கதை கேளு... கதை கேளு கழகத்தின் கதை கேளு!
தோல்வியில் முடிந்த இணைப்பு முயற்சி!
-மருத்துவர். இராமதாஸ்
தமிழகத்தில் பன்னீர்செல்வம் தலைமையிலான அணியை வலிமையாக்கி ஆட்சியில் அமர்த்த வேண்டும், சசிகலா அணியை ஒன்றுமில்லாமல் செய்ய வேண்டும் என்பது தான் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசின் நோக்கமாக இருந்தது. சசிகலா அணிக்கும், பாரதிய ஜனதா மேலிடத்திற்கும் நிலவி வந்த பிரச்சினைகளும், பன்னீர்செல்வத்தின் கைகளில் அதிமுகவை ஒப்படைத்து விட்டால் 2019-தேர்தலில் அந்த அணியுடன் கூட்டணி அமைத்துக் கொள்ளலாம் என்பதும் தான் பாரதிய ஜனதாவின் இந்த நிலைப்பாட்டுக்கு காரணமாகும்.
பன்னீர்செல்வம் முயற்சி தோல்வி
அதற்காகத் தான் அதிமுக சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகும், அவர் முதலமைச்சராக தடை இல்லாத சூழலிலும் அவரை பதவியேற்க அழைக்காமல் ஆளுனர் காலம் தாழ்த்தினார். காலம் தாழ்த்துவதால் கிடைக்கும் அவகாசத்தை பயன்படுத்தி சசிகலா அணியில் இருந்து கணிசமான சட்டப்பேரவை உறுப்பினர்களை அழைத்து வந்து ஆட்சி அமைக்க வேண்டும் என்பது தான் பன்னீர்செல்வத்திற்கு பாரதிய ஜனதா அளித்த பணியாகும். அருணாச்சலப் பிரதேசத்தில் எப்படி ஆட்சியமைத்ததோ, அதேபாணியைத் தான் தமிழகத்திலும் பாரதிய ஜனதா கடைபிடித்தது. ஆனால், அருணாச்சலப் பிரதேசத்தில் கிடைத்த வெற்றி தமிழ்நாட்டில் அக்கட்சிக்கு கிடைக்கவில்லை. பன்னீர்செல்வத்தால் 12 சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு மேல் பிரித்து வர முடியவில்லை.
ஆனாலும், பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக அனைத்து அதிகாரங்களையும் மத்திய அரசு கட்டவிழ்த்து விட்டது. அந்த வகையில் சசிகலா அணியினர் மீது நடத்தப்பட்ட முதல் தாக்குதல் தான் அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்ட வருமானவரி சோதனை ஆகும்.
வருமானவரி சோதனை!
இராதாகிருஷ்ணன் நகர் தொகுதி இடைத்தேர்தலில் தினகரனுக்காக பண வினியோகம் செய்தவர் அமைச்சர் விஜயபாஸ்கர் தான் என்பதால், அவரை வளைக்க மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி தான் 07.04.2017 அன்று அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட 35 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டது. அந்த சோதனையில் இராதாகிருஷ்ணன் நகர் தொகுதி இடைத்தேர்தலில் தினகரனுக்காக ஓட்டுக்கு ரூ.4000 வீதம் மொத்தம் ரூ.89 கோடி பணம் வினியோகம் செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் சிக்கியதாக தெரிவித்த வருமானவரித்துறை, அது குறித்த ஆவணங்களை கசியவிட்டது. அதேநேரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட மற்ற அமைச்சர்களின் ஊழல்கள் தொடர்பான ஏராளமான ஆதாரங்களும் வருமானவரித்துறைக்கு கிடைத்துள்ளன.
அந்த ஆவணங்களை வெளியில் விடாத மத்திய அரசு, அவற்றை வைத்துக் கொண்டு அரசியல் விளையாட்டுக்களை நடத்திக் கொண்டிருக்கிறது. அந்த நேரத்தில் இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்காக சுகேஷ் சந்திரசேகர் என்ற இடைத்தரகருக்கு தினகரன் ரூ.1.30 கோடி கையூட்டு கொடுத்த விவகாரம் வெடித்தது தினகரனுக்கு நெருக்கடியை அதிகரித்தது மத்திய அரசு. அதிமுகவின் இரு அணிகளையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து தங்களின் கட்டுக்குள் வைத்துக் கொள்வது தான் மத்திய அரசின் புதிய திட்டமாகும். இந்த சித்து விளையாட்டில் அதிமுக நிர்வாகிகள் சிலருக்கும், சசிகலா உறவினர்கள் பலருக்கும் தொடர்பு உண்டு.
