கதை கேளு... கதை கேளு கழகத்தின் கதை கேளு!
எம்.ஜி.ஆருக்கு துரோகம் செய்த ஜெயலலிதா
-மருத்துவர். இராமதாஸ்
அதிமுகவில் படிப்படியாக ஜெயலலிதாவின் செல்வாக்கு அதிகரித்து வந்ததை அக்கட்சியின் மூத்த தலைவர்களே விரும்பவில்லை. ஜெயலலிதாவுக்கு தரப்படும் முக்கியத்துவத்தை எதிர்த்ததற்காக எஸ்.டி. சோமசுந்தரம் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நிலையில், அவர் தனிக்கட்ட்சித் தொடங்கி எம்.ஜி.ஆருக்கு எதிராக தீவிரப்பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இது எம்.ஜி.ஆருக்கு மிகவும் வருத்தத்தை தந்தது. ஜெயலலிதாவால் தான் பிரச்சினை ஏற்படுகிறது என்பதால் அவரை கொள்கைப்பரப்பு செயலாளர் பதவியில் இருந்து எம்.ஜி.ஆர் நீக்கினார். இதனால் எம்.ஜி.ஆரின் வருத்தமும், மன அழுத்தமும் மேலும் அதிகரித்தது.
இந்த வருத்தத்தில் இருக்கும் போதே 05.10.1984 அன்று இரவு திடீரென எம்.ஜி.ஆரின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. உடனடியாக அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட எம்.ஜி.ஆருக்கு சிறுநீரக பாதிப்பு உள்ளிட்ட பல நோய்கள் தாக்கியிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மிகவும் தாமதமாகவே செய்திகள் வெளியிடப்பட்டன. எம்.ஜி.ஆரின் உடல்நிலையை எண்ணி ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கண்ணீர் விட்டனர். தமிழகம் முழுவதும் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. அந்த நேரத்தில் 31.10.1984 அன்று தில்லியில் இந்திராகாந்தி சுட்டுக்கொல்லப் பட்டார். இந்த அதிர்ச்சியை எம்.ஜி.ஆரால் தாங்க முடியாது என்பதால் அதை எம்.ஜி.ஆரிடம் யாரும் கூறவில்லை.
அமெரிக்காவில் சிகிச்சை
மற்றொருபுறம் எம்.ஜி.ஆரின் உடல்நிலை மோசமடைந்ததால் அவர் அமெரிக்காவின் புரூக்ளின் நகரில் உள்ள டவுன்ஸ்டேட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்திரா படுகொலையைத் தொடர்ந்து பிரதமராக பதவியேற்ற ராஜிவ் காந்தி மக்களவைக்கு தேர்தல் நடத்த முடிவு செய்தார். தமிழக சட்டப்பேரவையின் பதவிக்காலம் முடிவடைய இன்னும் 6 மாதம் இருந்த நிலையில் முன்கூட்டியே தேர்தலை நடத்த முடிவு செய்தார். அமெரிக்காவில் சிகிச்சையில் இருந்த எம்.ஜி.ஆரின் ஒப்புதலைப் பெற்ற பொறுப்பு முதலமைச்சர் நாவலர் நெடுஞ்செழியன், மக்களவையுடன் சேர்த்து தமிழக சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடத்த முடிவு செய்தார்.
அத்தேர்தலில் அதிமுகவை இயக்கியது ஆர்.எம்.வீரப்பன் தான். ஜெயலலிதா பரப்புரை செய்யமாட்டார் என அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், தமது அரசியல் எதிர்காலத்தை பாதுகாப்பதற்காக ஜெயலலிதா தமிழகம் முழுவதும் தீவிர பரப்புரை மேற்கொண்டார். பிரச்சாரம் செய்ய எம்.ஜி.ஆர் இல்லாத குறையை போக்கும் வகையில், எம்.ஜி.ஆர்., அமெரிக்காவில் சிகிச்சையில் இருக்கும்போது அவர் நடப்பதையும், கைகாட்டுவதையும், சாப்பிடுவதையும் வீடியோ காட்சிகளாக்கி, அதை இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் மூலம் தொகுத்து வீடியோ பரப்புரை செய்தனர் அதிமுக தலைவர்கள். கூடவே படுகொலை செய்யப்பட்ட இந்திரா காந்தியின் இறுதி ஊர்வல காட்சிகளும் அந்த வீடியோவில் இணைக்கப்பட்டன. ராஜீவ்காந்தியையும் எம்.ஜி.ஆரையும் குறிக்கும் விதமாக தாயில்லா பிள்ளைக்கு ஒரு ஓட்டு, வாயில்லா பிள்ளைக்கு ஒரு ஓட்டு, சாவுக்கு ஒரு ஓட்டு, நோவுக்கு ஒரு ஓட்டு என்ற முழக்கங்கள் எங்கும் எதிரொலித்தன.
