கதை கேளு... கதை கேளு கழகத்தின் கதை கேளு!
மறுக்கப்பட்ட இடஒதுக்கீடும்,
வெறுக்கப்பட்ட தேர்தலும்!
-மருத்துவர். இராமதாஸ்
எம்.ஜி.ஆரின் ஆட்சியில் வன்னியர்களுக்கு 13% இட ஒதுக்கீடு வழங்க அவர் முடிவு செய்திருந்தார். அதுகுறித்து அதிகாரப்பூர்வ ஆணை பிறப்பிக்கப்படுவதற்கு முன்பாக அவர் உயிரிழந்தார். அவரைத் தொடர்ந்து அவரது துணைவியார் ஜானகி எம்.ஜி.ஆர் புதிய முதலமைச்சராக பதவியேற்றார். எம்.ஜி.ஆரின் கனவை நனவாக்குவது தான் தமது நோக்கம் என்று ஜானகி அறிவித்தார். எம்.ஜி.ஆரின் கனவுகளில் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதும் ஒன்று என்பதால் உடனடியாக வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று நான் கோரிக்கை விடுத்தேன். ஆனால், நல்வாய்ப்புக்கேடாக அவரது ஆட்சியும் ஒரு மாதத்திற்குள்ளாகவே கலைக்கப்பட்டதால் அவராலும் அந்த கோரிக்கையை நிறைவேற்ற முடியாமல் போய்விட்டது.
ஆளுனர் - ராஜிவ் விளையாட்டு
ஜானகி ஆட்சி கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழகத்தில் ஆளுனர் ஆட்சி நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆளுனராக பி.சி.அலெக்சாண்டர் நியமிக்கப்பட்டார். நேர்மையான அதிகாரி என்று போற்றப்பட்ட அவராவது நீதி வழங்குவார் என்ற நம்பிக்கையில் அவருக்கும் கோரிக்கை வைத்தேன். அப்போதைய பிரதமர் இராஜிவ் காந்தியிடமும் அதே கோரிக்கையை முன்வைத்தேன். ஆனால், அவர்கள் இருவருமே இட ஒதுக்கீட்டுக் கோரிக்கையை நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டவில்லை. மாறாக டென்னிஸ் பந்தை அடுத்தவர் கோர்ட்டுக்கு அடித்து விடும் விளையாட்டை விளையாடினர்.
ஆளுனர் அலெக்சாண்டரிடம் இட ஒதுக்கீட்டு கோரிக்கை குறித்து கேட்டபோது,‘‘வன்னியர்களின் கோரிக்கைகள் குறித்து மத்திய அரசிடம் நான் தெரிவித்து விட்டேன். அதுகுறித்து இனி முடிவெடுக்க வேண்டியது பிரதமர் தான்’’ என்று கூறினார். பிரதமர் இராஜிவ் காந்தியோ,‘‘வன்னியர்களின் கோரிக்கையில் நியாயம் இருக்கிறது. ஆனால், அதுபற்றி தமிழக ஆளுனர் தான் முடிவெடுக்க வேண்டும்’’ என்று கூறினார்.
கண்டனம்
இவர்களின் இந்த விளையாட்டு ஏமாற்றத்தையும், வெறுப்பையும் அளித்தது. அதை வெளிப்படுத்தும் வகையில் தான்,‘‘வன்னியர்களின் கோரிக்கைகள் குறித்து மத்திய அரசிடம் நான் தெரிவித்து விட்டேன். அதுகுறித்து இனி முடிவெடுக்க வேண்டியது பிரதமர் தான் என்று ஆளுனரும், வன்னியர்களின் கோரிக்கையில் நியாயம் இருக்கிறது. ஆனால், அதுபற்றி தமிழக ஆளுனர் தான் முடிவெடுக்க வேண்டும் என்று பிரதமர் ராஜிவ்காந்தியும் கூறுவதும் காலங்கடத்தும் மாய்மாலங்களாகத் தெரிகிறதே தவிர கனிவுடன் பிரச்சினையை தீர்க்கிற விதமாகத் தெரியவில்லை.
