்காந்தி 25-க்கும் மேற்பட்ட முறை தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரம் மேற்கொண்டார். ஆனாலும் அக்கட்சி அதிமுக ஜெயலலிதா அணியை விட ஓர் இடம் குறைவாகவே பெற்றது. அதிமுக ஜா அணியில் போட்டியிட்டவர்களில் பி.எச். பாண்டியன் மட்டுமே அவரது சொந்த செல்வாக்கில் தட்டுத்தடுமாறி வெற்றி பெற்றார். மீதமுள்ள இடங்களை சுயேட்சைகளும், சிறு கட்சிகளும் வென்றன.

ஜெ, ஜா அணிகள் இணைப்பு

இந்த தோல்வியைத் தாங்கிக் கொள்ள முடியாத எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மாள் அரசியலில் இருந்து விலகினார். இதைத் தொடர்ந்து 10.02.1989 அன்று இரு கட்சிகளும் இணைந்தன. அக்கட்சிக்கு ஜெயலலிதா பொதுச்செயலாளர் ஆனார். இரட்டை இலைச் சின்னமும் கிடைத்தது. அதன்விளைவாக  1989 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற மதுரை கிழக்குத் தொகுதி, மருங்காபுரி ஆகிய இடங்களில்  அதிமுக வெற்றி பெற்றது.
1989&ஆம் ஆண்டின் இறுதியில் மக்களவைக்கு தேர்தல் வரவிருந்தது. அதில் வெற்றி பெற வேண்டும் என்றால் அதிமுகவின் உறவு தேவை என ராஜிவ் காந்தி கருதினார். ஜெயலலிதாவுக்கோ எப்படியாவது  திமுக அரசை கலைத்து விட்டு தாம் ஆட்சிக்கு வந்து விட வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. அதற்கு செயல் வடிவம் தரும் நோக்குடன் சட்டப்பேரவையில் வன்முறையை தூண்ட நினைத்தார்.

25.03.1989 அன்று  தமது அரசின் முதல் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வதற்காக பேரவையை கூட்டியிருந்தார் கலைஞர். பேரவையில் வன்முறை ஏற்படும் என்பதை இரு தரப்பினருமே உணர்ந்திருந்தனர். அதிமுக சார்பில் மதுசூதனன், ஏ.வி.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தலைமையில் ரவுடிகள்ம் குவிக்கப்பட்டிருந்தனர். திமுக சார்பிலும் சம அளவில் ரவுடிகள் குவிக்கப்பட்டிருந்தனர்.

பேரவைக் கூடியது

அவை கூடியதுமே, தமது பதவி விலகல் கடிதம் வெளியான விஷயத்தில், அப்போதைய சென்னை மாநகரக் காவல்துறை ஆணையர் துரை அவை உரிமை மீறலில் ஈடுபட்டிருப்பதாகவும், இது குறித்து விவாதிப்பதற்காக தாம் கொடுத்துள்ள அவை உரிமை மீறல் பிரச்சினையையும்,  ஒத்திவைப்பு தீர்மானத்தையும் முதலில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று  எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா வலியுறுத்தினார்.
காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவைக்குழு துணைத்தலைவர் குமரி அனந்தனும் இதே கோரிக்கையை வலியுறுத்தினார்.

ஆனால், அதை ஏற்க மறுத்த பேரவைத்தலைவர் தமிழ்க்குடிமகன், நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யும்படி நிதியமைச்சரும், முதலமைச்சருமான கலைஞரைக் கேட்டுக் கொண்டார். அதைத் தொடர்ந்து  கலைஞர் நிதிநிலை அறிக்கையை வாசிக்கத் தொடங்க, அதற்கு போட்டியாக ஜெயலலிதா அவர் தயாரித்து எடுத்து வந்திருந்த அறிக்கையை படிக்கத் தொடங்கினார். அதுமட்டுமின்றி, கிரிமினல் ஆக்டில் (குற்றச்செயலில்) ஈடுபட்ட கருணாநிதி  நிதிநிலை அறிக்கையை படிக்கக் கூடாது என்று வலியுறுத்தினார்.

