Friday, 10 March 2017

குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்கக் கோரி தமிழகம் முழுவதும் பா.ம.க. போராட்டம்! -மருத்துவர். இராமதாஸ் ---அறிக்கை----

குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்கக் கோரி
தமிழகம் முழுவதும் பா.ம.க. போராட்டம்!
                      ---அறிக்கை----
    -மருத்துவர். இராமதாஸ்

தமிழ்நாடு ஏராளமான பிரச்சினைகளை  எதிர்கொண்டு வரும் போதிலும், அவற்றில் தலையாயதானதாக குடிநீர் தட்டுப்பாடு உருவெடுத்திருக்கிறது. தமிழகம் முழுவதும் குடிநீர் பஞ்சத்தை தாங்க முடியாமல் மக்கள் தவித்து வரும் நிலையில், அதைப் போக்க  அரசு நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது.

தமிழகத்தில் கடந்த 140 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பருவமழை பொய்த்திருக்கிறது. இதனால் தமிழகம் முழுவதும் வரலாறு காணாத வறட்சி ஏற்பட்டிருக்கிறது. தலைநகர் சென்னையில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதால், ஒரு குடம் தண்ணீர் ரூ.5 கொடுத்து வாங்க வேண்டிய அவல நிலை நிலவுகிறது. சென்னைக்கு குடிநீர் வழங்க 4 ஏரிகள், வீராணம் ஏரியிலிருந்து குழாய்ப் பாதை மூலம் தண்ணீர் வழங்க புதிய வீராணம் திட்டம், ஆந்திராவிலிருந்து தண்ணீர் கொண்டு வர கிருஷ்ணா நதி நீர் திட்டம் என பல திட்டங்கள் இருந்தாலும், வறட்சியால் அவை அனைத்தும் செயலிழந்து விட்ட  நிலையில், கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை மட்டுமே நம்பியிருக்க வேண்டியிருக்கிறது.
இதுவரை இல்லாத கொடுமையாக கல்குவாரிகளில் தேங்கிக் கிடக்கும் அசுத்தமான நீரை பொதுமக்களின் குடிநீர் பயன்பாட்டுக்காக வினியோகிக்க முடியுமா? என்பது குறித்து குடிநீர் வாரியம் ஆலோசித்து வருகிறது. இப்படி ஒரு அவல நிலை சென்னையிலும், தமிழகத்திலும் இதுவரை ஏற்பட்டது கிடையாது.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் வீராணம் ஏரி முற்றிலுமாக வறண்டு விட்டது. சென்னையில் உள்ள 4 ஏரிகளில் மொத்தம் 11.057 டி.எம்.சி தண்ணீர் இருக்க வேண்டிய நிலையில், இன்று காலை நிலவரப்படி 1.600 டி.எம்.சி நீர் மட்டுமே உள்ளது. இதைக்கொண்டு அடுத்த ஒன்றரை மாதங்களுக்கு மட்டுமே தண்ணீர் வழங்க முடியும்.  ஆனால், தமிழக அரசோ இதைப்பற்றியெல்லாம் கவலைப்படவில்லை.