அனுதாப வெற்றி!
அதன்பயனாக அந்தத் தேர்தலில் அதிமுகவுக்கு அமோக வெற்றி கிடைத்தது.153 இடங்களில் போட்டியிட்ட அ.தி.மு.க.விற்கு 132 தொகுதிகள் கிடைத்தது. அதன் கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு 62 இடங்கள் கிடைத்தன. இந்த தேர்தலில் எம்.ஜி.ஆர். அமெரிக்காவிலிருந்தே ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட்டார். அவர் மருத்துவமனையில் படுத்துக் கொண்டே வெற்றி பெற்றார். மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ்- 25 தொகுதிகளிலும், அ.தி.மு.க-12 தொகுதிகளிலும் வெற்றிபெற்றிருந்தன.
அடுத்து அதிமுக ஆட்சி அமைக்க வேண்டும் என்ற நிலையில், முதலமைச்சராக பதவியேற்க வேண்டிய எம்.ஜி.ஆர் அமெரிக்காவில் இருந்தார். அவர் முழுமையாக குணமடைவாரா? என்பது தெரியாத நிலையில், ஜெயலலிதாவுக்கு முதலமைச்சர் பதவி மீது ஆசை வந்தது. அவரது ஆசைக்கு நடராஜன் & சசிகலா இணையரும் துணை நின்றனர். இதற்காக புதிய பிரதமராக பதவியேற்றிருந்த ராஜீவ் காந்தியின் உதவியை அவர்கள் நாடினார்கள்.
ஜெயலலிதா பதவி ஆசை
ராஜீவ் காந்தி- ஜெயலலிதா சந்திப்புக்கு பத்திரிகையாளர் சோலை ஏற்பாடு செய்தார். காந்தியவாதி நிர்மலா தேஷ்பாண்டே மூலம் ராஜிவ் காந்தியைச் சந்திக்க நேரம் கிடைத்தது. அதன்படி ராஜீவ்காந்தியை சந்தித்த ஜெயலலிதா, ‘‘எம்.ஜி.ஆர் திரும்புவாரா? என்பது சந்தேகம்தான். இந்த நேரத்தில் ஆர்.எம்.வீரப்பன் போன்ற சீனியர்கள், கட்சிக்குள் குழப்பதை ஏற்படுத்துகிறார்கள்; என்னை ஓரம்கட்டப் பார்க்கிறார்கள்; அதனால் எனக்கு நீங்கள் உதவ வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார். அதைக் கேட்டு சிரித்த ராஜிவ் காந்தி, “எம்.ஜி.ஆர் நலமுடன் இருக்கிறார். அவருக்கு எந்தப் பிரச்னையும் இப்போது இல்லை. இன்னும் 10 நாட்களில் இந்தியா திரும்பிவிடுவார். அதனால் கொஞ்சம் பொறுமையாக இருங்கள்” என்று சொல்லி ஜெயலலிதாவிடம் கூறினார்.
சர்ச்சைக் கடிதம்!
