Thursday, 4 May 2017

நீட் கட்டாயம்: தமிழகத்தின் உரிமையை அடகு வைத்து விட்டது அதிமுக அரசு! -------அறிக்கை ------- -மருத்துவர். இராமதாஸ்

நீட் கட்டாயம்: தமிழகத்தின் உரிமையை
அடகு வைத்து விட்டது அதிமுக அரசு!
   
         -மருத்துவர். இராமதாஸ்



          தமிழ்நாட்டில் மருத்துவம் படிக்க நினைத்த கிராமப்புற ஏழை மாணவர்களை அதிமுக பினாமி அரசு நம்ப வைத்து கழுத்தறுத்து விட்டது. அடுத்த 5 நாட்களில், அதாவது மே 7&ஆம் தேதி தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதும் மருத்துவப் படிப்புக்கான தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு(நீட்) நடைபெறவுள்ள நிலையில், அதிலிருந்து விலக்கு பெறுவதற்கான சட்ட அனுமதியை பெறுவதில் அரசு தோற்றுவிட்டது.
தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு அடிப்படையில் மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை நடைபெற்றால் சமூக நீதிக்கும், ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கும் ஏற்படும் பாதிப்புகள் கொஞ்சநஞ்சமல்ல. தமிழகத்தில் இன்றைய நிலையில், புதிதாக தொடங்கப்படவுள்ள புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி உட்பட 22 அரசு மருத்துவக் கல்லூரிகளில், அனைத்திந்திய ஒதுக்கீட்டுக்கு 15% வழங்கியது போக 2445 இடங்கள், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து அரசு ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படவுள்ள 1198 இடங்கள் என மொத்தம் 3643 மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்கள் ஒற்றைச்சாளர முறையில்  நிரப்பபட உள்ளன. அதேபோல், அரசு மற்றும் தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 1330  பல் மருத்துவ இடங்களுக்கும் ஒற்றைச் சாளர முறையில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறவிருக்கிறது.
தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு வரை 12&ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில்  தான் மாணவர் சேர்க்கை நடைபெற்று வந்தது. அதில் 70 விழுக்காட்டுக்கும் மேற்பட்ட இடங்களை  கிராமப்புற, ஏழை மாணவர்கள் தான் கைப்பற்றி வந்தனர். சாதாரண கூலித் தொழிலாளியின் பிள்ளைகள் கூட மருத்துவப் படிப்பில் சேர முடிந்தது என்றால், அதற்குக் காரணம் பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து நடத்திய சட்டப்போராட்டம் மற்றும் அரசியல் போராட்டங்களின் பயனாக 2007&ஆம் ஆண்டில் மருத்துவ நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது தான். ஆனால், இப்போது தகுதி மற்றும் நுழைவுத் தேர்வுகள் அறிமுகப்படுத்துவதன் மூலம் 2007&ஆம் ஆண்டுக்கு முன்பிருந்ததை விட மிக மோசமான அளவில் தமிழக கிராமப்புற ஏழை மாணவர்களின் மருத்துவக் கல்வி வாய்ப்பு மத்திய அரசால் பறிக்கப்படவுள்ளது.
புதிய தேர்வு முறையின் கீழ் நீட் தேர்வில் எடுக்கும் மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டும் தான் மாணவர் சேர்க்கை நடைபெறவிருக்கிறது. நீட் தேர்வு மத்திய இடைநிலைக் கல்வி வாரியப் பாடத்திட்டத்தின் அடிப்படையில் தான் நடத்தப்படவுள்ளது. அதனால் அந்த பாடத்திட்டத்தில் இருந்து தான் 97% வினாக்கள் கேட்கப்படுகின்றன. 3% வினாக்கள் தான் பிற பாடத்திட்டங்களில் இருந்து கேட்கப்படுகின்றன. அதில் தமிழ்நாடு பாடத்திட்டத்திலிருந்து ஒரே ஒரு வினா மட்டுமே கேட்கப்படும்.  மத்தியப் பாடத்திட்டத்தின் அடிப்படையில் தேர்வு நடத்தப்படுவதால் அதில் படித்தவர்கள் தான் அதிக மதிப்பெண்களைப் பெறுவார்கள். அவர்கள் தான் 90 விழுக்காட்டு மருத்துவ இடங்களை பிடிப்பார்கள்.
தமிழகத்தில் மாநிலப்பாடத்திட்டத்தின்படி 12&ஆம் வகுப்பு தேர்வு எழுதிய 9 லட்சம் பேரில் 4 லட்சம் பேர் மருத்துவப் படிப்பில் சேருவதற்கான உயிரியல் மற்றும் விலங்கியல் பாடம் படித்தவர்கள். அதேநேரத்தில் மத்திய பாடத்திட்டத்தில் 12&ஆம் வகுப்பு தேர்வு எழுதிய 12,000 பேரில் 4000 பேர் மட்டுமே உயிரியல் மற்றும் விலங்கியல் பாடம் படித்தவர்கள். ஆனால், மொத்தமுள்ள 3623 மாணவர் சேர்க்கை இடங்களில் 3,300 இடங்களை மத்தியப் பாடத்திட்டத்தில் படித்தவர்கள் தான் பிடிக்கப் போகிறார்கள். மாநிலப் பாடத்திட்டத்தில் உயிரியல் பாடம் படித்த 4 லட்சம் பேரில் ஒரு விழுக்காட்டினருக்குக் கூட மருத்துவப் படிப்பில் சேர வாய்ப்புக் கிடைக்கப்போவதில்லை. இதைவிட சமூக நீதிக்கு தீங்கு இழைக்க முடியுமா?
தமிழகத்தில் உள்ள 22 மருத்துவக் கல்லூரிகளின் இன்றைய மதிப்பு கிட்டத்தட்ட ரூ.25,000 கோடி ஆகும். தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில் அமைக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களை எப்படி சேர்ப்பது என்பதை மாநில அரசு தான் தீர்மானிக்க வேண்டும். ஆனால், இதை மத்திய அரசு  தீர்மானிப்பதை எப்படி ஏற்க முடியும்? இதைவிடக் கொடுமையான அதிகார அத்துமீறல் இருக்க முடியாது. இந்த அத்துமீறலைத் தடுப்பதற்காகத் தான் நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிப்பதற்கான  சட்டம் பேரவையில் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பிப்ரவரி ஒன்றாம் தேதி நிறைவேற்றப்பட்ட சட்டத்திற்கு 90 நாட்களாகியும் குடியரசுத் தலைவரின் ஒப்புதலை  பெறமுடியவில்லை.
தமிழக அரசு மத்திய அரசுக்கு முறையாக அழுத்தம் கொடுத்திருந்தால் இந்த சட்டத்திற்கு எப்போதோ ஒப்புதல் பெற்றிருக்க முடியும். ஆனால், ஆட்சியையும், கட்சியையும் காப்பாற்றிக் கொள்வதற்காக மத்திய ஆட்சியாளர்களின் கால்களில் தமிழக ஆட்சியாளர்கள் விழுந்து கிடந்ததால் தான் ஒப்புதலை வாங்க முடியவில்லை. மொத்தத்தில் ஆட்சியாளர்கள் வாழ்வதற்காகவும், ஆள்வதற்காகவும் தமிழகத்தின் சமூக நீதியும், கிராமப்புற, ஏழை மாணவர்களின் மருத்துவக் கல்வி வாய்ப்பும் குழிதோண்டி புதைக்கப் பட்டிருக்கிறது. இந்த பாவத்திற்காக தமிழக ஆட்சியாளர்களை தமிழக மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள்.