தமிழகத்தின் மற்ற பகுதிகளில் இதைவிட மோசமான நிலை காணப்படுகிறது. சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, அரியலூர், தஞ்சை, நாகை, திருவாரூர், கடலூர் ஆகிய 10 மாவட்டங்களின் குடிநீர்த் தேவையை மேட்டூர் அணைதான் நிறைவேற்றி வருகிறது. மேட்டூர் அணையை நம்பி 127 குடிநீர்த் திட்டங்கள் 10 மாவட்டங்களில் நடைமுறையில் உள்ளன. இக்குடிநீர்த் திட்டங்கள் மூலம் தினமும் 105கோடி லிட்டர் தண்ணீர் வழங்கப்படுகிறது. ஆனால், அணையின் நீர்மட்டம் 26 அடியாக குறைந்து விட்ட நிலையில், அடுத்த ஓரிரு வாரங்களுக்கு மட்டும் தான் மேட்டூர் அணையிலிருந்து  தஞ்சை உள்ளிட்ட தமிழகத்தின் 10 மாவட்டங்களுக்கு தண்ணீர் வழங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஓகனேக்கலிலும் தண்ணீர் இல்லாததால் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கான ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. வாரத்திற்கு ஒரு நாள் தருமபுரி மாவட்டத்திலும்,  அடுத்த வாரத்தில் இன்னொரு நாள் கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் தண்ணீர் வழங்கப்படுகிறது. இதனால் இந்த மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு இரு வாரங்களுக்கு ஒரு முறை மட்டும் தான் தண்ணீர் கிடைக்கிறது. அதேபோல், வேலூர் மாவட்டத்திற்கான கூட்டுக் குடிநீர் திட்டமும் வறட்சியால் செயலிழந்து விட்டதால் அம்மாவட்ட மக்கள் குடிக்க தண்ணீரின்றி வாடும் அவலநிலை ஏற்பட்டிருக்கிறது.

தென்மாவட்டங்களின் நிலையும் மிகவும் மோசமாகவே உள்ளது. நிலத்தடி நீர்மட்டம் படுவேகமாக குறைந்து வருவதால் இனி வரும் நாட்களில் குடிநீருக்கு மக்கள் அல்லாடும் நிலை உருவாகும் ஆபத்து உள்ளது. ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான ஆட்சியில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க ரூ.1000 கோடி ஒதுக்கப்பட்டதாக கூறப்பட்டாலும் அதைக்கொண்டு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப் பட்டதாக தெரியவில்லை. எனவே, தமிழக அரசு உடனடியாக ரூ.2500 கோடியை ஒதுக்கி தமிழகத்தில் நிலவும் குடிநீர் பஞ்சத்தை போக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வரும் 14&ஆம் தேதி செவ்வாய்க் கிழமை தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் தொடர் முழக்கப் போராட்டம் நடத்தப்படவுள்ளது. கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர,பேரூர் மற்றும் கிளை நிர்வாகிகள் இந்த போராட்டங்களில்  கலந்து கொள்வார்கள். பொதுமக்கள் மற்றும் மாணவர்களும் இப்போராட்டத்தில் பங்கேற்க அழைக்கிறேன்.

கதை கேளு... கதை கேளு கழகத்தின் கதை கேளு!  வன்னியர் எம்.ஜி.ஆருக்கு அந்நியர்!           -மருத்துவர். இராமதாஸ்

கதை கேளு... கதை கேளு கழகத்தின் கதை கேளு!
        வன்னியர் எம்.ஜி.ஆருக்கு அந்நியர்!
          -மருத்துவர். இராமதாஸ்

தமிழ்நாட்டில் வன்னியர் சமுதாயம் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்தது. ஏழைக்குடும்பத்தைச் சேர்ந்த நான் மிகக்கடுமையான போராட்டங்களுக்குப் பிறகு தான் மருத்துவர் ஆக முடிந்தது. பின்தங்கிய நிலையில் உள்ள சமுதாயங்களில் திறமையுள்ளவர்கள் பலர் இருந்தாலும், அவர்களால் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் உயர்சாதியினருடன் போட்டிப்போட முடியவில்லை. இதற்குக் காரணம் அவர்களுக்கு திறமை இல்லை என்பதில்லை... மாறாக வாய்ப்புகள் கிடைப்பதில்லை என்பது தான்.

உதாரணமாக கரிக்கட்டையும் கரி தான், வைரமும் கரி தான். தோண்டி எடுத்து பட்டைத் தீட்டப்படுவதற்கு வாய்ப்புள்ள இடங்களில் படிந்து கிடக்கும் கரிக்கட்டை வைரமாகிறது. அதற்கு வாய்ப்பில்லாத பகுதிகளில் படியும் கரிக்கட்டை கரியாகவோ, அல்லது தோண்டி எடுக்கப்படாமலோ போய்விடுகிறது. அப்படித்தான் வசதியான, படித்தவர்கள் நிறைந்த மேட்டுக்குடிகளிலோ பிறந்தவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் சாதிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கின்றன. ஏழைக் குடும்பங்களிலும், படிப்பறிவற்ற  பின்தங்கிய நிலையில் உள்ள குடும்பங்களிலும் பிறந்தவர்களுக்கு அந்த வாய்ப்புக் கிடைப்பதில்லை.

