கதை கேளு... கதை கேளு கழகத்தின் கதை கேளு!
அதிமுக அரசு மீது ஊழல் பட்டியல்
-மருத்துவர். இராமதாஸ்
அதிமுக அரசு மீது மொத்தம் 18 ஊழல் குற்றச்சாற்றுகள் அடங்கிய பட்டியலை ஆளுனரிடம் பாட்டாளி மக்கள் கட்சி வழங்கியது. அவற்றில் இயற்கைவளக் கொள்ளை, மின்வாரிய ஊழல்கள் ஆகியவை குறித்த 7 ஊழல்களைப் பற்றி மட்டும் கடந்த அத்தியாயத்தில் விளக்கியிருந்தேன். மற்ற ஊழல்கள் குறித்த விவரம் வருமாறு:
இ. பிற ஊழல்கள்
குற்றச்சாற்று -8: கட்டுமான மற்றும் கட்டட அனுமதி வழங்குவதில் ஊழல்
அண்மையில் சென்னையை அடுத்த மவுலிவாக்கத்தில் 12 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் 61 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்தனர். இந்த விபத்துக்கு ஊழல்தான் காரணம் என்றும், இந்தக் கட்டடத்தைக் கட்டியவர் அப்போதைய முதலமைச்சருக்கு நெருக்கமாக இருந்த அமைச்சரின் பினாமி என்று கூறப்படுகிறது. சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம், சென்னை மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் கட்டட அனுமதி பெறுவதற்காக, பெருமளவில் கையூட்டு கொடுக்கவேண்டும் என்பது விதியாகிவிட்டது. சென்னையில் ஒரு வீடு கட்டுவதற்காக குறைந்தது ஒரு லட்சம் ரூபாய் கையூட்டு தர வேண்டியிருக்கிறது. அடுக்குமாடிக் கட்டடங்களை கட்டுவதற்கான அனுமதி பெறும்போது, ஒரு சதுர அடிக்கு 100 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை கையூட்டு பெறப்படுகிறது. இந்த வகையில் மட்டும் கடந்த 2011 ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை 36,000 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடைபெற்றிருப்பதாகக் கூறப்படுகிறது.
குற்றச்சாற்று-9: பொது விநியோகத்திற்கான பருப்பு கொள்முதல் செய்வதில் ஊழல்
தமிழ்நாடு அரசின் சிறப்பு பொது வினியோகத் திட்டத்தின் கீழ், நியாயவிலைக் கடைகள் மூலம் குடும்ப அட்டை தாரர்களுக்கு வினியோகிப்பதற்கான உளுந்தம் பருப்பு, துவரம் பருப்பு ஆகியவற்றைக் கொள்முதல் செய்வதிலும் பெருமளவில் முறைகேடுகள் நடைபெற்றிருக்கின்றன. அடுத்த ஓராண்டுக்கு தலா ஒரு லட்சம் டன் துவரம் பருப்பையும், உளுந்தம் பருப்பையும் வினியோகிப்பதற்கான ஒப்பந்தம் ராசி நியூட்ரி ஃபுட்ஸ் நிறுவனத்திற்கு வழங்க முடிவு செய்யப்பட்டு எந்த நேரத்திலும் ஆணை பிறப்பிக்கப்படும் நிலையில் உள்ளது. ராசி நியூட்ரி ஃபுட்ஸ் நிறுவனம் வழங்கும் ஒரு டன் உளுந்தம் பருப்புக்கு ரூ. 89 ஆயிரமும், ஒரு டன் துவரம் (மசூர்- Yellow Lentils) பருப்புக்கு ரூ. 75 ஆயிரமும் விலையாக தரப்படவிருக்கிறது. ஆனால், அரசு அதிக விலை கொடுத்து வாங்கவிருப்பதால் உளுத்தம் பருப்புக் கொள்முதலில் ரூ.350 கோடி, மசூர்பருப்பு கொள்முதலில் ரூ.380 கோடி என ஆண்டுக்கு மொத்தம் ரூ.730 கோடி இழப்பு ஏற்படும்.
