கதை கேளு... கதை கேளு கழகத்தின் கதை கேளு!
முதலமைச்சர் ஆனார் எம்.ஜி.ஆர்!
-மருத்துவர். இராமதாஸ்
1977 சட்டப்பேரவைத் தேர்தலில் எம்.ஜி.ஆரின் வெற்றி கிட்டத்தட்ட முன்கூட்டியே உறுதி செய்யப்பட்டு விட்டதாகத் தான் கூற வேண்டும். 1976 -77 ஆண்டுகள் திமுகவின் வரலாற்றில் கருப்பு ஆண்டுகள். ஆட்சிக் கலைப்பு, மிசாவில் கைது, சர்க்காரியா கமிஷன் விசாரணை ஆகியவற்றை எதிர்கொண்ட திமுக 1977ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் படுதோல்வியை சந்தித்தது. அதுமட்டுமின்றி, அக்கட்சியின் தூண்கள் என்று போற்றப்பட்ட தலைவர்கள் அனைவரும் திமுகவிலிருந்து வெளியேறினார்கள். இதனால் திமுக வலுவிழந்து காணப்பட்டது.
மற்றொருபுறம், அதிமுக தொடர்ச்சியான வெற்றியால் உற்சாகத்துடன் இருந்தது. 1977ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் எம்.ஜி.ஆர் தீவிரப் பரப்புரை மேற்கொண்டார். அதுமட்டுமின்றி, மொத்தம் 4 அணிகள் போட்டியிட்டதும் எம்.ஜி.ஆருக்கு மிகவும் வசதியாக இருந்தது. ஜூன் 10&ஆம் தேதி நடைபெற்றத் தேர்தலில் அதிமுக 130 இடங்களிலும், அதன் கூட்டணி கட்சிகள் 14 இடங்களிலும் வெற்றி பெற்றன. திமுக 48 இடங்களிலும், காங்கிரஸ் அணி 32 இடங்களிலும் வெற்றி பெற்றன.
பதவியேற்பு தாமதம்
அதிமுக வெற்றி பெற்று முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகும், அவர் 20 நாட்களுக்கு பதவி ஏற்கவில்லை. காரணம்... அவர் நடித்து பாதியில் நின்ற மீனவ நண்பன், மதுரை மீட்ட சுந்தரபாண்டியன் உள்ளிட்ட சில படங்களை முடித்துத் தர வேண்டிய கட்டாயத்தில் இருந்தது தான் அதற்கு காரணமாகும். படங்களை நடித்துக் கொடுத்த பின்னர், 1977&ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதி முதலமைச்சராக பொறுப்பேற்றார்.
எம்.ஜி.ஆர் முதலமைச்சர் ஆனதை மாநிலமே கொண்டாடியது. தங்களின் குடும்பத்தில் ஒருவர் முதல்வர் ஆகிவிட்டதாக அனைவரும் மகிழ்ந்தனர். எம்.ஜி.ஆரும் மக்களை சந்திப்பது, கை கொடுப்பது, பாட்டிகளை அரவணைப்பது என காலத்தை கடத்தினார். ஆனால், சொல்லிக்கொள்ளும்படியாக மக்களின் நலனுக்கோ, தமிழகத்தின் வளர்ச்சிக்கோ எந்த திட்டமும் செயல்படுத்தப்படவில்லை. மாறாக தமக்கு புகழ் தேடித்தந்த திரையுலகுக்கு சலுகைகளை வாரி இறைத்தார்.
வெளியுலகில் எம்.ஜி.ஆர் மன்னனாக இருந்தாலும், சட்டப்பேரவையில் அவர் நாடோடியாகத் தான் இருக்க வேண்டியிருந்தது. 48 உறுப்பினர்களை வைத்துக் கொண்டு கலைஞர் கொடுத்த குடைச்சல் கொஞ்ச நஞ்சமல்ல. அதிலும் குறிப்பாக திமுகவின் மூவரணியாக துரைமுருகன், க.சுப்பு, இரகுமான்கான் ஆகியோர் எழுப்பிய வினாக்களுக்கு பதிலளிக்க ஆளுங்கட்சியின் முதலமைச்சரும், அமைச்சர்களும் திணறினார்கள்.