இரு தரப்பிலும் குழுக்கள் அமைப்பு
அதிமுக நிர்வாகிகள் இந்த இணைப்பு முயற்சிக்கு ஆர்வம் காட்டியதற்கு பல காரணங்கள் உள்ளன. இரு அணிகளும் இணைந்தால் இரட்டை இலை சின்னம் கிடைக்கும். அது எதிர்கால வெற்றிகளுக்கு உதவியாக இருக்கும் என்பது அவற்றில் ஒரு காரணம் ஆகும். இரு அணிகளாக பிரிந்ததால், பன்னீர்செல்வம் அணியில் பதவியின்றி தவித்த பல தலைவர்கள் ஏதேனும் ஒரு பதவியை கைப்பற்றி பணம் ஈட்ட வேண்டும் என்று ஏங்கியது இன்னொரு காரணம் ஆகும்.
அதிமுகவின் இரு அணிகளையும் இணைப்பது குறித்து பேச்சு நடத்த இரு தரப்பினரும் ஒப்புக் கொண்டாலும் கூட இரு தரப்பையும் சேர்ந்த சிலர் தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தினார்கள். ஆனாலும் அந்தக் குழப்பங்களைத் தீர்த்து, முறைப்படியான பேச்சுக்களை நடத்த கடந்த 21.04.2017 அன்று இரு அணிகளின் சார்பிலும் குழுக்கள் அமைக்கப்பட்டன. சசிகலா அணி சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.வைத்திலிங்கம் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், கே.ஏ.செங்கோட்டையன், பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயக்குமார், சி.வி. சண்முகம், கே.சி.வீரமணி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். அதேநேரத்தில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் சசிகலா அணியினர் வெளியிடவில்லை.
-அதேபோல், பன்னீர்செல்வம் அணி சார்பில், முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, சி.பொன்னையன், நத்தம் விசுவநாதன், மாநிலங்களவை உறுப்பினர் வா.மைத்ரேயன், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் ஜே.சி.டி.பிரபாகர், முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.எச்.மனோஜ் பாண்டியன் ஆகிய 7 பேர் கொண்ட குழு பேச்சுக்களில் பங்கேற்கும் என்று அறிவிக்கப்பட்டது.
நிபந்தனை இல்லை
பன்னீர்செல்வம் அணி சார்பில் விதிக்கப்பட்ட சில நிபந்தனைகள் இணைப்புக் குறித்த பேச்சுக்கள் தொடங்கப்படாததற்கு காரணம் என்பதால் இந்த முறை பன்னீர்செல்வம் சற்று அடக்கியே வாசித்தார். இணைப்புக்கு ஏதேனும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளனவா? என்று பன்னீர்செல்வத்திடம் கேட்டபோது,‘‘பேச்சுவார்த்தைக்கு முன்னதாக நிபந்தனைகளைத் தெரிவிப்பது சரியாக இருக்காது. இரு அணிகள் இணைவது குறித்து விரைவில் நல்லது நடக்கும்’’ என்று கூறினார்.
மற்றொரு பக்கம் சசிகலா அணியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மக்களவைத் துணைத் தலைவருமான தம்பித்துரை சென்னையிலும், தில்லியிலும் செய்தியாளர்களிடம் பேசும்போது, அதிமுக இணைப்பு முயற்சி நிச்சயம் வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்திருந்தார். தம்பித்துரையின் இந்த முயற்சிக்கு காரணம், அதிமுக அணிகள் இணைந்தால் மத்திய அமைச்சரவையில் அவருக்கு இடம் கிடைக்கும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது தான். இரு தரப்பும் பேசி முடிவு செய்தவாறு 24.04.2017 அன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் பேச்சுக்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
பன்னீர் தரப்பு வீசிய அணுகுண்டு!
இணைப்பு முயற்சி வெற்றி பெற்றால் பட்டாசுகள் வெடிக்கும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், அன்று காலை பன்னீர்செல்வம் அணியிலிருந்து அணுகுண்டு வெடிக்கப்பட்டது. 24-ஆம் தேதி காலை சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பன்னீர்செல்வம் அணியின் முக்கியத் தலைவர் கே.பி.முனுசாமி,‘‘இரு அணிகளும் பிளவுபட்ட நிலையில், எதிர் அணியில் பேச்சுக்குத் தயார் என்று கூறி குழு அமைத்துள்ளதாக அறிவித்தனர். அதை மதித்து நாங்களும் 7 பேர் கொண்ட குழுவை அமைத்தோம்.பேச்சுவார்த்தைக்குத் தயார் என்று கூறியவர்கள், எங்களை அழைப்பார்கள் என்று நினைத்தோம். பேச்சுக்களில்தான் கோரிக்கைகளைப் பரிமாறிக்கொள்ள வேண்டும். ஆனால் அவர்கள் அதைப் புரிந்துகொள்ளவில்லை. கட்டுப்பாடில்லாத சூழ்நிலையில் சில தலைவர்கள் கருத்துகளைக் கூறினர். இதிலிருந்து அவர்களை வேறு யாரோ இயக்குவது தெரியவருகிறது.