குற்றச்சாற்று-10: முட்டை ஊழல்
தமிழ்நாட்டில் சத்துணவு திட்டத்திற்கான முட்டைகளை கொள்முதல் செய்வதிலும் பெருமளவில் முறைகேடுகள் நடப்பதாக குற்றச்சாற்றுகள் எழுந்துள்ளன. ஒரு முட்டை ரூ. 4.51 என்ற விலையில் ஓராண்டுக்கு முட்டைகளை வினியோகிப்பதற்கான ஒப்பந்தம் நாமக்கல்லைச் சேர்ந்த நேச்சுரல் ஃபுட் புராடக்ட்ஸ், திருச்செங்கோட்டைச் சேர்ந்த சுவர்ணபூமி எண்டர்பிரைச-ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இது நாமக்கல் பகுதியில் முட்டை கொள்முதல் செய்வதற்காக தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழுவால் நிர்ணயிக்கப்பட்டுள்ள ரூ.3.31 என்ற விலையைவிட, 1 ரூபாய் 20 பைசா அதிகமாகும். ஒரு மாதத்திற்கு 8.55 கோடி முட்டை கொள்முதல் செய்யப்படும் நிலையில், அதற்கு அதிக விலை கொடுப்பதால், மாதத்திற்கு ரூ.12.31 கோடி அரசுக்கு இழப்பு ஏற்படுகிறது.
குற்றச்சாற்று- 11: ஆவின் பால் ஊழல்
ஆட்சியாளர்களின் ஆதரவுடன் ஆவின் பாலிலும் கலப்படம் நடைபெற்றிருக்கிறது. விழுப்புரம் அருகே ஆவின் பாலை ஏற்றி வந்த லாரியிலிருந்து 2 ஆயிரம் லிட்டர் பாலை எடுத்துவிட்டு அதற்கு பதிலாக வேதிப்பொருட்கள் அடங்கிய தண்ணீரை கலந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அ.தி.மு.க. மாவட்ட நிர்வாகி வைத்தியநாதன் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த ஊழலில் முக்கியப்பங்கு வகித்த பால்வளத்துறை அமைச்சர் மாதவரம் மூர்த்தி பதவி நீக்கம் செய்யப் பட்டார். தமிழ்நாடு முழுவதும் 104 லாரிகளில் தலா 2 ஆயிரம் லிட்டர் வீதம் மொத்தம் ஒரு நாளைக்கு 2 லட்சம் லிட்டர் பால் கொள்ளையடிக்கப்பட்டு அதற்குப் பிறகு தண்ணீர் கலக்கப்படுகிறது. இதன்மூலம் ஆண்டுக்கு ரூ. 300 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றிருப்பதாக குற்றச்சாற்றுகள் எழுந்துள்ளன. ஆனால், ரூ. 2.89 லட்சம் அளவுக்கு மட்டுமே ஆவின் பால் ஊழல் நடைபெற்றிருப்பதாகக் கூறி இந்த ஊழலை மூடிமறைக்க தமிழக அரசு முயன்று வருகிறது.
குற்றச்சாற்று-12: ஒப்பந்தங்கள் ஊழல்
நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை, உள்ளாட்சித்துறை ஆகியவற்றின் சார்பில் மேற்கொள்ளப்படும் பணிகளை செய்வதற்கான ஒப்பந்தங்களை வழங்குவதற்கு அமைச்சர்கள் நிலையில் தொடங்கி கீழ்நிலை அதிகாரிகள் வரை அனைத்து மட்டங்களிலும் சதவீதக் கணக்கில் லஞ்சம் பெறப்படுகிறது. இந்த 3 துறைகளுக்கான ஒப்பந்தங்களை பெறுவதற்காக ஒவ்வொரு நிலையில் உள்ளவர்களுக்கும் ஒப்பந்த மதிப்பில் ஒரு குறிப்பிட்ட விழுக்காடு தொகை லஞ்சமாக வழங்க வேண்டும் என்பது எழுதப்படாத சட்டமாக உள்ளது.
