Sunday, 5 March 2017

கதை கேளு... கதை கேளு கழகத்தின் கதை கேளு!    ஆட்சிக்கலைப்பும் அனுதாப வெற்றியும்! -மருத்துவர். இராமதாஸ்

கதை கேளு... கதை கேளு கழகத்தின் கதை கேளு!
   ஆட்சிக்கலைப்பும் அனுதாப வெற்றியும்!
   -மருத்துவர். இராமதாஸ்

1980ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க. படுதோல்வி அடைந்ததைத் தொடர்ந்து வந்த 6 மாதங்கள் எம்.ஜி.ஆருக்கு கடுமையான சோதனைக்காலமாக அமைந்தது. மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க. தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, எம்.ஜி.ஆர். தலைமையிலான அரசு பதவி விலகவேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்தினார்கள். காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சி.சுப்ரமணியம், “எம்.ஜி.ஆர். இடத்தில் நான் இருந்திருந்தால் இந்நேரம் பதவி விலகியிருப்பேன்” என்று கூறினார்.

எம்.ஜி.ஆர். பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியதை தி.மு.க. தலைவர் கலைஞரிடம் சுட்டிக்காட்டிய பத்திரிகையாளர்கள், நீங்களும் எம்.ஜி.ஆரை பதவி விலகும்படி வலியுறுத்துவீர்களா? என்று கேட்டனர். அதற்கு அவருக்கே உரிய வார்த்தை ஜாலத்துடன் கலைஞர் பதிலளித்தார்.

மானமிருந்தால்....

“ராஜினாமா செய்யுங்கள் என்று நான் அவர்களை வலியுறுத்தப் போவதில்லை. இந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் தங்கள் மானப் பிரச்சனை என்று அவர்கள்தான் சுவரொட்டிகள் எல்லாம் ஒட்டினார்கள். எனவே, முடிவை அவர்களுக்கே விட்டுவிடுகிறேன்” என்பதுதான் கலைஞர் சொன்ன பதிலாகும்.
தேர்தல் தோல்வி மூலம் பாடம் கற்றுக்கொண்ட எம்.ஜி.ஆர்., தமது தவறுகளை திருத்திக்கொள்ள விரும்பினார். இதுதொடர்பாக அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். நாராயணசாமி நாயுடு தலைமையிலான விவசாயிகள் சங்கத்தினர் நடத்திய போராட்டத்தை ராணுவத்தை வரவழைத்தும், துப்பாக்கிச் சூடு நடத்தியும் முறியடித்தது. அரசு ஊழியர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தபோது, அதை நிறைவேற்றித் தராமல் அவர்களுக்கு எதிராக பொதுமக்களைத் தூண்டியது, மதுவிலக்கை நடைமுறைப்படுத்தும் விஷயத்தில் அளவுக்கு அதிகமான கெடுபிடிகளைக் காட்டியது ஆகியவை தேர்தல் தோல்விக்கான காரணங்களாக இருக்கலாம் என்று எம்.ஜி.ஆருக்கு தெரிவிக்கப்பட்டது.

பொருளாதார இடஒதுக்கீடு ரத்து

இவற்றையெல்லாம்விட, பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படும் என்று எம்.ஜி.ஆர் அறிவித்தது மக்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியிருந்ததாகவும், அதுதான் தோல்விக்கான முதல் காரணம் என்றும், அ.தி.மு.க. மூத்தத் தலைவர்கள் எம்.ஜி.ஆரிடம் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, தேர்தல் முடிந்த இரு வாரங்களுக்குள் அதாவது 20.01.1980 அன்று அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டிய எம்.ஜி.ஆர். அதில் விவாதிக்கப்பட்ட அம்சங்களின் அடிப்படையில், 24.01.1980 அன்று இரு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அவற்றில் முதலாவதாக பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு என்ற  அறிவிப்பு திரும்பப்பெறப்பட்டது. இரண்டாவதாக தமிழகத்தில் இடஒதுக்கீட்டின் அளவு 68 விழுக்காடாக உயர்த்தப்பட்டது. பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு 31 விழுக்காட்டிலிருந்து 50 விழுக்காடாக உயர்த்தப்பட்டது.

அதேபோல், மதுவிலக்கு விஷயத்தில் காட்டிய கெடுபிடிகளையும் எம்.ஜி.ஆர். தளர்த்தினார். அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு நல்லாட்சி வழங்கவேண்டும் என்பது எம்.ஜி.ஆரின் திட்டம். ஆனால், அதை காங்கிரசும், தி.மு.க.வும் அனுமதிக்கவில்லை. 1977இல் மத்தியில் ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தபோது, காங்கிரஸ் ஆளும் மாநில அரசுகள் கலைக்கப்பட்டன. அதற்கு பழிதீர்க்கும் வகையில் 1980ஆம் ஆண்டு மத்தியில் பொறுப்பேற்ற இந்திரா காந்தி அரசு, ஜனதா கட்சி ஆளும் மாநிலங்களின் அரசுகளை கலைக்க முடிவு செய்தது. இதையறிந்த எம்.ஜி.ஆர்., தமது அமைச்சரவை சகாக்களுடன் தில்லி சென்று இந்திரா காந்தியைச் சந்திக்கவும் ஆட்சிக் கலைப்பை தவிர்க்கவும்முயன்றார்.

