Monday, 24 April 2017

கதை கேளு... கதை கேளு கழகத்தின் கதை கேளு! பண வெள்ளம் பாய்ந்த இடைத்தேர்தல்! -மருத்துவர். இராமதாஸ

கதை கேளு... கதை கேளு கழகத்தின் கதை கேளு!

   பண வெள்ளம் பாய்ந்த இடைத்தேர்தல்!
    -மருத்துவர். இராமதாஸ்

தமிழக முதலமைச்சராக  வேண்டும் என்ற சசிகலாவின் கனவை 14.02.2017 அன்று உச்சநீதிமன்றம் தகர்த்தது. வருவாய்க்கு மீறி ரூ.66.65 கோடி சொத்துக்குவித்த வழக்கில், ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் தண்டிக்கப்பட்டாலும், கர்நாடக உயர்நீதிமன்றத்தில் விடுதலை செய்யப்பட்டார்கள்.

கூவத்தூரில் கொண்டாட்டத்திற்கு காத்திருப்பு

உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமிதவா ராய் ஆகியோரைக் கொண்ட அமர்வு, 07.06.2016 அன்று விசாரணையை முடித்து வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தது. வழக்கமாக ஒத்திவைக்கப்பட்ட நாளில் இருந்து ஒரு மாதத்திற்குள் தீர்ப்பளிக்கப்படுவது வழக்கம். ஆனால், இந்த வழக்கில் தீர்ப்பு  ஒத்திவைக்கப்பட்ட நாளில் இருந்து 7 மாதங்கள் கழித்து தீர்ப்பளிக்கப்படுவதால் தங்களுக்கு சாதகமாகத் தான் தீர்ப்பளிக்கப்படும் என்று சசிகலாவும் அவரைச் சார்ந்தவர்களும் நினைத்தனர். தீர்ப்பின் வெற்றியைக் கொண்டாடுவதற்காக கூவத்தூரில் முகாமிட்டிருந்த அமைச்சர்கள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்களுடன்  சசிகலா தங்கியிருந்தார்.

ஆனால், சசிகலாவின் எதிர்பார்ப்புக்கு மாறாக தீர்ப்பு அமைந்திருந்தது. இந்த வழக்கின் இரண்டாவது குற்றவாளியான சசிகலா, மூன்றாவது குற்றவாளியான சுதாகரன், நான்காவது குற்றவாளியான இளவரசி ஆகிய மூவருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.10 கோடி அபராதம் விதித்து பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. சொத்துக் குவிப்பதற்காக ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் கூட்டுச்சதி செய்ததாக குறிப்பிட்டுள்ள நீதிபதிகள், ‘‘இந்த வழக்கின் எதிரிகள் சசிகலா, இளவரசி, சுகாதரன் ஆகியோரை சமூக வாழ்க்கை வாழ்வதற்காகவோ,  அல்லது மனிதநேய அடிப்படையிலோ தமது போயஸ் தோட்ட இல்லத்தில் ஜெயலலிதா தங்க வைக்க வில்லை. மாறாக, ஜெயலலிதா சொத்துக்களை கையாளுவதற்காக அவர்கள் தீட்டிய சதித்திட்டப் படி தான் போயஸ் தோட்ட இல்லத்தில் சசிகலா உள்ளிட்டோர் தங்க வைக்கப்பட்டனர். தமது சொத்துக்களை கையாளுவதற்கான உரிமையை சசிகலாவுக்கு ஜெயலலிதா அளித்திருப்பது இதை உறுதி செய்கிறது. இதற்கான சதித்திட்டத்தை ஜெயலலிதா தீட்டினர். சசி, இளவரசி, சுதாகரன் ஆகியோர் அதை செயல்படுத்த உடந்தையாக இருந்தனர்’’ என்று விரிவாக விளக்கியிருந்தனர்.

தமிழகம் தப்பியது

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு சமூகத்தின் அனைத்து தரப்பினராலும் வரவேற்கப்பட்டது. தமிழகம் முழுவதும் உள்ள மக்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியைக் கொண்டாடினர். தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த நான்,‘‘ வருவாய்க்கு மீறி ரூ. 66.65 கோடி சொத்துக் குவித்த வழக்கில் சசிகலா உள்ளிட்ட மூவருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறைதண்டனையும், ரூ.10 கோடி தண்டமும் விதித்து பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பு செல்லும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்திருக்கிறது. தண்டனை உறுதி செய்யப்பட்ட மூவரும் உடனடியாக சரணடையவும் நீதிபதிகள் ஆணையிட்டுள்ளனர். நாட்டில் நீதித்துறையின் மீதான மதிப்பையும், நம்பிக்கையையும் உயிர்ப்பிக்க வைத்திருக்கும் இத்தீர்ப்பு மிகவும் வரவேற்கத்தக்கதாகும்.

