Tuesday, 7 March 2017

உலக மகளிர் நாள் செய்தி! -மருத்துவர். இராமதாஸ் வாழ்த்து

உலக மகளிர் நாள் செய்தி!
      -மருத்துவர். இராமதாஸ்

ஆக்க சக்தியான மகளிருக்கு சமத்துவமும், சமஉரிமையும் வழங்க வலியுறுத்தி உலக மகளிர் நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் மகளிர் சமுதாயத்திற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மகளிர் நாள் நூற்றாண்டுகளைக் கடந்த வரலாறு கொண்டதாகும். 1789 ஆம் ஆண்டில் பிரெஞ்சுப் புரட்சியின்போது சமத்துவம், சுதந்திரத்துவம், வாக்குரிமை ஆகிய மூன்றையும் வலியுறுத்தி பாரிஸ் நகரில் பெண்கள் போராடத் தொடங்கியது தான் மகளிர் நாள் கொண்டாடப்படுவதற்கான தொடக்கம் ஆகும். அதன் பின் உலகம் முழுவதும் உள்ள மகளிர் தங்களின் கோரிக்கைக்காக குரல் கொடுத்த நிலையில் 1911 ஆம் ஆண்டில் தான் சர்வதேச மகளிர் நாளை ஐ.நா. அமைப்பு முறைப்படி அறிவித்தது.

இந்தியா உள்ளிட்ட உலகின் பல நாடுகளில் மகளிருக்கு வாக்குரிமை வழங்கப்பட்டுவிட்ட போதிலும்  சமத்துவம், சுதந்திரம் போன்றவை மகளிருக்கு தொடுவானமாகவே தோன்றுகின்றன. மற்றொரு பக்கம் தமிழகத்தில் மகளிருக்கு பாதுகாப்பற்ற நிலை காணப்படுகிறது. தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த தலைவரின் மரணத்தில் உள்ள மர்மமே, ஆட்சியாளர்களின் கூட்டு சதியால் திட்டமிட்டு மூடி மறைக்கப்படும் போது சாதாரணமான பெண்களின் பாதுகாப்பு குறித்து நினைக்கவே அச்சமாக உள்ளது.

சமூகச் சூழலை எடுத்துக் கொண்டால்,தமிழகத்தில், பெரும்பாலான அடித்தட்டு மற்றும் நடுத்தர குடும்பத்து பெண்களின் நிலை மிகவும் மோசமாக இருக்கிறது. இதற்கான அடிப்படைக் காரணம் மது தான். குடும்பங்களைச் சீரழிக்கும் மதுவை அரசே விற்பனை செய்து கொண்டு, அரசே மகளிர் நாளையும் கொண்டாடுவது முரண்பாடுகளின் உச்சமாகவே இருக்கும். உலகம் முழுவதும் உள்ள பெண்கள் தங்கள் உரிமைகளுக்காக போராடி வென்றதைப் போல தமிழகத்தில் முழு மதுவிலக்கை ஏற்படுத்த வேண்டும் என்ற பெண்களின் விருப்பத்தை நிறைவேற்ற பா.ம.க. கடுமையாக போராடும்.

பெண்களுக்கு அரசியல் அந்தஸ்து அளிப்பதற்காக சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றங்களில் 33% இட ஒதுக்கீடு வழங்குவதற்கான மசோதா 7 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட போதிலும் மக்களவையில் அதை நிறைவேற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை. அடுத்த ஆண்டு மகளிர் நாள் கொண்டாட்டங்களுக்கு முன்பாக இந்த மசோதாவை நிறைவேற்றி மகளிருக்கு அரசியல் அந்தஸ்து வழங்க இந்த நன்னாளில் அனைவரும் உறுதியேற்க வேண்டும்.

No comments:

Post a Comment