Monday, 1 May 2017

டாஸ்மாக் ஊழியர்களுக்கு தகுதிக்கேற்ற அரசுத்துறை வேலை வழங்க வேண்டும்! ----அறிக்கை ---- -மருத்துவர். இராமதாஸ்

டாஸ்மாக் ஊழியர்களுக்கு தகுதிக்கேற்ற
அரசுத்துறை வேலை வழங்க வேண்டும்!
                      ----அறிக்கை ----
            -மருத்துவர். இராமதாஸ்

பாட்டாளி மக்கள் கட்சி மேற்கொண்ட சட்டப் போராட்டத்தின் பயனாக தமிழ்நாடு முழுவதும் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளையொட்டி செயல்பட்டு வந்த 3321 மதுக்கடைகள் மூடப்பட்டிருக்கின்றன.  இது மகிழ்ச்சியளிக்கும் அதே நேரத்தில் மதுக்கடைகளில் பணியாற்றி வந்த 15,000 பணியாளர்களுக்கு எந்தப் பணியும் வழங்காமல் காத்திருக்க வைத்திருக்கும் டாஸ்மாக்கின் செயல் வருத்தமளிக்கிறது.

மூடப்பட்ட மதுக்கடைகளில் பணியாற்றியவர்களில் ஆளுங்கட்சி தொழிற்சங்கங்களைச் சேர்ந்தவர்கள் மற்றும் அரசியல் செல்வாக்கு உள்ளவர்கள் மட்டும் பணிச்சுமை இல்லாத, வசதிகள் நிறைந்த மதுக்கடைகளில் பணியமர்த்தப்பட்டிருக்கின்றனர். மீதமுள்ளவர்களில் பெரும்பான்மையானவர்கள் வசதி இல்லாத, நெருக்கடி நிறைந்த மதுக்கடைகளில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். 150 சதுர அடி பரப்பளவுள்ள கடைகளில் மதுப்பெட்டிகளும், குளிரூட்டிகளும் வைக்கப்பட்டது போக மீதமுள்ள இடத்தில் 12 முதல் 15 பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டிருக்கின்றனர். நின்றாலே ஒருவருடன் ஒருவர் மோதிக்கொள்ளும் சூழல் உள்ள கடைகளில் பணியாற்ற கட்டாயப்படுத்தப்படுகின்றனர். இவர்கள் ஒருபுறமிருக்க சுமார் 15,000 பணியாளர்கள் எந்த வேலையும் வழங்கப்படாமல் காத்திருப்பில் வைக்கப்பட்டிருக்கின்றனர்.

