Sunday, 12 March 2017

கதை கேளு... கதை கேளு கழகத்தின் கதை கேளு! அதிமுக உடைந்தது... ஆட்சி கலைந்தது! -மருத்துவர். இராமதாஸ்

கதை கேளு... கதை கேளு கழகத்தின் கதை கேளு!
       அதிமுக உடைந்தது... ஆட்சி கலைந்தது!
   -மருத்துவர். இராமதாஸ்

எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு புதிய முதலமைச்சர் யார்? என்பது குறித்து எம்.ஜி.ஆரின் மனைவி வி.என்.ஜானகிக்கும், நாவலர் நெடுஞ்செழியனுக்கும்  இடையே போட்டி ஏற்பட்டது. இவர்களில் ஜானகிக்கு  தான் அதிக எண்ணிக்கையில்  சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருந்தது. மூத்த அமைச்சர்களான ப.உ.சண்முகம், ராகவானந்தம், ஹண்டே உள்ளிட்ட அமைச்சர்கள் உட்பட மொத்தம் 97 சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஜானகி ராமச்சந்திரனை ஆதரித்தார்கள். மீதமுள்ள 33 பேர் நெடுஞ்செழியனை ஆதரித்தனர். இவ்வாறாக அதிமுக ஜா அணியாகவும், ஜெ அணியாகவும் உடைந்தது.

ஜெயலலிதா அணிக்கு 33 உறுப்பினர்களின் ஆதரவு மட்டுமே இருந்த நிலையில், நெடுஞ்செழியனுக்கு 70 சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாகவும், அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்களில் அவருக்கு தான் அதிக ஆதரவு என்பதால் அவரைத் தான் ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்று ஜெயலலிதா ஒற்றைக்காலில் நின்றார். இதையடுத்து தம்மை ஆதரிக்கும் 97 உறுப்பினர்களையும் ஆளுனர் மாளிகைக்கு அழைத்துச் சென்று ஆளுனர் முன் நிறுத்தினார் ஜானகி.  அதையேற்ற ஆளுனர் குரானா, புதிய அரசு அமைக்க வரும்படி அழைப்பு விடுத்தார். பதவியேற்ற மூன்று வாரங்களுக்குள் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றும் ஆணையிட்டார்.

ஜானகி முதல்வரானார்

ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஜெயலலிதாவும் அவரது ஆதரவாளர்களும் ஜானகி எம்.ஜி.ஆரை முதலமைச்சராக ஏற்றுக் கொள்ள முடியாது என்றும், உடனடியாக சட்டப்பேரவையை கலைத்து விட்டு தேர்தலை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள். ஆனால், அவர்களின் எதிர்ப்பை ஆளுனர் குரானா பொருட்படுத்தவில்லை. தமது முடிவு சரி தான் என்று விளக்கமளித்த அவர், 06.01.1988 அன்று ஜானகி எம்.ஜி.ஆருக்கு பதவிப் பிரமானம் செய்து வைத்தார். அவருடன், ஆர்.எம்.வீரப்பன், ப.உ. சண்முகம்,  பொன்னையன், முத்துசாமி, வி.வி.சுவாமிநாதன், ராமசாமி, அருணாச்சலம் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

அடுத்த மூன்று வாரங்களில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டியிருந்த சூழலில் மேலும் 16 பேரின் ஆதரவு ஜானகிக்கு தேவைப்பட்டது. அவரது பதவியைக் காப்பாற்ற காங்கிரஸ், திமுக ஆகிய கட்சிகளின் ஆதரவை  ஆர்.எம்.வீரப்பன் கோரினார். ஆனால், அவர்கள் ஆதரவளிக்க மறுத்து விட்டனர். அத்தகைய சூழலில் தான் காங்கிரசில்  நடிகர் சிவாஜிகணேசனின் ஆதரவாளர்கள் ஜானகிக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். யாருடைய ஆதரவும் ஜானகிக்கு உறுதியாகாத நிலையில், 28.01.1988 அன்று சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது.

ஜெயலலிதா அணியின்
எம்.எல்.ஏக்கள் ஊர்வலம்

எந்தக் கட்சியும் ஆதரவு அளிக்காத நிலையில், தமது அணியில் உள்ள  சட்டப்பேரவை உறுப்பினர்களை  இழுக்க ஜானகி அணியினர் முயலக்கூடும் என்று அஞ்சிய ஜெயலலிதா அவர்களை பாதுகாப்பாக வைத்திருக்கும் பொறுப்பை இப்போது காங்கிரஸ் தலைவராக இருக்கும் திருநாவுக்கரசிடமும்,  திமுகவின்  விருதுநகர் மாவட்ட செயலாளராக இருக்கும் சாத்தூர் இராமச்சந்திரனிடமும் ஒப்படைத்தார். இப்போது கூவத்தூரில் அடைத்து வைக்கப்பட்டதைப் போல அப்போது ஒரே இடத்தில் சட்டப்பேரவை உறுப்பினர்களை அடைத்து வைக்க அவர்களால் முடியவில்லை. அதனால், ஜெயலலிதா அணி சட்டப்பேரவை உறுப்பினர்களை அழைத்துக் கொண்டு பெங்களூர், விருதுநகர் என  பல ஊர்களை சுற்றி விட்டு நம்பிக்கை வாக்கெடுப்பு நாள் அன்று தான்  திருநாவுக்கரசு தலைமையிலான குழுவினர் சென்னைக்கு வந்தார்கள்.

