கதை கேளு... கதை கேளு கழகத்தின் கதை கேளு!
மறைந்தார் எம்.ஜி.ஆர்!
-மருத்துவர். இராமதாஸ்
அமெரிக்காவில் இரண்டாவது முறையாக சிகிச்சைப் பெற்று எம்.ஜி.ஆர் திரும்பினாலும் அவரது உடல்நிலை அன்றாட பணிகளுக்கு ஒத்துழைக்கவில்லை. இட ஒதுக்கீடு தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டத்திலேயே அவர் மிகவும் தளர்வாக காணப்பட்டதை என்னால் உணர முடிந்தது. அரசு நிர்வாகத்தில் அவருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் விதத்தில் எந்த நெருக்கடியும் இல்லை. ஆனால், அதிமுக நிர்வாகத்தில் தான் அவருக்கு ஏராளமான பிரச்சினைகள்.
அப்போதைய பிரதமர் ராஜிவ் காந்தி மூலம் எம்.ஜி.ஆருக்கு ஜெயலலிதா ஏராளமான நெருக்கடிகளைக் கொடுத்தார். துணை முதலமைச்சர் பதவியை ஜெயலலிதாவுக்கு விட்டுத் தர வேண்டும் என்று எம்.ஜி.ஆருக்கு தொடர்ந்து அழுத்தம் தரப்பட்டது.
இதனால் வெறுத்துப் போன எம்.ஜி.ஆர் ஒரு கட்டத்தில் ஜெயலலிதாவை கட்சியில் இருந்து நீக்க முடிவு செய்தார். அப்போது பொதுச்செயலாளராக இருந்த இராகவானந்தத்தை தமது இல்லத்திற்கு அவர் அழைத்தார். ஜெயலலிதாவை கட்சியை விட்டு நீக்கும் அறிவிப்பு தயாராகி விட்ட நிலையில், எம்.ஜி.ஆரை சந்தித்த அமைச்சர் திருநாவுக்கரசு ஜெயலலிதாவை கட்சியை விட்டு நீக்கக் கூடாது என்று வாதாடினார். எம்.ஜி.ஆரும் அதை ஏற்று முடிவைத் தள்ளி வைத்தார்.
எச்சரித்த இராகவானந்தம்
அப்போது எம்.ஜி.ஆரின் முகத்துக்கு எதிராகவே திருநாவுக்கரசுவை கண்டித்த இராகவானந்தம்,‘‘ ஜெயலலிதாவுக்கு ஆதரவாக பேசி அவரை கட்சியை விட்டு நீக்கும் முடிவை தடுத்து நிறுத்தியதன் மூலம் அதிமுகவுக்கு மிகப்பெரிய தீமையை நீங்கள் செய்திருக்கிறீர்கள். இதற்காக பின்னாளில் நீங்கள் நிச்சயமாக வருத்தப்படுவீர்கள்’’ என்று எச்சரித்துள்ளார். அப்போது அவர் கூறியது இப்போது உண்மையாகி விட்டது. அண்மையில் சென்னையில் ஆர்.எம்.வீரப்பன் ஏற்பாடு செய்து, நானும் பங்கேற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் இந்த உண்மையை திருநாவுக்கரசரே தெரிவித்தார்.
இப்படியாக கடுமையான மன உளைச்சலில் எம்.ஜி.ஆர் பாதிக்கப்பட்டிருந்ததால் அவரது உடல்நிலை மிகவும் மோசமானது. 21.12.1987 அன்று சென்னை கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் ஜவகர்லால் நேரு சிலை திறப்பு விழாவில் பிரதமர் இராஜீவ் காந்தியுடன் எம்.ஜி.ஆரும் கலந்து கொண்டார். அவரது உடல்நிலையை அறிந்து கவலைப்பட்ட இராஜீவ்,‘‘ துணை முதல்வர் பதவியில் ஒருவரை நியமித்து விட்டு, நீங்கள் ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்’’ என்று கூறியதாக செய்திகள் வெளிவந்தன.