எந்தப் பணியும் வழங்கப்படாததால் தாங்கள் பணி நீக்கம் செய்யப்படுவோமோ? என்ற சந்தேகம் டாஸ்மாக் பணியாளர்களிடையே ஏற்பட்டிருக்கிறது. அரசு மதுக்கடைகளில் பணியாற்றுவோருக்கு மிகமிக சொற்ப ஊதியமே வழங்கப்படுகிறது. அரசால் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச ஊதியம் கூட அவர்களுக்கு வழங்கப்படுவதில்லை. மதுக்கடைகளில் பணியாற்றும் சுமார் 27,000 தொழிலாளர்களில் பெரும்பான்மையானவர்கள் கடந்த 14 ஆண்டுகளாக அதே பணியில் உள்ளனர். அவர்களில் பலர் நாற்பது வயதைக் கடந்து விட்டவர்கள். அவர்களால் இனி வேறு பணிக்கு செல்வது சாத்தியமற்றது.

தமிழ்நாட்டின் சீரழிவுக்கு மது தான் முக்கியக் காரணமாக உள்ளது. மதுவின் சீரழிவிலிருந்து தமிழகத்தை மீட்க வேண்டும் என்பதற்காகத் தான் பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்ட நாளிலிருந்து போராடி வருகிறது. நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளால் சாலை விபத்துக்களும், உயிரிழப்புகளும் ஏற்படுவதால் தான் அவற்றை மூட வேண்டும் என்று கோரி பாட்டாளி மக்கள் கட்சி சட்டப் போராட்டம் நடத்தி வெற்றி பெற்றிருக்கிறது. மாநில நலன் கருதி மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையை, மதுக்கடை பணியாளர்களை பழிவாங்குவதற்கான ஆயுதமாக  தமிழக அரசு பயன்படுத்தக்கூடாது.

தமிழகத்தில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நோக்கம்  ஆகும். இதற்கான அரசியல் மற்றும் சட்ட நடவடிக்கைகளை பாட்டாளி மக்கள் கட்சி மேற்கொண்டு  வருகிறது. அத்தகைய இலக்கை நோக்கியப் பயணத்தின் இடையில் மதுக்கடைகள் மூடப்படும் போது, அவற்றில் பணியாற்றிய தொழிலாளர்களை அவர்களின் கல்வித் தகுதிக்கு ஏற்ப அரசுத்துறை பணியாளர்களாக நியமிப்பது தான் நியாயமான, நேர்மையான, பயனுள்ள நடவடிக்கையாக இருக்கும்.

கடந்த 2006&ஆம் ஆண்டில், டாஸ்மாக் மதுக்கடைகளில் பணியாற்றும் தொழிலாளர்களை அரசுத் துறைகளில் காலியிடங்கள் ஏற்படும்போது நியமித்துக் கொள்ளலாம் என்று பரிந்துரைத்து டாஸ்மாக் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் கடிதம் (D.O. Lr. No. RV.2/23/2006,Dated 07.07.2006) எழுதினார். அதேபோல் இப்போதும் டாஸ்மாக் நிறுவனத்தின் உபரிப் பணியாளர்களாக காத்திருக்க வைக்கப்பட்டிருக்கும் தொழிலாளர்களை அவர்களின் கல்வித்தகுதிக்கு ஏற்ப அரசுத் துறைகளில் நியமிக்கும்படி தமிழக அரசுக்கு டாஸ்மாக் நிறுவனம் பரிந்துரைக்க வேண்டும். அதனடிப்படையில் உபரிப் பணியாளர்களை அரசுத்துறை நிறுவனங்களில் நியமிக்க வேண்டும். தமிழக அரசுத் துறைகளில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றை நிரப்புவதற்கு பல ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாததால் அரசுத்துறைகளில் பணிகள் பாதிக்கக்கப்பட்டிருக்கின்றன.

டாஸ்மாக் உபரிப் பணியாளர்களை அரசுத்துறைகளில் நியமிப்பதன் மூலம் அரசின் தேவை மட்டுமின்றி தொழிலாளர்களின் தேவையையும் நிறைவேற்ற முடியும். எனவே, அதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசும், டாஸ்மாக் நிறுவனமும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு போதுமானதல்ல! ---அறிக்கை--- -மருத்துவர். இராமதாஸ்

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு 4%
அகவிலைப்படி உயர்வு போதுமானதல்ல!
                    ---அறிக்கை---
     -மருத்துவர். இராமதாஸ்

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்தி வந்த நிலையில், அவர்களை சமாதானப்படுத்தும் வகையில் 4% அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருக்கிறார். இதனால் அரசு ஊழியர்களுக்கு ரூ.244 முதல் ரூ.3080 வரை ஊதிய உயர்வு கிடைக்கும் என அரசு அறிவித்துள்ளது. இது போதுமானதல்ல.

