Monday, 6 March 2017

கதை கேளு... கதை கேளு கழகத்தின் கதை கேளு!ஆர்.எம்.வீயால் ஜெயலலிதா பெற்ற வாழ்வு -மருத்துவர். இராமதாஸ்

கதை கேளு... கதை கேளு கழகத்தின் கதை கேளு!

ஆர்.எம்.வீயால் ஜெயலலிதா பெற்ற வாழ்வு
         -மருத்துவர். இராமதாஸ்
சில உண்மைகளை அரிச்சந்திரனே வந்து சொன்னாலும் நம்புவதற்கு கடினமாக இருக்கும். அப்படிப்பட்ட  உண்மைகளில் ஒன்று தான் ஜெயலலிதாவின் அரசியல் வருகையும், அதற்கு யார்  காரணம் என்பதும் ஆகும். எம்.ஜி.ஆர் உயிருடன் இருந்த போது அதிமுகவில் தீவிரமாக செயல்பட்ட இரு அணிகளின் தலைவர்கள் யார்? என்று கேட்டால் ஆர்.எம்.வீரப்பனும், ஜெயலலிதாவும் தான் என்று குழந்தைகள் கூட தெளிவாகக் கூறிவிடும்.

அந்த அளவுக்கு இருவருக்குமான மோதல் பிரபலமானது. ஆனால், ஜெயலலிதா அரசியலுக்கு வருவதற்கு ஆர்.எம்.வீரப்பன் தான் முக்கிய காரணம் என்பது பெரும்பாலான மக்களுக்கு தெரியாது. ஆனால், அது தான் உண்மை.

அடிமைப்பெண் திரைப்படத்தில் ஜெயலலிதாவுக்கு எம்.ஜி.ஆர் கொடுத்த முக்கியத்துவத்தையும், அதன்பின்  எம்.ஜி.ஆர். திரைப்படங்களில் கதாநாயகி பாத்திரம் ஜெயலலிதாவுக்கே ஒதுக்கப்பட்டதையும் எம்.ஜி.ஆரின் குடும்பத்தினர் விரும்பவில்லை. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் பொறுப்பு எம்.ஜி.ஆரின் திரைப்பட நிறுவன நிர்வாக பொறுப்பாளராக இருந்தவரும், சத்யா மூவீஸ் உரிமையாளருமான ஆர்.எம்.வீரப்பனிடம் வழங்கப்பட்டது. அவரும் இதுதொடர்பாக எம்.ஜி.ஆரிடம் வெளிப்படையாகவே பேசினார்.

ஜெயலலிதாவை தடுத்த ஆர்.எம்.வீரப்பன்
‘‘உங்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் என்றைக்கும், எக்காரணத்தைக் கொண்டு நான் குறுக்கிடவில்லை. இப்போது வந்திருகிற விரும்பத்தகாத சூழ்நிலையில் ஜெயலலிதா அவர்களைப் படப்பிடிப்புக்காகத் தான் அழைத்துச் செல்கிறீர்கள் என்றே வாதிட்டாலும், சமீப காலமாக அதற்கு வேறு அர்த்தம் ஏற்படுகின்ற நிலை உருவாக்கப்பட்டிருக்கிறது’’ என்று எம்.ஜி.ஆரிடம் கூறியதாக ஆர்.எம்.வீரப்பன் பின்னாளில் பதிவு செய்திருக்கிறார்.

ஆர்.எம்.வீரப்பன் இவ்வாறு கூறியதற்கு முழுமையாக இல்லாவிட்டாலும், ஓரளவு பயன்கிடைத்தது. அது என்ன? என்பதையும் ஆர்.எம்.வீரப்பன் கீழ்க்கண்டவாறு விளக்குகிறார்.

