Tuesday, 28 February 2017

கதை கேளு... கதை கேளு கழகத்தின் கதை கேளு! ---விஞ்ஞான முறை ஊழல்கள்! மருத்துவர் .இராமதாஸ்

             கதை கேளு... கதை கேளு கழகத்தின் கதை கேளு! ---விஞ்ஞான முறை ஊழல்கள்! மருத்துவர் .இராமதாஸ்   

      
அதிமுக தொடங்கப்பட்டு 44 ஆண்டுகளாகிறது. 25 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தை ஆட்சி செய்திருக்கிறது. ஆனாலும், அக்கட்சி எப்படி உருவானது என்பது 50 வயதைக் கடந்தவர்களுக்கு தெரிந்திருக்கலாமே தவிர, இன்றைய இளைஞர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதிமுக என்பது கொள்கையே இல்லாத, சினிமாக் கவர்ச்சியை மட்டுமே நம்பித் தொடங்கப்பட்ட கட்சி. இன்றளவும் அதே நிலைமை தான் நீடிக்கிறது. கொள்கை இல்லாத அக்கட்சியால் தமிழக அரசியலில் ஏற்பட்ட பாதிப்புகள், கேலிக்கூத்துக்கள்  ஆகியவை குறித்து இன்றைய இளைஞர்கள் அறிந்து கொள்வதற்கும், கொள்கை சார்ந்த அரசியலில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வைப்பதற்கும்  வசதியாகவே இந்தத் தொடர்....
                 =====================
திமுக அரசின் ஊழல்கள் குறித்து விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட நீதிபதி ரஞ்சித் சிங் சர்க்காரியா தலைமையிலான தலைமையிலான ஆணையம் உடனடியாக, அதாவது 1976-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதமே விசாரணையைத் தொடங்கியது.

இப்போதெல்லாம் ஒரு குற்றச்சாற்று குறித்து விசாரிக்க ஆணையம் அமைக்கப்பட்டால் அந்தக் குற்றச்சாற்று கிடப்பில் போடப்பட்டு விட்டதாக அர்த்தம் ஆகும். குற்றச்சாற்றை  ஆளுங்கட்சிக்கு ஆதரவான ஓய்வு பெற்ற நீதிபதியைத் தான் நியமிப்பார்கள். அந்த நீதிபதியும் அரசு தரும் சலுகைகளை அனுபவித்துக் கொண்டு, பலமுறை காலநீட்டிப்பு பெற்று கடைசியில் உப்புசப்பற்ற அறிக்கையை அரசிடம் தருவார். அதைக்கூட அவர் தயாரிக்க மாட்டார். அவரது உதவியாளரே தயாரிப்பார். ரகுபதி என்ற நீதியரசர் ஒரே நேரத்தில் ஒன்பது ஆணையங்களின் தலைவராக நியமிக்கப்பட்டதும் அவரைத் தவிர வேறு நீதிபதிகளே தமிழகத்தில் இல்லையா? என்று சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்ததும் பலரும் அறிந்த உண்மை தான்.

நேர்மையான விசாரணை

ஆனால், நீதிபதி சர்க்காரியா தலைமையிலான ஆணையம் அப்படிப்பட்டதல்ல... உச்சநீதிமன்ற நீதிபதியாக பணியில் இருந்த போதே விசாரணை ஆணையத்தின் தலைவராக சர்க்காரியா நியமிக்கப்பட்டார். அவர் திறமையானவர் என்பது மட்டுமின்றி, நேர்மையானவரும் கூட. 27 வயதில் மாஜிஸ்திரேட் நீதிபதியாகி, 57 வயதில் உச்சநீதிமன்ற நீதிபதியாக உயர்ந்தவர்.
அதனால், அவருடைய விசாரணையில் யாராலும் குறுக்கிட முடியவில்லை. குளிரூட்டப்பட்ட அறைக்கும் அமர்ந்து ஆட்சியாளர்கள் விரும்புவதை எழுதிக் கொடுத்துவிட்டு செல்லும் நீதிபதியாக அவர் செயல்படவில்லை. கலைஞர் மற்றும் அவரது அமைச்சரவை சகாக்கள் மீது கூறப்பட்ட குற்றச்சாற்றுகள் குறித்து ஓராண்டு விசாரணை நடத்திய நீதிபதி சர்க்காரியா விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தார்.