குற்றச்சாற்று-13: போக்குவரத்துத் துறை பணியாளர்கள் நியமனத்தில் ஊழல்
தமிழ்நாட்டில் அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு 7500 ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களை தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த வேலையில் சேர விரும்புபவர்களிடம் தலா ரூ. 3 முதல் 4 லட்சம் வரை லஞ்சம் வாங்கப்படுகிறது. போக்குவரத்துக்கழக உதவி பொறியாளர் பணிக்கு ரூ.10 லட்சமும், இளநிலைப்பொறியாளர் பணிக்கு ரூ.6 லட்சமும் லஞ்சமாக வாங்கப்படுகிறது.போக்குவரத்துப் பணியாளர்கள் நியமனத்தில் மட்டும் ரூ.300 கோடி அளவுக்கு ஊழல் நடந்திருப்பதாக கூறப்படுகிறது.
குற்றச்சாற்று-14: கோகோ கோலா ஆலைக்கு அனுமதி ஊழல்
ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட் பகுதியில் கோகோ கோலா ஆலை அமைப்பதற்கு அனுமதி அளிப்பதில் பெருமளவு ஊழல் நடந்திருப்பதாகக் கூறப்படுகிறது. நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தொழில்துறை அமைச்சர் தங்கமணி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் ஆகியோர் சம்பந்தப்பட்டிருப்பதாகவும், இவர்களில் எடப்பாடி பழனிச்சாமி மூலமாக பல கோடி ரூபாய் லஞ்சமாக தரப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
குற்றச்சாற்று-15: கல்வித்துறை நியமனத்தில் ஊழல்
அ.தி.மு.க. ஆட்சியின் ஊழல்கள் கல்வித்துறையையும் விட்டு வைக்க வில்லை.பல்கலைக்கழக துணை வேந்தர் பதவிக்கு ரூ. 5 கோடி முதல் ரூ. 30 கோடி வரை லஞ்சம் பெறப்படுகிறது.பல்கலைக்கழக பேராசிரியர்கள், இ¬ணைப் பேராசிரியர்கள் நியமனத்தில் ரூ.25 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை கையூட்டு பெறப்படுகிறது. சென்னைப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியர்கள் நியமனத்தில் முறைகேடுகள் நடந்ததாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருக்கிறது. முறைகேடுகள் நடந்திருப்பதை அதிகாரிகள் குழு உறுதி செய்ததை அடுத்து பணி நியமனம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக பேராசிரியர்கள்/ இணைப்பேராசிரியர்கள் நியமனத்திலும் பெருமளவில் முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றச்சாற்றுகள் எழுந்துள்ளன.
பள்ளிக்கல்வித்துறையில் கடந்த ஓராண்டில் மட்டும் 10 ஆயிரம் ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு, அதற்காக ரூ.500 கோடி கையூட்டாக பெறப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. கையூட்டு பெற வேண்டும் என்பதற்காகவே பள்ளிக் கல்வித் துறையில் ஆசிரியர்கள் உள்ளிட்ட பணியாளர்களை வேண்டுமென்றே சம்பந்தமில்லாத ஊர்களுக்கு இடமாற்றம் செய்யும் உத்தியை அரசு கடைபிடித்து வருகிறது. தனியார் பள்ளிகளுக்கான அங்கீகாரத்தை புதுப்பிக்க ரூ. 75 ஆயிரமும், தனியார் பள்ளிகளுக்கு புதிதாக அங்கீகாரம் வழங்க ரூ.7.5 லட்சமும் லஞ்சமாக தர வேண்டியுள்ளது. சத்துணவு அமைப்பாளர்கள் பணிக்கு ஆட்களை நியமிக்க ரூ.2.5 லட்சம் கையூட்டாக பெறப்படுகிறது.
குற்றச்சாற்று-16: பசுமை வீடு கட்டும் திட்டத்தில் ஊழல்
தமிழ்நாட்டில் உள்ளாட்சி மற்றும் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் சூரிய ஒளி மின்சாரத் தயாரிப்புக் கட்டமைப்புடன் கூடிய பசுமை வீடுகளும், இந்திரா காந்தி வீட்டு வசதித் திட்டத்தின்படியான வீடுகளும் ஏழை மக்களுக்கு கட்டித் தரப்படுகின்றன. கடந்த 4 ஆண்டுகளில் 2.40 லட்சம் பசுமை வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன. இதற்காக பயனாளிகளிடமிருந்து ரூ.900 கோடி கையூட்டாக பெறப்பட்டிருக்கிறது. அதேபோல், இந்திராகாந்தி வீட்டு வசதித் திட்டத்தின் 4 லட்சம் பயனாளிகளிடம் ரூ.1,000 கோடி கையூட்டாக வசூலிக்கப்பட்டுள்ளது.