இந்த வழக்கில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனை மற்றும் அபராதமும் செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. எனினும், அவர் உயிரிழந்து விட்டதால் அவரது தண்டனை நடைமுறைப்படுத்தப்படாதே தவிர, அவர் நிரபராதி என்று நீதிபதிகள் கூறவில்லை. இந்தத் தீர்ப்பு கடந்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பே வந்திருந்தால் தமிழக அரசியலின் போக்கே மாறியிருக்கும். தமிழகத்தில் இப்போதைய அரசியல் குழப்பங்கள் ஏற்பட்டிருக்காது. இப்போதும் கூட இந்தத் தீர்ப்பின் மூலம் சசிகலா முதல்வராகக்கூடிய பேராபத்திலிருந்து தமிழகம் தப்பியிருக்கிறது’’ என்று குறிப்பிட்டேன்.

தினகரனுக்கு பதவி

அதிமுகவின் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சசிகலா, முதலமைச்சராக பதவியேற்ற பின்னர் இராதாகிருஷ்ணன் நகர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு சட்டப்பேரவை உறுப்பினராக வேண்டும் என்று விரும்பினார். ஆனால், உச்சநீதிமன்றத் தீர்ப்பின் காரணமாக சசிகலாவின் கனவுகள் அனைத்தும் கலைந்தன. ஆட்சியையும், கட்சியையும் தமது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று விரும்பிய சசிகலா, சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஆட்சிப் பொறுப்பை எடப்பாடி பழனிச்சாமியிடம் ஒப்படைத்தார். கட்சிப் பொறுப்பை யாரிடம் வழங்குவது என்று யோசித்த சசிகலா, அதிமுகவிலிருந்து சசிகலாவால் நீக்கி வைக்கப்பட்டிருந்த தினகரனை  காலையில் கட்சியில் சேர்த்து மாலையில் துணைப்பொதுச்செயலாளர் பதவியை வழங்கினார்.

இராதாகிருஷ்ணன் நகர் இடைத்தேர்தல்

சசிகலா சிறைக்கு சென்றவுடன் அவரது இடத்தை மட்டுமின்றி, முதலமைச்சராக வேண்டும் என்ற அவரது கனவையும் தனதாக்கிக் கொண்டார் தினகரன். ஆனால், சசிகலாவைப் போல அவசரப்படாமல்,  முதலில் சட்டப்பேரவை உறுப்பினராக வேண்டும்; அதன்பின் முதலமைச்சராக வேண்டும் என்ற எண்ணத்தில் காத்திருந்தார் தினகரன்.

அவரது எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் மார்ச் 9&ஆம் தேதி இராதாகிருஷ்ணன் நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கான  அட்டவணையை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. மார்ச் 16&ஆம் தேதி  வேட்பு மனுத்தாக்கல் தொடங்கி ஏப்ரல் 12-ஆம் தேதி  தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த வாய்ப்பை எதிர்பார்த்துக் காத்திருந்த தினகரன், தனது கட்சியின் வேட்பாளராக தம்மைத் தாமே அறிவித்துக் கொண்டார். தேர்தல் அறிவிப்பு வெளியான சில நாட்களில் திமுகவின் வேட்பாளராக மருதுகணேஷ் அறிவிக்கப்பட்டார். அதிமுக பன்னீர்செல்வம் அணி சார்பில் மதுசூதனன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இவர்கள் தவிர ஜெயலலிதாவின் சகோதரர் மகள் தீபா தனியாக ஓர் இயக்கத்தைத் தொடங்கி தேர்தலில் போட்டியிட்டார்.

