நெடுவாசலுக்காக போராடக் கூடாது
என ஐ.டி துறையினரை மிரட்டுவதா?
தமிழ்நாடு அரசின் செயல்பாடுகள் முரண்பாடுகளின் மொத்த உருவம் என்பது நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்ட விவகாரத்தில் மீண்டும் ஒருமுறை அம்பலமாகியிருக்கிறது.
ஒருபுறம் போராட்டத்தைத் திரும்பப் பெறும்படி மக்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில், மறுபுறம் போராட்டத்தை ஒடுக்குவதற்கான மிரட்டல்களை காவல்துறை தீவிரப்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை தனியார் நிறுவனம் மூலம் செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்திருப்பதைக் கண்டித்து அங்குள்ள மக்கள் கடந்த 15 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் இத்திட்டத்தை எதிர்த்து எனது தலைமையில் நாளை நெடுவாசலில் போராட்டம் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், நெடுவாசல் போராட்டக் குழுவினரை அழைத்து முதலமைச்சர் பழனிச்சாமி நேற்று பேச்சு நடத்தியுள்ளார்.
நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு சுரங்க குத்தகை உரிமத்தை தமிழக அரசு வழங்க வில்லை எனவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் இந்தத் திட்டத்துக்கு தமிழக அரசு அனுமதி வழங்காது என்றும் பழனிச்சாமி உறுதியளித்துள்ளார்.
நெடுவாசல் மக்களும், விவசாயிகளும் எந்த அச்சமும் கொள்ளத் தேவையில்லை என்று கூறியுள்ள அவர், இந்த உறுதியை ஏற்று நெடுவாசலில் நடத்தப்பட்டு வரும் போராட்டத்தை கைவிட வேண்டுமென்றும் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். முதலமைச்சர் பழனிச்சாமி இதே நிலைப்பாட்டில் தொடர்ந்து இருந்தால் அது வரவேற்கத்தக்க ஒன்று தான். இந்த நிலைப்பாட்டின் மூலம் தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டம் வராமல் தடுக்க முடியும்.
ஆனால், ஒருபுறம் இவ்வாறு பேசிக்கொண்டு மறுபுறம் நெடுவாசல் மக்கள் போராட்டத்தை சீர்குலைக்கும் செயல்களில் தமிழக அரசு ஈடுபட்டிருக்கிறது. தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு ஆதரவாக நடத்தப்பட்ட போராட்டம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதற்கு காரணம், அதில் மாணவர்களும், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றும் இளைஞர்களும் அதிக அளவில் கலந்து கொண்டது தான்.
இப்போது நெடுவாசல் போராட்டத்திலும் மாணவர்கள் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை பணியாளர்கள் அதிக எண்ணிக்கையில் பங்கேற்றுள்ளனர். அடுத்தக்கட்டமாக சென்னையில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்த அவர்கள் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்தப் போராட்டத்தை முறியடிக்கும் வகையில், சென்னை பழைய மாமல்லபுரம் சாலையில் செயல்படும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் மேலாளர்கள் மற்றும் நிர்வாகிகளை சென்னை மாநகரக் காவல்துறை அதிகாரிகள் நேற்று அழைத்து பேசியுள்ளனர்.
‘‘ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடத்தப்பட்ட போராட்டங்களைப் போன்று, நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராகவும் மிகப்பெரிய அளவில் போராட்டங்களை நடத்த சிலர் முடிவு செய்துள்ளனர். அந்த போராட்டங்களில் உங்கள் நிறுவன பணியாளர்கள் எவரும் பங்கேற்க அனுமதிக்கக் கூடாது. அவ்வாறு பங்கேற்க அனுமதித்தால் அவர்களை கைது செய்வது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். நெடுவாசல் போராட்டத்திற்கு உங்கள் நிறுவனப் பணியாளர்கள் எந்த வகையில் ஆதரவு அளித்தாலும், மோசமான விளைவுகள் ஏற்படும்’’ என்று எச்சரிக்கை விடுத்திருக்கின்றனர். இது கடுமையாக கண்டிக்கத்தக்கது.
மற்றொருபுறம், நெடுவாசல் கிராமத்தில் நடைபெறும் போராட்டங்களில் மாணவர்கள் பங்கேற்பதை தடுக்கும் நடவடிக்கைகளிலும் காவல்துறையினர் ஈடுபட்டிருக்கின்றன. நெடுவாசல் கிராமத்தைச் சுற்றிலும் மொத்தம் 7 இடங்களில் சோதனைசாவடிகளை அமைத்துள்ள காவல்துறையினர், அவ்வழியே நெடுவாசல் செல்லும் அனைத்து வாகனங்களின் பதிவு எண்களையும், அதில் பயணம் செய்வோரின் விவரங்களையும் பதிவு செய்கின்றனர். போராட்டத்தில் பங்கேற்கச் செல்லும் மாணவர்களுக்கு அனுமதி மறுத்து கட்டாயப்படுத்தி திருப்பி அனுப்புகின்றனர்.
பெற்றோரின் அனுமதி இல்லாமல் மாணவர்கள் போராட்டத்தில் பங்கேற்கக் கூடாது என்ற வினோத விதியைக் கூறி அவர்களை விரட்டியடிக்கின்றனர்.
காவல்துறையினரின் நடவடிக்கைகள் கேலிக்கூத்தான ஒடுக்குமுறையாக உள்ளன. போராட்டங்களில் பங்கேற்பது மாணவர்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவன பணியாளர்களின் உரிமை ஆகும். போராட்டம் நடத்தப்படுவதற்கான காரணம் என்னவென்பதை அறிந்து அதை சரி செய்வது தான் ஆட்சியாளர்களுக்கு அழகாகும். மாறாக, பணியாளர்களை போராட்டத்திற்கு அனுப்பக் கூடாது என்று தகவல் தொழில்நுட்ப நிறுவன அதிகாரிகளை மிரட்டுவதும், இந்தியாவுக்கு அந்நிய செலாவணியை ஈட்டித் தரும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை ஏதோ போராட்டத்தில் நடிப்பதற்கு ஆட்களை அனுப்பும் துணை நடிகர்கள் முகவர்களைப் போல கையாளுவதும் கேலிக்கூத்தான செயல்கள் ஆகும்.
மதுக்கடைகளில் 21 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு மது விற்பனை செய்யக்கூடாது என்ற விதியை அரசாலோ, காவல்துறையாலோ முழுமையாக நடைமுறைப்படுத்த முடியவில்லை. அதில் தோல்வியடைந்த அரசும், காவல்துறையும் போராட்டத்தில் பங்கேற்க வரும் மாணவர்களுக்கு பெற்றோரின் அனுமதி தேவை என்ற புதிய விதியை உருவாக்கி செயல்படுத்துவது கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற் மிரட்டல்களால் மக்கள் போராட்டத்தை முறியடித்துவிட முடியும் என அரசு நினைப்பது, சீப்பை ஒளித்து வைப்பதன் மூலம் திருமணத்தை நிறுத்திவிட முடியும் என நினைப்பதற்கு சமமான அறியாமையின் வெளிப்பாடாகும்.
எனவே, இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதை விடுத்து, நெடுவாசல் மக்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி அதன் மூலம் போராட்டத்திற்கு முடிவு காண அரசு முன்வர வேண்டும்.
மருத்துவர். அன்புமணி இராமதாஸ்
#Anbumani #Ramadoss #PMK
#SaveFarmers #SaveNeduvasal #StopMethaneExtraction
No comments:
Post a Comment