எம்.ஜி.ஆர் ஆட்சிக்கலைப்பு

ஆனால், எம்.ஜி.ஆரால் இந்திரா காந்தியையும் சந்திக்க முடியவில்லை, ஆட்சிக் கலைப்பையும் தடுக்க முடியவில்லை. 17.02.1980 அன்று பிரதமர் இந்திரா காந்தி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டவாறு 9 மாநிலங்களின் அரசுகள் கலைக்கப்பட்டன. அவற்றில் தமிழக அரசும் ஒன்று.
ஆட்சிக் கலைப்பை எதிர்பார்த்திருந்த எம்ஜிஆர்., தமது வருத்தத்தை பெரிய அளவில் வெளிக்காட்டிக்கொள்ளவில்லை. தமது வீட்டில் இருந்த இனிப்புகளை நண்பர்களுக்குக் கொடுத்து, தாம் மகிழ்ச்சியாக இருப்பதைப்போல காட்டிக்கொண்டார். ஆனால், அடுத்த சில வாரங்களில் தமிழக சட்டப்பேரவைக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டபோதுதான் எம்ஜிஆர் அதிர்ச்சியடைந்தார். மக்களவைத் தேர்தலில் படுதோல்வி அடைந்திருந்த எம்ஜிஆரிடம் எட்டப்பேரவை தேர்தலைச் சந்திக்க பணம் இல்லை. பணத்திற்கு என்ன செய்வது? என்பது தெரியாமல் எம்ஜிஆர் தடுமாறிக்கொண்டிருந்தார்.

கை கொடுத்த மலையாள தொழிலதிபர்கள்

சாதி, மத, இன வேறுபாடு எதுவும் தங்களுக்குக் கிடையாது என்று திராவிடக் கட்சிகளின் தலைவர்கள் மீண்டும் மீண்டும் கூறிவந்தாலும், இனம் இனத்தைக் காக்கும் என்பதுதான் திராவிடத் தலைவர்களின் கொள்கை என்பது எம்ஜிஆர் விஷயத்தில் உண்மையானது. தேர்தல் செலவுகளுக்காக பணத்தை திரட்டவேண்டும் என்ற நினைத்த எம்ஜி,ஆர். உடனடியாக மலையாள தொழிலதிபர்களின் கூட்டத்தைக் கூட்டி ஆலோசனை நடத்தினார். நடிகை கே.ஆர்.விஜயாவின் கணவரும், புகழ்பெற்ற தொழிலதிபருமான வேலாயுதம் நாயர், எம்ஜிஆருக்கு நிதி திரட்டித்தர ஒப்புக்கொண்டார். எம்.ஆர்.எஃப். நிறுவன அதிபர் உட்பட தமிழகத்தில் வாழும் மலையாள தொழிலதிபர்கள் கணிசமான தொகையைத் திரட்டி எம்ஜிஆரின் தேர்தல் செலவுக்காக வழங்கினர்.
பணம் கிடைத்ததால் ஏற்பட்ட உற்சாகத்தில் குமரி அனந்தனின் காந்தி காமராஜ், தேசிய காங்கிரஸ், பழநெடுமாறனின் தமிழ்நாடு காமராஜ் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் ஆகியவை எம்.ஜி.ஆர். தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றிருந்தனர்.

எம்.ஜி.ஆரின் கண்ணீர்; பெண்களின் ஆதரவு

திரைப்படங்களில் நடிக்கும்போதே பெண்களின் மனதைக் கவரும் வித்தையைக் கற்று வைத்திருந்த எம்ஜிஆர், 1980ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றிபெறுவதற்குக் கண்ணீர்தான் சிறந்த ஆயுதம் என்று தீர்மானித்தார். தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் அதை அவர் முழுமையாகச் செயல்படுத்தினார்.
மேடைக்கு மேடை தமது ஆட்சி கலைக்கப்பட்டதற்கு காரணமானவர்களை மக்கள்தான் தண்டிக்கவேண்டும் என்று எம்.ஜி.ஆர் கண்ணீர்மல்கக் கூறினார். தமது ஆட்சி எதற்காக கலைக்கப்பட்டது என்று அவர் அடுக்கடுக்காக வினாக்களை எழுப்பினார்-. ஆட்சியில் லஞ்சம் இருக்கக்கூடாது என்று ஆசைப்பட்டேனே, அது என் தவறா? ஊழலை ஒழிக்க வேண்டும் என்று சொன்னேனே, அது என் தவறா? சட்டத்துக்கு முன்னால், நீதிக்கு முன்னால் கட்சிக் கண்ணோட்டம் இருக்கக்கூடாது என்றேனே, அது என் தவறா? கோட்டை வராண்டாவில் அரசியல்வாதிகள் நடமாடக்கூடாது என்றேனே, அது என் தவறா? தவறு செய்தவர்கள் என்னுடைய கட்சிக்காரர்கள் என்றாலும் தயங்காமல் நடவடிக்கை எடுங்கள் என்று காவல்துறையை சுதந்திரமாக இயங்க வைத்தேனே, அது என் தவறா? புயல், வெள்ளம், தீ விபத்து போன்றவற்றில் மக்கள் பாதிக்கப்பட்டபோது ஓடோடிச் சென்று உதவி செய்தேனே, அது என் தவறா? எது தவறு என்று சொல்லுங்கள்? என்ன காரணத்துக்காக ஆட்சியைக் கலைத்தார்கள்?

