Wednesday, 1 March 2017

கதை கேளு... கதை கேளு கழகத்தின் கதை கேளு! வீண் பயம், வெற்றி, துரோகம்! -மருத்துவர். இராமதாஸ்

  கதை கேளு... கதை கேளு கழகத்தின் கதை கேளு!  

வீண் பயம், வெற்றி, துரோகம்! 
            -மருத்துவர். இராமதாஸ்    

நெருக்கடி நிலை பிரகடனம், தி.மு.க. ஆட்சிக் கலைப்பு, மிசா சட்டத்தில் திமுகவினர் கைது, திமுக அரசின் ஊழல்கள் குறித்து விசாரிக்க நீதிபதி சர்க்காரியா தலைமையில் விசாரணை ஆணையம் என திமுக அடுத்தடுத்து பின்னடைவுகளை சந்தித்தது. ஆனாலும், கலைஞர் கலங்கவில்லை... அல்லது கலக்கத்தை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை என்றும் வைத்துக் கொள்ளலாம்.

அதேநேரத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பிலிருந்து அகற்றப்பட்டதுடன் ஏராளமான நெருக்கடிக்கும் ஆளாக்கப் பட்ட பிறகு தான் கலைஞர் தரப்பிலிருந்து தமக்கு எந்த சிக்கலும் வராது என்ற நம்பிக்கை எம்.ஜி.ஆருக்கு ஏற்பட்டது. ஆனாலும் அவருக்கு முழுமையான துணிச்சல் வரவில்லை. இப்படி ஒரு எண்ணம் எனக்கு ஏற்பட்டதற்கு ஓர் உதாரணத்தைக் கூறுகிறேன்.

கட்சி பெயர் மாற்றிய எம்.ஜி.ஆர்

1972-ஆம் ஆண்டு திமுகவிலிருந்து நீக்கப்பட்ட நான்காவது நாளில் எம்.ஜி.ஆர் தொடங்கிய கட்சியின் பெயர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், அதாவது அதிமுக. 1975&ஆம் ஆண்டு நெருக்கடி நிலை பிறப்பிக்கப்பட்டு, அடுத்த ஆண்டில் திமுக ஆட்சி கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து மாநிலக் கட்சிகளை தடை செய்ய இந்திரா காந்தி திட்டமிட்டிருக்கிறார் என்று வதந்தி பரவியது. அடிமேல் அடி வாங்கிய கலைஞர் அதை நினைத்துக் கவலைப்படவில்லை. தமது கட்சி திமுக என்ற பெயரில் மாநிலக் கட்சியாகவே நீடிக்கும் என்று அறிவித்து விட்டார்.

ஆனால், எம்.ஜி.ஆரால் அப்படி இருக்க முடியவில்லை. நெருக்கடி நிலையையே நடைமுறைப்படுத்திய இந்திரா காந்தி எதையும் செய்யத் தயங்க மாட்டார் என்று அஞ்சினார். தமது கட்சி தடை செய்யப்படக் கூடாது என்று அவர் கருதினார். இரவோடு இரவாக அதிமுக என்ற பெயரை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அ.இ.அ.தி.மு.க.) என்று மாற்றி விட்டார்.

பச்சை குத்திக் கொண்ட அதிமுகவினர்

அதன்பிறகும் கூட எம்.ஜி.ஆருக்கு அரசியலில் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்படவில்லை. நம்மை தூண்டி விட்டு கட்சி தொடங்க வைத்த தொண்டர்கள் அனைவரும் கடைசி வரை நம்முடன் இருப்பார்களா? என்ற சந்தேகம் அவருக்கு எழுந்தது. அதை தீர்த்துக் கொள்ள ஒரு திட்டத்தை அவர் அறிவித்தார். அது தான் அதிமுகவின் கொடியை தொண்டர்கள் அனைவரும் கையில் பச்சைக் குத்திக் கொள்ளும் திட்டம்.

