Wednesday, 27 July 2016

அப்துல்கலாமின் 100 நூலகம் திறக்க வேண்டும் என்ற ஆசை நிறைவேறவில்லை

மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம், இந்த ஆண்டு நவம்பர் மாதம் அவரது மூத்த சகோதரரான முகமது முத்து மீரான் லெப்பை மரைக்காயரின் 100-ஆவது பிறந்த தினத்தை வெகு விமரிசையாக கொண்டாடத் திட்டமிட்டிருந்தார். எனினும், கடந்த ஆண்டு ஜூலை 27-ஆம் தேதி, மாரடைப்பு ஏற்பட்டு திடீரென அவர் இறந்ததால், தனது கடைசி ஆசையை அப்துல் கலாமால் நிறைவேற்ற முடியாமல் போய்விட்டது.

இதுதொடர்பான விவரங்களை, அவரது உதவியாளர் ஸ்ரீஜன் பால் சிங் தற்போது எழுதியுள்ள புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். "Why can I give? Life lessons from my teacher A.P.J.Abdul kalam'என்று தலைப்பிடப்பட்டுள்ள அந்தப் புத்தகம் கலாமின் முதலாவது நினைவு தினமான புதன்கிழமை (ஜூலை 27) வெளியிடப்படவுள்ளது.

இதுதெடார்பாக அந்தப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விவரம்:

அப்துல் கலாமை சந்திப்பதற்காக கடந்த ஆண்டு மே மாதம் அவரது சகோதரர் மரைக்காயர் தில்லிக்கு வந்திருந்தார். அவருக்கு அந்த ஆண்டு நவம்பர் 5-ஆம் தேதி 99-ஆவது பிறந்த தினம் என்பதை மரைக்காயர் ராமேசுவரம் புறப்பட்டுச் சென்ற அன்றயை தினம் கலாம் என்னிடம் தெரிவித்தார்.

"எனது சகோதரர் தனது பிறந்த தினத்தை விமரிசையாக கொண்டாடியதில்லை. ஆகவே, அடுத்த ஆண்டு அவரது 100-ஆவது பிறந்த தினத்தை இராமேசுவரத்தில் வெகுச் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று விரும்புகிறேன். அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க வேண்டும். நிச்சயம் அவர் அதை விரும்புவார். பிறந்த நாள் விழாவுக்கு உறவினர்கள் அனைவரையும் அழைப்போம்' என்று கலாம் தெரிவித்தார்.

பிறந்த தினத்தை எவ்வாறு சிறப்பாக கொண்டாடுவது என்பதை இருவரும் அமர்ந்து யோசனை செய்து கொண்டிருந்தோம். பிறகு, அன்றைய தினம் தமிழ் பாடல்களை ஒலிபரப்பலாம் என்று யோசித்தோம். அதன் பிறகு ஒரு யோசனை தோன்றியது.

அதாவது, மரைக்காயரின் 100-ஆவது பிறந்த தினத்தைச் சிறப்பிக்கும் வகையில், நாடு முழுவதும் 100 நூலகங்களைத் திறப்பது என்று முடிவு செய்தோம். அந்த யோசனையை அப்துல் கலாம் வரவேற்றார்' என்று சிங் அந்தப் புத்தகத்தில் எழுதியுள்ளார்.

அப்துல் கலாம் இறந்ததை அடுத்து, அவரது விருப்பத்தை நிறைவேற்றும் வகையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நாடு முழுவதும் 100 நூலகங்களை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன.

1 comment: