கதை கேளு... கதை கேளு கழகத்தின் கதை கேளு!
வாஜ்பாய் அரசைக் கவிழ்த்த ஜெயலலிதா!
-மருத்துவர். இராமதாஸ்
ஜெயலலிதா அரசியல் முதிர்ச்சியற்றவர் என்பதற்கு 1998-ஆம் ஆண்டில் வாஜ்பாய் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் அதிமுக இடம்பெற்ற பிறகு அவர் நடந்து கொண்ட விதம் தான் காரணம் ஆகும். இன்னும் கேட்டால், மத்தியில் வாஜ்பாய் அரசு பதவியேற்பதற்கு முன்பாகவே ஜெயலலிதாவின் சிறுபிள்ளைத்தனமான சித்து விளையாட்டுகள் ஆரம்பமாகிவிட்டன.
வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக் கூட்டணி அரசுக்கு ஜெயலலிதா ஆதரவு கொடுக்க முன்வந்ததற்கு காரணமே தம்மீதான ஊழல் வழக்குகளையெல்லாம் வாபஸ் பெற வேண்டும்; கலைஞர் தலைமையிலான திமுக அரசைக் கலைத்து விட்டு உடனடியாக தேர்தல் நடத்தி தாம் மீண்டும் முதல்வர் ஆக வேண்டும் என்ற நினைப்பு தான்.
ஜெயலலிதாவின் குணம்
ஜெயலலிதாவுக்கு எப்போதுமே அவர் நினைப்பதை அடைய வேண்டும் என்ற எண்ணம் தான் இருக்குமே தவிர, அவையெல்லாம் யதார்த்தமான ஆசைகளா? அவை நிறைவேற சாத்தியங்கள் உள்ளனவா? என்பதைப் பற்றியெல்லாம் அவர் சிந்திக்கமாட்டார். 1989-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வியடைந்த பிறகு காங்கிரஸ் கட்சியுடன் அவசர அவசரமாக கூட்டணி வைத்துக் கொண்டதற்கு காரணமே எப்படியாவது திமுக அரசைக் கலைத்து விட்டு முதலமைச்சராக வேண்டும் என்பது தான். அப்போதிருந்த அரசியல் சூழலில் அது சாத்தியமும் ஆனது.
ஆனால், 1994-ஆம் ஆண்டில் கர்நாடக அரசு கலைக்கப்பட்டது தொடர்பான எஸ்.ஆர். பொம்மை வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புக்குப் பிறகு நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. மாநில அரசுகளை கலைப்பது என்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல என்ற நிலை ஏற்பட்டது. நியாயம் இல்லாமல் ஒரு மாநில அரசை மத்திய அரசு கலைத்தால், அதற்காக மத்திய அரசை உச்சநீதிமன்றம் கடுமையாக கண்டித்ததுடன், கலைக்கப்பட்ட அரசை மீண்டும் பதவியில் அமர்த்திய முன்னுதாரணங்களும் பின்னாளில் ஏற்பட்டன.
பதவியேற்பு தாமதம்
இதையெல்லாம் புரிந்துகொள்ளும் சக்தியும், பொறுமையும் ஜெயலலிதாவுக்கு இல்லை என்பது தான் எல்லா பிரச்சினைகளுக்கும் காரணம் ஆகும். 1998&ஆம் ஆண்டு மார்ச் முதல் வாரத்தில் மக்களவைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டாலும், அதன்பின் இரு வாரங்கள் கழித்து மார்ச் 19&ஆம் தேதி தான் வாஜ்பாய் அரசு பதவியேற்க முடிந்தது. இதற்கு காரணம், கலைஞர் ஆட்சியை கலைப்பதாக வாஜ்பாய் வாக்குறுதி அளித்தால் மட்டுமே ஆதரவுக் கடிதத்தை குடியரசுத் தலைவரிடம் கொடுக்க முடியும் என்று ஜெயலலிதா பிடிவாதம் பிடித்தது தான்.
அதன்பின் அதிமுக அமைச்சர்களுக்கு ஜெயலலிதா கேட்டு வாங்கிய துறைகள் அனைத்துமே ஜெயலலிதாவை ஊழல் வழக்கிலிருந்து விடுவிக்க வைக்க வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டவையாகத் தான் இருந்தன. சேடப்பட்டி முத்தையாவுக்கு தரைவழிப் போக்குவரத்துத் துறை ஒதுக்கப்பட்டது. ஆனால், இத்துறைக்கும் ஜெயலலிதா வழக்குகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தம்பித்துரைக்கு சட்டத்துறை வழங்கப்பட்டது. ஜெயலலிதா வழக்குகளை விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றங்களை கலைக்க வேண்டும்; ஜெயலலிதா மீதான வழக்குகளையெல்லாம் செயலிழக்க வைக்க வேண்டும் என்பது தான் தம்பித்துரைக்கு ஜெயலலிதா கொடுத்த பணியாகும்.
ஜெயலலிதாவின் திட்டம்
இணையமைச்சர்கள் இருவரில் ஒருவரான ஆர்.கே. குமாருக்கு நிதித்துறை வழங்கப்பட்டதற்கு காரணம் வருமானவரித்துறை குறித்த வழக்குகளை சரி செய்து தர வேண்டும் என்பதற்காகத் தான். இன்னொரு இணையமைச்சரான கடம்பூர் ஜனார்த்தனனுக்கு பணியாளர்நலத்துறை ஒதுக்கப்பட்டது. அத்துறையின் கட்டுப்பாட்டில் தான் சி.பி.ஐ. இயங்கும் என்பதால் அவருக்கு அத்துறை வழங்கப்பட்டது. இவர்களின் உதவியுடன் வழக்குகளை உடைப்பது, சுப்பிரமணியசுவாமி மூலமாக வாஜ்பாய் உதவியுடன் கலைஞர் அரசை கலைப்பது தான் ஜெயலலிதாவின் திட்டம் ஆகும்.
ஆனால், பதவியேற்ற ஒரு மாதத்திலேயே சொத்துக்குவிப்பு வழக்கில் சேடப்பட்டி முத்தையா மீது குற்றச்சாற்றுகள் பதிவு செய்யப்பட்டன. இதையடுத்து அவரை பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்று பலரும் வலியுறுத்தியதால் சேடப்பட்டி பதவி விலகினார். அதற்கு பதிலடி தரும் வகையில் கிரிமினல் வழக்குகளில் சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சர்கள் பூட்டாசிங், ராமகிருஷ்ணஹெக்டே, ராம்ஜெத்மலானி ஆகியோர் பதவி விலக வேண்டும் என்று ஜெயலலிதா வலியுறுத்தினார். இதனால் மத்திய அரசுக்கும், ஜெயலலிதாவுக்கும் இடையே உறவு மிகவும் மோசமடைந்தது.
அமைச்சர் பதவி நீக்கம்
எனினும், மத்திய நிதித்துறை இணையமைச்சராக இருந்த ஆர்.கே.குமாரை அழைத்த ஜெயலலிதா தமது வருமானவரி வழக்குகளை விசாரித்த அதிகாரிகளை இடமாற்றம் செய்யும்படி ஆணையிட்டார். ஆனால், அதை குமார் சரியாக செய்யவில்லை. இதையடுத்து குமாரை தமது இல்லத்திற்கு அழைத்த ஜெயலலிதா கடுமையாக திட்டியதாக கூறப்படுகிறது. ஆர்.கே. குமார் பாரதிய ஜனதாவின் கைப்பாவையாக மாறிவிட்டார் என்று அவருக்கு ஏற்பட்ட சந்தேகம் தான் இதற்கு காரணம் ஆகும். இதனால் மனமுடைந்த குமார் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போதும் கோபம் தீராத ஜெயலலிதா அமைச்சர் பதவியிலிருந்தும் விலகும்படி குமாருக்கு ஆணையிட்டார். இதைத்தொடர்ந்து 1998-ஆம் ஆண்டு மே 22-ஆம் தேதி மருத்துவமனையில் இருந்தவாறே குமார் பதவி விலகினார். அதைத்தொடர்ந்து குமாரிடம் இருந்த துறைகள் இன்னொரு இணை அமைச்சரான கடம்பூர் ஜனார்த்தனத்துக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டன.
அந்த நேரத்தில் மத்திய அரசு மீது ஜெயலலிதா கோபமாக இருப்பதை அறிந்த பிரதமர் வாஜ்பாய், மூத்த மத்திய அமைச்சரான ஜஸ்வந்த்சிங்கை அனுப்பி சமாதானப்படுத்தினார். அப்போது செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்குகளை மேற்பார்வையிட்டு வந்த ஆணையாளர் எஸ்.சி. ஜாதவ் மும்பையில் சிறந்த பதவி எனக் கருதப்படும் ஒரு பதவிக்கு மாற்றப்பட்டார். அவருடைய பதவியை கே.கோபாலன் என்பவர் ஏற்றுக்கொண்டார். நேர்மையுடன் செயல்படக் கூடியவரான பி.கே. ஸ்ரீதரன் வேறு ஒரு முக்கிய பொறுப்புக்கு மாற்றப்பட்டார். அவரது இடத்துக்கு என்.பி. திரிபாதி என்பவர் நியமிக்கப்பட்டார். இப்படிப்பட்ட மாறுதல்கள் மூலம் ஜெயலலிதாவும், சசிகலாவும் அவருடைய உறவினர்களும் ஒரு தற்காலிக விடுதலையை அடையக்கூடும் என்று வருமான வரித் துறை அதிகாரிகள் குற்றம் சாட்டினர். ஆனால், அதைப் பற்றியெல்லாம் மத்திய ஆட்சியாளர்கள் கவலைகொள்ளவில்லை.
யஷ்வந்த் சின்ஹா வாக்குமூலம்
அதன்பின்னர் ஜெயலலிதா அடிக்கடி மத்திய அரசு மீது கோபம் கொள்வதும், அவரை சமாதானப்படுத்த மத்திய அமைச்சர்கள் சென்னைக்கு வந்து செல்வதும் வாடிக்கையான ஒன்றாகிவிட்டது. ஜஸ்வந்த் சிங், ஜார்ஜ் பெர்னாண்டஸ் ஆகியோர் மாதத்திற்கு ஒருமுறை ஜெயலலிதாவை சந்திப்பது வழக்கமான நடைமுறையாகிவிட்டது. ஒருமுறை மத்திய நிதியமைச்சராக இருந்த யஷ்வந்த் சின்ஹா வாஜ்பாயின் ஆணைப்படி ஜெயலலிதாவை அவரது போயஸ்தோட்ட இல்லத்தில் சந்தித்து பேசினார். அதுகுறித்து தாம் எழுதிய ஒரு சுதேசி சீர்திருத்தவாதியின் வாக்குமூலம் Confessions Of Swadhesi Reformer என்ற நூலில் குறிப்பிட்டிருந்தார். ‘‘ சென்னையில் காலையில் என்னுடைய நிகழ்ச்சிகள் முடிந்தவுடன், நான் ஜெயலலிதா வீட்டிற்குச் சென்றேன். நல்லவேளையாக அங்கே எந்த புகைப்படக்காரரும் காத்திருக்கவில்லை. ஜெயலலிதா இருந்த அறைக்கு நான் சென்று சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு, மதிய உணவு அருந்தினோம். மூன்று பேர் மட்டுமே சாப்பிட்டோம் - ஜெயலலிதா, திலிப் ரே (நிலக்கரித்துறை இணை அமைச்சர்), நான். சாப்பாடு நன்றாக இருந்தது. நான் புறப்படும்போது என்னிடம் ஜெயலலிதா ஒரு கவரைக்கொடுத்தார். பிறகு நான் அதனைத் திறந்து பார்த்த போது அவருடைய வருமான வரி வழக்குகள் பற்றிய குறிப்புகள் இருந்தன. சில நாட்கள் கழித்து நான் பிரதமரைச் சந்தித்தேன். சென்னையில் ஜெயலலிதாவுடன் நடந்த பேச்சுவார்த்தை விவரங்களை அவரிடம் தெரிவித்தேன். ஆனால் ஜெயலலிதா கொடுத்த கவர் பற்றி சொல்ல மறந்து விட்டேன். அப்போது பிரதமர் (வாஜ்பாய்) ஜெயலலிதா கொடுத்த கவரில் என்ன விஷயங்கள் இருந்தன? என்றார். நான் திடுக்கிட்டுப் போனேன். நாட்டில் நடக்கும் விஷயங்களைத் தெரிந்து கொள்ள பிரதமர் நினைத்தால் அது முடியுமென்பதை அறிந்து கொண்டேன்’’ என்று தமது நூலில் சின்ஹா கூறியிருந்தார்.