மறைந்தார் எம்.ஜி.ஆர்
அன்றிலிருந்து மூன்றாவது நாள் 24.12.1987 அன்று எம்.ஜி.ஆர் பெயரிலான மருத்துவப் பல்கலைக்கழகம் சென்னை கிண்டியில் திறக்கப்பட இருந்தது. மாலையில் விழா நடைபெறவிருந்த நிலையில் அதிகாலையில் எம்.ஜி.ஆரின் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது. மருத்துவர்கள் விரைந்து வந்து சிகிச்சை அளித்த போதிலும் எந்த பயனும் இல்லை. எம்.ஜி.ஆர் உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது.
எம்.ஜி.ஆர் பெயரிலான மருத்துவப் பல்கலைக்கழகத் தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு முழுவதிலுமிருந்து அதிமுக தொண்டர்கள் அதிகாலையிலேயே சென்னையில் குவிந்தனர். கட்டுக்கடங்காத கூட்டம். எம்.ஜி.ஆரின் மறைவைத் தொடர்ந்து அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. வந்தவர்களுக்கு உணவு கூட கிடைக்காததால் சில இடங்களில் வன்முறைகள் வெடித்தன. இதைப்பயன்படுத்திக் கொண்டு சமூக விரோத கும்பல்கள் வன்முறையில் ஈடுபட்டன.
தலைவர்கள் அஞ்சலி....
சமூக விரோதிகள் வன்முறை!
ஒருபுறம் எம்.ஜி.ஆரின் உடலுக்கு பிரதமர் ராஜீவ் காந்தி, அண்டை மாநில முதலமைச்சர்கள், லட்சக் கணக்கான தொண்டர்கள் அஞ்சலி செலுத்திக் கொண்டிருந்த நிலையில், மற்றொருபுறம் சென்னையின் பல பகுதிகளில் வன்முறை வெடித்தது. திறந்திருந்த ஒட்டல்களில் டீ குடித்துவிட்டு, காசு கொடுக்காமல் கடைக்காரர்களைத் தாக்கினார்கள் சமூக விரோதிகள். கோடம்பாக்கம் பகுதியில் நான்கு டீக்கடைக்காரர்கள் காயம் அடைந்தார்கள். போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்கப்போக, ’உங்களை யாருய்யா கடையை திறக்கச் சொன்னது? உயிரோட வந்திருக்கீங்களே...இதுவே பெரிசு!’ என்று சொல்லி விரட்டினார்கள்.
கலைஞர் சிலை தகர்ப்பு
வாகனங்களில் செல்பவர்களின் மீது கல்லெறியும் கலாட்டா துவங்கியபோது, காலை மணி எட்டு. நுங்கம்பாக்கம் வள்ளுவர் சிலையருகே ஒரு மகிழுந்தை சூறையாடினார்கள். அண்ணா சாலையின் இருபுறமும் சவுக்குக் கம்புகளால் தடுப்பு அமைக்கப்பட்டிருந்தது. அந்த சவுக்குக் கம்புகளை ஆளுக்கொன்றாய் உருவிக்கொண்டு சைக்கிளில் செல்பவர்கள் மீது கூட அடித்து சந்தோஷப்பட்டார்கள். ஆயிரம் விளக்குப் பகுதியில் ஒரு ஜவுளிக்கடை, மாடியில் தையல்கடை போன்றவற்றைச் சூறையாடினார்கள். அண்ணா மேம்பாலம் முதல் அண்ணா சிலை வரையிலான பகுதிகளில் இருந்த கடைகள்தான் அதிகம் பாதிப்புக்குள்ளானது. அண்ணா சாலையில் இருந்த திமுக தலைவர் கலைஞரின் சிலை தகர்க்கப்பட்டது.