இந்தக் குறைபாட்டை இயற்கையின் விதி என்று சொல்லி ஒதுக்கிவிட முடியாது. பின்தங்கிய நிலையில் உள்ளவர்கள் முன்னேற படிக்கட்டுகள் தேவை. அந்தப் படிக்கட்டுகள் தான் இடஒதுக்கீடு ஆகும். மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள வன்னியர்கள் உட்பட அனைத்து சாதியினருக்கும் அவர்களின் மக்கள் தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது தான் அப்போதும், இப்போதும், எப்போதும் எனது கொள்கையாக இருந்தது.

வன்னியர் சங்கம் உதயம்

முன்னேற முடியாத நிலையில் உள்ள இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் உதவ வேண்டும் என்ற நோக்கத்துடன், பணியிலுள்ள வன்னிய இளைஞர்களை ஒன்று திரட்டி, அவர்கள் மூலம் சமுதாயப் பணிகளை செய்து வந்தேன். அதன் தொடர்ச்சியாக வன்னிய மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்க வன்னிய அமைப்புகளை ஒருங்கிணைக்கலாம் என்ற யோசனை எழுந்ததால், 28 வன்னிய அமைப்புகளின் தலைவர்களை 20.07.1980 அன்று எனது இல்லத்திற்கு அழைத்து ஆலோசனை நடத்தினேன்.

அப்போது தான் அரசியல் சார்பற்ற வன்னியர் சங்கம் என்ற அமைப்பை ஏற்படுத்தலாம் என்று தீர்மானிக்கப் பட்டது. அதன்படி வன்னியர் சங்கம் என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. அதன் தலைமைப் பொறுப்பை  நான் தான் ஏற்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்திய போதிலும், அதை நான் அன்புடன் மறுத்து விட்டேன். சங்கத்தின் நிறுவனர் என்ற ஒற்றைப் பெருமையே போதும் என்பது எனது எண்ணம்.

சமூக நீதி சார்ந்த கருத்துக்களைப் பரப்புவது, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுப்பது என எண்ணற்ற பணிகளை செய்து வந்தாலும், அவற்றை ஊடகங்கள் இருட்டடிப்பு செய்தன. இப்போது ஊடகங்கள் எப்படி நம்மை புறக்கணிக்கின்றனவோ, அதேபோல் தான் அப்போதும் செய்தன. இக்குறையை போக்கும் வகையில் 1984&ஆம் ஆண்டில் கனல் என்ற பெயரில் புதிய மாத இதழை தொடங்கினோம். அது ஓர் அறிவுக் களஞ்சியமாக இன்றளவும் திகழ்ந்து வருகிறது.

சமூக சகோதரத்துவ மாநாடுகள்

வன்னியர் சங்கம் என்ற பெயரில் தான் செயல்பட்டோம் என்றாலும் கூட சாதி வெறுப்பு என்பது எங்களிடம் இல்லை. அதுமட்டுமின்றி, அனைத்து சாதியினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்பது தான் எனது நிலைப்பாடாக இருந்தது. அதன்படி ஒடுக்கப்பட்ட நிலையில் உள்ள சமுதாயங்களை ஒருங்கிணைத்து சமூக சகோதரத்துவ மாநாடுகள் நடத்தப்பட்டன.
அதுமட்டுமின்றி, ஈரோடு கருங்கல்பாளையத்தில் 1980-ஆம் ஆண்டு நடைபெற்ற வன்னியர் சங்கத்தின் முதல் மாநாட்டில் ,‘‘அனைத்து சமுதாயத்தினருக்கும் அவரவர் மக்கள் தொகைக்கு ஏற்றவகையில் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். அந்த வகையில் வன்னியர்களுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் 2% இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் ’’ என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதேபோல், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அவர்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப 22% இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதையும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தேன்.

