Tuesday, 18 April 2017

மத்திய அமைச்சர்கள் இந்தியில் தான் பேச வேண்டுமா? பரிந்துரையை ரத்து செய்க!    ----அறிக்கை----    -மருத்துவர். இராமதாஸ

மத்திய அமைச்சர்கள் இந்தியில் தான் பேச
வேண்டுமா? பரிந்துரையை ரத்து செய்க!
                     ----அறிக்கை----
             -மருத்துவர். இராமதாஸ்

மத்திய அமைச்சர்களில் இந்தி படிக்க, பேசத் தெரிந்த அனைவரும் அவர்கள் பங்கேற்கும் அனைத்து நிகழ்ச்சிகளிலும், நாடாளுமன்றத்திலும் இந்தியில் மட்டும் தான் பேச வேண்டும் என்ற நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிந்துரையை குடியரசுத் தலைவர் ஏற்றுக்கொண்டிருக்கிறார். இப்பரிந்துரை விரைவில் நடைமுறைப்படுத்தப்படக்கூடும் என்று கூறப்படுகிறது. அவ்வாறு செய்யப்பட்டால் அது இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமை தத்துவத்தின் மீது நடத்தப்பட்ட மிகக் கொடூரமானத் தாக்குதலாக அமையும்.

மத்திய உள்துறை அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் தலைமையில் செயல்பட்ட அலுவல் மொழிக்கான நாடாளுமன்ற ஆலோசனைக்குழு கடந்த 2011-ஆம் ஆண்டில் 117 பரிந்துரைகளை அரசுக்கு வழங்கியது. அவற்றில் மிகவும் முக்கியமானது,‘‘ இந்தி பேசவும், படிக்கவும் தெரிந்த குடியரசுத் தலைவர், பிரதமர், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட அனைத்து முக்கியத் தலைவர்களும் இந்தியில் தான் உரையாற்ற வேண்டும்; அறிக்கை அளிக்க வேண்டும்’’ என்பதாகும். அதன்பின் கிட்டத்தட்ட 6 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்த இந்த பரிந்துரையை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அண்மையில்  ஏற்றுக் கொண்டுள்ளார்.  இதற்கான அறிவிக்கை விரைவில் வெளியிடப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த நடவடிக்கை கடுமையாக கண்டிக்கத்தக்கது.

குடியரசுத் தலைவரும், மற்ற மத்திய அமைச்சர்களும் பெரும்பாலும் ஆங்கிலத்தில் பேசுவதையே வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்தியாவில் வாழும் மக்களில் 40 விழுக்காட்டினர் மட்டுமே இந்தி பேசும் நிலையில், 80 கோடி பேர் இந்தி அல்லாத மொழியைத் தான் பேசுகின்றனர். அவர்களுக்கு இந்தி பேசவோ, புரிந்து கொள்ளவோ முடியாது. அவ்வாறு இருக்கும் போது, இந்தி பேசாத மக்கள் மீது இந்தியைத் திணிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. 1963-ஆம் ஆண்டில் அலுவல் மொழிச் சட்டம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விரிவான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய அப்போதைய பிரதமர் ஜவகர்லால் நேரு,‘‘ இந்தி பேசாத மாநிலங்களின் மக்கள் விரும்பும் வரை அவர்கள் மீது இந்தி திணிக்கப்படாது’’ என்று வாக்குறுதி அளித்திருந்தார். அந்த வாக்குறுதியை மீறும் வகையில் மத்திய அரசு செயல்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இது இந்தியாவின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் ஒருபோதும் உதவி செய்யாது; மாறாக தீங்கையே விளைவிக்கும்.

நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவரும், மத்திய அமைச்சர்களும் இந்தியில் பேசத் தொடங்கினால் அதை பிற மொழி பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்களால் புரிந்து கொள்ள முடியாது. இதனால் மக்களின் தேவைகளை எடுத்துக் கூறி தீர்வு காண்பதற்குக் கூட முடியாமல் போய்விடும். இந்த பரிந்துரைகளை  ப.சிதம்பரம் தலைமையிலான நாடாளுமன்றக் குழு தான் அளித்தது என்பது மிகவும் வேதனையளிக்கிறது. தமிழை நன்கு கற்றறிந்த தமிழர் ஒருவரே தமிழுக்கும், தமிழையொத்த பிற மொழிகளுக்கும் துரோகம் செய்திருப்பதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதேநேரத்தில், ப.சிதம்பரம் அளித்த பரிந்துரை தான் செயல்படுத்தப்படுகிறது என்று கூறி இந்த பாவத்திலிருந்து நரேந்திர மோடி தலைமையிலான அரசு தப்பிவிட முடியாது. 2011-ஆம் ஆண்டில் அளிக்கப்பட்ட பரிந்துரை 2014-ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியிலிருந்த வரை நடைமுறைப்படுத்தப்படவில்லை. அவ்வாறு இருக்கும் போது இந்த பரிந்துரையை மட்டும் அவசரம் அவசரமாக செயல்படுத்துவதற்கு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு துடிப்பதற்கு காரணம் இந்தித் திணிப்பு முயற்சி என்பதைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்?

மத்திய அமைச்சர்கள் இந்தியில் தான் பேச வேண்டும் என்பது தவிர, சி.பி.எஸ்.இ பள்ளிகள், கேந்திரிய வித்யாலயாக்கள் ஆகியவற்றில் பத்தாம் பகுப்பு வரை இந்தியை கட்டாய பாடமாக்க வேண்டும் என்ற பரிந்துரையையும் குடியரசுத் தலைவர் கொள்கை அளவில் ஏற்றுக் கொண்டிருக்கிறார். ஏர் இந்தியா விமானத்தின் பயணச்சீட்டுகளில் இந்தியை பயன்படுத்தவும், இந்தி மொழி நாளிதழ்களை வழங்கவும் குடியரசுத் தலைவர் அனுமதித்துள்ளார். இவை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவையாகும்.

மத்திய அரசுத் துறைகளுக்கு சொந்தமான சமூக ஊடகக் கணக்குகளில் இந்தியில் மட்டுமே கருத்துக்களை பதிவிட வேண்டும் என்று ஆணையிட்டதன் மூலம் இந்தியைத் திணிக்க மத்திய உள்துறை அமைச்சகம் முயன்றது, அதன்பின் மத்திய இடைநிலைக் கல்வி வாரிய பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகளில் சமஸ்கிருத வாரத்தை கொண்டாட வேண்டும்; ஆசிரியர் நாளை குரு உத்சவ் ஆக கடைபிடிக்க வேண்டும் என்பன போன்ற உத்தரவுகளின் மூலம் சமஸ்கிருதத்தை திணிப்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது,  பல்கலைக்கழகங்களின் மூலம் இந்தியை திணிக்கத் துடித்தது,  உள்ளூர் பண்பலை வானொலிகளிலும் இந்தி நிகழ்ச்சிகளை திணித்தது என இந்தி பேசாத மாநில  மக்கள் மீது இந்தி - சமஸ்கிருத திணிப்பு முயற்சிகளில் மத்திய அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

பல்வேறு இன, மொழி பேசும் மக்கள் வாழும் இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட மொழியை திட்டமிட்டு திணிப்பது முறையல்ல. எனவே, குடியரசுத் தலைவரும், மத்திய அமைச்சர்களும் இந்தியில் மட்டும் தான் பேசவேண்டும் என்பது உள்ளிட்ட இந்தியைத் திணிக்கும் நோக்கம் கொண்ட நாடாளுமன்ற ஆலோசனைக் குழு அளித்த பரிந்துரைகள் அனைத்தையும் மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்.

No comments:

Post a Comment