கதை கேளு... கதை கேளு கழகத்தின் கதை கேளு!
தப்புக்கணக்கால் தப்பிய ஜெயலலிதா!
-மருத்துவர். இராமதாஸ்
சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஜெயலலிதா, அங்குள்ள உயர்நீதிமன்றத்தால் அடுத்த 7 மாதங்களில் விடுதலை செய்யப்படுவார் என்று இந்திய நீதித்துறை மீது நம்பிக்கைக் கொண்ட எவரும் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்கள்.
சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த ஜெயலலிதா, அதன் மீதான விசாரணை முடியும் வரை தம்மை பிணையில் விடுதலை செய்ய வேண்டும் என்று இன்னொரு மனுவும் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் தண்டிக்கப்பட்ட மற்ற மூவரும் இதேபோன்ற மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் 07.10.2014 அன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சர்ச்சைக்குரிய வகையில் அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்ட பவானி சிங், ஜெயலலிதாவுக்கு பிணை வழங்கலாம் என்றும், அதில் அரசுக்கு ஆட்சேபனை இல்லை என்றும் கூறினார். ஆனாலும் அதை ஏற்க மறுத்து விட்ட நீதிபதி சந்திரசேகரன், ஊழல் வழக்குகளில் அவ்வளவு எளிதில் பிணை வழங்க முடியாது என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்தார்.
ஜெயலலிதாவுக்கு பிணை
அதைத்தொடர்ந்து சொத்துக்குவிப்பு வழக்கில் பிணை கோரி உச்சநீதிமன்றத்தில் ஜெயலலிதா மனு செய்தார். அக்டோபர் 13-ஆம் தேதி ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவை 17-ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு எந்த நிபந்தனையும் இல்லாமல் பிணை வழங்கியது. அதுமட்டுமின்றி இந்த வழக்கை விரைவாக விசாரித்து முடிக்க ஒத்துழைப்பதாக ஜெயலலிதா வழக்கறிஞர் ஃபாலி நாரிமன் வாய்மொழியாக அளித்த உத்தரவாதத்தை ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி தத்து, திசம்பர் 18-ஆம் தேதிக்குள் இவ்வழக்கின் விசாரணைக்கு ஜெயலலிதா தரப்பு தயாராக வேண்டும் என்று கூறினார்.
திசம்பர் 18-ஆம் தேதிக்குள் விசாரணைக்கு தயாராகி விட்டால் அடுத்த 3 மாதங்களில் வழக்கு விசாரித்து முடிக்கப்படும்; விசாரணைக்கு தயாராக இல்லாவிட்டால் ஜெயலலிதாவின் பிணை ரத்து செய்யப்படும் என்றும் தலைமை நீதிபதி எச்சரித்தார். உச்சநீதிமன்றம் நிர்ணயித்த தேதிக்குள் வழக்கு விசாரணைக்கு ஜெயலலிதா தரப்பு தயாரானதைத் தொடர்ந்து 2015-ஆம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி இந்த வழக்கை விசாரிக்க நீதிபதி குமாரசாமி தலைமையில் சிறப்பு அமர்வு அமைக்கப்பட்டது. அந்த அமர்வு ஜனவரி 5-ஆம் தேதி விசாரணையைத் தொடங்கியது.
ஜெயலலிதா தரப்பு திணறல்
விசாரணையின் போது அரசு வழக்கறிஞர் பவானிசிங் ஜெயலலிதா தரப்புக்கு சாதகமாக செயல்பட்டால் கூட, ஜெயலலிதா தரப்பால் தங்கள் மீதான குற்றச்சாற்று பொய் என்பதை நிரூபிக்க முடியவில்லை. இதை பல்வேறு கட்டங்களில் நீதிபதி குமாரசாமியே உறுதி செய்தார். ஒரு கட்டத்தில் ‘‘80% விசாரணை முடிவடைந்து விட்ட நிலையில் உங்கள் தரப்பு நியாயத்தை நீங்கள் நிரூபிக்கவில்லை. இப்போது இந்த வழக்கில் நான் தீர்ப்பளித்தால் ஜெயலலிதா தண்டிக்கப்பட்டது சரி என்று தான் தீர்ப்பளிப்பேன்’’ என்று கூறினார்.