இட ஒதுக்கீட்டுக் கோரிக்கையை வலியுறுத்தி ஏராளமான மாநாடுகள், போராட்டங்கள், பொதுக்கூட்டங்கள் ஆகியவை நடத்தப்பட்ட போதிலும், அதுகுறித்து பேச்சு நடத்துவதற்கு கூட எம்.ஜி.ஆர் அரசு முன்வரவில்லை. இதைக் கண்டிக்கும் வகையில் 15.03.1984 அன்று சென்னை மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை அருகில் பட்டினிப் போராட்டம் எனது தலைமையில் நடத்தப்பட்டது. அதன்பிறகும் எம்.ஜி.ஆர் தலைமையிலான அரசுக்கு இட ஒதுக்கீட்டுக் கோரிக்கையின் நியாயம் புரியவில்லை. அதை விமர்சிக்கும் வகையில்,‘‘ மிகப்பெரும்பான்மை மக்களை மதிப்பதற்கு கூட ‘‘மாண்பு’’களுக்குத் தெரியவில்லையா? அலட்சியமா இல்லை ஆணவமா? பொறுமைக்கும் ஓர் எல்லையுண்டு; சாது மிரண்டால் காடு கொள்ளுமா?
எப்பேர்பட்ட கொம்பனாக இருந்தாலும் சரி, ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை வன்னியரிடம் ஓட்டுப் பிச்சைக் கேட்டு வந்து தான் தீர வேண்டும். இந்த வன்னியரை மதிக்காதவரை  மிதிக்கின்ற நாள் வெகுதொலைவில் இல்லை என்பதை அரசியல்வாதிகளுக்கு  நினைவூட்ட விரும்புகிறோம்’’ என்று கனல் இதழில் எழுதினேன்.

நாம் விஷக்கிருமிகளா?

அதன்பிறகு அரசு அசையாத நிலையில், 25.08.1985 அன்று சென்னையில் ஆகஸ்ட் பேரணி நடத்தப்பட்டது. ஆனாலும், மத்திய, மாநில அரசுகள் இந்த போராட்டங்களுக்கு மதிப்பளிக்கவில்லை. இதைக்கண்டிக்கும் வகையில் கனல் இதழில் எரிவதை இழுக்க எவ்வளவு நேரமாகும் என்ற தலைப்பில் தலையங்கம் எழுதினேன். அதில்,‘‘ வன்னியர் தம் பிரச்சினை குறித்து பரிசீலிக்க, அழைத்துப் பேச இதுவரை எவ்வித அக்கறையும் இரு அரசுகளுமே எடுத்துக்கொள்ளவில்லை. நாமென்ன விஷக்கிருமிகளா சந்திக்க மறுப்பதற்கு? இல்லை வேண்டாத ஜந்துக்களா ஒதுக்கித் தள்ளுவதற்கு?’’ என்று எம்.ஜி.ஆர் அரசின் மீதான குமுறலை வெளிப்படுத்தினேன்.

இட ஒதுக்கீட்டுக் கோரிக்கையை மீண்டும் வலியுறுத்துவதற்காக 06.05.1986 அன்று ஒருநாள் சாலை மறியல் போராட்டம் நடத்ததுவதென வன்னியர் சங்கப் பொதுக்குழுவில் தீர்மானிக்கப்பட்டது. அந்த போராட்டம் வெற்றிகரமாகவும், அமைதியாகவும் நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், அடுத்தக்கட்டமாக 19.12.1986 அன்று ஒரு நாள் தொடர்வண்டி மறியல் போராட்டமும் நடத்தி முடிக்கப்பட்டது. இந்த முயற்சிகளும்  பயனளிக்காமல் போன நிலையில் தான் வேறு வழியின்றி, ஒரு வாரத்திற்கு அதாவது 1987ஆம் ஆண்டு செப்டம்பர் 17&ஆம் தேதி முதல் செப்டம்பர் 23&ஆம் தேதி வரை தொடர் சாலை மறியல்  போராட்டம் நடத்துவதென முடிவு செய்யப்பட்டது. நெல்லை மாவட்டம் திருக்குற்றாலத்தில் 26.06.1987 அன்று நடைபெற்ற வன்னிய சங்கப் பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