கலைஞர் திட்டினார்

அதைக்கேட்டு ஆத்திரமடைந்த கலைஞர், மைக்கை மூடிக்கொண்டு ஜெயலலிதாவைப் பார்த்து அச்சிலும் ஏற்ற முடியாத, அவைக்குறிப்பிலும் ஏற்றமுடியாத அந்த கெட்ட வார்த்தையை உதிர்த்தார். அவ்வளவு தான் அவையில் பெரும் வன்முறை வெடித்தது.  கோபி  தொகுதி அ.தி.மு.க. உறுப்பினரும், இப்போதைய அமைச்சருமான  கே.ஏ. செங்கோட்டையன், முதலமைச்சர் கலைஞர் கையில் இருந்த நிதிநிலை அறிக்கையை பறித்து கிழித்து எறிந்தார்.

மோதல்

அதில் கலைஞரின்  மூக்குக்கண்ணாடி உடைந்தது. தி.மு.க. அமைச்சர்கள் வீரபாண்டி ஆறுமுகம், பொன். முத்துராமலிங்கம்,  கோசி.மணி, கண்ணப்பன் மற்றும் தி.மு.க. எம். எல்.ஏக்கள் – அ.தி.மு.கவினர் பக்கம் பாய்ந்து  சென்று மோதலில் ஈடுபட்டனர். பேரவைத் துணைத்தலைவர் வி. பி.துரைசாமி, அ.தி.மு.க.உறுப்பினர்களை குத்தியும், உதைத்தும் தமது வீரத்தைக் காட்டினார். இதே துரைசாமி பின்னாளில் ஜெயலலிதாவின் காலில் விழுந்து அதிமுகவில் சேர்ந்தார். ஆனால், அங்கு தாக்குபிடிக்க முடியாமல் மீண்டும் தாய்க்கழகத்துக்கே திரும்பினார்.
சரி... மீண்டும் பேரவை மோதலுக்கு வருவோம்... எல்லா அ.தி.மு.க. உறுப்பினர்களும் ஆத்திரம் மேலிட நிதிநிலை அறிக்கையை  கிழித்து எறிந்தனர்.
அமைச்சர்கள் இந்தியாவின் முதல் சட்டமன்ற பெண் எதிர்க்கட்சித் தலைவரான ஜெயலலிதாவை குறி வைத்தனர். கனமான அட்டைகளையும் கட்டைகளையும் மைக் ஸ்டாண்டுகளையும் எடுத்து ஜெயலலிதாவின் தலையை நோக்கி எறிந்தனர். ஒரு பக்கம் எம். எல்.ஏ. அண்ணாநம்பியை கீழே தள்ளி மிதித்தது ஒரு தி.மு.க. கூட்டம். அவருக்கு உடம்பெல்லாம் ரத்தகாயம். காது கிழிந்து தொங்கியது!
கலைஞரின் துணைவியார் ராஜாத்தி அம்மாளும், முரசொலி மாறனின் மனைவி மல்லிகாவும் அமர்ந்திருந்த பார்வையாளர்கள் காலரியிலிருந்து சரமாரியாக செருப்புகள் வீசப்பட்டன!

ஜெயலலிதா புடவை உருவல்

போக்குவரத்துத் துறை அமைச்சர் கண்ணப்பன், ஜெயலலிதாவின் தோளிலும், வயிற்றிலும் மாறி மாறித் தாக்கினார்.  இதில் ஜெயலலிதா நிலைதடுமாறி, தனது இருக்கையில் விழுந்தார்.
துரைமுருகன்  ஜெயலலிதாவின் புடவையை உருவினார். ஜெயலலிதா போராடி புடவையை மீட்டார். புடவையின் ஒரு பகுதி கிழிந்து தொங்கியது. அன்றைய நாளில் அவையில் அதிமுகவுக்கு 29 உறுப்பினர்கள். திமுகவுக்கு 146 பேர்.  திமுகவினரின் தாக்குதலை அதிமுகவினரால் எதிர்கொள்ள முடியவில்லை.  ஒரு காலத்தில் அதிமுகவிலிருந்து விரட்டியடிக்கப்பட்டு, பின்னர் மீண்டும் சேர்த்துக்கொள்ளப்பட்ட திருநாவுக்கரசும், சாத்தூர் இராமச்சந்திரனும் தான் ஜெயலலிதாவை கவசம் போல் பாதுகாத்தனர். திமுகவினர் விட்ட உதைகளும், தூக்கி வீசிய பொருட்களும் அவர்களின் மீது தான் விழுந்தன. அன்று அவர்கள் இருவர் மட்டும் இல்லாவிட்டால்  ஜெயலலிதாவுக்கு  என்ன வேண்டுமானாலும் நடந்திருக்கலாம்.