அதேநேரத்தில் இந்த வழக்கில் பவானிசிங் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக செயல்படுவதால் அவரை இந்த வழக்கிலிருந்து நீக்க வேண்டும் என்று பிப்ரவரி 23-ஆம் தேதி திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் உச்சநீதிமன்றத்தின் வழக்குத் தொடர்ந்தார். ஆனால், கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நடக்கும் விசாரணைக்கு தடை விதிக்க முடியாது என்று கர்நாடக உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் மறுத்து விட்டன. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்படுவதற்கு முன்பாகவே மார்ச் 12-ஆம் தேதி வழக்கு விசாரணையை முடித்த கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பை ஒத்தி வைத்தது. அதன்பின் அன்பழகன் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் இவ்வழக்கில் அரசு வழக்கறிஞராக பவானி சிங் நியமிக்கப்பட்டது செல்லாது என்று தீர்ப்பளித்தது. அதுமட்டுமின்றி, இவ்வழக்கில் மறு விசாரணைக்கு உத்தரவிட முடியாது என்று அறிவித்த நீதிபதிகள், திமுக பொதுச்செயலாளர் அன்பழகன், கர்நாடக அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா ஆகியோர் எழுத்து மூலம் தங்களின் வாதங்களை தாக்கல் செய்யலாம் என்றும் அறிவித்தனர். அதன்படி அவர்கள் தாக்கல் செய்த வாதங்களை ஆய்வு செய்த நீதிபதி குமாரசாமி மே 11-ஆம் தேதி தீர்ப்பளித்தார்.
தீர்ப்பு விவரம்
‘‘ஜெயலலிதாவின் அவரது கூட்டாளிகளும் வருவாய்க்கு மீறிய வகையில் 8.12% அளவுக்கு மட்டுமே சொத்துக்குவித்திருக்கின்றனர். கிருஷ்ணானந்த் அக்னிஹோத்ரி வழக்கில் வருவாய்க்கு மீறிய வகையில் சேர்க்கப்பட்ட சொத்துக்களின் மதிப்பு 10 விழுக்காட்டுக்கும் குறைவாக இருந்தால் அதைக் கருத்தில் கொள்ளத் தேவையில்லை என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பையும், 20% வரையிலான வருவாய்க்கு மீறிய சொத்துக்களை கருத்தில் கொள்ளத் தேவையில்லை என்ற ஆந்திர அரசின் சுற்றறிக்கையும் வைத்துப் பார்த்தால் ஜெயலலிதா வருவாய்க்கு மீறிய வகையில் சேர்க்கப்பட்ட சொத்துக்களை கண்டுகொள்ளாமல் விடலாம் என்பதால் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரும் விடுதலை செய்யப்படுகிறார்கள்’’ என்று தமது தீர்ப்பில் நீதிபதி குமாரசாமி கூறியிருந்தார்.
ஆனால், அவரது தீர்ப்பு ஜெயலலிதாவை விடுதலை செய்வதற்காக திட்டமிட்டு தயாரிக்கப்பட்டதாகவே எனக்கு தோன்றியது. அந்த அளவுக்கு அத்தீர்ப்பில் குறைகள் இருந்தன. நீதிபதி குமாரசாமி வழங்கிய தீர்ப்பில் ஜெயலலிதாவை விடுதலை செய்வதற்காக கூறப்பட்டுள்ள காரணங்கள் எதுவுமே ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் இல்லை. ஜெயலலிதா தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதங்களை வினா எதுவும் எழுப்பாமல் நீதிபதி ஏற்றுக்கொண்டதாகவே தோன்றியது. அதுமட்டுமின்றி, ஜெயலலிதா வாங்கிய கடன்களை அவரது வருவாயாக நீதிபதி ஏற்றுக்கொண்டிருக்கிறார். அதை சரியான நடவடிக்கையாகவே வைத்துக் கொண்டாலும் கடன் தொகையை கணக்கிடுவதில் ஜெயலலிதா மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு சாதகமாக குளறுபடிகள் செய்யப்பட்டிருப்பது தெளிவாகத் தெரிந்தது.