விசாரணை அறிக்கை 1977-ஆம் ஆண்டு மார்ச் 2-ஆம் தேதி நாடாளுமன்ற மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. மொத்தம் விசாரிக்கப்பட்ட 28 குற்றச்சாற்றுகளில் 7 குற்றச்சாற்றுகள் மட்டுமே ஆதாரங்களுடன் நிரூபிக்கத்தக்க வகையில் இருப்பதாக விசாரணை அறிக்கையில் நீதிபதி சர்க்காரியா குறிப்பிட்டிருந்தார். அவற்றின் விவரம் வருமாறு:

பூச்சி மருந்து தெளிப்பு ஊழல்

1.  வயல்களில் பூச்சி மருந்து தெளிப்பதற்கான ஒப்பந்தம் பெறுவதற்காக ஒரு விமான நிறுவனம் முதலமைச்சர் கலைஞருக்கும், வேளாண்துறை அமைச்சர் அன்பில் தர்மலிங்கத்துக்கும் ரூ.5.3 லட்சம் கோடி லஞ்சம் கொடுத்தது.

இதுகுறித்த குற்றச்சாற்று சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டிருக்கிறது. முதலமைச்சர் கலைஞர், வேளாண்மைத் துறை அமைச்சர் அன்பில் தர்மலிங்கம் ஆகியோரின் வாய் மொழி உத்தரவுகளால்தான் இது நடந்துள்ளது. மோசடியை அடிப்படையாகக் கொண்ட இந்த முறையற்ற தந்திரங்களினால் விமான கம்பெனிக்காரர்கள் முதலில் கவரப்பட்டு மீள முடியாத சிக்கலில் மாட்டிவிடப்பட்டு வழிக்குக் கொண்டு வரப்பட்டனர். முதலமைச்சர், வேளாண்மைத் துறை அமைச்சர் ஆகியோர் லஞ்சமாகப் பணம் பறிக்க, அவர்களது கோரிக்கைகளுக்கு இவர்கள் பணிய வேண்டிய நிலை உருவானது.

2. திமுக அரசில் அமைச்சராக பதவியேற்கும் போது அன்பில் தருமலிங்கம் வருமான வரி செலுத்துபவர் அல்ல.  ஆனால், அமைச்சராக பதவியேற்ற சில ஆண்டுகளில் ரூ.3.8& லட்சம் மதிப்புள்ள நகைகள் மற்றும் நிலங்களை வாங்கிக் குவித்தார். பாடநூல்களை வினியோகிக்கும் உரிமை பெற்ற புத்தக நிலையத்தில் பங்கு தாரராக ஆனார். ஊழல் மூலமாகவே இது சாத்தியமானது.

3. தொழில்துறை அமைச்சராக இருந்த மாதவன், தொழிற்சாலை சார்ந்த பயன்பாட்டுக்காக திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஒருவருக்கு கடனாக வழங்கப்பட்ட பணத்தில் முறைகேடு செய்தார். இதுவும் ஊழல் தான்.

4. 1972, 73 ஆகிய ஆண்டுகளில் சென்னை மாநகர வாடகை குடியிருப்பாளர்கள் பாதுகாப்பு சட்டத்தில் சில திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. அப்போதைய ஆட்சியாளர்களுக்கு நெருக்கமாக இருந்த குளோப் தியேட்டர் உரிமையாளர் வரதராஜ பிள்ளை என்பவருக்கு சாதகமாகவே இந்த சட்டத் திருத்தங்கள் செய்யப்பட்டன. இதன்மூலம் கலைஞர், அமைச்சர்கள் ப.உ.சண்முகம், மாதவன் ஆகியோர் பயனடைந்தனர். இதற்காக இவர்கள் ரூ.1 லட்சம் கையூட்டு வாங்கினார்கள்.