எம்.ஜி.ஆரின் நடிகர் நலப்பணிகள்

இப்படி ஒரு போராட்டமே வேறு வழியில்லாமல் தான் நடத்தப்பட்டது. 1980-ஆம் ஆண்டு முதல் 1987-ஆம் ஆண்டு வரை முதலைமைச்சர் எம்.ஜி.ஆரை சந்திக்க தொடர் முயற்சிகள் மேற்கொண்டேன். ஆனால், அதனால் எந்த பயனும் ஏற்படவில்லை. ஆனால், அந்த நேரத்தில் ஒரு நடிகையின் கணவர் இறந்து விட்டதற்காக அண்டை மாநிலத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார். ஒரு நடிகரின் தாயாரின் மணி விழாவில் கலந்து கொண்டார். ஒரு நடிகரின் திருமண விழாவில் பங்கேற்கவும், ஒரு நடிகரின் சொந்தப் படத்தை தொடங்கி வைத்து வாழ்த்தவும், ஒரு நடிகையின் மகன் பூணூல் திருமணத்தில் பங்கேற்கவும், ஒரு நடிகரின் தங்கைகள் திருமணத்தில் பங்கேற்பதற்காக கோவை செல்லவும் எம்.ஜி.ஆருக்கு நேரம் இருந்தது. ஆனால், தமிழகத்தின் பெரும்பான்மை மக்களின் சமூக நீதிக் கோரிக்கையை காது கொடுத்து கேட்க நேரம் இல்லை. இந்தக் கொடுமையையெல்லாம் விளக்கும் வகையில் கனல் இதழில் கருத்துப்படம்  வெளியிடப்பட்டது.

ஒருகட்டத்தில் பாட்டாளி மக்களின் கோரிக்கைகளை அரசின் காதுகளில் விழும் வகையில் சொல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் தான் தொடர் சாலை மறியல் போராட்டம் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது.இந்த போராட்டம் குறித்த முறையான அறிவிப்பு 04.07.1987 அன்று தமிழக அரசிடம் கொடுக்கப்பட்டது. காவல்துறை தலைவர் ஸ்ரீபாலிடம் 13.08.1987 அன்று இதுகுறித்து கடிதம் தரப்பட்டது. அப்போதைய பிரதமர் இராஜிவ் காந்திக்கு 18.08.1987, 04.09.1987 ஆகிய நாட்களிலும் இருமுறை கடிதங்கள் எழுதப் பட்டன. இந்த கடிதத்தின் நகல்கள் தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு முறைப்படி அனுப்பிவைக்கப் பட்டன. இந்த பணிகள் அனைத்தையும் வன்னியர் சங்கத் தலைவராக இருந்த சா.சுப்பிரமணியம் ஐ.ஏ.எஸ் அவர்கள் சிறப்பாக செய்தார்.
இவ்வாறு முறைப்படி செய்ய வேண்டிய அனைத்துப் பணிகளையும் செய்து முடித்துவிட்டு செப்டம்பர் 17-ஆம் தேதி அதிகாலை சரியாக 12.01 மணிக்கு தொடர்சாலை மறியல் போராட்டம் தொடங்கியது.

Wednesday, 8 March 2017

கதை கேளு... கதை கேளு கழகத்தின் கதை கேளு! எம்.ஜி.ஆருக்கு துரோகம் செய்த ஜெயலலிதா    --மருத்துவர். இராமதாஸ்

கதை கேளு... கதை கேளு கழகத்தின் கதை கேளு!