தப்புக்கணக்கு
நீதிபதி குமாரசாமி அளித்த தீர்ப்பு ஆணையின் 852- ஆவது பக்கத்தில் இது குறித்த விவரங்களை தெளிவாக அறிய முடிந்தது. ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரும், அவர்களின் நிறுவனங்களும் இந்தியன் வங்கியிருந்து 10 கடன்களை வாங்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த கடன்களின் மதிப்பு முறையே ரூ.1.50 கோடி, ரூ.3.75 கோடி, ரூ. 90 லட்சம், ரூ.25 லட்சம், ரூ.12.46 லட்சம், ரூ.50 லட்சம், ரூ.25 லட்சம், ரூ.1.57 கோடி, ரூ.1.65 கோடி, ரூ.17 லட்சத்து 85,274 ஆகும். இக்கடன் தொகைகளைக் கூட்டினால் மொத்த மதிப்பு ரூ.10 கோடியே 67 லட்சத்து 31,274 மட்டுமே வருகிறது. ஆனால், இந்தக் கடன்களின் மொத்த மதிப்பு ரூ.24 கோடியே 17 லட்சத்து 31,274 என்றும் இதை ஜெயலலிதாவின் வருவாயாக கருத வேண்டும் என்றும் நீதிபதி குமாரசாமி தெரிவித்துள்ளார். அதாவது ஜெயலலிதாவின் வருவாய் மதிப்பில் ரூ.13.50 கோடி கூடுதலாக சேர்க்கப்பட்டிருந்தது.
ஜெயலலிதாவின் மொத்த வருவாய் ரூ.34 கோடியே 76 லட்சத்து 65,654 என்று உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் தவறுதலாக அல்லது தவறாக சேர்க்கப்பட்ட ரூ.13.50 கோடியை கழித்தால் ஜெயலலிதா தரப்பின் வருவாய் ரூ.21 கோடியே 26 லட்சத்து 65,654 ஆகவே இருக்கும். கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி அவர்களே ஏற்றுக்கொண்டவாறு ஜெயலலிதா தரப்பின் சொத்துக்கள் ரூ. 37 கோடியே 59 லட்சத்து 02,466 ஆகும். ஜெயலலிதா தரப்பின் உண்மையான வருவாய்க்கும், சொத்துக்களுக்கும் இடையிலான வித்தியாசம் 16 கோடியே 32 லட்சத்து 36 ஆயிரத்து 812 ஆகும். ஆனால், நீதிபதி குமாரசாமி இரண்டுக்கும் இடையிலான வித்தியாசம் வெறும் ரூ. 2.82 கோடி தான் என்றும், இது வருவாயை விட 8.12% மட்டுமே அதிகம் என்றும் தீர்ப்பில் கூறியிருந்தார்.
76.75% கூடுதல் வருமானம்
அதுமட்டுமின்றி கிருஷ்ணானந்த் அக்னிஹோத்ரி வழக்கில் வருவாய்க்கு மீறிய வகையில் சேர்க்கப்பட்ட சொத்துக்களின் மதிப்பு 10 விழுக்காட்டுக்கும் குறைவாக இருந்தால் அதைக் கருத்தில் கொள்ளத் தேவையில்லை என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பையும், 20% வரையிலான வருவாய்க்கு மீறிய சொத்துக்களை கருத்தில் கொள்ளத் தேவையில்லை என்ற ஆந்திர அரசின் சுற்றறிக்கையும் வைத்துப் பார்த்தால் ஜெயலலிதா வருவாய்க்கு மீறிய வகையில் சேர்க்கப்பட்ட சொத்துக்களை கண்டுகொள்ளாமல் விடலாம் என்றும் கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி அளித்த தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஜெயலலிதா தரப்பின் சரியான வருவாயை அடிப்படையாக வைத்துப் பார்த்தால் அதற்கும், அவர்கள் தரப்பு சொத்துக்களுக்கும் இடையிலான வித்தியாசம் ரூ. 16 கோடியே 32 லட்சத்து 36 ஆயிரத்து 812 ஆகும். இது ஜெயலலிதா தரப்பு வருவாயை விட 76.75% அதிகமாகும். உண்மை இவ்வாறு இருக்கும் போது நீதிபதியால் சுட்டிக்காட்டப்பட்ட உச்சநீதிமன்றத் தீர்ப்பு அல்லது ஆந்திர அரசின் சுற்றறிக்கைப்படி பார்த்தால் கூட ஜெயலலிதாவையும், அவரது கூட்டாளிகளிகளையும் விடுதலை செய்ய முடியாது. இந்த விவரங்களையெல்லாம் எடுத்துக் கூறி இவ்வழக்கில் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினேன். ஆனால், கர்நாடக அரசு ஆரம்பத்தில்அதை கண்டுகொள்ளவில்லை.