மது ஆலை ஊழல்
5. முதலமைச்சர் கலைஞருக்கு நெருக்கமாக இருந்த ஏ.எல்.சீனிவாசன் என்பவருக்கு மது ஆலை அமைக்க அனுமதி வழங்கப்பட்டது. இதற்கான வழிமுறைகள் எதுவும் முறையாக பின்பற்றப்படவில்லை. மது ஆலை அமைப்பதற்கான இடம் ஏ.எல்.சீனிவாசனிடம் இல்லை. இதற்கான விண்ணப்பத்தைக் கூட அவர் முறையான வடிவத்தில் தாக்கல் செய்யவில்லை. அதுமட்டுமின்றி மது ஆலை அமைப்பதற்காக சென்னையை ஒட்டியிருந்த 100 ஏக்கர் அரசு நிலத்தை அவர் அபகரிக்க முயன்றார்.

இவை அனைத்தும் தெளிவாக தெரிந்தும் இதற்கு காரணமானவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதுமட்டுமின்றி, சீனிவாசனுக்கு கடன் கொடுத்த பலரையும் அந்த கடனைத் திரும்பக் கேட்கக் கூடாது என்று  மிரட்டி சாதித்தனர். இதற்காக சீனிவாசனிடமிருந்து முதலமைச்சர் கலைஞர் பெரும் சலுகைகள் பெற்றார்.

6. தாத்தாச்சாரி என்பவருக்குச் சொந்தமான தாத்தாச்சாரி எஸ்டேட்டில் வாடகைக்கு குடியிருந்தவர்களை அமைச்சர் அன்பில் தர்மலிங்கம் தனது செல்வாக்கை பயன்படுத்தி விரட்டியடித்தார். அதேபோல் ஜங்கமராஜபுரம் கொலை வழக்கில் அமைச்சர் அன்பில் தர்மலிங்கத்துக்கு நெருக்கமான மூன்று பேரை காப்பாற்றுவதற்காக சட்டம் வளைக்கப்பட்டது. இந்த வழக்கில் மூவரும் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து மேல் முறையீடு செய்ய வாய்ப்பிருந்த போதிலும் தி.மு.க. அரசு எந்த மேல் முறையீட்டையும் செய்யவில்லை.

வீராணம் திட்ட ஊழல்

சர்க்காரியா ஆணையத்தால்  உறுதிசெய்யப்பட்ட ஊழல்களில் கதாநாயக ஊழல் என்றால் அது வீராணம் ஊழல் தான். வீராணம் திட்டத்திற்கான ஒப்பந்தம் வழங்கியதில் நேரடியாக ரூ.6 கோடியும், மறைமுகமாக பல கோடியும் இழப்பு ஏற்பட்டிருப்பதாக நீதிபதி சர்க்காரியா குறிப்பிட்டிருக்கிறார். அதன் விவரம் வருமாறு:

வீராணம் திட்டத்திற்கான ஒப்பந்தம் சத்யநாராயணா பிரதர்ஸ் நிறுவனத்திற்குத் தான் வழங்கப்பட வேண்டும் என்று கருணாநிதி விரும்பினார். எனவே, சத்யநாராயணா பிரதர்ஸ் நிறுவனத்தின் ஒப்பந்த புள்ளியை மட்டும் அரசு ஏற்றுக் கொள்ளும் வகையில் டெண்டர் பரிந்துரைகளை வழங்கும்படி தலைமைப் பொறியாளர் திரு. உசைனுக்கு கருணாநிதி உத்தரவிட்டார்.

சில புறம்பான காரணங்களுக்காக வீராணம் ஒப்பந்தம் சத்யநாராயணா பிரதர்ஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட வேண்டும் என்பதில் கருணாநிதி ஆர்வமாக இருந்தார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இது தொடர்பான இரு சந்தர்ப்ப சூழ்நிலைகள் உறுதியாக நிரூபிக்கப்பட்டிருக்கின்றன. 1. சத்யநாராயணா நிறுவனத்தின் அதிபர் புருசோத்தமன் முரசொலி மாறனுக்கு நண்பர். இதைப் பயன்படுத்திக் கொண்டு கருணாநிதியிடமும், அவர் மூலமாக தலைமைப் பொறியாளர் உசைனிடமும் செல்வாக்கு பெற்றார். 2. முரசொலி கட்டிடம் கட்டுவதற்காக ரூ.59,202 மதிப்புள்ள கட்டுமான பொருட்களை  பணம் கொடுக்காமலேயே புருசோத்தமனிடமிருந்து முரசொலி மாறன் பெற்றார். இந்த உண்மையை மாறனே ஒப்புக்கொண்டார்.