எம்.ஜி.ஆருக்கு துரோகம் செய்த ஜெயலலிதா
   -மருத்துவர். இராமதாஸ்

அதிமுகவில் படிப்படியாக ஜெயலலிதாவின் செல்வாக்கு அதிகரித்து வந்ததை அக்கட்சியின் மூத்த தலைவர்களே விரும்பவில்லை. ஜெயலலிதாவுக்கு தரப்படும் முக்கியத்துவத்தை எதிர்த்ததற்காக எஸ்.டி. சோமசுந்தரம் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நிலையில், அவர் தனிக்கட்ட்சித் தொடங்கி எம்.ஜி.ஆருக்கு எதிராக தீவிரப்பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இது எம்.ஜி.ஆருக்கு மிகவும் வருத்தத்தை தந்தது. ஜெயலலிதாவால் தான் பிரச்சினை ஏற்படுகிறது என்பதால் அவரை கொள்கைப்பரப்பு செயலாளர் பதவியில்  இருந்து எம்.ஜி.ஆர் நீக்கினார். இதனால் எம்.ஜி.ஆரின் வருத்தமும், மன அழுத்தமும் மேலும் அதிகரித்தது.

இந்த வருத்தத்தில் இருக்கும் போதே 05.10.1984 அன்று இரவு திடீரென எம்.ஜி.ஆரின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. உடனடியாக அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட எம்.ஜி.ஆருக்கு சிறுநீரக பாதிப்பு உள்ளிட்ட பல நோய்கள் தாக்கியிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மிகவும் தாமதமாகவே செய்திகள் வெளியிடப்பட்டன. எம்.ஜி.ஆரின் உடல்நிலையை எண்ணி ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கண்ணீர் விட்டனர். தமிழகம் முழுவதும் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. அந்த நேரத்தில் 31.10.1984 அன்று தில்லியில் இந்திராகாந்தி சுட்டுக்கொல்லப் பட்டார். இந்த அதிர்ச்சியை எம்.ஜி.ஆரால் தாங்க முடியாது என்பதால் அதை எம்.ஜி.ஆரிடம் யாரும் கூறவில்லை.

அமெரிக்காவில் சிகிச்சை

மற்றொருபுறம் எம்.ஜி.ஆரின் உடல்நிலை மோசமடைந்ததால் அவர் அமெரிக்காவின் புரூக்ளின் நகரில் உள்ள டவுன்ஸ்டேட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்திரா படுகொலையைத் தொடர்ந்து பிரதமராக பதவியேற்ற ராஜிவ் காந்தி மக்களவைக்கு தேர்தல் நடத்த முடிவு செய்தார். தமிழக சட்டப்பேரவையின் பதவிக்காலம் முடிவடைய இன்னும் 6 மாதம் இருந்த நிலையில் முன்கூட்டியே தேர்தலை நடத்த முடிவு செய்தார்.  அமெரிக்காவில் சிகிச்சையில் இருந்த எம்.ஜி.ஆரின் ஒப்புதலைப் பெற்ற பொறுப்பு முதலமைச்சர் நாவலர் நெடுஞ்செழியன், மக்களவையுடன் சேர்த்து தமிழக சட்டப்பேரவைக்கும்  தேர்தல் நடத்த முடிவு செய்தார்.

அத்தேர்தலில் அதிமுகவை இயக்கியது ஆர்.எம்.வீரப்பன் தான்.  ஜெயலலிதா பரப்புரை செய்யமாட்டார் என அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், தமது அரசியல் எதிர்காலத்தை பாதுகாப்பதற்காக ஜெயலலிதா தமிழகம் முழுவதும் தீவிர பரப்புரை மேற்கொண்டார். பிரச்சாரம் செய்ய எம்.ஜி.ஆர் இல்லாத குறையை போக்கும் வகையில், எம்.ஜி.ஆர்., அமெரிக்காவில் சிகிச்சையில் இருக்கும்போது அவர் நடப்பதையும், கைகாட்டுவதையும், சாப்பிடுவதையும் வீடியோ காட்சிகளாக்கி, அதை இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் மூலம்  தொகுத்து வீடியோ பரப்புரை செய்தனர் அதிமுக தலைவர்கள். கூடவே  படுகொலை செய்யப்பட்ட இந்திரா காந்தியின் இறுதி ஊர்வல காட்சிகளும் அந்த வீடியோவில் இணைக்கப்பட்டன.  ராஜீவ்காந்தியையும் எம்.ஜி.ஆரையும் குறிக்கும் விதமாக தாயில்லா பிள்ளைக்கு ஒரு ஓட்டு, வாயில்லா பிள்ளைக்கு ஒரு ஓட்டு, சாவுக்கு ஒரு ஓட்டு, நோவுக்கு ஒரு ஓட்டு என்ற முழக்கங்கள் எங்கும் எதிரொலித்தன.

