கதை கேளு... கதை கேளு கழகத்தின் கதை கேளு!
வன்னியர் எம்.ஜி.ஆருக்கு அந்நியர்!
-மருத்துவர். இராமதாஸ்
தமிழ்நாட்டில் வன்னியர் சமுதாயம் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்தது. ஏழைக்குடும்பத்தைச் சேர்ந்த நான் மிகக்கடுமையான போராட்டங்களுக்குப் பிறகு தான் மருத்துவர் ஆக முடிந்தது. பின்தங்கிய நிலையில் உள்ள சமுதாயங்களில் திறமையுள்ளவர்கள் பலர் இருந்தாலும், அவர்களால் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் உயர்சாதியினருடன் போட்டிப்போட முடியவில்லை. இதற்குக் காரணம் அவர்களுக்கு திறமை இல்லை என்பதில்லை... மாறாக வாய்ப்புகள் கிடைப்பதில்லை என்பது தான்.
உதாரணமாக கரிக்கட்டையும் கரி தான், வைரமும் கரி தான். தோண்டி எடுத்து பட்டைத் தீட்டப்படுவதற்கு வாய்ப்புள்ள இடங்களில் படிந்து கிடக்கும் கரிக்கட்டை வைரமாகிறது. அதற்கு வாய்ப்பில்லாத பகுதிகளில் படியும் கரிக்கட்டை கரியாகவோ, அல்லது தோண்டி எடுக்கப்படாமலோ போய்விடுகிறது. அப்படித்தான் வசதியான, படித்தவர்கள் நிறைந்த மேட்டுக்குடிகளிலோ பிறந்தவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் சாதிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கின்றன. ஏழைக் குடும்பங்களிலும், படிப்பறிவற்ற பின்தங்கிய நிலையில் உள்ள குடும்பங்களிலும் பிறந்தவர்களுக்கு அந்த வாய்ப்புக் கிடைப்பதில்லை.
இந்தக் குறைபாட்டை இயற்கையின் விதி என்று சொல்லி ஒதுக்கிவிட முடியாது. பின்தங்கிய நிலையில் உள்ளவர்கள் முன்னேற படிக்கட்டுகள் தேவை. அந்தப் படிக்கட்டுகள் தான் இடஒதுக்கீடு ஆகும். மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள வன்னியர்கள் உட்பட அனைத்து சாதியினருக்கும் அவர்களின் மக்கள் தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது தான் அப்போதும், இப்போதும், எப்போதும் எனது கொள்கையாக இருந்தது.
வன்னியர் சங்கம் உதயம்
முன்னேற முடியாத நிலையில் உள்ள இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் உதவ வேண்டும் என்ற நோக்கத்துடன், பணியிலுள்ள வன்னிய இளைஞர்களை ஒன்று திரட்டி, அவர்கள் மூலம் சமுதாயப் பணிகளை செய்து வந்தேன். அதன் தொடர்ச்சியாக வன்னிய மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்க வன்னிய அமைப்புகளை ஒருங்கிணைக்கலாம் என்ற யோசனை எழுந்ததால், 28 வன்னிய அமைப்புகளின் தலைவர்களை 20.07.1980 அன்று எனது இல்லத்திற்கு அழைத்து ஆலோசனை நடத்தினேன்.
அப்போது தான் அரசியல் சார்பற்ற வன்னியர் சங்கம் என்ற அமைப்பை ஏற்படுத்தலாம் என்று தீர்மானிக்கப் பட்டது. அதன்படி வன்னியர் சங்கம் என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. அதன் தலைமைப் பொறுப்பை நான் தான் ஏற்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்திய போதிலும், அதை நான் அன்புடன் மறுத்து விட்டேன். சங்கத்தின் நிறுவனர் என்ற ஒற்றைப் பெருமையே போதும் என்பது எனது எண்ணம்.
சமூக நீதி சார்ந்த கருத்துக்களைப் பரப்புவது, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுப்பது என எண்ணற்ற பணிகளை செய்து வந்தாலும், அவற்றை ஊடகங்கள் இருட்டடிப்பு செய்தன. இப்போது ஊடகங்கள் எப்படி நம்மை புறக்கணிக்கின்றனவோ, அதேபோல் தான் அப்போதும் செய்தன. இக்குறையை போக்கும் வகையில் 1984&ஆம் ஆண்டில் கனல் என்ற பெயரில் புதிய மாத இதழை தொடங்கினோம். அது ஓர் அறிவுக் களஞ்சியமாக இன்றளவும் திகழ்ந்து வருகிறது.