கோழிக்குஞ்சு போல...

எங்கள் தலைவி சிங்கம் என்று அதிமுகவினர் கூறுவது வழக்கம். ஆனால், அன்று திமுகவினரின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல்,  பருந்துக்கு அஞ்சி நடுங்கும் கோழிக்குஞ்சை போன்று அமர்ந்திருந்தார் ஜெயலலிதா.  வன்முறை முடிந்ததும் ஜெயலலிதாவை  திருநாவுக்கரசும், அவரது தோழர்களும் பத்திரமாக அழைத்து வந்தனர்.

தலைவிரி கோலத்துடன் பேரவையிலிருந்து வெளியேறிய ஜெயலலிதா  ஆளுநர் மாளிகைக்குச் சென்று முறையிட்டார்.  பின்னர் தமது போயஸ் தோட்ட இல்லத்திற்கு வந்து செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “துரைமுருகன், என் சேலையைப் பிடித்து இழுத்து கிழித்ததார். அப்போது கீழே விழுந்ததால் முட்டிகளில் பலத்த அடி பட்டது. முதலமைச்சர் கருணாநிதி ஆபாசமாக “தே.. ” என்று சொல்லித் திட்டினார். எனது  தலையைக் குறிபார்த்து சரமாரியாகத் தாக்கினார்கள். சட்டசபைக்காவலர்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டு சும்மா இருந்தனர். சட்டசபையிலேயே இந்த மாதிரி அவமானம் நிகழ்ந்தால் நாட்டிலே மக்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கப்போகிறது” என்று கேட்ட ஜெயலலிதா திமுக ஆட்சி அகற்றப்படும் வரை  சட்டப்பேரவைக்குப் போவதில்லை என்று அறிவித்தார். அதில் அவர் உறுதியாகவும் இருந்தார்.

திருநாவுக்கரசு சொல்லும் பின்னணி

ஆனால், இந்த வன்முறையால் பாதிக்கப்பட்டது ஜெயலலிதா தான் என்ற போதிலும், இப்படி ஒரு வன்முறை நடக்க வேண்டும் என்று ஜெயலலிதா விரும்பினார். அதற்கான ஏற்பாடுகளையும் அவர் செய்தார் என்பது பின்னாளில் திருநாவுக்கரசு மூலம் தெரியவந்தது. அடுத்த சில ஆண்டுகள் கழித்து  1996 -98 காலத்தில் சட்டப்பேரவையில் பேசும் போது திருநாவுக்கரசு இதுதொடர்பாக அளித்த விளக்கம் அவரது வார்த்தைகளில்.....
‘‘இதே சட்டமன்றத்தில் மாண்புமிகு முதல்வர் கலைஞர் அவர்கள் பட்ஜெட்டைப் படித்தபோது சட்ட மன்றத்திலே ஒரு அசம்பாவிதம் நிகழ்ந்தது அனைவருக்கும் தெரியும். இப்போது நான் சொல்வது; என்னுடைய தாய் மீது ஆணையாக நான் தெய்வமாக வணங்குகிற எம்.ஜி.ஆர். அவர்கள் மீது சத்தியமாகச் சொல்வதாகும். முதல் பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்தபோது எதிர்க் கட்சித் தலைவராக இருந்த செல்வி ஜெயலலிதா அவர்கள் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் அவரது வீட்டில் உட்கார வைத்துக்கொண்டு என்னைப் பார்த்து “நான் பிரதான எதிர்க்கட்சித் தலைவர், முதலமைச்சர் பட்ஜெட் படிக்கும் போது நான் பிடித்து இழுத்தால் நன்றாக இருக்காது. எனவே என் பக்கத்திலே இருக்கிற நீங்கள் முதலமைச்சர் கருணாநிதியின் கையிலே இருக்கிற பட்ஜெட் காப்பியை பிடித்திழுத்து அடிக்க வேண்டும்” என்று சொன்னார்.