திரைப்படமும், அரசியலும்!
ஒரு கவலையும் இல்லாமல் திரையுலகில் கதாநாயகிகளும் டூயட், வில்லன்களுடன் சண்டை, ரசிகர்களுடன் கொண்டாட்டம் என மகிழ்ச்சியாக இருந்த எம்.ஜி.ஆருக்கு அரசியல் எவ்வளவு சிக்கலானது என்பது புரியத் தொடங்கியது. அதேநேரத்தில், மக்களுக்காக புதியத் திட்டங்கள் செயல்படுத்தப்படாவிட்டாலும், ஊழல்கள் தலைவிரித்தாடிய கலைஞர் ஆட்சியுடன் ஒப்பிடும் போது எம்.ஜி.ஆர் ஆட்சியில் கண்ணுக்கு தெரியும் அளவுக்கு ஊழல் இல்லாதது மக்களுக்கு மிகப்பெரிய நிம்மதியை அளித்தது. அதுவே அவர்களுக்கு போதுமானதாக இருந்தது.
அரசியல் நெருப்பின் சூட்டை தாங்கிக் கொள்ள முடியாத எம்.ஜி.ஆர், திரைப்படச் சோலையில் இளைப்பாற விரும்பினார். அதிலும் பல கூத்துக்கள் நடந்தன. எதையும் துணிச்சலாக செய்யும் திறன் இல்லாத எம்.ஜி.ஆர். தாம் மீண்டும் திரைப்படத்தில் நடிக்க மத்திய அரசின் அனுமதியை கேட்க முடிவு செய்தார். அதற்கான அனுமதி கேட்டு, மூன்றாம் வகுப்பு மாணவர் ஆசிரியருக்கு விடுப்புக் கடிதம் எழுதுவதைப் போன்ற ஒரு கடிதத்தை எழுதினார். ஆனால், பிரதமரோ, இதற்கெல்லாம் எனது அனுமதி தேவையில்லை... நடிப்பதைப் பற்றி நீங்களே முடிவு எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டார்.
மீண்டும் அரிதாரம்!
அதைத்தொடர்ந்து கவிஞர் வாலியின் கதை வசனத்தில் ‘உன்னை விட மாட்டேன்’ என்ற திரைப்படத்தில் நடிக்க எம்.ஜி.ஆர் முடிவு செய்தார். இதற்காக அவர் தரப்பில் கூறப்பட்ட காரணம்... ஏராளமாக வரிபாக்கி இருப்பதால் அதை கட்ட கூடுதல் வருவாய் ஈட்ட வேண்டும் என்பது தான். அப்போது வரி செலுத்தவே பணம் இல்லாத முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர் பின்னாளில் தமது உறவினர்களுக்கும், தத்துப் பிள்ளைகளுக்கும் பல ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துக்களைக் குவித்து வைத்தது எப்படி? என்ற வினா உங்களுக்கு எழுந்தால் அதற்கான பதில் என்னிடம் இல்லை.
விவசாயிகள் போராட்டம்!
உன்னை விட மாட்டேன் திரைப்படத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், எம்.ஜி.ஆருக்கு அடுத்த நெருக்கடி ஆரம்பம் ஆனது. இந்த முறை எம்.ஜி.ஆருக்கு நெருக்கடி கொடுத்தது கலைஞரோ அல்லது பிற அரசியல் கட்சிகளோ இல்லை. மாறாக விவசாயிகள். விவசாயிகளின் சார்பில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் நாராயணசாமி முதலமைச்சர் எம்.ஜி.ஆருக்கு கடிதம் எழுதினார். விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை பட்டியலிட்டிருந்த நாராயண சாமி நாயுடு, அவற்றை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும், அவ்வாறு நிறைவேற்றா விட்டால், தமிழகம் தழுவிய அளவில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரித்திருந்தார். அந்த கடிதம் எம்.ஜி.ஆருக்கு கலக்கத்தை ஏற்படுத்தியது. உன்னை விட மாட்டேன் என்று திரைப்படம் தயாரிக்கவிருக்கும் நிலையில், இவர் நம்மை விட மாட்டார் போலிருக்கிறதே என்று எம்.ஜி.ஆர் அஞ்சினார்.