சமூக சகோதரத்துவ மாநாடுகள்
வன்னியர் சங்கம் என்ற பெயரில் தான் செயல்பட்டோம் என்றாலும் கூட சாதி வெறுப்பு என்பது எங்களிடம் இல்லை. அதுமட்டுமின்றி, அனைத்து சாதியினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்பது தான் எனது நிலைப்பாடாக இருந்தது. அதன்படி ஒடுக்கப்பட்ட நிலையில் உள்ள சமுதாயங்களை ஒருங்கிணைத்து சமூக சகோதரத்துவ மாநாடுகள் நடத்தப்பட்டன.
அதுமட்டுமின்றி, ஈரோடு கருங்கல்பாளையத்தில் 1980-ஆம் ஆண்டு நடைபெற்ற வன்னியர் சங்கத்தின் முதல் மாநாட்டில் ,‘‘அனைத்து சமுதாயத்தினருக்கும் அவரவர் மக்கள் தொகைக்கு ஏற்றவகையில் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். அந்த வகையில் வன்னியர்களுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் 2% இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் ’’ என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதேபோல், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அவர்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப 22% இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதையும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தேன்.
இட ஒதுக்கீட்டுக் கோரிக்கையை வலியுறுத்தி ஏராளமான மாநாடுகள், போராட்டங்கள், பொதுக்கூட்டங்கள் ஆகியவை நடத்தப்பட்ட போதிலும், அதுகுறித்து பேச்சு நடத்துவதற்கு கூட எம்.ஜி.ஆர் அரசு முன்வரவில்லை. இதைக் கண்டிக்கும் வகையில் 15.03.1984 அன்று சென்னை மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை அருகில் பட்டினிப் போராட்டம் எனது தலைமையில் நடத்தப்பட்டது. அதன்பிறகும் எம்.ஜி.ஆர் தலைமையிலான அரசுக்கு இட ஒதுக்கீட்டுக் கோரிக்கையின் நியாயம் புரியவில்லை. அதை விமர்சிக்கும் வகையில்,‘‘ மிகப்பெரும்பான்மை மக்களை மதிப்பதற்கு கூட ‘‘மாண்பு’’களுக்குத் தெரியவில்லையா? அலட்சியமா இல்லை ஆணவமா? பொறுமைக்கும் ஓர் எல்லையுண்டு; சாது மிரண்டால் காடு கொள்ளுமா?
எப்பேர்பட்ட கொம்பனாக இருந்தாலும் சரி, ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை வன்னியரிடம் ஓட்டுப் பிச்சைக் கேட்டு வந்து தான் தீர வேண்டும். இந்த வன்னியரை மதிக்காதவரை மிதிக்கின்ற நாள் வெகுதொலைவில் இல்லை என்பதை அரசியல்வாதிகளுக்கு நினைவூட்ட விரும்புகிறோம்’’ என்று கனல் இதழில் எழுதினேன்.
நாம் விஷக்கிருமிகளா?
அதன்பிறகு அரசு அசையாத நிலையில், 25.08.1985 அன்று சென்னையில் ஆகஸ்ட் பேரணி நடத்தப்பட்டது. ஆனாலும், மத்திய, மாநில அரசுகள் இந்த போராட்டங்களுக்கு மதிப்பளிக்கவில்லை. இதைக்கண்டிக்கும் வகையில் கனல் இதழில் எரிவதை இழுக்க எவ்வளவு நேரமாகும் என்ற தலைப்பில் தலையங்கம் எழுதினேன். அதில்,‘‘ வன்னியர் தம் பிரச்சினை குறித்து பரிசீலிக்க, அழைத்துப் பேச இதுவரை எவ்வித அக்கறையும் இரு அரசுகளுமே எடுத்துக்கொள்ளவில்லை. நாமென்ன விஷக்கிருமிகளா சந்திக்க மறுப்பதற்கு? இல்லை வேண்டாத ஜந்துக்களா ஒதுக்கித் தள்ளுவதற்கு?’’ என்று எம்.ஜி.ஆர் அரசின் மீதான குமுறலை வெளிப்படுத்தினேன்.