மோதல்கள் - வன்முறை

இராதாகிருஷ்ணன் நகர் தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே அத்தொகுதியில் பணம் வெள்ளமாக பாய்ந்தது. ஆளுங்கட்சி சார்பில் போட்டியிடும் தினகரன், பன்னீர்செல்வம் அணி வேட்பாளர் மதுசூதனன், திமுக வேட்பாளர் மருதுகணேஷ் ஆகியோர்  தங்களுக்காக தேர்தல் பணி செய்ய வெளியூரில் இருந்து பல்லாயிரக்கணக்கானோரை இறக்குமதி செய்ததால் தொகுதியில் எந்நேரமும் வன்முறை வெடிக்கும் நிலை நிலவியது. அதிமுகவும், திமுகவும் ஆட்சியிலிருந்தபோது ஊழல் செய்து குவித்த பணத்தில் வாக்காளர்களை விலைக்கு வாங்கி வெற்றி பெற முயல்வார்கள்; அதனால் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படும்; இடைத்தேர்தல் நியாயமாக நடக்காது என்பதால் தான் இடைத்தேர்தலை புறக்கணிக்கும் முடிவை பாட்டாளி மக்கள் கட்சி எடுத்திருந்தது. இராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில்  பண வினியோகத்தை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாமக வலியுறுத்தியிருந்தது. ஆனால், தேர்தல் ஆணையம் மேற்கொண்ட நடவடிக்கைகள் போதுமானவையாக இல்லாததால் தொகுதி முழுவதும் தொடர்ந்து மோதல்கள் ஏற்பட்டன.
இராதாகிருஷ்ணன் நகர் தொகுதி தண்டையார்பேட்டை நேதாஜி நகர் ஐந்தாவது தெருவில் தினகரன் ஆதரவாளர்கள் ஓட்டுக்கு பணம் கொடுத்துக் கொண்டிருந்த போது, அப்பகுதி திமுக நிர்வாகிகள் பார்த்தசாரதி, ஷேக் முகமது ஆகியோர் பணம் வழங்குவதை தடுக்க முயன்றனர். இதையடுத்து ஏற்பட்ட மோதலில் திமுகவினர் இருவரும் கடுமையாக தாக்கப்பட்டதுடன், கத்தியாலும் குத்தப்பட்டனர். ஆளுங்கட்சி மிரட்டல் காரணமாக பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

பண வெள்ளம்

இதைத்தொடர்ந்து வடசென்னை மண்டலத்திற்கான காவல்துறை கூடுதல் ஆணையர், இணை ஆணையர், இரு துணை ஆணையர்கள், நான்கு உதவி ஆணையர்கள் உட்பட 22 காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.  ஏற்கனவே சென்னை மாநகர காவல் ஆணையர் ஜார்ஜ் மாற்றப்பட்டிருந்தார். அதுமட்டுமின்றி பண வினியோகத்தை தடுப்பதற்காக 28 சுற்றுக்காவல் குழுக்களும் அமைக்கப்பட்டன. ஆனாலும்,  இவற்றையெல்லாம் தாண்டி இராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் உள்ள சுமார் இரண்டரை லட்சம் வாக்காளர்களுக்கும் தலா ரூ.4000 வீதம் மொத்தம் ரூ.100 கோடியை  தினகரன் ஆதரவாளர்கள் வழங்கினார்கள். அவர்களைத் தொடர்ந்து திமுக சார்பில் ஒரு ஓட்டுக்கு ரூ.2000 வீதம் வழங்கப்பட்டது.

தினகரனுக்காக பண வினியோகித்தவர் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தான் என்பதைக் கண்டறிந்த தேர்தல் ஆணையம் அது குறித்து வருமானவரித் துறைக்கு தகவல் தெரிவித்தது. அதன்படி அவரது வீடு உள்ளிட்ட 35 இடங்களில் வருமானவரித்துறை அதிரடி ஆய்வு நடத்தியது. அதில் வாக்காளர்களுக்கு ரூ.89 கோடி கொடுத்ததற்கான ஆவணங்கள் சிக்கின. இதைத் தொடர்ந்து  இராதாகிருஷ்ணன் நகர் இடைத்தேர்தலை ஒத்திவைப்பதாக ஏப்ரல் 9-ஆம் தேதி ஆணையம் அறிவித்தது.

விசாரணை
அதிமுக அம்மா அணிக்கு அத்துடன் அதிர்ச்சி ஓயவில்லை. ஏப்ரல் 16-ஆம் தேதி மேலும் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. அதிமுக அம்மா அணிக்கு இரட்டை இலை சின்னத்தை வாங்குவதற்காக தேர்தல் ஆணையத்திற்கு ரூ.60 கோடி  கையூட்டு தருவதாக பேரம் பேசி, அதற்காக தினகரனிடமிருந்து  ரூ.1.30 கோடி கையூட்டு வாங்கியதாக சுகேஷ் சந்திரசேகர் என்பவரை தில்லியில் உள்ள ஒரு விடுதியில் காவல்துறை கைது செய்தது. அவர் அளித்த தவவல்களில் அடிப்படையில் தினகரனையும்  தில்லிக்கு அழைத்து    தில்லி மாநகர காவல்துறை விசாரணை நடத்தியது!

No comments:

Post a Comment