அனுதாப வெற்றி!

அதன்பயனாக அந்தத் தேர்தலில் அதிமுகவுக்கு அமோக வெற்றி கிடைத்தது.153 இடங்களில் போட்டியிட்ட அ.தி.மு.க.விற்கு 132 தொகுதிகள் கிடைத்தது. அதன் கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு 62 இடங்கள் கிடைத்தன. இந்த தேர்தலில் எம்.ஜி.ஆர். அமெரிக்காவிலிருந்தே ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட்டார். அவர் மருத்துவமனையில் படுத்துக் கொண்டே வெற்றி பெற்றார். மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ்- 25 தொகுதிகளிலும், அ.தி.மு.க-12 தொகுதிகளிலும் வெற்றிபெற்றிருந்தன.
அடுத்து அதிமுக ஆட்சி அமைக்க வேண்டும் என்ற நிலையில், முதலமைச்சராக பதவியேற்க வேண்டிய எம்.ஜி.ஆர் அமெரிக்காவில் இருந்தார். அவர் முழுமையாக குணமடைவாரா? என்பது தெரியாத நிலையில்,  ஜெயலலிதாவுக்கு முதலமைச்சர் பதவி மீது ஆசை வந்தது. அவரது ஆசைக்கு நடராஜன் & சசிகலா இணையரும் துணை நின்றனர். இதற்காக புதிய பிரதமராக பதவியேற்றிருந்த ராஜீவ் காந்தியின் உதவியை அவர்கள் நாடினார்கள்.

ஜெயலலிதா பதவி ஆசை

ராஜீவ் காந்தி-  ஜெயலலிதா சந்திப்புக்கு பத்திரிகையாளர் சோலை ஏற்பாடு செய்தார். காந்தியவாதி நிர்மலா தேஷ்பாண்டே மூலம் ராஜிவ் காந்தியைச் சந்திக்க நேரம் கிடைத்தது. அதன்படி ராஜீவ்காந்தியை சந்தித்த ஜெயலலிதா, ‘‘எம்.ஜி.ஆர் திரும்புவாரா? என்பது சந்தேகம்தான். இந்த நேரத்தில் ஆர்.எம்.வீரப்பன் போன்ற சீனியர்கள், கட்சிக்குள் குழப்பதை ஏற்படுத்துகிறார்கள்; என்னை ஓரம்கட்டப் பார்க்கிறார்கள்; அதனால் எனக்கு நீங்கள் உதவ வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார். அதைக் கேட்டு சிரித்த ராஜிவ் காந்தி, “எம்.ஜி.ஆர் நலமுடன் இருக்கிறார். அவருக்கு எந்தப் பிரச்னையும் இப்போது இல்லை. இன்னும் 10 நாட்களில் இந்தியா திரும்பிவிடுவார். அதனால் கொஞ்சம் பொறுமையாக இருங்கள்” என்று சொல்லி ஜெயலலிதாவிடம் கூறினார்.

சர்ச்சைக் கடிதம்!