‘‘ எம்.ஜி.ஆரிடம் நான் பேசிய பிறகு, ஜெயலலிதாவை ஜப்பானுக்கு ழைத்துச் செல்வதில்லை என்பது மட்டுமல்ல, உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் அவரை நடிக்க வைப்பதில்லை என்றும் எம்.ஜி.ஆர் முடிவெடுத்து விட்டார் என்று எனக்கு தெரியவந்தது. ஜப்பானின் ஒசாகா நகரில் எக்ஸ்போ&70 பொருட்காட்சியில்  நாங்கள் ஒருபக்கத்தில் பாடல் காட்சியை படமாக்கிக் கொண்டிருந்த போது, ஜெயலலிதா அங்கு வந்திருக்கிறார் என்ற செய்தி எனக்குக் கிடைத்தது. அவர் வந்தது உண்மை என்று தெரிந்தது. என்னைப் பொறுத்தவரை எம்.ஜிஆரிடம் வாதாடி அவரை உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் நடிக்காமல் தடுக்க மட்டுமே என்னால் முடிந்தது’’ என்று ஆர்.எம்.வீரப்பன் கூறினார். அதன்பின்னர் சில படங்களில் எம்.ஜி.ஆருடன் ஜெயலலிதா இணைந்து நடித்தாலும், ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையிலான உறவு முறிந்து விட்டது.

ஆர்.எம்.வீரப்பன் பாராட்டு

அப்படிப்பட்ட சூழலில் தான் 1980&ஆம் ஆண்டில் எம்.ஜி.ஆர் இரண்டாவது முறையாக ஆட்சியைப் பிடித்ததும், செய்தித்துறை அமைச்சராக பதவியேற்ற ஆர்.எம்.வீரப்பன் சென்னை இராணி சீதை அரங்கில் நடைபெற்ற பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் ஜெயலலிதாவும் கலந்து கொண்டிருந்தார். விழாவில் பேசிய ஆர்.எம்.வீரப்பன்,‘‘ சகோதரி ஜெயலலிதா சிறந்த நாட்டியக் கலைஞர். அவரைப்போன்றவர்கள் கூட இதை விட்டுவிடாமல் இக்கலையை வளர்ப்பதற்கு பாடுபட வேண்டும்’’ என்றும் கேட்டுக் கொண்டார்.

ஆர்.எம்.வீரப்பனின் இந்த பேச்சு பற்றிய விவரங்கள் எம்.ஜி.ஆரிடம் தெரிவிக்கப்பட்டன.அந்த நேரத்தில் 1981 ஆம் ஆண்டு ஜனவரி 4-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை மதுரையில் மூன்றாவது உலகத்தமிழ் மாநாடு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஜெயலலிதாவை வாழ்த்தி ஆர்.எம்.வீரப்பன் பேசியதை அறிந்து அவரை அழைத்த எம்.ஜி.ஆர்,‘‘ உலகத் தமிழ் மாநாட்டில்  ஜெயலலிதாவின் காவிரி தந்த கலைச்செல்வி நாட்டிய நாடகத்தை சேர்த்துக் கொள்ளுங்கள்’’ என்று ஆணையிட்டார். திமுகவிலிருந்து நீக்கப்படுவதற்கு முன் மதுரையில் நடைபெற்ற மாநாட்டில், ஜெயலலிதா நாடகம் நடத்த அனுமதிக்க வேண்டும் என்ற தமது கோரிக்கையை  கலைஞர் நிராகரித்து விட்டதால் காயமடைந்திருந்த எம்.ஜி.ஆர், தமது ஆட்சியில்  தமது கைகளாலேயே ஜெயலலிதாவுக்கு நாட்டிய நாடகம் நடத்தும் வாய்ப்பை வழங்கி மகிழ்ந்தார்.

அதிமுகவில் ஜெயலலிதா

மதுரை உலகத்தமிழ் மாநாட்டில் எம்.ஜி.ஆர் முன்னிலையில் ஜெயலலிதா நடத்திய ‘நாடகம்’ இருவருக்குமான இடைவெளியை குறைத்தது. அதன்பயனாக,1982 ஜூனில் அ.தி.மு.க.,வின் அடிப்படை உறுப்பினராக தன்னை இணைத்து கொண்டார் ஜெயலலிதா. பிறகு ஜூலையில் தான் கொண்டுவந்த சத்துணவு திட்டத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க ஒரு கவர்ச்சியான முகம் தேவைப்பட்டது எம்.ஜி.ஆருக்கு. அப்போது அவரின் நினைவிற்கு வந்தவர் ஜெயலலிதா. மேடைக்கு மேடை சத்துணவு திட்டத்தையே பேசி அத்திட்டத்திற்கு புகழ் சேர்த்ததோடு மட்டுமல்லாமல்  அந்த திட்டத்திற்கு நன்கொடையாக ரூபாய் 40,000 வழங்கினார் ஜெயலலிதா.