குற்றச்சாற்று-17: மது விற்பனையில் ஊழல்
தமிழக அரசு டாஸ்மாக் கடைகளின் மூலம் சில்லறையில் மது விற்பனை செய்வதே மிகப்பெரிய ஊழல் ஆகும். ஏனெனில், மது விற்பனை ஏழைகளின் வருமானத்தை கொள்ளையடிக்கிறது; தொழிலாளர்களின் உற்பத்தித் திறனை பாதிக்கிறது; குடும்பங்களைச் சீரழிக்கிறது; பெண்களுக்கு கொடுமைகள் இழைக்கப்படுவதற்கு காரணமாக இருக்கிறது. டாஸ்மாக் கடைகளுக்குத் தேவையான மது வகைகளில் பெரும்பாலானவை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் குடும்பத்தினருக்குச் சொந்தமான மது ஆலையிலிருந்து (மிடாஸ்) கொள்முதல் செய்யப்படுவது மிகப்பெரிய ஊழல் ஆகும். மதுவிற்பனை மூலம் இந்த ஆலை ஈட்டும் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான வருமானம் கருப்புப் பணமாக பதுக்கப்படுவதுடன், தீய நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது.
குற்றச்சாற்று-18: ஊழல் மற்றும் நிர்வாக சீர்கேட்டை ஊக்குவிக்கும் நிழல் அரசாங்கம்
தமிழ்நாடு அரசு ஜனநாயக பரவலாக்கல், நிர்வாகத்திறமை ஆகிய தத்துவங்களின் அடிப்படையில் நிர்வகிக்கப்பட வில்லை. மாறாக, அனைத்து அதிகாரங்களும் மக்கள் முதல்வர் என்றழைக்கப்படும் நிழல் அதிகார மையத்திடம் குவிக்கப்பட்டு, அதனடிப்படையில் அனைத்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு கட்டளைகள் பிறப்பிக்கப்படும் அவலம் நடைபெறுகிறது. இந்த நிழல் அரசுக்கு உதவ ஓய்வு பெற்ற அதிகாரிகள், வணிகக் கூட்டாளிகள் உள்ளிட்டோரைக் கொண்ட குழுவும் உள்ளது. இவர்கள் அனைவரும் ஜெயலலிதாவின் இல்லமான போயஸ் தோட்டத்திலிருந்து செயல்படுகிறார்கள். அனைத்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான ஊழல் இலக்குகளை இக்குழு தான் தீர்மானிக்கிறது. அமைச்சர்களின் செயல்பாடுகள் அவர்கள் வசூலித்துத் தரும் லஞ்சப் பணத்தின் அடிப்படையில் மதிப்பிடப்படுகின்றனவே தவிர, அவர்களின் பணித்திறன் அடிப்படையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் போக்கு தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
ஆளுனருக்கு கோரிக்கை
மேதகு ஆளுனர் அவர்களே!
