Monday, 11 July 2016

2வது அணு உலையில் துவங்கியது மின் உற்பத்தி

முதலாவது அணு உலையில் மின் உற்பத்தி துவங்கியதில் இருந்து எட்டு மாதங்களில், இரண்டாவது உலையிலும் மின் உற்பத்தி துவங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
இருப்பினும், முதல் உலையில் ஏற்பட்ட
பழுதுகள், சோதனைக்கான நிறுத்தங்கள், 2வது உலையில் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளப்பட்டது. மேலும் முதல் உலையில் டர்பைன் உள்ளிட்ட பாகங்களில் பழுது ஏற்பட்ட போது, 2வது அணு உலையில் இருந்து பாகங்கள் பிரித்தெடுக்கப்பட்டு, முதல் அணு உலையில் பொருத்தப்பட்டது. இதனால், 2வது அணு உலையில் மின் உற்பத்தி தாமதமானது.இதற்கிடையில், ஒவ்வொரு நிலையையும் ஏ.இ.ஆர்.பி., எனப்படும் இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்திற்கு தெரியப்படுத்தி வந்தனர்.சமீபத்தில், ஒழுங்குமுறை ஆணைய அதிகாரிகள் ஆய்வு செய்து மின் உற்பத்தியை மேற்கொள்ள அனுமதி வழங்கினர்.
ஜூலை 1, 2ம் தேதிகளில், மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகத்தினர் அணு உலையில் ஆய்வு நடத்தினர். அமைச்சகத்தின் அனைத்து விதிமுறைகளும் முறையாக பின்பற்றப்பட்டுஇருந்ததால், 8ம் தேதி முதல் மின் உற்பத்திக்கு அனுமதி வழங்கினர். இதன்படி, 8ம் தேதி இரவு, 7:52 மணிக்கு, 'கிரிட்டிகாலிட்டி' எனப்படும், அணுப்பிளவுக்கான ஆயத்த பணிகள் துவங்கின. போரான் அமிலம் நிரப்பப்பட்ட அணு உலையில் செறிவூட்டப்பட்ட யுரேனியம் எரி கோல்கள் உள்ளன. இதில், போரான் அமிலத்தின் தன்மையை குறைப்பதற்காக தண்ணீர் ஊற்றப்படுகிறது.
நியூட்ரான் துகள்:
தண்ணீரின் அளவு அதிகரிக்க அதிகரிக்க, ஒரு லிட்டரில், 17.4 கிராம் அளவுள்ள போரான், படிப்படியாக, 7.4 கிராமாக குறையும். அவ்வாறு குறையும் போது நியூட்ரான் துகள்கள் செயல்பட துவங்கும். நியூட்ரான் துகள், யுரேனியத்தை பிளக்க துவங்குகிறது. அதன்படி நேற்று மாலை அணுப்பிளவு துவங்கியது.
ஒரு நியூட்ரான், ஒரு யுரேனியத்தை பிளந்தால் அதிலிருந்து இரண்டு நியூட்ரான் வெளிவரும். இப்படிபடிப்படியாக அணுப்பிளவு ஏற்படும் போது வெப்பமும் அதிகரிக்கும்.
அந்த வெப்பத்தால் ஏற்படுத்தப்படும் நீராவியின் மூலம் டர்பன்களை சுழல செய்து மின் உற்பத்தி நடக்கும்.இந்த வகையில் நேற்று இரவு, 8:56 மணிக்கு, மின் உற்பத்தி துவங்கியது. மின் உற்பத்தியின் அளவு படிப்படியாக அதிகரிக்கும். ஒவ்வொரு நிலையிலும் அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதல் பெற்றே மின் உற்பத்தியின் அளவு அதிகரிக்கப்படும்.எனவே, முழு அளவான, 1,000 மெகாவாட் உற்பத்தியை எட்டுவதற்கு, ஓரிரு மாதங்கள் ஆகலாம். இந்த மின்சாரமும் நெல்லை மாவட்டம், அபிஷேகப்பட்டியில் அமைந்துள்ள கிரிட் மையத்தின் மூலம் மத்திய தொகுப்பிற்கு அனுப்பப்படும்.
தமிழகத்திற்கு எவ்வளவு?
கூடங்குளம் முதல் அணு உலையில், 1,000 மெகாவாட் உற்பத்தி செய்த போது, தமிழகத்திற்கு உரிய பங்காக, 462.5 மெகாவாட், புதுச்சேரிக்கு, 33.5 மெகாவாட், கேரளாவுக்கு, 133 மெகாவாட், கர்நாடகாவிற்கு, 221 மெகாவாட், ஒதுக்கீடு செய்யப்படாத மின்சாரம், 150 மெகாவாட் என இருந்தது.
ஒதுக்கீடு செய்யப்படாத உபரி மின்சாரத்தில் இருந்து தமிழகத்திற்கு கூடுதலாக, 100 மெகாவாட் சிறப்பு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதன் மூலம் தமிழகத்திற்கு அதிகபட்சமாக, 562.5 மெகாவாட் மின்சாரம் கிடைத்தது. தற்போது, 2வது அணு உலையிலும் இதே அளவு, 562.5 மெகாவாட் மின்சாரம் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. மேலும், 2வது அணு உலையில் இருக்கும் உபரி மின்சாரம், 50 மெகாவாட், ஆந்திராவுக்கு அனுப்பப்படுகிறது.

No comments:

Post a Comment