அதற்கு முன்பாகவே தம்மை முதலமைச்சராக்க வேண்டும் என்று அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்சேலம் கண்ணன் மூலமாக ராஜிவ் காந்திக்கு ஜெயலலிதா கடிதம் எழுதியிருந்தார். அதன் விவரம் வருமாறு:
"The root cause of everything that is happening here is that the C.M. is terribly jealous of my popularity. He cannot stomach the fact that I have become so popular. So he is doing everything possible to eliminate me from the political scene and from public life. MGR himself, who does not want to give me due importance, does not want to induct me into the Cabinet. No one here can really dare to oppose him for without him they are Zeros”

ஜெயலலிதா கடிதத்தின் தமிழாக்கம் வருமாறு:-

‘‘மிகுந்த செல்வாக்குடன் நான் (ஜெயலலிதா) பிரபலம் அடைந்திருப்பதை பார்த்து முதலமைச்சர் (எம்.ஜி.ஆர்) மிகவும் பொறாமைப்படுகிறார். இதுதான் இங்கு நடைபெறும் ஒவ்வொரு செயலுக்கும் மூல காரணம். நான் மிகவும் பிரபலம் அடைந்துள்ளதை அவரால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. எனவே, அரசியலில் இருந்தும், பொதுவாழ்வில் இருந்தும் என்னை ஒழித்துக் கட்ட தன்னால் முடிந்ததையெல்லாம் அவர் (எம்.ஜி.ஆர்) செய்து வருகிறார். எனக்கு உரிய முக்கியத்துவம் தர விரும்பாத எம்.ஜி.ஆர்., என்னை அமைச்சரவையில் சேர்க்கவும் விரும்பவில்லை. அவரை எதிர்க்க இங்கு யாருக்கும் தைரியமில்லை. ஏனென்றால் அவரில்லாவிட்டால் மற்றவர்கள் எல்லாம் பூஜ்யங்கள் என்று அந்தக் கடிதத்தில் ஜெயலலிதா கூறியிருந்தார்.

கடித முயற்சி தோல்வியடைந்த நிலையில், நேரில் சந்தித்த முயற்சியும் தோற்றதால் முதலமைச்சராக வேண்டும் என்ற அவரது கனவு தகர்ந்தது. எம்.ஜி.ஆரும் தமிழகம் திரும்பி முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.

நெருக்கடி; அவமானம்

ஆனாலும், முதலமைச்சர் பதவியை நோக்கி அவரது காய் நகர்த்தல்கள் தொடர்ந்தன. அதிமுகவின் தனக்கென ஓர் அணியை உருவாக்கினார்.  எம்.ஜி.ஆரிடமும் அவரது செல்வாக்கு அதிகரித்தது. 06.09.1985 அன்று அதிமுகவின் கொள்கைபரப்பு செயலாளராக ஜெயலலிதா மீண்டும் நியமிக்கப்பட்டார். எம்.ஜி.ஆரைப் பொறுத்தவரை யாரையும் நம்ப மாட்டார். மற்றவர்கள் நம்மை கவிழ்த்து விடுவார்களோ? என்ற அச்சம் அவருக்கு எப்போதுமே உண்டு. அதனால் நிர்வாகிகளை இரு அணியாக பிரித்து, ஒரு கட்டத்தில் ஓர் அணியை உயர்த்துவதும், சிறிது காலம் கழித்து அந்த அணியை மட்டம் தட்டி எதிரணியை  உயர்த்துவதும் அவரது விளையாட்டுக்களில் ஒன்று. இதை கோமாளித்தனம் என்றும் கூறலாம்.

1987-ஆம் ஆண்டில் எம்.ஜி.ஆரின் உடல்நிலை மீண்டும் மோசமடைந்தது. அந்த ஆண்டின் ஜூலை மாதத்தில் எம்.ஜி.ஆர் மீண்டும் அமெரிக்கா சென்றார். அப்போது தம்மை முதலமைச்சராக்க வேண்டும் என்று கோரி ராஜீவ் காந்திக்கு ஜெயலலிதா தொடர்ந்து கொடுத்த அழுத்தம் வெற்றி பெற்றது. எம்.ஜி.ஆர் அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பியதும் ஜெயலலிதாவுக்கு துணை முதலமமைச்சர் பதவி தர வேண்டும் என்று மத்திய அரசிடமிருந்து அழுத்தம் தரப்பட்டது. பல நேரங்களில் அவர் அவமானப்படுத்தப் பட்டார்.