இதற்கான அறிவிப்பு அதிமுகவின் ‘தென்னகம்’ நாளிதழில் அந்த அறிவிப்பு வெளியானது. ‘‘எனது ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புக்கள் அண்ணா உருவம் பொறித்த நமது கட்சியின் கொடியை பச்சை குத்திக் கொள்ள வேண்டும்’’ என்று  அந்த அறிவிப்பில் எம்.ஜி.ஆர் கூறியிருந்தார். அத்துடன் அவர் நிற்கவில்லை. 1976-ஆம் ஆண்டு செப்டம்பர் 15-ஆம் தேதி பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி அவரே முதல் ஆளாக தமது கையில் அதிமுக கொடியை பச்சைக் குத்திக் கொண்டார்.

எம்.ஜி.ஆரின் இந்த முடிவும், செயலும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. கட்சியில் எம்.ஜி.ஆருக்கு அனைத்துமாக இருந்த இராம.வீரப்பன், கோவை செழியன், விருதுநகர் சீனிவாசன் உள்ளிட்டோர் இதைக் கடுமையாக எதிர்த்தனர். அவர்களை சமாதானப்படுத்த நினைத்த எம்.ஜி.ஆர்,‘‘ஒருவரை ஒருவர் முன்பின் தெரியாவிட்டாலும், கட்சிக் கொடியை பச்சை குத்திக் கொள்வதன் மூலம் அதைப் பார்த்ததும் ‘இவர் நம்ம ஆள்’ என்று அடையாளம் கண்டுகொண்டு கட்சியினரிடையே ஒற்றுமை மனப்பான்மை ஏற்படும், ஒருங்கிணைந்து செயல்பட உதவும்’’ என்பதற்காகத் தான் இப்படி ஒரு திட்டத்தை அறிவித்தேன். விருப்பம் உள்ளவர்கள் இதை செய்யலாம்... இல்லாதவர்கள் விட்டுவிடலாம் என்று அறிவித்து சர்ச்சைக்கு முடிவு கட்டினார் எம்.ஜி.ஆர். ஆனாலும், லட்சக்கணக்கான தொண்டர்களும், ஆயிரக்கணக்கான நிர்வாகிகளும் எம்.ஜி.ஆரின் வேண்டுகோளை ஏற்று கட்சிக் கொடியை பச்சைக் குத்திக் கொண்டனர். இப்போதும் கூட அதிமுகவின் மூத்த  உறுப்பினர்கள் பலரும் கட்சிக் கொடியை பச்சைக் குத்தியிருப்பதை பார்க்க முடியும்.

மக்களவைத் தேர்தல்

இது ஒருபுறமிருக்க, மறுபுறம் நெருக்கடி நிலையை பயன்படுத்தி தமக்கு எதிரான வழக்குகள் அனைத்தையும் இந்திரா வெற்றி கொண்டார். நெருக்கடி நிலை காலத்தில் அரசு இயந்திரம் மிகவும் சிறப்பாக செயல்பட்டது. ஊழல் என்பது பெயரளவில் கூட கிடையாது. அரசு அலுவலகங்களில் பணிகள் மிகவும் சிறப்பாக நடைபெற்றன. இதற்காக இந்திரா காந்தியை மக்கள் பாராட்டினார்கள். இதைத் தவறாக புரிந்து கொண்ட காங்கிரஸ் தலைவர்கள் பலரும் இந்திராவின் செல்வாக்கு பெருகிவிட்டதாகவும், இப்போது தேர்தல் நடத்தினால் அமோக வெற்றி பெறலாம் என்றும் அவரிடமே கூறினார்கள். அதை நம்பிய இந்திரா காந்தியும் 1977 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மக்களவைத் தேர்தல் நடைபெறும் என்று அறிவித்தார்.