எம்.ஜி.ஆரின் அச்சத்துக்கு அர்த்தம் இருந்தது. காரணம்... நாராயணசாமி நாயுடு உறுதிப்பாடு மிக்கவர். எந்த ஒரு போராட்டத்தை அறிவித்தாலும் அதில் வெற்றி பெறாமல் பின்வாங்க மாட்டார். அதுமட்டுமின்றி, இப்போதுள்ள விவசாயிகள் சங்கங்களைப் போன்று நாராயணசாமி நாயுடுவின் சங்கம் பெயரளவிலோ, விளம்பரத்திற்காகவோ இயங்கிய சங்கம் அல்ல. அந்த சங்கத்தில் லட்சக்கணக்கான விவசாயிகள் உறுப்பினர்களாக இருந்தனர். கடந்த காலங்களில் கோரிக்கைகளை நிறைவேற்ற உயிர்த்தியாகம் செய்யவும் அந்த சங்கத்தினர் தயங்கியதில்லை.
நாராயணசாமி நாயுடு
உதாரணமாக, 1972-ஆம் ஆண்டில் மின் கட்டண உயர்வைக் கண்டித்தும், அதை திரும்பப் பெற வலியுறுத்தியும் ஜூன் 2 ஆம் தேதி முதல் 4 ஆம் தேதி வரை காய்கறிகளையும் பாலையும் விவசாயிகள் நகரங்களுக்கு அனுப்புவதை நிறுத்தி போராட்டம் நடத்தினார்கள். ஆனால், அந்த போராட்டத்தை தமிழக அரசு கண்டு கொள்ளாத நிலையில், அடுத்தக்கட்டமாக விவசாயிகள் 07.06.1972 அன்று கோவையில் புதுமையாக மாட்டு வண்டிப் போராட்டத்தை நடத்தினார்கள். மாவட்டத்தின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் புறப்பட்ட பல்லாயிரக் கணக்கான மாட்டு வண்டிகள், கோவை நகரின் சாலைகளிலும் சந்துபொந்துகளிலும் மத்திய சிறைச்சாலைக்கு முன்பும் நிறுத்தப்பட்டன. கோவை நகரம் நிலைகுலைந்த்தது. அமெரிக்காவிலிருந்து வெளிவரும் ‘தி நியூயார்க் டைம்ஸ்’ உள்ளிட்ட உலகப் பத்திரிகைகள் அவர்களைப் பாராட்டி ‘மாட்டு வண்டிகள் இந்திய விவசாயிகளின் பாட்டன் டாங்குகள்’ என்று இந்தப் போராட்டச் செய்தியை வெளியிட்டன. இதற்குக் காரணமாக இருந்த தலைவர்களில் நாராயணசாமி நாயுடு குறிப்பிடத் தக்கவர் ஆவார்.
போராட்டத்தின் வீச்சை உணர்ந்த அரசு பணிந்தது. நாராயணசாமி நாயுடு தலைமையில் 1972 ஜூலை 13-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை அரசுடன் பேச்சு வார்த்தை நடந்தது. அதன்படி ஜூலை 19-ல் ஒப்பந்தம் ஏற்பட்டது. தற்காலிகமாக மின் கட்டண உயர்வு பிரச்சினைக்குத் தீர்வு ஏற்பட்டது. மின் கட்டணத்தில் யூனிட் ஒன்றுக்கு ஒரு பைசா என்ற அளவில் குறைக்கப்பட்டது. சிறையில் இருந்த அனைத்து விவசாயிகளும் விடுவிக்கப்பட்டார்கள்.
நிழலும் நிஜமும்!