தமிழக அரசு ஊழியர்களுக்கு கடந்த 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 6 விழுக்காடும், ஜூலை மாதம் முதல் 7 விழுக்காடும் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டது. அந்த வகையில் நடப்பாண்டிலும்  ஜனவரி மாதம் முதல் குறைந்தபட்சம் 6% அளவுக்காவது அகவிலைப்படி உயர்வு வழங்குவது தான் சரியான நடவடிக்கையாக இருக்கும். ஆனால், அரசு எந்த அடிப்படையில் 4% அகவிலைப்படி உயர்வு வழங்கியிருக்கிறது என்பது தெரியவில்லை. இது அரசு ஊழியர்களுக்கு இழைக்கப்படும்  துரோகமாகும்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு 01.01.2016 முதல் ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகள் நடைமுறைப் படுத்தப்பட்டிருக்கின்றன. அதன்படி அவர்களின் அடிப்படை ஊதியம், தர ஊதியம் இணைக்கப்பட்டு அதில் 274% புதிய அடிப்படை ஊதியமாக  நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அவர்களுக்கு பழைய அடிப்படை ஊதியத்துடன் சேர்த்து வழங்கப்பட்ட அகவிலைப்படி ரத்து செய்யப்பட்டு, புதிய அடிப்படை ஊதியத்தில் கடந்த ஆண்டு ஜுலை மாதம் 2விழுக்காடும், இந்த ஆண்டு ஜனவரி மாதம்  2 விழுக்காடும் அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி தான் தமிழ்நாடு  அரசு  ஊழியர்களுக்கும் புதிய ஊதிய விகிதம் நிர்ணயிக்கப்பட்டு, அகவிலைப்படி உயர்த்தப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால், மத்திய அரசு ஊழியர்களுக்கு ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு  கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளாகியும், தமிழக அரசு ஊழியர்களுக்கு இன்னும் ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகள் செயல்படுத்தப்படவில்லை. இதனால் தமிழக அரசு ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏழாவது ஊதியக்குழு பரிந்துரை செயல்படுத்தப்பட்டிருந்தால், தமிழக அரசின் ‘ஏ’ பிரிவு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டிருந்தாலே அவர்களின் மாத ஊதியம் ரூ.2422 உயர்ந்திருக்கும். ஆனால், இப்போது 4 விழுக்காடு அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டும் கூட ரூ.1768 மட்டுமே ஊதிய உயர்வு கிடைக்கும். இத்தகைய பாதிப்பு ஏற்படாமல் தடுக்க வேண்டுமானால் தமிழக அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் 5.5 விழுக்காடு அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டிருக்க வேண்டும்.

தமிழக அரசில் ‘ஏ’ பிரிவு அதிகாரிகளுக்கு ரூ.37,600 அடிப்படை ஊதியம், ரூ. 6600 தர ஊதியம், 136% அகவிலைப்படி மற்றும் வீட்டு வாடகைப்படி சேர்த்து ரூ.1,10,500 ஊதியம் வழங்கப்படுகிறது.  ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகள் செயல்படுத்தப்பட்டிருந்தால் இவர்களுக்கு ரூ.1,21,108 அடிப்படை ஊதியம், 4% அகவிலைப்படி மற்றும் வீட்டு வாடகைப்படி சேர்த்து ரூ.1,38,062 ஊதியம் கிடைத்திருக்கும். ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகள் செயல்படுத்தப்படாததால் மாதம் ரூ.27,562 இழப்பு ஏற்படுகிறது.

அரசு ஊழியர்களுக்கு இத்தகைய பாதிப்புகள் ஏற்படக்கூடாது என்பதற்காகத் தான் ஏழாவது ஊதியக்  குழு பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படும் வரை, இடைக்கால ஏற்பாடாக,‘‘அகவிலைப்படியில் 50% அடிப்படை ஊதியத்துடன் இணைக்கப்படும்; அடிப்படை ஊதியத்தில் 15% இடைக்கால நிவாரணமாக வழங்கப்படும்’’ தேர்தல் அறிக்கையில் பா.ம.க. உறுதி அளித்திருந்தது.  புதிய அரசு பதவியேற்றவுடன் இந்தக் கோரிக்கையை செயல்படுத்த வேண்டும் என்று பா.ம.க. வலியுறுத்தியது. ஆனால், மக்கள் நலனில் அக்கறை இல்லாத அரசின் காதுகளில் ஆக்கப்பூர்வமான இந்த யோசனைகள் விழவில்லை.

எனவே, அரசு ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக் களையும் வகையில், அகவிலைப்படி உயர்வை 6% ஆக திருத்த வேண்டும். அடுத்த 3 மாதங்களில் ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளையும், பழைய ஓய்வூதியத் திட்டத்தையும் செயல்படுத்த வேண்டும். அதுவரை 50% அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைக்க வேண்டும்; அத்துடன் அடிப்படை ஊதியத்தில் 15 விழுக்காட்டை இடைக்கால நிவாரணமாக வழங்குவதற்கு தமிழக அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

Saturday, 29 April 2017

கதை கேளு... கதை கேளு கழகத்தின் கதை கேளு! ஊழலை ஒழிக்க வாருங்கள்! -மருத்துவர். இராமதாஸ

கதை கேளு... கதை கேளு கழகத்தின் கதை கேளு!

        ஊழலை ஒழிக்க வாருங்கள்!
         -மருத்துவர். இராமதாஸ்

தமிழ்நாட்டில் அதிமுக என்ற ஒரு கட்சி தோன்றுவதற்கு ஆயிரம் காரணங்கள் கூறப்பட்டாலும், அதன் நிறுவனரால் முன்வைக்கப்பட்ட ஒற்றைக் காரணம் தமிழ்நாட்டில் ஊழலை ஒழிக்கவேண்டும் என்பதுதான். காங்கிரஸ் கட்சிக்காரராக வாழ்க்கையைத் தொடங்கிய எம்.ஜி.ஆர்., திரையுலகில் கலைஞருடன் ஏற்பட்ட நட்பு காரணமாக அண்ணாவின் தலைமையை ஏற்று தி.மு.க.வில் தம்மை இணைத்துக்கொண்டார்.