சுமக்கிறவனை விட்டு விட்டு சும்மா இருக்கிறவனிடமா பாரமூட்டையை தருவார்கள் என்றொரு மக்கள்மொழி சொல்லப்படுவதுண்டு. அதேபோல் இந்த கோரிக்கையை நிறைவேற்றும் பொறுப்பில் உள்ளவர்களின் கோரிக்கை நிறைவேற்றத்திற்கான அவசரத்தை முறையுடன் முன்னெச்சரிக்கையாக எடுத்துக் கூறிவிட்டோம்’’ என்று கனல் இதழில் தலையங்கம் எழுதினேன்.
குடியரசுத் தலைவருடன் சந்திப்பு
ஆனால், அதன் மீதும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாத நிலையில், தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமனை 11.05.1988 அன்று எனது தலைமையில் 11 பேர் கொண்ட குழுவினர் சென்னை ஆளுனர் மாளிகையில் சந்தித்து பேசினோம். வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு என்பது நியாயமான கோரிக்கை என்று பிரதமர் ராஜிவ் காந்தியே ஒத்துக்கொண்ட போதிலும், குடியரசுத் தலைவரால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
‘‘உத்தரப்பிரதேசத்தில் பிராமணர்கள் கூட வண்டி ஓட்டி பிழைக்கிறார்கள். சமையல்காரர்களாக இருந்து வறுமையில் வாடுகின்றனர் என்பது உங்களுக்குத் தெரியுமா? என்று எதிர்க்கேள்வி எழுப்பினார். அதுமட்டுமின்றி, ‘‘சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு கோருவது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது’’ என்று மிகப்பெரிய சமூகநீதி தத்துவத்தை எங்களிடம் கூறினார்.
வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதில் குடியரசுத் தலைவருக்கு சிறிதும் உடன்பாடு இல்லை என்பது அவருடைய பேச்சிலிருந்தே தெரிந்தது. எனினும் விடாப்பிடியாக அவரிடம் நாங்கள் எங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தினோம். இறுதியாக, ‘‘ எங்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கவில்லை என்றால் நாங்கள் தேர்தல் புறக்கணிப்பு செய்வதைத் தவிர வேறு வழியில்லை’’ என்று கூறினோம். அதைக்கேட்ட குடியரசுத் தலைவரோ சற்றும் யோசிக்காமல் ‘‘ நீங்கள் அப்படியே செய்யுங்கள்’’ என்று கூறி பேச்சை முடித்துக் கொண்டார். இந்தியாவின் முதல்குடிமகனாக இருந்த ஆர்.வெங்கட்ராமனுக்கு ஜனநாயகத்தின் மீதும், சமூக நீதியின் மீதும் எவ்வளவு அக்கறை இருந்தது என்பதற்கு இதுவே சாட்சியமாகும்.
ஊடகங்களின் வதந்தி
வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு என்ற கோரிக்கையை ஆட்சியாளர்கள் தொடர்ந்து நிராகரித்து வருவதை எந்த ஊடகமும் விமர்சிக்கவில்லை. அதேநேரத்தில் இடஒதுக்கீடு வழங்கப்படாததைக் கண்டித்து தேர்தல் புறக்கணிப்பு செய்ய பா.ம.க. திட்டமிட்டிருந்த நிலையில், அதற்கு முற்றிலும் எதிராக சட்டப்பேரவைத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி யாரை ஆதரிக்கப் போகிறது என்பது குறித்து ஊடகங்களில் திட்டமிட்டு வதந்திகள் பரப்பப்பட்டன. ஊடகங்கள் மூலமாக திட்டமிட்டு பரப்பப்பட்ட வதந்திகளுக்கு பதிலளிக்கும், வகையில் 04.02.1988 அன்று திண்டிவனத்தில் நடைபெற்ற வன்னியர் சங்க நிர்வாகிகளின் அவசரக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளைக் காட்டி விளக்கம் அளித்தேன்.
‘‘ வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு என்ற கோரிக்கை இந்தியா சுதந்திரம் அடைந்த நாளிலிருந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. 40 ஆண்டுகளாக இதற்கு ஒரு நியாயத்தைத் தேடாதவர்களுக்காக நாங்கள் மீண்டும் மை குத்தி ஓட்டுப் போட்டு ஏமாளிகளாக வேண்டாமா? எட்டுமுறை ஓட்டுப் போட்டாலும் வன்னியரைப் போன்ற ஏழைகளுக்கு என்ன மிச்சம்?கையில் வைத்த கருப்பு மையைத் தவிர வேறு என்ன பயனைக் கண்டோம்? குற்றம் செய்தவனுக்கு அந்தக் காலத்தில் கரும்புள்ளி, செம்புள்ளி குத்துவார்கள். அதைப்போல் இப்ப்போது அரசியல் ஏமாற்றுக்காரர்களுக்காக நாங்கள் கையில் கரும்புள்ளி குத்தி ஓட்டுப்போட வேண்டுமா? நாங்கள் நியாயமான கோரிக்கைகளுக்காக அறவழியில் போராடினால் அடித்து சுட்டுக் கொல்வார்கள். அதற்காக ஓட்டுப் போட்டு நாங்கள் அவர்களுக்கு லைசென்ஸ் தர வேண்டுமா?