சித்தராமய்யாவுக்கு கடிதம்
சொத்துக்குவிப்பு வழக்கை நடத்தும் பொறுப்பு கர்நாடக அரசுக்கு தான் உண்டு என்பதால், இவ்வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பை எதிர்த்து அம்மாநில அரசால் தான் மேல்முறையீடு செய்ய முடியும். அத்துடன் திமுக பொதுச்செயலாளர் அன்பழகனும் இவ்வழக்கில் மேல்முறையீடு செய்யலாம். ஆனால், ஆவர்கள் இருவருமே மேல்முறையீடு செய்யத் தயக்கம் காட்டினர். இதனால் இந்த வழக்கிலிருந்து ஜெயலலிதா மற்றும் சசிகலா நிரந்தரமாக தப்பி விடும் ஆபத்து இருந்தது. இதையறிந்து அதிர்ந்த நான், எனது வெளியூர் பயணத்தை முடித்துக் கொண்டு 12.05.2015 அன்று நள்ளிரவு சென்னை திரும்பினேன். சென்னை விமான நிலையத்தில் இருந்தபடியே கர்நாடக முதலமைச்சர் சித்தராமய்யாவுக்கு கடிதம் எழுதினேன். பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, வழக்கறிஞர் க.பாலு ஆகியோரிடம் அக்கடிதத்தை ஒப்படைத்த கர்நாடக முதலமைச்சர் சித்தராமய்யாவிடம் ஒப்படைக்கும்படி கேட்டுக் கொண்டேன். அதன்படியே அடுத்த நாள் அவர்கள் பெங்களூர் சென்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமய்யா, கர்நாடக அரசின் தலைமை வழக்கறிஞர் ரவிவர்மக்குமார், அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா ஆகியோரை சந்தித்து இவ்வழக்கில் விரைவாக மேல்முறையீடு செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்கள். கர்நாடக முதலமைச்சர் சித்தராமய்யா உள்ளிட்ட மூவரிடமும் நான் தொலைபேசி மூலம் பேசி மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன்.
ஜெயலலிதா பதவியேற்பு
‘‘ சொத்துக்குவிப்பு வழக்கில் தவறாக வழங்கப்பட்ட தீர்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு தமிழக முதலமைச்சராக அவசர அவசரமாக பதவியேற்பதற்கான நடவடிக்கைகளில் ஜெயலலிதா ஈடுபட்டுள்ளார். அவ்வாறு அவர் பதவியேற்றால் அது தமிழக மக்களுக்கு கணக்கிட முடியாத அளவுக்கு அநீதியையும், பாதிப்பையும் ஏற்படுத்தும். அது நீதியை கேலிக்கூத்தாக்கிவிடும். எனவே, இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கான நடவடிக்கைகளை கர்நாடக அரசு மேற்கொள்ளும்; நீதிக்கு மேலும் சேதம் ஏற்படுத்தப்படுவதற்கு முன்பாக இந்த தீர்ப்புக்கு உச்சநீதிமன்றத்தில் தடை உத்தரவைப் பெறும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். நீதி இல்லையேல் அமைதி இல்லை என்று தமிழில் பிரபலமான ஒரு பொன்மொழி உண்டு. நீதி படுகொலை செய்யப்படுவதற்கான ஆபத்து இருக்கும் நிலையில் அதை தடுத்து நிறுத்த உடனடியாக கர்நாடக அரசு செயல்பட வேண்டும்’’ என்று அந்தக் கடிதத்தில் வலியுறுத்தியிருந்தேன்.
அதில் உள்ள நியாயத்தை ஏற்றுக்கொண்ட ஆச்சார்யா இந்த வழக்கில் நிச்சயம் மேல்முறையீடு செய்யப்படும் என உறுதியளித்தார். ஆனால், கர்நாடக அரசிடமிருந்து உறுதியான பதில் எதுவும் கிடைக்கவில்லை. அதற்குள் தமிழக முதலமைச்சராக ஜெயலலிதா பதவியேற்றுக் கொண்டார். எனினும், ஓயாமல் தொடர்ந்து நான் விடுத்த வேண்டுகோள்களின் பயனாக சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என்று ஜூன் மாதம் கர்நாடக அரசு அறிவித்தது. அதன்படியே 23.06.2015 அன்று கர்நாடக அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மேல்முறையீட்டை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் தான் சசிகலாவும் அவரது கூட்டாளிகளும் இப்போது பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றனர்.
No comments:
Post a Comment