அண்ணாவால் இதயக்கனி என்று போற்றப்படும் அளவுக்கு அவரது நம்பிக்கையை எம்ஜிஆர் பெற்றார். அண்ணாவின் மறைவுக்குப் பிறகு ஆட்சிப் பொறுப்பை யார் ஏற்பது? என்பதில் தி.மு.க.வின் இரண்டாம்நிலைத் தலைவராக இருந்த நாவலர் நெடுஞ்செழியனுக்கும், கலைஞருக்கும் கடும் போட்டி ஏற்பட்டது. அந்த நேரத்தில் கிங் மேக்கராக இருந்து கலைஞரை முதலமைச்சராகவும், தி.மு.க.வின் முதல் தலைவராகவும் உருவாக்கியவர் எம்.ஜி.ஆர். ஆவார். அதன்பின்னர்,  தி.மு.க.வில் கணக்குக் கேட்டதைத் தொடர்ந்து அக்கட்சியிலிருந்து தூக்கியெறியப்பட்டார்.

அ.தி.மு.க. தொடக்கம் - முதல் வெற்றி

தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்ட 3 நாட்களில் அ.தி.மு.க. என்ற புதிய கட்சியைத் தொடங்கிய அவர், அடுத்த 6 மாதங்களில் திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் அதிமுகவை வெற்றிபெறச் செய்து அதன் வலிமையை உலகறியச் செய்தார்.

அதிமுகவை எதற்காக உருவாக்கினீர்கள் என்று கேட்டபோது, அதற்கு எம்ஜிஆர் அளித்த பதில், “அண்ணாவுக்குப் பின் கலைஞர் ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகளில் ஊழல் பெருக்கெடுத்துவிட்டது. அந்த ஊழலை ஒழிக்கவேண்டும் என்பதற்காகத்தான் அண்ணாவின் பெயரால் புதிய இயக்கத்தைத் தொடங்கியுள்ளேன்” என்பதுதான். அதைப்போலவே, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர்களில் ஒருவரான கல்யாண சுந்தரத்துடன் இணைந்து, தி.மு.க. ஆட்சியில் நடைபெற்ற ஊழல்கள் குறித்து உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த ஆணையிட வேண்டும் என்று மனு அளித்தார்.

சர்க்காரியா ஆணையம் விசாரணை

எம்ஜிஆர் அளித்த மனுவின் அடிப்படையில்தான் தி.மு.க.வின் ஊழல்கள் குறித்து உச்சநீதிமன்ற  நீதிபதி சர்க்காரியா தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து விசாரிக்கப்பட்டது. அதன்படி, தி.மு.க. மீதான 28 ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து சர்க்காரியா ஆணையம் விசாரணை நடத்தியது. அந்தக் குற்றச்சாட்டுகளின் விவரம் வருமாறு:
1.  மேகலா பிக்சர்ஸ் ஊழல்.
2.  அஞ்சுகம் பிக்சர்ஸ் ஊழல்.
3.  டிராக்டர் ஊழல்.
4. கருப்பு பணத்தில் கோபாலபுரம் இல்லம் விரிவாக்கம்.
5. முரசொலி ஊழல்.
6. திருவாரூர் வீட்டு ஊழல்.
7. ராஜா அண்ணாமலைபுரம் வீடு ஊழல்.
8. கோபாலபுரம் வீட்டு மதிப்பு ஊழல்.
9. ஊழல் அதிகாரியை காப்பாற்றி முறைகேடு செய்தது.
10. வீராணம் ஊழல்.
11. (அ).நாதன் பப்ளிகேசன்ஸ் ஊழல்.
(ஆ) பூச்சி மருந்து தெளிப்பு ஊழல்.
12.  மணி அரிசி ஆலை கடன் ஊழல்.
13.  ஜெ.கே.கே. குழுமத்தின் விற்பனை வரி ஏய்ப்பு ஊழல்.
14. சமயநல்லூர் மின்திட்ட ஊழல்.
15. குளோப் தியேட்டர் வாடகை சட்டத் திருத்த ஊழல்.
16.  பிராட்வே டைம்ஸ் ஊழல்.
17.  சர்க்கரை ஆலை ஊழல்.
18.  கூட்டுறவு சங்க ஊழல்.
19.  மது ஆலை ஊழல்.
20.  கொடைக்கானல் & பழனி சாலை ஊழல்.
21.  தி.மு.க. அறக்கட்டளைகள் ஊழல்.
22.  நில ஆக்கிரமிப்பு & கொலை குற்றச்சாட்டு.
23.  ஊழல், கிரிமினல் குற்றவாளிகளுக்கு ஆதரவு.
24.  தொழிற்சங்க ஊழல்.
25.  ஊடகங்களுக்கு மிரட்டல்.
26.  மின் திருட்டு.
27.  எதிர்க்கட்சிகள் மீது தாக்குதல்.
28.  இழப்பீட்டு தொகை ஊழல்.

தி.மு.க. அரசு மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்திய நீதிபதி சர்க்காரியா, தி.மு.க. ஆட்சியில் ஊழல்கள் நடந்தது உண்மைதான் என்றும், அவற்றை கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு விஞ்ஞான முறையில் ஊழல்கள் நடைபெற்றிருக்கின்றன என்றும் அவரது அறிக்கையில் குறிப்பிட்டது தமிழகம் மட்டுமின்றி, ஒட்டுமொத்த இந்தியாவும் அறிந்த உண்மையாகும். கலைஞருக்குப்பின் அமைந்த எம்ஜிஆர் தலைமையிலான அரசில் பெரிய அளவில் இல்லாவிட்டாலும் சொல்லிக்கொள்ளும்படியாக பல ஊழல்கள் நடைபெற்றன.

