Wednesday, 22 March 2017

கதை கேளு... கதை கேளு கழகத்தின் கதை கேளு! நால்வர் அணியும், உதிர்ந்த ரோமங்களும்! -மருத்துவர். இராமதாஸ்

கதை கேளு... கதை கேளு கழகத்தின் கதை கேளு!
  நால்வர் அணியும், உதிர்ந்த ரோமங்களும்!
    -மருத்துவர். இராமதாஸ்

எம்.ஜி.ஆருக்கு பிறகு அதிமுகவைக் கைப்பற்ற வேண்டும் என்பது தான் ஜெயலலிதாவின் நோக்கமாக இருந்தது. அதற்காக உருவாக்கப்பட்ட திரைக்கதையின் ஓர் அம்சம் தான் எம்.ஜி.ஆர் மறைந்த போது அவரது உடலின் தலைமாட்டிலேயே ஜெயலலிதா நின்று கொண்டிருந்தது ஆகும். இந்த திரைக்கதையை எழுதி ஜெயலலிதாவை இயக்கிக் கொண்டிருந்தவர் நடராஜனும், சசிகலாவும்.

எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு ஜானகி ராமச்சந்திரன் முதலமைச்சர் பதவிக்கு போட்டியிட்ட போது, அவரை எதிர்க்க வேண்டும் என்று ஜெயலலிதா நினைத்தார். ஆனால், ஜானகியை தாம் நேரடியாக எதிர்த்தால் அதை மக்கள் ஏற்றுக் கொள்வார்களா? என்று அஞ்சிய ஜெயலலிதா அதற்காக நாவலரை பயன்படுத்திக் கொண்டார். முதலமைச்சர் போட்டி மறைந்து ஜானகி ராமச்சந்திரன் தலைமையிலான அரசும் கலைந்து விட்ட நிலையில், அப்போது தான் உண்மையான அரசியல் தொடங்கியது.

நடராஜன் ஆதிக்கம்!

ஜெயலலிதா அணியில் இருந்த நாவலர், பண்ருட்டி ராமச்சந்திரன், திருநாவுக்கரசு, அரங்கநாயகம், சாத்தூர் இராமச்சந்திரன் ஆகியோர் ஜெயலலிதாவை விட அதிக அனுபவம் பெற்றவர்கள். ஆனால், ஜெயலலிதாவை இயக்கிய நடராஜன், இவர்கள் அனைவரையும் கட்சியை விட்டு வெளியே அனுப்ப வேண்டும் என்று முடிவெடுத்து செயல்பட்டார். அவர்களாகவே வெளியேற வேண்டும் என்பதற்காக அவர்கள் தொடர்ந்து அவமதிக்கப்பட்டார்கள். அதிமுக உடைந்த போது ஜெயலலிதா அணியிலிருந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரையும் பாதுகாத்தவர்கள் திருநாவுக்கரசரும், சாத்தூர் ராமச்சந்திரனும் ஆவர்.
ஜெயலலிதா அணியின் புதிய நிர்வாகிகள் பட்டியல் வெளிவந்த போது சாத்தூர் இராமச்சந்திரனுக்கு முக்கியத்துவம் இல்லாத மாவட்ட பதவி வழங்கப்பட்டிருந்தது. அந்த பட்டியலை தயாரித்தவர் நடராஜன்.  சசிகலா, அவரது தம்பி திவாகரன், அக்காள் மகள் தினகரன் ஆகியோரின் கட்டுப்பாட்டில் தான் ஜெயலலிதா இருந்தார். அவர்களை மீறி ஜெயலலிதாவை யாரும் சந்திக்க முடியாத நிலை இருந்தது.

சாத்தூர் இராமச்சந்திரனுக்கு முக்கியத்துவம் வாய்ந்த பதவி வழங்கப்படாததால் திருநாவுக்கரசர் கோபம் அடைந்திருந்தார். இதுதொடர்பாக அப்போது திருநாவுக்கரசுக்கும், நடராஜனுக்கும் நடந்த உரையாடல் விவரம் வருமாறு:

திருநாவுக்கரசுக்கு அவமானம்

திருநாவுக்கரசு: கே.கே.எஸ்.எஸ்.ஆருக்கு கொடுக்கப்பட்டுள்ள பொறுப்பு முக்கியமானதாக இல்லை. மிகச் சாதாரணமான பொறுப்பாக இருக்கிறது. நம் அணி  இக்கட்டான நேரத்தில் இருந்தபோது, ஜானகி அணியின் திட்டங்களை முறியடித்து நம்முடைய 33 எம்.எல்.ஏ-க்களையும் பம்பாய், டெல்லி என்று சுற்றுலா அழைத்துச் சென்றவர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். அதுபோக அவருடைய மில்லில் தங்கவைத்துத்தான் நம் அணி எம்.எல்.ஏ-க்களை பாதுகாத்தோம். அப்படிப்பட்டவருக்கு கட்சியின் மாநில அமைப்பாளர் பொறுப்பு அல்லது எம்.ஜி.ஆர் இளைஞரணி மாநிலச் செயலாளர் பொறுப்பைக் கொடுத்தால் அவர் இன்னும் உற்சாகமாக பணியாற்றுவார்