எனவே தான் இந்த முறை தேர்தல் என்று வந்தால் வன்னியர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக தேர்தலை புறக்கணிப்பது என்ற முடிவுக்கு வந்துள்ளோம்’’ என்று கூறினேன்.
தலைவர்கள் சந்திப்பு
-அதைத் தொடர்ந்து 01.05.1988 அன்று மாமல்லபுரத்தில் நடைபெற்ற வன்னியர் இளைஞர் பெருவிழாவில் பங்கேற்ற லட்சக்கணககான பாட்டாளிகள் தேர்தலை புறக்கணிப்பதாக உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். இவ்வாறாக தேர்தலை புறக்கணிப்பது என்பதில் நானும், என மக்களும் உறுதியாக இருந்தோம்.
ஆனால், எங்களை எப்படியும் விலைக்கு வாங்கி விடலாம் என்ற எண்ணத்தில் பல அரசியல் கட்சிகளின் தலைவர்கள் என்னைத் தேடிவந்து பேச்சு நடத்தினார்கள். ஆனால், வன்னியர்களுக்கு 20% இடஒதுக்கீடு வழங்காமல் தேர்தல் என்ற பேச்சையே எடுக்காதீர்கள் என்று தெளிவாக கூறிவிட்டேன்.
இடஒதுக்கீடு விவகாரத்தில் ஆரம்பத்தில் அலட்சியம் காட்டிய ஆளுனர் அலெக்சாண்டர் ஒரு கட்டத்தில் எங்களுடன் பேச்சு நடத்தினார். ஆனால், நாங்கள் எங்கள் கோரிக்கையில் உறுதியாக இருந்து விட்டோம். மத்தியில் பிரதமராக இருந்த ராஜிவ் காந்தியும் இந்த இடஒதுக்கீட்டு பிரச்சினைக்கு தீர்வு கண்ட பிறகு தான் தமிழகத்திற்கு தேர்தலை நடத்த வேண்டும் என்று நினைத்தார். ஆனால், தமிழ்நாட்டைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர்கள் சிலரே அதற்கு முட்டுக்கட்டைப் போட்டனர்.
நரசிம்மராவ் பேச்சு
இடஒதுக்கீடு குறித்த எங்கள் கோரிக்கையை நிறைவேற்றுவது குறித்து ராஜிவ் காந்தி சார்பில் அப்போதைய வெளியுறவுத்துறை அமைச்சர் பி.வி. நரசிம்மராவ் பேச்சு நடத்தினார். முதலில் ஹைதராபாத்தில் உள்ள ஆளுனர் மாளிகையில் இந்த பேச்சுக்கள் நடைபெற்றன. அப்போது எங்கள் கோரிக்கையில் உள்ள நியாயத்தை நரசிம்மராவ் ஏற்றுக் கொண்டார். அடுத்தக்கட்ட பேச்சுக்களுக்காக தில்லி வரும்படி அழைத்தார். அதன்படி நாங்களும் தில்லி சென்று நரசிம்மராவை சந்தித்து பேச்சு நடத்தினோம். அப்போது வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்க அவர் ஒப்புக்கொண்டார். அடுத்த சில நாட்களில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்ற நம்பிக்கையுடன் அவரது அலுவலகத்தில் இருந்து வெளிவந்தோம். அப்போது தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த மூப்பனாரும், ப.சிதம்பரமும் உள்ளே நுழைந்தனர். நரசிம்மராவை சந்தித்த அவர்கள், வன்னியர்கள் என்ற ஒரு சாதிக்கு மட்டும் இடஒதுக்கீடு வழங்கினால் மற்ற சாதியினர் காங்கிரசுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்று கூறி அவரின் மனதை கலைத்தனர். இதனால் இந்த விஷயத்தில் மத்திய அரசின் நிலைப்பாடு மாறியது.
