குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்கக் கோரி
தமிழகம் முழுவதும் பா.ம.க. போராட்டம்!
---அறிக்கை----
-மருத்துவர். இராமதாஸ்
தமிழ்நாடு ஏராளமான பிரச்சினைகளை எதிர்கொண்டு வரும் போதிலும், அவற்றில் தலையாயதானதாக குடிநீர் தட்டுப்பாடு உருவெடுத்திருக்கிறது. தமிழகம் முழுவதும் குடிநீர் பஞ்சத்தை தாங்க முடியாமல் மக்கள் தவித்து வரும் நிலையில், அதைப் போக்க அரசு நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது.
தமிழகத்தில் கடந்த 140 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பருவமழை பொய்த்திருக்கிறது. இதனால் தமிழகம் முழுவதும் வரலாறு காணாத வறட்சி ஏற்பட்டிருக்கிறது. தலைநகர் சென்னையில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதால், ஒரு குடம் தண்ணீர் ரூ.5 கொடுத்து வாங்க வேண்டிய அவல நிலை நிலவுகிறது. சென்னைக்கு குடிநீர் வழங்க 4 ஏரிகள், வீராணம் ஏரியிலிருந்து குழாய்ப் பாதை மூலம் தண்ணீர் வழங்க புதிய வீராணம் திட்டம், ஆந்திராவிலிருந்து தண்ணீர் கொண்டு வர கிருஷ்ணா நதி நீர் திட்டம் என பல திட்டங்கள் இருந்தாலும், வறட்சியால் அவை அனைத்தும் செயலிழந்து விட்ட நிலையில், கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை மட்டுமே நம்பியிருக்க வேண்டியிருக்கிறது.
இதுவரை இல்லாத கொடுமையாக கல்குவாரிகளில் தேங்கிக் கிடக்கும் அசுத்தமான நீரை பொதுமக்களின் குடிநீர் பயன்பாட்டுக்காக வினியோகிக்க முடியுமா? என்பது குறித்து குடிநீர் வாரியம் ஆலோசித்து வருகிறது. இப்படி ஒரு அவல நிலை சென்னையிலும், தமிழகத்திலும் இதுவரை ஏற்பட்டது கிடையாது.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் வீராணம் ஏரி முற்றிலுமாக வறண்டு விட்டது. சென்னையில் உள்ள 4 ஏரிகளில் மொத்தம் 11.057 டி.எம்.சி தண்ணீர் இருக்க வேண்டிய நிலையில், இன்று காலை நிலவரப்படி 1.600 டி.எம்.சி நீர் மட்டுமே உள்ளது. இதைக்கொண்டு அடுத்த ஒன்றரை மாதங்களுக்கு மட்டுமே தண்ணீர் வழங்க முடியும். ஆனால், தமிழக அரசோ இதைப்பற்றியெல்லாம் கவலைப்படவில்லை.
தமிழகத்தின் மற்ற பகுதிகளில் இதைவிட மோசமான நிலை காணப்படுகிறது. சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, அரியலூர், தஞ்சை, நாகை, திருவாரூர், கடலூர் ஆகிய 10 மாவட்டங்களின் குடிநீர்த் தேவையை மேட்டூர் அணைதான் நிறைவேற்றி வருகிறது. மேட்டூர் அணையை நம்பி 127 குடிநீர்த் திட்டங்கள் 10 மாவட்டங்களில் நடைமுறையில் உள்ளன. இக்குடிநீர்த் திட்டங்கள் மூலம் தினமும் 105கோடி லிட்டர் தண்ணீர் வழங்கப்படுகிறது. ஆனால், அணையின் நீர்மட்டம் 26 அடியாக குறைந்து விட்ட நிலையில், அடுத்த ஓரிரு வாரங்களுக்கு மட்டும் தான் மேட்டூர் அணையிலிருந்து தஞ்சை உள்ளிட்ட தமிழகத்தின் 10 மாவட்டங்களுக்கு தண்ணீர் வழங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஓகனேக்கலிலும் தண்ணீர் இல்லாததால் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கான ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. வாரத்திற்கு ஒரு நாள் தருமபுரி மாவட்டத்திலும், அடுத்த வாரத்தில் இன்னொரு நாள் கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் தண்ணீர் வழங்கப்படுகிறது. இதனால் இந்த மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு இரு வாரங்களுக்கு ஒரு முறை மட்டும் தான் தண்ணீர் கிடைக்கிறது. அதேபோல், வேலூர் மாவட்டத்திற்கான கூட்டுக் குடிநீர் திட்டமும் வறட்சியால் செயலிழந்து விட்டதால் அம்மாவட்ட மக்கள் குடிக்க தண்ணீரின்றி வாடும் அவலநிலை ஏற்பட்டிருக்கிறது.
தென்மாவட்டங்களின் நிலையும் மிகவும் மோசமாகவே உள்ளது. நிலத்தடி நீர்மட்டம் படுவேகமாக குறைந்து வருவதால் இனி வரும் நாட்களில் குடிநீருக்கு மக்கள் அல்லாடும் நிலை உருவாகும் ஆபத்து உள்ளது. ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான ஆட்சியில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க ரூ.1000 கோடி ஒதுக்கப்பட்டதாக கூறப்பட்டாலும் அதைக்கொண்டு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப் பட்டதாக தெரியவில்லை. எனவே, தமிழக அரசு உடனடியாக ரூ.2500 கோடியை ஒதுக்கி தமிழகத்தில் நிலவும் குடிநீர் பஞ்சத்தை போக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வரும் 14&ஆம் தேதி செவ்வாய்க் கிழமை தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் தொடர் முழக்கப் போராட்டம் நடத்தப்படவுள்ளது. கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர,பேரூர் மற்றும் கிளை நிர்வாகிகள் இந்த போராட்டங்களில் கலந்து கொள்வார்கள். பொதுமக்கள் மற்றும் மாணவர்களும் இப்போராட்டத்தில் பங்கேற்க அழைக்கிறேன்.
No comments:
Post a Comment