தமிழ்நாடு - ஆந்திர எல்லையில் புல்லூரில் பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணையின் உயரத்தை 5 அடியிலிருந்து 12 அடியாக அதிகரிக்கும் பணியை ஆந்திர அரசு மேற்கொண்டிருப்பதால் அப்பகுதியில் உழவர் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. அடுத்தகட்டமாக பாலாற்றின் குறுக்கே உள்ள மேலும் 5 தடுப்பணைகளின் உயரத்தை அதிகரிப்பதுடன் பாலாற்றின் துணை நதியான திப்ரே ஆற்றில் 6 புதிய தடுப்பணைகளையும் கட்ட ஆயத்தமாகி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகத்தில் உருவாகும் பாலாறு ஆந்திரா வழியாக தமிழ்நாட்டில் பாய்கிறது. ஆந்திரத்தில் மொத்தம் 33 கி.மீ. தொலைவுக்கு மட்டுமே பாயும் பாலாற்றின் குறுக்கே மொத்தம் 22 தடுப்பணைகளை அம்மாநில அரசு கட்டியிருக்கிறது. அவற்றில் கடைசி அணையான புல்லூர் தடுப்பணையின் உயரத்தை அதிகரிக்கும் பணியை பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் தான் முதலில் அம்பலப்படுத்தி, அப்பணியை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். ஆனால், மத்திய, மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் கட்டுமானப் பணிகள் எவ்வித தடையுமின்றி நடைபெற்று வருகின்றன. அடுத்த சில நாட்களில் அணையின் உயரம் 12 அடியாக உயர்த்தப்பட்டுவிடும்.
அடுத்தகட்டமாக, பாலாற்றின் குறுக்கே உள்ள மேலும் 5 தடுப்பணைகளின் உயரத்தை அதிகரிக்கும் பணிகளையும் ஆந்திர அரசு மேற்கொண்டிருக்கிறது. கங்குந்தி என்ற இடத்தில் பாலாற்றின் தடுப்பணை உயரம் 21 அடியாகவும், கிடிமானிபெண்டா என்ற இடத்திலுள்ள தடுப்பணையின் உயரம் 25 அடியாகவும், உயர்த்தப்பட்டிருக்கின்றன. இந்த பணிகள் முடிவடைந்து விட்ட நிலையில், அடுத்தக்கட்டமாக பாலாறு கிராமத்தில் உள்ள தடுப்பணையின் உயரத்தை 15 அடியாக உயர்த்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. தொடர்ந்து போகல்ரே என்ற இடத்தில் உள்ள தடுப்பணையின் உயரத்தை 8 அடியிலிருந்து 30 அடியாகவும், கணேசபுரம் பகுதியில் ஏற்கனவே கட்டப்பட்டுள்ள தடுப்பணையின் உயரத்தை 15 அடியாகவும் உயர்த்த தீர்மானிக்கப்பட்டு ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்குத் தேவையான கட்டுமானப் பொருட்கள் அங்கு கொண்டு செல்லப்பட்டு குவித்து வைக்கப்பட்டிருக்கின்றன.
பாலாற்று தடுப்பணைகளின் உயரத்தை உயர்த்துவது ஒருபுறமிருக்க பாலாற்றின் துணைநதியான திப்ரே ஆற்றில் 6 இடங்களிலும், காட்டாற்றின் குறுக்கே ஓரிடத்திலும் புதிய தடுப்பணைகளை கட்டவும் ஆந்திர அரசு திட்டமிட்டுள்ளது. மொத்தம் 20 கி.மீ. நீளம் கொண்ட திப்ரே ஆற்றின் குறுக்கே முறையே 21 அடி, 18 அடி, 10 அடி, 7 அடி, 6 அடி உயரத்தில் 5 தடுப்பணைகள் 3 கி.மீ.க்கு ஒன்று வீதம் 12 கிலோமீட்டர் இடைவெளியில் கட்டப்படவுள்ளன. இவற்றுக்கு அடுத்தபடியாக நாயனூர் என்ற இடத்தில் திப்ரே ஆற்றில் 21 அடி உயரத்தில் ஆறாவது தடுப்பணை கட்டப்படவுள்ளது.