ஆலோசனைகளை மதிக்காதவர்
ஒருகட்டத்தில் திமுக அரசைக் கலைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வாஜ்பாய் அரசு ஏற்காது என்பதை உணர்ந்து கொண்ட ஜெயலலிதா, மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெற முடிவு செய்தார். இதுகுறித்து விவாதிக்க கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை பலமுறை தமது இல்லத்தில் கூட்டினார். ஆதரவு வாபஸ் என்ற பேச்சை அவர் எடுக்கும்போதெல்லாம் அது தவறான முடிவு என்பதை நான் சுட்டிக்காட்டுவேன். நமது அணிக்கு வாக்களித்த மக்களுக்கு நல்லது செய்யாமல், மத்திய அரசை கவிழ்க்க முயலக்கூடாது என்று வலியுறுத்துவேன். அரைகுறை மனதுடன் அதை அவர் ஏற்றுக் கொள்வார். ஒரு கட்டத்திற்கு மேல் அதுவும் சாத்தியமில்லாமல் போய்விட்டது.
1999-ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே என்னுடனும், பிற கூட்டணிக் கட்சித் தலைவர்களுடனும் விவாதிப்பதை அவர் குறைத்துக் கொண்டார். அந்த ஆண்டு மார்ச் 26 முதல் 30 வரை தில்லியில் முகாமிட்டிருந்த ஜெயலலிதா, அங்கு பல தலைவர்களுடன் பேச்சு நடத்தியதன் அடிப்படையில் வாஜ்பாய் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப்பெற முடிவு செய்தார். பின்னர் சென்னை திரும்பிய ஜெயலலிதா இதுகுறித்து என்னுடனோ மற்ற தலைவர்களுடனோ விவாதிக்கவில்லை. மாறாக, ஏப்ரல் 5-ஆம் தேதி அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தைக் கூட்டிய ஜெயலலிதா அதில் என்னையும், மற்ற கூட்டணிக் கட்சித் தலைவர்களையும் இரண்டாம் கட்ட தலைவர்கள் மூலம் கடுமையாக திட்ட வைத்தார்.
வாஜ்பாய் அரசு கவிழ்ந்தது
அடுத்த நாள் ஏப்ரல் 6-ஆம் தேதி சுப்பிரமணியன் சுவாமி ஜெயலலிதாவை சந்தித்து பேசினார். அடுத்த சில நாட்களில் தில்லியில் சுப்பிரமணியன் சுவாமி ஏற்பாடு செய்த தேநீர் விருந்தில் கலந்து கொண்ட ஜெயலலிதா அங்கு நடந்த ஆலோசனையின்படி ஏப்ரல் 14-தேதி குடியரசுத் தலைவர் கே.ஆர், நாராயணனை சந்தித்து வாஜ்பாய் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக தெரிவித்தார். இதையடுத்து வாஜ்பாய் அரசுக்கு திமுக ஆதரவளிக்கும் என்று கலைஞர் அறிவித்தார். ஆனாலும் ஏப்ரல் 17-ஆம் தேதி நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வாஜ்பாய் அரசு கவிழ்ந்தது.
உண்மையில் ஜெயலலிதாவின் நோக்கம் என்னவென்றால், வாஜ்பாய் அரசை கவிழ்த்துவிட்டு, காங்கிரஸ் தலைமையில் மாற்று அரசு அமைத்து, கலைஞர் அரசைக் கலைக்க வேண்டும் என்பது தான். ஆனால், மாற்று அரசில் மாநில கட்சிகளான அ.தி.மு.க., -சமாஜ்வாதி போன்ற கட்சிகளை சேர்க்க முடியாது ; வெளியில் இருந்து ஆதரவு தாருங்கள் என சோனியா கூறிவிட்டார். இதனால் சோனியா- ஜெயலலிதா இடையே மோதல் ஏற்பட்டது. ஜெயலலிதா ஆதரவின்றி வேறு யாரும் ஆட்சி அமைக்க முடியாது என்பதால் புதிய அரசு அமைக்கும் முயற்சிகள் தோல்வியடைந்து விட்டன. அடுத்த 6 மாதங்களில் தேர்தல் நடத்தப்பட்டு, வாஜ்பாய் அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்தது. மேலும், அந்த தேர்தலில் திமுக, பா.ம.க. அங்கம் வகித்த தேசிய ஜனநாயக் கூட்டணியிடம் அதிமுக அணி படுதோல்வியடைந்தது.
No comments:
Post a Comment