ஜெயலலிதாவுக்கு மறுப்பு

நான் உடனே மிகுந்த வேதனை யோடு சொன்னேன். “தெரிந்தோ தெரியாமலோ புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் எங்களைப் பத்தாண்டுக் காலம் கௌரவம் மிக்க பதவிகளில் வைத்துவிட்டுப் போயிருக்கிறார். தயவுசெய்து அடியாட்களாக எங்களை மாற்றாதீர்கள். அதற்கு என்னுடைய மனச்சாட்சி இடம் தரவில்லை. இரண்டாவது, இதுபோன்ற சம்பவம் வேண்டாம்” என்று நான் வாதாடியதுடன்; “முதல் அமைச்சர் நமக்குப் பிடிக்காதவராகக்கூட இருக்கலாம். அது வேறு விஷயம். ஆனால் அவருக்குப் பின்னாலே அவரைத் தலைவராக ஏற்றுக் கொண்டிருக்கிற பெரும்பான்மையான சட்டமன்ற உறுப்பினர்கள் உட்கார்ந்து இருக்கிறார்கள். அவர் மீது கை வைக்கிற போது அவர்கள் உணர்ச்சி வசப்படுவார்கள். அங்கு நிச்சயமாக அடிதடி நடக்கும், ரகளை நடக்கும். புரட்சித்தலைவர் இருக்கும்போது எவ்வளவோ பிரச்சினைகள் நடந்திருக்கின்றன. அவருக்குப் பக்கத்தில் யாராவது போனால் கூட நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கமாட்டோம்; தாக்கியிருப்போம். அதுபோல இன்றைய முதலமைச்சருக்குப் பின்னாலே அவரைத் தலைவராக ஏற்றுக் கொண்டிருக்கின்ற சட்ட மன்ற உறுப்பினர்கள் கண்டிப்பாகத் தாக்குவார்கள். அசம்பாவிதம் நடக்கும். அசிங்கமாகப் போய்விடும். பத்திரிகைகளிலே எல்லாம் கேவலமாக எழுதுவார்கள்” என்று வாதாடியதோடு “மூத்த தலைவர்களை எல்லாம் கேட்டீர்களா?” என்று கேட்டேன்.

அதற்கு அவர் “அவர்களைக் கேட்டால் அவர்கள் ஒத்துக் கொள்ள மாட்டார்கள் என்ற காரணத்தினாலே அவர்களை எல்லாம் டைனிங் ஹாலிலே உட்கார வைத்திருக் கிறேன்” என்று சொன்னார். “நான் முடியாது” என்று சொன்ன உடனே சட்டமன்ற உறுப்பினர்களைப் பார்த்து “சரி, அவர் மாட்டேன் என்று சொல்லுகிறார். உங்களில் யாருக்கு வசதிப்படுகிறதோ அவர்கள் போய் பட்ஜெட் படிப்பதைப் பிடுங்கிக் கிழியுங்கள்” என்று சொல்லி விட்டு மேலே போய்விட்டார்.டைனிங் ஹாலுக்கு உள்ளே டாக்டர் ஹண்டே, திரு. ராகவானந்தம், திரு. மாதவன், திரு. எஸ்.டி.எஸ். மற்றும் அப்போதிருந்த மூத்த தலைவர்கள் உட் கார்ந்திருந்தார்கள். நான் அங்கே போய், “யார் இந்த ஆலோசனையைச் சொன்னது?” என்று அவர்களிடத்திலே சண்டை போட்டேன்.

காங்கிரசும் உடந்தை?