அதற்கு முன்பாகவே தம்மை முதலமைச்சராக்க வேண்டும் என்று அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்சேலம் கண்ணன் மூலமாக ராஜிவ் காந்திக்கு ஜெயலலிதா கடிதம் எழுதியிருந்தார். அதன் விவரம் வருமாறு:
"The root cause of everything that is happening here is that the C.M. is terribly jealous of my popularity. He cannot stomach the fact that I have become so popular. So he is doing everything possible to eliminate me from the political scene and from public life. MGR himself, who does not want to give me due importance, does not want to induct me into the Cabinet. No one here can really dare to oppose him for without him they are Zeros”
ஜெயலலிதா கடிதத்தின் தமிழாக்கம் வருமாறு:-
‘‘மிகுந்த செல்வாக்குடன் நான் (ஜெயலலிதா) பிரபலம் அடைந்திருப்பதை பார்த்து முதலமைச்சர் (எம்.ஜி.ஆர்) மிகவும் பொறாமைப்படுகிறார். இதுதான் இங்கு நடைபெறும் ஒவ்வொரு செயலுக்கும் மூல காரணம். நான் மிகவும் பிரபலம் அடைந்துள்ளதை அவரால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. எனவே, அரசியலில் இருந்தும், பொதுவாழ்வில் இருந்தும் என்னை ஒழித்துக் கட்ட தன்னால் முடிந்ததையெல்லாம் அவர் (எம்.ஜி.ஆர்) செய்து வருகிறார். எனக்கு உரிய முக்கியத்துவம் தர விரும்பாத எம்.ஜி.ஆர்., என்னை அமைச்சரவையில் சேர்க்கவும் விரும்பவில்லை. அவரை எதிர்க்க இங்கு யாருக்கும் தைரியமில்லை. ஏனென்றால் அவரில்லாவிட்டால் மற்றவர்கள் எல்லாம் பூஜ்யங்கள் என்று அந்தக் கடிதத்தில் ஜெயலலிதா கூறியிருந்தார்.
கடித முயற்சி தோல்வியடைந்த நிலையில், நேரில் சந்தித்த முயற்சியும் தோற்றதால் முதலமைச்சராக வேண்டும் என்ற அவரது கனவு தகர்ந்தது. எம்.ஜி.ஆரும் தமிழகம் திரும்பி முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
நெருக்கடி; அவமானம்
ஆனாலும், முதலமைச்சர் பதவியை நோக்கி அவரது காய் நகர்த்தல்கள் தொடர்ந்தன. அதிமுகவின் தனக்கென ஓர் அணியை உருவாக்கினார். எம்.ஜி.ஆரிடமும் அவரது செல்வாக்கு அதிகரித்தது. 06.09.1985 அன்று அதிமுகவின் கொள்கைபரப்பு செயலாளராக ஜெயலலிதா மீண்டும் நியமிக்கப்பட்டார். எம்.ஜி.ஆரைப் பொறுத்தவரை யாரையும் நம்ப மாட்டார். மற்றவர்கள் நம்மை கவிழ்த்து விடுவார்களோ? என்ற அச்சம் அவருக்கு எப்போதுமே உண்டு. அதனால் நிர்வாகிகளை இரு அணியாக பிரித்து, ஒரு கட்டத்தில் ஓர் அணியை உயர்த்துவதும், சிறிது காலம் கழித்து அந்த அணியை மட்டம் தட்டி எதிரணியை உயர்த்துவதும் அவரது விளையாட்டுக்களில் ஒன்று. இதை கோமாளித்தனம் என்றும் கூறலாம்.
1987-ஆம் ஆண்டில் எம்.ஜி.ஆரின் உடல்நிலை மீண்டும் மோசமடைந்தது. அந்த ஆண்டின் ஜூலை மாதத்தில் எம்.ஜி.ஆர் மீண்டும் அமெரிக்கா சென்றார். அப்போது தம்மை முதலமைச்சராக்க வேண்டும் என்று கோரி ராஜீவ் காந்திக்கு ஜெயலலிதா தொடர்ந்து கொடுத்த அழுத்தம் வெற்றி பெற்றது. எம்.ஜி.ஆர் அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பியதும் ஜெயலலிதாவுக்கு துணை முதலமமைச்சர் பதவி தர வேண்டும் என்று மத்திய அரசிடமிருந்து அழுத்தம் தரப்பட்டது. பல நேரங்களில் அவர் அவமானப்படுத்தப் பட்டார்.
No comments:
Post a Comment