1977-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 16 ஆம் தேதி தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் நடைபெற்றது.1975-ஆம் ஆண்டு  காந்தி பிறந்தநாளில் காமராஜர் இறந்த பிறகு தலைமை இல்லாமல் தடுமாறிய ஸ்தாபன காங்கிரஸ் கட்சி 1976-அம் ஆண்டு பிப்ரவரி 15-ஆம் தேதி தாய்க்கழகத்துடன் இணைந்தது. மூப்பனார், கண்ணதாசன், ப.சிதம்பரம், சிவாஜி கணேசன் ஆகியோர் இந்திரா காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.  இந்திராவின் இளைய மகன் சஞ்சய் காந்தி நடத்திய அட்டகாசங்களால் நாடு முழுவதும் இந்திராவுக்கு எதிரான அலை வீசியது. நெருக்கடி காலத்தின் போது நிர்வாகம் சிறப்பாக நடந்ததற்காக இந்திராவை வாழ்த்தியவர்கள் கூட, சஞ்சய் காந்தியின் கட்டாயக் குடும்பக் கட்டுப்பாடு திட்டம் உள்ளிட்ட கொடுமைகளுக்காக காங்கிரசை கடுமையாக விமர்சித்தனர். ஆனால், இவை அனைத்தும் வட மாநிலங்களில் தான். தமிழ்நாட்டில், திரைப்பட நடிகரான எம்.ஜி.ஆரை தங்களை வாழவைக்கும் தெய்வமாக  மக்கள் கருதியதால் அந்த மாயைத் தாண்டி, இந்திரா மீதான வெறுப்பு தமிழகத்திற்குள் நுழையவில்லை.

அதிமுக அமோக வெற்றி

அதுமட்டுமின்றி, கலைஞர் மீதான எதிர்ப்பு மக்கள் மனதிலிருந்து விலகவில்லை. அவரது ஆட்சி கலைக்கப்பட்டது, அவரது மகன் ஸ்டாலின் உள்ளிட்ட கட்சியினர் மிசாவில் கைது செய்யப்பட்டு கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது போன்ற எதுவுமே அவர் மீது அனுதாபத்தை ஏற்படுத்தவில்லை. அப்படியானால் அவருக்கு எதிரான எதிர்ப்பின் வலிமையை தெரிந்து கொள்ளுங்கள்.

எம்.ஜி.ஆர் என்ற ஒற்றை சினிமாக் கவர்ச்சி போதாது என்று சிவாஜிகணேசனும் எம்.ஜி.ஆருடன் இணைந்து பிரச்சாரம் மேற்கொண்டார். தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள மொத்தமுள்ள 40 இடங்களில் அதிமுக 21 இடங்களிலும், காங்கிரஸ் 15 இடங்களிலும் போட்டியிட்டன. இந்திய கம்யூனிஸ்ட் 3 இடங்களில் களமிறங்கியது. இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ஓரிடம் ஒதுக்கப்பட்டது. மார்ச் 16ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் மார்ச் 20-ஆம் தேதி எண்ணப்பட்டன. அன்று மாலை முதல் முடிவுகள் வெளிவரத் தொடங்கின.

தமிழகத்தில் மொத்தமுள்ள 39 இடங்களில் அதிமுக அணி 34 இடங்களை பிடித்தது. அந்த அணியில் அதிமுக 17, காங்கிரஸ் 14, இந்திய கம்யூனிஸ்ட் 3 இடங்களைப் பிடித்தன. திமுக அணி 5 இடங்களை வென்றது. திமுக 3 இடங்களிலும், ஸ்தாபன காங்கிரசின் ஒரு பகுதியாக இருந்து ஜனதாவில் இணைந்த பா.இராமச்சந்திரன் அணியினர் 3 இடங்களிலும் வென்றனர். அதிமுகவின் தில்லி முகமாக இருந்த நாஞ்சில் மனோகரன் வடசென்னை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

திமுக சார்பில் அதன் முன்னணி தலைவர்களான முரசொலி மாறன், இரா. செழியன், க.இராஜாராம், ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், எல்.கணேசன்,  பி.டி.ஆர் பழனிவேல் இராஜன் ஆகியோரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் பி.இராமமூர்த்தியும் தோல்வியடைந்தனர்.