செல்வி ஜெயலலிதா மாடியிலிருந்து இறங்கி வந்தார். வந்தவுடனே, அங்கே இருந்தவர்களைப் பார்த்து, “புறப்படலாம், நேரம் ஆச்சு” என்றார். மூத்த தலைவர்கள் யாருக்கும் அவர் வந்த வேகத்திலே தடுத்துச் சொல்ல துணிச்சல் இல்லை. அவரை அழைத்துச் சென்று சட்டமன்ற அவையிலே உட்கார வைத்துவிட்டு, “தோழமைக் கட்சி, காங்கிரஸ் கட்சி யிடத்திலே இதுபற்றி கேட்டீர்களா?” என்றேன். அவர், “எல்லோரையும் கலந்துதான் சொல்லுகிறேன். இன்றைக்குச் சட்டமன்றத்திலே வன்முறை நடந்தால் இன்றைக்கு மாலையே ஆட்சி கலைக்கப்படுகிறது என்று எனக்குத் தகவல் வந்திருக்கிறது” என்று சொன்னார். நான் உடனே தோழமைக் கட்சியான காங்கிரஸ் கட்சித் தலைவர் மூப்பனார் அறைக்குச் சென்று “இன்றைக்கு நாங்கள் எல்லாம் வெளிநடப்பு செய்வதாக இருக்கிறோம். நீங்களும் எங்களோடு ஒத்துழைப்புத் தர வேண்டும்” என்றும், அத்துடன், “இன்றைக்கு ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் நீங்களும் உள்ளேயிருந்து ஏதாவது உதவி செய்வீர்களா?” என்றும் மறைமுகமாகக் கேட்டேன். நேரிடையாகச் சொல்லாமல், அவர் “நான் புறப்படுவதற்கு முன்னாலேயே பாரதப்பிரதமர் ராஜீவ் காந்தியிடம் 8.30 மணிக்கு பேசிவிட்டுத்தான் வந்தேன். அதற்கு காவல் துறையின் மீது ஒரு கண்டன அறிக்கையைப் படித்துவிட்டு எங்களுடைய காங்கிரஸ் கட்சி வெளி நடப்பு செய்யப் போகிறது. இதுதான் எங்களுக்கு டெல்லியிலிருந்து கொடுக்கப்பட்டிருக்கிற உத்தரவு” என்று சொன்னார்.

செல்வி ஜெயலலிதா அவையில் உட்கார்ந்திருந்தார். நான் வேகமாக வந்து, “திரு. மூப்பனார் அவர்களிடத்திலே கேட்டேன். அவர்கள் எந்தவிதமான அசம்பாவிதமும் இங்கே நிகழ்த்து வதற்குத் தயாராக இல்லை. காங்கிரஸ் காரர்கள் வெளிநடப்பு செய்யப் போகிறார்கள்” என்று சொன்னேன். “மூப்பனார் எப்போதும் இப்படித்தான். எனக்கு விரோதமாகத்தான் அவர் சொல்லுவார். எனக்கு வேறு மாதிரித் தகவல் வந்திருக்கிறது” என்று கூறியதுடன் “நீங்கள் போய் ஏன் அவரிடத்தில் கன்சல்ட் செய்தீர்கள்?” என்றார். அதன் பிறகு அன்றைக்கு இங்கு சட்டமன்றத்தில் நடந்த நிகழ்ச்சிகள் எல்லாம் அனைவருக்கும் தெரியும். வன்முறையைத் தொடர்ந்து சட்டமன் றத்திற்குள்ளே அடிதடி ரகளை எல்லாம் நடந்தது. பிறகு செல்வி ஜெயலலிதா அவர்களை அழைத்துக் கொண்டு வண்டியிலே நானும் திரு. கே.கே.எஸ்.எஸ். ஆரும் முன்னாலேயும், பின்னாலேயும் அமர்ந்து கொண்டு போகிறோம். வீடு போகிறவரை, “இன்றைக்கு மாலையே ஆட்சியைக் கலைக்கப் போகிறார்கள், ஆட்சியைக் கலைக்கப் போகிறார்கள்” என்று சொல்லிக் கொண்டே வந்தார்.” என்று திருநாவுக்கரசு கூறினார்.

No comments:

Post a Comment