அதன்பின்னர் ஜெயலலிதாவுக்கு அரசியலிலும், அதிமுகவிலும் ஏறுமுகம் தான். சத்துணவு திட்ட உயர்மட்டக்குழுவில் ஜெயலலிதாவை உறுப்பினராக்கிய எம்.ஜி.ஆர். அதன்பின்1983-இல் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராக நியமித்தார். எம்.ஜி.ஆருக்கு இணையான சினிமாக் கவர்ச்சி ஜெயலலிதாவுக்கு இருந்ததால், தொண்டர்களும், லோக்கல் நிர்வாகிகளும். எம்.ஜி.ஆருக்கு அடுத்தபடியான மரியாதையை தொண்டர்கள் அவருக்கு வழங்கினர்.

ஜெயலலிதாவின்  பேச்சுத்திறமையையும், அபாரமான ஆங்கில, இந்தி புலமையையும் கவனித்த எம்.ஜி.ஆர். அவரை மாநிலங்களவை உறுப்பினராக்கினார். மேலும், மாநிலங்களவை அ.தி.மு.க., துணைத் தலைவராகவும் நியமித்தார். அங்கு இவர் பேசிய பேச்சுக்கள் பிரதமர் இந்திராவிடமும் பாராட்டை பெற்றது.

மூத்த தலைவர்கள் குமுறல்

மற்றொருபுறம், கட்சியில் எத்தனையோ மூத்த தலைவர்கள்  இருக்கும்போது ஜெயலலிதாவுக்கு  அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார் எம்.ஜி.ஆர். என்ற புகைச்சலும் கிளம்பியது. நேரடியாகவே எம்.ஜி.ஆரை குற்றம் சாட்டினார் வருவாய்துறை அமைச்சர் எஸ்.டி.சோமசுந்தரம். அதனால் கோபமுற்ற எம்.ஜி.ஆர்., எஸ்.டி.எஸ்.,வசமிருந்த முக்கியத்துறைகளை பறித்துக்கொண்டு உணவுத்துறையை கொடுத்து அவரது மதிப்பைக் குறைத்தார். அவரின் ஆதரவாளர்களின் பதவிகளும் பறிக்கப்பட்டது.

இதற்கெல்லாம் காரணம் ஜெயலலிதா தான் என்று நினைத்து கடுப்பான எஸ்.டி.எஸ்., கட்சியையும், ஆட்சியையும் குறை சொன்னார். இதனால் மேலும் கோபமான எம்.ஜி.ஆர்., எஸ்.டி.சோமசுந்தரத்தை அமைச்சரவையிலிருந்தும், கட்சியிலிருந்தும் நீக்கினார். இதைத்தொடர்ந்து நமது கழகம் என்ற பெயரில் தனிக்கட்சித் தொடங்கி 1984-ஆம் ஆண்டு தேர்தலில் எஸ்.டி. சோமசுந்தரம் போட்டியிட்டதும், அதில் படுதோல்வியடைந்து மீண்டும் அதிமுகவில் இணைந்ததும் வரலாறு. எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு ஜெயலலிதாவின் அடிமைப் போல மாறி, தமது வயதையும் பொருட்படுத்தாமல் ஜெயலலிதாவின் மகிழுந்தில்  பாதுகாவலரைப் போல தொங்கிக் கொண்டு சென்றது கேலி வரலாறு. ஒருகட்டத்தில் அதிமுகவிலிருந்து ஜெயலலிதால் நீக்கப்பட்ட எஸ்.டி.சோமசுந்தரம் மீண்டும் தீவிர அரசியலுக்கு வராமலேயே மறைந்தார்.

                                              

No comments:

Post a Comment