எம்.ஜி.ஆர். எழுப்பிய இந்த வினாக்கள் மக்களிடையே பெரும் மாற்றத்தை ஏற்படுத்தின. அதற்கு 3 மாதங்களுக்கு முன்புவரை எம்.ஜி.ஆர். மீது பெரும் கோபத்தில் இருந்த மக்கள், அவரது ஆட்சி கலைக்கப்பட்டுவிட்டது என்ற ஒரே காரணத்திற்காக அவர் மீது அனுதாபம் காட்டினர். அதுமட்டுமின்றி, தி.மு.க. மற்றும் காங்கிரஸ் மீது வெறுப்பை உமிழ்ந்தனர்.

தி.மு.க. - காங்கிரஸ் குழப்பம்

மற்றொருபுறம், தி.மு.க. தலைவர் கலைஞர் தேர்தலுக்கு முன்பே முதல்வராகிவிட்டதாக எண்ணி மகிழ்ந்தார்.  அவர் மட்டுமின்றி, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிலரும் முதலமைச்சர் கனவில் மிதக்கத் தொடங்கினார்கள். காரணம் மக்களவைத் தேர்தலில் கிடைத்த வெற்றி இதிலும் தொடரும் என்று அவர்கள் எண்ணியதுதான். ஆனால், தொகுதிப் பங்கீட்டிலேயே தி.மு.க.வுக்கும், காங்கிரசுக்கும் இடையே பெரும் மோதல் வெடித்தது. நீண்ட இழுபறிக்குப் பிறகு தி.மு.க.வும், காங்கிரசும் சரிபாதியாக தொகுதிகளைப் பிரித்துக்கொண்டு தேர்தலைச் சந்தித்தன. எந்தக் கட்சி அதிக இடங்களில் வெற்றிபெறுகிறதோ அந்தக் கட்சிக்கு முதல்வர் பதவி என்பது எழுதப்படாத ஒப்பந்தமாக இருந்தது.

தேர்தல் பிரச்சாரம் உச்சகட்டத்தில் இருந்தபோது, எம்.ஜி.ஆர். ஒரு அணுகுண்டை வீசினார். எங்கள் அணி வெற்றிபெற்றால் நான்தான் முதலமைச்சர், தி.மு.க. & காங்கிரஸ் கூடணி வெற்றிபெற்றால் யார் முதலமைச்சர்? என்ற வினாதான் அவர் வீசிய அணுகுண்டு ஆகும். அந்த வினாவுக்கு தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியில் யாராலும் பதில் கூறமுடியவில்லை. அதுமட்டுமின்றி, அதிக இடங்களில் வெற்றிபெறும் கட்சிக்குத்தான் முதலமைச்சர் என்று எழுதப்படாத ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டிருந்ததால், இரு கட்சியினரும் தாங்கள் அதிக இடங்களில் வெற்றிபெறவேண்டும் என்று துடிப்பதற்கு பதிலாக, தங்கள் கூட்டணி கட்சி அதிக இடங்களில் வெற்றிபெற்றுவிடக் கூடாது என்று துடித்தனர்.

அதிமுகவுக்கு வெற்றி!

தேர்தல் நெருங்க அதிமுக அணிக்கு செல்வாக்கு அதிகரித்தது. 1980ஆம் ஆண்டு மே மாதம் 28 முதல் 31 வரை நடைபெற்ற தேர்தலில் அதிமுக 129 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியைக் தக்க வைத்துக்கொண்டது. அவரது கூட்டணியில் இடம்பெற்றிருந்த கட்சிகள் 33 இடங்களை வென்றன. தி.மு.க. அணியில் தி.மு.க. 37 இடங்களையும், காங்கிரஸ் 31 இடங்களையும் பெற்று படுதோல்வி அடைந்தன. இதைத் தொடர்ந்து 9.6.1980 அன்று 2வது முறை முதலமைச்சராக பதவியேற்றார் எம்.ஜி.ஆர்.

                                                       

No comments:

Post a Comment