ரூ.27 லட்சம் ஊழல்

கருணாநிதிக்கு புருசோத்தமன் 7 தவணைகளில் மொத்தம் ரூ.27 லட்சம் லஞ்சம் கொடுத்ததாக கூறப்படும் குற்றச்சாற்றை  அடியோடு நிராகரித்துவிட முடியாது. வீராணம் திட்டத்திற்கான ஒப்பந்தத்தை சத்யநாராயணா பிரதர்ஸ் நிறுவனத்திற்கு வழங்கும் முடிவு சந்தேகமே இல்லாமல் ஒரு பெரிய தவறு ஆகும். இந்த நிறுவனத்திற்கு மிகப்பெரிய தொகை ஒப்பந்தத்தின் வரம்புக்குள் வராமல் சாதாரணமான முன்காப்பீடு பத்திரம் (Indemnity Bonds ) மூலம் வழங்கப்பட்டது. இதற்கு இந்திய தலைமை கணக்குத் தணிக்கையாளர் அலுவலகம் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.
இந்த திட்டத்தில் சுமார் ரூ.6 கோடி அளவுக்கு மக்களின் வரிப் பணம் சுரண்டப்பட்டிருக்கிறது. மாநில அரசால் அமைக்கப்பட்ட தொழில்நுட்பக் குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு இத்திட்டத்திற்கு தேவையான  குழாய்களை தயாரித்து, சோதித்து, புதைத்து, இணைக்கும் பணிக்கான முழு பொறுப்பையும் திருவாளர்கள் வாக்ரீட் (M/S Vacrete) ஏற்றுக் கொள்ளாவிட்டால் இந்த திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்த முடியாது என்ற நிலை இப்போது ஏற்பட்டிருக்கிறது.

இதனால் அரசு கஜானாவுக்கு இன்னும் பல கோடி ரூபாய் கூடுதலாக நிதிச்சுமை ஏற்படும். நீண்டகாலமாக தண்ணீருக்காக  காத்திருந்த பொதுமக்கள் இன்னும் இரு ஆண்டுகளுக்கு காத்திருக்கும் கொடுமையை அனுபவிக்க வேண்டும். மக்களின் வரிப்பனத்தை இப்படி வீணாக்கிய பழி முழுக்க முழுக்க கருணாநிதியையும், (பொதுப்பணித்துறை அமைச்சர்) சாதிக்பாட்சாவையுமே சேரும்.

இவை தவிர மீதமுள்ள குற்றச்சாற்றுகள் உண்மை தான்  என்ற போதிலும், அதை உறுதியாக நிரூபிக்க ஆதாரங்கள் இல்லை என்றும், அந்த அளவுக்கு அந்த ஊழல்கள் விஞ்ஞான முறையில் செய்யப்பட்டுள்ளன என்றும் கூறி நீதிபதி சர்க்காரியா தள்ளுபடி செய்தார்.

காங்கிரசுடன் கூட்டு- தப்பினார் கலைஞர்

சர்க்காரியா ஆணைய அறிக்கையின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும். அப்படி எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டு விடக் கூடாது என்பதற்காகவே, நெருக்கடி நிலை காலத்தின் போது, இந்திரா காந்தியை கடுமையாக எதிர்த்த கலைஞர், பின்னர் 1980ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்துக் கொண்டார். இதன்மூலம் சர்க்காரியா கமிஷன் பரிந்துரைகளின் அடிப்படையில் தம்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருப்பதை கலைஞர் உறுதி செய்து கொண்டார்.
அடுத்து 1977 தேர்தல் வெற்றியும், எம்.ஜி.ஆரின் துரோகமும்!
                                                       

No comments:

Post a Comment