நடராஜன்: உங்களுக்கு தகவல் சொல்வதற்காக மட்டுமே இந்தப் பட்டியலை வாசித்தேன்; உங்களுக்கு வாசித்துக் காட்டுவதற்கு முன்பே பத்திரிகைகளுக்கும் அனுப்பிவிட்டேன்.

இது ஒரு சிறு உதாரணம் மட்டும் தான். இன்னும் பல வழிகளில் அவருக்கு அவமதிப்பு தொடர்ந்தது. நாவலரும் பல நேரங்களில் அவமதிக்கப்பட்டார். இந்த அவமதிப்புகள் அனைத்தும் ஜெயலலிதாவால் ஏற்படவில்லை. மாறாக நடராஜன் மற்றும் அவரது குடும்பத்தினரால் தான் நடந்தன. ஒரு கட்டத்தில் வெறுத்துப் போன நாவலர், பண்ருட்டி ராமச்சந்திரன், அரங்கநாயகம், திருநாவுக்கரசு ஆகியோர் தனி அணியாக செயல்படத் தொடங்கினர்.

நடராஜனுக்கு ஜெயலலிதா கடிதம்

இதற்கெல்லாம் நடராஜன் தான் காரணம் என்று நினைத்த ஜெயலலிதா அவரை கடிந்து கொண்டார். அதனால் நடராஜன் கோபித்துக் கொண்டு போயஸ் தோட்டத்திலிருந்து வெளியேறுவது போல நடிக்க,  ‘‘ நீங்கள் என்னைவிட்டு விலகிப்போய்விட்டால், நான் அரசியலைவிட்டே ஒதுங்கிவிடுவேன்” என்று நடராஜனுக்கு கடிதம் எழுதினார். அதையேற்று நடராஜன் மீண்டும் போயஸ் தோட்டத்திற்கு திரும்பினார். இப்போது அவரது அதிகாரமும், செல்வாக்கும் அதிகரித்திருந்தது.  அவரை யாரும் கேள்வி கேட்க முடியாது என்ற நிலை இருந்தது.

நாவலர் உள்ளிட்ட நால்வரும் தனி அணியாக பிரிந்தது ஜெயலலிதாவுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது.  அதனால் நாவலரை நேரில் சந்தித்து மீண்டும் தமது அணிக்கு திரும்பும்படி அழைத்தார். ஆனால், அந்த அழைப்பை ஏற்க நாவலர் மறுத்து விட்டார்.

விரட்டியடிக்கப்பட்ட சாத்தூரார்!

அதன்பின்னர் சாத்தூர் இராமச்சந்திரன் சமரச முயற்சிகளைதொடர்ந்தார். காலையில் நாவலர் நெடுஞ்செழியனையும், பண்ருட்டி ராமச்சந்திரனையும் சந்திப்பார்... மாலையில் ஜெயலலிதாவையும் நடராஜனையும் சந்திப்பார். அவ்வப்போது ஜெயலலிதாவைச் சந்தித்து சமாதானம் பேசினார். அதில் கோபப்பட்ட ஜெயலலிதா ஒரு நாள் “எனக்கு நீங்கள் அறிவுரை சொல்லத் தேவையில்லை... அந்த அணிக்குப் போவது என்றால் போய்த் தொலையுங்கள்” என்று கத்தினார். அதற்குமேல் பொறுக்கமுடியாத சாத்தூர் ராமச்சந்திரன் ஜெயலலிதாவுக்கு முன்பாக இருந்த நாற்காலியை உதைத்துத் தள்ளிவிட்டு போயஸ் தோட்டத்தையும் விட்டு வெளியேறினார்.

அதன்பிறகு தான் அந்த அதிரடி வாசகத்தை ஜெயலலிதா உதிர்த்தார். தஞ்சாவூர் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய ஜெயலலிதா, ‘‘ஜெ.அணியில் இருந்து பிரிந்துபோன நெடுஞ்செழியன், பண்ருட்டி ராமச்சந்திரன், அரங்கநாயகம், திருநாவுக்கரசு போன்றவர்கள் உதிர்ந்த ரோமங்கள். தலையில் இருந்துவிட்டு ரோமங்கள் உதிர்ந்துவிட்டால் அவற்றுக்கு எந்த மதிப்பும் இருக்காது. அதுபோலத்தான் அந்த நால்வர் அணிக்கும் இப்போது அரசியலில் எந்த மதிப்பும் இல்லை’’ என்று பேசினார்.  ஜெயலலிதாவின் இந்த விமர்சனம் தமிழக அரசியல் உலகில் பரபரப்பாக பேசப்பட்டது.