ஜெயலலிதா ஊழல்

எம்ஜிஆருக்குப் பின் வந்த ஜெயலலிதா ஆட்சியில்தான் ஊழல்கள் சுனாமியாக பெருக்கெடுத்தன.  1991-96 ஆட்சிக்காலத்தில் மட்டும் ஜெயலலிதா மற்றும் அவரது அமைச்சரவை சகாக்கள் மீது 33 ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ஜெயலலிதா மீது மட்டும் 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அவற்றின் விவரம் வருமாறு:
1. வண்ணத் தொலைக்காட்சி பெட்டி ஊழல் வழக்கு.
2. டான்சி ஊழல் வழக்கு.
3. வெளிநாட்டு பரிசு ஊழல் வழக்கு.
4. பிறந்த நாள் பரிசு வழக்கு.
5. வருமான வரி வழக்கு.
6. கொடைக்கானல் பிளசண்ட் ஸ்டே வழக்கு.
7. நிலக்கரி இறக்குமதி ஊழல் வழக்கு.
8. கிரானைட் குவாரி ஊழல் வழக்கு.
9. ஸ்பிக் பங்கு விற்பனை ஊழல்.
10. ரூ.66.65 கோடி சொத்துக்குவிப்பு வழக்கு.
11. தெற்காசிய விளையாட்டுப் போட்டி விளம்பர ஊழல் வழக்கு.
12. ஹைதராபாத் திராட்சைத் தோட்ட வழக்கு.

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை

இவற்றில் பல வழக்குகளில் ஜெயலலிதா தண்டிக்கப்பட்டாலும், உயர்நீதிமன்றத்தில் செய்யப்பட்ட மேல்முறையீடுகளில் தப்பினார். வருவாய்க்கு மீறி சொத்து குவித்த வழக்கில் விசாரணை நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஜெயலலிதா, கர்நாடக உயர்நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார். எனினும் உச்சநீதிமன்றத்தில் செய்யப்பட்ட மேல்முறையீட்டில் சொத்துகுவிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய மூவருக்கும் விதிக்கப்பட்ட தலா 4 ஆண்டு சிறைத் தண்டனை, ரூ.10 கோடி அபராதம் ஆகியவை உறுதி செய்யப்பட்டன. ஜெயலலிதா மறைந்ததால் அவருக்கு மட்டும் தண்டனை வழங்கவில்லை.

பா.ம.க. அளித்த ஊழல் பட்டியல்

ஜெயலலிதாவின் முதல் ஐந்தாண்டு ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற ஊழல்கள் தொடர்பான வழக்குகள் மட்டும்தான் இவையாகும். அதன்பின், 2001-2006, 2011-2016 ஆட்சிக்காலத்தில் அதைவிட பலமடங்கு அதிக ஊழல்கள் நடைபெற்றன. 17.02.2015 அன்று தமிழக ஆளுநர் ரோசய்யாவிடம் பாட்டாளி மக்கள் கட்சி அளித்த 209 பக்கங்கள் கொண்ட ஊழல் குற்றச்சாட்டு பட்டியல் மற்றும் அத்துடன் இணைக்கப்பட்டிருந்த ஆவணங்களை பார்த்தாலே அதிமுக ஆட்சியில் எந்த அளவுக்கு ஊழல்கள் நடைபெற்றிருக்கின்றன என்பதை அறியலாம்.

ஆற்றுமணல் ஊழல், தாது மணல் ஊழல், கிரானைட் ஊழல், கட்டுமானப் பணிகள் ஒப்பந்த ஊழல், பணி நியமன ஊழல், நெடுஞ்சாலை ஊழல், பருப்பு மற்றும் முட்டை கொள்முதல் ஊழல் ஆகியவற்றில் மட்டும் கடந்த 10 ஆண்டுகளில் ரூ.70 லட்சம் கோடி அளவுக்கு ஊழல்கள் நடைபெற்றிருக்கின்றன. குறிப்பாக தாது மணல் ஊழலின் மதிப்பு மட்டும் கிட்டத்தட்ட ரூ.50 லட்சம் கோடி ஆகும். ஜெயலலிதா ஆட்சியில் அமைச்சர்களாக இருந்த ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விசுவநாதன்,  வைத்திலிங்கம், எடப்பாடி பழனிசாமி, பாப்பிரெட்டிப்பட்டி பழனியப்பன் ஆகியோர் ஊழல் மூலம் சம்பாதித்த பணத்திற்கு சரியாக கணக்கு காட்டவில்லை என்பதற்காக, அவர்களது வீடுகளில் ஜெயலலிதா அனுப்பிய தனிப்படை அதிரடி ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வில் சுமார் 30,000 கோடி ரூபாய் அளவுக்கு ஆட்சி மேலிடத்திற்கு கணக்கில் காட்டப்படாமல் சொத்துக்கள் குவிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அவை அனைத்தும் ஜெயலலிதாவுக்கு நெருக்கமானவர்களின் பெயருக்கு மாற்றப்பட்டன.