இதனால் எங்களின் இரு கோரிக்கைகளை அவர்கள் ஏற்றுக்கொண்டால் தான் பேச்சுக்களில் நாங்கள் பங்கேற்போம். 1.ஜெயலலிதா இயற்கையான முறையில் மரணமடையவில்லை. அவரின் மரணத்தில் சந்தேகம் இருக்கிறது. கழக தொண்டர்கள் அனைவரும் அவர் கொலை செய்யப்பட்டார் என்று ஆறாத்துயரம் அடைந்துள்ளனர். அதைப் போக்கவும், நீதியை நிலை நாட்டவும் சிபிஐ விசாரணை வேண்டும். அது குறித்து மத்திய அரசிடம், தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். 2. மாபெரும் இயக்கத்தைக் கபளீகரம் செய்துகொண்டிருக்கும் சசிகலா மற்றும் அவரின் குடும்பத்தினரை முழுமையாகக் கட்சியில் இருந்து வெளியேற்ற வேண்டும். இந்த இரண்டு கோரிக்கைகளை மட்டுமே முன்வைத்துள்ளோம். இதைத் தவிர வேறு எந்த நிபந்தனையும் கிடையாது’’ என்று அறிவித்தார்.
சசிகலா அணியுடனான பேச்சுக்கு எந்த நிபந்தனையும் இல்லை என்று பன்னீர்செல்வம் ஏற்கனவே உறுதியளித்திருந்த நிலையில், முனுசாமியின் நிபந்தனை அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பன்னீர்செல்வத்தின் இந்த முடிவுக்கு காரணம் இருந்தது. சசிகலா சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவரை கட்சியிலிருந்து நீக்காமல் ஒதுக்கி வைத்திருந்து, இரு அணிகளும் இணைந்து இரட்டை இலை சின்னத்தை மீண்டும் பெற்றவுடன் கட்சியை தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர சசிகலா அணி நடத்தும் நாடகம் தான் இது என்று பன்னீர்செல்வம் அணி சந்தேகப்பட்டது தான் இதற்கு காரணமாகும்.
சசிகலா தரப்பு அழைப்பு
பன்னீர்செல்வம் அணியின் இந்த அதிரடி அதிமுக தரப்புக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. ‘‘பன்னீர்செல்வம் அணியினர் ஆரம்பத்தில் இருந்தே பேச்சுக்கு முட்டுக்கட்டை போடுகின்றனர். காரண, காரியங்கள் தேடித் தேடி, பேச மறுக்கின்றனர். எந்தப் பிரச்சினையும் கூடிப் பேசி, விவாதித்தால் தீர்ந்துவிடும். நாங்கள் எப்பொழுது வேண்டுமானாலும், எந்த நிபந்தனையும் இல்லாமல், உட்கார்ந்து பேசத் தயாராக உள்ளோம்.
இரு அணி இணைப்பு குறித்து கே.பி.முனுசாமிக்கு குறுந்தகவல் அனுப்பியுள்ளோம்.ஜெயலலிதாவின் மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டால், அரசாங்கம் அதை முன்னேற்று நடத்தும். சசிகலா அதிமுக பொதுச் செயலாளர் நியமனம் குறித்த வழக்கு, தேர்தல் ஆணையத்தில் நிலுவையில் இருக்கிறது. ஆணையத்தின் தீர்ப்பின்படி, சசிகலா பதவி குறித்து முடிவெடுக்கப்படும்’’ என்று சசிகலா அணியின் பேச்சுவார்த்தைக் குழுத் தலைவர் வைத்திலிங்கம் தெரிவித்தார். ஆனால், இந்த விளக்கத்தை பன்னீர்செல்வம் அணியினர் ஏற்க மறுத்து விட்டதால், அதிமுகவின் இரு அணிகளையும் இணைப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் வறட்சியில் கருகிய சம்பா பயிரைப் போன்று கருகிவிட்டன.
No comments:
Post a Comment