திசம்பர் 24&ஆம் தேதி இரவு நிலைமை இதைவிட மோசமானது. திருவல்லிக்கேணி பகுதியில் சாலையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர், பைக் போன்ற எல்லா வாகனங்களின் பெட்ரோல் டாங்கிலும் மணலை போட்டுவிட்டுப் போனது ஒரு கும்பல். மைலாப்பூர் பகுதியில் ஒரே நாளில் 47 சைக்கிள்கள் காணாமல் போயின. தேனாம்பேட்டை பகுதியில் 12 வயது சிறுவனின் உடல் மீது மண்ணெண்ணை ஊற்றிவிட்டு, தீ வைத்துவிடுவோம் என்று மிரட்டி பணம் வசூல் செய்து கொண்டு நகர்ந்தது.
வன்முறை பயங்கரங்கள்!
அமைந்தகரை பகுதியில் வீடு வீடாகப் போய், கதவைத் தட்டி உணவு கேட்டார்கள். இல்லை என்று சொன்ன வீடுகளில் கல் எறிந்து கலாட்டா செய்தார்கள். சென்னை சென்ட்ரலுக்கு வந்த ரயில்களெல்லாம் சில சமூக விரோதிகளால் கற்களால் அடித்து நொறுக்கப்பட்டு, எண்ணூர் அருகேயே நிறுத்தப்பட்டுவிட்டன. பாவம்... பயணிகள் கம்பார்ட்மென்ட் கதவுகளை இறுக்கமாக மூடியபடி, நடுங்கியபடி காத்திருந்த காட்சிகள் அரங்கேறின.
ஜெயலலிதா அவமதிப்பு
அதற்கு அடுத்த நாள் பிற்பகலில் எம்.ஜி.ஆர் உடல் அடக்கம் செய்வதற்காக இராஜாஜி அரங்கத்தில் இருந்து கடற்கரை நோக்கி இராணுவ வண்டியில் பயணத்தை தொடங்கியது. எம்.ஜி.ஆருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி முழுவதும் அவரது தலைமாட்டிலேயே நின்று கொண்டிருந்த ஜெயலலிதாவும் ராணுவ வாகனத்தில் ஏற முயன்றார். அதை விரும்பாத எம்.ஜி.ஆர் மனைவி ஜானகி வழி உறவினரும், நடிகருமான திலீபன், அதிமுக சட்டப்பேரவை உறுப்பினரும் பின்னாளில் திமுகவில் இணைந்து மாநிலங்களவை உறுப்பினர் ஆக்கப்பட்டவருமான கே.பி. இராமலிங்கம் ஆகிய இருவரும் சேர்ந்து ஜெயலலிதாவை ராணுவ வண்டியிலிருந்து இறக்கி விட்டனர். இதைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டு அதையும் அரசியல் ஆக்கினார் ஜெயலிதா.
இத்தனை பரபரப்புகளுக்கு நடுவே எம்.ஜி.ஆரின் உடல் சென்னை மெரினா கடற்கரையில் அடக்கம் செய்யப்பட்டது. புதிய முதலமைச்சர் தேர்ந்தெடுக்கப்படும் வரை நாவலர் நெடுஞ்செழியன் தலைமையில் இடைக்கால அமைச்சரவை பொறுப்பேற்றது.
புதிய முதலமைச்சராக எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி இராமச்சந்திரனை ஆர்.எம்.வீரப்பனும், அவரது ஆதரவாளர்களும் முன்னிறுத்தினார்கள். இதனால் அதிருப்தி அடைந்த நெடுஞ்செழியன் தமக்குத் தான் முதலமைச்சர் பதவி என்றும், அப்பதவிக்கு யார் முன்னிறுத்தப்பட்டாலும் அவர்களை எதிர்த்து தாம் போட்டியிடப் போவதாகவும் அறிவித்தார். நெடுஞ்செழியனை ஆதரிப்பதாக ஜெயலலிதாவும் அறிவித்தார். கலகம் தொடங்கியது.... கழகம் உடைந்தது.
No comments:
Post a Comment