ஊழல் சுனாமி அதிமுக

இவ்வளவுக்குப் பிறகும் மேற்கண்ட அமைச்சர்களிடம் 30,000 கோடி ரூபாய் அளவுக்கு சொத்துக்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இதிலிருந்தே அதிமுக அமைச்சர்கள் எந்த அளவுக்கு ஊழல் செய்து சொத்துக்களை குவித்திருப்பார்கள் என்பதை உணர்ந்துகொள்ள முடியும்.

ஊழலை ஒழிக்கவேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் தொடங்கப்பட்ட ஒரு கட்சி இன்று ஊழல் சுனாமியாக மாறியிருக்கிறது. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுக இரண்டாக உடைந்திருக்கிறது. இதற்குக் காரணம் கொள்கை மாறுபாடுகள் அல்ல. மாறாக, பதவிகளைப் பயன்படுத்தி கொள்ளையடிப்பதில் ஏற்பட்ட போட்டிதான் அதிமுக உடைந்ததற்குக் காரணமாகும்.

முதலமைச்சர் பதவியிலிருக்கும் வரை சசிகலாவின் காலில் விழுந்து சின்னம்மா என்று பவ்யம் காட்டிய பன்னீர்செல்வம், இப்போது சசிகலாவும், அவரது குடும்பத்தினரும் மிகப்பெரிய ஊழல்வாதிகள் என்றும், அவர்கள்தான் தமிழகத்தை சுரண்டி கொழுத்தவர்கள் என்றும் புனிதராக மாறி குற்றம்சாட்டுகிறார்-. மற்றொருபுறம், பன்னீர்செல்வமும் அவரது ஆதரவாளர்களும் அமைச்சர்களாக இருந்தபோது எப்படியெல்லாம் கொள்ளையடித்தார்கள் என்பது குறித்து சசிகலா தரப்பு புகார்களை அடுக்கி வருகிறது.

சிறையில் சசிகலா

இவற்றையெல்லாம் தாண்டிப்பார்த்தால், ஊழல் செய்ததற்காக சசிகலா, அவரது அண்ணி இளவரசி, அக்காள் மகன் சுதாகரன் ஆகியோர் தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதிமுகவின் திடீர் துணைப்பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட தினகரன், ஃபெரா வழக்கில் தினந்தோறும் நீதிமன்றத்தின் படிக்கட்டுகளில் ஏறி வருகிறார். இதுபோதாது என இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்காக தேர்தல் ஆணையத்திற்கு கையூட்டு கொடுத்த வழக்கில் தினகரன் கைது செய்யப்பட்டு  காவலில் வைக்கப்பட்டிருக்கிறார்.

மன்னார்குடி ஆதிக்கம்

சசிகலாவும், தினகரனும் கைது செய்யப்பட்டதால் அதிமுக புனிதமாகிவிடும்  என்று அர்த்தமல்ல. வெட்ட வெட்ட துளிர்ப்பார்கள் என்பதைப் போல சசிகலா தலைமையிலான மன்னார்குடி குழுவில்  திவாகரன், அவரது மகன் ஜெய் ஆனந்த், சசிகலா கணவர் நடராஜன், ராமச்சந்திரன் , பழனிவேலு  உள்ளிட்ட அவரது சகோதரர்கள், தினகரனின் மைத்துனர் வெங்கடேஷ், சகோதரர் பாஸ்கரன், சிறையில் அடைக்கப்பட்டுள்ள இளவரசியின் மகன் விவேக் உட்பட ஏராளமானோருக்கு சசிகலாவின் ஊழலில் பங்கு உள்ளது. ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட சசிகலா இப்போது சிறைக்கு சென்று விட்டாலும் அவரது ஊழலை இவர்கள்  தொடருவர்கள். அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் திரைமறைவில் நடைபெற்று வருகின்றன.

இதைப் பயன்படுத்திக்கொண்டு எடப்பாடி தலைமையிலான அணியும், பன்னீர்செல்வம் தலைமையிலான அணியும் ஒன்றாக இணைந்து ஊழலைத் தொடர திட்டமிட்டு வருகின்றனர். எந்தெந்தப் பதவிகளை யார் அனுபவிப்பது என்பது குறித்த குழப்பங்கள் காரணமாகவே அவர்களுக்கு இடையிலான இணைப்புப் பேச்சுகள் இன்னும் தொடங்காமல் உள்ளன. இவர்கள் இரு அணிகளும் இணைந்தோ, இணையாமலோ எப்படி ஆட்சி நடத்தினாலும் அதில் ஊழல்கள் கடந்த காலத்தில் இருந்ததைவிட பல மடங்கு அதிகமாக தலைவிரித்தாடும். இவர்களுக்கு மாற்றாக தி.மு.க.வை ஆட்சியில் அமர்த்தினால், ஏற்கெனவே விலைக்கு வாங்கப்பட்ட பாதி தமிழகம் தவிர மீதி தமிழகத்தையும் அக்கட்சியின் முதல் குடும்பம் விலைக்கு வாங்கிவிடும் என்பது மறுக்க முடியாத யதார்த்தம்.

ஊழலை ஒழிக்க பா.ம.க.