திமுகவிலிருந்து வெளியேறிய தலைவர்கள்

தமிழகத்தில் இந்திரா காங்கிரஸ் வெற்றி பெற்றாலும் கூட மற்ற மாநிலங்களில் படுதோல்வி அடைந்தது. உத்தர பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட்ட இந்திரா காந்தி படுதோல்வி அடைந்தார். மாறாக வட இந்தியாவில் ஜனதாக் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. இந்திய வரலாற்றில் முதன்முறையாக காங்கிரஸ் அல்லாத அரசை மொரார்ஜி தேசாய் அமைத்தார்.
மக்களவைத் தேர்தலில் எம்.ஜி.ஆர் வெற்றி பெற்றதால் இனி அவருக்கு தான் வெற்றி நிரந்தரம் என்றும், கலைஞருக்கு இனி தோல்வியே தொடரும் என்றும் நினைத்தனர் திமுக தலைவர்கள். அதுவரை எம்.ஜி.ஆரை திட்டி, திமுகவில் பதவி சுகத்தை அனுபவித்தவர்கள் நீர் உள்ள குளத்தை தேடிச் செல்வதைப் போல திமுகவிலிருந்து வெளியேறி அதிமுகவில் ஐக்கியமானார்கள். தமக்கு கிடைக்க வேண்டிய முதல்வர் பதவியை கலைஞருக்கு பெற்றுத் தந்தார் என்ற ஒற்றை காரணத்திற்காக திமுகவிலிருந்து எம்.ஜி.ஆரை தூக்கி எறிந்த நாவலர் நெடுஞ்செழியன் திமுகவிலிருந்து விலகி விட்டார். ஆனாலும் அவருக்கு அதிமுகவில் சேர சற்று கூச்சம்.  எந்த முகத்தை வைத்துக் கொண்டு எம்.ஜி.ஆர் முகத்தில் விழிப்பது என்று. அதனால் இடைக்கால ஏற்பாடாக மக்கள் திமுக என்ற அமைப்பை உருவாக்கி நடத்தினார்.

இந்திராகாங்கிரசுக்கு
எம்.ஜி.ஆர் துரோகம்!

1977-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 10ஆம் தேதி தமிழக சட்டப்பேரவைக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. மக்களவைத் தேர்தல் கூட்டணியே சட்டப்பேரவைத் தேர்தலிலும் தொடர வேண்டும் என்று பலரும் விரும்பினர். ஆனால், எம்.ஜி.ஆரின் கணக்கு வேறாக இருந்தது. மத்தியில் மொரார்ஜி தேசாய் தலைமையில்  ஜனதா ஆட்சி நடக்கும் போது, இந்திரா காந்தியுடன் கூட்டணி அமைத்தால் தாம் பழிவாங்கப்படுவோமோ? என்று அஞ்சினார். அதனால், தமக்கு முதல் பொதுத்தேர்தல் வெற்றியை வழங்கிய இந்திரா காங்கிரசுக்கு துரோகம் செய்துவிட்டு புதிய கூட்டணி அமைத்தார். காங்கிரசை எம்.ஜி.ஆர் கழற்றி விட்டதால் அதிர்ச்சி அடைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் அதிமுக அணியியிலிருந்து விலகி காங்கிரஸ் அணியில் இணைந்தது. திமுக கூட்டணியில் இருந்து படுதோல்வி அடைந்த மார்க்சிஸ்ட் கட்சி அதிமுக அணியில் இணைந்தது. திமுக அணியில் இருந்த ஜனதா தனி அணியாக போட்டியிட்டது. இவ்வாறாக அதிமுக, திமுக, காங்கிரஸ், ஜனதா என மொத்தம் 4 அணிகள் 1977 தேர்தலில் களமிறங்கின. தேர்தல் களத்தில் சூடு பறந்தது. இறுதி வெற்றி யாருக்கு?
அடுத்து எம்.ஜி.ஆர் முதலமைச்சர்...

No comments:

Post a Comment