இட ஒதுக்கீட்டுக் கோரிக்கையை மீண்டும் வலியுறுத்துவதற்காக 06.05.1986 அன்று ஒருநாள் சாலை மறியல் போராட்டம் நடத்ததுவதென வன்னியர் சங்கப் பொதுக்குழுவில் தீர்மானிக்கப்பட்டது. அந்த போராட்டம் வெற்றிகரமாகவும், அமைதியாகவும் நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், அடுத்தக்கட்டமாக 19.12.1986 அன்று ஒரு நாள் தொடர்வண்டி மறியல் போராட்டமும் நடத்தி முடிக்கப்பட்டது. இந்த முயற்சிகளும் பயனளிக்காமல் போன நிலையில் தான் வேறு வழியின்றி, ஒரு வாரத்திற்கு அதாவது 1987ஆம் ஆண்டு செப்டம்பர் 17&ஆம் தேதி முதல் செப்டம்பர் 23&ஆம் தேதி வரை தொடர் சாலை மறியல் போராட்டம் நடத்துவதென முடிவு செய்யப்பட்டது. நெல்லை மாவட்டம் திருக்குற்றாலத்தில் 26.06.1987 அன்று நடைபெற்ற வன்னிய சங்கப் பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
எம்.ஜி.ஆரின் நடிகர் நலப்பணிகள்
இப்படி ஒரு போராட்டமே வேறு வழியில்லாமல் தான் நடத்தப்பட்டது. 1980-ஆம் ஆண்டு முதல் 1987-ஆம் ஆண்டு வரை முதலைமைச்சர் எம்.ஜி.ஆரை சந்திக்க தொடர் முயற்சிகள் மேற்கொண்டேன். ஆனால், அதனால் எந்த பயனும் ஏற்படவில்லை. ஆனால், அந்த நேரத்தில் ஒரு நடிகையின் கணவர் இறந்து விட்டதற்காக அண்டை மாநிலத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார். ஒரு நடிகரின் தாயாரின் மணி விழாவில் கலந்து கொண்டார். ஒரு நடிகரின் திருமண விழாவில் பங்கேற்கவும், ஒரு நடிகரின் சொந்தப் படத்தை தொடங்கி வைத்து வாழ்த்தவும், ஒரு நடிகையின் மகன் பூணூல் திருமணத்தில் பங்கேற்கவும், ஒரு நடிகரின் தங்கைகள் திருமணத்தில் பங்கேற்பதற்காக கோவை செல்லவும் எம்.ஜி.ஆருக்கு நேரம் இருந்தது. ஆனால், தமிழகத்தின் பெரும்பான்மை மக்களின் சமூக நீதிக் கோரிக்கையை காது கொடுத்து கேட்க நேரம் இல்லை. இந்தக் கொடுமையையெல்லாம் விளக்கும் வகையில் கனல் இதழில் கருத்துப்படம் வெளியிடப்பட்டது.
ஒருகட்டத்தில் பாட்டாளி மக்களின் கோரிக்கைகளை அரசின் காதுகளில் விழும் வகையில் சொல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் தான் தொடர் சாலை மறியல் போராட்டம் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது.இந்த போராட்டம் குறித்த முறையான அறிவிப்பு 04.07.1987 அன்று தமிழக அரசிடம் கொடுக்கப்பட்டது. காவல்துறை தலைவர் ஸ்ரீபாலிடம் 13.08.1987 அன்று இதுகுறித்து கடிதம் தரப்பட்டது. அப்போதைய பிரதமர் இராஜிவ் காந்திக்கு 18.08.1987, 04.09.1987 ஆகிய நாட்களிலும் இருமுறை கடிதங்கள் எழுதப் பட்டன. இந்த கடிதத்தின் நகல்கள் தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு முறைப்படி அனுப்பிவைக்கப் பட்டன. இந்த பணிகள் அனைத்தையும் வன்னியர் சங்கத் தலைவராக இருந்த சா.சுப்பிரமணியம் ஐ.ஏ.எஸ் அவர்கள் சிறப்பாக செய்தார்.
இவ்வாறு முறைப்படி செய்ய வேண்டிய அனைத்துப் பணிகளையும் செய்து முடித்துவிட்டு செப்டம்பர் 17-ஆம் தேதி அதிகாலை சரியாக 12.01 மணிக்கு தொடர்சாலை மறியல் போராட்டம் தொடங்கியது.
No comments:
Post a Comment