அதிமுகவைத் தொடங்கிய காலத்தில் எம்ஜிஆர் அறிவித்தவாறு தமிழகத்தில் ஊழலை ஒழிக்கவேண்டுமானால், அது அக்கட்சியின் தொண்டர்கள் எடுக்கும் முடிவில்தான் உள்ளது. கடந்த காலங்களில் பலமுறை நான்கூறிய உண்மை என்னவென்றால், “அதிமுகவைப் பொறுத்தவரை ஜெயலலிதாவும் சசிகலாவும் மட்டுமே கெட்டவர்கள். அக்கட்சியின் தொண்டர்கள் அனைவரும் நல்லவர்கள்” என்பதுதான்.

தமிழகத்தில் ஊழல் அல்லாத முன்னேற்றத்தை நோக்கிய ஆட்சியை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து பாடுபட்டு வருகிறது. 2016 சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கை, ஒவ்வொரு ஆண்டும் பா.ம.க. சார்பில் வெளியிடப்பட்டு வரும் நிழல் நிதிநிலை அறிக்கை, நிழல் வேளாண் நிதிநிலை அறிக்கை உட்பட பா.ம.க. சார்பில் இதுவரை வெளியிடப்பட்டுள்ள 35 ஆவணங்களை படித்துப் பார்த்தாலே பாட்டாளி மக்கள் கட்சியின் தொலைநோக்குப் பார்வையை புரிந்துகொள்ள முடியும்.

பா.ம.க.வின் இணைய வாருங்கள்!

எனவே, தமிழ்நாட்டில் ஊழல் அல்லாத, வளர்ச்சியை நோக்கிய, கல்வி, மருத்துவம், சுகாதாரம் ஆகியவற்றை இலவசமாக வழங்கக்கூடிய ஆட்சி அமையவேண்டும் என்று விரும்பும் அதிமுக தொண்டர்கள் அனைவரும் பாட்டாளி மக்கள் கட்சியில் இணையவேண்டும். இந்த அழைப்பு அதிமுக சகோதரர்களுக்கு மட்டும்தான் என்று எவரும் கருதத் தேவையில்லை. ஊழல் ஒழிப்பு, தமிழகத்தின் வளர்ச்சி ஆகியவற்றில் அக்கறை கொண்ட அனைவரையும் பா.ம.க.வில் இணைய வரும்படி அழைக்கிறேன்.

‘‘கதை கேளு... கதை கேளு...  கழகத்தின் கதை கேளு!’’ என்ற தலைப்பில் நான் எழுதி வந்த தொடர் தான் நிறைவடைந்திருக்கிறது. ஆனாலும் அதிமுகவின் பயணம் இன்னும் முடியவில்லை. அதிமுகவின் ஊழல்கள் குறித்து முந்தைய அத்தியாயங்களில் விரிவாக விளக்கியிருக்கிறேன். எந்தக் கொள்கையும் இல்லாமல் எம்.ஜி.ஆர் என்ற திரைப்பட நடிகரின் சினிமாக் கவர்ச்சியை முதலீடாக வைத்துத் தொடங்கப்பட்ட அதிமுக, அவரது மறைவுக்குப்  பின்னர் ஜெயலலிதா என்ற நடிகையின்  சினிமாக் கவர்ச்சியால் புத்துயிரூட்டிக் கொண்டது. ஊழலை ஒழிப்பதற்காக தொடங்கப்பட்டதாக கூறப்படும் அதிமுக ஒரு கட்டத்தில் ஊழல் சுனாமியாக உருவெடுத்தது. ஊழல் என்றால் அதிமுக, அதிமுக என்றால் ஊழல் என்ற அளவுக்கு அதிமுகவின் ஊழல்கள் இந்தியாவில் மட்டுமின்றி, உலகம் முழுவதும் பிரபலமடைந்தது. பிலிப்பைன்ஸ் அதிபரின் மனைவி இமெல்டா மார்கோசை மிஞ்சும் அளவுக்கு ஜெயலலிதா ஊழல் செய்ததுடன், ஆடம்பரமான வாழ்க்கை வாழ்ந்தார். இந்தியா ஜனநாயக நாடாக இருந்தாலும் ஜெயலலிதா மட்டும் சர்வாதிகாரியாகவே ஆட்சி செய்தார். ஜெயலலிதாவின் ஊழலும், ஆடம்பரமும் அதிகரிக்க அதிகரிக்க அதே வேகத்தில் தமிழகத்தின் அழிவும் அதிகரித்தது.

இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்து தமிழகம் நலம் பெற வேண்டும்; வளர்ச்சியடைய வேண்டுமானால் தமிழகத்தில் அதிமுக அஸ்தமனம்  அடைய வேண்டும். அது விரைவில் அதுவும் நடக்கும்.
( முற்றும்)

குறிப்பு: ‘‘கதை கேளு... கதை கேளு...  கழகத்தின் கதை கேளு!’’ என்ற தலைப்பிலான இந்த தொடர் குறித்து பல்வேறு அரசியல் மற்றும் சமூக அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் என்னை நேரிலும், தொலைபேசி மூலமும் தொடர்பு கொண்டு கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். எனது முகநூல் பக்கத்தில் இத்தொடரை படித்த நண்பர்கள் தங்களில் கருத்துக்களை founderpmk@gmail.com  என்ற மின்னஞ்சல் முகவரியிலோ, தைலாபுரம் தோட்ட இல்ல அஞ்சல் முகவரிக்கு கடிதம் மூலமாகவோ தெரிவிக்கலாம்.
                                     *******