இந்த வெற்றி நாராயணசாமி நாயுடுவை தமிழக விவசாயிகளின் ஒப்பற்ற தலைவராக உயர்த்தியது. தனக்குக் கிடைத்த அங்கீகாரத்துடன் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, விவசாயிகளின் மாநாடுகளை நடத்தினார். சாதி, மத பேதங்களைத் தாண்டி, தமிழக விவசாயிகள் அனைவரும் ஓரணியில் திரண்டதைப் பயன்படுத்தி, ‘தமிழக விவசாயிகள் சங்கம்’ என்ற புதிய அமைப்பை 13.11.1973-ல் தொடங்கினார். அதன் தலைவராக நாராயணசாமி நாயுடு ஒருமனதாகத் தேர்ந் தெடுக்கப்பட்டார். அந்த அமைப்பின் சார்பில் தான் நாராயணசாமி நாயுடு எம்.ஜி.ஆருக்கு கடிதம் எழுதியிருந்தார்.
ஆனால், எம்.ஜி.ஆர் விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்கும் மனநிலையில் இல்லை....
விவசாயி .... விவசாயி ....
கடவுள் என்னும் முதலாளி
கண்டெடுத்த தொழிலாளி
விவசாயி .... விவசாயி ...
முன்னேற்ற பாதையிலே மனச வைத்து
முழு மூச்சா அதற்காக தினம் உழைத்து
முன்னேற்ற பாதையிலே மனச வைத்து
முழு மூச்சா அதற்காக தினம் உழைத்து
மண்ணிலே முத்தெடுத்து பிறர் வாழ
மண்ணிலே முத்தெடுத்து பிறர் வாழ
வழங்கும் குணம் உடையோன் விவசாயி
விவசாயி ... விவசாயி ....
என்று திரைப்படங்களில் பாடி நடித்தாலும், உண்மை வாழ்வில் அந்த வரிகளுக்கு உயிர் கொடுக்க எம்.ஜி.ஆர் தயாராக இல்லை.
‘‘நான் ஆணையிட்டால், அது நடந்து விட்டால்
இங்கு ஏழைகள் வேதனை படமாட்டார்.
உயிர் உள்ள வரை, ஒரு துன்பம் இல்லை.
அவர் கண்ணீர் கடலிலே விழ மாட்டார்.
-என்றெல்லாம் திரைப்படங்களில் முழங்கியவர் ஆணையிடும் நிலைக்கு வந்த பிறகு எதுவும் செய்யவில்லை.
விவசாயிகள் சுட்டுக்கொலை
இதனால் அதிர்ச்சியடைந்த விவசாயிகள் போராட்டத்திற்கு ஆயத்தமானார்கள். ஆனால், எம்.ஜி.ஆரோ இவ்வளவுக்கும் காரணம் நாராயணசாமி நாயுடு தான் என்று கருதி 1978&ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2&ஆம் தேதி திண்டுக்கல்லில் தங்கியிருந்த அவரை கைது செய்தார். அதைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தை ஒடுக்க காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியது. தமிழகத்தின் பல இடங்களில் 5 விவசாயிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அதன்பிறகும் உழவர்கள் போராட்டம் முடிவுக்கு வரவில்லை.
காவல்துறையினரால் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர முடியாத நிலையில், இராணுவத்தை அழைத்த எம்.ஜி.ஆர் அவர்களின் உதவியுடன் உழவர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தார்.
இதனால் எம்.ஜி.ஆர் அரசு மீது மக்கள் பெருங்கோபம் கொண்டிருந்த நிலையில், அவரோ அதைப்பற்றி கவலைப்படாமல் 1972&ஆம் ஆண்டு ஏப்ரல் 14-ஆம் தேதி தமிழ் புத்தாண்டு அன்று உன்னை விட மாட்டேன் திரைப்படத்திற்கு பூஜை போட்டார். ஏழைப்பங்காளன் என்ற தோற்றத்தை ஏற்படுத்தியிருந்த எம்.ஜி.ஆர் எப்படிப்பட்டவர் என்பதை அன்று தான் விவசாயிகள் புரிந்து கொண்டனர்.
No comments:
Post a Comment