நால்வர் அணியில் மோதல்

மற்றொருபுறம் நால்வர் அணியில் முட்டல்களும், மோதல்களும் தொடங்கின. நால்வர் அணியை தொடர்ந்து நடத்த முடியாமல் திருநாவுக்கரசு தவித்தார். மீண்டும் ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவில் இணையலாம் என்று அவர் நினைத்தார். திருநாவுக்கரசு கட்சிக்கு வந்தால் கட்சி செலவுகளை அவர் பார்த்துக் கொள்வார் என்று ஜெயலலிதா நினைத்தார். அப்போது ஜெயலலிதாவின் பொருளாதார நிலை பிறரை சார்ந்து தான் இருந்தது. கட்சியில் முக்கியப் பொறுப்பு வேண்டும் என்று யாராவது கேட்டால் அவர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு தருவது வழக்கமாக இருந்தது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட திரைப்படத் தயாரிப்பாளர் ஜி.வெங்கடேஸ்வரன் ஒருமுறை ஜெயலலிதாவை சந்தித்து பதவி கேட்டதாகவும், அதற்காக அவரிடமிருந்து ரூ.1 கோடி பெற்றுக் கொண்டதாகவும் செய்திகள் வெளிவந்தன. ஒரு கட்டத்தில் அவரை போயஸ் தோட்டத்துக்குள் அனுமதிக்காமல் மன்னார்குடி மாஃபியா விரட்டியடித்தது. நடிகர் இராமராஜனுக்கும் இதே போன்ற அனுபவங்கள் உண்டு. அப்போது திரையுலகில் கொடி கட்டி பறந்த ராமராஜன் அவ்வப்போது ஜெயலலிதாவை சந்தித்து நிதி கொடுப்பார். ஒரு கட்டத்தில் அவருக்கும் போயஸ்தோட்டத்தின் கதவுகள் மூடப்பட்டன. பின்னாளில் அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் அவர்களுக்கு சில சலுகைகளை ஜெயலலிதா வழங்கினார்.

மீண்டும் இணைந்தார் திருநாவுக்கரசு

சரி... மீண்டும் திருநாவுக்கரசு விஷயத்துக்கு வருவோம்....
திருநாவுக்கரசும், ஜெயலலிதாவும் இணைந்து செயல்பட நினைத்த நேரத்தில் இருவருக்கும் இடையே  ஜெகதீசன் என்பவர் சமாதானம் பேசினார். இதைத்தொடர்ந்து, திருநாவுக்கரசு சேலத்தில் இருந்தபோது, ஜெயலலிதாவே தொலைபேசியில் அழைத்துக் கனிவாகப் பேசி மீண்டும் தன் அணிக்கு வருமாறு அழைத்தார். அதையடுத்து ஒரு முறை போயஸ் தோட்டத்துக்கு இரவு 7 மணிக்குமேல் நேரில் வந்த திருநாவுக்கரசு ஜெயலலிதாவிடம் சமாதானம் ஆனார். அதன்பிறகு வெள்ளிக்கிழமை மீண்டும் ஜெயலலிதா அணிக்கு வந்து சேர்ந்தார். அவர் வந்து சேர்ந்ததும் ஜெயலலிதா பெயரில் நடராஜன் ஒரு அறிக்கையை பத்திரிகைகளுக்கு அனுப்பினார். அதில் “என்னைக் கடுமையாக விமர்சனம் செய்ததற்காக திருநாவுக்கரசு நேரிலும் எழுத்துப்பூர்வமாகவும் மன்னிப்பு கேட்டார். அவர் மன்னிப்பை ஏற்று நான் அவரைக் கட்சியில் சேர்த்துக் கொண்டேன்” என்று  இருந்தது. அது அவமானமாக இருந்தாலும், அந்த நேரத்தில் திருநாவுக்கரசுக்கு அதை சகித்துக் கொண்டிருப்பதைத் தவிர வேறு வழியில்லை என்பதால் அதை பெரிதுபடுத்தவில்லை.

திருநாவுக்கரசைத் தொடர்ந்து நாவலர், அரங்கநாயகம், பண்ருட்டி இராமச்சந்திரன் என உதிர்ந்த ரோமங்கள் அனைத்தும் அதிமுகவுடன் ஒட்டிக் கொண்டன.
அடுத்து 1989ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலும், பா.ம.க. தேர்தல் புறக்கணிப்பும்!

                     

No comments:

Post a Comment