இவை தவிர பெத்தவெங்கா என்ற இடத்தில் பாலாற்றின் துணை ஆறான காட்டாற்றின் குறுக்கே ரூ. 5 கோடியில் மிகப்பெரிய தடுப்பணை கட்டப்படவிருக்கிறது. இவற்றுக்கான ஆயத்த பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. விரைவில் கட்டுமானப் பணிகள் தொடங்கும் என்று இத்திட்ட ஒப்பந்ததாரர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
ஆந்திர அரசு திட்டமிட்டவாறு இந்த பணிகள் அனைத்தும் முடிவடைந்தால் பாலாற்றில் தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட வருவதற்கு வாய்ப்பில்லை. பாலாற்று நீரை நம்பி தமிழகத்தில் 4.20 லட்சம் ஏக்கர் நிலங்களில் விவசாயம் நடைபெற்று வருகிறது.
ஆந்திரத்தில் பாலாற்றின் குறுக்கே ஏற்கனவே தடுப்பணைகள் கட்டப்பட்டதால் தமிழகத்தில் பாலாற்றை நம்பி விவசாயம் செய்யப்படும் நிலத்தின் பரப்பு குறைந்து விட்டது. ஆந்திர அரசு மேற்கொண்டுள்ள புதிய பணிகளும் நிறைவடைந்தால் பாலாற்றை நம்பி ஒரு ஏக்கரில் கூட விவசாயம் செய்ய முடியாத நிலை உருவாகிவிடும். இதனால் காஞ்சிபுரம், வேலூர் மாவட்டங்களில் உள்ள லட்சக்கணக்கான குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்து விடும். அதுமட்டுமின்றி, வேலூர், காஞ்சி, திருவண்ணாமலை, திருவள்ளூர், சென்னை ஆகிய மாவட்டங்களுக்கு குடிநீரும் கிடைக்காது என்பதால் கோடிக்கணக்கான தமிழக மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.
பாலாற்று நீரை பயன்படுத்துவது குறித்து அப்போதைய சென்னை மாகாணத்திற்கும், மைசூர் இராஜதானிக்கும் இடையே 1892 ஆம் ஆண்டு கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தில் கடைமடை பாசன மாநிலத்தின் ஒப்புதல் இல்லாமல் புதிய அணைகளை கட்டக்கூடாது என்று தெளிவாக கூறப்பட்டிருக்கிறது. அதற்கு மாறாக ஆந்திர அரசு புதிய தடுப்பணைகளை கட்டுவதும், ஏற்கனவே கட்டப்பட்ட அணைகளின் உயரத்தை அதிகரிப்பதும் சட்டவிரோதமாகும். அதுமட்டுமின்றி, வனப்பகுதியில் புதிய அணைகளை கட்ட மத்திய வனத்துறை அனுமதியையும் ஆந்திர அரசு பெறவில்லை.
புல்லூர் தடுப்பணையின் உயரம் அதிகரிக்கப்படுவதற்கு கண்டனம் தெரிவித்த கடந்த ஜூன் 30 ஆம் தேதி மருத்துவர் அய்யா அவர்கள் அறிக்கை வெளியிட்ட பின்னர், இதுதொடர்பாக ஆந்திர முதல்வருக்கு கடிதம் எழுதியதுடன் தனது பணி முடிந்ததாகக் கருதி முதலமைச்சர் ஜெயலலிதா ஒதுங்கிக் கொண்டார். அதன் விளைவு தான் புல்லூர் அணையின் உயரத்தை அதிகரிக்கும் பணியை ஆந்திரம் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
பாலாற்றில் 5 தடுப்பணைகளின் உயரத்தை அதிகரிக்கும் பணியும், துணை நதிகளில் 7 புதிய தடுப்பணைகளை கட்டும் பணியும் முடிவடைந்தால் பாலாறு பாலைவனமாகவே மாறி விடும்.
எனவே, இனியும் உறங்காமல் இந்த பணிகளை தடுத்து நிறுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இது மாநிலங்களிடையே பாயும் ஆறு (Inter State River ) என்பதால் இந்த விஷயத்தில் பிரதமர் மோடி தலையிட்டு, பாலாறு மற்றும் அதன் துணை ஆறுகளில் கட்டுமானப் பணிகளை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். இதை செய்ய மத்திய, மாநில அரசுகள் தவறினால், விவசாயிகளில் நலனை பாதுகாக்க எந்த எல்லைக்கும் சென்று தடுப்பணை பணிகளை பா.ம.க. முறியடிக்கும் என எச்சரிக்கிறேன்மருத்துவர் அன்புமணி இராமதாஸ்
No comments:
Post a Comment