பூட்டாசிங் பேச்சு
அடுத்ததாக மத்திய உள்துறை அமைச்சர் பூட்டாசிங் எங்களுடன் பேச்சு நடத்தினார். ‘‘ சட்டப்பேரவைத் தேர்தலில் நீங்கள் காங்கிரசை ஆதரிக்க வேண்டும். காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பின்னர் உங்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படும். தேர்தலில் காங்கிரஸ் சார்பில் உங்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் போட்டியிடலாம். தேர்தல் செலவுக்காக எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறோம்’’ என்று கூறினார். ஆனால், அதை நான் ஏற்கவில்லை. எங்களுக்குத் தேவை இடஒதுக்கீடு தான்... மற்றபடி உங்கள் சீட்டும் வேண்டாம்.... நோட்டும் வேண்டாம்’’ என்று கூறி அதை நிராகரித்து விட்டேன். இதில் இன்னொரு விஷயத்தையும் குறிப்பிட்டாக வேண்டும். நரசிம்மராவை சந்திப்பதற்காக ஹைதராபாத் மற்றும் தில்லி செல்வதற்காக எனக்கும், எங்கள் குழுவினருக்கும் மத்திய அரசே விமான டிக்கெட் எடுத்துத் தருவதாக கூறியது. ஆனால், எங்களுக்கு எங்கள் கோரிக்கை தான் முக்கியம். மற்றவர்கள் காசில் பயணம் செய்யமாட்டோம். எங்கள் செலவில் தான் வருவோம் என்று கூறி சொந்த செலவில் சென்று வந்தோம்.
இந்த நேரத்தில் 12.12.1988 அன்று வன்னியர்கள் உள்ளிட்ட பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரின் இட ஒதுக்கீட்டுக் கோரிக்கையை ஏற்றுக்கொள்வதாக ஆளுனர் அலெக்சாண்டர் அறிவித்தார். எனினும் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டிலிருந்து தான் இவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்றும் ஆளுனர் அறிவித்தார். அதற்கு அடுத்த நாளே தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து வன்னியர் சங்கத்தின் பொதுக்குழு கூடி தேர்தலை புறக்கணிப்பதாக இறுதி முடிவு எடுத்தது.
ஆபரேஷன் மஞ்சள் பூ
இடஒதுக்கீட்டுக் கோரிக்கைக்கு எந்த தீர்வும் காணப்படாத நிலையில், தமிழக சட்டப்பேரவைக்குத் தேர்தல் நடைபெற்றது. வன்னியர் சங்கத்தின் தேர்தல் புறக்கணிப்பை முறியடிக்க வேண்டும் என்பதற்காக ராணுவம் வரவழைக்கப்பட்டது. மஞ்சள் பூ ஆபரேஷன் என்ற பெயரில் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. வன்னியர்கள் வாழும் பகுதிகளுக்குள் நுழைந்த ராணுவத்தினர் வன்னிய மக்கள், பெண்கள் மட்டுமின்றி அவர்களின் கால்நடைகளையும் காட்டுமிராண்டித் தனமாக தாக்கினார்கள். இதில் வன்னிய மக்கள் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டன. ஆனாலும் வன்னிய மக்கள் தங்கள் முடிவில் உறுதியாக இருந்தனர்.
அதனால்,வட மாவட்டங்களில் பெரும்பாலான தொகுதிகளில் வாக்குப்பதிவு 40 விழுக்காட்டுக்கும் கீழாக குறைந்தன. தைலாபுரம் தோட்டம் அமைந்துள்ள வானூர் தொகுதியிலும், எனது சொந்தத் தொகுதியான திண்டிவனத்திலும் 35% வாக்குகள் மட்டுமே பதிவாயின. பல கிராமங்களில் ஒரு வாக்குக் கூட பதிவாகவில்லை. ஆட்சியாளர்களின் அடக்குமுறையையும் தாண்டி தேர்தல் புறக்கணிப்பு வெற்றி பெற்றது. பா.ம.க.வின் தேர்தல் புறக்கணிப்பைப் பயன்படுத்திக் கொண்டு திமுகவினர் பெருமளவில் கள்ள ஓட்டு போட்டனர். அந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது.
No comments:
Post a Comment