பேரவையில் வன்முறை

சட்டப்பேரவையில் அதன் தலைவரும், தமக்கு வானளாவிய அதிகாரம் இருப்பதாக  கூறிக் கொள்பவருமான பி.எச். பாண்டியன்  அவையை நடத்தினார். சட்டப்பேரவையில் மோதல் ஏற்படுவதற்கான வாய்ப்பு இருந்ததால்  பேரவை வளாகத்தில் காவல்துறை பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டிருந்தது. அவை கூடியதும், காங்கிரஸ் கட்சியிலுள்ள நடிகர் சிவாஜி கணேசனின் ஆதரவாளர்களாக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், வி.ஜி. செல்லப்பா, சொர்ணலிங்கம், டி.ஆர். வெங்கட்ராமன், துரை.கிருஷ்ணமூர்த்தி ஆகிய ஐந்து பேரும் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியிலிருந்து விலகி விட்டதாகவும், அவர்கள் இதை தமக்கு தொலைபேசி மூலம் தெரிவித்ததாகவும் பேரவைத் தலைவர் பி.எச்.பாண்டியன் தெரிவித்தார். ஆனால், அடுத்த சிறிது நேரத்தில் அவர்கள் 5 பேரும் சட்டப்பேரவைக்கு வந்தனர். அதற்கு காங்கிரஸ் கட்சியின் மற்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் இரு தரப்புக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட சலசலப்பு சிறிது நேரத்தில் அடங்கி மீண்டும் அவை கூடியது.

அப்போது அடுத்த குண்டை வீசினார் பேரவைத் தலைவர் பி.எச்.பாண்டியன்.  ஜெயலலிதா அணியிலுள்ள  நாவலர் நெடுஞ்செழியன், திருநாவுக்கரசு, பண்ருட்டி இராமச்சந்திரன், சாத்தூர் இராமச்சந்திரன், சவுந்திர ராஜன் ஆகியோரின் சட்டப்பேரவை உறுப்பினர் பதவி கட்சித்தாவல் தடை சட்டத்தின் கீழ் பறிக்கப்பட்டு விட்டதாக அறிவித்தார். இந்த அறிவிப்பு வெளியான அடுத்த நிமிடமே சட்டப்பேரவை வன்முறைக் களமாகியது. ஜெயலலிதா ஆதரவு உறுப்பினர்களும், அவர்களுக்கு ஆதரவாக வந்திருந்த போக்கிலிகளும்  பேரவைக்குள் வந்து நாற்காலிகளை தூக்கி வீசினர். மைக்குகள் பறந்தன. அதிமுகவின் அவைத்தலைவராக இருந்து பன்னீர்செல்வம் அணிக்கு மாறியிருக்கும் மதுசூதனன் அப்போது பேரவை வளாகத்தில் நடத்திய வன்முறை பரபரப்பாக பேசப்பட்டது. அவரது இந்த வன்முறையை பாராட்டி பின்னாளில் அமைச்சர் பதவியை ஜெயலலிதா பரிசாக வழங்கியதும், அதை வைத்துக் கொண்டு வேட்டி & சேலை கொள்முதலில் ஊழல் செய்து மதுசூதனன் மாட்டிக் கொண்டதும் வரலாறு.

ஜானகி அரசு கலைப்பு

இதைத் தொடர்ந்து மாநகர காவல்துறை ஆணையர் வால்டர் தேவாரம் தலைமையிலான காவலர்கள் அவைக்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டவர்களை விரட்டி அடித்தனர். தொடர்ந்து நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜானகி அரசு 99 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றதாக அவைத்தலைவர் பாண்டியன் அறிவித்தார்.

ஆனால், சட்டப்பேரவையில் நிகழ்ந்த வன்முறைகள் குறித்து மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பிய ஆளுனர் குரானா தமிழக அரசை கலைக்க பரிந்துரை செய்தார். அதன்படி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்ட இரு நாட்களில் ஜானகி ஆட்சி கலைக்கப்பட்டு குடியரசுத் தலைவர் ஆட்சி நடைமுறைப்படுத்தப் பட்டது. தமிழக சட்டப்பேரவையும் கலைக்கப்பட்டது.

                          

No comments:

Post a Comment