இந்த புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள முறைகேடுகள் அனைத்தும் பொது ஊழியரால் இழைக்கப்பட்ட குற்றங்களுக்கு ஒப்பானவையாகும். பொது ஊழியர்களாக இருப்பவர்கள், பணப்பயன் அடையும் நோக்குடன் தங்களின் பதவியை பயன்படுத்தி செய்யும் குற்றங்களை இந்திய தண்டனைச் சட்டமும், 1988 ஆம் ஆண்டின் ஊழல் தடுப்புச் சட்டமும் தெளிவாக வரையரை செய்திருக்கின்றன.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 163(1) பிரிவின்படி ஒரு மாநிலத்தின் ஆளுனராக இருப்பவர் தமது அமைச்சரவையின் உதவி மற்றும் அறிவுரையின்படி ஏராளமான பணிகளையும், கடமைகளையும் செய்ய வேண்டும் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். ஆளுனருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை அவர் அமைச்சரவையின் மூலம் செயல்படுத்த வேண்டும் என்ற போதிலும், சில நேரங்களில் அவர் தமது அதிகாரத்தை அவரது விருப்பப்படி செயல்படுத்த முடியும். இத்தகைய அதிகாரத்தை ஆளுனருக்கு வழங்கும் அரசியலமைப்புச் சட்டப்பிரிவுகளில் 167(பி) முக்கியமானதாகும். அந்த சட்டத்தின்படி,‘‘ ஒரு மாநிலத்தின் ஆளுனர் கோரும்போது மாநில அரசு நிர்வாகம் சம்பந்தப்பட்ட தகவல்களையும், புதிய சட்டம் தொடர்பான திட்டங்களையும் ஆளுனரிடம் வழங்க வேண்டியது அம்மாநில முதலமைச்சரின் கடமை ஆகும்’’.
ஊழல் தடுப்புச் சட்டம்!
அதுமட்டுமின்றி, இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 163(1)-ன் முதல் பகுதியில் அமைச்சரவையின் பரிந்துரைப்படி தான் ஆளுனர் செயல்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருக்கும் போதிலும், அரசியலமைப்பு சட்டத்தில் ஆளுனர் தன்னிச்சையாக செயல்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ள சில விஷயங்களில் அவர் சுதந்திரமாக செயல்பட இந்த சட்டத்தின் பின்பகுதி அதிகாரம் அளிக்கிறது. அமைச்சரவையின் அறிவுரைப்படி செயல்படுவது சாத்தியமில்லாத விஷயங்களில் ஆளுனர் தமக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தை தன்னிச்சையாக பயன்படுத்த முடியும் . ஊழல் தடுப்புச் சட்டத்தின் 7, 11 ஆகிய பிரிவுகளின்படி அதிகாரத்தில் உள்ள பொது ஊழியர் ஒருவர் மற்றவர்களுக்கு சலுகை காட்டுவதற்காக பணப்பயன் அல்லது பரிசுகள் பெற்றால் அது ஊழலாக கருதப்படும்; இதற்காக அவர்களுக்கு 6 மாதம் முதல் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் வழங்கப்படலாம்.
மேதகு ஆளுனர் அவர்களே...!
மேற்குறிப்பிட்ட சட்ட விதிகளின்படி உங்களின் பரிசீலனைக்காக நாங்கள் இந்த மனுவை வழங்குகிறோம். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 167(பி) பிரிவின் கீழ் உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி மேற்கண்ட குற்றச்சாற்றுகள் குறித்து, பொதுநலனைக் காக்கும் நோக்குடன் தமிழக முதலமைச்சரிடமிருந்து விளக்க அறிக்கை கோருவீர்கள் என்று நம்புகிறோம். முதலமைச்சர் சார்பில் அளிக்கப்படும் விளக்கம் திருப்தியளிக்கும் வகையில் இல்லாவிட்டால், இதில் கூறப்பட்டுள்ள குற்றச்சாற்றுகளின் உண்மைத் தன்மை குறித்து விசாரிப்பதற்காக உச்சநீதிமன்ற/ உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் ஒன்றை அமைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
மனுவை பெற்றுக் கொண்ட ஆளுனர் அதன் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். ஆனால், ஆளுங்கட்சியின் அனைத்து ஊழல்களுக்கும் உடந்தையாக இருந்த அவர், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து பாட்டாளி மக்கள் கட்சி அளித்த புகார் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி தமிழக ஆளுனருக்கு ஆணையிட வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அதன் தலைவர் ஜி.கே.மணி வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் 30.04.2015 அன்று நீதியரசர் சத்தியராநாராயணா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அடுத்தக்கட்ட விசாரணை 09.06.2015 அன்று நடைபெறும் என்று நீதிபதி அறிவித்தார். ஆனால், இன்று வரை அந்த வழக்கு விசாரணைக்கு வரவில்லை.
No comments:
Post a Comment